அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எதிர்பார்த்ததே

சென்ற இதழிலே “வெறியரின் வீழ்ச்சிப் படலம் ஆரம்பமாகிறது” என்று நாம் குறிப்பிட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இந்தப் போர் ஆரம்பமானதிலிருந்து, “எங்களுக்கு இணை எவரும் இல்லை; எங்கள் இருவரையும் வெல்ல எவராலும் முடியாது. எங்கள் பலத்தைத் தெரியாதவர்கள் எங்களுடன் போர் தொடுத்து, வெற்றி பெறலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர். ஐரோப்பா எங்கள் இருவர் கையிலுமே இருக்கிறது; எங்கள் வெற்றி நிச்சயம்” என்று எக்காளமிட்ட இருவெறியர்களில் ஒருவரான பாசிசத் தலைவன் முசோலினியின் வீழ்ச்சிப் படலம் முடிந்துவிட்டது. உயிரைக் காத்துக்கொள்ள ஊர் ஊராய் ஓடி அடைக்கலம் புகும் நிலைமை முசோலினிக்கு ஏற்பட்டுவிட்டது. ஒரு நாட்டுச் சர்வாதிகாரியாக இருந்த ஒருவனுக்கு இந்தக்கதி நேரிட்டது. அந்த நாட்டு மக்களுக்கு அந்தத் தலைவனிடம் நம்பிக்கையோ அவனுடைய திட்டங்களில் விருப்பமோ இல்லையென்பதையே காட்டுகிறது. முசோலினியின் சர்வாதிகார ஆணவம், அந் நாட்டு மக்களின் உணர்ச்சியை வெளியே காட்டவிடாது இவ்வளவு காலமும் தடுத்துவந்தது. கடைசியாக நேசநாட்டுத் தாக்குதல் இத்தாலிய சாம்ராஜ்யத்தில் பலம்பெற்று வெற்றி மேல்வெற்றி கண்டதும், முசோலினிக்குச் சரணாகதிப் பதவியும், அந்நாட்டு மக்களுக்குப் பாசிச விடுதலையும் கிடைத்தது.

“பாசிசத்தையும் நாசிசத்தையும் ஒழிப்பதே எங்கள் போர் நோக்கம்” என்ற திட்டத்துடன் போரிடும் நேச தேசத்தாரிடம் சரணகதி அடைந்துவிடுவது எவ்வளவோ மேல் என்ற எண்ணம் இத்தாலிய மக்களிடம் உண்டாகிவிட்டது. அதற்கான காரியங்களும் இப்போது நடைபெற்று வருகின்றன. இத்தாலிய மக்களிடம் முசோலினி புகுத்திய பாசிசக் கொள்கையை நேசநாடுகள் முறியடித்து, அந்நாட்டு மக்களுக்கு நல்ல விமோசனம் உண்டாக்கும் என்பதில் எல்லாருக்கும் நம்பிக்கையுண்டு.

இப்போது இன்னொரு வெறியனின் வீழ்ச்சிப் படலமும் ஆரம்பமாகிவிட்டது. தனக்குப் பக்கபலமாய் இருந்து படைபல உதவி, நாசிச வளர்ச்சிக்குத் துணைபுரிந்துவந்த பாசிசத் தலைவனின் வீழ்ச்சிப் படலத்தைக் கேள்விப்பட்ட உடனே ஹிட்லருக்கு அஸ்தியில் சுரம் கண்டுவிட்டது. முசோலினியின் வீழ்ச்சி தன்னுடைய வீழ்ச்சிக்கு அடிகோலிவிட்ட தென்பதை ஹிட்லர் நன்கு உணர்ந்து விட்டார். அதனாலேயே அவருக்குச் சுரம் கண்டிருக்கிறது. ஆனால், ஹிட்லருக்கு ஏற்பட்டிருக்கும் நோய் உடல் நோயா அல்லது உளநோயா என்பதை நாம் இங்கு விவரித்து கூறவேண்டியதில்லை. அவருக்கு ஏற்பட்டிருப்பது உடல் நோயன்று, உளநோய்தான் என்பதைச் சிறிதளவு அரசியலறிவு படைத்தவரும் தெரிந்துகொள்வர்.

எப்படிச் சிசிலிப் பிரதேசத்திலே நேசநாடுகளுக்கு ஏற்பட்ட வெற்றியை கண்ட முசோலினிக்குப் பீதி ஏற்பட்டதோ, அதே போல ரஷ்யப் பிரதேசத்திலே செஞ்சேனைக்கு ஏற்பட்டுவரும் அபரிமிதமான வெற்றியைக் காணும் ஹிட்லருக்கும், உளநோய் பிடித்துவிட்டது. உளநோய் காரணமாக உடல் நோய் ஏற்படுவதும் உண்டு. எது எப்படியாயினும் ஹிட்லரின் வீழ்ச்சியும் ஆரம்பமாய் விட்டதென்றே சொல்லலாம்.

முசோலினியின் இடத்துக்கு மார்ஷல் படாக்ளியோவை இத்தாலிய மன்னர் ஏற்படுத்தியதுபோல, ஜர்மனியில் ஹிட்லரின் இடத்துக்கு இன்னொரு ஆளை நியமிப்பது என்ற ஏற்பாடுகளும் நடந்துவருவதாகத் தெரிகிறது.

ஐரோப்பாவும்,ஏன்? உலக மக்கள் அனைவருமே இவ்விரு வெறியர்களின் வீழ்ச்சியை எதிர்நோக்கி நிற்கின்றனர். நாசிசமும் பாசிசமும் வளர்ந்தால் உலக அபிவிருத்தியும் முன்னேற்றமும் சாந்தியும் சமாதானமும் ஏற்படாதென்பதை அரசியல் அறிவு பெற்ற அனைவரும் ஒப்புக்கொள்வர். எனவே, இவ்விரு வெறியர்களின் வீழ்ச்சி உலக மக்களின் மீட்சிக்கு ஓர் அறிகுறியாகும்.

ரஷ்யப் பிரதேசத்தில் செஞ்சேனையின் தளரா ஊக்கத்தோடு கூடிய போர்த்திறன் ஹிட்லரின் வீழ்ச்சியை விரைவில் கொண்டுவரும் என்று எதிர் பார்க்கிறோம். கடந்த சில தினங்களுக்குள் ஒரேல் பிரதேசத்தில் ஜெர்மானியருக்கு ஏற்பட்ட ஆள் நஷ்டத்தையும் தளவாட நஷ்டத்தையும், ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்த முசோலினியின் வீழ்ச்சியையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால், ஹிட்லரின் வீழ்ச்சியும் நெருங்கி வருகிறதென்றே சொல்லாம்.

எதிர்பார்த்த இருவரில் ஒருவரின் வீழ்ச்சிப்படலம் முடிந்தது. அடுத்தவரின் வீழ்ச்சிப் படலத்தையும் உலக மக்கள் எதிர்நோக்கி நிற்கின்றனர்.

8.8.1943