அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எதனை மேற்கொள்வது?

திருப்பதி வேங்கடத்தான் கீழ்த்திசை கல்லூரியில் படித்துவரும் தமிழ் மாணவர் கழகத்தினர் ஒரு வரவேற்பு வாசித்தளித்தனர் மந்திரி பக்தவத்சலத்திற்கு. அவர் அதுகாலை சில கூறியுள்ளார். அதன் சுருக்கம் `தினமணி' 5-11-1948ல் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

``மாணவர்கள் கேவலம் சம்பாவனை பெறுவதற்காகவே கல்வி கற்கக் கூடாது. சொந்த இலாபத்திற்காகக் கல்வி கற்க வேண்டுமென்றால் அதற்காக அரசாங்கத் தாரும் மற்றவர்களும் ஏன் பணம் செல வழிக்க வேண்டும்! ஆகவே மாணவர்கள் பொதுநலத்திற்காகத்தான் கல்வி கற்க வேண்டும்.''

கல்வி கற்பது சுயநலத்திற்கு மட்டுமல்ல, பொதுநலத்திற்கும் பயன்படல் வேண்டுமென்று பேசுகிறார் அமைச்சர். பொதுநலத்தை மட்டும் பெரிதென நம்பி காலங்கழித்துக் கொண்டிருக்கக் கல்வி கற்றவர்களால் மட்டுமல்ல, அமைச்சர் போன்றவர்களால் கூட முடியாது! கல்வி கற்பதில் சொந்த இலாபமும் பிரிக்க முடியாத தன்மையில் பிணைப்புண்டு கிடக்கிறது. எதற்கும் ஓர் எல்லை உண்டு.

`கல்வி அதிகமென்றே கற்றுவிட்டேன்' என்று ஒரு புலவன் வயிற்றுக்கு வகை தேடிக் கொள்ள முடியாது விழித்துக் கொண்டிருந்த நிலையில், கல்வியைக் கடிந்துரைத்திருப்பது கவனிக்கத் தந்தது. அவன் வேண்டினது வயிறார உணவு, அவன் கற்றிருந்த கல்வி அதற்குப் பயன் படவில்லை, வழிகாட்டவில்லை. எனவே, கல்வியையே பழித்துக் கூறும் நிலை பெற்று வருகிறான். ஆதலால் ஒருவன் பெறும் கல்வி வயிற்றுப்பாட்டிற்கு வழி செய்வதாகவும் இருத்தல் இன்றியமையாததாகும். இந்த மூல நோக்கம் பெறப்படும் கல்வியால் நிறைவேறி னால்தான், மற்ற நல்லியல்புகளெல்லாம், அதனைச் சார்ந்து இருக்க முடியும். இதனை மறந்து சம்பவானைக்காகக் கல்வியைக் கற்காதீர் கள் என்று பேசுவது, அழைத்ததற்கு ஏதாவது பேசித் தொலைக்க வேண்டுமே என்பதற்குப் பேசினதாகத்தான் கொள்ளப்படும். எதிர்பார்க்கும் பலனையும் உண்டாக்காது. கண்ணைக் கவரும் தேக அமைப்பு ஆவி இழந்து விட்டால், வெறும் அழகிய பிணமாகத்தானே இருக்க முடியும்!

சம்பவானைக்காகக் கற்காதீர்கள் என்று பேசும் இதே அமைச்சரும், இவரைச் சார்ந்த மற்ற அமைச்சர்களும், எத்தனை எத்தனை முறை, இந்தி கற்க நாம் தவறி விட்டால் சர்க்கார் உத்தியோகங்கள் நமக்குக் கிடைக்காமல் போய் விடும் என்று பேசி இருக்கிறார்கள்? திருப்பதி யில் பேசினதை ஏற்றுக்கொள்வதா? இதற்கு முன் பேசியுள்ளதை ஏற்றுக் கொள்வதா? இவைகளில் எதனைத்தான் உண்மையாகக் கொள்வது?

``டில்லியிலுள்ள அரசாங்க அலுவல் அகங்களை தென்னிந்தியர்கள் நிர்வகிப்பதைப் பார்க்கலாம். எதிர் காலத்திலும், இன்றுள்ளதைக் காட்டிலும் அதிகமாக இல்லையானாலும், இதே தன்மையில் நாட்டின் நிர்வாகத்தில் முக்கிய பங்கை தென்னிந்தியர்கள் மேற்கொள்ள வேண்டுமானால் இன்றைய இளைஞர்கள் இந்தி கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.''

இவ்வாறு பேசியுள்ளார் தொழில் மந்திரி சீதாராம ரெட்டியார். இலயோலா கல்லூரியில்.

ஒரு அமைச்சர், சம்பாவனைக்காகக் கல்வி கற்காதீர்கள் என்று மாணவர்களுக்கு உபதேசம் செய்கிறார். மற்றொரு அமைச்சர், குமஸ்தா வேலைக்காகவே இந்தி படிக்க வேண்டியது முக்கியம் என்று, இந்தியின் அவசியத்தை வற்புறுத்துகிறார். இருவரும், இடந்தான், வெவ்வேறு- ஆனால் மாணவர்களுக்குத் தான் பேசி இருக்கிறார்கள். இந்த இருவரின் பேச்சினையும் கேட்டிருந்த மாணவர்களுக்குத் திகைப்புத் தானே ஏற்பட்டிருக்கும்? இவர்களின் பேச்சில் எதனை மாணவர்கள் கடைப்பிடித்து நடப்பது? ஒரு அமைச்சரின் பேச்சுக்கும், மற்றொரு அமைச்சரின் பேச்சுக்கும் ஏன் இவ்வளவு முரண்பாடு இருக்கிறது? இருவரும் காங்கிரஸ் அமைச்சர்கள்தானே? ஒரு விஷயத்தைக் குறித்து இவ்வளவு மாறுபாடான கருத்து கொண்டிருக்கக் காரணமென்ன? இடத்துக்கேற்றபடி பேசுகிறார்களா? அல்லது பேசப்படும் பொருளின் நுணுக்கங்களை நன்கு ஆராய்ந்து அறிந்துதான் பேசுகிறார்களா? இவர்கள் போக்கினை என்னென்று புரிந்து கொள்ள முடியவில்லையே?

(திராவிட நாடு - 14.11.1948)