அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எட்டாம் ஆண்டு!
“திராவிட நாடு” ஏழு ஆண்டுகளைத் தாண்டி வந்து, இன்று முதல் எட்டாவது ஆண்டினைத் தழுவுகிது தழுவுவதிலே ஒருவித மகிழ்ச்சியை அது கொள்ளுகிற. ஆம்மகிழ்ச்சியை அன்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் காணிக்கையாக வைக்கக் கடமைப்பட்டுள்ளது.

எட்டாம் ஆண்டு! ஆடிப்பாடித் துள்ளி விளையாடும் இளமைப்பருவம்! களம்மற்ற உள்ளமும், உறுதியினைத் தழுவும் உரமும் கொண்டு எழில் பெற்று விளங்கும் காலம்! கள்ளங் கபடமற்று விளையாடும் இளைஞனைக் காணும் கபட நெஞ்சங் கொண்ட வயதுவந்த நொண்டி, தான் விளையாட முடியாமலிருக்கும்போது அவ்விளைஞன் மட்டும் விளையாடுவதா என்று பொறமையுள்ளங் கொண்ட, கல்லெடுத்தெறிந்து இளைஞனின் காலல் படுகாயமுண்டாக்க நினைப்பது என்பது, சாதாரணமாக நடைமுறைப்ப பழக்கத்தில் சில இழிகுணம் படைத்தோரிடத்து இருக்கக் காண்கிறோம். அதுபோல “திராவிட நாட்”டின் வளர்ச்சி கண்டு பொறாமை கொண்ட காங்கிரஸ் அரசாங்கம் அடக்குமுறை ஜாமீன் குண்டை எறிந்து, “திராவிடநாட்”ற்குப் படுகாயமுண்டுபண்ண எண்ணி முயன்று வருகிறது. அடிபடும் இளைஞன் காயத்தைத் தேற்றிக்கொண்டு நடமாடுவதுபோல், “திராவிடநாடும்” தன்மேல் உதிர்க்கப்படும் அடக்குமுறைக் குண்டுகளை உதறித் தள்ளிக் கொண்டு தன் இலட்சியப் பாதையில் சளைக்காமல் செல்லவே விரும்புகிறது.

“திராவிட நாடு” சென்ற ஐழாண்டுக் காலமாக மலர்மெத்தை விரிக்கப்பட்ட நடைபாதையில் நடந்து வரவில்லை. கல்லும் முள்ளும், கடும் புதரும், கொடும் விலங்கும் அதன் வழிநடைப் பாதையிலே குறுக்கிட்டுத்தான் வந்திருக்கின்றன. இன்வாழ்வு புரியினைச் சென்று சேர்வதையே நோக்கமாகக் கொண்டதால், எதிர்ப்படும் இன்னல்களையெல்லாம் துச்சமாக நினைத்து முன்னேறி வருகின்றது. துவக்கப்பட்ட பயணத்தின் இடையில், அன்பர்கள் அதரவு என்னும் குளிர்மலர் ஓடைகள் தென்பட்டுக் கொண்டே இருப்பதால், எதிர்த்துத் தாக்கிடும் இன்னல்களை மறந்து களிப்புடன் இளைப்பாற இடமேற்படுகிறது.

“திராவிட நாடு” தன்னைப் பின் தொடர்பவர்கள் எளிதில் வந்து சேர, நடந்து செல்லும் வழியைச் செப்பனிட்டுக் கொண்டே வந்திருக்கிறது, இனியும் செப்பனிட்டுக் கொண்டே செல்லும் வழியில் காணப்படும் சனாதனச் சருக்கல்கைளப் போக்கியும், வருணாச்சிரம வளைவுகளை நிமிர்த்தியும், மூடப்பழக்க வழக்கம் என்னும் முட்புதர்களை அழித்தும், குருட்டு நம்பிக்கை என்னும் முட்புதர்களை அழித்தும், குருட்டு நம்பிக்கை என்னும் கொடுங்கள்ளிகளை வெட்டியும், பழைமைப் படுகுழிகளைத் தூர்த்தும், ஆவற்றிலே நெறியும புராணப் பாம்புகளையும், இதிகாசக் கொடுந்தேள்களையும் கொன்றும், வஞ்சக நரிகளை வளைத்தும், சீறிடும் செந்நாய்களை விரட்டியும், எளையிடும் ஓநாய்களை அலட்சியப்படுத்தி அப்புறப்படுத்தியும் தொண்டு செய்து வருகிறது. சமுதாயத்திலே பல கோணல் வளையங்கள் இருந்தால்தான், ஆவற்றின்மீது தாவித்தாவி தம இன்ப வாழ்வை நடத்த முடியும் என்று கருதி, இன்றைய சமுதாயத்தில் உலவிவரும் கோணல் சேட்டைக்காரர்களுக்கு “திராவிட நாடு” சென்ற ஏழு ஆண்டு காலமாக ஒரு வைரியாகவே காணப்பட்டு வருகிறது . “திராவிட நாடு” வைரியாக இருக்க விரும்பவில்லை, ஆனால் “திராவிட நாட்”டை அவர்கள் வைரியாக எண்ணுகிறார்கள்.

தான் கொண்ட இலட்சியம் ஈடேற “திராவிட நாடு” அன்றுபோல் இன்றும் பாடுபடுகிறது, இன்றுபோல் என்றும் பாடுபடும். வியாபார விளம்பரச் சலுகைகள் பெறாமல் - எதிர்பார்க்காமல் கடமையை நிறைவேற்றி வருகிறது. இது சீமான்களின் புன்முறுவலை எதிர்பார்த்து ஏங்கி நிற்காமல், தொழிலாளர்களின் துயரைத் துடைப்பது, பாட்டாளியின் பரிதாபத்தைப் போக்குவது, அல்லலுற்றவர்களுக்கு ஆறுதல் கூறுவது, ஏழைகளுக்கு இதஞ்சொல்லுவது அறியாதாருக்கு அறிவுறுத்துவது, உணராதார்க்கு உணர்த்துவது, கொடுமை புரிவோரைக் கண்டிப்பது, குற்றஞ் செய்வோரை இடித்துரைப்பது, குறையுடையோரைச் சுட்டிக்காட்டுவது, நலலதாற்றியோரின் நலம் பாராட்டுவது போன்ற அரிய தொண்டினையை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இதுகாறும் பாடுபட்டு வருகிறது, இனியும் பாடுபட்டு வரும்.

ஏஜெண்டுத் தோழர்கள் பெரும்பாலும் இயக்கத் தொண்டர்கள்தான். அவர்களெல்லோரும் நமது பாராட்டுதலுக்கு உரியவர்கள்தான் என்றாலும், அவர்களில் சிலர் நடந்து கொள்ளும் முறை தவறிய போக்கின் காரணமாக, அவர்களிடத்திலேயே விட்டுவைக்கும்படியான அவசியத்தில் அகப்பட்டுக் கொண்ட தொகையின் அளவு சில ஆயிரங்களைக் கடந்து நிற்கிறது. சந்தா அன்பர்கள் கொடுக்கவேண்டிய தொகையும் ஆயிரக்கணக்கை ஏட்டியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளுக்கிடையேதான் வேறு வருமான வழிகள் எதையும் நிலையாகக் கொள்ளாத “திராவிட நாடு” வளர்ந்தும் - வளர்ந்து வரவேண்டிய அவசியத்திலும் இருந்து வருகிறது. ஏஜெண்டுத் தோழர்கள் ஒரு பத்திரிகைக்குக் கடைக்கால் போன்றவர்கள். அவர்கள் வளமாக நின்றால்தான் பத்திரிகை உறுதியுடன் நிற்க வழியேற்படும். ஏஜெண்டுகள் தம் கடமையை இனிது செய்து முடிக்கப் பொது மக்கள் ஏற்றபடி ஆதரவினைத் தரவேண்டுகிறோம்.

“திராவிட நாடு” எட்டாம் ஆண்டை ஏட்டிப் பிடித்திருக்கும் இந்நாளில், எம் மனமார்ந்த மகிழ்ச்சியையும், நன்றியையும் ஏஜெண்டுத் தோழர்களுக்கும், சந்தா அன்பர்களுக்கும், கட்டுரை வழங்கினோர்களுக்கும், கவிதைகள் வரைந்தோர்க்கும், கதைகள் தீட்டினோர்க்கும், நன்கொடை கொடுத்தோர்க்கும் தெரிவித்துக் கொள்ளும் முறையில் இவ்விதழை அன்பின் காணிக்கையாக வைக்கிறோம். அன்பர்கள் வற்றா ஆதரவை என்றென்றும் விரும்பி நிற்கிறது “திராவிட நாடு”.

(திராவிடநாடு - 3.7.49)