அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எல்லை காந்தி!

‘எல்லைக் காந்தி என அழைக்கப்படும் கான் அப்துல் கபார்கான் அவர்கள், லாகூர் சிறையில், நோய் வாய்ப்பட்டுக் கிடப்பதாக, ‘பாகிஸ்தான் டைம்ஸ்‘ இதழ் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் ஏற்பட்ட நாள் முதல், எல்லைகாந்தி, சிறை வாழ்க்கையில் கிடந்துழல்கிறார் என்பது யாவரும் அறிந்ததே. யாரும், அந்த கிழவர், காங்கிரஸ் இயக்கத்தில், முக்கியமான வரிசையிலிருந்து பணியாற்றினார். காங்கிரசின் கொள்கைப்படி, ‘பிரிவினை கூடாது‘ என்று கருத்துக் கொண்டிருந்தவர்தான். ஆனால், பாகிஸ்தான் ஏற்பட்ட பிறகு, அவர் மறுக்கவில்லை. ‘பாகிஸ்தானிலிரேன்! இந்தியாவிற்கு வந்துவிடுகிறேன்‘ என்று பிறந்த மண்ணைவிட்டு, ஓடிவந்து விடவுமில்லை இளமை முதல், பொது வாழ்வில் பற்பல சோதனைகளுக்கம் வேதனைகளுக்கும் ஆட்பட்ட தீரர் அவர். அத்தகைய ஒருவரை சிறைக்குள் வாடவிடுவது, நீதியல்ல – என்பதை நாம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளோம். இத்தனை ஆண்டுகள் ஒரு பொதுத் தலைவரை, பூட்டி வைப்பதென்பது – விரும்பப் படாத காரியமாகும். புதிதாகப் பிறந்து வளரும், பாகிஸ்தான், இதுபோன்ற பொதுஜனத் தலைவர்களைப் பூட்டிப் போடுவதன் மூலம், மக்களின் மன எரிச்சலைப் பரிசாகப் பெறுவது, நல்லதல்ல, ஆகவே, சிறையில் வாடும் வீரரை, விடுதலை செய்ய வேண்டுமென, வலியுறுத்துகிறோம். குடல்நோயால் கொத்தப்படுகிறாராம், அவர் வளரும் புது நாடுகள், அடக்கு முறைகளை நம்புவது, ஆபத்தை அணைப்பதாகும். இந்தப் பாதையில் சென்ற இந்திய சர்க்கார் இன்று, அதற்கான பரிசை பெற்று வருகிறது – தேர்தலில்! இந்த நிலைதான்! அடக்கு முறைப்பாதையில், செல்லும் எவருக்கும் ஏற்படும். இதை பாகிஸ்தான் சர்க்கார், உணரவேண்டும் என விரும்புகிறோம் – சகோதர நாடென்பதால்.

திராவிட நாடு – 2-3-52