அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எங்கள் மடாதிபதி
“வெண்ணிறப்பட்டுடுத்திச் -
சந்தனம் மேனியெலாம் பூசிக்
கண்கவர் பூஷணங்கள் -
அணிந்து கட்டில் அறைநோக்கிப்
பெண்கள் பலபேர்கள் -
குலவிப் பின்வர முன்நடந்தார்!”
யார்? மடாதிபதி! சைவ சமயத்தைச் தழைக்கச் செய்து அதன் மூலம் மக்களிடை சமரச சன்மார்க்கம் நிலவச் செய்வதற்கென அந்நாள் மன்னர்கள் அளித்த மான்யங்களை, ஆண்டு அனுபவிக்கும் மடாதிபதிகள்!!
பெண்கள் பின்வர, முன்நடந்த மடாதிபதி, எங்கு சென்றார்? ஏன் செய்தார்?
“பட்டு மெத்தைதனிலே - மணமே
பரவும் பூக்களின் மேல்
தட்டினிற் பக்ஷணங்கள் - அருந்திச்
சைவத்தை ஆரம்பித்தார்”
இவ்வளவு சோபிதமாக சைவம் ஆரம்பிக்கப்பட்டவுடன் “கட்டிக் கரும்பினங்கள் - சகிதம் கண்கள் உறங்கி விட்டார்” மேலும் சில நடந்தன, மடாதிபதியின் கனவில்.

மடாதிபதியின் வாழ்க்கை இருக்கும் விதம் இதுவெனக் காட்டவே, கவி பாரதிதாசன் இக்கற்பனைக் கவிதையை எழுதினார். ஆனால் அதில் கனவும் பிறவும் கற்பனையாக இருக்கலாம், ஆனால் மடாதிபதிகளின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டிருக்கிறதைக் கற்பனை என்று எவரும் துணிந்து கூறார்!

தென்னாட்டில் “திவ்யக்ஷேத்திரங்கள்” என்பவைகளைப் போன்ற “மகிமைகள்” கற்பிக்கப்பட்டுப் பலப்பல மடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னாள் மன்னர்கள் மடங்களுக்கெனக் கிராமங் கிராமமாக மான்யமளித்தனர். ஆயிரமாயிரம் வேலிகளும் அதைச் சூழ்ந்த அழகிய கிராமங்களும் இன்றும் பல பெரிய மடங்களுக்குச் சொத்தாக உள்ளன. மடத்தில் மடாதிபதி இருக்கிறார் நாட்டுக்கொரு அரசன் இருத்தல்போன்று. ஆனால் மடாதிபதிகளின் மாண்பு கவி கூறியபடி இருந்ததால்தான் மடாதிபதிகளைக் குறித்த கதைகளில் கண்டித்து எழுதப்பட்டு நாடகங்களின் மூலம் காட்டப்பட்டு, படக்காட்சிகள் மூலமும் பரப்பப்பட்டது.

மடாதிபதிகளைப்பற்றி மக்கள் கருத்து
தென்னாட்டிலுள்ளோரும், கடல் கடந்து வாழும் தமிழரும், சுவாமிகாள்! யோகப் பியாசத்திற்கு எந்தருளலாமே! என்று ஒரு மடாதிபதி மற்றொரு மாடாதிபதிக்குக் கூறியதாகச் சந்திரகாந்த் எனும் படக்காட்சியில் காட்டப்படும் காட்சியை, மறந்திருக்க, முடியாது. அப்படம் காட்டப்பட்ட காலையில் ஊரெங்கும், தெருவேங்கும், வீடெங்கும் இதே பேச்சுதான்! சுவாமிகாள்!! என்ற சத்தம், சிரிப்பு, கேலி, கண்டனம் இவ்வளவும் நடந்தது.

சைவம் தழைக்க, தமிழ்வளர, தமிழ்வாழ, வழிகோலவும், வகைதேடவும், பணியாற்றவும் நிறுவப்பட்ட மடங்களின் அதிபர்களைப் ப்றறி, மக்கள் எவ்வளவு - எங்ஙனம் கருத்துக் கொண்டுள்ளார்கள் என்பது அந்தப் படத்துக்குக் கிடைத்த “அமோகமான” வரவேற்பிலிருந்தே நன்கு விளங்கிற்று.

மக்கள் எங்ஙனம் மடாதிபதிகளைக் கண்டு வருகின்றனர் இன்றயை தினம்.
அரண்மனை போன்ற மடம், அதைச் சுற்றிலும் பூந்தோட்டம் சிற்றாறு போன்ற கால்வாய், அங்கு செவ்வியநீர் மரமும் செவ்வாழைக்கன்றும், அலரியும் ரோஜாவும் ஆலங்கரிக்கும் தோட்டம், அங்கு ஆயாசமின்றி உலவும் உருவங்கள் மேனி சிவப்பு, அதிலே ஒரு பளபளப்பு, உடை காவி, அதிலே ஒரு மினுமினுப்பு, மாலை உத்திராக்கம் அதற்கு பொன்மேல்மூடி, நெற்றியில் நீறு, அதிலே பரிமளத்துக்குப்பூச்சு, தங்கத் தாம்பாளத்தில் ராஜபோக உணவு, வெள்ளிக் கோப்பையில் வெந்நீர், பளிங்குக் கிண்ணத்தில் பனிநீர், ஜவ்வாதும், புனுகும் சிமிழில், ஜாதிக்காய், ஜாதிபத்ரி மற்றொன்றில், குளோப்பும் லஸ்தரும் உள்ள கொலுமண்டபம், அதற்கு ஆடுத்து அந்தப்புரமெனத்தக்க ஆலங்ôகரப்படுக்கை அறை, அங்கு நிலைக்கண்ணாடி, நேரே கண்கவரும் கட்டில், அதன்மீது பட்டு மெத்தை, அதன்மீது பரிமள முல்லை, திவ்யமான திண்டு தலையணை, அதன்மீது சொகுசாகச் சாய்ந்து சுந்தரமிக்க தம்பிரான் சைவத்தின் பிரதிநிதியாக விளங்குகிறார். மக்கள் காண்பது இது! ஆனால் இதனையா விரும்புவர் மக்கள்? இக்காட்சிக்கா முன்னாள் மன்னர்கள் மக்களின் பொருளை மடத்துக்குத் தந்தனர், மக்களில் சிலரை மடாதிபதியாக்கினர்? இல்லை! இல்லை! மற்றையோர் வாழ்க்கையில் உழன்று வருவதால் சன்மார்க்கத் தொண்டாற்ற - தமிழ்த் தொண்டாற்ற வசதியும் நேரமும் கிடைக்காது வாடுகின்றனர். ஆக்குறை நீக்கிமக்கள் தொண்டுக்கெனவே சிலர் இருத்தல் நன்று என்ற நன்னோக்குடன் மடங்களை நிறுவினர், அதிபர்களை இளவிடுத்தனர்! அந்தோ விபரீதமே! மடாதிபதிகள் மடத்தை ஆள்வதைக் காண்கின்றோம். மக்களிடை ஆள்வதில்லை, மக்களிடை வருவதுமில்லை. இந்நிலை சிற்றசரர் போல், சீமான்போல், முதலாளிபோல் மடாதிபதிகள் வந்துவிட்டனர் எனில், மக்கள் எங்ஙனம் ஆதரிப்பர், எங்ஙனம் பொறுப்பர்!
கால நிலைமை எங்ஙனமுள்ளது?

நடக்கும் காலம் என்ன? “எலும்பைப் பெண்ணுருவாக்கும்” காலமா, ஏடு எதிர்நோக்கிச் செல்லும் காலமா, நரி பரியாகும் நேரமா? இல்லை! ஆராய்ச்சிக்காலம் அறிவே வழிகாட்டியாக அமைந்துள்ள காலம், கோலாட்சியை மாற்றிக் குடியாட்சி அமைக்கும் காலம், முதலாளித்துவத்தை நீக்கிச் சமதர்மத்தை அமைக்கும் காலம், புத்தம் புது கருத்துக்கள் பூத்திடும் நேரம், புரட்சிக்காலம்!

இந்தக் காலத்தில் மடாதிபதிகள், இந்நிலையில் இருப்பதெனில், மக்ள் மனதில் அவர்பால் மதிப்பும் அன்பும் ஒழுகுமென்றா கூற முடியும். அங்ஙனம் கூறல் உண்மையை மறைப்பதாகும். பட்டணப் பிரவேசத்திற்காகப் பல்லக்கில் பரிமள கந்தமணிந்து, இரவைப் பகலாக்கும் விதத்தில் எண்ணற்ற விளக்குகள் புடைசூழ மக்கள் முன்பு பவனி வரும் “தம்பிரான்கள்” எங்ஙனம் மக்களால் போற்றப்பட முடியும்.

தம்பிரானின் தங்க மேனியைக் கண்டு தமது உடலில் உள்ள ஓடிச்சலையும் மகக்ள காண்பரேல் சைவத்தின் மாண்பு தம்பிரானுக்குச் சென்றதேயன்றி நமக்குக் காணோமே என்று எங்காமலிரார். சைவத்தைப் பரப்ப வந்தவர் தங்கப் பல்லக்கில் முத்து வடமும், பவள மோதிருமமு; தங்கத் தோடுகளும், வெண்பட்டாடையும் உடுத்திப் பவனிவர, உழைத்த, ஊழுத, அறுத்த, பிளந்த கைகளும் அலுத்த கால்களும், ஓட்டிய வயிறும் படைத்த மக்கள் கண்டு உள்த்தில் என்ன எண்ணுவார். சைவத்தின் சிறப்பே சிறப்பு என்று களிப்பரா!
“தோடுடைய செவியன் - விடைஏறி” தம்பிரான்களை இங்ஙனம் நடக்கும்படி “அருள்பாலிக்க” நமக்குக் காடுபோல் விடும், எலும்புக்கூடுபோல் குடும்பத்தினரும் இருக்கத்தான் அருளினார் போலும்! ஏன்னே இவரின் நீதி! என்று ஏன் எண்ணமாட்டார்கள். ஆயிரம் தொழிலாளரைப் பஞ்சாலையில் வேலைக்கு அமர்த்தி முதலாளி, ஆறுநாளைக்குகொரு முறû வேலை நிறுத்தப் புயலில் சிக்கும் இந்தக் காலத்தில் மடாதிபதிகள் வாழ்க்கையை ஒரு உல்லாச எஞ்சலாக்கிக் கொண்டு, சைவத்தைச் சாய்வதற்கு சோபாவாகக் கொண்டு மந்திரமாவது நீறு - வானவர் மேலது நீறு” என்ற பாடலுக்கு மக்கள் செவி சாய்க்க வேண்டுமென விரும்பினால் அது நடக்கிற காரியமா?

மடங்களைப்பற்றி நமது கருத்து
மடங்கள் சன்மார்க்க சாலைகளாக, தமிழன் மன்றமாக தமிழர் நல்வாழ்க்கைக்குப் பயிற்சிக் கூடமா இருத்தல் வேண்டும் என்பதும், மடத்துச் சொத்துப் பூராவும் இத்தகைய பணிக்கே பயன்படவேண்டுமேயன்றி, கையில் அணிந்துள்ள வைர மோதிரத்தின் வெளிச்சம் பச்சை மோதிரத்தின் ஒளியை அடக்க முயன்று தோற்க, அதுகண்டு காதுகளிலே தொங்கும் தங்கக் குண்டலம் தகதகவெனச் சிரிக்க, தம்பிரான்கள் காட்சியளிப்பதற்குப் பயன்படக்கூடாது என்ற கருத்துடையோம் நாம். நமது கருத்து காலத்தின் கண்ணாடி என்பதை யாரும் மறுக்கார்.
தமிழ் மன்னர்கள் அன்று மடாதிபதிகள் மூலம் மக்களின் அறிவும் தன்மையும் வளரவேண்டும் என்றெண்ணியே பெரும் சொத்தை ஒப்படைத்தனர். இதனைக் கொண்டு மடாதிபதிகள் மக்களிடை உலவித் தொண்டாற்றி வந்திருப்பின் தமிழ்நாடு எத்தனையோ விதத்தில் முன்னேறியிருந்திருக்கும்.

சில மடங்களில் வித்வான்கள் பாடங்கற்பதும் தத்துவார்த்தம் பயில்வதும் கவி கற்பதும் நாம் அறிவோம். பண்பாடியும் பதிகம் கோர்த்தும் தேவார திருவாசகம் ஓதியும் திருவிளையாடற் புராணத்தின் உட்கருத்துக்களை உணர்ந்தும் “தீவண்ணாம் எமது சிவனார்” என்று திருத்தாண்டகம் பாடியும் பிரணவத்தின் கருத்து கற்றும் வம் பண்டிதர்களுக்கு மடங்கள் இடம் அளித்தன என்பதையும் நாம் அறிவோம். பரிசுகள் வழங்கும் மடங்களையும் நாம் அறிவோம். ஆனால், இவைகள் போதா, இவைகள்தான் முறை என்றும் நாம் எண்ணோம்.

மடங்களில் பயின்றோர், மாசற்ற தமிழ் கற்றிருப்பர். ஆனால் அவர்களின் புலமை பழைமையை மீண்டும் மக்களிடையே பரப்பப் பயன்பட்டதேயன்றிக் காலத்துக்கேற்ற பணியாற்றத் தூண்டவில்லை. “தில்லை நடராஜனின் திருத்தாண்டவத்துக்கு” மற்றொரு தத்துவார்த்தம் கூறவும், ஊமையொரு பாகனின் உருவ அமைப்புக்கு உவமை கூறவும் உதவிற்றேயன்றி, உலகுக்கும் நம் நாட்டுக்கும் உள்ள உருமாற்றம், உள்மாற்றம், ஆகியவற்றை விளக்க உதவவில்லை.

முன்பொரு சமயம் தோழர் பாரதிதாசன், ஆற்றிய சொற்பொழிவில் இக்கருத்தை ரசம்படக் கூறியுள்ளார்.

“முன்னிருந்தோர் மதங்களைப் பற்றியே பாடிப்பாடி உயர்ந்த பக்திநிலைக்கு வந்துவிட்டார்கள். மற்றவைகளைப்பற்றி அவர்கள் பாடக்கூட நினைத்ததில்லை. முதல் நூல், வழிநூல், சார்பு நூல், இந்த மூன்றையும் தவிர வேறு வகையில் ஏதாவது செய்தால் அந்தக் காலத்தில் ராஜாக்களிடமிருந்த கவிப்பெரு மக்கள் காதையோ, மூக்கையோ, அறுத்துவிட உத்திரவிட்ட விடுவார்கள். 50 வருடங்களுக்கு முன்னால் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையேயுள்ள சம்பந்தத்தைப்பற்றிப் பாடாத வேறு நூல்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? கடவுளையே பாடவேண்டிய கஷ்டத்திலிருந்து விடுபட விரும்பிய சிலர் கடவுளை நாயகனாக வைத்துக் கவியியற்ற ஆரம்பித்தார்கள். கடவுளைப் பற்றிப்ப ôடினால்தான் நல்லவன்! இல்லாவிட்டால் கவிஞன் அல்ல”.

மடாதிபதிகள் கடமை
அவர் கூறிய முறையிலேயே, நம் நாட்டக் கவிகள், தேய்ந்த பாதையிலேயே நமது உருளும் வண்டியைச் செலுத்தினர். காரணம்,அது வசதியாக இருந்தது, அதுவும் கிடைத்தது. மடாதிபதிகளில் சிலர் இதனை ஆதரித்தனர். இதன் பயனாகத்தான் “தமிழ்ப் புத்தகசாலையில் ஒன்றை எடுத்தால்” அங்கிங்கெனாதபடி என்று தான் ஆரம்பிக்கும். அந்தப் பழைமை நெளியும். புதுமை எனில் புருவத்தை நெறித்துக் கொண்டு புலவர்கள் போய் விடுவர். “முந்தி இருந்தது பழைய பதிப்பு இப்பொழுதிருப்பத புதிய பாக்கெட சைஸ் பதிப்பு. இவ்வளவுதான் வித்தியாசம்”.

உலகத்தில் வேறு கருத்துக்கள் இல்லையா! உண்டு! எண்ணற்ற புதுப்புதுக் கருத்துக்கள் உண்டு. மறைந்து கிடக்கும் மாண்வுகள் எவ்வளவோ உள். அவைகளை வெளிக்குக் கொண்டு வருதலும் புதுக் கருத்துரைகளைப் பரப்புதலுமே மடாதிபதிகள் செய்யவேண்டிய கடமை.

புராண இதிகாசங்களின் மூலம் மக்களிடம் வளர்க்கப்பட்டுள்ள மூடநம்பிக்கை, குருட்டுக் கொள்கை, இருட்டு எண்ணம், கூன் மனப்பான்மை ஓட்டப்பட மடாதிபதிகள் புலமையும் புதுமையும் பூத்த பொன்மொழியாளரை ஆதரித்தச் சிறுசிறு புத்தகங்கள் வெளியிட்டுப் பரப்ப வேண்டும், சீரிய சொற்பொழிவுகள் நிகழ்த்துவிக்க வேண்டும். அறிவுக்கதிரும் ஆராய்ச்சிக்கதிரும் யாங்கணும் பரவச் செய்தல் வேண்டும். ஜாதிமத பேதமெனும் பித்துப்பிள்ளை விளையாட்டை அடக்க வேண்டும். அன்பும் அமைதியும் பரவச்செய்தல் வேண்டும். அண்ணாந்து விண்ணைப் பார்த்து அழும் மனப்பான்மை ஒழியவும், உழைப்பில், உலகில் நம்பிக்கை பிறக்கவும் செய்தல் வேண்டும். இவைகளே காலத்தின் தன்மைக்கேற்றன. இவைகளை விடுத்து, மீண்டும் பித்தா பிறைசூடி என்ற பாடலையே பரப்பிக்கொண்டு போவோமேயானால் பித்தம் தெளிய மருந்தே கிடைக்காமற் போய்விடும்.

இன்று மக்கள் ஆரியத்தில் ஆழ்ந்து கிடக்கின்றனர். சைவர்கள் தமிழை, தமிழ் வாழ்வைப் போற்றுபவர் என்று பெருமையுடன் கூறிக்கொள்வதைக் கேட்டுள்ளோம். அவர்கள் ஆரியத்தை அகற்ற ஏன் செய்தனர்? ஏன் செய்ய எண்ணுகின்றனர்? மீண்டும் அந்த மண் சுமந்த படலத்துக்கு” மதிப்புரை எழுதிக் கொண்டிருக்கத்தான் போகிறார்களா? மடாதிபதிகள் இதனைத்தான் “புலவர் பணி” எனக் கொள்ளப் போகின்றனரா என்று கேட்கிறோம்.

ஒன்று கூறுகிறோம்
மடாதிபதிகளுக்கு ஒன்று கூற விரும்புகிறோம். மக்களின் கண்கள் திறந்திருக்கும் இந்த வேளையில் நீவிர் அவர் தம் மனம் உம்மால் அன்பினால் இழுக்கப்படும் விதத்தில் நடத்தலே முறையாகும். ஜெமீன்தார் ஒழிப்பு மசோதா, கடன் ஒழிப்பு மசோதா, பால்ய விவாக ஒழிப்பு மசோதா எனச் சட்டங்கள் வரும் காலத்தில் மட ஒழிப்பு மசோதா வரவே வராது என யாரால் உறுதி கூற முடியும்? மடாதிபதிகள் மக்களின் அதிபர்களாகி, பணியாற்றினால் தான் தப்ப முடியும். இன்றேல் கவி கற்பனையில் கூறியபடி, மடத்தின ஆஸ்தியெல்லாம் - பெததுவில் மக்களுக்காக்கி விட்டேன்” எனச்சட்டம் கூறும்! (கவிதையில் சிவனார் கூறினார் என்றுள்ளது).

“எப்படி நான் பிரிவேன் - ஆடடா இன்பப் பொருளையெல்லாம்” என்று தம்பரிôன் துள்ளி விழுந்தாலும் மக்கள் “ஒப்பி உழைத்ததில்லை - சிறிதும் அசைந்ததில்லை” என்று கூறுவர்!
பல மடாதிபதிகள் பலப்பல இலட்சங்கள் தந்து அத்தொகை வெறும் புராணீகர்களுக்குப் போய்ச் சேராமல் புதுமைக்கு உழைப்போர்பால் சேர்ந்து புதுமை பரவி, புன்மைநீங்கி, நாடு ஓங்க, நலம் ஓங்க, தமிழ் தழைக்க உதவும்படி செய்தல் வேண்டும். தமிழ்கெட இந்தி நுழைந்தபோது தமிழ்நாட்டில் கொந்தளிப்பும் போரும் நேரிட்ட கலையில் தமிழ்த் தம்பிரான்கள் ரிய ஆட்சிக்கு எதிராக மூச்சு விட்டால் மூக்கறுபடும் எனப் பயந்து மூலையில் கிடந்தனர். தமிழர் இதனை மறந்தாரில்லை. கொதித்தனர். அது முற்றாமுன்னம் முனைந்து நின்ற மடாதிபதிகள் முத்தமிழ் வளர்த்துத் தமிழ்நாட்டைத் தமிழருக்காக்கும் பணியில் உடுபட வேண்டும். அதைச் செய்யின் “எங்கள் மடாதிபதி” என்று மக்கள் அன்புடன் கூறி இன்புறுவர், இல்லையேல், “சைவத்தை நித்த நித்தம் முயன்று புவியில் நீளப்பரப்பியது போதும், இனி மடம் மக்களுக்கு ஆகட்டும்” எனக்கூற, மக்கள் முன் வருவர். காலம் துணை செய்யும், சட்டம் “சரி” என்னும்!

பண்டைக்கால மன்னர்களும், பொன்படைத்த பிறசிலரும், அன்றிருந்த மடாதிபதிகளிடமோ அல்லது தேவையே உத்தேசித்து அதற்கென உண்டாக்கப்பட்ட மடாதிபதிகளிடமோ தங்களுடைய சொத்துக்களில் ஒரு பகுதியை எடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைத்தற்குக் காரணம், சமய வளர்ச்சி, மொழி வளர்ச்சி நடைபெறுவதற்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த மடாதிபதிகளால் சமயமும், மொழியும் வளர்ச்சியடைந்திருக்கிறதா என்றால், இல்லை என்று முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. இந்த முடிவை நாம் கூறினால், நம்மை நாத்திகப்பட்டியலில் சேர்த்து, இவர்கள் இப்படிக்கூறாமல், வேறு எப்படித்தான் கூறுவாரக்ள் என்று மிக எளிதாக நம்மீது குற்றம் சாட்ட, இத்திகர்கள் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொண்டுள்ள சிலர் தயாராய் இருப்பர் என்பதை நாம் அறிவோம். ஆனால் மடாதிபதிகள் மீது இந்தக் குற்றச்சாட்டைச் சுமத்துபவர் நாமல்ல. நாம் எந்த காரியத்தைச் செய்தாலும், அது, நாத்திகமாகவும், மதத்துவேஷமாகவும், வகுப்புவாதமாகவும், பிறர்மீது வேண்டுமென்றே சுமத்தப்படும் பழியாகவும்தானே கருத்தழிந்தோரால் கருதப்படுகின்றது.

எனவேதான், இந்தக் “குற்றம்” நம்மீது சுமத்தப்படுவதற்கு முன்னர், “இதிலும் இவர்கள் தான் தலையிடுகிறார்கள்” என்ற பழி நம்மீது சாட்டப்படுவதற்கு முன்னர், வேறொரு திசையில் இருந்து இந்தக் குற்றச்சாட்டுக் கிளம்பி இருக்கிறது. நாம் செய்ய வேண்டிய பணி, நம்மை நாத்திகர் என்று சதா தூற்றிக் கொண்டிருக்கும் திசையில் இருந்து கிளம்பி வேலை செய்வது கண்டு களிப்படைகிறோம் - நம்முடைய பிரசாரம், நாம் எதிர்பாராத திசைகளிலும் புகுந்து, நம்முடைய பணியில் பங்கெடுக்கும் பண்பு பெற்ற நிலைகண்டு பூரிப்படைகிறோம் - நாம், நாட்டு மக்களுக்கு நல்லதென்று செய்யும் ஒவ்வொரு காரியங்களும் நம்மை நிந்திப்பவர்களாலேயே வரவேற்கப்படுவது கண்டு மகிழ்கிறோம்.

“வருஷந்தோறும் அநேக இந்துக்கள் இன்னும் மதம் மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். மடாதிபதிகளால் அதையெல்லாம் தடுத்து மதத்தைப் பலப்படுத்த முடியவில்லை”.

இந்துமதத்தின் வளர்ச்சிக்காக அரசர்களாலும், பெருஞ் செல்வர்களாலும் மடங்களுக்குச் சொத்துக்கள் கொடுக்கப்பட்டன என்று கூறப்படுவதையும், மேலே உள்ள வாசகத்தையும் ஒப்பு நோக்கிப் பார்க்கவேண்டுகிறோம். இந்த வாசகத்தைக் கூறியவர் யார்? மதத்துவேஷிகள் என்ற பழிச்சொல்லுக்குக் காரணமின்றி ஆளாகி இருக்கும் நாமா இதைக்கூறினோம்? இல்லை, இல்லை. நம்மை மத்துவேஷிகள் என்று மனமறிந்து பொய் கூறும் ஏடுகளில் ஒன்றுதான். இந்த உண்மையை வெளியிட்டிருக்கிறது. 25-11-49ல் வெளிவந்த தினசரி என்ற ஏட்டில் - அதிலும் பொதுமக்களின் கருத்தை வெளிப்படுத்தும் முறையில் எழுதப்படும் தலையங்கத்தில்தான் இவ்வாசகம் இடம் பெற்றுள்ளது.

எனவே, தினசரியை மதத்துவேஷம் செய்யும் ஐடென்றோ, நாத்திகத்தைப் பரப்பும் பத்திரிகையென்றோ யாராவது கூற முடியுமா? ஆனால், அந்த ஏடு கூறுகிறது, மடாதிபதிகளால் மதம் பாதுகாக்கப்படவில்லை - அழிக்கப்படுகிறது என்று, இதை நாம் கூறியிருந்தால், இதற்குள் நாம் மடாதிபதிகளின் விரோதிகள் என்று விளம்பரம் படுத்தப்பட்டுப் பலரின் கண்டனத்துக்கு, ஏன்? மடாதிபதிகளின் போக்கை, இப்போது கண்டிக்கும் தினசரியின் வசைமாரிக்குக்கூட ஆளாகி இருப்போம்.

மடாதிபதிகள்ன போக்கைக் கண்டிக்க முன்வந்த தனிசரி இந்த ஆளவோடு நிற்கவில்லை.
“இந்த மடாதிபதிகளின் அதிகாரம் குறைந்துவிடுவதால் மதத்திற்கு எந்த நஷ்டமும் வந்துவிடப்போவதில்லை”.

என்று மேலும் கூறி மடாதிபதிகளின் போக்கைக் கண்டித்திருக்கிறது. மடாதிபதிகளன் அதிகாரம் குறைந்து விடுவதால், அதாவது இப்போது மடாதிபதிகள் மேற்பார்வையில் உள்ள கோயிற் சொத்துக்களைச் சர்க்கார் எடுத்துப் பரிபாலனஞ் செய்வதால் எந்த நஷ்டமும் வந்து விடப்போதில்லை என்று தினசரி கூறுவதிலிருந்து பெறப்படும் உண்மை என்ன? இனியும் இந்த மடாதிபதிகள் ஆதிக்கத்தில் இந்தப் பொதுச் சொத்துக்கள் இருந்தால் நஷ்டம்தான் ஏற்படும் என்பதும், ஆவற்றைச் சர்க்காரே எடுத்து நடத்தினால் இலாபம் ஏற்படும் என்பதும் தானே தினசரியின் வாசகத்தில் அடங்கி இருக்கும் உண்மை. இதற்குத் தினசரி கூறும் காரணம் எவராலும் மக்கமுடியாததாகும்.

“இப்பொழுதிருக்கும் மடாதிபதிகள், பண்டாரச் சந்நிதிகளின் நிர்வாகத்தில் ஊழல்களும் ஊதாரித்தனங்களும்தான் இருக்கின்றவேயொழிய மகத்துவம் இருப்பதாக எந்த யோக்கியரும் கூற முடியாது”

என்று எழுதியிருக்கிறது. நாம் இக்கட்டுரையின் மடாதிபதிகளின் கோலாகல வாழ்க்கைப்பற்றி ஆங்காங்கு விவரித்துக் கூறிய கருத்துக்களை எல்லாம் திரட்டிக் கூறுவதுபோல இரண்டே சொற்களில் அடக்கிவிட்டது. ஊழல், ஊதாரித்தனம் என்ற இரு சொற்களும் மடாதிபதிகளின் மகத்தவங்களை அரண்செய்யும் நற்சாட்சிப் பத்திரங்கள்தானா என்பதனை அன்பர்கள் எண்ணிப் பார்க்கவேண்டுகிறோம். மடாதிபதிகள் என்றாலே மனங்குழைந்து மண்டியிட்டு வணங்கவேண்டிய மகத்தான நிலைமாறி, அவர்களிடம் ஊழல்கள் நிறைந்துவிட்டன என்றும், ஊதாரித்தனங்கள் மிகுந்து மலிந்து விட்டன என்றும் வெளிப்படையாகவே கூறுமளவுக்கு அவர்களின் அந்தரங்க அலங்கார வாழ்வுகள் அம்பலமாகிவிட்டன என்பதையும் இனியும் மறைத்து வைக்கவோ மறுத்துக் கூறவோ முடியுமா என்று கேட்கிறோம்.

இந்த நிலையில் தோழர் டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் போன்றவர்கள் மடாதிபதிகள் பக்கம் நின்று அவர்களுக்காகவே வாதாடும் நிலைமை விசித்திரமாகவே இருக்கிறது. இப்போது மடாதிபதிகளின் நிர்வாகத்தில் உள்ள சொத்துக்களைச் சர்க்கார் நிர்வாகத்தில் கொண்டு வந்து விடுவது என்ற மசோதாவை எதிர்ப்பவர்கள், சர்க்கார், அத்திப்பூப்பதுபோல் ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முற்பட்டால், அதை எதிர்த்தது நாட்டின் முற்போக்குக்குக் முட்டுக்கட்டையாக நிற்பவர்களே என்பதை யார்தான் மறுக்க முடியும்? இவர்களுடைய எதிர்ப்பில் ஏதாவது உண்மையும் நியாயமும் இருக்குமானால், ஒரு பொதுமன்றங் கூட்டித் தங்களுடைய எதிர்ப்புக்கு உள்ள காரணத்தைக் கூறி வெற்றிபெற முடியுமா என்பதை வேண்டுமானால் பரீட்சித்துப் பார்க்கட்டும். இதற்கு நாம் மட்டுமல்ல, நாட்டு நலனில் நல்லெண்ணம் கொண்டுள்ள வேறுபலர் கூடத்தயாராக முன்வருவர். இன்று நாடு அந்த அளவுக்கு விழிப்படைந்து விட்டது.

தினசரி கூறுவதுபோல, “மண்ணையும், பொன்னையும், பெண்னையும் மனத்திலும் மதியாததுறவி என்பதற்கறிகுறியாகச் சாமியார் என்ற பட்டஞ்சூட்டிக் கொண்டிருக்கும் ஒருவர் மண்ணும் பொன்னும் மடாதிபதிகளின் ஆதிக்கத்தில்தான் இருக்கவேண்டும் என்பதற்காக உயிரை விடப்போவதாகச் சொல்லுகிறார்” என்றால், அவருடைய எண்ணத்தில் என்னென்ன சிந்தனைகள் தோன்றி அலைமோதி அலைக்கழித்திருக்கும் - ஏத்னை பண்டார சந்நிதிகள் அவர் மனக்கண் முன் தோன்றி.

“எங்களை ஊய்விக்க வந்த உத்தமரே! உம்முயைட உண்ணாநோன்பினால் எங்கள் கண்ணான கனிரச வாழ்க்கை காப்பற்றப்படட்டும்!”

அதற்கென எங்களிடம் இருக்கும் சொத்துக்கள் எங்களிடம் இருக்கும்படி சர்க்கார் மனம் மாறட்டும்!

சாகும்வரை - சர்க்கார் இந்த மசோதாவைக் கைவிடும் வரைஉம்முடைய உண்ணாநோன்பை விடப்போவதில்லை என்பதில் விடாப்பிடியாய் இரும்! உண்ணாமுலையம்மை பாகன் உம்மைக் கைவிடமாட்டார்! உம்முடைய உறக்க நேரத்தில், எம்முடைய புராணாதிகளில் கூறியுள்ள பிரகாரமாகத்தானே மாறுவேடத்தில் வந்து ஞானப்பால் ஊஎட்டி உம்முடைய உயிரைக் காப்பாற்றுவார்!

இதனை யார் மறைந்து நின்று பார்த்து வெளியே கூறினாலும், அதனை மறைக்க நம்முடைய பக்தர்கள் தயாராக உள்ளனர்!

அஞ்சுவது யாதுமில்லை, அஞ்ச வருவதுமில்லை, அன்பரே! ஆரன் உம்மையும் காப்பாற்றுவார்! எம்மையும் வாழவைப்பார்! அஞ்சேல்! அஞ்சேல்! என்று கூறுவது போன்ற காட்சிகள் அவர் மனக்கண்முன் தோன்றித் தோன்றி ஆவக்கு உற்சாத்தைக் கொடுத்த போதிலும், இன்று நாட்டிலுள்ள பெரும்பாலோர் வறுமையால் வாடி வதங்கிக் கிடப்பதையும், அதேபோது, சமயத்தின் பேரால் பண்டாரச் சந்நிதிகள், நிழலிலேயே இருந்துகொண்டு - நிமிராமல் - குனியாமல் - வெட்டாமல் - கொத்தாமல் - பாடுபடாமல் - பாலும்பழமும் சாப்பிட்டுக் கொண்டு - பல்லக்குச் சசாரி செய்து பவனி வருவதையும் இனி நாடு பொறுத்துக் கொண்டிராது என்பது மட்டும் உறுதி.

(திராவிடநாடு - 6.2.49)