அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


திராவிட நாடு அலுவலகத்தில் கொள்ளை!

காகித மூட்டைகளைக் கைப்பற்றினர் ‘குழந்தை’யின் குரல்வளை நெறிக்கப்பட்டது
அந்தி நேரத்தில் நடந்த அட்டகாசம் நாடு தாங்காது இந்த அநீதியை

வேதனைப் பாதையில் வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் சர்க்கார் கண்ணியம் என்ற சொல் பறந்து கொண்டிருக்கிறது. மரியாதை, ‘இதைச்செய்யலாம் அதைச் செய்யக்கூடாது’ என்ற ஆலோசனை கூட இந்த அகிம்சா மூர்த்திகளுக்கு இல்லை. தங்களது தர்பாரை நடத்துவதிலும், தாங்கள் எவ்வளவு அதிகார சக்தி பெற்றவர்கள் என்பதை நிரூபிப்பதிலும் இருக்குமளவு அக்கறை, ‘நியாயம் அநியாயம்’ ஆகியவைகளைக் கவனிக்குமளவுக்கு இல்லை.

பரிதாபம் நிரம்பிய போக்கு! அனுமதிக்க முடியாத போக்கு! ஆணவத் திமிர் நிரம்பிய போக்கு!! பிரிட்டிஷ்காரன், இங்கு நடத்திப்பார்த்து தோல்வி கண்ட ‘பாதை’யில், இந்த ‘தூக்க பிம்பங்கள்’ உருண்டு கொண்டிருக்கின்றன.

கடந்த 8.12.50 அன்று சென்னை தங்கசாலைத் தெருவிலுள்ள நமது ‘திராவிட நாடு’ நிலையத்துக்குள் புகுந்து, அங்கு தினசரி பத்திரிகைக்காக வாங்கிவைத்திருந்த ‘காகித பேல்’களை, ஜப்தி செய்து, கொண்டு போயிருக்கின்றனர்.

“ஆரிய மாயை” வழக்கில் தமக்கு தீர்ப்பளிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு 700 ஐ தி.மு.க பொதுச் செயலாளர் கட்ட மறுத்ததையும், அதற்காக அளிக்கப்பட்ட ஆறுமாத சிறை வாசத்தை ஏற்று சிறைக்குச் சென்றதையும் நாடு அறியும். பின் பத்து நாட்கள், சிறைக்குள்ளே பூட்டிவைத்து, அவர்களை தாங்களாகவே இந்த “சண்டப் பிரசண்டர்” கள் விடுவித்ததையும் நாடு அறியும்! பொதுச் செயலாளரும், தி.க-தலைவர் பெரியார் சிறைக்குள் கிடந்தபோது நாட்டில் நிகழ்ந்த நடவடிக்கைகளை இந்த ‘கண்மூடியினரும்’ அறிவார்கள்!

இருந்தும், தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை மறைக்க, தங்களாலான வகையில் தூற்றித் திரியும் இந்த ‘துச்சாதனர்’கள், தங்களது ‘வீம்பை’ வெளிக்காட்டி, தோல்வியை மறைக்கத் துடுக்குத்தனத்தில் குதித்திருக்கின்றனர்!

நான்கு பேல்கள்! ரூ.1200 க்கு மேற்பட்ட விலை மதிப்பு கொண்ட காகித மூட்டைகள்!! பல சங்கடங்களுக்கிடையே வெளியே கிளம்ப முடியாமல் தவிக்கும் தினசரி இதழ் “திராவிட நாடு”க்குச் சொந்தமான காகிதங்கள் இந்த ‘கண்ணியர்களால்’ எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. குழந்தை பிறக்கு முன்னரே குரல் வளையை நெறிக்கும் கொடுமைப் போக்கு! சண்டாளரும் அஞ்சும் தகாச் செயல்!! ஆனாலும் எடுத்துச் சென்று விட்டனர்.

8.12.50 அன்று 6 மணிக்கு காங்கிரஸ் சர்க்காரின் ‘அம்புகள்’ நால்வர். அலுவலகத்துக்கு வந்து காகிதப் பேல்களை ஏற்றிக் கொண்டு, ஒரு வண்டியில் வைத்து எடுத்துப் போயிருக்கிறார்கள். இந்தக் கொடுமையைக் கேட்டு வட்டார மக்களெல்லாம் நிலைய வாயிலில் திரண்டிருந்தனராம்! ‘ஜப்தி’ நடைபெறும்பொழுது அலுவலகத்தில், தோழர் கே.கோவிந்தசாமி, டாக்டர் கணேசன், ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர். வந்த போலீஸ் அதிகாரிகள் சுமார் 15 நிமிடங்களுக்கெல்லாம் தங்கள் வேலையை முடித்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

புத்தகம் எழுதிய குற்றத்துக்காக தண்டனை தந்து, தண்டனையை ஏற்ற பின்னர் அத்தண்டனையை ‘வஜா’ செய்து மீண்டும்தர்பார் நடத்தி இருக்கின்றனர். எங்கும் காணமுடியாத அடக்குமுறை! பிரிட்டிஷ்காரனை விடவெகுவேகமாக நடக்கின்றனர் அடக்குமுறைப் பாதையில்!
இருட்டுகின்ற நேரத்தில் நமது அலுவலகத்தில் நுழைந்தனராம். “திராவிட நாட்டின்” சொத்தை எடுத்துத் திரும்பியபோது இருண்டு விட்டதாம் இரவு வந்துவிட்டதாம்!

இருட்டிலேதான், ‘இவர்கள்’ சுயராஜ்யம் துவங்கியது! இருண்ட பாதையிலேதான். அன்று முதல் சென்று கொண்டிருக்கின்றனர்! இருட்டைத் தேடியே அலைந்து கொண்டிருக்கின்றனர்! இருட்டு-வெகுவிரைவில் “இவர்களைக் கப்பிக்கொள்ளும் நேரம் வந்து விட்டது. இவர்கள், அரசியல் வாழ்வு, இருண்டு கொண்டிருக்கிறது! ‘இருட்டுக்குகை’ இவர்களை கவிழ்ந்து கொள்ளும் காலம் வந்துவிட்டது! இனி, இவர்கள் தப்பமுடியாது! இவர்கள் ‘கொள்ளை’ நீடிக்கவும் முடியாது!!

(திராவிடநாடு 17.12.50)