அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


என் நன்றி!

அறப்போர்,
ஆகஸ்டு 10-ந் தேதி ஆரம்பமாகிறது- ஆற்றல் மிக்க திராவிடத் தோழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த `அழைப்பு' கிடைத்துவிட்டது.

அதிகாரம் கிடைத்து விட்ட காரணத்தால், எதையும், எப்படியும் செய்துவிட முடியும் என்ற அரசியல் ஆணவத்தின் மீது அமர்ந்திருக்கும் அரசியலாருடன்,

அறப்போர்,
தமிழ் மொழியின் தொன்மையையும், தூய்மையையும், தாயகத்தின் தனிப் பண்பையும், துச்சமென்றெண்ணிடும் போக்கினரின் ஆகா வழித் திட்டத்துடன்,

அறப்போர்,
தொடுக்கும் நாம், ஆட்சிப் பீடத்து அமர்ந்திருப்போருக்கு இன்றுள்ள பலம், பிரசார சாதனம், பண பலம், மேலிடத்து ஆதரவு, எவ்வளவு அதிகம் என்பதை அறிந்து இருக்கிறோம்.

அறப்போர்,
தொடுக்கும் போர் அதனால் அரசியல் இலாபம், சில்லறைச் சலுகைகள், வியாபார வசதி கள், பதவித் துண்டுகள் பெறும் எண்ணம் கொண்ட பேதைகள் அல்லர்- மூதாதையர் கால முதல் இருந்து வரும் மொழியையும், அதன் வழி அமைந்திருக்கும் பண்பாட்டையும், காப் பாற்றவே போர் தொடுக்கிறோம்.

அறப்போர்,
கட்டுப்பாடு, சகிப்புத் தன்மை, இவைகளை, அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.

அறப்போர்,
ஆட்சியாளர்களிடம் இன்று உள்ள பலவித அடக்குமுறைகளையும், தாங்கிக் கொள்ளும் உள்ள உரம் கொண்டவர்களின், உற்சாகத்தை நம்பியே தொடுக்கப்படுகிறது.

அறப்போர்,
இழித்தும் பழித்தும் பேசப்படும்- ஏளனம் கண்டனம் ஏராளமாகக் கிளம்பும்- இவைகளைக் கண்டு கலங்காத உள்ளம் வேண்டும்.

அறப்போர்,
தொடுக்கும் நாம், இன்று அறிந்திருக்கும் அளவு, திராவிடப் பண்பினை அறியாதிருக்கும் திராவிடர்கள் பலர், ஆளவந்தார்களின் ஆட்சி யிலே உள்ளனர் என்பதை அறிந்து, அவர்களின் நல்லெண்ணத்தையும், நம்பிக்கையையும், ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெறுவதற்கான முறையிலே, பணி புரிய வேண்டும்.

அறப்போர்,
தொடுக்கும் நம்மீது ஆட்சியாளர்கள் வீசும் அடக்குமுறை ஆயுதங்களால் நமது உடலிலே ஏற்படும் தழும்பும், ஒழுகும் இரத்தமும், இன்று திராவிடத்தை மறந்து, ஆளவந்தார்களு டன் சேர்ந்துள்ள, திராவிடத் தோழர்களை, நமது முகாமுக்குக் கொண்டு வந்து சேர்க்க திராவிடர் கழகம் அனுப்பி வைக்கும், தூதுவர்களாக அமைய வேண்டும்.

அறப்போர்,
தொடுக்கிறோம்- அன்பழைப்பை ஏற்றுக் கொள்ள ஆயிரமாயிரம் இளைஞர்கள் ஆர்வத் துடன் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன்.

அறப்போர்,
துவக்கமும், முதல் படைத் தலைவனாக (சர்வாதிகாரியாக) இருக்கும் சிறப்பிடமும், வாய்ப் பும், எனக்கு அளித்த, நமது தலைவர் பெரி யாருக்கு என் நன்றி, கமிட்டியாருக்கும் கழகத் தாருக்கும் என் நன்றி.

அறப்போர்,
நடாத்த, உங்கள் பேராதரவை நம்பி, ஒப்புக் கொண்டுவிட்டேன்- படை வரிசையில் வந்து நில்லுங்கள் என்று உங்களை அழைக்கிறேன்.

அறப்போர்,
ஆரம்பமாகிறது- வருக! வருக! வெல்க!

இங்ஙனம்,
அண்ணாத்துரை,
1வது சர்வாதிகாரி,

(திராவிட நாடு - 8.8.48)