அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எவனோ தீண்டிவிட்டான்!

ஊர் ஜனங்கள் ஓடுகின்றார்கள். போலீஸ்காரர் மிரட்டுகிறார். குழந்தைகள் கிலி கொள்கின்றன. கிழங்கள் தலை அசைக்கின்றன. குளத்திலே மிதக்கிறது, சி சீசுவின் பிரேதம்! அதைக் கண்டே இத்தனை அமளி!

மூக்கும் முழியும் எவ்வளவு சுத்தம்! பவுன் நிறமாக இருக்கிறதே. பச்சைக் குழந்தையை இப்படிச் சாகடிக்க எந்தப் பாவிக்குத்தான் மனம் வந்ததோ? திருட்டுப்பிள்ளை பெற்றாலும் எங்காவது விட்டுவைக்கக் கூடாதா? திருக் குளத்திலே போட்டுவிட்டாளே, பாவி! என்று பெற்ற பிள்ளையைப் பிணமக்கினாலன்றி தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளமுடியாத நிலையிலே வைக்கப்பட்டுள்ள எவனோ ஒருவனைத் திட்டுகிறீர்கள். ஊரிலே எத்தனையோ வதந்தி. பல விதவைக்ள் மீது சந்தேகம். கடைசியில் இன்னவள்தான் இக்கொலை செய்தவன் என்றம் தெரிகிறது. இளம் வயதுள்ள விதவை! எலுமிச்சம் பழம் போன்ற மேனி. யாரையும் ஏறெடுத்தும் பாராள். அவ்வளவு நல்ல சுபாவம். பரம்பரைப் பணக்காரர் வீடு. பாகவத சேவைக்காரர் குடி. பாவம் எப்படியோ தவறி விட்டாள். எவனோ தீண்டிவுட்டன். எப்படி எப்படியோ மறைத்தாள். கடைசியில் இந்தக் காரியம் செய்தாள் என்று பேசுகிறீர்கள், ஏசுகிறீர்கள். கண்ணால் குளத்திலே, விதவையின் வேதனையின் விளைவு மிதக்கக் கண்டீரே தவிர, கருத்திலே ஏதேனும் பாடம் கொண்டீரா! இல்லை! கொண்டார், விதவைக்ள் இன்னமும் விம்மிக் கிடப்பரா! விவேகங் காணோமே!

விதி விதி என்று பேசிவிட்டு, காரியம் கெட்டுவிட்டால், எவனோ செய்தான் சரி என்ற கை பிசைந்து கொள்கிறீர்கள். மதி என்ற ஓர் மாநிதி உண்டே, அதைக் கொண்டதுண்டா?

(திராவிடநாடு - 10.01.1943)