அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


‘காந்தியார் சாந்தியடைய!’

ஆறுமாதம் கடுங்காவல்- அபராதம் ரூபாய் ஐந்நூறு!

மூன்றுமாதம் கடுங்காவல்-அபராதம் ரூபாய் ஐந்நூறு!

அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதம் சிறைவாசம்!

‘காந்தியார் சாந்தியடைய’ என்னும் நூலைத் தீட்டிய விருதுநகர் தோழர் ஏ.வி.பி. ஆசைத் தம்பிக்கும் மேற்படி நூலையும், ‘அழியட்டுமே திராவிடம்’ என்னும் நூலையும் வெளியிட்ட துறையூர் தோழர்கள் தங்கவேல், கலியபெருமாள் ஆகியோருக்கும் முசிரி சப்-மாஜிஸ்டிரேட் அளித்த தீர்ப்பு இது.

இத்தீர்ப்பை எதிர்த்து திருச்சி செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் தொடுக்க கழகத்தின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.

தீர்ப்பின் விபரம் ‘தந்தி’ மூலம் சென்னையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை நிலையத்துக்குக் கிடைத்ததும் பொதுச் செயலாளர் சி.என்.அண்ணாதுரை மற்றத் தோழர்களுடன் கலந்து, அமைப்புக்குழுச் செயலாளர் தோழர் என“.வி.நடராசனை, அப்பீல் செய்வது சம்பந்தமாகவும், தண்டனையடைந்த தோழர்களை ஜாமீனில் விடுதலை செய்விக்கவுமான காரியங்களைக் கவனித்து வருமாறு, திருச்சிக்கு அனுப்பி வைத்தார்.

ஜாமீனில் விடுதலையானதும், மேற்கொண்டு வழக்கை நடத்துவது சம்பந்தமாக விருதுநகர் கிளை தி.மு.கழகத்தினரைக் கலந்துபேசி ஆவன செய்து வருமாறும், பொதுச் செயலாளர், அமைப்புக்குழுச் செயலாளருக்கு அனுமதி அளித்தார்.

அதையொட்டி உடனடியாகத் தோழர் என்.வி.என். 20 ந் தேதி யன்று திருச்சி சென்றார். திருச்சி தி.மு.க. தோழர்களான அன்பில் தர்மலிங்கம், சாம்பு, வானமாமலை, துறையூர் அழகமுத்து ஆகியோர் ஜாமீன் விடுதலைக்கான ஏற்பாடுகளை செய்துவருவதை அறிந்து, தோழர் என்.வி.என். உடன் இருந்து ஒத்துழைத்தார்.

21-ந் தேதி மாலை, தண்டனையடைந்த தோழர்களை ஜாமீனில் விடுமாறு திருச்சி செஷன்ஸ் நீதிபதி உத்தரவு பிறப்பித்ததோடு, ஆகஸ்ட்டு 4 ந் தேதியன்று அப்பீல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படுமொன்றும் அறிவித்தார்.

பின்னர், திருச்சி மத்திய சிறைக்குச் சென்று தோழர்கள் ஆசைத்தம்பி, தங்கவேல், கலியபெருமாள் ஆகியோரைத் திருச்சி, துறையூர் கழக நண்பர்களும், தோழர் என்.வி.என்னும் சந்தித்து, பொதுச்செயலாளர் தந்த செய்திகளைக் கூறினர்.

அன்று இரவே தோழர் நடராசன், விருது நகர் புறப்பட்டுச் சென்று மறுநாள் விருதை திராரிட முன்னேற்றக் கழகத் தோழர்களைச் சந்தித்து விபரம் கூறியதன் பேரில், அன்று மாலை 4 மணிக்கு கிளைக் கழக நிர்வாகக் கமிட்டிக் கூட்டம், தோழர் என்.வி.என் தலைமையில் நடைபெற்றது.

அதுபோது, பொதுச் செயலாளர் அறிவிப்பையும், இது போன்ற வழக்குகள் குறித்த தலைமைச் செயற்குழு செய்திருக்கும் தீர்மானத்தையும் எடுத்துக்காட்டி, கிளைக் கழகத்தினர், வழக்குக்குறித்து, ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

இத்தகவலை, விருதை தி.மு.கழகத்தினர், மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டதோடு வழக்கை நடத்துவதற்கான நிதியைத் திரட்டுவதற்காக ஐந்து பேர் கொண்ட நிதி வசூல் கமிட்டியொன்றையும் நிறுவினர். மேற்படி கமிட்டிக்குப் பொருளாளராக இருந்து பணியாற்றத் தோழர் அய்யாச்சாமியும், செயலாளராக இருந்த ஆவன செய்யத் தோழர் இளஞ்செழியனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேற்படி வழக்கு நிதிக்கெனப் பொதுச்செயலாளர் சி.என்.அண்ணாதுரை அளித்த ரூபாய் 50 முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர், ஆசைத்தம்பியின் தந்தையாரையும் மற்ற முக்கிய தோழர்களையும் சந்தித்துவிட்டு, தகவலைப் பொதுச் செயலாளரிடம் அறிவிப்பதற்காகத் தோழர் என்.வி.என். நேராகச் சென்னை திரும்பினார்.

அப்பீல் வழக்குச் சம்பந்தமாக உடனிருந்து கவனித்துக் கொள்வதாக திருச்சி மாவட்டத் தோழர்களும், மேற்படி மாவட்ட தி.மு.க.துணைச் செயலாளர் தோழர். பராங்குசமும் அறிவித்துள்ளனர்.

23-ந் ஞாயிறு விடுமுறையாதலால் திங்களன்று தோழர் ஆசைத்தம்பியும், மற்ற இருதோழர்களும் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

உரிமைப் போரின் துவக்க அத்தியாயம் ஆரம்பமாகியிருக்கிறது. கஷ்ட நஷ்டங்களைத் துச்சமென மதிக்கும் திறம் படைத்த காளைகள் தான் நாம்! எனினும் ‘நீதி’கோரி நிற்கிறோம்! அதற்கான நடவடிக்கைகைச் செய்வதெனத் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தலைமைக்காரியாலயத்தின் விருப்பையறிந்து மன மகிழ்வுடன் பொறுப்பையேற்றுக்கொண்ட விருதைக் கிளைக் கழகத்தினர் ஆர்வத்தைப் பாராட்டுகிறோம். வெற்றி பெறுவதற்கான, ஏற்பாடுகளை விரைவில் முடிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

காந்தியாரின் பாதையில் நடப்பதாகக் கர்ஜனையெழுப்பும் கனவான்கள் ஆட்சியில் நம்மீது வீசப்பட்டிருக்கும் அம்பு. இது சாதாரணமானதல்ல கூட்டைத் திறந்துவிட்டு ‘சிங்கமே, வெளியில் வா!’ என்று வேண்டுமென்றே, வீண்வம்புக் கிளப்பவது. ஆகவே, நாம், ‘நீதி’யின் முன் செல்கிறோம் நேர்மையைத் துணையாகக் கொண்டு.

உரிமைப் போரின் முதல் அத்தியாயம் ஆரம்பமாகிறது-அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, இயன்ற அளவு, பொருளுதவி செய்யுமாறு-பொதுவாக வசதி படைத்தோரையும், குறிப்பாக விருது நகர்த் தோழர்களையும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

(திராவிடநாடு-30.7.50)