அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எழுத்துரிமைப் போர் வீரர்கள்

எஸ்.ஸி.மணி, பி.மணி, ராஜா விடுதலை
பொதுச் செயலாளர் பாராட்டு
வண்ணையில் வாழ்த்துக் கூட்டம்

‘ஆரிய மாயை’ ‘காந்தியார் சாந்தியடைய’ நூலை விற்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு மூன்று வாரக் கடுங்காவல் தண்டனை பெற்று, சிறை வாசத்துக்குப் பின் திரும்பிய அறப்போர் வீரர்களான தோழர்கள் எஸ்.ஸி.மணி, பி.மணி, ராஜா ஆகியோருக்கு 17.10.50 அன்று சென்னை வண்ணாரப்பேட்டை ராபின்சன் பார்க் மைதானத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேற்படி வரவேற்புக் கூட்டத்துக்கு தோழர் பி.ராமசாமி தலைமை தாங்கினார்.

வெற்றிக் காளைகளின் வீர முயற்சியைப் பாராட்டி கழகப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை, மற்றும் தோழர்கள் ஈ.வி.கே. சம்பத், என்.வி.நடராசன், பி.வி.முத்துசாமி ஆகியோர் பேசினர்.

பொதுச்செயலாளர் சி.என்.ஏ.பேசுகையில், “எழுத்துரிமைப் போரைத் துவக்கிவைத்து. நல்லதென்று மனதில் பட்டதற்காகப் போராட முன்வந்த நமது வீரர்களைக் காண மகிழ்கிறேன்” என்று பாராட்டினார்.

அறப்போர் வீரர்களுக்கு 3வது வட்ட தி.மு.கழகத்தின் சார்பில் வாழ்த்திதழ் வாசித்தளிக்கப்பட்டது.
ஆளவந்தார் அடக்குமுறைக்குப் பலியாகி மீண்ட ‘ஆரிய மாயை’யின் ஆசிரியரான பொதுச் செயலாளர் சி.என்.ஏ.வுக்கும் வரவேற்பு இதழ் வாசித்தளிக்கப்பட்டது.

26.9.50 அன்று சென்னை வண்ணாரப்பேச்சை திராவிட இளைஞர் மன்றத்தின் தோழர்களான எஸ்.சி.மணி, பி.மணி, ராஜா ஆகிய மூன்று வீரர்களும் ஏற்கனவே செய்த முடிவையொட்டி மக்கள் கூடும் இடத்தில் நின்றுகொண்டு கையில் “ஆரிய மாயை”, “காந்தியார் சாந்தியடை” என்ற நூல்களைத் தாங்கி, அவைகளைப் படித்துக் காண்பித்து விளக்கினர்.

அதுபோது, போலீசார் வந்து தோழர்களைக் கைது செய்துகொண்டு போயினர். பிறகு மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒவ்வொருவருக்கும் மூன்று வாரக் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டது.

(திராவிடநாடு 12.11.50)