அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கங்காபுத்ரர், காலடியில்!

“தீண்டாமையை ஒழித்தாக வேண்டும். அதற்காக உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். அந்தழறையிலே என் உயிர் போனல் வேறு ஒருவர் என் போல் உண்ணாவிரதம் தொடங்குவார். அவருக்குப் பிறகுவேறொருவர்! பிறகு ஒருவர்! இம்ழறையில் தீண்டாமை ஒழியும்வரையிலே தொடர்ந்து நடத்தப்படும்” என்று காந்தியார் கூறுகிறார். தீண்டாமையை ஒழிக்க இவ்வளவு கடுமையான முறைதேவைப்படும் அளவுக்கு நிலைமை வளர்ந்துவிட்டது.

காந்தியாரின் இந்த உண்ணாவிரதத் திட்டம், டாக்டர் அம்பேத்கார் புதிதாக வெளியிட்டுள்ள காந்தீபக் கண்டன நூலுக்கு எதிர் நடவடிக்கையாக இருக்கலாம்.

இனி! விரைவிலே நடைபெறப்போகும் தேர்தலுக்குப் பிரசாரப் பண்டமாக்கப்படலாம்.

மதம் மாறும் முயற்சியை மறைந்திருந்து தாக்கும், போர்த்திட்டமாகலாம்!

அந்தராத்மா உத்தரவு கொடுக்கவில்லை ஆகவே உண்ணாவிரதம் இப்போது இல்லை என்று வேறோர் அறிக்கையை வெளியிடக்கூடும். அல்லது ராஜ்கோட் சம்பவத்தின் போது நடந்ததுபோல், அந்தராத்மாவே அடிக்கடி உத்தரவை மாற்றிவிடலாம். அதற்கேற்றவிதத்திலே மகாத்மாவும் தமது முறையை மாற்றிவிடலாம்.

உண்ணாவிரதம் தொடங்கியதும் ஊரும் உலகமும் “உத்தமரின் உயிர் போக்ககூடாது” என்று முறையிட்டு, உண்ணாவிரதத்தை நிறுத்திவிடலாம். தீண்டாமை போய்விட்டது என்றுகாட்ட, எங்காவதொரு கோயில் திறந்துவிடலாம். எது நடப்பினும், தீண்டாமை எனும் நோய் எவ்வளவு அதிகமாகப் பரவி இருக்கிறது என்பதிலே யாருக்கும் அபிப்பிராயபேதம் இருக்கக்காரணமில்லை. எந்தவிலை கொடுத்தேனும், தீண்டாமையைப் போக்கித் தீரவேண்டும்.

ஆனால் பழங்குடிமக்களை, வேறுமதத்திலே சேராதபடி பார்த்துக் கொள்ள ‘உஷார்’ சங்கம் அமைக்கப்பட்டுள்ள இந்த நாளிலே, நெல்லையப்பர் கோயிலிலே சைவமெய்யன்பர்களும் அம்மையரும் ஆலயத்தினுள்ளே ஆதித்திரரிவடமக்கள் நுழைந்துவிடுவார்கள் என்று அஞ்சி, நெல்லையப்பருக்கு அந்தத் தொல்லை வராதபடி தடுக்க, ஆலயவாயலிலே நின்று தொழுøக்ககு வருபவரைச்சோதித்தபிறகே உள்ளே அனுப்பினராம்! என்னே இவர்தம் அறிவின்பெருக்கும், பக்தியின் சிறப்பும்! இவ்விதமான நடவடிக்கைகளைக் கண்டும் தெரிசிக்கமுடியாத தேவனுடைய “திருவருளை” அடிப்படை
யாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்து மார்க்கத்திலே, ஆதித்திராவிடத் தோழர்கள் இருந்து தீரவேண்டும் என்று வற்புறுத்துவது எவ்வளவு கொடுமையான செயல்!

நெருப்பிலே நில்! சுட்டால் பொறுத்துக்கொள்! சேற்றிலே புரளு! நாற்றமடித்தால் சகித்துக் கொண்டிரு! என்று கூறுவதற்கும், ஆலயத்திலே நுழையாதே! ஆண்டவனைத் தரிசிக்காதே என்று கூறிக்கொண்டு, ஆனாலும் நீ மட்டும் “இந்த மதத்தைவிட்டு வேறுமதம் புகாதே என்றும் கூறும் வன்னெஞ்ச வைதிகப்போக்குக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது?

இந்தக் கொடுமை இங்குமட்டுமல்ல, வைதிக மெனும் விஷநோய்பரவாத இடமே காணோம்!! இதோ ஒருமனதை வேகச்செய்யும் சம்பவம்!!

ராஜ்பூர் என்ற இடத்திலே இதுபோது பழங்குடி மக்கள் 15பேர், வழக்கு மன்றத்திலே நிற்கிறார்கள்! அவர்கள் செய்த குற்றந்தான் என்ன? குளித்தனர் ஒரு ஊற்றில்! அந்த ஊற்றிலே குளித்தால் உடல் அழுக்குமட்டுமல்ல, உள்ளத்தின் அழுக்கும் போகும், பிறவிப்பிணி நீங்கும் பெரும்புண்யம் கிட்டும், என்று வைதிகர் கூறினர். கங்கையிலிருந்து இந்த ஊற்றுபெருகுகிறது, இதிலே ஸ்நானம் செய்தவருக்குப் பாவம் போகும் என்று சனாதனிகள் சாற்றினர். வைதிகர்கள் இந்து மார்க்கத்துக்குத் தலைவர்களல்லவா! மார்க்க போதகர்களல்லவா? எனவே அவர்கள் பேச்சைக் கேட்டால், அந்த மதத்தை நம்பிக் கொண்டிருப்பவருக்கு. அந்தப் புண்ய ஊற்றிலே குளித்துப் பெரும்பயன் அடையவேண்டுமென்று ஆசை ஏற்படாமலிருக்க முடியுமா!

அவ்வளவு அபூர்வமான ஊற்றா? நமது பாவத்தை எல்லாம் போக்கிவிடுமாமே! எப்படியாவது நாம் அந்த ஊற்றிலே குளித்துப் புண்யம் பெறவேண்டும், என்று பழங்குடிமக்களிலே 15 பேர்தீர்மானித்தனர். அவர்களின் ஆசைக்கு அரணாக அமைந்தது இரண்டு ஆரியரின் ஆதரவு, குளிக்கப்போகிறார்கள் என்று தெரிந்ததும், வைதிகக் கூட்டம், எதிர்த்தது, தடை விதித்தது. பழங்குடி மக்கள் அந்த ஊற்றிலே குளித்தால், தீட்டாகிவிடும் என்று ஆர்ப்பரித்தனர். பழங்குடிமக்கள், தடையைமீறினர், குளித்தனர், இப்போது அவர்கள்மீது புண்ய ஊற்றைத் தீட்டாக்கி விட்டனரென்றும், அதற்காக நஷ்டஈடுத் தொகை 900 ரூபாய் தரவேண்டுமென்றும், வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கைத் தொடுத்திருப்பவர்கள் 5 முக்கிய அர்ச்சகர்கள். இவர்கள் தங்களுக்குக் கங்காபுத்திரர் என்றுபட்டப் பெயர் சூட்டிக்கொண்டுள்ளனராம்! உலகமெல்லாம் ஒன்று என்றும், மனிதனை மனிதன் தாழ்வாகக் கருதக்கூடாது என்றும் அறிஞர்கள் கூறிவரும் இந்நாளிலே இந்நாட்டிலே, குளித்த குற்றத்துக்காகக் கோர்ட்டுக்கு இழுக்கும், கங்காபுத்திரர்கள் உள்ள ஒரு மதத்திலே பழங்குடிமக்கள். இன்னும் எத்தனை காலம், கொடுமையைச் சகித்துக் கொண்டு இழிவைத் தாங்கிக் கொண்டு, இம்சையை அனுபவித்துக் கொண்டு இருக்கமுடியும்? ஏன் இருக்கவேண்டும்?

அரிஜன சேவா சங்கத்தார், சமூகக் கொடுமைகளைக் களைய, சத்யாக்கிரகம் போன்ற ஏதேனும் கிளர்ச்சிகளைச் செய்யலாமா? என்று சிலர் காந்தியாரைக் கேட்டனராம். அவர் சேவாசங்கத்தார் அந்த வேலையிலே ஈடுபடக் கூடாது என்று கூறிவிட்டாராம். நாட்டுக்கு அவரே ரட்சகர் என்றும் பதியதோர் விழிப்பை, எழுச்சியை அவரே உண்டாக்கினார் என்றும் பேசிக்கொள்ளும், அன்பர்களிருக்கிறார்களே அவர்களைக் கேட்கிறேன், இத்தகைய கொடுமைகளைக் களையாமல், வேறே என்ன பிரமாதமான காரியத்தைச் சாதித்துவிடமுடியும்? ஏன், அவர்கள் பெருமையுடன் பேசிக்கொள்ளும் அந்த விழீப்பும் எழுச்சியும், இந்தக் கேடுகளையப் பயன்படவில்லை? இந்தக் கேடுகளைக் களைவதற்கு நாம் முன்வந்தால் சர்க்கார் குறுக்கிடமுடியுமா? சர்க்காரின் தயவு தேவையின்றியே நாம் இந்தக்காரியத்தைச் செய்யலாமே! ஏன் இதனைச் செய்யக்கூடாது? சுயாட்சிவந்தபிறகு இவைகளைக் கவனித்துக் கொள்வோம் என்று கூறுவதுடொருந்துமா? அந்தக் காலத்திலே இந்தக் கேடுகளை நீக்கமுயலும்போது இன்று இருப்பதைவிட அதிகமான எதிர்ப்பு இருக்குமே தவிரக் குறைவாக இராது. கங்காபுத்திரர்களின் தொகையும் உரமும் அதிகரிக்கமே யொழியக் குறையாது. சுயராஜ்யம் என்றாலே, பண்டையமுறை, அதாவது கங்காபுத்ரரின் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு சகலரும் கடந்துவரும் ஆட்சி என்றுதான், பலர் எண்ணிக் கொண்டுள்ளனர்; சிலர் வெளிப்படையாகவே பேசுகின்றனர்; மற்றும்சிலர் மனதிலே அந்த எண்ணத்தைக் கொண்டிருப்பது வெளியே தெரிய ஒட்டாதபடி நாசுக்கான திரைபோட்டு மூடிவைத்துள்ளனர்; அவர்களெல்லாம், சமூகத்திலே ஒருமாறுதலும் செய்யாமல், ஆட்சியிலே மட்டும்மாறுதலை உண்டாக்கினால், சுயாட்சிக்காலத்திலே, முரட்டுத்தனமான எதிர்ப்புச் செய்வார்கள்; சந்தேகமே வேண்டாõம். சுயாட்சியோடு நாம்வாழ்ந்து வந்தநாட்களிலே நரபலியும் நாயகனுடன் உடன் கட்டை ஏறுவதும், குழந்தை மணமும் கொடுமையான சமுதாய முறைகளும், பாரதமாதவின் நவரத்தினக் கண்டியாக இருந்ததை, இல்லை என்று யாரும் கூறமுடியாது. கேடுகளைய இதுதான் தக்கசமயமே யொழிய, அரசியல் காரியத்தைக் கவனித்துவிட்டுப் பிறகு ஆரஅமர உட்கார்ந்து ஒருநாளில் இந்தக் கேடுகளை எல்லாம் நீக்கிவிடமுடியும் என்று எண்ணுபவர் இருவகையினர்; ஒருசாரார் இப்படிச் சொல்லிவைக்கலாம் “இதுகளை” அடக்க என்று நினைக்கும் எத்தர்கள்; மற்றொரு சாரார், அவர்கள் சொல்லுகிறபடி நடைபெறும் என்று நம்பும் ஏமாளிகள். இருவரும், இந்நாட்டுப் பழைகாலக் கேடுகளை நிரந்தரமாக்குகிறார்கள், தெரிந்து, முன்னவர், தெரியாது பின்னவர், “கண்ட இடமெங்கும் செத்துப்போன கொள்கைகள் செத்துப்போன இந்தக் கொள்கைகளைப் புதைக்காவிட்டால், இவைகளின் துர்நாற்றத்தால் சழகழழவதும் அழுகிப் போய்விடும்” என்று மராட்டிய மதிவாணர் காண்டேர்கார் கூறுகிறார். சூனாமானா சொல்வதா நாம்கேட்பதா என்று, எண்ணிக் கொண்டு, எமது வார்த்øக்குச் செவிதர மறுக்கும் தோழர்கள், மராட்டிய ஆசிரியர் கூறம் அந்த மதி மொழியையாவது, செவிவழி சிந்தனைக்குச் செல்லப் பெருமனதுடன் அனுமதி அளிக்கக்கூடாதா? ஆனால் சமூக் கேடுகளைக் களைவதிலே ஈடுபடமறுக்கும் அந்தத் தோழர்களுக்கு, இங்குள்ள இழிநிலை தவிர மற்ற நாடுகளிலே உள்ள கேடுகள், அவைகளைக் களைவதற்கான முறைகள் யாவும் தெரியும்!

பதினாறாம் லூயிபிரான்சை ஆண்டு கொண்டிருந்தபோது, பன்மொழிப்புலவர் சர். வில்லியம் ஜோன்ஸ் மன்னரிடம் சென்று பேசிக் கொண்டிருந்தார், பிரான்ஸ் நாட்டிலே பல பகுதிகளிலே உள்ள மக்கள் எத்தகைய கொச்சை மொழிகளை எல்லாம் பேசுகின்றனரோ அவ்வளவு மொழிகளையும் சர். வில்லியம் பேசிக்காட்டினாராம். மன்னர் ஆச்சரியமடைந்தார். “ஆஹா! இவருடைய அறிவின் திறம் என்னே! பிரான்சுக்கு நான் பூபதி, ஆனால் எனக்குத் தெரியாது என் மண்டலத்திலே இவ்வளவு விதவிதமான மொழிகள் வழக்கத்திலே உள்ளன என்று இவரோ வெளிநாட்டார்! இவர் அறிந்திருக்கிறார் அவ்வளவும்!” என்று கூறி மன்னர் வியப்படைந்தார். பிரதானி ஒருவரிடம் மன்னர். இதுபற்றிப் புகழ்ந்து கூறினார். பிரதானி, தலை அசைத்துவிட்டுப் பிறகு “உண்மை தாம் மன்னா! அவர் மகாமேதாவி! பல நாட்டு மொழிகளையும் அறிந்திருக்கிறார், ஆனால் அவருக்குத் தாய்மொழிமடடும் தெரியாமல் அவர் வெல்ஷ்நாட்டவர், அந்தவெல்ஷ் மொழியை அவர் அறியார்!’ என்று கூறினார். மன்னர், முன்னிலும் அதிக ஆச்சரிமடைந்தாராம். நம்நாட்டு அறிஞர்களிலே பலருக்கு அமெரிக்க ஆப்ரிக்க ஆஸ்திரேலிய அரசியல் சமூக இயல் பற்றிய விஷயங்களிலே அறிவும் அக்கரையும் ஆராய்ச்சியும் உண்டு, தாய்நாட்டு விவகாரத்திலே மட்டுந்தான் அவர்களுக்கு அக்கரை பிறப்பதில்லை சர். வில்லியம் சகலமொழியும் தெரிந்து தன்மொழி மட்டும் மறந்தவராக இருந்ததுபோல்! மேதாவித்தனத்தைவிட இந்த நண்பர்கள் தமது நாட்டுப் பணிமேலானது என்று கருதுவார்களானால், இங்குள்ள இழிவுகளைக் கண்டும் கண்மூடி மௌனியாக்கிடக்கமாட்டார்கள். அரசயில் துறையிலே அதிக தீவிரவாதிகள், ஆனால் சமுதாயத்துறையிலேயோ மிக மிகப்பிற்போக்காளர்கள், என்று டாக்டர் அம்பேத்கார் இவர்களைக் கடிந்துரைத்ததிலே தவறு என்ன இருக்க முடியும்! தீண்டாமையை ஒழிக்கத்திரு உள்ளம் காணோம், அரசியல் நிர்ணயசவை வேண்டுமாம்! பாடுபட்டுழைப்பவனைப் பஞ்சமன் என்று கொஞ்சமும் நெஞ்சில் இரக்கமின்றிக் கூறும் கொடுமை போகவழி வகுக்கக்காணோம், ஆசியா கண்டத்துக்கு இந்தியா ராணியாக வேண்டும் என்று கிருஸ்தவக் கல்லூரி மாணவரிடையே ஆச்சாரியார் வீரமுழக்கம் செய்கிறார்! கங்காபுரத்ரர்கள், புண்யதீர்த்தத்திலே மூழ்கின குற்றத்துக்காகப் பழங்குடி மக்களை வழக்கு மன்றம் இழுக்கும், இந்தநாடு ஆசியாவுக்கு ராணியாம்! நாட்டு மக்களிடையே காணப்படும் நானாவிதமான நலிவுகளை, விளவுகளை, இழிவுகளைத், தாஙகித்தள்ளாடி, பழமைஎன்ற சிறையிலே கிடந்து உழலும், இந்நாடு, ஆசியாவுக்கு ராணியாம்! ஆண்டவனை அறியாது, ஆத்மார்த்தம் தெரியாது, மார்க்க நெறிபுரியாது, மானிடத் தன்மையின் மேன்மையை உணராது, உளுத்துப்போன கொள்கைகளைக் கட்டி அழும் இந்நாடு, ஆசியாவின் ராணியாம்! ஆச்சாரியார் காணும்பல கனவுகளில் இது ஒன்று! காங்கிரசின் வேலைஇனி, நாட்டக்குச் சுயராஜ்யம் தேடுவது மட்டுமல்ல. ஆசியாவுக்கே அரசியாக பாரதமாதாவை உயர்த்துவது, என்று தேர்தலின்போது பேச, ஆச்சாரியார் இப்போதே பயிற்சி அளித்துக் கொள்கிறார்! இவ்விதமான அரசியல் பகற்கனவுகளிலே அவரும், தம் ஆயுளிலே பெரும் பகுதியைச் செலவிட்டு விட்டார்; ஆர அமரஉட்கார்ந்து யோசித்துப்பார்க்கட்டும், இவ்வளவு நாட்கள் பாடுபட்டு, அவர் நாட்டிலே எந்தக் காரியத்தைச் சாதித்தார்? எதைச் சாதிக்க முடிந்தது?

“அதற்கென்ன செய்யலாம்? வெண்ணெய் திரண்டுவரும் சமயத்தில் தாழி உடைந்து விட்டது போலாகிவிட்டதே! பிரிட்டிஷாருடன் பெரியதோர் போராட்டம் நடத்தி விடுதலைக்குரிய வழி அமைக்கும் நேரத்திலே, இங்கே நமக்குள்ளே சச்சரவுகள் கிளம்பி, ஒற்றுமை குலைந்து, எதிரிக்கு இடம் கிடைத்துவிடுகிறதே” என்று கூறுவர். உண்மை! ஆனால் இதனைக் கூறிவிட்டால், சிக்கல் வளருவதும் சச்சரவு எழுவதும், பேதம் விரிவதும் பிளவுபல தோன்றுவதும், போய்விடுமா? வீட்டிலே உள்ள விஷயமறியாப்பாட்டி, விண் அதிரும் வேளையிலே, அர்ஜுனா! பீமா! நகுலா! சகாதேவா! என்று கூவினால், இடி ஓடியேபோகும் என்று கூறுவது போலத்தானே, நாட்டிலே காணப்படும் பேதங்கள் அனைத்தும், நாம் அனைவரும் பாரத புத்ரர்! இந்தியர்! நமக்குள் ஒற்றுமை வேண்டும் என்று கூறினால் சகலமும் சரியாகிவிடும் என்று நமது தேசபக்தர்கள் நினைக்கிறார்கள். பாரதபுத்தரரே! கங்காபுத்தரரை அடக்க வேலைசெய்து பாருங்கள் நாடும் உரமடையும்! சமூகம் கட்டுப்பாடு பெறும்! புதிய எழுச்சி தோன்றும், அந்தப்புது எழுச்சியைக் கொண்டு தான் அசியல் அடிமைத்தளையை உடைக்க முடியும், என்று நாம் கூறுகிறோம். அவர்கள்,

“ஆயிரம் உண்டிங்குஜாதி, எனில்
அன்னியர் வந்துபுகல் என்னநீதி”
என்று பாடுகின்றனர்., நமக்குப் பதிலளிப்பதாகக் கருதிக்கொண்டு. கவிபாரதியார், அந்தப்பாட்டோடு, நின்று விடவில்லையே! இந்துமக்களைக் கண்டு, மனம் நொந்து, கூறுகிறாரே,

“நெஞ்சு பொறுக்குதில்லையே!
இந்தநிலை கெட்டமாந்தரை
நினைத்துக் கொண்டால்”
என்று அவர் வேதனையுடன் பாடினாரே, ஏன், அவருக்குத் திருநகரம் அமைத்துத் திருப்பல்லாண்டு பாடும் திருக்கூட்டம், “இந்த நிலைபெட்டமாந்தரை”த் திருத்த முயலக் கூடாது.

“இவர்களுக்கு இதுதவிர வேறுவேலை கிடையாது! தேசவிடுதலைக்கான காரியம் என்ன! வெள்ளைக்காரனை எப்படி விரட்டுவது என்ற பிரச்னைகளிலே கவனம் செலுத்துவதைவிட்டு, என்னமோ பார்ப்பனீயமாம் பழமையாம், சமூகமாம் கொடுமையாம், ஆரியமாம் திராவிடமாம் இப்படி எதை எதையோ பேசிக்கொண்டு திரிகிறார்கள்” என்று பேசும் தேசியத் தோழர்கள் பலர் உளர். அவர்கள், எடுத்தகாரியம் வெற்றி பெற, ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமென்று எண்ணும் இயல்பினர். கூர்மையில்லாவாள், போருக்குப் பயன்படாது என்பது வீரன் தெரிந்து கொள்ளவேண்டிய முசல்பாடம்! அவர் களோ அதுபற்றிக் கவலையற்றவர்கள்! சரி, அவர்கள் அதுபற்றிக் கவலையயற்றிருக்கிறார்களே, நாமேனும் கவனப்படுத்துவோம், என்று எண்ணி, “அன்பரே” கொஞ்சம் நில்லும்! போருக்குப் பயன்பட முடியாத கட்கத்தைத் தூக்கிச் செல்கிறீர், அதைப் பாரும். கத்தியைக் கூராக்கும், பிறகு களம்புகுவோம்” என்று கூறினாலோ, “ஏ! இவன் கோழை! களத்துக்கு வா அஞ்சுகிறான்! எதிரியிடம் கைக்கூலி பெற்றான் போலும், எனவேதான், சண்டைக்குக் கிளம்பு என்று சொல்லும்போது கத்திகூர் இல்லை என்று குதர்க்கம் பேசுகிறான்” என்று நம்மை ஏசுகின்றனர் இது யூகமுமல்ல, வீரமுமாகாது! விடுதலைப் போரிலே வெற்றி வேண்டுமானால், முதலிலே, பகுத்தறிவு எனும் சாணைக்கல்லிலே, நமது கிளர்ச்சி எனும் ஆயத்தத்தை நன்றாகத் தீட்டிக் கொள்ள வேண்டும். அதாவது சமுகத்திலே உள்ள வேண்டும். அதாவது சமூகத்திலே உள்ள கேடுகளை, ஒற்றுமையைக் குலைத்து, உருக்குலைத்து, சிரமசைக்கம் போக்கினராக மக்களை ஆக்குவித்து, உள்ள உரத்தைப்போக்கி, வைத்துள்ள கேடுகளை, நெருக்கடியான நேரத்திலே, நான்வேறு நீவேறு என்ற எண்ணம் எழுவதற்கு ஏற்றவிதமான பிளவுகளை முடிவைக்கும் கேடுகளை, முதலிலே களைந்தாக வேண்டும் புண்ணைமூடிப்பு னுகுபூசுவதோ, குழியை மறைக்கத் தழையைப் பரப்புவதோ’ நரையை மறைக்கத் தைலம் பூவதுபோலப் பயனுள்ளகாரிய மாவதில்லை. நெருக்கடியான நேரத்திலே நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும்! “இருண்டவீடு” -அதிலே கள்ளன் புகந்தான், விழித்தெழுந்தான் வீட்டுக்காரன், விளையாட்டுத்துப் பாக்கியை நீட்டினான், கள்ளன் முன்பு! அது போலி என்பதறியாக் கள்ளன் ஒடுங்கினான்! அவன் நடுக்கத்தின் காரணமறியா மடையன், அந்த வீட்டுக்காரனிடம் விலைபோகப் பையன்! வீறிட்டழுதான், என் விளையய்டுத் துப்பாக்கியை ஏன் அப்பா? எடுத்தாய்? என்று கேட்டான். கள்ளன் கண்டான், காரியத்தை முடித்தான் என்று கவிபாரதிதாசன் கூறுவது போல, சமூகத்திலே, செய்து தீரவேண்டிய மாறுதல்களைச் செய்யா முன்பு, சுதந்திரப்போர் நடத்தும் தோழர்கள், விளையாட்டுத் துப்பாக்கி கொண்டு கள்ளனை விரட்டப்போய், சிறுவனின் கூக்குரலால், குட்டு வெளிப்பட்ட கதை போலத்தான் விடுதலைப்போராட்டங்கள் வீணாவதைக்காண முடியும்!

“சரி, சரி! தேசியப் போராட்டங்களை எல்லாம் நிறுத்திவிட்டு, கலியாணம் கருமாதி, கோயில் குளம், வீதிவெளி, பஞ்சாங்கம் சடங்கு ஆகியவைபற்றி உன்னைப் போலப் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்கிறாயோ! இதுதான் வீரர்செய்ய வேண்டிய காரியமோ?” என்று வெகுண்டு கேட்பார் தேசியத் தோழர். நான் கூறுவது அல்ல, சுதந்திரப் போராட்டங்களை நடத்திய மாவீரர்கள் யாவருமே, வீழ்ச்சியுற்ற ஓர் இனத்துக்கு, முதலிலே விழிப்பு ஊட்டி, சமூகத்தின் சிக்கு அறுத்தாலொழிய, விடுதலைப் போர் வெற்றிபெறாது என்றுதான் கூறியுள்ளனர். ஈ.வே. ராமசாமி, ஓயாமல் ஆரியம் ஆரியம் என்று அலறுகிறார். ஆரியருக்கு அதிர்வேட்டு வைக்கிறவர், ஆங்கிலேயரை விரட்டும் வேலையைச் செய்யத் தவறிவிட்டார். என்று, தேசிய ஆர்வத்தினால் தெளிவை இழந்து விடத்துணியும் தோழரொருவர் சின்னாட்களுக்கு முன்பு “சுடச்சுட”ச் சொன்னாராம்! மற்றுமோர் தோழர் மாவீரர் மரபினரெனத் திகழ எண்ணி,“இந்த ஈ.வே.ரா., என்னசார்! கலியாணம் இப்படி இருக்க வேண்டும், கருமாதி இப்படிச் செய்யவேண்டும், திதிகூடாது திருவிழா ஆகாது, தீர்த்தயாத்திரை போகாதே! திருநாமம் தரித்துக் கொள்ளாதே” என்று இப்படிப்பட்ட, உப்புச் சப்பற்ற உதவாக்கரை விஷயங்களையே பேசிக்கொண்டு போகிறார். சிம்லா மாநாடு என்ன! தொழிற்கட்சியின் வெற்றி என்ன! ஸ்மட்ஸ் துரையின் சித்தாந்தம் என்ன! நியுஜிலந்தின் நோக்கம் என்ன! இப்படிப்பட்ட அகில உலக முக்கயத்துவம் வாய்ந்த பிரச்னைகளை அடியோடு மறந்து போகிறார், அநாவசியமாகச் சடங்கு ஒழிய வேண்டும் சாஸ்திரம் போக வ÷ண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறாரே” என்றுகூறுகின்றனர். அவர்கள், ஏடுபல படித்தவர்கள்; சந்தேகமில்லை. அரசியல் துறையிலே ஆர்வமுள்ளவர்கள், அதிலும் சந்தேகமில்லை, ஆனால், சமுதாய விஷயம் சாமான்யமான தென்றும், அது எக்கேடாக இருப்பினும், அரசயில் கிளர்ச்சி மூலம், விடுதலை கிடைத்து விடும் என்றும், ஓர் தவறான எண்ணம் கொண்டுள்ளனர். ஆனால் தேசிய இயக்கத்தின் ஆரம்பத்திலே, இந்தப்போக்கு இல்லை. சமூகத்திலே உள்ள கேடுகளைக் களைந்தால்தான் நாட்டு விடுதலைக்கு மக்களைத் தயார்ப்படுத்த முடியும் என்று உணர்ந்து, ஒரே பந்தலில், ஒருநாள் அரசயில் மாநாடும் மறுதினம் சமூகசீர்திருத்த மாநாடும் நடத்தி வந்தனர். சமூகசீர்திருதத் மாநாடும் மறுதினம் சமூகசீர்திருத்த மாநாடும் நடத்தி வந்தனர். சமூகசீர்திருத்த முயற்சியைக் கண்டு வைசீக மனப்பான்மையினர் மிரண்டு, அரசியல் இயக்கத்தைக் கைப்பற்றி, உடனடியாகக் கனிக்க வேண்டிய பிரசனை, நாட்டு விடுதலை, அதற்குப் பிறக சமூகப் பிரச்னை” என்ற கொள்கையைப் புகுத்தினர். அதன் பலனாக சமூகசீர்திருத்த மாநாடு நடைபெறுவதே நிறுத்தப்பட்டுவிட்டது. சிலகாலம் வரையிலே, மராட்டிய அறிஞர் ரானடே சமூக சீர்திருத்தக்காரியத்தைக் கவனித்து வந்தார். ஆனால் அந்த அடிப்படை வேலையிலே மக்களுடைய நாட்டம் செல்ல முடியாதபடி, அரசயில் கிளர்ச்சிக்காரர்கள், ஆர்ப்பாட்டமான பிரச்சாரத்தையும் மனக்கிளர்ச்சிதரும் போராட்டங்களையும் துவக்கினர்! பிரிட்டிஷாரை எதிர்ப்பவன், சட்டத்தை மீறுபவன், வரி கொடுக்கமறுப்பவன், சிறையுகத்தயாராக இருப்பவன், அன்னிய ஆடையைக் கொளுத்துபவன், வீரன்! பாரதபுத்ரன்! விடுதலைக் குழைக்கும் தீரன்! என்று கொண்டுடாடப்படவே, கஷ்ட நஷ்டமேற்கும் சித்தமுடையவர்கள், குறிப்பாக வாலிபர்கள்’ அரசியல் கிளர்ச்சிக்கே தம்மை அர்ப்பணம் செய்து விட்டனர்! அந்த ஆர்வத்திலே, ரானடே போன்றவர்களின், அறிவுரை மங்கிவிட்டது! 144-வது பிரிவை மீறுவது வீரம்என்று எண்ணிய வாலிபன் புரோகிதனின் கட்டளையை மீறுவது பாபம் என்று நம்பினான்; நம்பும்படிச் செய்தனர்! அதிகாரியிடம் அஞ்சத்தேவையில்லை, மரியாதையும் காட்ட வேண்டிய அவசியமில்லை, என்று வாலிபருக்குக் கூறப்பட்டது, அதேபோது ஆருடக்காரன், அர்ச்சகன் புராணீகன், ஆகியோர் புகுத்தும் மௌடிகத்தை, ஆராயாமல் ஏற்றுக் கொள்வது; பாரத் வர்ஷத்தின் பண்பு என்று பேசப்பட்டது. அரசியலில் தலைகால் தெரியாமல் தாவிய வீரர்கள், சமுதாய இயலிலேபிற் போக்காளருக்குப் பின்னோடும் பிள்ளைகளாயினர். அரசியல் தலைகால் தெரியாமல் தாவிய வீரர்கள், சமுதாய இயலிலேபிற் போக்காளருக்கப் பின்னோடும் பிள்ளைகளாயினர். அரசியல் கிளர்ச்சியிலே காட்டப்பட்ட அந்த ஆர்வம், செலவிடப் பட்ட நேரம், நினைப்பு, சக்தி, பணம், பிரச்சாரம் அதற்காகச் சிறைபுகுந்தவீரம் தூக்கு மேடை ஏறினதியாகம் இவை இந்நாட்டுக் கேடுகளைக் களைந்து, சமூகத்தைத் தியாகத் தீயிலே காய்ச்சி உருக்கிப் புதுவார்ப்படமாக்குவதிலே மட்டும், செலவிடப்பட்டிருந்தால்! எண்ணும் போதே இன்பக் காட்சிகள் எதிரிலே தோன்றுகின்றன. 144 மீறப்படுகிறது! வரிகொடா இயக்கம் நடை பெறுகிறது! அன்னிய ஆடை தீயிலிடப்படுகிறது! போலீஸ் தடியடிபட்டு வாலிபரின் மண்டை உடைகிறது! என்றெல்லாம், இந்நாட்டு விடுதலைக்கிளர்ச்சியின் விஷயங்கள் வெளியிடப்பட்டபோது, உலகம் ஆச்சரியப்பட்டிருக்க முடியாது! காரணம் என்ன? விடுதலைக்காக, இலட்சக்கணக்கிலே மக்கள் தமது உயிரைக் காணிக்கையாகத் தந்த வரலாறு அனைவருக்கும் தெரியும்! அன்னியன் ஆள்கிறான், ஆகவே அவர்கள் எதிர்ப்புக் காட்டுகிறார்கள் என்று உலகம் கூறிற்று. ஆனால் அதே சமயத்திலே, புரோகிதனின் கட்டளை மீறப்படுகிறது! தட்சணை தாழடியாது என்று கூறப்படுகிறது! பேதழட்டும் பழைய ஏடுகள் கொளுத்தப்படுகின்றன! வைதிகரின் தடி அடி சீர்த்திருத்த வேட்கையுள்ள வாலிபரின் மண்டைøப் பிளந்தது! - என்று உலகுபடிக்கும் நிலை ஏற்பட்டிருந்தால், ஆச்சரியம் ஏற்பட்டிருக்கும். பன்னெடுங்காலமாக வாயில்லாப் பூச்சிகளாக இருந்தனர், இன்று விழித்தனர்! புரேகிதனனி காலடி புரண்டனர், இன்று புதுமையில் ஆர்வம் கொண்டனர். வீணரை விரட்டு கின்றனர்! இப்படி விழித்தெழிந்து, சொந்த நாட்டினரிலேயே வெறும் சோற்றுத் துருத்திகளாய், சொல்லும் புவீசுவோராய், சுறண்டிப் பிழைப்பவராய், சூதின் சொரூபங்களாய் இருந்து வந்தவர்களையே விரட்டி அடித்து, கூண்டை உடைத்துக் கொண்டு வெளிக்கிளம்பும் புலியாயினர் அம்மக்கள்! இனி ஆங்கில ஆட்சி அங்கு நிலைக்காது வீறுகொண்டெழுந்துவிட்ட மக்களை இனிக்கட்டி ஆளமுடியாது! அணைஉடைந்துவிட்டது, வெள்ளத்தைத் தடுக்கமுடியாது, என்று உலகு கூறியிருக்கும். அந்த நிலைமை வரவொட்டாது தடுத்துவிட்டனர், இந்நாட்டிலே நகத்தில் அழுக்கேறாது, விதைக்காது அறுத்து, வீணராய்க் கொழுத்து வாழும் வர்க்கத்தார். விவேகிகள் சிலர் - ரானடே போன்றார். விடுத்த எச்சிரிக்கையையும் ஏற்றாரில்லை. “அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லை!!’ என்றுபாடினர், ஆனால் குறுக்கே ஒடிவரும் பூனையைக் கண்டு குலை நடுங்கிச் சகுணம் சரியில்லை என்று கூறும் குறுகிய மனம் போக்கை மாற்றிக் கொண்டாரில்லை அதையைச் செப்பனிட வில்லை பிரயாணத்தைத்துவக்கிவிட்டனர்! கலத்திலே உள்ள கலனைச்சரிப்படுத்தவில்லை, பாய்மரத்தை விரித்துவிட்டனர்! படி அமைக்காது மாடிக்குத்தாவினர்! மண அறை சிந்தாரித்தனர், முகூர்த்தவேளையின் போதுதான், பெண் இல்லை என்று தெரிந்தனர்!

(திராவிடநாடு 26-8-1945)