அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எப்படி நம்புவதோ? (1947)

நாம், கடவுள்களை நிந்திக்கும் கயவர்கள், மதத்தைக் குறை கூறுகிறோம் கண்டிக்கிறோம், என்று உண்மையிலேயே உள்ளம் வருந்தும் அன்பர்கள் சில பேர் இருக்கிறார்கள் - வேறு பலர் உள்ளனர் - ஏதாவது சாக்குக் காட்டி நம்மைத் துற்றுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் - அவர்களைக் குறித்தல்ல நாம் குறிப்பிடுவது, உண்மையாகவே மனம் வருந்துகிறார்களே அவர்களுக்குக் கூறுகிறோம் - நமது கடவுள்களைப் பற்றியும் மதத்தின் பேராலும் கட்டப்பட்டுள்ள கற்பனைக் கதைகள், படித்துவிட்டுச் சற்றே சிந்திக்கும் எவருக்கும், அருவருப்பைத்தானே கிளறுவதாக இருக்கிறது - அறிவுக்குப் பொருந்தாத ஆபாசங்களை அல்லவா ஆண்டவனின் பெயருடன் இணைத்து இங்கே, மத நூற்களாக்கி விட்டனர். மக்களின் பொது அறிவு வளர்ந்து, இராயுந் திறன் வளரும்போது, எப்படி அந்தக் கதைகளைப் பக்தியுடன் படிக்கவோ, நம்பவோ முடியும்! - இந்நிலையில், உலகமோ வேகமாக முன்னேறுகிறது - நாம் இந்த நாளிலேயும், அந்தப் பழைய, நம்ப முடியாத, ஆபாசமான கதைகளை நம்பத்தான் வேண்டும், அதுதான் மதவாதி என்பதற்கு இலட்சணம், என்று கூறினால், யாரால் சகித்துக் கொள்ள முடியும்? சில எடுத்துக்காட்டுகள் - இவை, நமது பெரியவர்கள் உச்சிமேல் வைத்துப்போற்றும் உயர்தரமான மத ஏடுகளிலே, கடவுள் திருவிளையாடல்களின் தொகுப்பாக உள்ள புராணங்களிலே காணப்படுபவை. இவைகளை எப்படி நம்புவது? நம்ப முடியுமா என்பதைக் கோபதாபமின்றி அன்பர்கள், கூற வேண்டும்.

1. சிங்காரச் சோலையில் சில முனிவர்கள் அனைத்தும் துறந்து ஆண்டவனை அடைய ஆல்லும் பகலும் தவம் செய்து கொண்டிருக்க, அங்கொரு பெண் மான் துள்ளி விளையாட, அதைக்கண்ட முனிவர்கள் அதன்மேல் ஆசை கொள்ள, அது உடனே கருவுயிர்த்து ஒரு பெண் குழந்தையை வள்ளிக் கிடங்கில் உன்றுவிட்டுச் சென்றுவிட்டது.

2. ஐந்நூறு யோசனை அகன்று நூறு யோசனை உயர்ந்த மரத்தைப் பிடுங்கி ஆவுணர்கள்மேல் வீசி எறிந்தார் வீரவாகு.

3. ஆயிரம் தலைகளும் இரண்டாயிரம் கைகால்களையு முடைய சிங்க முகாசூரன் எதிரிகளைக் கையில் எடுத்து விழுங்கினான்.

4. வாளுக்கிரையான சூரபன்மன் ஆண்டமுகட்டைத் தொடும்படியாக உயர்ந்து பூமி உருக்கொண்டு எங்கும் நிறைந்து நின்றான். முருகன் 7 பாணங்களை ஏய்ய அவை 7 கல்களாகச் சென்று அழிந்தன.

5. சிங்கமுகாசூரனுடைய வயிற்றை சுப்ரமண்யரின் ஆம்பு துளைக்க அதன் வழியாக லக்ஷம் வீரர்கள் தோன்றினார்கள்.

6., சூரபன்மன் வேலன் படைக்கஞ்சிக் கடலின் மத்தியில் ஆண்ட கூடமளவும் உயர்ந்து லக்ஷம் யோசனை அகன்ற மாமரமாக நின்றான்.

7. தாரகன் லட்சம் வீரர்களைப் புழைக்கையால் பிடித்துக் கட்டிக்கடலில் எறிந்தான்.

8. வீரவாகு, சாந்தமதன பர்வதத்தின்மேல் ஏறிநிற்க, அது அவரைத் தாங்காது பிளந்து பூமியில் ஆழ்ந்தது.

9. (அ) சூரபன்மனது தெற்கு வாயில், வாயில் காப்போனாகிய கயமுகன் ஆயிரம் தலைகளையும் இரண்டாயிரம் கைகால்களையுமுடையவன்.

(ஆ) கயமுகன் தன் முவாயிரம் கைகளால் வீரவாகுவை எடுத்து விழுங்க எத்தனிக்க அவைகளைத் துண்டித்தார் வீரவாகு.

10. கயமுகன் ஆயிரம் குன்றுகளை ஏறிய அவைகள் வீரவாகுவின் மேல்பட்டவுடன் கல்லின்மேல் பட்ட பாண்டமாகுதல்.
11. கயமுகன் மலையைப் பெயர்த்து வீரவாகுவின் மேல் ஏறிய அதைவீரவாகு தோளில் தாங்க அவை மன்கட்டிபோல் உதிர்தல்.
12. தேவர்களும், அவுணர்களும் அமுதம் கடையும்போது மகா விஷ்ணு மோகினியாக வர, உஸ்வரன் சுந்தர புருஷனாக வர, மோகினி அவர்பேரில் ஆசைகொள்ள ஆக்கணமே ஐயனார் தோன்றினார்.

13. அஷ்டகுலப் பர்வதங்களை ஓரிடத்தில் கூட்டுவது அவைகளைத் தலைகீழாய் நட்டு வைத்தல், கடல்களை ஒன்றாக்குதல் மேருமலையை சமுத்திரத்தில் ஆழ்த்துதல், பெருகிவரும் கங்கையை அடைத்தல், நாகங்களை நேராக உருட்டல், சூரிய சந்திர நக்ஷத்திரங்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு மகிழ்தல். இவ்வளவும் பாலமுருகனது பால்ய லீலைகள்.

14. சூரபன்மன் தேவர்களையும், வருஷம், மாதம், நாழிகை, நக்ஷத்திரம், நாள், சூரிய சந்திரன் முதலியவர்களையும் சிறை செய்தான்.

15. உமாதேவி காற் சிலம்பில் 9 முத்துக்கள் உதிர அவைகள் உமாவாக மாற உமா கண்டு கோபமடைந்து அவர்களைச் சபிக்க, சாபத்திற்கு அஞ்சிய அவர்களின் உடம்பில் வியர்வை உண்டாக வியர்வையினின்றும் லக்ஷம் வீரர்கள் தோன்றினார்கள்.
16. மேற்படி நவ உருவங்களின் தொப்புள் வழியாக வீரவாகு முதலிய நவ வீரர்கள் வாலிபப்பருவத்தினராய் தோன்றினார்கள்.

17. இந்திரன் புதல்வன், பானுகோபன், கூரையின் வழியாக சூரிய கிரணம் பட்டமையால் சூரியனைப் பிடித்து வந்தான். பிறகு கட்டில் காலில் கட்டிவைத்தான்.

18. சிவனால் அளிக்கப்பட்ட ஆக்னிப் பொதிகள் யாவரும் சிறிதும் அணுகாவண்ணம் வெப்பத்துடன் உலகெங்கும் வீசின. வாயுக்கள் உலர்ந்தன, கடல்கள் வரண்டன.

19. வாயு ஆக்னிப் பொறிகளைத் தாங்கமுடியாமல் கங்கையில் போட, கங்கை சரவணப்பொய்கையில் போட்டுவிட்டாள்.

20. பார்வதிதேவி ஸ்நான அறைக்கு போகும்பொழுது அழுக்கைத் திரட்டி உருசெய்து அவ்வுருவுக்கு உயர் கொடுத்து வாயிலில் காவல் வைக்க, சிவன் அங்குவர உட்செல்ல அனுமதிக்காததால் கோபமடைந்து அவ்வுருவை வாளால் வெட்டி விட்டார். பிறகு விஷயம் அறிந்த பார்வதி புத்திர சோகத்தால் புலம்ப, சிவன் தேற்றி வெளியில் வந்து பார்க்க, அவ்வுருவின் தலையைக் காணவில்லை. மூன்று உலகில் தேடியும் அகப்படவில்லை. உடனே அங்கொரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர் கொடுக்க யானை முக விநாயகராயிற்று.

(திராவிடநாடு - 29.6.47)