அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


காந்திஸ்தான் மர்கயா!

அந்தக் குதிரை மிகப்பொல்லாதது! ஏறிவந்தவர் சிறிது சிரமபரிகாரம் செய்துகொள்ள கீழே இறங்கினார், அங்கு மிங்கும் பார்த்தது, கனைத்தது, காலை உதறிற்று. வாலைத்தட்டிக்கொண்டு பிடித்தது ஓட்டம்! கூப்பிடுகிறார் குதிரையை, வந்தால்தானே! மிரட்டுகிறார், சட்டைசெய்தால் தானே! பரிவுடனழைத்தும் பரிவரக் காணோம். பாகையிலே நின்று பதறுகிறார், பக்குவிமிழந் தோமே என்று பரிதவிக்கிறார். ஆற்றுவார் இல்லை, தேற்றுவார் இல்லை, அலறுகிறார் அந்தோ!

யார் அவர்? என்பது பிறகு கூறுவோம், ஒரு குதிரையை இழந்ததற்காகவா இவ்வளவு சோகம் பிறந்தது என்றெண்ணிச் சந்தேகிப்பவருக்கு முதலிற் சில கூறுவோம். இந்தியாவைத்தாக்கிய கிரேக்க வீரர் அலெக்சாண்டர், ப்யூசிபாலெஸ் என்ற மதிநுட்பமும் வலிவும் பெற்ற வனப்பான குதிரையிடம் அதிகமான பரிவு கொண்டவர். அது இறந்ததும், உலகை ஒரு குடைக்கீழ் ஆள வேண்டும் என்ற அவருடைய இலட்சியமே இறந்தது. அவர் சித்தரித்த மண்டலங்களிலே கிரேக்கராட்சியே கவிழ்ந்தது. ஒரு குதிரையை இழந்தார், அவரது குறியே கெட்டுவிட்டது! அத்தகைய சரித்திர கீர்த்திவாய்ந்த குதிரைகள் பலப்பல! தேசிங்குராசனின் பாராசாரிக் குதிரை, பாமரரும் தெரிந்துக் கொள்ளும்படியான பிரக்யாதி பெற்றுவிட்டதல்லவா! சரித்திரத்திலோ, கவியின் கற்பனையிலோ இடம்பெற்று விட்டால், மண்ணோ மலரோ, கரியோ, பரியோ, காடோ, மேடோ, எதுவும், மக்கள் உள்ளத்திலே இடம்பெற்று விடுகிறது!

முன்னால் இருவர் தொட்டிழுக்க, பின் இருந்து சிலர் தள்ள “மாதங் காதவழி” சென்ற காளிங்கராயன் குதிரையப்பற்றிக் கவிகாளமேகம் கூறினார். இன்றும் அக்கவிதை அறிந்தோர் கண்முன் அக்காட்சி நடப்பது போலத் தோன்றும். யுத்தகளத்திலே பிரிட்டிஷ் மன்னனொருவன், தனது குதிரை இறந்துபட, மேலும் போரிடப் புரவி மீதேறத் துடித்து, “ஒரு குதிரை! ஒரு குதிரை! ஒரு ராஜ்யத்துக்கா ஒரு குதிரை தேவை” என்று கூவினான் இதோ கவி ஷேக்ஸ்பியர் கூறியுள்ள வாசகம், படித்தோ வாசித்து, கேட்டோர் களித்து போற்றும்.

புலவர்கள் சிந்தனையில் நின்ற புரவிகளைக் காட்டிலும் நாம் மேலே கூறியுள்ள புரவி, முக்கியமானது. இப்புரவி, கற்பனை. கதை கூறுவதில் கைதேர்ந்தவரென, கட்டியங்கூறுவோர் கூறும், கனமாக இருந்த ஆச்சாரியாரின் உவமை உரையில் உற்பத்தியானது! நந்தம் நாட்டு அரசியலில், நாம் மறக்கமுடியாத நகைச்சுவை நல்கும் புரவி!

கேண்மின், விளக்கம். ஆச்சாரியார், பதவியைவிட்டு வெளிவந்ததும், பேசுகையில் சொன்னார், “நாங்கள் பதவியை மீண்டும் பெறமாட்டோம் என்று எண்ணிவிடாதீர்கள். குதிரை மீதேறிக் கொண்டு போகையில், இளைப்பாற, சமையல் செய்துண்ண வேண்டி, கீழே இறங்கி இருக்கிறோம். குதிரை கூப்பிட்ட உடனே வரும். மீண்டும் சவாரி செய்வோம்” என்று.

ரசமான கற்பனை! பதவி ஓர் குதிரைக்கு உவமை. மந்திரி, அதன்மீதேறிடும் ஆணழகன்! கூப்பிட்ட நேரத்தில் குதிரை வரும் என்றதன் கருத்து, கேட்டதும், மீண்டும் மந்திரிப்பதவி கிடைக்கும் என்பதாகும். அவரது கற்பனை விசேடத்தைவிட, அவருக்கிருந்த ஆழந்த நம்பிக்கை கவனிக்கத்தக்கது. அப்போதுதான் அவரது இன்றைய இரங்கத்தக்கநிலைமை நன்கு விளங்கும்.

கூப்பிட்ட நேரத்திலே குதித்தோடி வரக்கூடிய குதிரை எங்கே? அதன் மீதேறி வந்த வீராதிவீரர் எங்கே? வீரர் விம்முகிறார்! குதிரை, குறும்புத்தனத்தினால், நாலுகாற் பாய்ச்சலில் போயேவிட்டது. கூப்பிடுகிறார், புலம்புகிறார், வரக்காணோம் குதிரையை! இத்தகைய குதிரையையோ, இதன்மீதேறிவந்து, இடையே அதனை இழந்த இளித்தவாயரையோ, எங்ஙனம், அரசியல் வட்டாரம் மறக்கமுடியும்!

பதவியை விட்டதும், குதிரையைவிட்டுக் கீழே இறங்கியதும் ஆச்சாரியார் கொண்டிருந்த நம்பிக்கை அவலமாயிற்று. கோபக் குரலிற் கூப்பிட்டாலும், தாபக்குரலிற் கூவினாலும், சோகத்தோடு கூப்பிட்டாலும், சொந்தம் பாராட்டிக் கூப்பிட்டாலும், அந்தப் பொல்லாத குதிரை வரமறுக்கிறது. வாய்நோய் கொண்டு வதைகிறார் வகைமறந்த வேதியர்!

குதிரைவரமறுப்பது மட்டுமல்ல, வேடிக்கை! அதன்மீது வேறு ஆள் சவாரி செய்கிறார்! அவர் கீழே இறங்கவில்லை, இறக்கக் குதிரைக்கும் விருப்பமில்லை. பதவி, கவர்னர் மன்றத்தாரிடம் இருக்கிறது, ஆச்சாரியாருக்குக் கிடைக்குமென்று ஆரூடம் கூற யாரும் முன்வரவில்லை. முன்னாள் முறுக்கு முறிந்துவிட்டது, இந்நாள் ஏக்கமே மேலிட்டு விட்டது.

கேளுங்கள் அவர் சென்னையில் 22-ந்தேதி பேசுகையில் கூறியதை! ஓர் ஆங்கிலேயர் தலைவர் அந்தக்கூட்டத்திற்கு. அதையும் பொருட்படுத்தாது ஆச்சாரியார், அடிவயிற்றில் அறைந்து கொண்டு அலறும் அம்மாமிபோல் பேசியுள்ளார், “அவர்கள் ஏறிய குதிரைகள் அவர்களை இறங்கவிடவில்லை. மதனப்பள்ளி போனாலும், சித்தூர் போனாலும், எங்குபோனாலும் குதிரை விடவில்லை” என்று ஆச்சாரியார் கூறுகிறார். அதாவது ஆங்கிலேய அதிகாரிகளிடம் போய்ச்சேர்ந்த மந்திரிப் பதவிகள், இவரிடம் மீண்டும் வரவில்லையாம்! எவ்வளவு பரிதாம் பாருங்கள்! கர்வபங்கம் எவ்வளவு நேரிட்டிருக்கிறது என்பதைக்கூர்ந்து நோக்குங்கள்! எந்தக்குதிரையை, கூப்பிட்ட உடனே வந்துசேரும் என்று ஆச்சாரியார், வீரரசத்துடன் கூறினாரோ, அந்தக் குதிரை, வேறு ஆட்களுடன் வேற்றூர்கள் போகவும் விரும்புகிறது, இவரைச்சட்டை செய்ய மறுக்கிறது, என்று இவரே கூறுகிறார்! இஃதன்றோ காலம் புகட்டும் கருத்துள்ள பாடம்! நீதி நின்று வெல்லும், ஆனால் நிச்சயமாக வெல்லும் என்றனர் ஆன்றோர். உண்மை! இதோ, ஆணவத்துடன், அநாயாசமாகக் கூப்பிட்டால் போதும் குதிரை ஓடிவரும் என்று கூறிய ஆச்சாரியாரே, கூப்பிட்டுக் கூப்பிட்டு அலுத்தேன், குதிரை வேறு ஆட்களை விட்டுப்பிரிய இசையவில்லை என்று கூறவேண்டி நேரிட்டது என்றால், நீதியின் வெற்றியல்லவா இது என்று கேட்கிறோம்.

இதுவரை, சற்று மறைத்துப் பேசிக்கொண்டிருந்த மாஜி முதலமைச்சர், இம்முறை, மிக வெளிப்படையாகப் பேசியும் பார்க்கிறார். வைத்தியரிடம் வியாதியின் மர்மத்தையும், வக்கீலிடம் வழக்கின் உண்மையையும் கூறிடவேண்டு மென்பார்கள், அதுபோல் வெள்ளையரிடம் பதவி விருப்பத்தைப் பளிச்செனத் தெரியப்படுத்தித்தான் விடவேண்டும் என்று ஆச்சாரியார் கருதினார் போலும்! இல்லையேல், இலஜ்ஜையை அவர் அவ்வளவு பகீஷ்கரித்திருக்கக் காரணமில்லை!!

இவை அவர் கூறியவை: “இங்கு (சென்னை மாகாணத்தில்) வேறு சர்க்கார் இருக்கவேண்டும். இதற்குமுன்பு இதை நான் சொல்ல வில்லை. இந்தியப் பிரச்னை தீரவேண்டுமென்றும், மத்தியில் தேசீய சர்க்கார் இருக்கவேண்டுமென்றும் சொன்னேன். பின்னர்தான் மாகாண சர்க்காரைப்பற்றி நான் ஆலோசித்தேன், இதைப்பற்றி நான் பேசும்போது, இது என் சொந்தவிஷயமாகக் காண்பதுபோலத் தோன்றுகிறது. நான் ஆளுவதற்கு ஆசைப்படுவதுபோல் நீங்கள் நினைக்கலாம், எனக்கு அந்த ஆசை இல்லை”

ஆசையற்ற இவர், அசுவம் அயலாரிடம்போனதுபற்றி ஆயாசப்படுவானேன்? அதை மீண்டும் தருக என்று ஆங்கில சர்க்காரிடம் அர்ச்சித்துக் கேட்பானேன்?

விஷயம் இது. முதலிலே பூரண சுயராச்யம் கேட்டார், பிறகு சுயராச்யம் தருவதாக வாக்குறுதி தருக என்று கேட்டார். பிறகு, போர்நோக்கம் புகல்க என்று கேட்டார், பிறகு சிறைபோகிறோம் என்றார், பிறகு வெளிவந்து வேண்டுகோள் விடுத்தார், அஹிம்சை ஆகாது என்றார், தேசீய சர்க்கார் கேட்டார், கூட்டு மந்திரிசபைக்குத் தூபமிட்டார். கிரிப்சிடம் காவடி தூக்கினார், இவை யாவும் இல்லை, இல்லை, என்றாகிவிடவே, இருந்த இடத்திலாவது மீண்டும் அமர்த்துங்கள் என்று இப்போது கெஞ்சுகிறார். எவ்வளவு பரிதாபகரமான வீழ்ச்சி! ஏனோ பதவிமீது இத்துணை பிரேமை! பத்தும் பறந்துவிட்டதே!!

குதிரை, இவ்வளவு “ஞானோபதேசம்” புரியக் கூடியதென்று நாம் எண்ணினதேயில்லை. ஆனால் இதோ காண்கிறோம், பதவிக் குதிரை அவரை எவ்வளவு பாடுபடுத்தி, பாடங்கற்பிக்கிற தென்பதை!!

“காங்கிரசே தேசம், தேசமே காங்கிரஸ்” என்று கனல்கக்கும் பேச்சுப்பேசிய ஆச்சாரியார், கண்ணீர் புரளக் கூறுகிறார், “காங்கிரஸ், லீக், ஜஸ்டிஸ் கட்சி, தாழ்த்தப்பட்ட லீக், இந்துமகாசபை, மகாராஷ்டிர லீக், கக்கார்கள், அஹ்ரர்கள், எல்லோரும் சேர்ந்து இந்த யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினால் ஒவ்வொருவரும் அதை நன்கு அறிந்து கொள்ளமுடியும். அப்போதுதான் ‘யுத்தம் மக்களின் யுத்தமாக மாறும்’ சர்க்கார், அறிக்கையல்ல, ஆச்சாரியார் சொற்பொழிவு! அவருடைய வாயிலிருந்து தான், மனதிலிருந்து வருகிறதெனக் கூற நமது மனம் இடந்தர மறுக்கிறது. லீக், ஜஸ்டிஸ் கட்சி, தாழ்த்தப்பட்டவர் லீக், என்ற இவைகள் கிளம்புகின்றன! நாங்களன்றி வேறுயாருக்கு நாடாளும் உரிமை உண்டு என்றுரைத்த உக்கிரசேனர், எவ்வளவு அடக்க ஒடுக்கத்துடன், பரிவு பாசத்துடன், நம்மவர்களையும் அழைக்கிறார் பாருங்கள்! அவருடைய கருத்து எதுவாகவேனும் இருக்கட்டும், சாணக்கிய சாத்திரப்படி சமயத்தில் சகலரையும் சரிப்படுத்த வேண்டும் என்ற சாகசமாக இருக்கட்டும், நமக்குக் கவலையில்லை, கவிழ்ந்த தலையும், நீர்மல்கும் கண்களும், கூப்பிய கரங்களும், குழையும் பேச்சுமாக அவர் நிற்கக் காண்கிறோமே, அதுபோதும் நமக்கு, வேளை நமக்களிக்கும் வெற்றி அது! எட்டு நாளில் சட்டம் செய்வேன் என்று அன்றுரைத்த ஆச்சாரியார் எங்கே? செல்வத்தையும் குமார இராசாவையும் கேலி செய்த கூட்டத்தைச் சட்ட சபையில் வைத்துக்கொண்டு பட்டங்கட்டியாண்ட பிரதாபம் எங்கே? சர்க்கார், காங்கிரஸ், இவை இரண்டொழிய வேறுகட்சிகளுக்கு இடமில்லை என்றுரைத்த இறுமாப்பெங்கே? எம்மை அசைக்க எவருளர் என்றுரைத்த வீறாப்பு எங்கே? பட்டத்துக்குரியவர்கள், இன்னும் பன்னெடு ஆண்டுகட்கு யாங்களே என்று பேசிய பூரிப்பு எங்கே? லீகும், ஜஸ்டிசும், இருக்கின்றன என்பதும், எத்தகைய ஏற்பாடு நடைபெறுவதாயினும், அவைகளின் ஆதரவு பெற்றாகவேண்டு மென்பதும், இன்றுணர்ந்தார் ஆச்சாரியார். இஃதுநமக்கோர் இணையற்ற வெற்றி என்போம். இதுமட்டுமன்று, மேலும் உண்டு.

பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்கமுடியாது. இந்தியா இந்தியருக்கே! பாகிஸ்தானுக்கு இணங்குவதைவிட சுயராச்யத்தை இழப்பதுமேல், கடைசி காங்கிரஸ்காரர் இருக்கும்வரையில் பாகிஸ்தானை எதிர்த்துப் போராடுவோம்.
பாகிஸ்தான்,
பாரதாமாதவை வெட்டுவதாகும்
பசுவை அறுப்பதாகும்
குழந்தையைக் கூறுபோடுவதாகும்
வீட்டைப் பிரிப்பதாகும்
அதற்கு ஒப்புக்கொள்ளமாட்டோம்.

இந்தியா, ஒரே நாடு, அதனைத்துண்டாடச் சம்மதியோம் என்று ஆச்சாரியார், இதுவரை பாகிஸ்தானைப்பற்றிப் பேசிப் பலமாகக் கண்டித்து வந்தார். ஜனாப் ஜின்னாவைப் பலமுறை தூற்றியிருக்கிறார். அறிவை இழந்து காயிதே அஃலம் பேசுகிறார் என்று இழிவாகப் பேசினார். அக்பரும் அவுரங்கசீபும் தோற்றுவிட்டனர், இந்த ஆசாமிமட்டும் ஜெயிப்பாரோ என்று கேலி செய்தார்.

லீகுக்குச் செல்வாக்குக் கிடையாது என்றுரைத்தார். முகமதலி ஜின்னாவை, வேலூர் உபயதுல்லாவை விட்டுத் திட்டச்செய்து, நாகை மொய்தீன் மரைக்காயரைக்கொண்டு நாங்கள் பாகிஸ்தானை வேண்டோம் என்று பேசச்செய்தார்! ஆயிரக்கணக்கான கூட்டங்களிலோ, அண்டம் அதிரக் கூறினார், பாகிஸ்தான் என்ற பேச்சைக் காதால் கேட்பதும் தவறு என்று! அதைக்கேட்ட அடியார் கூட்டம் ஆர்ப்பரித்து, முஸ்லீம் லீக் தலைவர்களை நாக்கில் நரம்பின்றித் தூற்றின. எவ்வளவு ஏளனம்! எத்துணை கண்டனம்! காந்திஸ்தான் தவிர வேறொன்றும் கூடாது என்று செய்த கர்ச்சனை எவ்வளவு!

இன்று இவையாவும், போயின! தூற்றியவர் தொழவருகிறார், கண்டித்தவர் கனிவுடன் பேசுகிறார், எதிர்த்தவர் சமரசம் கூறுகிறார், ஆச்சாரியார் பாகிஸ்தானை ஆதரிக்கிறார்! ஆதரித்துத் தீரத்தான் வேண்டும் என்று தமது சகாக்களுக்குக் கூறிவிட்டார். பாகிஸ்தான் திட்டத்தை ஒப்புக்கொள்ளும்படி காங்கிரசைக் கேட்டுக் கொள்கிறார், அதற்காகக் காங்கிரசில் போரிடவுங் கிளம்புகிறார்!

23-4-42 நமது நாட்டுச் சரித்திரத்தில் பொன்னாற் தீட்டப்பட வேண்டிய நாளாகும்! கருப்புக் கண்ணாடியாரின் கர்வபங்க நாளாகும் அது! பாகிஸ்தானை எதிர்த்த முண்டங்கள், முகத்தைத் தொங்கவிட்டுக் கொள்ளவேண்டிய நாளாகும். பிளாசி, பானிபட், வாடர்லூ, முதலிய பலப்பல சரித்திரப் புகழ்பெற்ற சம்பவங்கள் போன்றதாகும். வெள்ளைக்கொடி ஏந்தி வேதியர் வெளிவந்த நாள்! பூர்ண கும்பம் எடுத்துக் கொண்டு புறப்படுவோம் ஜனாப் ஜின்னாவை வரவேற்க என்று பூசரர் கூறிடவேண்டிய நிலைமையை உண்டாக்கிய நாள்! ஆணவம் அழிந்த நாள்! அன்பு உதயமான நாள்! ஆச்சாரியார், ஜின்னாமுன் மண்டியிட்டு நிற்கும் நாள்! பாகிஸ்தானாவது .... காங்கிரசாவது அதற்கு ஒப்புக்கொள்வது என்று எல்லாம் தெரிந்தவர்கள் ......திரிந்த இங்கிதந் தெரியா ஏமாளிகளே! வேதகால முதற்கொண்டு இராமர், அரிச்சந்திரர், பாண்டவர் முதலியவர்கள் காலத்திலிருந்து ஒரே நாடாக இருந்துவந்த பாரதபூமியைப்பங்குபோட யார் சம்மதிப்பார்கள் என்று புராணம் பேசிய புலவர்களே! முஸ்லீம்களும் அன்னியர்களே, அவர்கள் இங்கு ஆள இடந்தரோம் என்று பொச்சரிப்போடு பேசிய பேதையரே! மெஜாரடிதானே ஆட்சி செலுத்தவேண்டும், அதுதானே ஜனநாயகம், இந்து இனந்தானே மெஜாரடி, அதனிடந்தானே முஸ்லீம் மைனாரடி அடங்கி இருக்கவேண்டும் என்று அகந்தை கொண்டு ஆர்ப்பரித்த அசடர்களே! வாளெடுத்தும் போரிடுவோம், வழங்க மாட்டோம். பாகிஸ்தான் பூதம் பிரிட்டிஷாரால் சிருஷ்டிக்கப்பட்டது, அதைப் புதைத்துத் தீரவேண்டும் என்றுபேசிய ஆரிய தாசர்களே! ஜனாப் ஜின்னா, ஏகாதிபத்தியத்தின் ஏவலர், அவரை ஏற்கோம் என்றுரைத்த இஞ்சி தின்ற மந்தியென்று நின்றுலவிய பேர்வழிகளே! இதோ, உங்கள் தலைவர், ஆச்சாரியார், பணிந்து பயபக்தியுடன் நின்று, பாகிஸ்தான் கொள்கைக்கு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறிவிட்டாரே, உங்கள் முகத்தை எதனால் மூடிக்கொள்ளப் போகிறீர்கள். ஏதேதோ பேசிய உமது நாவை எதுகொண்டு சுத்தம் செய்து கொள்ளப் போகிறீர்கள், அவமானந் தாங்காது ஆளுக்கொரு முழக்கயறு எடுத்துக்கொண்டு மரக்கிளைகள் தேடுவதா, அல்லது ஆச்சாரியார் மீது பாய்ந்து அவரை வீழ்த்துவதா, என்ன செய்யப் போகிறீர்கள், எங்கே உங்கள் வீரப்பேச்சும், காரக் கண்டனமும், சூரச் சூளுரையும்!

23-4-42ஆம் தேதியில், சென்னை சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில், ஆச்சாரியார் கொண்டு வந்து பேசிய தீர்மானத்தில், “ஐக்கிய இந்தியாவிலிருந்து சில குறிப்பிட்ட பிராந் தியங்கள் அந்த வட்டாரத்துக்குட்பட்ட மக்களின் சம்மதத்தின் பேரில் பிரிந்திருக்க உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும். இதுவே முதல் நிபந்தனையாக இருக்கவேண்டும். என்று முஸ்லீம் லீக் வற்புறுத்துவதாலும் இந்தச் சமயத்தில் இந்திய ஐக்கியத்தைப்பற்றிய சர்ச்சையை வளர்த்துக்கொண்டிருப்பது மிகவும் புத்தித்தாழ்வான காரியமாதலாலும், இரண்டாம்படியான இந்தக் கெடுதலைத் தெரிந்தெடுத்து, லீகானது இந்தக் கோரிக்கையில் பிடிவாதம் காட்டியே தீருமாயின் அதற்கு விட்டுக் கொடுத்து, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க வேண்டும்” என்று இருக்கிறது. இதைக்குறித்து ஐந்துமணி நேரம் விவாதம் நடந்ததாம். தோழர் பிரகாசம் முதலிய சிலர் எதிர்த்தனராம். ஆச்சாரியார் அனைவரையும் அடக்கும் சொல்லம்புகளைச் சரமாரியாக விடுத்தார். “இத்தனை ஆண்டுகளாக லீகையோ, ஜனாப் ஜின்னாவையோ வீழ்த்தக் காங்கிரசால் முடியவில்லை. எனவே லீக் கோரிக்கைக்கு இணங்கித்தான் தீரவேண்டும்.” என்று கூறினாராம் ஆச்சாரியார். இந்தப்புத்தி வந்ததுகண்டு நாம் மகிழ்கிறோம்.

ஆச்சாரியார் இந்தத்தீர்மானத்தை அகில இந்தியக்காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக்கொள்வதற்றாகப் போரிடப்போவதாகவும், போரிட்டு வெற்றிபெற முடிவுமென்று உறுதி கூறியதாகவும் தெரிகிறது.

தீர்மானத்தை நிறைவேற்றிக்கொண்டார், உடனே, சம்பந்தி காந்தியாரைக்காண ஓடுகிறார்!

முஸ்லீம் லீகை இத்தீர்மானத்தின் மூலம் மயக்கி தேசிய சர்க்கார் அமைப்புக்கு இணங்கச்செய்து, பிறகு மெள்ள ஏதாவதோர் சூதுசெய்து லீகைக்கவிழ்க்கலாம் என்று சூட்சிசெய்ய ஆச்சாரியார் முற்படக்கூடும். ஆனால் கொள்கையை ஏற்றுக்கொண்டு, குனிந்து நிற்கிறாரே இன்று, அந்தக்காட்சி போதும், நமது கண்களுக்கும் கருத்துக்கும், விருந்தளிக்க!

திராவிடத்தலைவர்களே! தோழர்களே! மூன்றாண்டுகளுக்குள் முப்புரிநூலை முகமதலி ஜின்னா வீழ்த்திவிட்டார். பாகிஸ்தானை, பிரிட்டிஷாரும், காங்கிரசும் ஏற்றுக்கொள்ளச்செய்து விட்டார். என்னே அவரின் வீரம்! திராவிடர்களே! இஸ்லாமியர் பெறும் இன்பம் நாமும்பெற, நாம் இனியாவது முனையவேண்டாமா? திராவிட நாடு, என்றென்றும் தனி நாடாக இருந்தது. இலக்கிய, சரித ஆதாரம் இருக்கிறது. இனி எழுமின் தலைவர்காள்! கூடுமின் தோழர்காள்! கொட்டுமின் முரசு! பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று பாடுமின், திராவிட நாடு திராவிடருக்கே என்ற நமது முழக்கத்தையும் முப்புரி நூலோரும் ஆங்கிலேயரும் ஒப்புக்கொண்டே தீரவேண்டும் என்பதை எடுத்துரைப்பீராக! ஆரியம் அழிக! திராவிடம் வாழ்க!!

பார்ப்பனத்தலைவர் பறிகொடுத்த பரிமீது பரங்கி ஏறிச் சவாரி செய்வதைக்கண்டு பதைபதைத்தது, அதனைமீண்டும்பெற, ஆச்சாரியார், பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற நமது முழக்கத்துக்கு முடிவணங்க முன்வருகிறார்! அது நமக்கோர் வெற்றி. பாகிஸ்தானை ஒப்புக்கொண்டபிறகு திராவிட நாடு கூடாதென்றுகூற யாரே துணியமுடியும்! வாள் வலிவால் சித்திரித்த மண்டலத்தை, இழந்த இஸ்லாமியர் இன்று தமது கட்டுப்பாட்டினால், எழுச்சியினால், தலைவர் ஜின்னாவின் தீரத்தால், திரும்பப்பெற மார்க்கம் கிடைத்து விட்டது. பல வடநாட்டு வல்லரசுகளுக்குத் தலைவணங்காது வாழ்ந்த நாம், வஞ்சனைக்காரரிடம் வளைந்தோம், வாழ்வை இழந்தோம். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற பாடலின், இரண்டாம் அடி, திராவிட நாடு வாழ்க, என்றுதான் இருக்க முடியும்! எனவே எழுமின், போரிடுமின், வெற்றிக்கொடி நாட்ட விரைமின் என்று திராவிடருக்கு நாம் கூறுகிறோம். காந்திஸ்தான் மர்கயா, என்பது இப்போது மிகத்தெளிவாகி விட்டது!

26.4.1942