அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘பிளிட்ஸ்’ காட்டிய கண்ணியம்!

சென்னை தடியடி தர்பார் பற்றியும் குன்றத்தூரில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பற்றியும் தி.மு.க. பொதுச்செயலாளர் சி.என்.ஏ. ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்-சென்னை காங்கிரஸ் சர்க்காரின் போக்கை விளக்கவும், தி.மு.கழகக் கொள்கைபற்றிய தெளிவு உண்டாக்கவும் இந்து-மெயில்-தினமணி-தினசரி-மித்ரன் ஆகிய ஏடுகளிலே சுருக்கம் வெளியிட்டனர். சண்டே அப்சர்வர், விளக்கமாக முழு அறிக்கையை வெளியிட்டது.

பம்பாயிலிருந்துவரும் ‘பிளிட்ஸ்’ எனும் ஆங்கில வாரத்தாள், முற்போக்கான கருத்துகொண்ட ஏடு, காங்கிரஸ் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிக்கும் ஏடு, ஜனநாயகத்துக்காக வாதாடும் ஏடு என்று கூறப்பட்டு, திராவிட மாணவர்களாலும், இளைஞர்களாலும் பெரிதும் ஆதரிக்கப்பட்டு வருகிறது.

பொதுச் செயலாளரின் அறிக்கை, ‘பிளிட்ஸ்’க்கு அனுப்பப்பட்டது. ‘பிளிட்ஸ்’ அந்த அறிக்கையை அப்படியே, பொதுச் செயலாளருக்குத் திருப்பி அனுப்பிவிட்டது!

பல்லாயிரக் கணக்கான உறுப்பினர்கள் கொண்டதும், ஐந“நூறுக்கு மேற்பட்ட கிளைக்கழகங்கள் கொண்டதும், இடையறாது பணியாற்றி வருவதும், காங்கிரஸ் சர்வாதிகாரப் போக்கினால் தாக்கப்பட்டு வருவதுமான, தி.மு.கழகத்தின் பொது அறிக்கைக்கு, ‘பிளிட்ஸ்’ காட்டும் மரியாதையை, திராவிட மக்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இதனை வெளியிடுகிறோம்.

‘பிளிட்ஸ்’ முற்போக்கான ஏடு என்று எண்ணி ஆதரிக்கும் திராவிட மாணவர்களும் இளைஞர்களும், ‘பிளிட்ஸ்’ காட்டிய கண்ணியத்தைக் காண வேண்டுகிறோம்.

வெளியிடுவதற்காக அறிக்கை அனுப்பினால் திருப்பி அனுப்பி விடுகிறது ‘பிளிட்ஸ்’! அவ்வளவு கண்ணியம்!!

(திராவிடநாடு 19.11.50)