அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எழுத்துரிமை காக்க விரைவில் அற்பபோர்!

பொறுத்தது போதும் இனிச் சகியோம்! ஆட்சியாளருக்கு எச்சரிக்கைசென்னையில் மக்கள் முரசொலி!

கடலலைகளென மக்கள் ஆரவாரித்தனர்- “அடக்குமுறைக்கு ஆளாகினோம்-இந்த ஆட்சியின் போக்கை இனிச் சகியோம்” என்று கூறுவது போல, எல்லோரும் கைகளைத் தூக்கி கருத்துக்களை வெளியிட்டனர். அதிருப்தியும் வெறுப்பும், ஆளவந்தாரின் போக்கு குறித்து எவ்வளவுதூரம் மக்கள் மன்றத்தில் வளர்ந்து கிடக்கிறது என்பதை அவர்கள் எழுப்பிய முழக்கம் முரசொலித்தது!

“வேண்டுமென்றே நமதியக்க நூல்களைத் தடை செய்கின்றனர். எழுதுகிற தோழர்கள் மீதும், அச்சடித்து வெளியிடுவோர் மீதும் அடக்கு முறை அம்புகளை வீசுகின்றனர்-வழக்குத் தொடர்ந்து வம்புக்கு ஆளாக்குகின்றனர்.

எழுத்துரிமையின் மீது வீசப்படும் ஈட்டித் தாக்குதலாகும் இது. ஆளவந்தாரின் இந்த அட்டகாசச் செயலை, இனியும் நாம் அனுமதிப்போம் என்று கருதல் வேண்டாம்.

எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் பேசி அவைகளுக்காகப் போரிட்டு ஆட்சி பீடமமர்ந்தோர் தான் இன்றைய காங்கிரஸ் ஆளவந்தார்கள். எனினும் அதிகாரம் கையிலிருப்பதால் மாற்றுக் கட்சியினர் பேனாவையும், எழுத்தையும் தடுத்து முறித்துவிடலாம் என்ற முயற்சியிலீடுபட்டு வருகின்றனர். இதன் விளைவாகவே, நமதியக்க நூல்கள் மீது தடையுத்தரவும், அவைகளை எழுதிய ஆசிரியர்கள் மீதும் வெளியிட்டோர் மீதும் வழக்குத் தொடர்ந்தும், விடாது தொல்லைகள் தந்து வருகின்றனர்.

இதுவரையில் பொறுத்திருந்து விட்டேம் இனியும் பொறுத்துப் போவதாக எண்ணமில்லை. உரிமையை நிலை நாட்ட, உரிமைப் போர் தொடுக்கத் தயங்கோம்.

எழுத்துரிமையைப் பறிக்கும் ஆளவந்தாரின் போக்கை எதிர்த்து விரைவில் உரிமைப் போர், துவக்கத்தான் போகிறோம். அதற்கான யோசனைகளைச் செய்துதான் வருகிறோம். இதை உணரட்டும் ஆளவந்தார்.

என்ற கருத்துப்பட 23.7.50 அன்று நடைபெற்ற இந்தி எதிர்ப்பு நாள் களிப்புக் கூட்டத்தில், சென்னையில் சொற்பொழிவாற்றிய திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் சி.என்.ஏ. வெளியிட்டார்.

“உரிமை நமது மூச்சு. அதைப் பெறும் போருக்கு எத்தனை பேர் அணிவகுப்பீர்!” என்று பொதுச் செயலாளர் கேட்டபோது தான், வெள்ளம் போல் குழுமிக் கிடந்த மக்கள் ஆரவாரித்தனர். தினவெடுத்த வீரர்கள் ‘எப்போது போர்?’ என்று கேட்பது போன்ற காட்சி அங்கு காணக்கிடைத்தது.
எழுத்துரிமையைப் பறிக்கும் வகையில் விடாது நம்மியக்கத்தவர் மீது அடக்குமுறையை வீசி வரும் ஆளவந்தாரின் போக்கை இனியும் இப்படியே விட்டுவிடக் கூடாது விட்டுவிடும் நோக்கமும் இல்லை என்று கூறுவதுபோல, பொதுச் செயலாளரின் தகவல் கேட்ட மக்களிடை அலையோசையென மகிழ்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டது.

“கட்டாய இந்திப் போரில் வெற்றி பெற்றுவிட்டோம்-வீணர்கள் என்று கேலி பேசிய ஆளவந்தார் இன்று நம் கோரிக்கைக்குத் தலைசாய்த்து விட்டனர். எடுத்த போர் எதிலும் இதுவரை நாம் பின்வாங்கியதில்லை! உரிமைப் போர் துவக்கினும் வெற்றி பெற்றே தீருவோம்-காரணம் நமது போக்கு வீம்பின் விளைவல்ல; நியாயம், நேர்மை இரண்டையும் அடிப்பீடமாகக் கொண்டது. ஆகவே, இந்த ஆளவந்தாரின் அடக்குமுறைப் போக்குக்குப் பாடங் கற்பிக்க வேண்டிய அவசியமும் பொறுப்பும் நம்மைச் சேர்ந்திருக்கிறது” என்ற கருத்துப்பட மேலும் பேசிய பொதுச் செயலாளர் வெளியிட்டபோது வெற்றிக் களிப்பில் மூழ்கிக் கிடந்தனர் மக்கள்.

(திராவிட நாடு 30.7.50)