அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கோவா கிளர்ச்சி

சிங்கம், பங்கப்பட்ட நேரத்திலே செந்நாய் ஒன்று எளையிடுவது போன்றதோர் சம்பவம் நடைபெறுகிறது. பலம் பொருந்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்யம் பணிந்துவரும் இந்த நாளிலே, சின்னஞ்சிறு, போர்ச்சுக்கல், தன் அதிகாரத்தை இங்கு நடத்திக்கொண்டே இருக்க முடியும் என்று எண்ணுகிறது. அடக்குமுறை மூலம், தன் இதிபத்தியத்தை நிலைநாட்ட முடியும் என்று கனவு காண்கிறது. அதன் அடக்குமுறை, ஜ÷ரவேகத்தில் துவங்கவிட்டது, அங்குள்ள அதிகாரிகள் வெறி போல் பேசுகின்றனர்.

இந்தப் போர்ச்சுகீசியர் இப்போது நாட்டு விடுதலைக்காகப், பேச்சுச் சுதந்திரத்துக்காப் போராடிய தோழர் குன்ஹாவைத் தூக்கி கொண்டு போகின்றனர். கடல் கடந்து, நெடுந்தூரத்திலே உள்ள இப்பிரிக்காவிலே சிறை வைக்க - எட்டு ஆண்டுத் தண்டனை, குன்ஹாவுக்கு ஏன்? பொதுக்கூட்டத்தில் பேசிய குற்றத்துக்காக. இந்தப்போக்கு போர்ச்சுகல் சர்க்காரின் மட்டரகமான அறிவைத்தான் அகில உலகுக்கும் எடுத்துக் காட்டுகிறது.

கடல் ஓநாய்களின் இரத்த வெறிக்குத் தென் அமெரிக்கா முதற்கொண்ட சிங்களத்தீவு வரையிலே பல்வேறு நாடுகள் பலியாயின. இவர்கள் பணம் திரட்டிய பிறகு பெரிய மனிதர் களாயினர்! இந்தப் பெரிய மனிதர்கள் பிறகு தத்தமது நாடுகளிலே, வியாபாரக் கோமான்கள் இக்கப்பட்டு, ஆங்காங்கு இருந்த அரசர்களுக்கு ஆசைகாட்டி, பல கம்பெனிகளை உண்டாக்கச் செய்து அவைகளை, இந்திய உபகண்டத்தின் மீது ஏவினர். அங்ஙனம் இங்கு புகுந்த கூட்டத்திலே, ஒன்று இந்த போர்சசுகீசியர் பூர்வாஸ்ரமம் இப்படி! இப்போது பேசுவதோ சர்வதேச நீதி நியதிபற்றி!

போர்ச்சுகலை இரண்டாம் ஜான் என்ற மன்னன் ஆண்டு கொண்டிருந்த போது, வாஸ்கோடிகாமா என்பவனைக் கடலிலே புதுமார்க்கங்களும், புதிய தேசங்களும் உள்ளனவா என்று பார்த்துவர அனுப்பினார். வாஸ்கோடகாமா, 1498ல் இப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு, கீழ்நாடுகளுக்கு வரக்கூடிய கடல் மார்க்த்தைக் கண்டுபிடித்தான். இப்பிரிக்கத் தென்முனைக்கு அவனிட்ட பெயர், நம்பிக்கை முனை என்பதாகும். அவன் கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்தான். பிறகு, அதுவே சுரண்டிப் பிழைக்கும் மார்க்கமாயிற்று பல்வேறு வெள்ளை இனத்தவருக்கு.

காமா காலத்தில், முதன் முதலாகப் போர்ச்சுகீசியர், கள்ளிக் கோட்டையில் காலடி வைத்தனர். கைலாகு கொடுத்து வரவேற்றார் ஜாமொரின்! மாப்பிள்ளைமார் எதிர்த்தனர். படுகொலை செய்தனர் (முஸ்லீம்) மாப்பிள்ளை மார்களை போர்ச்சுகீசியர்.

ஆரம்ப முதலே, போர்ச்சுகீசியரின் திட்டம், முஸ்லீம் செல்வாக்கை அழிப்பதாகவே இருந்தது. ஏனெனில் கடலிலும், வியாபாரத்திலும், ஏகிப்து முதல் கள்ளிக்கோட்டை வரையில் முஸ்லீம்களுக்கே அதுபோது ஆதிக்கம். ஒரோப்பாவிலேயே முஸ்லீம்களின் செல்வாக்கு நிலைத்துவிடக்கூடுமோ என்று வெள்ளை வர்க்கத்தவர் பயந்து கொண்டிருந்த காலம் அது. அந்தச் சமயத்திலே, கள்ளிக்கோட்டையில் காலடி வைத்துனர் போர்ச்சுகீசியர். முதல் வேலை முஸ்லீம்களை அழிப்பதாக இருந்தது.

1502ல் மீண்டும் வந்தான் வாஸ்கோடகாமா, கொச்சி மன்னனுடன் குலவினான். கொச்சி, கண்ணனூர் ஆகிய இடங்களிலே வியாபாரத் தலங்களை அமைத்தான். அன்றுதொட்டு இன்று வரை இருந்து வருவதும் இந்த உபகண்டத்தை உருக்குலைத்துமான, பிளவும் மாச்சரியமும் அன்று போர்ச்சுகீசியருக்கு உதவியாக இருந்தன.

கொச்சி ராஜாவுக்கும் ஜாமோரியனுக்கும் சச்சரவு, ஜாமோரின் முதலிலே போர்ச்சுகீசியரை வரவேற்ற மகானுபாவன், ஜாமோரின் என்ற வார்த்தையைக் கேட்டதும், யாரோ வெள்ளை வர்க்கம் என்று எண்ணம் உண்டாகும். ஆனால் உண்மை அதுவல்ல. ஜாமோரின் ஆரிய ஜெமின்தார். இவருடைய துணைதான் முதலில் போர்ச்சு கீசியருக்கு. அதாவது, அன்னியன் அடி எடுத்துவைத்த அன்றே, அவனுக்குக் கைலாகு கொடுத்து அழைத்தவர் ஓர் ஆரியர்! இரண்டாம் முறையோ கொச்சி மன்னனுக்கும் ஜாமோரினுக்கும் சச்சரவு. இதனைப் போர்ச்சுகீசியர் தமக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்டனர். கொச்சி பக்கம் சேர்ந்து கொண்டு ஜாமோரினைப் போர்ச்சு கீசியர் தோற்கடித்தனர். அத்தோடு நிற்கவில்லை, அந்தப் பகுதியிலே இருந்த முஸ்லீம்களை முறியடித்தனர். மலையாளப் பகுதியிலே முஸ்லீம்களுக்கு இருந்த மகத்தான பலத்தைப் போர்ச்சுகீசியர் அழித்தனர்.

பிறகு, போர்ச்சுகீசியர், வியாபாரக் கோட்டைகளை, பம்பாய், கல்கத்தா பகுதிகளிலும் அமைத்துக் கொண்டு அட்டகாசம் செய்தனர். எந்தக் குட்டி ராஜாக்கள் ஒருவருக்கொருவர் முட்டிக்கொண்டாலும்ட, போர்ச்சுகீசியர் அதிலே நுழைவர் பிளவை அதிகப்படுத்த.

இல்புகர்க் என்ற போர்ச்சுகீசியன் காலத்திலே, இந்தச் செல்வாக்கு உச்சநிலை அடைந்து முஸ்லீம்களின் வியாபார ஆதிக்கமே அடியோடு ஒழிந்துவிட்டது. அந்தக் காலத்திலேதான் 1510ல், பீஜப்பூர் சுல்தானிடமிருந்து, கோவாவைப் போர்ச்சுகீசியர் கைப்பற்றினர். அந்தக் கோவாவில் தான். இன்று குன்ஹா பேசக்கூடாது என்று தடை உத்தரவு, அதை மீறினதற்காகத்தான், எட்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை, கண்காணாத் தீவில் இந்த வேதனையுடன் இழைத்திருக்கிறது ஒரு வேடிக்கை. இன்று, போர்ச்சுகீசியர் வசமுள்ள இந்திய பூமியை விடுவிக்கப் போர் தொடுத்ததற்காகத் தண்டனை பெற்ற வீரனின் பெயர் குன்ஹா. 1529 முதல் 1538 வரை போர்ச்சுகீசியர் வசமிருந்த இந்திய பூமிக்கு வைசிராயாக இருந்தவன் பெயரும். குன்ஹா! இவன் காலத்தில் டய்யூ, கோட்டையாக்கப்பட்டது.

போர்ச்சுகீசியர்களின் போக்கு புனிதமானது என்றும், மக்களû அவர்கள் மக்களாக நடத்துபவர்களென்றும், சாதி பேதத்தை ஒழித்தனர் என்றும், இப்போதுள்ள போர்ச்சுகல் அதிகாரி அறிக்கை விடுகிறார். ஆரம்ப காலமுதல் போர்ச்சுகீசியரின் போக்கு, நாகரிகத்தையோ நற்கொள்கையையோ அடிப்படையாகக் கொண்டதல்ல.

1. நாடு பிடிக்கும் ஆசை
2. உள்நாட்டுக் குழப்பத்தைத் தூண்டினது
3. மதமாற்றத்தை வலுக்கட்டாயமாகச் செய்தது.
4. முஸ்லீம்களைக் கொடுமைப்படுத்தியது.
5. ஆட்சிமுறையிலே ஆநாகரிகமான கொடுமைகள் செய்தது எனும், குற்றச் சாட்டுகளிலிருந்து போர்ச்சுகீசியர் தப்ப முடியாது வரலாறு இதனை நன்கு பொறித்திருக்கிறது.

போர்ச்சுகலுக்கும், பிற வெள்ளை இனத்தவருக்கும், குறிப்பாக ஆங்கிலருக்கும் ஏற்பட்ட போர்களின் காரணத்தால் போர்ச்சுகலின் பேராசைத் திட்டம் தகர்ந்து போயிற்று. மிக வேகமாகப் பரவிய போர்ச்சுகீசிய ஏகாதிபத்தியம் தேய்ந்து. இன்று கோவா, டய்யூ டாமன் என்ற மூன்று துண்டுகளை மட்டும் கவ்விக்கொண்டிக்கிறது இந்த ஏகாதிபத்தியம்! இந்த மூன்று இடங்களும் சேர்ந்து 1540-சதுரமைல் அளவுதான், மக்களின் எண்ணிக்கை 5,80,000 என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

இவை இந்திய உபகண்டத்துப் பகுதிகள் கடலோரப்பகுதிகள், துறைமுகங்கள், இவை, இந்தப் பரங்கியரிடம் இருக்க விடமாட்டோம் என்று வீரமுழக்கம் செய்கிறார்கள் விடுதலை விரும்பிகள். இவர்களை அடக்கத்தான் போர்க்கப்பல்களை அனுப்புகிறது போர்ச்சுக்கல்! எத்தனை கப்பல்களை அனுப்பும்! எத்தனை நாள்களுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கமுடியும்!

(திராவிடநாடு 18.8.46)