அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.
குண்டுகள் - காலம் தரும் செண்டுகள்
கட்டுப்பாடும், கண்ணியமும் நமது கவசம்
அடக்குமுறை தர்பார் பொதுச்செயலாளர் அறிக்கை
(திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் அண்ணாதுரை, 28-10-50 தேதியிட்டு - சென்னை தலைமைக் கழகத்திலிருந்து விடுத்திருக்கும் அறிக்கை இது. இந்திய உபகண்ட முழுமையுள்ள பத்திரிகைகளும்கெல்லாம் பொதுச் செயலாளரின் கண்டன அறிக்கையின் ஆங்கில நகல்கள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னையிலுள்ள சகல பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன)

சென்ற கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளால் உள்ளம் நொந்து கிடக்கும் தோழர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு அல்ல. இந்தி அறிக்கை - இந்த அறிக்கை நிகழ்ச்சிகள் இனி நேரிட இருக்கும் பேரிடிகளுக்கு முன்னறிவிப்பு எனவே, எதையும் தாங்க இந்த இதயம் உண்டு என்ற உறுதியை மேலும் நாம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளவே இதனைத் தீட்டுகிறேன்.

நாம் நேர்மையில் நாட்டம் கொண்டவர்கள் - உன்னதமான உயரிய இலட்சியங்களுக்காக உழைப்பவர்கள் - நமது உழைப்பின்மூலம் புதியதோர் சமூகம் உருவாக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். நமது நோக்கம் உன்னதமான என்பது மட்டுமல்ல, அந்த நோக்கம் உடேறுவதற்காக நாம் கையாளும் முறைகளும், மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தூய்மையானவை மல்லிகைத் தோட்டம் காணவேண்டும் என்பதற்காக மாந்தோப்பை அழிப்பவர்களல்ல! நாம் கள்ளியும் முள்ளும் படர்ந்துள்ள இடத்தைச் செம்மைபடுத்தி, பிறகு அங்கு மலர்த்தோட்டம் அமைக்க வேண்டும் என்ற மாண்புடைய நோக்கம் கொண்டவர்கள்.

கள்ளியும் முள்ளும், கால்களையும் கைகளையும் குத்தி இரத்தம் பீறிட்டு வரச் செய்யும் என்பதை எதிர்பார்த்தே காரியத்திலே இறங்கியிருக்கிறோம்.

காட்டை அழிக்க முற்படும்போது கருநாகம் தீண்டக்கூடும் என்பதை அறியாதவர்களுமல்ல, நாம்.
நாட்டைப் புதுநிலைக்குக் கொண்டு வருவதற்கான அறப்போரில், கடுமையான எதிர்ப்பு, கருத்துக் குருடர்களிடமிருந்து கிளம்பும் என்பதும், நாம் எதிர்ப்பாராததல்ல.

எனினும் சென்றகிமை நடைபெற்ற நிகழ்ச்சிகள் எவருடைய உள்ளத்தையும் உலுக்கிவிடக்கூடியவனாக இருந்தன - மின்சார வேகத்தில் நடைபெற்றன.

நமது தோழர்கள், தாக்கப்பட்டனர் - தடிகொண்டு தாக்கப்பட்டனர் - துரத்தித் துரத்தித் தாக்கப்பட்டனர் - இடவர்மட்டுமல்ல, இரணங்குகளும் தாக்கப்பட்டனர் - கீழே விழுமளவு தாக்கப்பட்டனர்! வீழ்ந்த பிறரும் தாக்கப்பட்டனர் - கைகளில், கால்களில், மண்டையில், கழுத்தில் கணுக்காலில் - தாக்கப்பட்டனர்!

24ந் தேதி காலையில் சென்னை கோட்டை அருகே உள்ள வெளி, ஒருகளம்போல் இக்கப்பட்டது. கோட்டையைத்தாக்க ஏதேனும் எதிரிப் படைவந்தால், இவ்வளவு சுறுசுறுப்பைக் காட்டுவார்களோ, இல்லையோ, நாமறியோம், அன்று அதிகாரவர்க்கம் காட்டிய சுறு சுறுப்பு யாரையும் பிரமிக்க வைக்கக்கூடிய விரமாக இருந்தது. காரணம் என்ன? கோட்டை அருகே, என்ன செய்யச் சென்றனர் நமது தோழர்கள்? கையிலே, தமது மூதாதையர்போல் வாளும் வேலும் ஏந்திக்கொண்டு சென்றனரா - அல்லது இந்நாட்களிலே புரட்சிப் படைகள் கிளம்பும்போது எடுத்துச் செல்வதுபோல சுழல் துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் எடுத்துக்கொண்டு சென்றனரா இல்லையா! சட்டப்படி நிறுவப்பட்டு சட்டபூர்வமான முறையிலே பணிபுரிந்துகொண்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தார், சட்டத்துக்கு உட்பட்ட செயலாகிய, கருப்புக் கொடி காட்டும் காரியமாற்றத்தான். கருப்புக்கொடிகளைக் கையில் ஏந்திக்கொண்டு சென்றனர். கோட்டை வெளியே நோக்கி இது கண்டுதான், எடுத்தனர் தடிகளை, பழைய ஏகாதிபத்யம் வெட்கித் தலைகுனியும் படியான வீராவேசம் காட்டி, நமது தோழர்களை அடித்தனர் - அடித்தனர் - தடிகள் நொருங்குமளவு அடித்தனர்.

கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயக உரிமைகளிலே ஒன்று. எந்த நாகரிக சர்க்காரும் இதைத்தடுப்பதில்லை. இளவந்தார்களிடம் ஆட்பட்டிருப்பவர்கள் ஆதிருப்தியைக் காட்ட கருப்புக்கொடி பிடித்தல், பலநாடுகளிலும் உள்ள ஒருமுறை. சிலதிங்களுக்கு முன்பு இன்தோனேஷியாவிலே, விருந்தினராகச் சென்றாரே, பண்டிதநேரு, அப்போது, அங்கு, அவருக்குச் சிலர் கருப்புக்கொடி காட்டினர் - சுகர்ணோ - இந்தோனேஷியா விடுதலைவீரன், தடுத்தாரில்லை - அந்த நாட்டிலேயும் தடிகளும் துப்பாகிகளும் உள்ளன - ஆனால், அந்தத்துரைத்தனம், கள்ளர்களையும் கொள்ளைக்காரர்களையும், ஒடுக்க, அவைகளைப் பயன்படுத்துகிறது - கருப்புக்கொடிகள் பறந்தன!

இங்கோ! கருப்புக்கொடி காட்டச்சென்ற நமது தோழர்கள், இரத்தம் ஒழுக ஒழுக நின்றனர்! கோட்டை வெளியிலே இரத்தம் கொட்டப்பட்டது! திராவிடரின் இரத்தம்!

திவாகருக்குக் கருப்புக்கொடி காட்டினோம் - அவர் வந்தபோது இளவந்தார்கள். நமது முயற்சியைக் கேலியாலும் அலட்சியத்தாலும் முறியடித்து விடலாம என்று மனப்பால் குடித்தனர். எனவே, ஐதோ மக்களின் உரிமையை மதிக்கும் மகானுபாவர்களைப் போல நடித்து, கருப்புக்கொடி பிடிக்க அனுமதித்தனர் - ஆயிரக்கணக்கிலே கொடிகள் - அமைதியான முறையிலே நிகழ்ச்சி - போலீசாருக்கு ஒரு சிறு தொல்லையும் ஏற்படாத முறையிலே, நடைபெற்றது. நேர்மையாளர்கள், நமது போக்கின் கண்ணியத்தைப் பாராட்டினார், ஒழுங்கீனமான செயல் துளியுமின்றி! அருவருப்பான முறை எதுமின்றி, பலாத்கார வாடை ஒரு அணுவுமின்றி, அன்றைய நிகழ்ச்சி இருந்தது. நாடு அறியும் இதனை - நாடாள்வோரும் அறிவர்! அறிந்திருந்தும், 24-ந் தேதி, ஆச்சாரியாருக்குக் கருப்புக்கொடி காட்டச் சென்ற நமது தோழர்கள் மீது கடுமையான, கோரமான அடக்குமுறையை அவிழ்த்து விட்டனர்!

திராவிடம் தனிஉரிமை நாடு ஆகவேண்டும் என்ற நமது குறிக்கோளை உலகம் உணரவேண்டும் என்பதற்காகவும், இன்றுள்ள டில்லி மத்ய சர்க்காரின் போக்கும் முறையும் கண்டு நாம் ஆதிருப்தி அடைந்திருக்கிறோம் என்பதை அறிவுறுத்தவும், மத்தியசர்க்காரிலுள்ள காங்கிரஸ் சூத்ரதாரிகளான மந்திரிகள் இங்கு வருகிறபோது அவர்களுக்குக் கருப்புக் கொடி பிடிப்பது என்பது, நாம் கொண்டுள்ள வேலைத்திட்டம்.

இதிலே இரகசியம் இல்லை - மறைவு இல்லை. இதுபோலச் செய்யப்போகிறோம் என்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறோம் - சர்க்காருக்கும், ஓற்றர்களும், சுருக்கெழுத்தி லாக்காவினரும் அறிவித்திருக்கிறார்கள், திவாகர் வந்தபோதும், அமைதியும் கண்ணியமும் நிறைந்த விதமாகக் கருப்புக்கொடி காட்டியிருக்கிறோம். அதன் விளைவாக, பலாத்காரமோ கலகமோ குழப்பúô எங்கும் ஏற்படவுமில்லை. எதிர்க்கட்சி ஏடுகள் கூட, ஐளனமாக எழுதுவதாக எண்ணிக்கொண்டு, திவாகர் கவலைப்படவில்லை - கருப்புக்கொடி கண்டு அவர் சிரித்தார் - நானும் திராவிடனல்லவா என்று கேட்டார் - என்று தீட்டினவேயொழிய, தி.மு.கழகத்தினர் தியாகராயநகரிலே கருப்புக்கொடி காட்டினர், அதனால் இன்ன இடத்திலே தீப்பிடித்துக்கொண்டது. இவ்வளவு ஆட்களுக்கு அடிபட்டது, என்று எழுதவில்லை!

இவ்வளவு அமைதியான முறையிலே கருப்புக் கொடி காட்டிய தோழர்களேதான் 24ந் தேதியும், ஆச்சாரியாருக்குக் காட்டச் சென்றனர் - எனினும் அவர்கள் தாக்கப்பட்டனர் ஏன்?

இளவந்தார்களின் போக்கு மாறுகிறது! ஆமாம்! திவாகர் வந்தபோது இளவந்தார்கள், கருப்புக் கொடிக்காரர்கள் விஷயமாக அலட்சியமாக இருந்துவிட்டார். பொச பொச வெனப் போய்விடும் - ஒரு பத்துப்பேர் கூடச் சேரமாட்டார்கள், என்று எண்ணினர் - கண்ட காட்சியோ அவர்களுக்குக் கலக்கமூட்டிவிட்டது. அலட்சியப்படுத்தினோம் பலிக்கவில்லை, இம்முறை அடித்துவிரட்டுவோம் பலிக்கிறதா பார்ப்போம் என்று எண்ணி முறையை மாற்றிக்கொண்டனர்! அதன் விளைவுதான் அன்று நடைபெற்ற அடக்குமுறை தர்பார்!

அன்று அடக்குமுறை தர்பார் நடத்திய அதிகாரிகளை, நமது இஷ்டத்துக்கு ஏற்றபடி நடந்துகொள்ளச் செய்யும் அரசியல் அதிகாரத்தை அடுத்த தேர்தலிலே - விரும்பினால் - பெறக்கூடிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்!

அன்று அடக்குமுறை தர்பார் நடத்தியவெள்ளை அதிகார வர்க்கத்தாரிடம், இன்றைய இளவந்தார்கள் ஆகஸ்ட்டிலே சிக்கிச் சீரழிவுபட்டவர்கள் தான்! இவை, உலகறிந்த உண்மை! எனினும், ஊராள்வோருக்குக்கு ஊழியம் செய்யும் முறை, உத்தமர்களை இரத்தம் ஒழுக ஒழுக அடிப்பதுதான், என்று அதிகார வர்க்கம் எண்ணுகிறது போலும்! நடக்கட்டும் - நடப்பதெல்லாம் நடக்கட்டும், நண்பர்களே! நாம் தாக்கப்படுகிறோம், வளர்ந்து வருவதால் - நமது வளர்ச்சி தமது வீழ்ச்சிக்கு அறிகுறி என்று நடுங்கும் நினைப்பனர், ஏதேச்சாரிகார ஆயுதம் கொண்டு நம்மைத் தாக்குகின்றனர். நாம் தாங்கிக்கொள்வோம்! அடிப்பவர்களின் இரும்பு மனமும் உருகும் அளவுக்கு, நமது இரத்தத்தைக் கொட்டச் சித்தமாக இருக்கிறோம் நமது இரத்தம் மாபாபிளால் கெடுக்கப்பட்டிருக்கும் நமது மண்டலத்தை, நிச்சயமாகப் புனிதபுரியாக்கும்!

ஒன்று கூறுவேன் உங்களுக்கு - ஓயாமல் இதைத்தான் கூறிக்கொண்டே இருப்பேன் - அடக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க, தாக்குதல் வளர வளர, நமது சகிப்புத்தன்மையும், உள்ளத் தூய்மையும் வளர்ந்து கொண்டிருக்கவேண்டும். ஒரு துளியும் பலாத்கார உணர்ச்சியோ, அமைதியைக் கெடுக்கும் செயலோ தலைகாட்டக்கூடாது! நமது இலட்சியம், அதிகாரிகள் போக்கை மாற்றுகிற காரியமல்ல - நமது போர், அடக்கு முறையை நடாத்தும் அதிகார வர்க்கத்திடமல்ல! ஆம்புகள் பாய்ந்து வரும் நமது உடலைத் துளைக்கும் - உதிரம் பெருகும் - ஆனால், அதற்காக ஆம்புகளை கவனிப்பதா அறிவுடைமை - ஏய்தவர்களை அல்லவா நாம் எதிர்நோக்கிச் செல்லவேண்டும் - ஏதேச்சாதிகார ஆட்சிமுறையல்லவா இந்த ஆம்புகளை ஏய்து கொண்டுள்ளது! நமது நோக்கம் அந்த ஏதேச்சாதிôகார ஆட்சி முறையை மாற்றி அமைப்பது! அதனை மறாவதீர் - இம்மியும் நகராதீர், தூய இலட்சியப் பாதையைவிட்டு துயர் துடைப்போர்போல் நடித்துத் தூண்டிவிடுவோர் வரக்கூடும் - இவ்வளவு இடுக்கண்களையும், சமாளிக்க வேண்டாமா, நாமென்ன மரக்கட்டைகளா என்று ரோஷமூட்டி விடுவோர் வரக்கூடும் - மக்களின் சக்தி திரண்டு உருவாகும் போது தீயவர்கள் தோன்றுவர், சக்தியைச் சிதைக்க செவி சாய்க்காதீர்! ஒழுகும் இரத்தத்தைத் துடைத்துக்கொள்ளுங்கள், உன்னத இலட்சியத்தை மின்னிடச்செய்யுங்கள்! நாம் தடிகொண்டு தாக்கப்படவேண்டிய அளவுக்கு இன்று வளர்ந்துவிட்டிருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளுங்கள் - நம்மை ஆலறச் செய்வதற்காக ஆட்சியாளர்கள் காட்டும் காட்டுமுறை கண்டு கைகொட்டிச் சிரிப்பீர்கள்! நம்மிலே பலருக்கு - நூற்றுக்கணக்கானவர்களுக்கு, தியாகத் தழும்புகள் ஏற்பட்டுள்ளன - விடுதலைப் படையின் முன்னணி வீரர்களாயினர் அந்த உத்தமர்கள்! அவர்களை நான் வாழ்த்துகிறேன் - அவர்களின் வீரத்தைத் தியாகத்தைப் போற்றுகிறேன் - அவர்களுக்கு உள்ள அளவு உள்ள உரம் நமக்கும், வளர்ந்து வரும் நமது கழகத் தோழர்கள் அனைவருக்கும் ஏற்படவேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்! குருதி கொட்டிய வீரர்காள்! வாழ்க உமது புகழ்! வளர்க உம தொகை!!

ஆச்சாரியார் வந்தார் அடக்கு முறை தாண்டவமாடிற்று!

ஆச்சாரியார் வந்தார், திராவிடர்கள் தடிகொண்டு தாக்கப்பட்டனர்.

ஆச்சாரியார் வந்தார், 34 திராவிடர்கள் சிறையிலே தள்ளப்பட்டுள்ளனர்!

இனி, ஒவ்வொரு வடநாட்டு மந்திரி இங்கு வருகிற போதும், திராவிட முன்னேற்றக் கழகம், இந்தக் காணிக்கை செலுத்தத்தான் வேண்டும் போல் தோன்றுகிறது. பசி, தீருமட்டும் பலி கொள்ளட்டும் - மாண்டவர் போக மிச்சம் உள்ளவர்கள் திரு இடத்தில் வாழட்டும் இதற்கு உங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ளச் சொல்கிறேன்.

ஒரு தலையங்கத்தால், ஒரு படத்தால், துண்டு துணுக்குகளால் தலைவர்களின் பேச்சால், நம்மை ஒழித்துவிடலாம் என்று எண்ணிய இளவந்தார்கள். இன்று நாம் அந்த நிலையைக் கடந்து நெடுந்தூரம் முன்னேறி விட்டோம் என்பதை அறிந்து தடியும் துப்பாக்கியும் தூக்கிக் கொண்டு துரத்திக்கொண்டு வருகிறார்கள் நாம் செல்லும் இடம் இலட்சியபூமி, இவர்கள் நம்மை நெடுந்தூரம் பின்தொடர முடியாது. அவர்கள் ஓயும்மட்டும், தாக்கட்டும் - நாம் நாலுகோடிக்குமேல் இருக்கிறோம் - அவர்களின் ஆகோரப்பசிக்கு ஒரு ஆயிரம் தருவோம் - ஆயரவேண்டாம்.

தடிகொண்டு தாக்கும்போது, நமது உற்ற தோழனின் மண்டை பிளந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டு வருகிறபோதும், காணச்சகியாத காட்சியாகத்தான் இருக்கும் மனம் ஏரிமையாகத்தான் ùச்யயும் - எனினும் அந்தச் சமயத்திலே காட்டும் பொறுமையும் அடக்குமும்தான், உண்மை வீரருக்கு, இலட்சிய வீரருக்கு. அழகு! மனம் பதறி ஒரு சிறு செயல் செய்திட்டாலும், பெரியதோர் இயக்கம் பாழ்பட்டுவிடும் - பாலுக்கு அழும் குழந்தைக்குப் பாம்பைப் பிடித்து விளையாடக்கொடுக்கும் பேதைமையும் ஆபத்தும் நிரம்பிய செயலாகும் அது.

கடுமையான தாக்குதலின் போதும் கண்ணியத்தைக் காப்பாற்றிய தோழர்களை நான் பாராட்டுகிறேன். இரத்தம் ஒழுகிய நேரத்திலேயும் இலட்சிய வீரராக விளங்கிய நண்பர்களைப் பாராட்டுகிறேன். அவர்களைக் கண்டதும், கோழையும் வீரனாவான் - கொடுமையானதும் குணவானாக முயற்சிப்பான்! அவர்களின் தொகை வளரவேண்டும்.

சிறையிலே வாடுகிறார்கள் நமது தோழர்கள் - சிறைப்பட்டுள்ளனர் திராவிடத்தை மீட்கும் அறப்போரிலே உடுபட்டுள்ள செம்மல்கள்! அவர்கள் சென்றுள்ள இடம், நாமெல்லாம் முறைப்படி இனி, செல்லவேண்டிய இடம்!

தாய்மார்கள் தனிச்சிறப்புப் பெற்றனர், அன்றைய தர்பாரில் அவர்களும் அடிபட்டனர் - தடிகொண்டு அவர்களையும் தாக்கினர்!

இருபெரும் குற்றங்களையல்லவா அவர்கள் புரிகிறார்கள்! வீரப்புதல்வர்களைப் பெறுகிறார்கள் - போதாதென்று - வீரமாக அவர்களே கலகம் செல்கிறார்கள்!! இந்த இருகுற்றங்களையும், எப்படிப் பொறுக்கமுடியும், ஏதேச்சாதிகார வெறிபிடித்த இளவந்தார்களால் எனவே தாய்மார்களையும் தாக்கினர்! தாய்மார்களின் குருதி கொட்டப்பட்டது!!

தி.மு.கழகம் பேச்சாளர்களையும் எழுத்தாளர்களையும் மட்டும் கொண்டது என்று எண்ணிய இளவந்தார்கள், கழகம், தியாகத்தழும்பைப் பெறத்தயாராக உள்ளதோர் அணிவகுப்பு இது, என்பதைக் கண்டு கொண்டனர். எனவே இரண்டு நாட்களுக்கெல்லாம் ஜார் பூஜை செய்தனர்.
26ஊ குன்றத்தூரில் 144 தடையை மீறச் சென்ற தோழர்கள் ஏன்.வி. நடராசன், பாலசுந்தரம் இருவரையும் கைது செய்து, குன்றத்தூரில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களைத் தடிகொண்டு தாக்கி விரட்டியதுடன் நில்லாமல், துப்பாக்கிகொண்டு சுட்டிருக்கின்றனர். குன்றத்தூரின் வரலாற்றிலேயே இதுபோல் நடைபெற்றிராது - ஊப்புக்காய்ச்சியபோதும் சரி, வரிகொடா இயக்கத்தின் போதும் சரி - எப்போதும் நடைபெறாத கொடுமை - எட்டு ரவுண்டு கட்டியிருக்கின்றனர் துப்பாக்கிகொண்டு, மக்களை மங்களகரமான மஞ்சள் பெட்டியிலே ஓட்டுபோட்டு மகானுபாவர் களுக்கு முடிசூட்டி மகிழ்ந்த மக்களை! மூவருக்குக்காயம் இருவர் ஆஸ்பத்திரியில்! இருபது பேருக்கு மேல் சிறையில்!

வழியோடுபோனவர்கள் வண்டியில் சென்றவர்கள், மோட்டார் ஓட்டிகள் சகலருக்கும் தடியடி! ராமராஜ்யமாமே இது! சாந்தம் சத்தியம் இரண்டுக்காக வாழ்ந்து வீழ்த்தப்பட்ட உத்தமரின் பெயரால் ஊராள்வோர் துரைத்தனித்திலே துப்பாக்கி பேசுகிறது! எவ்வளவு வேகமாக, வீழ்ச்சிக்குச் செல்கிறார்கள் இந்த இளவந்தார்கள் என்பதைத்தான், உலகுக்கு எட்டு ரவுண்டு கேட்டும் முழக்கமிட்டுக்காட்டிற்று. மூவருக்குக் காயமாம் - முப்பதுபேர் கொல்லப்பட்டாலும், கேட்பார் யார்! ஒரு சிறு அறிக்கை வெளியிட்டுவிடுமல்லவா சர்க்கார் - போலீசார் கல்லால் தாக்கப்பட்டனார். எனவே சுட்டனர்! ஜாலியன்வாலா, நடத்திய டயர் மட்டும் சமாதானமும் காரணமும் சொல்லாமலா இருந்தான்! எந்தக் கொடுங்கோலன்தான் மக்களைக் கொடுமை செய்ததற்குக் காரணம் கூறாமலிருந்தான்!

குன்றத்தூர் மக்கள் அன்று அல்லல் மிகப்பட்டனர் என்று அறிய மிகவும் வருந்துகிறேன். இயக்கத்திலே தொடர்பு, இல்லாத பொதுமக்களில் பலருக்கும்கூட தடியடி என்பதறிந்து துக்கப்படுகிறேன்.

துப்பாக்கியால் தாக்கப்பட்ட தோழர்களுக்கு, நான் என்ன ஆறுதல் கூறமுடியும்! அவரக்ளின் வீரமும் தியாகமும் வீண்போகாது என்றுமட்டும் உறுதியாகக் கூறுவேன் திராவிட விடுதலைக்காக அவர்கள், குண்டுகளைத் தாங்கிக்கொண்டனர் - குண்டுகள் அல்ல அவை - இலட்சியவாதிக்குக் காலதேவன் தரும் மலர்ச்செண்டுகள்! வரலாற்றிலே குறிப்பிடப்படப் போகும் சம்பவத்திலே அவர்கள் முக்கியமானதோர் இடம் பெற்றுள்ளனர். விரைவிலே அவர்கள் நலிவு நீங்கி, தமிழகத்திலே உலவி, தாம்பெற்ற வடுக்களை காட்டுவதன்மூலம், திராவிடத் தோழர்களை ஏஅகு உள்ளத்தினராக வேண்டும் என்று விரும்புகிறேன்.

துப்பாக்கியும் பேசிவிட்டது! இனியும் என்ன பாக்கி? அணுகுண்டோ? துரைத்தனம் நடத்தும் தோழர்களே! இந்த அடக்கு முறையினால் எவ்வளவு திராவிடர்களை வீழ்த்திவிடமுடியும் என்று எண்ணுகிறீர்கள்? அடக்குமுறைகள், வெற்றி தந்தனவா இதுவரையில், யாருக்கேனும், எங்கேனும்! ஐனோ இந்த விபரீத விளையாட்டு! வேண்டாம், சடடத்தையும் அமைதியையும் போற்றிக்காப்பாற்றும், அறநெறி அறிந்த திராவிடர்களை மேலும் மேலும் கொடுமைப்பட வைக்காதீர் - கோல் முறியும் அளவுக்கு அடக்குமுறைச் சுமையை ஏற்றிக் கொள்ளாதீர். இலட்சியத்துக்காக மனத்தூய்மையுடன் அறப்போரில் உடுபட்டுள்ள எம்மை அடக்கு முறைகொண்டு அழித்துவிட முடியாது - பிணங்களைக் காணவிருப்பமா - சாகத்தயாராக இருக்கிறோம் - ஆனால் உயிரோடு இருக்கும் வரையல் எமது உள்ளத்தில் சரியெனப் பட்டதை உரைத்தபடிதான் இருப்போம். அதற்காக உழைத்தபடிதான் இருப்போம், உள்ள உயிர் ஒன்றுதான் - அது பிரிவதும் ஒரு முறைதான் - பிரியப்போவதும் உறுதிதான் - அடக்கு முறை ஆட்சியே, அது உன் துப்பாக்கி முனையால் பிரிந்தால் என்ன, தானாகக் காலத்தால் துளைக்கப்பட்டுப் பிரிந்தால் என்ன - இரண்டுக்குமிடையே வித்தியாசம் அதிகம் இல்லை - உயிரைக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்தால், தாராளமாகச் செய்துகொள் - ஆனால் மாண்டவர் போக மீதமுள்ளவர்கள் திராவிடத்தை மீட்டே தீருவார்கள் - அதை மறவாதே - வீழ்ந்த வீரர்களின் புதைகுழி, எதிர்காலத்தில் திராவிடப் பெருங்குடி மக்களின் புனிதஸ்தலமாகப் போகிறது அதையும் மறவாதே!
திராவிடத் தோழர்களே! முன்னேற்றக் கழகத்தினரே! துரைத்தனத்தார் துணிந்துவிட்டனர் - நாமும் தயாராகத்தானே வேண்டும். அறப்போர் புரிகிறோம், பலாத்காரமற்ற போர் - முறையும் நெறியும் தவறாத போர் - இதிலே ஏக்காரணம் கொண்டும் மாசு புகலாகாது - இம் - துளியும் புகலாகாது. ஆத்திரம், அழித்தல், அடக்கமின்மை, பதைப்பு, திகைப்பு, திடீர்ச்செயல் - இவை எதுவும் கூடாது. கடுஞ் சொற்களை எப்போதும் எவர்மீதும் வீசலாகாது - எவ்வளவு இழித்தும் பழித்தும் அவர் பேசியபோதிலும் எவ்வளவு மூர்க்கத்தனமான தாக்குதலில் துரைத்தனத்தார் உடுபட்டாலும், அடிபடத் தயாராக இருக்கவேண்டுமேயொழிய, சிறு விரல் கொண்டும் திருப்பித் தாக்கும் பேதைமை இருத்தலாகாது. கட்டுப்பாடும் கண்ணியமும்தான் நமக்குக் கவசம். இதைக்கெடுப்பவர்கள், தெரிந்தோ தெரியாமலோ திராவிடத்தைக் கெடுப்பவராவர். நெருக்கடியான நேரத்திலே ஒரு சிறு கல்லை எடுத்து வீசுவதும், பெரியதோர் வீரம் என்று கருதும் அவசரக்காரர்கள் முளைத்தால், முளையிலேயே கிள்ளி ஏறியுங்கள். அவ்வித சிறு செயலில் உடுபடுபவர் எவரும், அறப்போர்க்களத்திலே இருக்கும் தகுதி உடையவராகார். அப்படிப்பட்ட வர்களைக் கண்டால், உடனே அவர்களைபற்றிக் குறிப்பெடுத்து, எனக்கு எழுதுங்கள் - தவறவேண்டாம் - அவர்கள் மகத்தானதோர் இயக்கத்திலே இருக்கும் மாண்புடையவர்களல்ல என்று கூறுவது மட்டுமல்ல. நமது கழகத்தை விட்டே அவர்களை விலக்கவும் செய்வேன். ஒரு கல், அத்தகையவர்களால் வீசப்பட்டால், அறப்போர் வீரர் மார்பின்மீது, அடக்குமுறைக்காரர்களைக்கொண்டு குண்டு வீசச் செய்யும் கொடிய துரோகச் செயல்புரிந்தவராவர்.

நமக்கு அடக்குமுறையின் கோரத் தாக்குதலைத் தாங்கிக்கொள்ளும் சக்திவளர வேண்டும்.
24, 26 - இரண்டு நாட்களும்,அதற்கான பாடம் படித்தோம் - பாடம், நிச்சயம் பலன் தரும்.

(திராவிடநாடு 5.11.50)