அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எழுத்துரிமையைப் பறிக்காதே!

ஏடெழுதியதில் குற்றமில்லை புலவர் செல்வராஜ் வழக்கில் தீர்ப்பு

“கருப்புச் சட்டை ஒழிய வேண்டுமா?” என்று ஒரு சிறுநூல் எழுதிய குற்றத்திற்காக புலவர் செல்வராஜ் (‘வியாழன்’) மீது வழக்குத்தொடுத்தது, சென்னை அரசாங்கம்.

புலவர் செல்வராஜ் எழுத்துலகத்திற்குப் புதியவரல்ல- நெடுநாள் பழகி நீண்ட அனுபவச் செல்வத்தைச் சொந்தமாக்கிக் கொண்டவர். ‘திராவிடன்’ ‘விடுதலை’ ‘கதிரவன்’ ‘நூருல் இஸ்லாம்’ போன்ற இதழ்களில் ஆசிரியராக அமர்ந்து பணியாற்றியுள்ளவர். தமிழ்ப்புலமையும், இந்தி, வடமொழி ஆகியவற்றில் பயிற்சி முள்ளவர், திராவிட இயக்கத்தில் அவர் ஆற்றிய தொண்டு குறிப்பிடத்தக்கது.

அவர் எழுதிய சிறுநூல்- ‘கருப்புச்சட்டை ஒழியவேண்டுமா?’ என்பது! சமூகத்தில் ‘பேயாட்டம்’ போடும் சில ஊழல்களை எடுத்துக்காட்டி, அவை ஒழியவேண்டும் என்று எழுதியதற்காக அவர்மீது குற்றம் சுமத்தி, எதற்கும் அவசரப்படும் அரசு வழக்குப் பதிவு செய்தது.

ஒன்பது மாதங்கள் ஓயாது விசாரணை-ஒத்திவைப்பு-விசாரணை என்று வழக்கு ஊஞ்சலாட்டமாடிற்று. கடைசியில் வழக்கை விசாரணை செய்த சென்னை முதல்மாகாண மாஜிஸ்ரேட் குற்றமற்றவர் நூலாசிரியர் என்று விடுதலை செய்தார்.

நீதி நிலைத்தது-நேர்மை வென்றது கண்டு மகிழ்கிறோம். வெற்றி கண்ட புலவர் செல்வராஜைப் பாராட்டுகிறோம். எழுத்துரிமையைப் பறித்திடத்துடிக்கும் சர்க்காருக்கு இந்த வழக்கின் தீர்ப்பைக் காணிக்கையாக்கி அதிகார மதுவால் மயங்கிக்கிடக்கும் அவர்களைக் கண்களைத் திறந்து பாருங்கள் என்று வேண்டுகிறோம்.

(திராவிடநாடு-10.9.50)