அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஏகாதிபத்தியம் ஒழிக!

ஏகாதிபத்தியத்தின் முகத்தில் அசடு சொட்டுகிறது! அமெரிக்கா தந்த இரவல் சோபாமீது, ஏகிப்து நாட்டுப் பஞ்சினால் தயாரிக்கப்பட்ட மெத்தையை அமைத்து அதன்மீது “இந்தியப் பட்டு” போட்டுச் சாய்ந்து, கொண்டு, ஜாவா சுருட்டுக் குடித்துக் கொண்டு “இந்திய விவகாரம் முடிந்துவிட்டது, அங்கே உள்ள பிரச்சார பலம் பொருந்திய ஸ்தாபனமான காங்கிரசைச் சரிப்படுத்திக் கொண்டோம் அதிலே, மக்களின் மனத்தை வசியம் செய்யும் மகாத்மா இருக்கிறார். தீப்பொறி பறக்கப் பேசும் ஜவஹர் இருக்கிறார். இரும்பு மனிதர் இருக்கிறார். தங்கக் கோட்டையில் உலவும் சீமான்கள் உள்ளனர். ஆலை அரசர்கள் உள்ளனர் டாட்டாவும், பிர்லாவும், டால்மியாவும், பஜாஜும் உள்ளனர். அவர்களும் நாமும் கூட்டுத் தர்பார் நடத்தத் திட்டம் போட்டுவிட்டோம். இனி நமக்குக் கவலை இல்லை என்று ஆறுமாந்து கிடந்த ஏகாதிபத்தியம், திடுக்கெட்டெழுந்து, பேந்தப் பேந்த விழிக்கிறது. அதன் செவியினால் ஜனாப் ஜின்னாவின் போர்முரசு கேட்கிறது.

பிரிட்டிஷார் நம்மை ஏய்த்துவிட்டார்கள் - காட்டிக் கொடுத்துவிட்டனர். அவர்களின் வாக்குறுதிகளை இனி நாம் நம்ப முடியாது என்று, லீகின் தலைவர் முழக்கமிட்டார்.

பிரிட்டிஷ் தூதர்கள் தயாரித்து, லீகினால் முன்பு ஒப்புக் கொள்ளபட்ட திட்டத்தை இனி ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிந்துவிட்டார்.

பிரிட்டிஷார், சட்டத்திட்டத்துக்கு அடங்கிய கிளர்ச்சிக்கு மதிப்புத் தருவதாக இல்லை என்பதைக் கண்டுகொண்ட ஜனாப் ஜின்னா, “சட்ட சம்பிரதாய ஒழுங்கு முறைப்படி நடப்பது என்ற போக்கை இன்றுமுதல், முஸ்லீம் லீக் கை விட்டுவிட்டது. என்று கூறிவிட்டார். முஸ்லீம் லீக் தனது குறிக்கோளானா பாகிஸ்தானுக்காகப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் நேரடியான நடவடிக்கை எடுத்துக் கொள்ளாத தீர்மானித்துவிட்டது என்று பரணி பாடினார். பிரிட்டிஷார் அளித்த “பட்டங்களை” முஸ்லீம் லீகினர் விட்டுவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். “சேலம்” செய்தார் ஆனால், சேலத்தைக் கண்டு ஓலமிட்டு ஓடிவிட்டார்களே நமது கட்சியின் ஒய்யார புருஷர்கள், அதுபோலவா அங்கு நடந்தது? நடக்குமா?

வைசிராய் நிர்வாக சபையில் அங்கம் வகித்திருந்தா சர். பிரோஜ்கான்நூன், தமது சர் பட்டத்தை அறுத்தெடுத்து, ஏகாதிபத்தியத்தின் முகத்திலே வீசினார். இந்தச் செய்தியை, திராவிட இனத்துதித்த சர். இராமசாமி முதலியார், திவான் சோபாவில் சாய்ந்துகொண்டு படிப்பார் போலும்!
சர். நஜிமுதீன், சர். இதயத்துல்லா, போன்ற பிரபல தலைவர்கள, அங்கேயே அப்போதே “பட்டங்களை வீசி எறிந்தனர் பட்டங்களை வீசி ஏறியும் வேலை மும்முரமாக நடக்கிறது. இனி ஒரு பத்து நாளிலே பரங்கியிடம் பட்டம் பெற்றவர் முஸ்லீம், லீகில் இருக்கமுடியாது!

இந்தப்போர் முழக்கம், நாம் எதிர்பார்த்தது சென்ற கிழமை, டாக்டர் ஆம்பேத்காரின் கிளர்ச்சி பற்றி நமது கருத்தைத் தெரிவிக்கும் போது, டாக்டர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துடன் ரேநடியான போர் தொடுக்கத் திட்டமிட வேண்டும் என்று எழுதினோம். ஷெட்யூல்டு வகுப்புத் தலைவர்கள் இனியும், பிரிட்டிஷாரின் பட்டத்தைத் தாங்கும் சுமை தாங்கிகளாக இருக்கக்கூடாது என்று எழுதினோம். சென்னையில் கூடிய, ஷெட்யூல் வகுப்பு நாட்டினரும், இதே முடிவு செய்திருப்பது கண்டு களிக்கிறோம், பாராட்டுகிறோம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு ஏன்றைக்கும் இல்லாத அளவு எதிர்ப்பு இன்று தேவை ஏனெனில், அரை நூற்றாண்டாக எந்த ஸ்தாபனம் இந்தக் காரியத்தைச் செய்து வந்ததோ அதனைச் சரிப்படுத்திவிட்டதாலும், அந்த ஸ்தாபனம், என்ன, நேரிடுவதானாலும், சரியே, முஸ்லீம்களுக்கு ஆணங்கக்கூடாது. ஆட்சியின் ஏகபோக உரிமை தம்மிடமே இருக்க வேண்டுமென்று தீர்மானிப்பதாலும் அந்த ஆசையைக் கிளறிவிட்டு, அந்தக் காங்கிரஸ் தீர்மானித்துவிட்டபடியால், இனிப் பழங்குடி மக்கள் முஸ்லீம்கள் ஆகியோரை, ஏகாதிபத்திய எதிர்ப்பினை நடத்தவேண்டும் - நடத்தமுடியும். இந்தச் சமயத்தில், ஏகாதிபத்தியம் தந்திரமாகக் காங்கிரசை, முஸ்லீம்கள், பழங்குடி மக்கள் ஆகியோர் மீது மோத விட்டுவிட்டுப், பின்புறமிருந்து புன்னகை புரியும். இந்தச் சூட்சமத்தைத் தெரிந்துகொண்டு, காங்கிரசின் போக்கைப் பற்றி கவலைப்படாமலும், காங்கிரஸ் மீத போர் தொடுக்கவேண்டும் என்ற எண்ணம் கொள்ளாமலும், நேரடியாக ஏகாதிபத்தியத்தைத் தாக்க வழி கண்டுபிடித்தாகவேண்டும். காங்கிரசும் லீகும், அல்லது காங்கிரசும் திராவிடர் கழகமும், அல்லது காங்கிரசும், ஷெட்யூல் வகுப்பும், மோதிக் கொள்வதிலே, இங்கு மாச்சிரியம் வளருவது தான் பலனாக முடியுமேயொழிய, பிரச்சனைகள் தீராது. அதற்குப் பதிலாகக் காங்கிரசின் போக்கை மக்களிடம் விளக்கிவிட்டு, ஏகாதிபத்திய எதிர்ப்பு வேலையை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கருத்து முஸ்லீம் லீகில், பலருக்கு இருக்கக் கண்டு மகிழ்கிறோம். நமது வாழ்நாளிலே ஓர் முறையேனும், ஏகாதிபத்தியத்தை தாக்கும் வாய்ப்பும், ஏகாதிபத்தியத்தின் தாக்குதலால், ஏற்படும் தழும்பும் கிடைக்கட்டும், என்று முஸ்லீம், திராவிட, பழங்குடி வாலிபர்கள், துணிய வேண்டும். ஆசையால் துடிக்க வேண்டும். எவ்வளவு தவறுகள், தன்னலங்கள், கொள்கை மாற்றங்கள் இருந்தபோதிலும், காங்கிரசின் பலம் மக்களால் வளர்க்கப்படுவதற்குக் காரணம், ஏகாதிபத்தியத்தைத் தாக்க, காங்கிரஸ் பெற்ற “தழும்புகள்” என்பதை வாலிபர்கள் மறக்கக்கூடாது. இந்த எண்ணத்துடனேயே, நாம் முஸ்லீம் லீகின் “போர்க் கோலத்தைக்” களிப்புடன் வரவேற்கிறோம். சரியான சமயத்திலே இந்த “நிலைமை” ஏற்பட்டதாக மகிழ்கிறோம். ஏகாதிபத்தியம் புதிய முறையிலே பழைய சுரண்டல் வேலையைச் செய்யும் சமயம் இது. எனவேதான், இந்த நேரத்தில் ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பளிக்கும் சக்தியாக முஸ்லீம் லீக் மாற்றமடைவது கண்டு மகிழ்கிறோம்.

***

கவர்னர்கள் இதுபோது கிராமங் கிராமமாகச் சுற்றுகிறார்கள். ஏன்?

உழவனின் கையைப் பிடித்துக் குலுக்கி “உபயக்ஷேமம்” விசாரிக்கிறார்! ஏன்?

குடிசைக்குள் நுழைந்து பார்க்கிறார்! குடி இருக்க நான் இடம் தருகிறேன் வாரீர் என்ற மந்திரிமார்களை அழைத்துப் பேசுகிறார்! பவனி நடத்திய வண்ணம் இருக்கிறார்! பாட்டாளிகளின் நிலையைக் கண்டறியத் துடிக்கிறார்! ஏன்?

இப்போது கவர்னராக இருக்கும் நை துரை மட்டுமல்ல இவருக்கு முன்பு இங்குக் கவர்னராக இருந்த சர். ஆர்தர் ஹோப்பும் இதைத்தான் செய்தார்! ஏன்?

இங்கே உள்ள கவர்னர் மட்டுமல்ல மற்ற மாகாணங்களிலே உள்ள கவர்னர்களும், இது போன்றே நடந்து கொள்கிறார்கள்! கவர்னர்கள் மட்டுமல்ல, வெள்ளைக்கார அதிகார வர்க்கம் பூராவுமே, இப்போது ஏழை எளியவரைக் காணவும், இனிய மொழி பேசவும், எங்கும் உலவிக் குறை என்ன என்று கண்டறியவும், மிக மிக ஆவல் கொண்டு வேலை செய்கின்றது ஏன்?
***

கையிலே என்ன? ஜெபமாலையா? அடெ! உன்னிடமா? நெற்றியிலே நீறு, உச்சரிப்பு ஓங்காரத்தைப் பற்றி! - என்னப்பா அதிசயம்! எவ்வளவு அற்புதமான மாறுதல்! உன் முறைப்பு, களைப்பு, அமுல் அட்டகாசம் எங்கே? ஏன் உருட்டி, உருட்டி மிரட்டி ஊரைப்பழித்து வந்தவன், இப்போது “ஓம் மாகாளியில்” இறங்கிவிட்டாய்? என்று எரே அதிசயித்துக் கேட்கிறது, பொக்கரித்து வந்த போக்கிரி, சாதுவேஷம் பூண்டு, சத்காரியத்திலே உடுபட்டு வருவது கண்டு மாறுதலுக்குக் காரணம் என்ன? பழையமுறை பலிக்கவில்லை, ஊர் உருட்டல் மிரட்டலுக்கு அடங்கிவிடும் நிலை மாறிவிட்டது, யாரடா அவன்? என்று கேட்டால், நீ யார் அதைக் கேட்க? என்ற கேள்வி பிறந்துவிட்டது, அடித்தால் தெரியுமா? என்று மிரட்டினால், அடடே இவர்தான். அம்பிளே சிங்கம்! நாமெல்லாம் பொம்மைகள்! என்று கேலி பிறக்கிறது, இந்த நிலைவந்த பிறகு, ஆறுமாப்பு மறையத்தானே செய்யும். அது மறைந்ததும் அடக்க ஒடுக்கம், பரிவு பாசம் தேவைதானே! அந்த முறையிலே, போக்கிரி சாதுவாகிறான் - சாதுவாக நடிக்கிறான்.

பிரிட்டிஷாரின் மன மாறுதலைப் பற்றிப் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் காந்தியார் இப்போதெல்லாம், “பிரிட்டிஷாரின் நல்லெண்ணத் தைச் சந்தேகிப்பதே பாபம்” என்று உபதேசம் செய்கிறார். வெள்ளைக்காரர்களும் இப்போது பழைய “துரை” தர்பாரை மாற்றிக் கொண்டு, அன்பராய், நண்பராய், தோழராய்க் காட்சி அளிக்கிறார்கள். முன்பெல்லாம் முறுக்கு மீசை சிற்றரசர்கள், நறுக்கு மீசை ஜெமீன்தாரர்கள் ஆகியோருக்கு மட்டுமே தரிசனம் தருவார்கள். இப்போதோ, களத்துமேட்டிலே உள்ள காத்தான், குளத்தோரம் செல்லும் செல்வான், ஆகியோர்களைப் பேட்டி காண்கிறார்கள்! திருக்கோயில்களிலே உள்ள திருவாபரணங்களை மட்டுமே பார்க்க வருவார்கள் முன்பெல்லாம், இப்போது, வரண்ட ஏரிகள், வெடித்துக்கிடக்கும் வயல்கள், சரிந்த கூரையுள்ள குடிசைகள் ஆகியவற்றைக் காண ஓடுகிறாரக்ள். மகாராஜாதி ராஜாக்களுடன் மான் வேட்டையாடச் செல்வார்கள். மாட்சிமை தங்கிய மன்னர்பிரான் சர்க்காரின் பிரதிநிதிகள் முன்பெல்லாம். இப்போது, பங்கீட்டுக் கடைகளிலே சென்று, பச்சை அரிசிக்கும் புழுங்கலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். இந்த அற்புதமான மாறுதல் ஏற்படக் காரணம் என்ன? போக்கிரி சாதுவானதற்குத் காரணம், ஊர் நிலை மாறினது. போக போக்கியத்தோடு வாழ்வதற்காகவே சுரண்டும் முறையைக் சூக்ஷமமாக அமைத்துக்கொண்ட ஏகாதிபத்திய சுகபோகிகள், மாறினதற்குக் காரணம், உலக நிலையிலே மாறுதல், உரத்த குரலிலே ஊராள்பவனை மக்கள் எதிர்த்து விரட்டும் காலம் இது.

எனவே, உரத்த குரல், உபத்திரவத்தை வாங்கித் தர உதவுமேயொழிய, ஆட்சிக்கு அரணாக அமைவதில்லை. எனவே, குரலை மாற்றிக் கொண்டார்கள், குணாளர்களாகக் காட்சி தருகிறார்கள். புன்னகை தவழ்கிறது! ஊரார் திகைப்புடன், இந்தத் திடீர், மாறுதலைக் காண்கின்றனர். புரியவில்லை இந்தப் புன்னகை! புரிந்து கொண்டவர்களுக்குத் தெரியும். இந்தப் புன்னகை, பழைய முறைப்பை விட ஆபத்தானது என்பது. காட்டுப்பன்றி உறுமும், பார்ப்பதற்கும் பயங்கரமாக இருக்கும். ஆனால், அதனால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைவிட, பளபளப்பான தோல்கொண்டு, நாதம் ஆசைத்து வரும், நாகத்தால் உயிர்ச்சேதம் அதிகம். உருட்டிமிரட்டும், அந்நியனால் உரிமைக்குக் கேடு விளைவிதைவிட, புன்னகையுடன் உலவும் அந்நியனிடம் ஆட்சி இருந்தால், உரிமைக்குக் கேடு அதிகம்.

வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கேடுகளை இப்போது விளக்குவதென்றால், கொஞ்சம் சிரமமான காரியம் என்றுகூடச் சொல்லலாம். “கெவனர்துரை ரொம்ப நல்லவர் எங்க குடிசையிலே நுழைந்து மணிலாக் கொட்டையை எடுத்துத் தின்று பார்த்தார். கெவனர் சம்சாரம், ஏன் கொழந்தையின் கன்னத்தை முத்தமிட்டாங்க! வெள்ளைக்காருங்க கெட்டவங்கன்னு சொல்றாங் களே, அது தப்புங்க. ஆவங்க ரொம்ப நல்லவங்க!” என்று நமது கிராமவாசி கூறுவான் இப்பúôது பொதுமக்களின் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் மந்திரி ஒருவரும் வந்தார், அதே தினத்திலே வெள்ளைக்காரக் கவர்னரும் வந்தார். ஒரு ஊருக்கு ஜனங்கள் மந்திரிக் கூட்டத்தில் குறைவு கவர்னர் காட்டிய புன்சிரிப்பு அதிகம். மகஜர் கொடுத்த மக்களிடம் மந்திரியார் கோபித்துக்கொண்டுதான் போனார். மறுதினம் மக்கள், கெவனர் ரொம்ப நல்லவர், மந்திரி ரொம்பக் கோவக்காரர் என்று கூறினர்.
***

ஏகாதிபத்தியத்தின் புதிய கோலம் ஆபத்தானது என்பதை அறியாத அரசியல்வாதிகள். பிடாரி பணிந்துவிட்டது என்று எண்ணி ஏமாறுகிறார்கள் பிடாரி பணியவில்லை, சிரித்துப் பேசி நம்மைக் கொண்டே தனக்குச் சாதகமான காரியத்தை நடைபெறச் செய்து கொள்கிறது முன்பாவது, அட்டகாசம் செய்ய வேண்டி இருந்தது இப்போது அந்தச் சிரமமும் இல்லை, புன்னகையாலேயே சாதித்துக் கொள்ள முடிகிறது.

புதிய கோலம், புதிய பாஷை, புதிய நிலை, இது புரிந்து கொள்ள வேணடிய முக்கிய விஷயம். ஏனெனினல், இது புதிய ஆபத்தின் தொடக்கம் இனிப்புப் பூச்சு, அபின் கலந்தது! கூட்டுக் கம்பெனி சரக்கு! பிரிட்டிஷ் பினயா ஒப்பந்தத்தின் விளைவு, இந்துஸ்தான் பத்து மோட்டார் போல, சீமைச் சாமான், இந்தியப் பங்காளி, இலாபம் சமம், ஏழைக்கல்ல, பண மூட்டைகளுக்கு! இதன் விளைவாக இன்று நாம் காண்பது, விசித்திரமான காட்சி, அற்புதமான மாறுதல், அதுவே ஏகாதிபத்தியத்தின் புன்னகை. புன்னகை புரியும் கவர்னர்கள் தமது கருணையின் அறிகுறியாகப் பத்து ரூபாய் குறைத்துக் கொண்டார்களா சம்பளத்தில்? சிவ.சிவா அவர்கள் ஒன்றும் அந்தப் பாவம் செய்யவில்லை! நம் மந்திரிமார்களாவது, சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளும்படி கேட்பார்களா? எப்படி ஸ்வாமி அது சாத்தியமாகும்? ஆவாளே தங்க்ள சம்பளத்தை இரட்டிப்பு இக்கிண்டவா! ஆகவே ஏகாதிபத்தியம், எப்போதும் போல இலாபம ஆடைகிறது. ஆனால் அதற்கு இருந்து வந்த எதிர்ப்பு, புன்னகையினால் குறைந்துவிட்டது - குறைந்து வருகிறது - குறைத்துக்கொண்டு வருகிறார்கள் இந்தியாவிலே அமைதி, என்று நிரூபித்து வைப்பது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு இலாபம். அமெரிக்காவிலே அப்போது கடன் கிடைக்கிறது. இந்தியத் தேசியத் தலைவர்கள், முதலாளிமார்கள் ஆகியோரின் அபிமானம் பிரிட்டனுக்குக் கிடைப்பதிலே மகத்தான இலாபம் ஏகாதிபத்தியத்துக்கு எவ்வகையில் என்றால், ஏகாதிபத்தியத்தை எந்த உருவிலும் இருக்கவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டுள்ள சோவியத் துக்கு, எதிர்ப்பாளர்களை இலவசமாகப் பெறமுடிகிறது.

இவ்வளவுடன் இன்னுமோர் வேடிக்கை, வெள்ளையனே வெளியே போ என்று மக்கள் முழக்கமிட்டனர், இப்போதோ, வெள்ளைக்காரக் கவர்னர்கள், வேலி வயல்களிலெல்லாம் உலவி, கிராம மக்களாலும் வரவேற்கப்படுகிறார்கள். வெளியே போகவில்லை, உள்ளே அதிகமாக உலவுகிறார்கள். இவ்வளவு அற்புத மாறுதலுக்கும் காரணம் பொருளாதாரத் துறையிலே, பிரிட்டிஷ், வடநாட்டு முதலாளிமார்கள் கூட்டு ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதுதான் இந்தப் புதிய நிலைமையை உணரச் சில காலம் பிடிக்கலாம். ஆனால், உணர்ந்து தீருவர் மக்கள், உணர்ந்ததும், மக்களின் உள்ளம் வேதனை அடையும். இப்போது நாம் சொல்லும்போது கோபம் வரும்.

(திராவிட நாடு - 4.8.46)