அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எங்கே அந்த உற்சாகம்?

புராதனக் கோயிலில் இருந்த வெள்ளித் தேர்! நான்கு காளைகள் பூட்டப்பட்டு, `நவபாரத வீரரும், வீராங்கனைகளும்' ஜே கோஷம் போட்ட படி, உடன்வர, தலைவர் பட்டாபி பவனி வந்ததையும், ஐம்பத்தைந்து அடி உயரமுள்ள மரத்திலே, கொடி ஏற்றப்பட்டதையும் கண்டு, யானை, குதிரை, ஒட்டகம் ஊர்வலத்தை அழகு செய்ய, நாடெங்குமிருந்து பல்லாயிரவர் பவனி யில் கலந்து கொண்டதைக் கண்டும், மகா ராஜாக்கள், திவான்கள், கவர்னர்கள், மந்திரிகள் ஆகிய உயர் பதவியினர் அங்கும், இங்கும் ஆர்வத்துடன் உலவக் கண்டும், பாலை வனம், இன்று மக்களின் முகமலர் நிரம்பிய சோலை வனமாகவன்றோ சோபிதக் காட்சியளிக்கிறது! எவ்வளவு கூட்டம்! எவ்வளவு உற்சாகம்! என்று கூறிக் களித்திருந்த மக்கள் பெருவாரியாக நிரம்பியிருந்த ஜெயபுரி காங்கிரசிலே, சர்தார் படேல், ``மக்களின் முகத்திலே, சுதந்திர ஒளியும், எதிர்பார்க்கப்பட்ட ஆர்வமும், உற்சாகமும் காணப்படவில்லை என்பது மிகவும் வருந்தத் தக்க விஷயம். அடிமைத்தனத்தில் இருந்தபோது கூட, மக்களிடையே உற்சாகமும், ஆர்வமும் ஐக்கியமும் நிறைந்திருந்தது. அந்த உற்சாகமெல் லாம் எங்கே போயின?'' என்று கேட்டார்.

ஒரு கணம், மக்கள் திகைத்தே போயிருப் பர். அவர் உரை கேட்டு திருவிழாக் காண்கிறோம், களிக்கிறோம்! திக்கெட்டும் நாட்டின் புகழ் பரப்பும் தலைவர்களைக் காண்கிறோம், களிக்கிறோம்! ஏகாதிபத்யம் ஒழிந்த பிறகு முதன் முதலாகக் கூடுகிறோம், களிக்கிறோம்! சிறையில் இருந்தவர் களெல்லாம், நாடாளும் நாயகராயினர். நம்மை வாழ்விக்க வந்தனர் என்று எண்ணிப் பூரிக்கி றோம். காட்சி ரம்மியமானது- களிப்புக்கு என்ன குறை? உற்சாகத்துக்கு என்ன தடை? ஒளி இல்லையா, நமது கண்களில்? ஏன் சர்தார் சோகிக்கிறார்- என்று எண்ணித் திகைத்திருப்பர்.

கதகளியும், மணி புரியும், கலைக்காட்சியும் பிறவும்கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவே மாநாட்டில். மகிழ்ச்சிக்கு என்ன குறை இருக்கப் போகிறது! என்று எண்ணியிருப்பர்! ஏன், சர்தார், ஏதோ ஏக்கம் கொண்டவர் போலப் பேசுகிறார்? என்று எண்ணித் திகைத்துத்தான் இருப்பர்- ஒரு கணம், ஒரு கணம்! மறுகணம், அவர்களையும், அறியாது, மகிழ்ச்சி மங்கித்தான் இருக்கும்- ஏனெனில், உண்மை மனதைக் குடையத் தொடங்கி இருக்கும்.

ஜெயபுரியில் கூடினோம் விடுதலை பெற்ற நாட்டவர் என்ற முறையில்- ஆனால், வாழ்விலே ஓர் புதுமை கண்டோமா? வளம் வளரக் கண் டோமா? புதிய தொழிற்சாலைகளின் அட்ட வணை, வாழ்க்கைத் தரம் உயர்த்திருப்பதற்குப் புள்ளி விவரம் இவைகளையா காண்கிறோம். இல்லையே! ஏன் இல்லை!- என்று மக்களும், எண்ணத் தொடங்கி, சர்தார் கூறியது சரிதான். நம்மிடம் உண்மையான உற்சாகம் இல்லை. காரணம் நமது வாழ்விலே இன்ப ஒளி இன்னமும் வீசவில்லை என்று மனதிற்குள் கூறிக் கொண்டிருப்பர்.

அந்த உற்சாகம் எங்கே சென்றது? - என்று கேட்டார் சர்தார்- நாம் கூறுகிறோம்- எதிர்க் கட்சியினர் என்ற முறையிலே அல்ல- அந்த உற்சாகம் மக்கள் முகத்தை விட்டுவிலகி, அதோ ஜெயப்பூர் ஜோத்பூர், பவநகர் நவநகர், பாடியாலா, பீகானீர், மைசூர், கொச்சி, திருவிதாங்கூர், போன்ற மகாராஜாக்களின் முகத்திலே குடி ஏறி விட்டது! டாட்டா, பிர்லா, பஜாஜ், தால்மியா, போன்றாரின் அகத்திலே குடி ஏறிவிட்டது? கிலி கொண்டிருந்த கிரீடம் தாங்கிகள் இன்று மகிழ் கின்றனர்- அவர்களிடம் புதியதோர் ஆர்வம் உற்சாகம் மலர்ச்சி இருக்கிறது- டாட்டாக் கூட்டத்தாருக்கு இவ்வளவுடன் புதியதோர் தைரியம்கூட இருக்கிறது மக்களிடந்தான். சர்தார் கூறியபடி மகிழ்ச்சி இல்லை' ஆர்வம் இல்லை, உற்சாகம் இல்லை!

முன்பெல்லாம் - அதாவது சர்த்தார் குறிப்பிடுகிறாரே, அடிமைத் தனத்தில் மக்கள் இருந்த காலம்- அப்போதெல்லாம், இந்த முடிதாங்கிகளும், முதலாளிகளும், பயந்து வாழ்ந்தனர்- எந்த நேரத்தில் தங்கள் வாழ்வுக்கு என்ன ஆபத்து நேரிடமோ, எந்தச் சமயத்திலே புரட்சிப் புயல் வீசித் தங்கள் பட்டமும், கொட்ட மும் பறிக்கப்பட்டுவிடுமோ, பட்டினிப் பட்டாளத் தின் கோபம் எந்தச் சமயத்திலே எந்த ரூபத்திலே வந்து தாக்குமோ, என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தனர்.

மேடைகளிலே காங்கிரஸ் பிரசங்கிகள், ``இந்த ராஜாதி ராஜர்களின் கோலாகல வாழ்வும், முதலாளிமார்களின் அட்டகாசமும், பிரிட்டிஷார் இருக்கிற வரையில் தான்! பிரிட்டிஷ் சிங்கத்தை வீழ்த்தி விட்டால், இந்தச் சிறுநரிகள் எம்மாத்திரம்!'' என்று பேசியபோதெல்லாம் அவர்கள் பீதி கொண்டனர்.

மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்- நம்பிக்கை கொண்டதால்- நாட்டிலே செல்வத்தை நாசம் செய்யும் நச்சுப் பூச்சிகள் உள்ளன. அவை நசுக்கப்பட்டுவிட்டால், நமது வாழ்வு வளமாக நாட்டுச் செல்வம் பயன்படும் என்று நம்பினர். மகிழ்ந்தனர்! அதனால்தான் சர்தார் பட்டேல், கூறியபடி அடிமைத் தனத்தில் மக்கள் இருந்த போது ஓர் ஆர்வம், மகிழ்ச்சி காணப்பட்டது. காணப்பட்டது என்பதுகூட பொருத்தமானதல்ல ஆர்வம் ஊட்டப்பட்டது! என்பதே பொருத்தமான பதம்.

இன்னும் ஒரு இரண்டு அடி ஆழம்தான் வெட்டவேண்டும்- ஆருடக்காரர் சொன்ன, அளவு குழி காண! தோண்டியானதும் குடங்கள் பத்து இருக்கும். அவை நிறையத் தங்க மோக ராக்கள் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் புதையல் பெற, குழி தோண்டுபவன், பாடு படும் போது, நம்பிக்கை தரும் பலத்தையும், உற் சாகத்தையும், உடையவனாகவே இருக்கிறான். ஆரூடக்காரன் குறித்தபடி, ``அரும்பொருள் புதைப்பட்டிருக்கும் இடம்'' என்று அவன் நம்பியிருந்த இடத்திலே, குடமும் இருக்கக் கண்டால், குதூகலம் பிறக்கத்தானே செய்யும்! குதூகலத்துடன், குடத்தின் மூடியை உடைத்து ஆவலோடு உள்ளே பார்க்கும்போது, ஏதோ ஒர் வகை நச்சுப் புகை உள்ளிருந்து வெளிப்பட்டு, அவன் நாசியைத் துளைத்து, இரத்தத்தைச் சொரியவைத்தால், அவன் மனநிலை என்ன ஆகும்? பித்தன் ஆவான் அல்லது பிணமாவான்!

நச்சுக்காற்றுக் கிளம்பாமல், நல்ல மோக ராக்களே கிடைக்கின்றன என்று வைத்துக்கொள் வோம். பாடுபட்டோம் பலன் கண்டோம்என்று அவள் பூரித்து, மோகராக்களைக் கீழே கொட்டிக் கணக்கெடுத்து, ஆறு இலட்சத்து அறுபதினா யிரம் என்று ஆர்வத்தோடு கூறும்போது, ``அவ்வளவும் நமக்குச் சொந்தம் அள்ளிப் போடு. இந்தப் பெட்டியில்'' என்று கூறிக்கொண்டு, அடி ஆட்கள்பலர் புடைசூழ அந்தப் பக்கத்துக் காட்டு ராஜா வந்து நின்றால், புதையல் கண்டவனின் அகமும் முகமும் என்ன ஆகும்? தோண்டும் போது இருந்த ஆர்வம், உற்சாகம் இருக்குமா?

மக்கள், விடுதலைப் போரின்போது, நம்பிக்கை காரணமாக ஆர்ர்வம் கொண்டவர் களாகத்தான் இருந்தனர். விடுதலைப் போர் முடிந்தபிறகு பலன் படாடோபக்காரருக்குச் சென்றதால், மக்கள் முகம், மலராத நிலையில் மட்டுல்ல, கருகிய கமலமாகக் காணப்படுகிறது! கபடரும், கயவரும் களிக்கின்றனர். காத்துக் கிடந்தவர்கள், காய்ந்த வயிற்றினராகவே உள்ளனர். காட்சிகள் ஜெயபுரி காட்சிகளைப் போல- காணும்போது ஆரவாரம் செய்கின்றனர்.- சிரிக்கின்றனர் சிந்து பாடுகின்றனர்- எனினும், உள்ளுர நிலையான, மகிழ்ச்சி உள்ளத்தில் இல்லை! எங்கே போயிற்று. அந்தப் பழைய உற்சாகம் என்று கேட்கிறார் சர்தார்! அரண் மனைகளில் மாளிகை இன்றி குடி ஏறிவிட்டது! மக்களை விட்டுப் பிரிந்துவிட்டது! மல்லிகைத் தோட்டக்காரனின் மகள், குடலை குடலையாக, மணமுள்ள மல்லிகையைக் கொண்டு போய், தனவந்தர்களுக்கும், வாழ்க்கை வசதி பெற்றவர் களுக்கும் விற்றுவிட்டு, நாற்றமடிக்கும் அரிசியும், புழுத்துக்கிடக்கும் கிழங்குமன்றோ பெற்று வருகிறாள் குடும்பம் வாழ! மல்லிகை சிரிப்பது மாளிகைகளிலே!

மக்கள் நம்பினர்- விடுதலைப் போர் முடிந்ததும், காலை மலர்ந்ததும், மலரும் என்று நம்பினர்- அந்த நம்பிக்கை அவர்களுக்கு, ஆர்வத்தை உற்சாகத்தைத் தந்தது- இன்று, விடுதலைப் போர் முடிந்து, வீடு திருத்தும் கட்டம் நடைபெறுகிறது. - நடைபெறும்போது, மக்கள் மறைக்கப்பட்டனர்- அவர்களின் தேவைகளும், உரிகைளும் மறைக்கப்பட்டன- அவர்கள் மனக்கண்முன் தோன்றித் தோன்றி அவர்களை ஆவேசமுறச் செய்த காட்சிகள் யாவும், ஊமையன் கண்ட கனவு போலாகிவிட்டன. உருவான பலன் காணோம். உற்சாகம் எப்படி இருக்கும்? ஆர்வம் எப்படி இருக்கும்?

யாராரின் கொட்டம் ஒழிக்கப்படும். ஆதிக்கம் அகற்றப்படும் என்ற மக்கள் நம்பினரோ, அவர்களெல்லாம், நாடாளும் தலை வர்களின் நண்பர்களாகி விட்டனர. குவாலியர் மன்னரும், சர்தார் படேலும், குறுநகையுடன், ஒருவரை ஒருவர் வரவேற்கும் காட்சி! நேருவுக்கு மோட்டார் ஓட்டிக்கொண்டு, தமது நேர்த்தியான அரண்மனைக்கு அழைத்துச் செல்லும் காஷ்மீர் மன்னரின் காட்சி! பவநகரின் பவனி! நவநகருக்குச் சீமையில், இந்தியத் தூதுவர் தரும் விருந்து! எனும் இப்படிப்பட்ட காட்சிகளையன்றோ மக்கள் காண்கின்றனர்! களிப்பு எங்ஙனம் இருக்கும்?

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பு ஏற் படுத்தப்பட்ட நம்பிக்கை நிறைவேற்றப்பட வில்லை. எனவேதான், மக்களிடம், பழைய உற்சாகம் இல்லை, ஆர்வம் இல்லை!

நம்பிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று நாமல்ல, சர்தாரே கூறுகிறார்- அதேதினம்! கூறிவிட்டும் கேட்கிறார், எங்கே போயிற்று அந்தப் பழைய உற்சாகம் என்று? தேள் கொட்டினால் தெம்மாங்கா பாடுவார்!

நம்பிக்கை நிறைவேற்றப்படாததை ஒப்புக் கொண்டு பேசும் சர்தார் அதற்கு ஒரு காரணம் கூறுகிறார்.

சுதந்திரம் கிடைத்த உடனே நமது தலைவர் மகாத்மா போதனைகளை மறந்து விட்டோம் என்று கூறுகிறார் யார்? ஏன்? சர்தார் பேச்சிலே இதற்குப் பதில் இல்லை!

மகாத்மாவின் போதனைகளை மக்கள் யாரும் மறந்துவிடவில்லை. அன்பு- சத்தியம்- அகிம்சை எதையும் அவர்கள் அன்று போல் இன்றும் போற்றித்தான் வருகிறார்கள். போதனை களை மறந்தவர்கள், மக்களல்ல மக்களை ஆளும் மாபெருந்தலைவர்கள் மறந்தனர்! போதனைகளை மட்டுமா? தங்கள் வாக்குறுதி களையும் மறந்தனர்.

ஆயிரமாயிரம் தடவை எள்ளி நகையாடி இருப்பர். சர்வதேச சங்கத்தை - மேனாட்டு அமைப்புகளை கனலைக் கக்கியிருக்கின்றன. பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஸ்தாபனத்தைப் பற்றிப் பேச நேரிடும்போதெல்லாம்.

சின்னாட்களுக்கு முன்புகூட சீற்றத்துடன், கண்டித்துப் பேசினார். சர்தார் படேல், ஐக்ய நாடுகள் சபையைப் பற்றி உடனே எதிரொலி இதழ்கள் எக்காளமிட்டன. இந்தப் போலிச் சங்கங்களால் சுண்டைக்காய் அளவு பலன் கூடக் கிடையாது என்று!

ஜெயபுரியில், தீர்மானம் நிறைவேற்றுகிறார் கள். தலைவர்கள் ஐக்ய நாடுகள் சபையினை ஆதரித்தும், காமன் செல்வத்தில் இந்தியா இருக்க வேண்டும் என்றும்,

யார் எதிர்பார்த்தனர் இதனை? பிரிட்டிஷ் அமைப்பு, சாம்ராஜ்ய சங்கம்! இதிலே, ஆஸ்திரேலியா, கனடா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் உள்ளன- பிரிட்டிஷ் ஏகாதிபத்யப் பிணைப்பிலே இருந்த நாடுகள் - இந்தப் பிரிவினையின் காரணமாக, பிரிட்டன் ஏதேனும் ஒரு நாட்டின் மீது போர் தொடுத்தால், சங்கத்தில் உள்ள நாடுகள் போரில் ஈடுபடும் இது நடைமுறை இது. தெரிந்திருந்தும், காமன் வெல்த்தில் இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேறு கிறது. ஜெயபுரியில்! மக்கள் எங்ஙனம் மகிழ்வர்?

காமன் வெல்த்தில் உள்ள ஆஸ்திரேலியா, இந்தியரைத் தனது நாட்டிலே இருக்க அனு மதிப்பதில்லை. இது ஏன் என்று பிரிட்டன் கேட்பதில்லை.

தென் ஆப்பிரிக்காவும், காமன்வெல்த்தில் இருக்கிறது. எனினும், இங்கு இந்தியர் இழி மனிதராக நடத்தப்படுகிறார்கள்! ஏன் என்று கேட்க நேச நாடுகள் சபைக்கே, நாடி முறுக்கு மில்லை, நேர்மைத் திறனுமில்லை. சாம்ராஜ்ய சிருஷ்டி கர்த்தாவான பிரிட்டனோ, பேசுவ தில்லை இதுபற்றி.

இப்படிப்பட்ட சாம்ராஜ்யத்திலே இருக்க இந்தியா சம்மதிக்கிறது! நேச நாட்டு ஸ்தாபன மாகட்டும், பிரிட்டிஷ் காமன் வெல்த்தாகட்டும், மேனாட்டுக்காரரின் எந்த அமைப்பும், பலாத் காரத்தை, இம்சையை அடிப்படையாகக் கொண்டதுதான்! மகாத்மா உபதேசித்த மகத்தான அகிம்சா மார்க்கத்தைக் கடைப்பிடிக்கும் இந்தியா, இம்சைமுறையைக் கொள்ளும், மேனாட்டு ஸ்தாபனங்களிலே சேருவது கூடாது. உலகுக்குத் தனி வழிகாட்ட, தர்மோபதேசம் செய்ய, அகிம்சா மார்க்கத்தைப் போதிக்க வேண்டியதே இந்தியாவின் கடமை. இந்தியா இம்சாவாதிகளுடன் சேரக்கூடாது- கண்டிப்பாகச் சேரக்கூடாது. குறிப்பாகப் பிரிட்டிஷ் அமைப் பான, காமன்வெல்த்தில் சாம்ராஜ்ய சங்கத்திலே சேரவே கூடாது.
* * *

வீராவேசமான பேச்சு பல ஆண்டுகளாக, எல்லாக் காங்கிரஸ்காரருக்கும் பழக்கமான பேச்சு. இந்தியா, ஆத்மார்த்தத் துறையிலே அதி உன்னதமான இடம் பெற்றிருக்கிறது- மேனாடு களோ, கேவலம், மிருகசுபாவத்தைக் கொண் டவை என்ற எண்ணத்தின் மீது கட்டப்பட்ட பேச்சு, இந்தியா, பலாத்காரத்தை நடைமுறை யாகக் கொண்டுள்ள மேனாட்டுச் சங்கங்களிலே சேரக்கூடாது என்று பேசினவுடன், ஆர்வத்துடன் எழுச்சியுடன், மாநாட்டினர், `கரகோஷம்' செய்தனர்!
* * *

அகிம்சை! ஆம்! சிறந்த தத்துவம், அண்ணல் நமக்கு அளித்த தத்துவம். ஆனால்... ஆனால்... நாம் அந்த அகிம்சாபாகிஸ்தான்... செய்தது என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக? நாம் கைவிட முடியுமா என்ன? அகிம்சையா? அண்ணல் காட்டிய வழி சென்றோமா? ..... ஏற்பட்டது. இந்தியாவில்! இந்த உண்மையை மறைக்க முடியுமா. அகிம்சா மார்க்கத்தை நாம் கடைப்பிடிக்க தவறிவிட்டோம். இப்படிப்பட்ட நிலையில் அகிம்சா தத்துவத்தை உலகுக்கு நாம் எப்படிப் போதிக்க முடியும்? இன்றைய உலக நிலையில், அகிம்சையைப் பற்றிப் பேசுவதால், பிரயோஜனம் எதுவும் இல்லை!
* * *

இவ்விதம் பேசினார், பண்டித நேரு! காமன் வெல்த் தொடர்பு இருந்தாக வேண்டும் என்று வாதாடினார். பலே! சபாஷ்! அச்சா! பஹுத் அச்சா! என்று கோஷம்- இதற்கும்- ஆர்வத்துடன், கரகோஷம் கிளம்பிற்று ஜெயப்பூரில்!
* * *

இந்தியர்களுக்குச் சம அந்தஸ்து வழங்காத் தேசத்தோடு இந்தியாவுக்கு எத்தகைய தொடர் பும் இருக்கக்கூடாது என்று ஒருவர் பேசினார்.

உடனே, ஜெயபுரியினருக்கு மகிழ்ச்சி, எழுச்சி! தென் ஆப்பிரிக்காவிலே, இந்தியாரை, இழிமனிதராகக் கருதி நடத்துகிறார்கள்! சிலோன் இந்தியரைத் துரத்துகிறது! ஆஸ்திரேலியா, இந்தியர் நுழையக் கூடாது என்று கூறுகிறது. இப்படித் `திமிர்' கொண்ட நாடுகளுடன், இந்தியா தொடர்பு வைத்துக்கொள்ளத்தான் கூடாது. தேசிய சுயமரியாதை அதுதான் என்று எண்ணினர். கரகோஷமிட்டனர்! உடனே, பண்டித நேரு, ஒரு தேசம் மற்றொரு தேசத்தோடு நீண்ட நாட்களாகக் கொண்ட உறவைத் திடீரென அறுத்து விட முடியாது. தென்னாப்பிரிக்கா போன்ற தேசங்கள் சம அந்தஸ்து வகிக்கும் காமன்வெல்த்தில் இந்தியா சேரக்கூடாது என்ற கருத்தில் உண்டு ... இருக்கிறது. ஆனால், காமன்வெல்த் நாடுகளுடன் (தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா) உறவு கொள்வதால் உலக சமாதானத்துக்காகவும் உலக சுபீட்சத்துக்காகவும், உழைக்க முடியும் என்பதாலேயே, நான், காமன்வெல்த்தில் இந்தியா சேர வேண்டும் என்று கருதுகிறேன் என்பதாக முழக்கமிட்டார். உடனே, ஜெயபுரியினர் பலத்த கரகோஷமிட்டனர் ஆரவாரத்துடன்.
* * *

இந்தியா, சுதந்திர நாடு! இதன் சக்தி ஆபாரம். எந்த வல்லரசுடனும், கூடிக் குலாவித் தான் பிழைத்தாக வேண்டும் என்ற சிறுநிலை இல்லை. முன்பு, பிரிட்டிஷ் ஏகாதிபத்யம், இந்தியாவை, சுதந்திரமற்றதாகச் சர்வதேச விவகாரத்தில் செய்து வைத்திருந்தது. இப்போது இந்தியா தன்னிச்சைப்படி நடக்கலாம், ஏனெனில் இந்தியா இப்போது ஓர் சுதந்திர நாடு- என்றார் ஒருவர்- உடனே குதூகலம்- கரகோஷம்- ஜெய புரியினருக்கு.

இன்றைய உலக நிலையில் உண்மையான சுதந்திரமுள்ள தேசம் எதுவும் இல்லை. பிற தேசங்களின் உதவி இன்றித் தனித்து நிற்கும் சக்தி என்றால், அமெரிக்காவும், ரஷியாவும் மாத்திரம் அந்த நிலையில் இருக்கின்றன. எனவே, இந்தியா தனித்திருப்பது முடியாத காரியம் என்று நேரு விளக்கினார்- உடனே, நேருஜீக்கு ஜே என்று கோஷம், கரகோஷம்- எல்லாம் - அங்கு ஜெயபுரியில் கிளம்பின.
* * *

ஆகவே, அங்கு கிளம்பிய கரகோஷங் களைக் கொண்டு மாநாட்டினரின் மனநிலையை நிர்ணயிப்பதற்கில்லை. அவர்கள் எதிர் பார்த்தபடி எல்லாம் நடைபெற்று வருகிறது என்ற களிப்புடன் கூடவில்லை என்பது நன்றாகத் தெரிகிறது. இதனை மேலும், தெளிவுபடத் தெரிவிக்கிறார் சர்தார் படேல்!

உற்சாகம் எங்கே போயிற்று? ஜெயபுரியில் மட்டுமல்ல, எந்தப் புரியிலும், மக்களிடம் இல்லை, அந்த உற்சாகம்? அளவரிசிக் கொடுமையும், அகவிலைத் தொல்லையும், ஆடைபோதாக் கஷ்டமும், வீடு .... விசாரமும், தொழில் வளரா நிலையும், தொழிலாளர் படும் கஷ்டமும், பழைய நிலையில் எதுவும் மாறவில்லை. அரண்மனை யில் ராஜாதான் உலாவுகிறார். எப்போதும் போல! முன்பு சண்முகமோ, வல்லவரோ யாரோ ஒரு தர்பார் தளுக்கர் திவானாக இருப்பர். இப்போது படேல் பார்த்தனுப்பும் ஆசாமி திவனாகிறார்- என்ற வித்யாசம் தவிர, வேறு எதுவும் குறைய வில்லை- மன்னர்களுக்கு மரியாதை காட்டு வதற்கு என்று குறிப்பிடப்பட்டுள்ள குண்டுகள் போடும் முறை உட்பட எதுவும் மாறவில்லை. மாளிகைகளிலே எப்போதும் போல, சீமான்கள் சிங்காரமாகத்தான் உள்ளனர்! ஆலைகளிலே, இலாப வேட்டைக்காரர்கள் எப்போதும் போலவே உள்ளனர்- சர்க்கார் கொடி பறக்கிறது ஆலைமீது- போலீஸ் பாரா இருக்கிறது தொழி லாளர் வட்டாரத்தில்! உத்தியோகஸ்தர்களின் `சிகப்பு நாடா' மறைய வில்லை. ஊர்ப் பெரியவர்களின் சிபாரிசு முiற் போகவில்லை. முன்பு பொப்பிலிக்கு வேண்டிய வர், டிக்சனுக்குத் தெரிந்தவர், என்ற விருது இருக்கும். இப்போது ஷெட்டிக்குத் தெரிந்தவர், பக்தவத்சலத்துக்குப் பந்து, எம்.எல்.ஏ.க்கு நண்பர், என்று இப்படி விருது வேறு. இதுதான் வித்யாசமே தவிர, முறையும், மக்களுக்குள்ள குறையும் மாறவில்லை! இந்நிலையில் மக்கள் முகத்திலே மகிழ்ச்சி எப்படி இருக்க முடியும? பஞ்ச வர்ணக் கிளிக்கு அருகே பூனையை இருக்கச் செய்துவிட்டு காலை சென்று மாலை வீடு திரும்பி, எங்கே கொஞ்சிடும் கிளி என்று கேட்கும் கதை போலிருக்கிறது சர்தாரின் கேள்வி. கேட்பானேன்! புடைத்திருக்கும் பூனை யின் வயிற்றையும், கீழே சிதறியிருக்கும் கிளியின் சிறகுகளையும் பார்த்தால் போதுமே! பவநகரையும், நவநகரையும் பார்க்கும் கண்களை கொண்டுதானே, உழவனையும், பாட்டாளியை யும், படேல் பார்க்கிறார். பார்த்தும், இந்தக் கேள்வியா கேட்பது?

(திராவிட நாடு - 26.12.1948)