அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எதேச்சாதிகாரம்
“நம்முடைய உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு விட்டன. நமக்கு எழுத்துச் சுதந்தரமில்லை - பேச்சுச் சுதந்தரமில்லை - காரணம், நம்மை அந்நியன் ஆளுகின்றான். அவனை விரட்டியடித்தாலன்றி நாம் மக்களாக வாழமுடியாது,” என்று பேசி - அதற்காகப் பல தியாகங்களைச் செய்து, அந்நிய ஆட்சி முறையை அகற்றி, மக்களாட்சியை நிறுவிவிட்டதாகச் சொல்லிக் கொள்ளும் நம்முடைய சர்க்கார், இன்று நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால், அவர்களுக்கு இவர்கள் எந்த வகையில் மேலானவர்கள் என்று கேட்கக்கூடிய முறையிலேயே இவர்களுடைய அரசியல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

சென்ற வாரம், சென்னை சர்க்கார், திராவிட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பணி புரியும் “விடுதலை” தினசரிக்கு ரூபா இரண்டாயிரம் ஜாமீன் கட்ட வேண்டுமென்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.

ஓர் இனம், தங்கள் குறைபாடுகளையும், தாங்கள் படும் வேதனைகளையும் கூறி, அவை ஏற்பட்ட விதத்தையும், அவை ஏற்படுவதற்குக் காரணம் என்ன என்பதையும் விளக்கி, அக்குறைபாடுகள் ஒழிய வேண்டும் - நீக்கப்பட வேண்டும் என்ற உணர்வு பெற்று, அதன் பொருட்டு உழைத்து வரும் முறையைத் தவறென்றும் - சட்ட விரோதமென்றும் கருதி, அடக்குமுறைகளை அள்ளி வீசுவது ஜனநாயக ஆட்சிமுறைக்கு முற்றிலும் புறம்பானது.

மக்கள் சர்க்கார் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்க்கார் - மக்களுக்காக உடல், பொருள், உயிர் அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராயுள்ள சர்க்கார் - மக்களின் மனப் பண்புகளை நன்கறிந்த சர்க்கார், ஓர் இன மக்களின் சமுதாய முன்னேற்றமன்றிப் பிறிதொன்றையும் குறிக்கோளாகப் கொள்ளாது பணிபுரிந்து வரும் ‘விடுதலை’க்கு ஜாமீன் கேட்பதை விவேகமுடைய செயலென்றோ, விரும்பத்தக்க முறையென்றோ எவரும் கூறமாட்டார்கள்.

“திராவிடனே! உன் சமுதாயம், சேறும் பாசியும் நிறைந்த குட்டைபோல் ஆகிவிட்டது. சேறும் பாசியும் நிரம்பிய குட்டையிலுள்ள நீரை எவரே விரும்புவர்! அந்த நீர் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ முடியாதபடி ஆக்கப்பட்டுவிட்டது. எனவே, அதை உபயோகித்து உடன் உடலை நோய்க்காளாகும்படி செய்து வதைந்து போகாதே! சேற்றை அகற்றிப் பாசியை நீக்கித் துப்புரவு செய்து உபயோகப்படுத்திக் கொள்” என்று ‘விடுதலை’ கூறுகின்றது.

‘இப்படிக் கூறுவது தவறு - எனவே, இரண்டாயிரம் ரூபா ஜாமீன் கட்டு’ என்று சர்க்கார் - மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சர்க்கார் கூறுகின்றது. இது நியாயமா?

“ஒரு காலத்தில் நீ உன்னத நிலையில் இருந்தாய். இந்நாட்டு ஆட்சி உன்னுடையதாய் இருந்தது. ஆனால், இன்று! நீ ஆண்டியாகக் கிடக்கிறாய் - வீரனாய் - விறல்வேந்தனாய் இருந்த நீ, கோழையாய் - பூனையைக் கண்டஞ்சும் பேதையாகிக் கிடக்கிறாய். சிம்மாதனத்தில் சிறப்போடிருந்த நீ, இன்று செங்கை ஏந்திச் சாவடி காத்து நிற்கிறாயே! இப்படி நீ ஆனதன் அடிப்படையை உணரவில்லையே!” என்று கூறி விளக்கமும் - விழிப்பும் உண்டாக்கி வருகின்றது ‘விடுதலை’.

‘இவ்வாறு செய்வது மாபெரும் குற்றம்’ என்று, மக்கள் சார்பில் அரசியலை நடத்தும் சர்க்கார் கூறுகின்றது; ஜாமீன் கேட்கின்றது. இது நேர்மையா?

‘கீழ்த்தர ஜாதியாய் - நான்காம் ஐந்தாம் ஜாதியாய் ஆக்கப்பட்டு விட்டாய் - உழைத்தாலும் உழைப்பின் பயனை அடைய முடியாதபடி செய்யப்பட்டு விட்டாய் - பொருளாதாரத்தில் நசுக்கப்பட்டு விட்டாய் - கல்வியில் 100-க்கு 90 பேர் தற்குறிகளாய் இருக்கும் கொடுமையைப் பெற்றுவிட்டாய் - அரசியலிலோ பிற துறைகளிலோ கேவலம் கீழ்த்தரச் சிப்பந்தியாய்ச் சீர்குலைக்கப்பட்டு விட்டாய்” என்று கூறித் திராவிடப் பெருங்குடி மக்களுக்கு அறிவுத்துறையில் புத்துணர்ச்சியையும், வாழ்க்கைத் துறையில் வளத்தையும் பெறும்படி ‘விடுதலை’ பணியாற்றி வருகின்றது. சாதிச் சனியனையும், மதப் பூசல்களையும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும், கல்வியின்மையையும் நாட்டிலிருந்து விரட்டியடிப்பதையே நாட்டமாகக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படும் சர்க்கார், இத்துறைகளில் சர்க்காரின் கொள்கைகளுக்குச் சாதகமான முறையில் பணியாற்றி வருவதைத் தவறான காரியம் என்று எண்ணி, “எடு இரண்டாயிரம் ரூபா ஜாமீன்” என்று கேட்கிறது. இது முறையா?

மருமகள், தன்னை மாமியார் படுத்திய கொடுமைகளை எல்லாம் கூறிக் கவலையில் ஆழ்ந்திருந்தாள். பின்னர், மருமகளே மாமியாராகும் நிலையைப் பெற்றாள். அவள், ‘என் மாமிக்கு நான் என்ன மாற்றுக் குறைந்தவளா’ என்று கூறித்தனக்கு மருமகளாய் வந்தவள்வாயார ‘வாழ்த்தி’ வகையாக முறங்கொண்டு சாடினாள் என்பது போல், அந்நிய ஏகாதிபத்தியத்தில் அடைந்த கொடுமைகளை யெல்லாம் கூறி, மக்களின் ஆதரவென்னும் அறப்போர் நடத்தி, அன்னியனை விரட்டி ‘அன்பரசு’ நடத்துவதாகச் சொல்லிக் கொள்பவர்களே, அவன் ஆறுபாய்ந்தால் நாங்கள் அறுபதுபாய்வோம் என்று கூறி, மருமகளாய் இருந்தவள் மாமியாரான பின்னர் நடந்ததைப் போல் நடக்கத் தொடங்கினால், அதனை விந்தையென்பதா? வேடிக்கை என்பதா? விபரீதப் போக்கென்பதா?

இதுவா மக்களிடம் நன்மதிப்பைப் பெறும்வழி? ஆட்சிமுறை? இந்தப் போக்கில் சென்றால், ஆட்டம்கண்டு விடுமே! பெற்ற சுதந்தரம் பறிபோய் விடுமே! அணைக்குமளவு எதிர்பார்த்த கரம், அடிக்கவந்த ஆத்திரத்தின் அளவு, எல்லை மீறிவிடுமே!

இல்லாத கருப்புச்சட்டைப் படையை இருப்பதாக எண்ணத் தடை விதித்தது - இலக்கிய நூலாக இராவண காவியத்துக்குத் தடைபோட்டு விட்டது - இப்போது திராவிட மக்களின் நலனுக்காகப் பாடுபடும் ‘விடுதலை’க்கும் இரண்டாயிரம் ரூபா ஜாமீன் கேட்டது. இனி என்ன நடக்குமோ என்று திராவிடர்கள் எண்ணி எண்ணிப் பார்க்கும் நிலைமையையே சர்க்கார் உண்டாக்கியிருக்கிறது.
இத்தகைய விரும்பத்தகாமுறைகளைக் கையாளுவதன் வாயிலாகத் திராவிடர் கழகத்தையும் அதன் கொள்கைகளையும் ஒழித்து விடலாம் என்று சர்க்கார் கருதுமானால், அது உண்மையாகவே அவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

திராவிடர் கழகம் ஓர் அரசியல் கட்சியன்று; திராவிடமக்கள் தங்கள் நிலையை உணரவேண்டும் என்பதற்காகப் பணியாற்றிவரும் ஒரு பிரச்சார இயக்கமே என்று தலைவர் பெரியார் அவர்கள் அண்மையில் நடைபெற்ற மாகாண மாநாட்டிலே வெளிப்படையாகக் கூறிய பின்னரும், தனது இனத்தைத் தட்டி எழுப்ப - தன் இனத்தின் இழிவைப் போக்க - தன் இனத்தார் அகப்பட்டுள்ள வஞ்சகவலையைக் கிழித்தெறியப் பாடுபடும் ஒரே தினசரித்தாளாகிய ‘விடுதலை’க்கு ஜாமீன் கேட்பது, அந்த இன மக்களையே சவாலுக்கு அழைப்பது போலாகும்.

எனவே, திராவிடர் கழகத்தை ஒழித்து, “விடுதலை”ப் பத்ரிதிகையின் வாயிலாகச் செய்யப்பட்டு வரும் திராவிட முன்னேற்றப் பிரசாரத்தைத் தடுத்து, மத- சமுதாய அரசியல் துறையில் இருந்தும் வரும் குறைபாடுகளையும், கொடுமைகளையும், இழிவுகளையும், வஞ்சகங்களையும் எவ்விதத்திலும் - எந்தக்காரணத்தைக் கொண்டும் எடுத்துச் சொல்லப்படாது - திராவிடர்கள் இன்றுள்ள கீழ்நிலையிலிருந்து சிறிதளவும் முன்னேற்றமடையக் கூடாது - இது எங்கள் நோக்கம் என்ற முறையில் சர்க்கார் அடக்குமுறைகளை அள்ளிவீசுவது, ஆளுந்திறமையிலுள்ள கோளாறைக் காட்டுவதாகுமே தவிர, நேர்மைக்கும் ஒழுங்குக்கும் இந்தப்போக்கு எந்த விதத்திலும் துணைசெய்யும் என்றுகூற முடியாது.

திராவிடர் கழகம், அரசியலில் போட்டியோ, பதவியில் போட்டியோ போடுவதில்லை - சமுதாய சீர்திருத்தம் ஒன்றே தனது குறிக்கோள் என்ற முறையில் பணியாற்றி வந்தபோதிலும், சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையில், பெயரளவுக்காவது சர்க்காரின் எதிர்க்கட்சி என்ற நிலையைப் பெற்றிருக்கிறது. எந்த நாட்டிலும் ஒரு சர்க்கார் இருந்தால் அதற்கு ஓர் எதிர்க்கட்சியும் இருந்தே தீரும், சர்க்கார் தனக்கு எதிர்க் கட்சி இல்லா விட்டால் கூட, அதனை உண்டாக்கிக் கொள்ளும் வழக்கம் வேறுநாடுகளில் உண்டு. ஆனால் இங்கு நடப்பதென்ன? பெயரளவில் ஓர் எதிர்க்கட்சி, சர்க்காருக்கு யாதாமொரு தொல்லையும் கொடுக்காமல் இருந்தால் கூட, அதனையும் ஒழித்துவிட்டுத்தான் மறுவேலைபார்ப்பதென்ற முறையில் காரியங்கள் நடைபெறுகின்றன - எதிர்க்கட்சியே கூடாது - எதாச்சாதி காரமே எங்கள் குறிக்கோள் என்ற போக்கில் சர்க்கார் நடந்துகொள்கிறது. இதற்குப் பேர்தான் ஜனநாயகமா?

எனவே, திராவிட மக்களுக்கு ஏற்பட்ட கேடுகளையும், முன்னேற்றத்தடைகளையும் பாமரமக்களுக்குத் தெரிவித்து, அவர்களின் குறைபாடுகளை நீக்கிக்கொள்ளும் முறையில் தொண்டாற்றிவந்த ‘விடுதலை’க்கு ஐõமீன் கேட்பதன் வாயிலாகச் சர்க்கார் முறைதவறி நடந்து கொள்வதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதனைச் சர்க்கார் தவறென்று கருதுமானால், ஓர் இனமக்களின் குறைகள் நீங்காமலும் - நீக்கப் படாமலும் இருப்பதுமட்டுமே நீதியா என்று கேட்கிறார்.

அதிகாரம் ஒரு போதை! பருகப்பருக இனிக்கும்; பழகப் பழக அதிலே சொக்கி விழாதவர்கள் வெகுசிலரே. அதிலும் அரசியல் அதிகாரம், அதிகமான போதை தரும். அதைப் பருகுவோர், பரமானந்த மடைந்து, பாதம், பூமியிற் சரியாகவும் படியாதபடி தாண்டவமாடுவர்! அதைத்தான் அறிஞர்கள், அரசியற் கோமாளிக்கூத்தென்பர்! அந்தப் போதையின் பயனாக யதேச்சாதி காரமும், சர்வாதிகாரமும் ஏற்படும். தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால், தம்பி சண்டப்பிரசண்டனாக மாட்டானா? அதைப்போலவே தனக்கொரு எதிரியும் இல்லை என்ற மனப் பான்மையையும் கொண்டுவிட்டால், கேட்கவா வேண்டும் அவர் தம் திருவிளையாடலை! “யாராயினுஞ்சரி” எனக்கூறி, எதற்கெடுத்தாலும் கச்சைகட்டி நிற்பர். இதுவே அதிகாரவெறி எனப்படுவது இந்த நிலைதான், இன்று நமது மாகாணத்திலும் உளது. இதுதான் மஞ்சள் பெட்டிதந்த அமங்களம். இன்றைய ஆட்சியிலே இது தொக்கி நிற்கிறது.

நிலைமையை மறைக்க, மூடிவைக்க, எவ்வளவு அழகான தேசியத்திரைபோட்டாலும் இந்தமாகாணத்திலே, ஜனநாயக ஆட்சி நடத்தப்படவில்லை என்பதை மறைக்க முடியாது. அதனைக் கண்டிப்போரும் அதிகமாகி விட்டனர். மெஜாரிட்டி பலம் இருப்பதாலும், அதிகாரத்திற்குப் பங்கமேற்படாது என எண்ணி இறுமாந்து, ஊஞ்சலில் இருப்பதாலும், அதிகாரத்
திற்குப் பங்கமேற்படாது என எண்ணி இறுமாந்து, ஊஞ்சலில் உல்லாசமாகப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆயினும், சரித்திரம் என்ன சொல்கிறது? அதிகாரவெறியின் உச்சநிலை சென்ற ஜார் கதை, இன்று உலகில் ஓர் அரசியல் பாடமாக இருக்கிறது. அதிகார உச்சியிலேறி ‘உறுமிய’ முசோலினி, ஹிட்லர், உலக அரசியல் அறிஞர்களால் ‘மூர்க்கர், பித்தர், பேயாட்டமாடுவோர்’ என்று இகழப்பட்டார்கள். பொது ஜனங்கள் சரித்திரம்போதிக்கும் பாடத்தைக் கூடவா மறந்து விடுவார்கள்?

“பொது ஜனம் எங்களை ஆதரிக்கிறது. அவர்கள் தந்த ஓட்டுகளே எமக்கு இப்பதவியைத் தந்தன” என அதிகாரவர்க்கம் கூறுகிறது. ஆனால், இதன் உண்மை என்ன? பொதுஜனம், இவர்களை ஆதரித்தது எதற்கு? இந்தச் சர்வாதிகார ஆட்சிக்கா? இவர்களை ஆதிகரிக்காத பொது ஜனங்களே இல்லையா?

‘பல்லக்குச் சவாரி’ அதிக நாளைக்கு நடக்காது. சுமந்து வருபவரின் தோள்வலியே அதிகரித்து விட்டது. இன்றைய ஆட்சி முறை இதைவிளக்கி விட்டது. “தினைவிதைத்தவன் தினையே அறுப்பான். வினை விதைத்தவன் வினையே அறுப்பான்” என்று ஒரு சாரரும், எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இருசாராரும் ஒன்று சேரும்சமயம், நெருங்கிவிட்டது என்பதைக் கூற விரும்புகிறோம். அச்சமயம் வந்தால் அதிகார மயக்கம் தானாகத் தெளியும் என்பதைச் சர்க்காருக்கு நினைவூட்டி, இந்த எதேச்சாதிகாரப் போக்கை மாற்றிக்கொள்க என்று எச்சரிக்கிறோம்.