அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எது உமது இடம்?

கன்னிமரா ஓட்டலில் கனதனவான்கள் கூடிக் கவர்னர் பெருமானின் கோபத்தையும், சர்க்கார் சிப்பந்திகளின் சோகத்தையும், பதவிகள் ஊட்டிடும் மோகத்தையும், பட்டங்கள் காட்டிடும் பாசத்தையும் குறித்துப பெருமூச்சுடன் பேசிக் களைப்புத் தீரப் பானம் அருந்திப் பானம் பிறப்பிக்கும் உல்லாசத்துடன் உறவாடிவிட்டு, உலவும் நேரம்வந்து விட்டது, ஊர் விஷயம் பிறகு பார்ப்போம் என்று சொல்லிவிட்டுக் கலைந்து செல்லும் காட்சி அங்கே!

கட்டை வண்டி! கரடுமுரடான பாதை! காலை வெயிலில்! காட்டுப்பாக்கம்! அங்கோர் கலியாணம், அதற்கு இவர் புரோகிதம்! கிழவர் கட்டைவண்டியிலே உட்கார்ந்திருக்கிறார், இரட்டை மாடுகள் நெட்டைப் பனைமரச் சாலையிலே வண்டியை இழுத்துச் செல்கின்றன, இது இங்கே.

எங்கே அழைப்புச் சீட்டு என்பது அங்கே பிறக்கும் பேச்சு!

ஏனப்பா இவ்வளவு நேரம்? என்பது இங்கே கிளம்பும் பேச்சு.

பங்கு எவ்வளவு? என்பது அந்தச் சிங்கக் கூட்டத்திலே விவாதிக்கப்படும், பாரம் எவ்வளவு தாங்க முடியும் என்ற கணக்கு எடுக்கப்படும் இடம் இது.

பண அரசு எங்கே!

இன அரசு இங்கே!!

அது உல்லாச உலகம்!

இது ஊலைக்கூடம்!!

அது யோகிகளின் ஓய்விடம்

இது பாமரரின் திரு இடம்.

அங்கே போக உங்கட்டகுத் தங்கப்பிடியிட்ட தடியும், சரிகைப் பொட்டிட்ட தலை அணியும் தேவை.

இங்கேவர உங்கட்கு, தணலில் நடக்கும் தைரியமும், சிறையில் உலவும் நெஞ்சுரமும, கரையில்லா வாழ்க்கை மீது குறைவில்லாப்பற்றும் தேவை.

அங்கே சென்றால் நீங்கள் மந்திரியாகலாம், வாஜ தந்திரியாகலாம், துரைமாரின் துந்திபியாகலாம், சட்ட சபையில் பட்டு மெத்தையில் திட்டமாய் அமர்ந்து கொட்டாவி விடலம், அல்லது நெட்ருப் பேச்சைக் கொட்டித் தள்ளலாம்.

இங்கே வந்தால் இடி அடிக்கு ஈடு கொடுத்தாக வேண்டும். கடுபிடிச் சட்ட திட்டம் கைகுலுக்க வேண்டும், எடு பிடிபோல் கட்சியின் ஏவலாளியாக வேண்டும், ஒரு சமயம் சிறைக் காவலாளியின் பாராவிலே சிக்க வேண்டியும் வரும்.

ஆம்! உங்களை விருந்துக்கு அழைத்து மருந்து தரவில்லை! அங்கே இருப்பது தேன் குடம்! இல்லை என்று கூறி உங்களை தடுக்கவில்லை. ஆனால் அந்தத் தேனின்ல வீழ்ந்து மடிந்திருக்கும் தேள் உங்கட்குத் தெரியட்டும், அது விஷமுட்டப்பட்ட தேன்.

எங்களிடம் இருப்பது கரும்பு! அதனைக் கடிக்கக் கடிக்க இனிக்கும், சாறு உள்ளேபோகுமட்டுமல்ல, அதன் சக்கையை உமிழ்நீரிலே வைத்திருந்தாலும் இனிக்கம், ஆனால் கரும்புரசம், பெறக்கஷ்டப்பட வேண்டும்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதால் வரும ஆனந்தத்தை அறிந்தவர்கள் அவர்கள்.

ஆரிய அகங்காரத்தின்முன், அந்த அதிகாரம், சோரம் போன சொர்ணம் சோர்ந்துவிட்டதுபோல் நிற்கும் என்பதை அறிந்தவர்கள் நாங்கள்.

சட்டசபையிலே உட்கார்ந்து விட்டால் சகல ரோக நிவாரணியைத் தயாரித்துவிடலாம் என்பது அவர்கள் சித்தாந்தம்.

அங்கே சென்றால் பதவி மோகம் எனும் மேகவியாதி பீடிக்கும், என்பது எங்கள் சித்தாந்தம்.

ஏடுகளிலிருநது எண்ணங்களை எடுத்துக்காட்டும் எழில் அங்கே உண்டு. நாடு சுற்றிவந்து நவில்வது எமது வேலை.

அவர்கள் பட்டுப்பூச்சிகள், வெட்டுக்கிளிகள். அரசியல் வாணவேடிக்கை செய்து காட்டும் வாடிக்கைக்காரர்கள்.

நாங்கள், கதிரவன் கிளம்புகிறான் கண்விழியுங்கள் என்று கூவும் சேவல்கள், குடிசையின் கூரை மீது வசிக்கிறோம்.

அரசியலை மதுவாக்கி, மாளிகையை அடல் அரங்காக்கி, பதவி எனும் பதத்திற்கு, படாடோபம் எனும் தாளமிட்டுப் பக்குவமான பரதநாட்டியம் பரங்கிமுன் ஆடிக்காட்டிப் பரிசுபெறும் பாக்கியசாலிகளாக உங்களுக்கு விருப்பமா, உழைப்பினால் உடல் மெலிந்து, வறுமையால் உருமாறி, உரிமைபெற வேண்டுமென்ற உணர்ச்சியால் போரிட்டு, வடுப்பெற்று, வளையாது களத்தில் நின்று, வாள்போயினும் மாற்றானின் தாள்பணியாது சூள் உரைத்தபடி நடப்பது உயிர் ஊசலாடும்வரை என்ற துணிவுடன் போரிட, போரிட்டுப் புகழிடம் சேர, புகழிடம் சேருவது மட்டுமின்றிப் பின்சந்ததி, மானத்தோடு வாழ ஒரு திருஇடத்தைத் தேடித்தர விருப்பமா? உங்களுக்கு வேண்டுவது உன்ன? எது உமது இடம்? சேருமுன், சிந்தியுங்கள், சேர்ந்தபிறகு சித்தம் சிதையாமலிருக்க! கூடுமின், யோசியுங்கள், கூடிய பிறகு வாடாதிருக்க.

இங்கே நாங்கள் உழைப்பாளிகளைக் கேட்கிறோம். அரசியல் கழைக்கூத்தாடிகளையல்ல!

சமர்செய்யும் சக்தியுள்ளவரை அழைக்கிறோம், சர்களையல்ல, தீரர்களைத் தேடுகிறோம், திவான்பகதூர்களையல்ல.

இரணகளத்தை ரம்மியமானது என்று எண்ணுபவர்களைக் கணக்கெண்ணிப் பார்க்கிறோம், ராவ்சாகிபுகளையல்ல.

விடுதலை வீரர்களின் அணிவகுப்பிலே சேருமாறு அழைக்கிறோம், பிரிட்டிஷ் சாம்ராஜ்யதிகாரிகள் ஓய்வுநேரத்திலே தயாரிக்கும் மொம்மைகளையல்ல.

போரிட, உரிமைபெற, அரசு அமைக்க, இன அரசு அமைக்க எங்களுக்கு இனி எண்ணற்ற வீரர்கள் தேவை, கண்ணளிக்கும் தீரர்கள் தேவை, மேலும் மேலும் தேவை, கண் மூடிவழக்கமெல்லாம் மண் மூடிப் போகும் காலம் பிறக்கம் வரையில் தேவை, திராவிடத்தின் தளைகள் அறுபடுமவரை தேவை, வலியோர் சிலர் எளியோர் தமைவதைபுரியும் வன்னெஞ்சம் ஒழியும் வரையில் தேவை, நீதிநிலை நாட்டப்படும வரையில், வாளை உறையுலிடா வீரர்கள் தேவை! இதுபோர் வீரர்களைப் பழக்குவிக்கும் பாசறை! எண்ணித் துணியுங்கள், இனத்தை ஈடேற்றத் துள்ளிக் குதியுங்கள், நீங்கள் வீரர் பழிவந்தவர்கள்.

திராவிடநாடு திராவிடருக்கே என்பது பெரியாரின் சிந்தனையில் பதிந்த சித்திரம்! அது, பிரசாரம் எனும் ஓவியக் காரனால் தீட்டப்படடு, நாட்டு மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. ஓவியக்காரன், ஒழுங்குபட, உயர்வுபடச் சித்திரத்தைத் தீட்டாமலிருக்கக் கூடும், அவனுக்க வர்ண ஜாலங்கள் தெரியாத காரணத்தால், ஓவியக்காரனின் திறமைக் குறைவினால் சித்திரத்திலே சிலகரைகள் காணப்படலாம், அவைகளைக் கண்டு சித்திரத்தை அளந்துவிடாதீர்கள், திறமையுள்ள ஓவியக்காரன் தீட்டினால் எப்படியிருக்கும் என்பது பற்றிச் சிந்தியுங்கள். தீட்டிய சித்திரம் திரையளவிலே இருப்பதா! அதற்குச் சட்டங்கள் அமைத்துக் கண்ணாடியிட்டு, மனமாளிகையிலே அதனை மாட்டி வைத்தாலன்றோ, மதிப்பு அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் சிலர். தீட்டி ஓவியத்திரைக்குச் சட்டமிடட்டும், கண்ணாடி அமைக்கட்டும், அக்காரியமும் ஓவியக்காரன் ஏன் செய்யவில்லை என்ற குறை கூறாதீர்கள், அவன் அறியான் அந்த வேலையை, அந்த வேலையிலே மனதைச் செலுத்தினால், சீத்திரம் தீட்டுவதிலே திறமை குறையும், சட்டம் அமைத்துக் காட்டுங்கள், விருப்பமான, பொருத்தமான, வேலைப்பாடுமிகுந்த, கண்கவரும் வனப்பாடுடைய, சட்டங்களை அந்தச் சித்திரத்திரைக்கு அமைத்துக காட்டுங்கள். எந்தவிதமான சட்டம் அமைப்பினும் எமக்கு விருப்பமே, ஆனால் ஒரு வேண்டுகோள், சட்டம் அமைக்கும் ஆர்வத்திலே சித்திரத்தை மறைத்துவிடாதீர்கள்! சித்திரம் நன்றாக இருக்கும்படியான அளவு சட்டம் அமைத்துக்காட்ங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம், கழுத்தை நெரித்துவிடும் விதமான வைர மாலையை யார் அணிவார்கள்! அது கவனமிருக்கட்டும்!! என்று நாம் கூறுகிறோம்.

இங்கு சித்திரம் இருக்கிறது, அங்கு அந்தச் சித்திரத்தை மறைத்துவிடும் அளவுள்ள சட்டங்கள் உள்ளன! இங்கும் அங்கும், நிலைமையில் நினைப்பிலே இருக்கும் மாறுபாடுகளைக் கூறியாகிவிட்டது, மிரட்சிகொள்ள அல்ல, நிந்தனைக்கு அல்ல, உண்மையை உரைப்பதன் மூலம் உரம் பெற. சிரமசைத்துக கரம் கொட்டினால் பயன் இல்லை. வேலை மகத்தானது சாலை ஓரத்திலே மாலை நேரத்திலே உலவுவது அல்ல. சுரங்க வெடிகள் நிற்த களத்திலே, பிணவாடையின் மத்தியிலே நடப்பது. விடுதலை, ஒரு இனத்தின் விடுதலை, வீரர்களால்தான் முடியும். வீரரின் தன்மை இடர்கண்டு அஞ்சாமைதானே! சுடர் விளக்கு போன்ற கண்கள், எஃகு உள்ளம் இருத்தல் வேண்டும். நெருப்பிடையே நீந்த வேண்டும்.

தீ! ஆம், தீ மூட்டி விடுகிறோம். தீ மூட்டிவிட்டோம். தியாகர் வளர்த்த தீ, அதன் மூலம், அடிமைத்தனம் எனும் காடு அழியட்டும என்ற நோக்கம் நமக்கு. பரவும் தீயின் வேகத்தால் பதுங்கியுள்ள வர்ணாசிரமம் எனும் கருநாகம், தலையை நீட்டுகிறது. நாவை ஆட்டுகிறது, சுற்றிலும் தெரியும்தீச்சுழலில் தீய்ந்து போகிறது. அடிமைத்தனம் எனும் காடு அழிய மூட்டிவிட்ட தீயினால், சந்தனமரங்கள் சில கருகிவிடக் கூடும், ஆனால் அவைகளுக்கு அடியே கிடக்கும் ஜாதிபேதமெனும் விலங்கு சாகும்! வேறு சந்தனங்களைப் பிறகு பெற முடியும், ஆனால் கொடிய அந்த விலங்கு உயிருடன் உலவும் வரை, சந்தனக் காட்டிலே அதைத் தேடப்போய்ச் செத்தவரின் பிணவாடை வீசுமேயன்றி, மணமிராது. தீகண்டு, திகைக்கும் பழமை எனும் கிழப்புலி, சீறுவதும் அலறுவதுமாகக் கிடக்ககிறது. தீயை அணையவிடாமல் இருந்தால். சீறும் அப்புலி மாளும்! தீயை அணையவிடாதீர்!! தீயருக்கு இடங்கொடாதீர்!!

தீ பரவுவதுகண்டு, காடுவிட்டு நாடு புகுமோ என்ற சிலர் கலங்குகின்றனர். புகாது! காடுகனலிலே அழியும்போது, புகையும், சிறிதளவு சுடுநாற்றமும வீசும் அவ்வளவே. நாடு கெடுமோ என்றஞ்சிக் காட்டுக்கிட்டிருக்கம் தீயை அணைக்க வேண்டாம். தீச்சுழலிலே புகுந்து, துஷ்டமிருகங்களைத் தாக்கும்போது, தீயினால் நீயே சுடப்படுவாயே தம்பீ! ஆனால் தீ, தணலாகிச், சாம்பலாகிப் போகாதிருக்க வேண்டுமானால், சுடுமே என்ப்தை மறந்து யாரேனும் அக் கிளறிவிட்டுக் கொண்டிருக்கத் தானே வேண்டும். அக்காரியத்தைக் கடமை எனக்கருதுவோரின் வீரத்தைப் பழிக்காதீர், வீவேகத்தை அழிக்காதீர்.

இங்கே தீ மட்டுவோர், அங்கே, தொலைவிலே தெரியும் தீகண்டு, திகைத்து, அதனை அணைத்துவிடும்படி அபாய அறிவிப்பு விடுவோம் உளர். இருபுறமும் உள்ள நிலையை உரைத்தாகிவிட்டது. இனிக்கூறங்கள், எது, உங்கட்கு ஏற்ற இடம்? தனியரசுடன் தலைநிமிர்ந்து வாழ்ந்த திராவிட இனத்தவராகிய உங்கட்கு! வீரத்திலே, அறிவிலே, சிறந்து வாழ்ந்தவர் வழிவந்த உங்கட்கு! பெருவாழ்வு நடாத்திய பெரியார்கள் வழிவந்த உங்கட்கு! வீரர்களுக்கு ஏற்ற இடம் எது? புலி புற்றிலே புகாது! திராவிடன் என்ற உணர்ச்சியுள்ளவனுக்கு தனக்கேற்ற இடம் எது என்பதைக் கூறத் தேவையில்லை. பன்னிரண்டு ஆயிரம் தோழர்கள் பதிவு செய்து கொண்டனர், நீங்கள்?

மற்றுமோர் முறை, காணுங்கள், இங்கே கல்லைத் தலையிலே சுமந்துவந்த கனகவிசயனின் காட்சியைக் காணலாம். அங்கே நாணலுக்கு நடுங்கிய நண்பர்களைக் காணலாம்! இப்போது கூறுங்கள், எது உமது இடம்? ஒன்று கேளுங்கள்! நீங்கள் இங்கு, திராவிடர் கழகத்திலே சேருவீர்கள், வேறு இடம் போகமாட்டீர்கள், என்ற கடைசி எண்ணத்தோடுதான், கவிழ்ந்த அனிபாலிலிருந்து, செல்வம், ஓமாம் கடலிலே வீழ்ந்திருபபார்! நீங்கள் ஒன்று சேருவீர்கள், என்ற நம்பிக்கையோடுதான், தாளமுத்துவும் நடராசனும் இறந்தார்கள்! இப்போது கூறுங்கள் எது உமது இடம்?

(திராவிடநாடு - 26.11.1944)