அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


திராவிடநாடு திராவிடருக்கே!
சென்னை தமிழருக்கே!
திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் அவர்கள் மூலம் பொதுமக்களுக்கும் என் உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்பம் பொங்குக, நமது இல்லங்களில், வாழ்வில், இன்பம் பெறுவதுடன், எல்லோரும் இன்புற்றிருக்க வழிவகை காணும் தூயபணியினைத் தொடர்ந்து செய்து வருவதற்கான, புத்துணர்ச்சி கிடைக்கட்டும் இந்தத் திருநாளில்.

புதியதோர் பிரச்சினை - ஆனால் எதிர்பாராததன்று - நம்முன் நிற்கிறது.

காரணமற்ற தயக்கத்துக்குப் பிறகு, நேரு சர்க்கார், நாட்டின் நல்லறிவாளர்கள் அனைவரும் வற்புறுத்தி வந்ததும், காங்கிரஸ் வாக்களித்ததுமான மொழிவழி அமைப்புக்கு இசைவு கூறி விட்டது - மகிழ்வோம்.

டில்லியின் மந்தப்போக்கை நீக்க, ஆந்திரமக்கள் கிளர்ச்சி செய்தனர் - வெற்றி கண்டனர் - அவர்களின் கிளர்ச்சிக்கு உரமூட்டத் தியாகத்தீயிலே வீழ்ந்தார் பொட்டி சீராமுலு - வீர வணக்கம் புரிவோம் அவருக்கு.

ஆந்திர மாகாண அமைப்புக்காவன செய்ய வாஞ்சு எனும் நீதிபதியும் வந்துள்ளார் - தொடக்க வேலை நடைபெறுகிறது.

மொழிவழி அமைப்பு எனும் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் எவரும், எந்தக் காரணம் காட்டியும், சென்னையைத் தமிழகத்திலிருந்து பிரிக்க இயலாது - பித்தரும் எத்தரும் தவிரப் பிறர் எவரும், சென்னை, தமிழகத்தின் தலைநகர் என்பதை மறுக்கத் துணியார்.

ஆனால், ஆந்திரத் தலைவர்கள் என்பேரில் சிலர் மறுக்கின்றனர் - மதராஸ் மனதே - என்கின்றனர் - இல்லையானால் மதராஸ் டெல்லிக்கே என்கின்றனர் - சிலர், மதராஸில் பகுதி
யேனும் எமக்கு என்கின்றனர் - சிலர் ஒரே கவர்னர் இருக்கட்டும் - ஹைகோர்ட் பொதுவாக இருக்கலாமே! என்கின்றனர்.

தமிழர் தலைவர்கள் அனைவரும் தமிழகத்திலே உள்ள எல்லா முற்போக்குக் கட்சிகளும் இன்று ஒன்றுபட்டு நின்று, ஆந்திரத் தலைவர்களின் பேராசையையும் பிடிவாதத்தையும் ஒழித்துக்கட்ட முன் வந்துள்ளனர்.

சென்னை மட்டுமன்று, மொழிவழி அமைப்பு எனும் திட்டத்தின்படி, தமிழ்மொழி பேசுவோர் பெருவாரியாக உள்ள பகுதிகள், வெள்ளையராட்சியின்போது, நிர்வாக வசதிக்காக, வேறு மாவட்டங்களுடன் தொடுத்துவிட்டுள்ள பகுதிகள் யாவும் தமிழருக்கே திருப்பித் தரப்பட வேண்டும்.

இதற்கான நற்பணியினை அண்மையில் திருத்தணியில் நடந்தேறிய ‘எல்லை மாநாடு’ செவ்வனே தொடக்கி வைத்திருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆந்திரத் தலைவர்களின் நீதியற்ற போக்கைக் கண்டிப்பதுடன், தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கும் பணியில், தனது பங்கினைச் செலுத்த வாக்களித்
திருக்கிறது.

தி.மு.க. மாநில மாநாட்டிலே இதுபற்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பொது மக்களுக்கு எடுத்துக் காட்டுமாறு கிளைக் கழகங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மொழிவழி அமைப்புடன், மற்றவர்கள் திருப்தி அடைகிறார்கள்.

தி.மு.க. மொழிவழி அமைப்பு மட்டும் போதாது, மத்திய சர்க்காரின் எதேச்சாதிகாரப் பிடிப்பிலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும் என்ற அடிப்படைத் திட்டத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.

திராவிட நாடு திராவிடருக்கே! சென்னை தமிழருக்கே!!

சென்னை மேயர், இந்தப் பிரச்சனை பற்றி ஓர் ஆய்வுக்குழு அமைத்தகாலை, நான், தி.மு.க.வின் கருத்தை அவருக்குக் கூறி, மொழிவழி அமைப்பின்படி, தமிழருக்குச் சென்னையும், சித்தூர் மாவட்டத்திலே தொடுக்கப்பட்டுள்ள தமிழ்ப் பகுதிகளும் கிடைத்தாகவேண்டும் என்பதற்காக எடுத்துக் கொள்ளப்
படும் எந்தக் கூட்டு முயற்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் துணைபுரியும் என்பதை எடுத்துரைத்திருக்கிறேன்.

எனவே, கிளைக்கழகத் தோழர்கள், இந்தப் பிரச்சினை பற்றி, தி.மு.க.வின் கருத்தைப் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கக் கேட்டுக் கொள்வதுடன், இது சம்பந்தமாக, தி.மு.க. மாநில மாநாட்டிலே நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் விளக்கிவைக்கக் கோருகிறேன்.

(திராவிட நாடு பொங்கல் மாலர் – 1953)