அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எச்சரிக்கை

காங்கிரஸ் எதேச்சாதிகாரம், தன் கொடுமைத் தாண்டவத்தை தொடர்ந்து நடத்துகிறது. ஆளும் வகை தெரியாது மக்களை அல்லலுக்கு ஆட்படுத்துவது மட்டுமின்றி மக்களுடைய அடிப்படை உரிமைகளையும் பறித்துக் கொண்டே உள்ளது. பேச்சுரிமை எழுத்துரிமை, கருத்துரிமை, ஆகியவை மக்களின் அடிப்படை உரிமைகள். ஆனால் இவைகள் இன்று, அலங்கோலப்படுத்தப்படுகின்றன-காங்கிரஸ் சர்க்காரால், இந்த அநாகரீகப் போக்கை அனுமதிப்பது, ஆகாது!

மக்களுரிமை பற்றி வீர முழக்கமிட்டு விருதுபெற்ற சுயராஜ்ய வீரர்கள் ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்படுவது-வெட்கப்படக் கூடிய செயலாகும்.

வேல்பட்ட புலி போலக்கிடக்கும் மக்கள் மீது மீண்டும் அம்பை வீசுவது போல, பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறார்கள்-டில்லிசர்க்கார்.

இது மிகமிகக் கேவலம் நிரம்பிய செயல் கண்டனத்துக்குரிய காட்சி.

இந்த அடக்குமுறைச் சட்டத்தை ஆட்சியாளர் வாபஸ் பெற வேண்டும். அதோடு எழுத்துரிமை நாடக உரிமை, பேச்சுரிமை, ஆகியவைகளைப் பறிக்கும் வகையில் எதேச்சாதிக்காரத்துடன் நடப்பதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த நம் கண்டனத்தை ஆளும் பொறுப்பேற்றோருக்குத் தெரிவிக்கும் அறிகுறியாக நமது, அடுத்தவார இதழ் வெளிவராது.

ஏகாதிபத்திய வெறியர்களாகாதீர் என்ற அன்புரையோடு, நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெறி அடங்கும் வரை, நாம் தூக்கும் உரிமைக்கொடி, இறங்காது என்பதையும், பாசீசப் பாதையில் நடப்போர் உணர வேண்டும்.

அடக்கு முறையால் எந்த ஆட்சியும் நீடிக்க முடியாது மக்களுரிமைகளைப் பறிக்கும் எந்த சர்க்காரும் நீண்டநாள் வாழ்ந்ததில்லை.

இதை, காங்கிரஸ் சர்க்கார் கருத்தில் கொள்ளட்டும் மனித உரிமைகளை மறித்து நடக்கட்டும். வீண்பழிக்கும், விபரீத அழிவுக்கும் ஆளாகாது நடந்து கொள்ளட்டும்.

ஒழிக அடக்குமுறை!

(திராவிடநாடு 8.7.51)