அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காந்தி மார்க்கட் நிலவரம்!
காந்தீயக் கடை வீதியின் நிலவர், இப்போது எப்படி இருக்கிறதென்பதைக் காண்பதற்கே காட்சியாக இருக்கிறது. கேட்பதற்கும் சுவையாகத்தான் இருக்கும். மடத்திலே உள்ள சாமியார் மௌனி என்றால், உபதேசம் எப்படி இருக்கும்! மௌனசாமி மடத்திலே செவிட்டுச் சீடர்கள்!! இந்த விசித்திரமான நிலைமையிலே இருக்கிறது காந்தீய ஆஸ்ரம அரசியல் வாழ்வு. ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் தேய்ந்த கனவினால் வாடம் தேசோத்தாரகர். அவருடைய சீடகோடிகளோ, திசைக்கொன்றாக நின்று தேம்புகின்றன. மஞ்சள் கருப்பாச்சுதே! மருக்கொழுந்தும் வேம்பாச்சதே! என்று பாடி, நெருக்கடியான நேரத்திலே பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டால் ஏகாதிபத்யம் விழுந்தடித்து ஓடிவந்த, ஏகபோக மிராசுபாத்யதையைத் தட்சணை கொடுத்து ஆஸ்ரமத்து அட்சதையைத் தலையிலே போட்டுக்கொள்ளும் என்று எண்ணினார்கள். ஆனால் இந்தக் கூட்டத்தார் உண்டாக்கிய நெருக்கடியை ஓ கொசுக்கடி என்று ஏகாதிபத்தியம் எண்ணிவிட்டது. போட்டதோ புலிவேஷம், ஆனால் அதனால் கிடைத்ததோ மகாமோசம். பதவியிலே வெள்ளைக்காரர்கள் பக்குவமாக உட்கார்ந்து கொண்டனர். 93-ம் செக்ஷன் எனும் தண்டாயுதத்தைத் தாங்கியபடி, வைதிகக் கலியாணத்திலே ஒரு சடங்கு. மாப்பிள்ளை, தாலிகட்டுமுன்பு, காசியாத்திரை போவது என்றோர் சிறுபிள்ளை விளையாட்டு. மஞ்சள் உடைதரித்து, மேளதாளம் முழுங்க, கலியாண மாப்பிள்ளை கிளம்புவான் காசியாத்திரை போகிறேன் என்று நாலு வீடு நடந்ததும் பெண் வீட்டார், பின் சென்று, கசிக்குப் போகவேண்டாம், சுரர் சாட்சியாக எமது பூங்கொடியாளைத் தருகிறோம் என்று சொல்லி அழைத்துவந்து, பிறகு தாலி கட்டுகிற சடங்கு நடைபெறும். இதுபோன்ற காசி யாத்திரையாக இருக்கும் என்ற நினைப்பிலேதான், காங்கிரசார் மந்திரிப்பதவிகளை ராஜிநாமா செய்தனர். ஆனால் நடந்ததோ வேறாகிவிட்டது! காசி யாதிரைக்குக் கிளம்பின மாப்பிள்ளையைப் பார்த்துப் பெண்வீட்டார், அடா! கருத்தில்லாதவனே! கன்னிகையை மணம் செய்துகெண்டு அவருடைய அன்பு எனம் கங்கையில் மூழ்கி, வாழ்க்கை எனும் தவம் செய்து, குழந்தை எனும் வரம் பெற்று வாழவகையற்றவனாய், காசிக்குக் கிளம்புகிறேன் என்ற கூறுகிறாயே, உனக்கு யார் பென் தருவார்கள்? காசிக்கேனும் போ, காளத்திக்கேனும் செல் என்று கூறிவிட்டால், மாப்பிள்ளையின் நிலைமை எப்படி இருக்கும். அதுபோலவே பதவியை ராஜினாமா செய்த உடனே, பாரத வீரர்களே! பயமரியாச் சூரர்களே! இதோ உமது பாதம் பணிகிறோம். பதவியிலே மீண்டும் வந்த அமருக! என்று கூறுவார்கள், நாம் மீண்டும் பதவியிலே வந்து அமர்ந்துகொண்டு அட்டகாசம் செய்யலாம் என்ற அசட்டுத தைரியத்திலே ஆட்சிப் பீடத்தைவிட்டு அகன்றளர். ஆங்கிலர் சந்துவிட்டது வந்துவிட்டேன் என்று கூறிக்கொண்டு, காலியான இடத்திலே உட்கார்ந்துகொண்டு, கபர்தார்! கூறுகின்றனர். இப்போது காங்கிரசார் கலக்கமுள்றுக் கிடக்கின்றனர். இந்த நிலையிலே உள்ள காந்தி மார்க்கட்டிலே, இப்போது மந்த நிலையை மாற்றக் கொஞ்சம் தந்திர காரியம் நடக்கிறது.

குயில் கூவுகிறது! அதே நேரத்திலே கூண்டுக்கிளி பேசுகிறது. சரோஜினி தேவியி கவிதாப்பிரசங்கம், கல்கத்தாவிலே நடந்தது. சென்னைக்கும் கித்திடும் நிலை வந்தது. அந்தக் குயிலின் மொழியிலே, ஓர் இன்பம், தோய்ந்திருக்கிறது. கவி உள்ளம் படைத்த, நரை மூதாட்டி நாட்டு லைமையைத் தமது பாட்டுமொழியினால் மீட்டிடும்போது, கேட்டிட இன்ப்மாகத்தான் இருக்கும். அந்தக் குயிலின் பேச்சிலே, காந்தீயக் குப்பை கூளங்கள் நீக்கப்பட்டு, மணிகள் மட்டும பொறுக்கி எடுக்கப்படும் வகையைக் காணலாம். எடுத்துக்காட்டு ஒன்று. சரோஜனி அம்மையார் பேசும்போது, காங்கிரசாரின் மனதிலே இதுபோது புகுந்து கொண்டுள்ள மருட்சியைக் கண்டித்தார்கள். ஏன் பிற கட்சிகளை வெறுக்கிறீர்கள்? கட்சிகள் ஏதும் இருக்கக்கூடாது. நாட்டிலே காங்கிரஸ் மட்டுமே இருக்கவேண்டும் என்று கூறுவது நமது பலஹீனத்தையும் பயத்தையும் காட்டுவதாகும் என்று எடுத்துக்காட்டிக் குறிப்பாகக் கம்யூனிஸ்டுகளைக் காங்கிரசிலே இருக்க விடக்கூடாதென்று, கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்யும் போக்கைக் கண்டித்தார். இந்தக் குயில் மொழிக்கு நேர்மாறாக இருக்கிறது கூண்டுக்கிளிகள் போலக் காந்தீயத்திற்குள் முடங்கிக் கிடக்கும் சிலருடைய பேச்சு. கம்யூனிஸ்டுகளைக் கொண்டு, தொழிலாளர்களையும், மாணவர்களையும், பாமரரையும், காங்கிரஸ் வலையிலே சிக்கவைத்தனர் முன்பு. இப்போது, முதலாளிகளின் முகதாட்சணியத்துக்காக அதே கம்யூனிஸ்டுகளை வேட்டை ஆடுகின்றனர். சரோஜனி அம்மையாரின் சஹானாவிற்குப் பிறகும், பக்தவத்சலம் போன்றவர்கள் சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பதுபோல, காந்தீய எஜமானர்கள் எதைச் சொல்லுகிறார்களோ அதையே திருபபித் திருப்பிக் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இன்று சமரசச் சிந்துபாடும் சரோஜினி அத்தையார் உள்படச் சேர்ந்து வளர்த்த மடைமைதான் நாட்டுக்குக் காங்கிரஸ் ஒன்றுதான் விடுதலை ஸ்தாபனம்; பிற எல்லாம் பிரிட்டிஷாரின் எடுபிட என்ற நாஜிச நினைப்பு. அந்த நாசீச நினைபுப் நரம்பிலே ஊறிக்கிடப்பதால்தான், கம்யூனிஸ்டுகள், ராயிஸ்டுகள் முதலியவர்களுக்கு இவர்கள் இப்போது ஆங்காங்கு கூட்டி மெழுகிக் கோலமிட்டு காட்டும் காங்கிரஸ் இல்லங்களிலே இடம் கிடையாது என்று கூறிவிட்டனர். இந்த கூண்டுக்கிளிகளை நம்பி இருக்கும் அன்பர்களின் நிலைமை கண்டு வருந்தவேண்டி இருக்கிறது.

இந்த நேரத்திலே, கீரையை வழித்துப் போடச் சொல்கிறார் கீர்த்திவாசர்! கதை உண்டு. சீரை மட்டுநதானா என்று போபித்துக்கொண்ட கணவன், மனைவி இலையிலிட்ட கீரையை வாரிச் சுவற்றிலே அடித்தானாம். பிறகோ வயிறு கடிக்கிறது. வகையான வேறு பண்டமும் இல்லை. பாத்த்தான் சுவற்றிலே இருந்த கிரையையே வழித்துப் போடச் சொன்னானாம். அதுபோல, ஆச்சாரியார், பழைய கிரிப்ஸ் திட்டம், அதற்கும் முந்திய 1935ம் ஆண்டு சட்ட திட்டம், ஆகிய ஏதோவொன்று கிடைத்தாலும் போதும் என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார்ஸ் 1935ம வருஷத் திட்டத்தைப் பற்றிப் பேசினால் வாய் நாறும், தொட்டால் கைநாறும் என்ற பேசிய கீர்த்திவாசர், பிறகு அதே 35ம் ஆண்டு திட்டத்தின் கீழ் முதலமைச்சரானார். அத்தகைய கீர்த்திவாசர் இப்போது கீரையை வழித்துப் போடச் சொல்கிறார். உண்மையிலேயே இப்போது காங்கிரசாருக்குப் பசி, அவ்வளவு! இவருடைய நிலை இப்படி இருக்க பம்பாய் மாகாண பாரத வீரர் இருக்கிறாரே புலுபாய்தேசாய், அவர், வைசிராய் நிர்வாக சபையை மோப்பம் பிடித்துக்கொண்டு உலவுவதாக வடநாட்டூப் பத்திரிகைகள் கூறுகின்றன. இந்த நோக்கம் கொண்டு, முஸ்லிம்லீக் செயலாளர் நவாப் சரடாவியாகத் அலிகானிடம் சென்று உறவாடிப் பார்த்தார். கரிமுன் நரிநடனமிடுவது போல! லியாகத் அலிகான், இந்தக் கூத்து கண்டு இலயித்துவிடக் கூடியவரா! இல்லை! சென்னையிலே, சரமாரியாகப் பேசியிருக்கிறார், பாகிஸ்தான் பெறுவதுதான் எனது இலட்சியம், இந்திய உபகண்டத்தின் விடுதலைக்கு அதுவே வழி என்று. ஜனாப்ஜினனா, ஆமதாபாத்திலே பேசியிருக்கிறார். பாகிஸ்தான் இன்றேல் கபர்ஸ்தான் என்ற வெள்ளையனை விரட்ட, இதுவே வழி! இந்துஸ்தானமும் பாகிஸ்தான் உருப்பட்டாலொழிய உருவாகாது என்ற கூறியிருக்கிறார். அமிரேமில்லத்தின் கணைகள் காந்தீயக் கடைவீதியிலே பாய்ந்துவிட்டன. இச்சமயத்திலே, எங்கோ ஒரு முஸ்லிம், பாகிஸ்தான் கேடு பயக்கும் என்று கூறிவிட்டாராம். அதைக் கண்டதும், காங்கிரசார், துள்ளிக் குதித்துத் தொடை தட்டிக்கொண்டு கேளங்கள், கேளுங்கள்! பாகிஸ்தானை ஒரு முஸ்லிமே எதிர்க்கிறார் என்று கூறுகின்றனர், காங்கிரஸ் மந்திரியாக இருந்த கோபால ரெட்டியார், கோவை பாகிஸ்துனத்தை ஆதரித்துப் பேசியிருக்கிறார். முஸ்லிம்லீக்கைச் சரிப்படுத்தாமல் ஒரு பலனும் கிடையாது என்ற எச்சரித்தார். ஜனாப்ஜினனாவை தலைவிரோதி என்று கூறுவது அடாது எனறு அறிவுரை புகன்றிருக்கிறார். இந்தியா ஒரே நாடு என்ற கற்பனையைத் தாக்கு.ம் அதற்குச் சில தினங்களுக்கு முன்பு ஈஸவரராவ் எனும் ஆந்திர நாட்டுப் பார்ப்பனர், பாகிஸ்தான் மட்டுமல்ல, வங்கஸ்துன் என்று தனிவட்டாரம் பிரித்து, பாகிஸ்துன், வங்கஸ்துன், இந்துஸ்துன் என்று மூன்று வட்டாரங்க்ள் அமைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். இப்படிக் காங்கிரஸ் தலைவர்களென்போர்களிற் பலரும், பாகிஸ்தான் கொள்கைக்குப் பிரசாரகர்களாக மாறும்போது யாரோ ஓர் பதவியிலிருப்பவர் பாகிஸ்துனைக் கண்டித்துப் பேசிவிட்டதற்குக் காங்கிரஸ் ஏடுகள் பிரமாதப்படுத்துவது கேவலம். அற்ப சந்தோஷம், அது நிலைக்காது. புறத்திலே அமிரேமில்லத் தாக்கும் நேத்திலே, பெரியார், படை எடுப்பு வடநாட்டின்மீது நடந்திருக்கிறது. கல்கத்தா, கான்பூர் முதலிய இடங்களிலே, பெரியார் பேசினார். ஆரி எதிர்ப்பு பற்றி. கான்பூர் மாநாடு, சுயமரியாதை மாநாடாகிவிட்டது! இராமாயண தகனம் முதற்கொண்டு, பெயர்களுடன் ஒட்ட வைக்கப்படும் வால்களை வெட்டுவது ஈறாகப் பெரியாரின் பெருநெறியைக் கான்பூர் மாநாட்டினர் ஏற்றுக்கொண்டனர். பிற்படுததப்பட்ட வகுப்பாரின் அமைப்புக்குப் பெரியாரைத் தலைமை தாங்கச் செய்துள்ளனர். இந்து என்ற அடிமைப் பட்டத்தை அகற்றி விடவும் இசைந்தனர். பெரியாரின் படை எடுப்பு, டாக்டர் அம்பேத்காரின் தக்குதல், ஜனாப்ஜின்னாவின் போர் எனும் மூன்று எதிர்ப்பு அலைகளிலே சிக்கிக் கொண்டிருக்கும், காந்தீயர்களின் மார்க்கட் நிலவரம், சற்றுக் கஷ்டமானதாகத்தானே இருக்கமுடியும்!

(திராவிடநாடு - 21.01.1945)