அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


ஈரோடு மாநாடு
காட்சியும் - கருத்தும்!

சோளக்கொல்லையில், ஓர் பெரும் பந்தல்- அதிலே இருபக்கமும் பெரும் பகுதி யிலே, ஓலை வேயப்படவில்லை- ஓலைக் கட்டுகள் கீழே கிடந்தன. தரையோ, சதுப்பு நிலமாகி விடும் நிலை! வானமோ இருண்டு கிடந்தது- இடிமுழக்கம். மிரட்டிய வண்ணம்! மழை பெய்வதும், ஓய்வெடுப்பதும், மீண்டும் வருவதும், வளருவதுமாக இருந்தது, தேதியோ 22!

நாளை மாநாடு- இன்றிரவுதான், பந்தல் வேலை பூர்த்தியாக முடிந்தது- பண்டங்களைச் சேகரித்தும் பராமரித்தும் வந்தனர். பல நாட்களாக, பாழும் மழை வந்து, பட்டபாடு அத்தனையையும், வீணாக்கி விடுமோ என்ற பயம். மாநாட்டுச் செயற்குழுவினரைப் பிடித்தாட்டியபடி இருந்தது. எனினும் செயற்குழு- புயலையும் பொருட் படுத்தப் போவதில்லை என்ற உறுதிடன் இருந்தது- எப்படியும் மாநாட்டை நடத்தியே தீருவது, எவ்வளவு இடையூறுகள், இயற்கைக் கோளாறுகள் ஏற்படினும் சரி, மாநாடு நடந்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் பணிபுரிந்தனர் செயற்குழுவினர்.

பெத்தாம்பாளையம் தோழர் பழனிச்சாமி, கோவை மாவட்டத்தை ஒரு சுற்றுச்சுற்றி வந்தார், கிராமப்புறங்களில் உள்ள இயக்கத் தோழர் களைக் கண்டு பேசியும், ஆதரவும் திரட்டியும், ஆர்வமூட்டியும் வந்தார். அவருக்குத் துணை நின்றார், தோழர் சம்பத்.

இருவரும், சோளக்கஞ்சி குடித்தவர்கள். சிறையில், அறப்போர் காரணமாக! அதிலே தான் என்ன இனிப்பு கண்டனரோ அக்காளைகள். மீண்டும் விரைவிலே கஞ்சிக் கலயத்தைக் காண வேண்டுமென்ற துடிப்புடன், மாநாட்டு வேலை களைத் துரிதப்படுத்திய வண்ணம் இருந்தனர். தூறல் மழையாவதும், மழை தூறலாவதும், வெண் மேகம் கருநிறம் கொள்வதும் இடி ஒலி கிளம்பு வதும், மின் வெட்டுகள் தோன்றுவதுமாக, இருந்தது. சோளக்கொல்லை, சேறு நிரம்பியதாகி விடுமோ என்ற கவலை தரும் அளவுக்குக் கால நிலை இருந்தது. எனினும் மாநாட்டுக்கான வேலைகளை மட்டற்ற ஆர்வத்துடன் கவனித்த வண்ணம் இருந்தனர்.

பல ஊர்களிலேயும் திராவிடர் கழகத் தோழர்கள், கவலையும், கலக்கமும் கொண்டவர் களாகவே இருந்திருப்பர்- ஏனெனில் எங்கும் மழை.

இந்தக் கவலை மடிந்து, களிப்பு மலருவது போல, 23-ந் தேதி காலை மலர்ந்தது. கதிரொளி மேகத்தை விரட்டி அடித்தழித்தது. இரவெல்லாம் அவசர அவசரமாக வேலை செய்து, பந்தலைச் சரி செய்தனர்- அலங்கார அமைப்புகளும் ஏற்பட்டன, வளைவுகள், தோரணங்கள, காட்சி தந்தன. முகப்பு வாயில் அலங்காரமும் முடிந்தது, எல்லாம் அன்றிரவே நடந்தேறின. இந்த அரும் பணியில், தூத்துக்குடி கே.வி.கே. சாமியும் அவர் தம் நண்பர்களும் பெரும்பங்கு கொண்டனர்.

23-ந் தேதி, விடிவதற்குள்ளாகவே ஈரோடு எங்கும் திராவிடர் தோழர்கள், பவனி வரலாயினர்- மணி ஆக ஆக கூட்டம் வளர்ந்த வண்ணம் இருந்தது.

காலையில், முக்கியமான நிழ்ச்சி, ஊர்வலம், ஈரோடு வாசிகள் அதுபோல் என்றுமே கண்டதில்லை என்று வியந்து கூறக்கூடிய முறையிலே ஊர்வலம் இருந்தது. மூன்று மணி நேரம்! நகரில் எல்லாப் பகுதிகளிலும் ஊர்வலம்! பிற்பகல் மாநாட்டு நிகழ்ச்சி துவக்கப்பட்து.
எல்லாருடைய ஆர்வமும் கரை புரண் டோடிற்று. அதுபோல நகைச்சுவை அரசு, என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், புன்னகை தவழும் முகத்துடன் கூப்பிய கரத்துடன் மாநாட்டுக்கு வந்ததால்.

திராவிடர் கழக மாகாண மாநாட்டிலே முதல் நிகழ்ச்சியாக தோழர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின், நாட்டு வாழ்த்து இசை அமைந் திருந்தது. பொருள் செறிந்த அந்த வாழ்த்துப் பாடலை ஆக்கியவர், உடுமலை நாராயணக் கவி. சீர்திருத்த ஆர்வமிக்க, கொங்கு நாட்டுக் கிழவர்- பெரியாரின் இயக்கக் கொள்கைகளைத் தமது பாடல்கள் மூலம், படக் காட்சி உலகில் பரப்பும் பணி புரிபவர்.

திராவிட நாட்டின் சீர் சிறப்பினை விளக்கிடும் அந்த வாழ்த்துப் பாடலை, நமது நகைச்சுவை அரசர், பின்னணி வாத்யத்துடன், சுவைபடப் பாடி, மாநாட்டினருக்கு மகிழ்ச்சியும், எழுச்சியும் ஊட்டினார்.

வெற்றிக் களையுடன், விளங்கிய தோழியர் இந்திராணி பாலசுப்பிரமணியம் அம்மையார், ``இருண்ட வாழ்விலே இருக்கும், திராவிடர் களாகிய நாம் ஈடேறுவதற்கான அறிகுறி தெளிவாகத் தெரிகிறது, கருப்புக் கொடியின் நடுவே உள்ள சிகப்பு வட்டம் இந்தச் சேதியைத் தான் நமக்களிக்கிறது. நமது நாட்டு விடுதலைப் போர், வெற்றிகரமாக நடந்தே தீரும்'' என்ற உறுதியும் உற்சாகமும் ஊட்டினார், தமது சுவை மிக்க சொற்பொழிவில்.

அம்மையார், திராவிடர் கழகக் கொடியை ஏற்றுவித்தார்கள்.

குத்தூசி- குத்தூசி! என்று குதூகலத்துடன் மாநாட்டினர் கூவினர். தோழர் குருசாமி, மாநாட்டைத் திறந்து வைக்கும் பணியாற்ற எழுந்ததும்- அவர் பேசி முடித்ததும், குத்தூசியா, குருசாமி அல்ல, அல்ல, ஆரியத்தின் குடலை வெளியே கொண்டுவரும் கூர்மையான ஈட்டி!- என்று மாநாட்டினர் வியந்துரைத்தனர்- அவ்விதமாக அமைந்திருந்தது அவருரை. ஆட்சியாளருக்கு அவர் இடித்துரைத்தார். திராவிடர் கழகத்தின் திட்டங்களை, கரை புரண்டோடும் இந்த ஆர்வத்தைக் கொண்டு, காங்கிரஸ் கட்சியை அடுத்த தேர்தலின்போது முறியடித்துக் காட்ட முடியும், என்று முழக்க மிட்டார். அவினாசியாரின் பிடிவாதத்தின் போக்கையும், ஓமந்தூராரின் வீண் வம்பையும், நண்பர் குருசாமி, எள்ளி நகையாடினார். ஆட்சியாளர்களின் எந்தச் செயலாவது, மக்களின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதாக இருக்கிறதா என்று கேட்டார். அறப்போரின் சரிதையை விளக்கிக் கூறி ஆர்வமூட்டினார். எழுத்துக்கு, 2000 கேட்டனரே சர்க்கார். இந்தப் பேச்சுக்கு 10,000 கேட்பரோ- என்று திராவிடர்கள் பெருமையுயுடன் பேசிக் கொண்டனர், அவருரை கேட்டு.

பெத்தாம்பாளையம் தோழர் பழனிச்சாமி யும், தோழர் சம்பந்தம் மாநாட்டினரை வரவேற்ற துடன், தலைவரைப் பிரேரேபித்தனர். அதனை வழி மொழிந்தனர். தோழர்கள் சித்தையன், ஜீவரத்தினம், நீலமேகம், பெரியார் ஆகியோர் தலைவரின் முன்னுரைக்குப் பிறகு, நண்பர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் காந்தியார் படத் திறப்பு விழாச் சொற்பொழிவாற்றியதுடன், அதற்கென அமைக்கப்பட்ட அருங்கவிதையை யும் பாடினார்.

இருண்டது வானம்- இடி முழக்கம் கேட்கலாயிற்று- மழை விரைந்தது- எனவே மாநாட்டு நிகழ்ச்சி, அந்த அளவோடு முடிந்தது.

இடியை விரட்டலானார் நண்பர் எம்.ஆர். ராதா! மழையைப் பொருட்படுத்தாமல், அன்றிரவு நடைபெற வேண்டிய நாடகத்துக்கான, காட்சி அமைப்பு வேலைகளைச் செய்யலானார். `போர் வாள்' உண்டல்லவா அவரிடம், மழைக்கும் கிலி தானே, அதனால், விடைபெற்றுக் கொண்டது விண் மீன்கள் சிரித்தபடி வந்தன. நாடகத்தைக் காண.

`மகாத்மாவின் தொண்டன்' எனும் நாடகம் நடைபெற்றது- மக்களின் பெருங்கூட்டம் மகிழ்ச்சிப் பெருக்கிலாழ்ந்தது. தோழர் கே.கே.நீலமேகம் தலைமை வகித்தார். அன்றிரவு நாடகத்தின்போது, நடுநிசிக்கு மேல் சிறுதூறல் இருந்ததாக, மறுநாள் காலையிலே, மக்கள் பேசிக் கொண்டனர். அவ்வளவு ஆழ்ந்திருந்தனர். நாடக ஆர்வத்தில்! கீழே தரை நனைந்திருந்தது. மழை வாடைக் காற்று வீசியபடி இருந்தது- எனினும் ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், நாடகம் முடியும் வரை அந்த இடத்தில் ஆர்வத்துடன் வீற்றிருந்தனர்- டர்னிங் சீள்கள் காணவா- டான்சுகள், பார்க்கவா- டபுள் ஹார்மோனியம், போட்டா போட்டி தபேலா ஆகியவற்றுக்காகவா, கூடினர்- இல்லை! இல்லை!! அறிவுச் சுடரொளி காண! பகுத்தறிவு வெடிகுண்டுகள் வெடித்திடு வதைக் காண! சுயமரியாதைக் கருத்து மிகந்த, நாடகத்திலே மக்கள், தம்மை மறந்து இலயித் திருந்தனர்.
மறுநாள் காலை. பந்தலில் ஒரு பகுதி, கழிகள் மட்டும் கொண்டதாகக் காட்சி அளித்தது. ஓலைகளை முன்னாள் இரவு, நனைந்து கிடந்த தரையிலே விரித்து அமர்ந்தனர், மக்கள் என்பது தெரிந்தது. மீண்டும் அவசர அவசரமாகப் பந்தலை அமைக்க முயன்றனர். முழு வெற்றி இல்லை- ஆனால் அதற்காக மாநாட்டுக் காரியம் தாமதிக்கப்படவில்லை நிகழ்ச்சிகள் தொடங்கின.
படத்திறப்பு விழாக்கள் நடைபெற்றன- சொற்பொழிவுகள்- உண்மையாகவே படத் திறப்பு விழாக்களால்- ஒரு படமும் அங்கு கிடையாது. ஆனால் எல்லாருடைய படங்களை யும் மனக்கண்ணால் காண முடிந்தது.

``சமதர்மத்துக்கு வித்தூன்றியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பாட்டாளிகளின் விடுதலைக்கான போரை முதன் முதலில், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியத் துணைக் கண்டத்திலேயே துவக்கி வைத்த பெருமை அவரையே சார்ந்ததாகும். ஏகாதிபத்யத்தாலும், முதலாளித்வத்தாலும் சிங்காரவேலர் பலமாகத் தாக்கப்பட்டார்- பல ஆண்டுகள் சிறையிலே கிடந்து வாடினார். ஆனால், அவருடைய பணியின் காரணமாக, சமதர்ம உணர்ச்சி மலர்ந்தது. நாட்டு விடுதலைக்குப் போரிடுவதாகக் கூறிக்கொண்டு, பல தலைவர்கள் வேலை செய்தனர். சுயராஜ்யம், சுயராஜ்யம் என்ற சுலோகத்தை ஒலித்துக்கொண்டு நமது சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்தான், தைரியமாகவும் ஆணித்தரமாகவும் கேட்டார், சுயராஜ்யம் யாருக்கு? என்று. பாட்டாளிகளின் ராஜ்யமாக இருக்க வேண்டும் என்று பலமாக வாதாடினார்- அதற்காகவே அவர் கடைசி வரை போராடினார். இந்தியைப் பற்றியும் அவர் தமது கருத்தை வெளியிட்டிருந்தார் - கட்டாய இந்தி கூடாது என்பதே அவர் கருத்து. சுயமரியாதைக் கோட்பாட்டிலே, அவருக்கு மிகுந்த பற்று உண்டு- நாட்டு மக்களின் அஞ்ஞானத்தைப் போக்கி, அறிவுத் தெளிவுள்ள அருமையான நூற்களை வெளியிட்டார். விஞ்ஞானத்தின் மேம்பாட்டை விளக்கினார். அந்த மாவீரனை, நாம் மறக்கமாட்டோம்'' என்று பேசினார் நண்பர் என்.வி.நடராஜன்.

வெள்ளை ஆடை அணிந்த வேந்தன் தியாகராயரின் சிறப்பினை விளக்கிப் பேசினார். தோழர் டி.பி.வேதாசலம், ``ஜனநாயக ஆட்சி முறையிலே இருவகை- ஒன்று பார்லிமெண்டரி முறை, மற்றொன்று ஒரே கட்சி ஆதிக்கம் வகிக்கும் முறை- பின்னது தீமை தருவது, ஆனால் காங்கிரசோ இதனைத்தான் அமைக்க முயற்சிக்கிறது தியாகராயர் உண்மையான ஜனநாயகத்துக்காகப் பாடுபட்டார்- சமுதாயத்தின் சீர்குலைவுக்குக் காரணமான பேதங்களை ஒழித்தாக வேண்டும் என்பது அவருடைய பெரு நோக்கம்- ஒரு குலத்தாரிடம் சகல துறைகளும், சகல அதிகாரங்களும் சிக்கிக் கொள்வது, நியாயமுமல்ல, நல்லதும் ஏற்படாது அதனால், என்பதை விளக்கினார். அவர் காலத்திலே தூவப்பட்ட வித்தே இன்nறு இவ்வளவு பிரம்மாண்டமான கட்சியாகக் காட்சி அளிக்கிறது. தியாகராயர், சட்ட வரம்புக்கு உட்பட்ட கிளர்ச்சி செய்வதிலேதான், நம்பிக்கை கொண்டவர் அவருடைய அரும்பணி இன்று நமக்கு. புதிய அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறது. அவர் காலத்தில் அரும்பிய ஜனநாயக மலரை, இன்றைய ஆட்சியாளர்கள், தங்கள் ஆதிக்கத் தால் நசுக்கப் பார்க்கின்றனர். இன்றைய ஆட்சி யாளர்களுக்கு, ஜனநாயக முறைகளைப் பற்றிய விளக்கமே தெரிவதில்லை- படிக்கவில்லை- படிக்கத் தெரியாதவர்களல்ல- படிக்க நேரமே இல்லை அவர்களுக்கு. ஒரு மூன்று மாத காலம் `லீவ்' எடுத்துக் கொண்டாவது, படித்துப் பக்குவம் பெற வேண்டும்''- என்று நகைச்சுவை ததும்ப, நண்பர், வேதாசலம் பேசினார்.
``இருபத்திநாலு பேர் மட்டுமே ஏறிச் செல்லலாம் இந்த மோட்டார் பஸ்ஸில், அதற்கு மேல் ஏறினால், வண்டிக்கும் கேடு, ஏறுபவர் களுக்கும் தொல்லை என்று விஷயமறிந்து அதிகாரிகள் விதி ஏற்படுத்தி இருக்க, இருபத்து எட்டுப் பேரை ஏற்றிக்கொண்டு அந்த மோட்டார் சென்றால் போலீஸ்காரர், அதை நிறுத்தி, புத்தி கூறி, தண்டிக்கமாட்டாரா, அதுபோலத்தான், சிறு பிள்ளைகளுக்கு, மூன்று மொழிகளைப் போதிப் பது அவர்களால் தாங்கக் கூடியதல்ல என்று மொழி நிபுணர்களும் கல்வித் துறையில் வல்லவர்களும் கூறியிருக்க, அவர்களின் நல் வழியை நாடாது, இந்தச் சர்க்கார், மூன்று மொழி களை இளம் பிள்ளைகளுக்குத் திணிக்கத் துணிவதால், நாம், போலீசார் போல், அவர்களைத் தடுத்துக் கூறுகிறோம். ஆகாதய்யா இந்த அக்ரமம் என்று. எனவே நாம்தான் சட்டத்தை நிலை நாட்டுகிறோம், இதற்காக, நம்மையே தண்டிப்பதா!'' என்று கேட்டு மக்களைச் சிரிக்க வைத்தார் விருதுநகர் தோழர் ஆசைத்தம்பி- களிப்பூட்டும் பேச்சைப் பேசிக்கொண்டே வந்தவர், கடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிர் இழந்த தாளமுத்து, நடராஜன் ஆகியவர் பற்றி உருக்கமாகப் பேசி, மக்களின் கண்களையும் கசியச் செய்தார். சர்க்காருக்கு விளக்கம்கலந்த எச்சரிக்கையும் விடுத்தார். ``திராவிடர் கழகம், பலாத்காரத்தில் நம்பிக்கை கொண்டில்லை- பலம் இல்லாததால் அல்ல, பாதகமானது, அறிவீனமானது அத்திட்டம் என்பதால் பலாத்காரச் செயல்களைச் செய்து வரும் கட்சியினருடன் கூடிக்கொண்டு நாட்டிலே கலகம் விளைவிக்கவும், திராவிடர் கழகம் முற்படவில்லை- அறப்போரே தொடுக்கிறது- கஷ்ட நஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முன் வந்திருக்கிறது- இந்தச் சிறந்த பண்பு ஆட்சி யாளர்களின் சிநத்னைக்கு வேலை தர வேண்டும்'' என்று பேசினார். செல்வம் படத் திறப்பு விழாச் சொற்பொழிவாற்றினார் தோழர் சித்தய்யன்.

``பட்டம் இல்லை, பதவி இல்லை, தேர்தலும் இல்லை, என்று சேலம் மாநாட்டின் போது தெரிந்துகொண்டதும், நமது கட்சியை விட்டுச் செல்வவான்கள் ஓடிவிட்டனர்- இனி இக்கட்சி யால் இலாபம் இல்லை என்று கொள்கைப் பற்றும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் தூய்மையுள்ளமும், கொண்டவர்கள் மட்டுமே, கட்சியில் இருக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது. திராவிடர் கழகத்தில் சேர்ந்து பணிபுரிவதென்றால், சர்க் காரின் சீற்றமும், சனாதனியின் கோபமும், காங்கிர சின் எதிர்ப்பும் வந்து தாக்கும். வாழ்க்கையைக் கூட நொறுக்கி விடும், என்ற நிலைமை ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிலையிலும் நேரத்திலும், திராவிடர் கழகத்திலே வந்து சேர்ந்து, ஆர்வத்துடன் பணிபுரியலானார். நம்மை விட்டுப் பிரிந்த, நண்பர் அர்ஜுனன், கொங்கு நாட்டுப் பெருங்குடி உதித்த சீமான், சொகுசான வாழ்வை வெறுத்து, உல்லாச வேலைகளை மறந்து, திராவிடர் கழகப் பணியிலே ஈடுபடலானார். அவருடைய பொன்னிற மேனியையும், கனிவு வழியும் கண்களையும், அரும்பு மீசையையும், ஆர்வமும் அன்பும் ததும்பும் உரையையும் கண்டும், கேட்டும், திராவிட இளைஞர்கள், எழுச்சி பெற்றனர். இந்தப் பகுதியிலே முடிசூடா மன்னராக விளங்கும் நிலை, பழைய கோட்டை பட்டக்காரருக்கு- அவருடைய திருமகனார், திராவிடர் கழகத்திலே சேர்ந்து, நாட்டைத் திருத்த, சமூகத்தைத் திருத்தப் பாடுபட்டார் என்றால், அவருடைய பெருங்குணத்தை யார்தான் பாராட்டாமலிருக்க முடியும்'' என்று பேசி, தோழர் சி.டி.டி. அரசு அர்ஜுனன் அவர்களின் திரு உருவை மாநாட்டினரின் மனக்கண்முன் நிறுத்திக் காட்டினார். மக்கள் சோகத்திலாழ்ந்தனர். அர்ஜுனன் நினைவின் காரணமாக மெல்லிய குரலில் கூறிக் கொண்டனர். நாம் கூடியுள்ள இந்த மாநாட்டுப் பந்தலுக்கு, அந்த மாவீரனின் பெயர் தான் சூட்டப்பட்டிருக்கிறது என்று பேராசிரியர் சுந்தரனார் படத்தைத் தோழர் நெடுஞ்செழியன் திறக்கும் முறையில் சொற்பொழிவாற்றினார்.

அழகிரி வந்திருக்கிறாரா- அழகிரி வந்துவிட்டாரா? என்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த மக்களின் மனம் உருகி விட்டது. எலும்புத் தோலுமாக, நிற்கவும் சக்தியற்ற நிலையிலே, அந்த அஞ்சாநெஞ்சன் பேச எழுந்ததும், ஒலி பெருக்கியின் முன்பு அவர் பேசும் காட்சியே, ஒரு படைத் தலைவன், கோட்டை மேல் முகப்பில் நின்றுகொண்டு கீழே அணிவகுத்து நிற்கும் படைகளுக்கு, வீர உரை கூறும், பாணியாக இருக்கும். அப்படிப்பட்ட அழகிரி அன்று, இரண்டு நிமிஷங்களுக்கு மேல் நிற்க முடியவில்லை- கால் உதற, கரம் உதற, குரலில் துக்கம் கப்பிக்கொள்ள, நின்றார்- பேசலானார், பிறகு நிற்கவே முடியாத நிலையில் மேடை மீது உட்கார்ந்துகொண்டார். அழகிரியை இந்தக் கோலத்திலா நாம் காண வேண்டும்! ஏன் உடல் துரும்பாகிவிட்டது- இந்நிலை இவருக்கு இருப்பது பற்றி நமக்கு இதுநாள் வரை தெரியாதே! என்று எண்ணி ஏங்கிய மக்களை, அழகிரி அழவே வைத்துவிட்டார், தமதுபேச்சினால்.

``தோழர்களே! இந்த மாநாட்டுக்குப் பிறகு சிறை செல்ல வேண்டி நேரிடும், எனவே அவ் வகையில் இது கடைசி மாநாடு என்றெல்லாம் பத்திரிகையிலே பார்த்தேன். என்னைப் பொறுத்த வரையில், என் உடல் நிலையைக் கவனித்தால், எனக்கு இதுவே கடைசி மாநாடாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். என் தலைவனுக்கு என் இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளவே, இன்று வந்தேன்'' என்றார். தாங்கொணாத் துயரம் தாக்கிற்று. கூடியிருந்த அனைவரையும், தன் நிலை கண்டு மக்கள் தத்தளிப்பது அறிந்து, ``என் உடல் நிலை மிகவும் மோசமாகி இருக்கிறது- நோயினால்- படுத்த படுக்க்கையாக இருந்து வந்தேன்- இனி, என் உடல் தேறும் வரையில் இயக்கப் பணி புரிவதிலிருந்து விலகித்தான் இருந்தாக வேண்டும்'' என்று கூறிவிட்டு, அந்த மெலிந்த நலிவுற்ற நிலையிலும், வீரத்தைச் சற்றாவது விட்டுக் கொடுப்பவனல்ல நான் என்பதை விளக்கும் விதத்திலே, இன்றைய ஆட்சிப் போக்கைக் கண்டித்துப் பேசினார், அன்னை நாகம்மையாரின் அருங்குணத்தை விவரித்துப் பேசும்போது, அவர் மனதிலே, ``இந்த நலிவுற்ற நிலையில், என் அன்னை இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும்'' என்ற எண்ணம் ஊசலாடிக் கொண்டிருந்தது நன்கு விளங்கிற்று. அவர் சொல், காதிலே வீழ்ந்ததே தவிர, விளக்கமாக மக்களுக்கு அதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை சொல்லிலே விளக்க முறை இல்லாததால் அல்ல- மக்களின் சிந்தனை எல்லாம், அவருடைய நிலையைப் பற்றிய தாகவே இருந்து விட்ட காரணத்தால்.

அறப்போரிலே, நண்பர் அழகிரி, தலை வருடன் சிறை புகுந்த போதே அவருடைய உடல் நலம் கெட்டிருந்தது- ஓயாத இருமலால் தாக்குண்டு கிடந்தார். அவருடைய நிலை கண்டு, பதறினார் மக்கள் அவருடைய கண்களிலேயோ, அந்த மாபெருங் கூட்டத்தைக் கண்டதும் ஓர் பூரிப்பு இருக்கத்தானே செய்யும்! தலைவருடன், நாலைந்து பேர்களில் ஒருவராக நாடு சுற்றி, புரட்சி நாதத்தைக் கிளப்பி, கல்லடியும் சொல்லடியும் பட்டவரல்லவா! இந்த விதண்டவாதிகளுடன் யார் சேர முடியும்!- என்று பொதுமக்கள் பேசியதை, ஏசியதைக் கேட்டுக் கலங்காமல் பணி புரிந்தவர் சில நூறு பேர் கூடுவதும் கஷ்டம் என்ற அள விலே துவக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், இன்று அரை இலட்சம் பேர் கொண்ட மாநாட் டினை நடத்தக் கண்டால், அவர் உள்ளம் பூரிக்காமலிருக்க முடியுமா! வெற்றி! வெற்றி! என்று அவர் செவியிலே காலம் ஒலித்தது- அவர் நிலையைக் கண்ட மக்கள், வெற்றி பெற்றுத் தந்த வீரனுக்கா இந்நிலை- வேதனை- வேதனை என்று மெள்ளக் கூறினர், சோகத்துடன்.

அந்தச் சோகத்தை மட்டுமல்ல, திராவிடப் பெருங்குடி மக்களின் சோகத்தையே இதோ போக்க நான் வந்திருக்கிறேன் என்று கூறுவது போல, திராவிட நாட்டுப் படத்தை திறந்து வைக்க முன்வந்தார், திரு வி.கலியாணசுந்தரனார். அழகியிரின் நிலை கண்டு, புண்பட்ட உள்ளங் களைத் தமது தமிழ்த் தென்றலால், இன்பமூட்டலானார்.

திரு. வி.க.- பெரியார் இரு துருவங்கள்! ஆம்! பலகாலமாக இருந்த வந்த நிலை அது.

``நாயக்கரே! உமது தீர்மானத்தை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. மாநாட்டிலே கொண்டுவர அனுமதிக்கப் போவதில்லை- தள்ளி விடுகிறேன்.''

``முதலியாரே! பார்க்கிறேன் உம்மையும், உமது காங்கிரசையும் ஒரு கை! வகுப்பு வாரி முறையை நாடு ஏற்றுக் கொள்ளச் செய்கிறேன் பாரும்.''

பெரியார், காங்கிரசை விட்டு விலகிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, காஞ்சிபுரம் மாநாட்டிலே, இப்படி உரையாடல்!

பிறகு, இரு துருவங்களாயினர்! சைவ மெய்யன்பர் படையுடன் சாந்தக் காந்திப் படையும் சேர்ந்தது, திரு. வி.க.வின் பக்கம், பெரியாரின் பெரும் படையுடன் மோதிற்று.
தெள்ளு தமிழ்நடை, திரு. வி.க.வுக்கு ஆயுதம்.

கேட்போரைக் கலங்க வைக்கும் கர்ஜனை பெரியாருக்கு ஆயுதம். நாவலரிடம் நவசக்தி- பெரியாரிடம் குடி அரசு! தமிழகத்திலே, இந்த இரு சக்திகளும் மோதிக் கொண்டதால் உண்டான விளைவுகள் பலப்பல.

இந்த இருதுருவங்கள், ஒன்று கூடுவதேது- தென்றலும் புயலும் ஒன்று சேர முடியாதன்றோ, என்று வஞ்சக நினைப்பினர் எண்ணினர்.

அன்று அவ்விருவரையும் ஒன்று சேரக் கண்டனர் மக்கள். சிலபல நாட்களாகவே காணுகின்றனர்- கடலூரில். வேறு பல இடங்களில் இருவரும் கூடினர். மாநாடுகளில், ஆனால் அன்று, உண்மையிலேயே ஒன்றுகூடி நின்றனர் என்பது முழுப் பொருளுடையதாயிற்று. திராவிடர் கழகத் தலைவர் பெரியாரின் அழைப்பின்படி, திராவிட நாட்டுப் படத்தைத் திறந்து வைக்கும் சொற்பொழிவாற்றினார், திரு.வி.க.

ஆரியராவது திராவிடராவது, அப்படி ஒன்றும் இருந்தது கிடையாது என்று வாய்ப்பறை அடித்து வருகிறார்களே, அவர்கள் வாய் அடைத்துப் போகுமாறு, பாலி- பிராகி மொழி இலக்கியங்களிலும் `திராவிடம்' என்னும் சொல் பற்றியும், அதற்குரித்தான மக்களின் பணிபுபற்றி யும் பேசப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். திராவிடம் குறித்து வங்கக் கவிஞர் தாகூர் `ஜன கணமண'வில் சிறப்பித்துக் கூறி இருப்பதையும் எடுத்து விளக்கினார்.

தீந்தமிழுக்கு வந்துள்ள கேட்டினைப் போக்குவது ஒன்றையே குறியாகக் கொண்டு திராவிடர் கழகத்தில் கலந்து தொண்டாற்றிய தாம் இனித் திராவிட நாடு பெறவும் அதனைச் சமதர்ம நாடாக அமைக்கவும் முழு மனதுடன் பணிபுரிய உறுதி கொண்டுவிட்டதாக அவர் கூறிய பொழுது கூடி இருந்தவர்கள் அளவற்று மகிழ்ச்சி கொண்டனர் என்பதற்கு அவர்கள் எழுப்பிய கரவொலியே போதிய அத்தாட்சியாகும்.

திராவிடத்திற்குக் கிழக்கிலும், மேற்கிலும் அரண் செய்து நிற்கும் மலைகளையும் வாணிபத் துக்குச் சிறப்பாகத் தேவைப்படும் நீண்ட கடற்கரையையும், இலக்கியங் கண்ட காவிரிப்பூம் பட்டினம்- காயல்பட்டினம் முதலிய கடற்கரை நகரங்களையும் பட்டினப்பாலை எனும் பெயரில் இலக்கியம் எழுந்த பாங்கினையும் விளக்கிக் கூறினார். தொழில் வளத்திற்கான இயற்கை வளம் இங்கு நிரம்பி இருக்கிறது. ஆதலால் திராவிடம் முன்னாள் தனித்து வாழ்ந்தது போலவே எதிர்காலத்திலும் வாழ்வதற்கு வசதியும், தகுதியும் கொண்டிருக்கிறது என்று அவர் கூறிய தெளிவுரையை, திராவிடத்தின் பகைவர்களும் தெரிந்து கொள்வது முக்கியம்.

அவர் வளர்ந்துவந்த காங்கிரசை அவரே அழிக்கிறார் என்று அவர் மீது சுமத்தப்படும் பழிக்கு, தூயவர் காந்தியார் கண்ட காங் கிரசையோ- திலகர் வளர்த்த காங்கிரசையோ- ஆகஸ்டு பதினைந்துக்கு முன் நாட்டு விடு தலைக்குத் தொண்டாற்றிய காங்கிரசையோ- திலகர் வளர்த்த காங்கிரசையோ- ஆகஸ்டு பதினைந்துக்கு முன் நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றிய காங்கிரசையோ- தாம் அழிக்க முனையவில்லையென்றும், பட்டேல் உள்ள காங்கிரசை- பாசீசப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் காங்கிரசை- முதலாளி களுக்கு அரண் தேடித் தரும் காங்கிரசைத்தான் அழிக்க விரும்புகிறேன் என்று அவர் விளக்க முரைத்தது, விரோதிகளாலும் மறுத்துக் கூற முடியாத விவேகமுள்ள உரையாகும்.

பி அண்டு சி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஆளவந்தார் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை விரிவாகக் கூறி விட்டு, தமது நீண்ட நாள் நண்பர் டாக்டர் இராஜன் செய்த நம்பிக்கை துரோகத்தையும் சுட்டிக் காட்டினார். அதாவது, தோழர் அந்தோணிப் பிள்ளையை அனுப்புங்கள், மனந் திறந்து பேசி சமரசத்திற்கு வருவோம் என்று அமைச்சர் அறிவிக்க, அந்த வார்த்தையில் நம்பிக்கை வைத்த அமைச்சரைச் சந்தித்துப் பேச அந்தோணிப் பிள்ளையை அனுப்ப, அந்தோணிப் பிள்ளை வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டதுதான் பலனாகக் கிடைத்தது. பின்னர், தொழிலாளர் உறுதியைக் குலைக்க ஆளவந்தார்கள் மேற்கொண்ட அடக்குமுறைகளையும், மிருகத்தனமான செய லினையும் சிந்தனையாளர்களுக்கு சீற்றம் ஏற்படும் முறையில் எடுத்து இயம்பினார். திராவிட நாடு பட்டேலின் பாசீசப் பிடியிலிருந்து விடுபட்டு, சமதர்ம ஆட்சியைக் காணும் நன்னாளில்தான் இதற்கெல்லாம் பரிகாரம் கிடைக்குமென்றும், எனவே திராவிட நாடு பிரிவினையைத் துரிதப்படுத்துவதுதான் நம் அனைவரின் முன்புள்ள பணி என்றும் அறிவுரை வழங்கினார்.

இந்தியா விரைவில் சமதர்ம நாடாக மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் கிடையாது. முதலாளிகளின் ஆதிக்கமே ஓங்கி வருகிறது. தென்னாட்டைச் சுரண்டுவதிலேயே அதன் முழு நோக்கமும் இருக்கிறது. இந்தக் கேட்டிலிருந்து நாம் தப்புவதற்கான ஒரே முறை, நமது நாட்டை வடவர் தொடர்பிலிருந்து அறவே அறுத்துக் கொள்வதுதான் என்று திரு.வி.க. விளக்கிக் காட்டினபோது வரண்டு கிடந்த வயல்கள் வளமை பெற்ற நிலம் போல் வாலிபர் உள்ளம் பூரித்தனர்.

ஜாதி இன்றி வாழ்ந்த தமிழர்களிடை சம தர்மம் காண்பதற்கான பண்பாடுகள் நிரம்பி இருக்கின்றன. வடவரிடம் அது ஒன்றும் கிடையாது. சமதர்ம நோக்குடைய சிறந்த பல இலக்கியங்களைக் கொண்டவர்கள் தமிழர்கள். இந்த நிலையை வடவர் பெறப் பல காலம் பிடிக்கும். ஆதலால், அவர்களுடன் சேர்ந்திருந்து நாட்டை நலிவுறச் செய்வதை விடுத்து திராவிடம் காணத் தொண்டாற்ற வேண்டியது என்று, திராவிடர்களுக்கு உள்ள பொறுப்புணர்ச்சியைச் சுட்டிக்காட்டினார்.

உள்ளத்திலே உருவாகி இருக்கும் திரா விடத்தை இன்னும் பத்து ஆண்டுகளில் அடைந்து தீருவோம் என்றும், அதுகாலை செயலில் உருவாகிவிட்ட திருவிடத்தை தீட்டிய ஓவியத்தில் திறந்து வைத்து களிப்படைவோம் என்று திரு. வி.க. திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. பலநாள் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட நாவலரின் நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் ஆழத்தையும், உறுதியையும் படம் பிடித்துக் காட்டிற்று.

நம்மைக் குறித்துப் பழித்துப் பேசி வரும் காங்கிரசிலே உள்ள நண்பர்களுக்கு, நாட்டு விடுதலைக்கு நற்பணி செய்து வந்த நல்லவரின் நெஞ்சத்தில் இன்று எழுந்துள்ள வேதனையைக் கண்ட பின்னராவது திராவிடம் காணத் தொண் டாற்றுவார்கள் என்ற நோக்கத்தோடு,

திரு.வி.க.வின் தெளிந்த சொற்களைத் தூதாக அனுப்புகிறோம், அவர்கள் துணையும் நமக்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை நமக்கிருப்பதால்.

இன்பத் திராவிடத்தின், இணையில்லாத இந்த இரு சக்திகளும் ஒன்று கூடிய பிறகு விடுதலைப் போரின் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றி யாருக்குத்தான் சந்தேகம் இருக்க முடியும்! இந்த இரு சக்திகளும் ஒன்று சேர்ந்தான பிறகு, அறப்போருக்கு, புதிய உரம், புதிய பொலிவு கிடைத்துவிட்டது என்பதுதானே பொருள்.

அந்த மகிழ்ச்சியுடன் பெரியார் பேசலானார்- ``பயணம் சொல்லிக் கொள்ள வந்திருக் கிறேன்- உடன் வர விரும்புவோரை அழைத்துக் கொண்டு ஊராள வந்திருப்போர் காட்டும் சிறைக்குள் சென்றிருக்க முடிவு செய்துவிட் டேன்'' என்ற துவக்கத்துடன், அரசியல் நிலை பற்றிய விளக்க உரையாற்றினார், வீரத் திராவிடப் படையின் தலைவர்.

இந்தி எதிர்ப்புக்கான காரணம் முதலமைச் சருடன் கூடிப்பேசியது- எதிர்ப்பை முறியடிக்க சர்க்கார் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள்- சர்க்காரின் நிர்வாகத்திலே காணப்படும் குறைபாடுகள், ஆகியவற்றை விளக்கலானார்.

``எனக்கும், அண்ணாத்துரைக்கும் ஏதோ பெரிய சண்டை வந்து விட்டது. ஆகையால் இந்தி எதிர்ப்பு மறியலை மீண்டும் நடத்தப் போவ தில்லை என்று சர்க்கார் எண்ணுவதாகக் கேள்விப்பட்டேன். ஒரு சர்க்கார், இப்படியா வாழ்வது- எங்கள் விரோதத்தை நம்பியா, அந்தப் பலத்தைக் கொண்டா, வாழ விரும்புவது- இது மானக் கேடல்லவா?'' என்று இடித்துரைத்து விட்டு, ``இதோ பாருங்களேன், எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையை'' என்று மேடை மீதிருந்த அண்ணாத்துரையைக் காட்டினார்- மக்களின் பேராரவாரத்திடையே.

மைனர் தர்பார் நடத்துவது போலச் சர்க்கார் செலவினங்களை பெருக்கிக் கொண்டே போகும் செயலைக் கண்டித்தார்.

``சட்டத்தை மீறும் மனப்பான்மையை மக்கள் கொள்ளக்கூடாது என்பதிலே நான் மிகுந்த அக்கறை கொண்டவன், எனினும் இன்று, சர்க்கார், எங்களை அந்த நிலைக்குத் துரத்து கிறார்கள்'' என்று நிலைமையை விளக்கினார்.

``காங்கிரசின் ஊழலான முறைகளை நான் எடுத்துக் கூறினால் கோபிக்கிறார்கள். தேசிய வீரர்கள், அவர்களுக்குக் கூறுகிறேன், என்னைப் பிறகு கவனித்துக் கொள்ளட்டும். முதலில் ஆந்திர நாட்டுக் காந்தியாக உள்ள கொண்டா வெங்கடப்பய்யா எவ்வளவு பச்சையாகக் காங் கிரசின் ஊழல்களை- அம்பலப்படுத்தினார் என்பதைக் கவனிக்கட்டும்- என் மீது கோபிப்பது பிறகு நடக்கட்டும், முதலில், தேசியத் தோழர்கள், கொண்டா கூறியது கேட்டு வெட்கப்பட வேண்டாமா?'' என்று குத்திக் காட்டினார்.

பெரியாரின் பேருரைக்குப் பிறகு, காலை நிகழ்ச்சி முடிவடைந்தது.

பிற்பகலில், தீர்மானங்கள் நிறைவேறின- திராவிட முரசுகள் எனத்தகும் நண்பர்கள் பலரும் தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.

நவம்பர் முதல் தேதி முதல் சென்னையில் மீண்டும் இந்தி எதிர்ப்பு மறியலைத் தொடங்கு வது - என்பதுதான். முக்கியமான தீர்மானம் மற்றவை கழகத்தின் அரசியல் சமுதாயப் பொருளாதாரத் திட்டங்களின் வெற்றிக்கான வழிவகைகளைக் கூறும் தீர்மானங்கள். திராவிடர் சமுதாயத்தின் வாழ்க்கையிலே புதிய மணம் வீசுவதற்காக மார்க்கங்கள்.

திராவிட சமுதாயத்துக்கு வாழ்க்கை முறைக்கு ஒரு வழிகாட்டி வேண்டுமல்லவா- திராவிடப் பண்புக்கு ஒரு துணை தேவை யல்லவா, அந்த அரும் நோக்குடன் பெரியார், திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைக்கும் முறையில், குறளைப் பற்றிச் சிறப்புரை பேசினார்.

பாரதம், இராமாயணம், பாகவதம் போன்ற வைகள் நடக்கக்கூடாதன, நம்ப முடியாதன, நடைமுறைக்கு ஒத்து வராதன, ஒழுக்கக் கேடானவைகள் ஒரு குலத்துக்கொரு நீதி கொண்டனவாகும். அவை ஆரிய ஆதிக்கத் துக்காக அந்த நாளில் ஆக்கப்பட்டவைகள். திராவிடருக்கு வாழ்க்கை வழிகாட்டியாக இருக்கும் இலட்சணம் குறள் ஒன்றுக்கே உண்டு. ஆரிய ஆதிக்க நோக்கத்துடன் கம்ப ராமயாணத் தையும் மற்ற இதிகாசங்களையும் மக்களிடையே பரப்புகிறார்கள்- மகாபண்டிதர்கள் கூட, குறளுக்குத் தர வேண்டிய அளவு மதிப்புத் தருவதில்லை. ஏனெனில் குறள் இந்த தர்மத்தின் பேரால் புகுத்தப்படும் ஜாதி முறை வர்ணாஸ்ரமக் கொடுமை ஆகியவற்றைக் கண்டிக்கும் அறிவு நூல். அதனிடம் உள்ள கருத்துப் பரவினால் ஆரியம் அழியும் என்ற அச்சம் அவர்களுக்கு. இது வரையில் என்னை யாரேனும், ஏதேனும் ஒரு மார்க்கம் வேண்டுமே திராவிடருக்கு ஒரு மதம் தேவையாயிற்றே, எதைக் கொள்வது எத்தகைய தர்மத்தை அனுஷ்டிப்பது என்று கேட்டால், நான் மனித தர்மம் தான் என் மார்க்கம் என்று கூறுவது வழக்கம். இனி நானும் கூறுவேன். நீங்களும் தைரியமாகக் கூறலாம். திராவிடருக்கு என்ன மதம் என்றால், குறள் மதம் என்று. திருக்குறளில் இன்று தேவையற்ற சில இருக்கலாம். சிலவற் றுக்குப் புதிய பொருள் தரலாம். என்றபோதிலும் மொத்தத்தில் பார்க்கும்போது திருக்குறளின் நீதியும் ஒழுக்க முறையும் திராவிடருக்குத் தகுந்தவை. திராவிடருக்குப் புதியதோர் வாழ்வைத் தரும் அரிய நூல். அறிவு நூல், என்று கூறுவேன்'' என்று எழுச்சியுடன் கூறினார். திராவிட கழக மாகாணத் தனி மாநாட்டிலே கிடைத்த சிறந்த பலன், இதுவென்று மாநாட்டினர் கருதினர். திராவிடர் கழகத்தார், எந்த ஏட்டையும் கேடுள்ளன என்று கூறிக் கண்டித்த வண்ணம் உள்ளனர், மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்ட ஏதேனும் ஒரு ஏடு, ஒரு ஒழுக்க நூல், வேண்டாமா என்று பலரும் கேட்பதுண்டு. இனி, எமக்குத் திருக்குறள் உண்டு- என்று திராவிடச் சமுதாயம் தலைநிமிர்ந்து கூறலாம், பெருமை யுடன் வாழலாம். குறளின் சிறப்பினை நாட்ட வருக்குக் விளக்கிக் காட்டும் புதிய பொறுப்பான பணியினை இனித் திராவிடர் கழகம் மேற் கொள்ள வேண்டும் என்று மாநாட்டினர் பேசிக் கொண்டனர்.

தோழர் அண்ணாத்துரை- தமது முடிவுரை யில் இக்கருத்தினை வலியுறுத்திப் பேசினார்.

``இதுநாள் வரை, நாம் அறிவு எனும் வாளை ஏந்தி, அநீதிகளை எதிர்த்துப் போரிட்டு வந்தோம், இன்று பெரியார், நமக்குக் கேடயமும் கொடுத் திருக்கிறார்- குறளே நமக்குக் கேடயம். முழு ஆயுத பாணிகளாகிவிட்டோம், ஆகவே அறப்போர் வீரர்களே! புறப்படுங்கள் சென்னை நோக்கி, அறப்போருக்கு'' என்று கூறினார், மாநாடும் முடிவுற்றது.

``முரசொலி'' ஆசிரியர் தோழர் கருணாநிதி தமது நண்பர்களுடன் அன்றிரவு தூக்கு மேடை எனும் நாடகத்தை நடத்தி மக்களிடை அறிவுப் பிரச்சாரம் செய்தார். தோழியர் குஞ்சிதம் குரு சாமி தலைமை வகித்தார்.

ஈரோடு மாநாடு, இவ்வண்ணம் கூடி, பல அரிய காரியங்களைச் சாதித்தது.

மாநாட்டின் பலனாக கிளர்ச்சியிலே இருந்துவந்த தளர்ச்சி போக்கப்பட்டு, அறப் போருக்கான துவக்க நாள் குறிக்கப்பட்டு விட்டது.

அறப்போருக்கு எவ்வளவு ஆதரவு திரட்ட முடியும் என்பதை அளவிடுவதற்கு, மாநாடு ஓர் வாய்ப்பாக இருந்தது.

பல சங்கடங்களுக்கிடையே நடைபெற்ற மாநாடு வசதிக் குறைவு அதிகம் இருந்தும் மாநாட்டுக்கு வந்திருந்த கூட்டமோ அரை இலட்சம்!

``சாப்பிட்டானதும், தோழர்கள், பக்கத்திலி லுள்ள வாய்க்காலில் போய்க் கை கழுவிக் கொள்ள வேண்டும்- போதுமான தண்ணீர் சப்ளை, இல்லை.''

``அரிசி உலையில் போட்டாகிவிட்டது, அரை மணி நேரமாகும். கொஞ்சம் பொறுமை யாக இருங்கள்.''

இப்படிப்பட்ட முறையிலே வரவேற்புக் குழுவினர் கூறவேண்டிய நிலையில், நடைபெற்ற மாநாடு எனினும், இதற்கு குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர், பெரியதோர் கூட்டம்.

கிராமப் பகுதிகளிலே, திராவிட இயக்கம் பரவி வருவதை விளக்கும் விதத்திலே, மாநாட் டுக்குப் பல கிராமங்களிலே இருந்து மக்கள் வந்திருந்தனர்.

இருநாட்கள்- இரவுகளுந்தான் - விழாக் கோலம், ஊர் முழுவதும்.

ஊரெங்கும் மாநாட்டுக்கு வந்திருந்தோரின் நடமாட்டந்தான்.

ஒரு கடை வீதியே புதிதாக, அமைந்து விட்டது என்று கூறலாம்- மாநாடு நடைபெற்ற இடத்தில்.
இவ்வளவு எழுச்சியும் `மந்திரக் கோல்' வேலையா! மக்கள் மனதிலே நமது இயக்கக் கொள்கைக்கு, அவ்வளவு தூரம் இடம் கிடைத்திருக்கிறது. இந்த நிலை கண்டு பெருமையும், பூரிப்பும் நம்பிக்கையும் கொள்ள தார் யாரிருக்க முடியும்.

இந்தக் காட்சி, நமக்குக் களிப்பூட்டுவது போல, ஆளவந்துள்ள கட்சியினருக்கு, கிலியை மூட்டத்தான் செய்யும். எனவே அவர்கள் இந்த எழுச்சியை அடக்க, அவசர அவசரமாக, அடக்குமுறையை வீசக் கூடும். நாம் அதற்குத் தயாராக இருக்கவேண்டும். இப்போது நமது கழகத்துக்கு கிடைத்துள்ள புதிய நிலையிலே, நாம் இந்தத் தாக்குதலைத் தாங்கியாக வேண்டிய கட்டம் வருகிறது. இதிலே நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அறப்போரை, கொடுமையான முறைகளைக் கையாண்டு அழிக்க முனைவர் ஆளவந்தார்கள். மாநாட்டுக்கு வந்திருந்தோர், செய்தியைக் கேள்விப்பட்டோர், அனைவருமே, இதற்குத் தயாராக இருக்க வேண்டும். திராவிடத்தின் விடுதலைப் போரைத் திறம்பட நடத்தக்கூடிய பெரும்படை திரண்டிருக்கிறது. படையினர், கூடினர். பெருமிதத்துடன்- எதிரிகள் கண்டனர்- இனித் தாக்குவர்- 144ஐக் கொண்டோ, நூற்று ஏழோ, நாற்பத்தி ஒன்றோ, எந்த செக்ஷனோ, கூற முடியாது- ஆள் தூக்கிச் சட்டம் வரலாம்- வீட்டில் அடைக்கும் சட்டம் வரலாம்- தடியடி வரலாம்- கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்படலாம்- துப்பாக்கியும் வரலாம்- எதுவரினும் என்ன என்ற கலங்காத உள்ளம் வேண்டும். அந்த உள்ள உரம் கொண்டவர்கள், மாநாட்டினுக்கு வந்திருந்தவர்களில் பத்திலோர் பகுதியினர் இருந்தாலும் போதும், வெற்றி நமதே, என்றார் பெரியார். ஆம்! உண்மை! அந்த வெற்றிப் படை வரிசையில் வந்து சேருக, விரைவில், என்ற அன்பழைப்புடன் இதனை முடிக்கிறோம்.

(திராவிட நாடு - 31.10.1948)