அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எழுச்சி முரசு

சிங்கங்கள் சிந்து பாடத் துவங்கிவிட்டனர்! வந்து வீழ்ந்த ஈட்டியை எடுத்தெறிவோம்-என்று எக்காளமிடத் துவங்கி விட்டனர் மாணவர்கள்! சென்னையில் இந்த வாரம் முகிழ்ந்திருக்கும் மாணவர் கிளர்ச்சி மகத்தானது கொடுமையைச் சாய்க்க இந்நாட்டின் வருங்கால மணிகள் தயங்கார் என்பதை எடுத்துக்காட்டும் உன்னதக் காட்சி.

வகுப்புவாரி பிரதிநிதித்வ முறைக்கு வந்த ‘கதி’ குறித்து, மாணவருலகிலே ஏற்பட்டிருக்கும் கலகத்தின் எதிரொலியே சென்னை மாணவர் முழக்கம். ‘வகுப்புநீதி வேண்டும்! ‘சர்க்காரே தயங்காதே!’ ‘அரசியலமைப்பைத் திருத்து’ என்ற வெற்றிக் கோஷங்களோடு வெய்யிலையும் மழையையும் பொருட்படுத்தாது அமைதியான முறையிலே தங்களின் அதிருப்தியையும் கண்டனத்தையும் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

மாணவர்கள்-எதிர்காலத் திராவிடத்தில் மறுமலர்ச்சித் தூதுவர்கள்! ஆனால், அவர்களின் வருங்காலமோ-வகுப்பு நீதிமீது வீசப்பட்ட ஈட்டியால் பயங்கரமாக்கப் பட்டிருக்கிறது. எதிர்பாராத இந்த இடியோசையின் விளைவினையுணர்ந்து ‘வேதனை போக்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று அவர்கள் எழுப்பிய எக்காளம் திராவிடத்தின் விழிப்புக்கோர் எடுத்துக்காட்டு ஆளவந்தாருக்கோர் அறைகூவல்!

பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து, பொங்கியெழும் வீர உணர்ச்சியையடக்கி, அமைதியோடு தங்கள் ஆசையைத் தெரிவித்துக் கொண்ட சென்னை மாணவர்கள் எல்லோரின் பாராட்டுக்கும் உரியவர்கள். சென்னையைப் போலவே, நாட்டின் நாளா பக்கங்களிலுமுள்ள மாணவர்களின் எழுச்சி முரசு ஒலிக்குமென்று நம்புகிறோம்!

மாணவருலகு-தங்கட்கு ஏற்பட்டிருக்கும் தீங்கினை எண்ணி விழித்துவிட்டது! “எழுங்கள் பெரியோரே! ஏதாவது செய்வீர் ஆளவந்தாரே!” என்று வேண்டுகோளைத் தெரிவித்துவிட்டது.

வகுப்பு நீதி கிடைப்பதற்கான வழிவகைகள் காணப்படவில்லை யென்றால் திராவிட சமுதாயம் தேய்ந்த நிலவாகிவிடும். திரை கெட்டு வாழ்வு இழந்து, மரணக் குழிக்கு வந்துவிடும்! ஆகவே, வகுப்பு நீதியை நிலைநாட்டுவதற்கான வழி வகைகள் காணப்பட வேண்டும். இதில் கட்சி மாச்சரியமோ, கருத்து வேறுபாடோ பார்ப்பனரல்லாத மக்களிடையில் இருக்கமுடியாது. ஆகவே, பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களும் பெரியோரும், ஏதாவது வழி வகை காணவேண்டும்-இந்த நேரத்தை வீணாக்கிவிட்டால், பின்னர் இ“ந்நாட்டுப் பெரும்பான்மைச் சமுதாயம் வீணரின் விளையாட்டுக் கூடம் ஆகிவிடும்!

ஆகவே, ஆளவந்தாரும், அவரைச் சார்ந்தோரும் உடனடிக் கவனம் செலுத்தவேண்டுமென வலியுறுத்துகிறோம். அரசியலமைப்பைத் திருத்தியோ அல்லது வேறு வகையிலோ, எது சாத்யமோ, அவ்வழியில் இந்த ‘அநீதி’ களையப்பட வேண்டும்! இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு, இந்நாட்டுப் பெருங்குடி மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

பெரியோரையும், ஆளும் கட்சியினரையும் தூண்டும் வகையில் துடித்துக்கிளம்பி தங்கள் அதிருப்தி அலையோசையைக் காட்டிக் கொண்ட மாணவ மணிகளுக்கு நமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதோடு, நாடெங்குமுள்ள மாணவர்கள், மக்கள் மன்றத்தில் இது குறித்து கிளர்ச்சி எழும் வகையில் தங்கள் அதிருப்தி அலையோசையைத் தெரிவிப்பது-பயன்தரக் கூடியதாகும்.

“சந்தர்ப்பம் நழுவினால் பின் சாவுக்காடுதான். நமக்கு!” இந்த உண்மை, நாடெங்கும் முழங்கப்படவேண்டும். மக்கள் மன்றத்திலேற்படும் மன மாறுதல், எத்தகைய சர்க்காரையும் மண்டியிடத்தான் செய்யும். ஆகவே, மக்களிடையே தங்கள் அதிருப்தி அலையோசை மூலம் விழிப்பையூட்ட முனைந்த மாணவருலகை மீண்டுமொருமுறை வாழ்த்துவதோடு நாடெங்கும் இந்த முழக்கம் எதிரொலிக்கட்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்!

(திராவிடநாடு 6.8.50)