அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எப்படிச் சகிப்பது?
ஜெமீன்தாரர்களுக்குத் தரப்படும் நஷ்டஉடு, போதாதாம்! இன்னும் தாராளமாக, அவர்கள் விஷயத்திலே நடந்துகொள்ள வேண்டுமென்று, காங்கிரஸ் மேலிடம், தாக்கீது பிறப்பித்துவிட்டது!
இங்கேயோ, பத்திரிகைகள் எல்லாம், பொறி பறக்க எழுதின - நாட்டு மக்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்த ஜெமீன்தாரர்களிடம், அதிகமான அக்கறை காட்டுவது கூடாது என்று.

பல பத்திரிகைகள் - காங்கிரஸ் பற்றுள்ளவை. 10 கோடி நஷ்டஉடு தருவது அக்ரமம் என்று எழுதின.

பல, மாநாடுகளிலே, நஷ்டஉடு தரவே கூடாது, என்று காங்கிரஸ் காரர்களே தீர்மானங்கள் நிறைவேற்றினர். காங்கிரஸ் பிரச்சாரகர்களோ, ஜெமீன்தாரர்களை ஒழித்துவிட்டு மறுவேலை பார்க்கிறோம் என்று குரலை உயர்த்தி உயர்த்திப் பேசினர். கடைசியில், காங்கிரஸ் மேலிடம் கட்டளை பிறப்பிக்கிறது, தாராளமாகப் பணம் கொடு! என்று, பத்துக்கோடி, போதாதாம்! ஏழைகளைக் காப்பாற்றும் தலைவர்களின் போக்கு இவ்விதமாகவா இருப்பது?

பல தலைமுறைகளாகப் பாடுபடாமல், வாழ்ந்துவந்த ஜெமீன்தாரர்களுக்குப் பத்துக்கோடி போதாதாம்! இன்னமும் கொட்டிக் கொடுக்க வேண்டுமாம்.

இப்படி ஏராளமான பணத்தைக் கோடி கோடியாக நஷ்டஉடு கொடுத்து, ஜெமீன்தார்களைக் கொழுக்க வைப்பது நியாயமா?

மக்கள் தலையிலே, இந்தப் புதுச் சுமையை ஏற்றுவது சரியா? பத்துக் கோடிக்குமேல் பணம் கொட்டிக் கொடுத்துவிட்டு, இந்த ஜெமீன்களைப் பெறுவதுதான் சமதர்மமா!

இந்தப் பணத்தைக் கொண்டு, காடு மேடுகளைக்கூடப் புதிய வயல்களாக்கி விடலாமே. ஏன், இவ்வளவு பயம் காட்டு ராஜாக்களிடம்!

நாட்டை இளவந்தவர்களுக்கும் காட்டு ராஜாக்களுக்கும், ஏன் இந்த ஏற்பட்டது! இதற்கு, ஜெமீன் ஒழிப்பு என்று பெயர் கூறுவதைவிட, ஜெமீன்தாரர்களின் பணமுடையைத் தீர்க்கக் காங்கிரஸ் சர்க்கார் செய்யும் என்று ஏன், சொல்லக்கூடாது. பொருத்தமாக இருக்குமே! காங்கிரஸ் தலைமை, மேலிடம், இப்படித்தான், பணக்காரர் சார்பாக இருக்கும், என்று நாம் கூறுவதிலே, என்ன தவறு இருக்கிறது?

ஒரு பலாத்காரப் புரட்சி ஏற்பட்டிருக்குமானால், இந்த ஜெமீன்தாரர்கள், மடாதிபதிகள், ஆகியோர் உயிரோடாவது தப்பி இருப்பார்களா? என்று நண்பர் சிவஞானம் ஒரு மாநாட்டிலே இருந்தபோது கேட்டார்.

நிச்சயமாகக் தப்பமாட்டார்கள் அதுகூட வேண்டாம். உண்மை நிலையே, ஏழைகளின் நன்மைக்காகவே ஆட்சி நடத்தும் சர்க்கார் இருந்தால், இப்படி, ஜெமீன்தார்களுக்குப் பத்துக்கோடி தருவதுகூடப் போதாது, மேலும் தாராளமாகத் தரவேண்டும், என்று கூறுமா? நேத்தாஜி பேர் கூறி, ஜெயப்பிரகாஷ் பெயர் கூறி, அருணாவின் பெயர் கூறி, கம்யூனிஸ்டுகளின் போக்கையும் திராவிடர் கழகத்தின் போக்கையும் ஒரு சேரக் கண்டிக்கும், தீவிரவாதம் பேசும் காங்கிரஸ் நண்பர்கள், காங்கிரஸ் மேலிடம், ஜெமீன்தாரர்களிடம் காட்டும் கருணைக்கு, என்ன சமாதானம் கூறப்போகிறார்கள். நமக்கல்ல - தங்ள் நெஞ்சுக்கு. பழைய ஏடுகளை மீண்டும் படித்துப் பார்க்கட்டும், பத்துக்கோடி நஷ்டஉடு தருவதே அதிகம் - நஷ்டஉடு ஏன் தரவேண்டும். என்றெல்லாம், பேசியவைகள், எழுதியவைகள், ஏராளமாக இருக்கும்.

இவ்வளவு, ஒரேநாள் பேட்டியிலே தகருகிறதே!! பித்தாபுரமும், இராமநாதபுரமும், பொப்பிலியும், விஜயநகரமும் காங்கிரஸ் மேலிடத்தை ஒரேநாள் பேட்டிகண்டு, தங்கள் பக்கம் ஜெயம் உண்டாகும்படி செய்துவிட்டார்களே! இவ்வளவு காலமாக ஜெமீன்தாரர்களின் யெபரைக் கேள்விபட்டாலே, கடுகடுத்து வந்த காங்கிரஸ் மேலிடம், ஏன், இப்போது, ஏழையின் குரலை மதிக்க மறுத்து, இன்னும் சற்றுத் தாராளமாக நஷ்டஉடு தரவேண்டும் என்று கூறுகிறது.

ஜெமீன்முறை ரத்து இவதால், இந்த ஜெமீன்தாரர்கள், அடையப் போகும் கஷ்டம் என்ன?

ஏராளமாகச் சொந்த நிலம் இருக்கிறது.

மாட மாளிகைகள் உள்ளன. மணி அணிக் குவியலும் உள்ளன. பலருக்கு, வருமானம் தரும் வேறு வியாபாரமும் உண்டு.

இவ்வளவும் போதாதென்று, இப்போது ரொக்கம் தருகிறார்கள், அதுவும் பத்துக்கோடி போதாதாம்!!
இவ்வளவு தாராளமாக, ஜெமீன்தார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

காங்கிரசிலே, தீவிரமான திட்டம் இருக்கிறது என்று நம்பிய, அதே நம்பிக்கையுடன் பேசிய நண்பர்கள், இந்தத் தாராள மனப்பான்மைக்கு என்ன காரணம் காட்டப் போகிறார்கள்?

ஏற்கெனவே, பொருளாதாரநிலை சீர் குலைந்திருக்கிறது. மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கான காரியங்களுக்குப் போதுமான பணம் இல்லை. இந்த நிலையில், ஜெமீன்தார்களுக்குத் தாரளமாகத் தரவேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் கூறுகிறது! ஏன், காங்கிரசிலுள்ள முற்போக்காளர்கள், இந்த அக்ரமத்தைத் தடுக்கக்கூடாது? ஜெமீன்தாரர்களின் நிலைமை, எங்களுக்கு நன்றாகத் தெரியும் அவர்களுக்குத் தருவதாகச் சொல்லப்படும் பத்துக்கோடி ரூபாயே அதிகம் மேலும் கொட்டிதர் தரச் சொல்வது அநியாயம் இதை நாங்கள் ஏற்கமுடியாது என்று, ஏன் துணிவுடன் கூறக்கூடாது? காங்கிரஸ் மேலிடத்தின் தாக்கீதுகளின்படி நடந்து கொள்வதுதான், ஆட்சி முறையாக இருக்கவேண்டும் என்றால், நிலைமையை உணராததாலேயோ, முதலாளித்துவத்தின் மனத்தை நோகச் செய்யக்கூடாது என்பதனாலேயோ, காங்கிரஸ் மேலிடம், இப்படிப்பட்ட, அநியாயத் தீர்ப்புகள் அளிப்பதையும் கூடச் சகித்துக் கொள்வதுதான், ஆட்சிமுறை என்றால், இங்கே ஏன் ஓர் மந்திரிசபை, அது ஆமர ஒரு அலங்கார மண்டபம், ஒரு பரிவாரம், இவ்வளவும்! ஏன்?

மேலதிகாரியின் உத்தரவின்படி நடக்கும், சிப்பந்திகளாக இருப்பது தான் தமிழன் இரத்த்ம சிந்திக் குமரனைப் பறிகொடுத்து, சிதம்பரத்தைச் சீரழித்துக் கண்ட பலனா? காங்கிரஸ் இளைஞர்கள் - முற்போக்கு நோக்கமுடையவர்கள் - உண்மையிலேயே, இந்த நிலைமையைக் கண்டு கோபமோ, வெட்கமோ, துக்கமோ அடையவில்லையா? அவர்களின் மனம் மரத்துவிட்டதா? காங்கிரஸ் மேலிடத்தாரின் சுட்டு விரல் காட்டும் குறிப்பறிந்து நடப்பதுதான், வீரர்கழகா? விவேகியின் இலட்சணமா? கண்களை விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ! என்று பாடிய பாரதியின் பெயர் கூறிடக் கேட்கிறோம். எதற்கும் மேலிடத்துக்கு, காவடி எடுத்து, அங்குப் பிறக்கும் கட்டளைக்குக் காத்திருந்து காரியமாற்றும் அளவுக்கு, இங்கு, நமது நாட்டுச் சுயமரியாதையையும், உரிமையையும் பறிகொடுத்துவிட்டு, நாங்கள் இந்திய யூனியனிலே ஓர் உன்னதமான இடம் பெற்றிருக்கிறோம், என்று பேசினால், அரசியல் அறிஞர்கள் கேலி செய்யாரோ?

அவர்களைக் கூடத் தள்ளிவிடுவோம், மேலிடத்தார் தமது பக்கம் பேசியதையும், அதற்குக் காங்கிரசார் தலையாட்டியதையும், கண்டு, களிப்புடன், கெர்வத்துடன், திரும்பும், ஜெமீன்தாரர்கள், காங்கிரஸ் தீவிரவாதிகளைப் பார்க்கும்போது - கேலி செய்யும் கண்களுடன் பார்க்கும் போது - முகத்தைக் கண்டு, இதோ! காங்கிரஸ் வீராதி வீரர்! எமக்கு நஷ்டஉடும் தரக்கூடாது என்று ஆர்ப்பரித்தனர், மேலிடத்தார், வெட்கத்தால் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு செல்கிறார்! என்று பேசும் கண்களுடன் பார்ப்பரே, அதையுமா சகித்துக் கொள்ள வேண்டும்! இன்னும் எவ்வளவு? இன்னும் எவ்வளவு கொடுமைகளை, அலட்சியப்படுத்தப்படுவதைச் சகித்துக் கொள்ளப் போகிறார்கள் காங்கிரசில் உள்ள தீவிர நோக்கமுடையோர்?

(திராவிடநாடு 2-11-47)