அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எச்சரிக்கைப் பிரியர்!

எச்சரிக்கை!
ஆமாம்! நமக்கு!!
நமக்கு மட்டுமல்ல, எதிர்ப்பட்டோருக் கெல்லாம்!
இந்தி எதிர்ப்பாளருக்கு, எச்சரிக்கை!
திராவிட கழகத்தாருக்கு எச்சரிக்கை!
முதலாளிகளுக்கு எச்சரிக்கை!
தொழிலாளிக்கு எச்சரிக்கை!
கம்யூனிஸ்டுக்கு எச்சரிக்கை!
சோஷியலிஸ்டுக்கு எச்சரிக்கை!
காங்கிரஸ் மந்திரிகளுக்கு எச்சரிக்கை!
இப்படி, எல்லோருக்கும் எச்சரிக்கை!
எடுத்ததெற்கெல்லாம் எச்சரிக்கை!

யார் இந்த `எச்சரிக்கைப் பிரியர்' என்று அறிந்து கொள்ள வேண்டுமென்று, நண்பர்கள் ஆவல் கொள்வர்.

ஒரு வாரத்து, தேசியத் தமிழ் இதழ்களைப் பார்த்தால் புரியும், இந்த எச்சரிக்கைப் பிரியர், யார் என்பது?

மாயவரத்திலே, மார் தட்டுகிறார், இந்தி எதிர்ப்பாளர்களை, ஒழித்து விட்டு மறுவேலை, என்று பூலாங்குறிச்சியில் பேசுகிறார். இந்தக் காங்கிரஸ் மந்திரிகள், காங்கிரசாரின் தொடர்பு இன்றி, பல தவறுகளைச் செய்து விடுகிறாரகள்- இந்தியை எதிர்த்து முன்பு 1800 பேர் சிறை சென்றனர் என்பது தெரிந்திருந்தும், கல்வி மந்திரி கருத்தற்ற முறையிலே காரியம் செய்துவிட்டார், என்று, ஒரு ஊரிலே, முதலாளிகளைக் கண்டிக் கிறார் ஒழுங்காக நடவுங்கள்- இல்லையேல்... என்று கூறி மிரட்டுகிறார்.

மற்றோர் ஊரிலே, தொழிலாளரை மிரட்டு கிறார். ஜாக்ரதை கிளர்ச்சிகளிலே ஈடுபடக் கூடாது, கடுமையான நடவடிக்கை கிளம்பும் என்று பேசுகிறார்.

கம்யூனிஸ்டுகளைக் கண்டிக்கிறேன்- அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்கிறார் ஒரு ஊரில்.

சோஷியலிஸ்டுகள், நாட்டைக் கொடுக்கி றார்கள் என்று சாடுகிறார் இன்னோர் ஊரில்.

எல்லோருக்கும், எச்சரிக்கைதான்! அவ்வளவு உயர உயரமாக ஏறிக் குதிக்கிறார். அவருடைய பேச்சுக்களைப் பார்க்கும்போது, `இழந்த காதல் நாடகத்திலே, ஜெகதீஸ், பேசு வானே, இது உனக்கு முதல் தடவை! என்று ஒவ்வொரு தடவையும், அதுபோலவே தொனிக்கிறது.

கையில் சவுக்குடன், காலையிலே, ஒரு சுற்றுச் சுற்றி, துஷ்ட மிருகங்கள் இருக்கும் கூண்டுகளின் அருகே வந்து நின்று, பளீர்- பளீர் என்று சத்தத்தைச் சவுக்கால் கிளப்பிவிடும், சர்க்கஸ் மேஸ்திரி போல, ஊருக்கு ஊர் சென்று உன்னை எச்சரிக்கிறேன்- உன்னையுந்தான்- எச்சரிக்கை, உனக்கு எச்சரிக்கை, எச்சரிக்கை, எல்லோருக்கும் எச்சரிக்கை என்று கூறி வருகிறார் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் காமராஜ்.

காங்கிரஸ் மந்திரிக்கும் கண்டனம், கம் யூனிஸ்டுக்கும் கண்டனம், கல்வி மந்திரி கருத்தறியாது இந்தியைப் புகுத்துவதற்கு கண்டனம், அதை எதிர்க்கும் திராவிடர் கழகத் தாருக்கும், இவருடைய கண்டனம் பிறக்கிறது. அவ்வளவு ஆற்றல் கொண்டவராகக் காட்சி அளிக்கிறார்- செச்சோ தவறிவிட்டோம்- கனவு காண்கிறார்!

காமராஜர், தமிழ் நாட்டுக் காங்கிரசின் தலைவர்- காங்கிரஸ் நாடாள்கிறது- நாடாள்வோ ரால், எதிர்ப்பாளர்களை, கொடுமைப்படுத்த முடியும்- அறிந்துதான், எதிர்ப்பாளர்கள் பணிபுரிகின்றனர்- எச்சரிக்கைகாரர், என்னென்ன செய்வார் என்பதை அறியாமல் அல்ல.

இந்த எச்சரிக்கைக்காரரின், முன்னாள், இந்நாள் நிலையை மட்டுமல்ல, எதிர்கால நிலை எப்படியாகும் என்பதையும் அறிந்தவர்கள்தான் எதிர்ப்பாளர்கள்.

எந்தெந்தப் பிரச்சினைகள், எச்சரிக்கைக் காரர், புரிந்த கொள்வார் எவைகளைப் புரிந்து கொள்ள மாட்டார் என்பதையும் அறிவர்- எந்தெந்தப் பிரச்னைகளைப் அவர் மக்களுக்குப் புரியவைக்கிறார்- புரிய வைக்கும் திறமை கொண்டவர் என்பதையும் அறிந்திருக்கிறோம்.

ஒரே ஒரு பிரச்னை அவருக்குப் புரிகிறது- புரிய வைத்துமிருக்கிறார்- காங்கிரசுக்கு ஆட்சிப் பீடம் ஏறிக்கொண்டுள்ள நிலையில், யாரையும், காரணமின்றியும், கடுமையாகச் சொல்லாலும் செயலாலும் தாக்கலாம் என்று துணிவு இருக்கிறது என்பதுதான், அவருக்குப் புரிந்துள்ள ஒரே பிரச்சனை, அதையேதான், அவர், தம்முடைய கூட்டுத் தோழர்களுக்குப் புரியவைக்கிறார். இதற்காகவே சுற்றி வருகிறார்- மக்களுக்குச் சுக வாழ்வு கிடைக்கும் வழிவகை கூற அல்ல.

பஞ்ச நிலைமை நாட்டில்! பட்டினிச் சாவு ஏற்பட்டிருக்கிறது! விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது! வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டுகிறது! கூலி போதாத குறைபாடு கொட்டு கிறது! திட்டம் ஏதும் இன்றி ஆட்சிப் போக்கு இருப்பது கண்டு திகைப்பு வளருகிறது! தொழில் வளம் குறைகிறது! துயரம் அதிகரிக்கிறது! மொழி வாரிப் பிரிவினைக் கோரிக்கை, புயலாகிறது! இவையும் இவை போன்று வேறு பல பிரச்னை களும் நாட்டு மக்களை வாட்டுகின்றன.

காமராஜர் வருகிறார், ஒரு காற்படியாவது அரிசியின் அளவு அதிகப்பட வழி கூறுவார். கூலி உயர வழிசொல்லுவார். குறைபாடு போகத் திட்டம் வகுப்பார். ஆட்சியாளர் வகுக்க இருக்கும் திட்டம் பற்றிப் பேசுவார். நாட்டின் வளத்தைப் பெருக்க வழி கோலுவார். அவர் தமிழ்நாட்டுக் காங்கிரசின் தலைவராயிற்றே. பொறுப்புடன் பேசுவார், பிரச்னைகளை விளக்குவார் என்று மக்கள் எதிர்பார்ப்பரே என்ற கவலை அவருக்கு இல்லை. - இருக்கக் காரணமுமில்லை- அப்படிப் பட்ட பிரச்சனைகளைப் பற்றி ஆராயும் திறமையைத் தம்மிடம் மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள் என்பதை அவர் அறிவார்-சட்ட சபையிலே மன்னன், ஒருநாளாவது, வாயைத் திறந்து இன்ன காரியத்தை இப்படிச் செய்தால் நல்லது, இன்ன திட்டத்தில் இன்ன தவறு இருக்கிறது, என்று எடுத்துக்காட்டியதுண்டா? இல்லையே! மக்கள் பிறகு, ஏன் அவரிடமிருந்து பிரச்சனைகளைப் பற்றிய விளக்க உரையை எதிர்பார்க்கப் போகிறார்கள்!

அவர் வருகிறார்- எதிர்க்கட்சியினரைத் தாக்கிப் பேசுவார்- நண்பர்கள் எண்ணுகிறார்கள். எனக்குத் தெரிந்ததும் அதுதான்- அவரே எண்ணுகிறார். எனவே, ஒரே எச்சரிக்கை மயம். ஒவ்வொரு பேச்சிலும்.

ஒரு எச்சரிக்கை, மற்றோர் எச்சரிக்கையை மறுத்து விடுவதாக இருக்கிறதே, கல்வி மந்திரி யின் கருத்தற்ற போக்கையும் கண்டித்து விட்டு அதேபோது அவர் போக்கைக் கண்டிக்கும் இந்தி எதிர்ப்பாளரையும் கண்டிக்கிறோம், இரண்டும் ஒன்றோடொன்றுபொருந்தாதே என்று சொற் பொழிவுகளில் அதிலும் பொறுப்பானவர்களின் சொற்பொழிவுகளில் - நேர்மையும், பொருத்தமும் இருக்கவேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கருதுவர். அவருக்கு அதுபற்றிக் கவலை இல்லை! அவருக்கு எச்சரிக்கை விடத் தெரியும்- செய்கிறார்- அந்நிலை தமக்கு இருப்பதாகக் கருதிச் செய்கிறார். எச்சரிக்கை விடுவதன் மூலம், எதிர்ப்பாளர்களெல்லாம், இடிபட்ட பாம்பாகி விடுவர் என்று கருதுகிறார், கர்ஜிக்கிறார்.

காமராஜரே! கர்ஜனை புரியும் தாராளமாக!! ஆனால் காலம் போகிற போக்கையும் கொஞ்சம் கவனித்துக் கொண்டுவாரும்.

சீனாவிலே, கோ-மின்-டாங் கட்சிக்கு எதிர்த்துப் பேச, வேறு கட்சியே கிடையாது! அப்படிப்பட்ட நிலைதான் இருந்தது. சியாங் சிங்கம். இன்று என்ன நிலையிலிருக்கிறது, ஆபத்து அதிகமானால், எங்கே சென்று தங்கலாம், புதுடில்லிக்கா, பழைய வாஷிங் டனுக்கா- என்று யோசிக்கும் வேளை.
சியாங்கைவிட, காமராஜர் சீற்றம் கொண்ட வர் என்பது தெரிந்தது. ஆனால் ஆற்றல் மிக்கவரா? நாம் மட்டுமல்ல சந்தேகிப்பவர்- அவருக்கே அந்தச் சந்தேகம் ஏற்படும்.

கம்யூனிஸ்டுகளை ஒடுக்கியே தீருவது, என்ற எச்சரிக்கையின் விளைவுதான், சியாங்கின் விசாரம்!

மாயவரம், நெல்லிக்குப்பம், அம்பாசமுத் திரம், அறந்தாங்கி, இவைகளோடு, உலகம் முடிந்து விடுவதாக எண்ணுகிறார், `எச்சரிக்கை வீரர்! உலகிலே உள்ள பலநாடுகளிலும், ஆதிக்கக்காரர் களின் ஆணவத்தை முறியடிக்க, சக்திகள், எங்கெங்கிருந்தோ, எப்படி எப்படியோ உருண்டு திரண்டு வருவதையும் கவனித்துப் பார்ப்பது நல்லது- ஓய்வு கிடைக்கும்போது.
திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில், நாம் கூறமுடியும். எச்சரிக்கைகளை வாரி வீசும்- முடிந்தால் அடக்குமுறையையும் அள்ளிவிடும்- சகாக்களைத் தூண்டிவிடும்- இதுகூடச் செய்யா திருந்தால், உமக்கும் வேறு வேலைதான், என்ன இருக்கிறது, நீர் என்ன, பாபம், அரசியல் நிர்ண சபையிலே புதிய திட்டம் தீட்டுகிறார்களே அதை அலசிப்பார்த்து, இதுசரி, இது தவறு என்று எடுத்துக்காட்டப் போகிறீரா, ஜெமீன் ஒழிப்புத் திட்டத்தை இன்ன முறையிலே அமுல் நடத்த வேண்டும் என்று யோசனை கூறப் போகிறீரா, முதலாளி- தொழிலாளி சச்சரவு போக்க, வாழ்க்கைத் திட்டமும் பொருள் உற்பத்தித் திட்டமும் பகைகொள்ளாதிருக்கும் புதிய திட்டம் வகுக்கப் போகிறீரா- அதெல்லாம் இல்லையே- சிரமமான காரியங்கள் அல்லவா அவை- சிந்தனை வேண்டும், ஆராய்ச்சி வேண்டும்- கஷ்டம்- எச்சரிக்கைகள் விடுத்த வண்ணம் இருப்பது சுலபம், சீற்றமும், ஆத்திரமும் போதும். இவ்வளவு பெரிய நிலையிலுள்ள உமக்கு, இந்த இரு பெருங்குணம் கூடவா, இராமற்போகும்!

குயிலினிடம் நடனத்தையோ, மயிலினிடம் இசையையோ எதிர்பார்க்க முடியுமா? நாம், உம்மிடம் அதிகம் ஏதும் எதிர்பார்க்கவில்லை, சிறிதளவு எம்மை அறிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் என்று மட்டுந்தான் கூறுகிறோம்.

திராவிடர் கழகம், எச்சரிக்கைகளால் மாய்ந்து போகும் நிலையில் இல்லை- இதைத் தெரிந்துகொள்ளும் முதலில்.

அடக்குமுறையை வீசும் ஆற்றல் உமது கட்சியிடம் இருக்கிறது என்பதை அறியாமலும் இல்லை- நீர் கவனப்படுத்த!

திராவிடர் கழகம், மக்களின் மனக்கொதிப் பின் இருப்பிடம் மட்டுமல்ல, புகலிடம். அதிலே உள்ளவர்களை, அறியமாட்டீர்கள்- உமது அதிகார அந்தஸ்து அதற்கு இடந்தராது-தாளமுத்து, நடராஜன்கள் மட்டுமல்ல, வேலா யுதங்களாவதற்கும் விசாரப்படாதவர்களே ஏராளம்.

எச்சரிக்கைகளைச் சரமாரியாக ஏவுகிறீர்- இதனையும் ஏற்றுக்கொள்ளும் - உமது ஆற்றல், ஏழைக்காக வாதாடுபவர்களை, தமிழுக்காகப் பேசுபவர்களை, மக்களாட்சிக்காகப் பணியாற்று பவர்களை, தன்மானத்துக்காகப் போரிடுபவர் களை, ஜாதியை ஒழித்து, மூட நம்பிக்கையை முறியடித்து எல்லோரும் ஓர் குலம் என்ற இலட்சியத்தையும், சுரண்டல் முறை ஒழித்த ஒரு சமுதாயத்தையும் காணவேண்டுமென்பதற்காகப் பாடுபடுபவர்களை, ஒழிக்கப் பயன்படுமானால், தாராளமாகப் பயன்படட்டும். உலக வரலாறு கூறுவது இதையல்ல எச்சரிக்கைகள் மூலமோ, அடக்குமுறை மூலமோ மக்களின் எழுச்சியை அடக்கிய ஆற்றலரசர்களின் வெற்றியை அல்ல வேதனை மிகுந்த தோல்வியைத்தான் சரித்திரம் காட்டுகிறது. அதைமட்டும் உமக்குக் கவனப் படுத்துகிறோம்.

செச்சே! மீண்டும் தவறு செய்துவிட்டோம்- உமக்கு, சரிதத்தை பார்க்க நேரமேது- எந்த அமைச்சரை நீக்கிவிட்டு, யாரை நுழைக்கலாம் என்ற வேலையின் இடையே, இதெல்லாம் முடிகிற காரியமா!

உமக்கு அல்ல, நாட்டுக்குச் சரிதத்தைக் கவனப்படுத்துகிறோம்.

(திராவிட நாடு - 28.11.1948)