அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கோபுரத்தில்-குப்பை மேடுகள்!

8.10.50 அன்று சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கழகச் சார்பில் சிறை சென்று நீங்கிய தி.மு.க பொதுச்செயலாளர் அண்ணாதுரைக்கு ஒரு மகத்தான வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. நுங்கம்பாக்கமே கண்டிராத அளவு பிரம்மாண்டமான மக்கள் கூட்டம் கூடியிருந்தது. மேற்படி மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு நுங்கம்பாக்கம் “நிலவு” அச்சக உரிமையாளர் பூ. கணேசன் ஆ.அ (ஏணிணண்) தலைமை தாங்கினார்.

‘ஆரிய மாயை’ குறித்தும், அரசியலார் போக்கு குறித்தும் திராவிட மாணவ முன்னேற்றக் கழக அமைப்பாளரும் சட்டக் கல்லூரி மாணவருமான தோழர் கே.ஏ.மதியகன்ஆ.அ வீரமுழக்கமிட்டார். ஒலி பெருக்கிக் கோளாறு தொல்லை கொடுத்தும் அவரது குரலை, கூடியிருந்த மக்கள் அனைவரும் கேட்க முடிந்தது.

பிறகு சி.என்.ஏ.பேச எழுந்ததும் பல கழகங்கள் சார்பிலும், தனிப்பட்டோர் மூலமும் ஏராளமான மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. வரவேற்பும் படித்தளிக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்து சி.என்.ஏ. நாட்டின் பல பிரச்சனைகள் குறித்தும் விளக்கினார்.

மேற்படி மாபெரும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் சி.என்.அண்ணாதுரை பேசியதன், முக்கிய அம்சங்கள் “ஆரிய மாயையை எடுத்துக்காட்டினேன் என்பதற்காக, என் மீது பாய்ந்திருக்கின்றனர் சர்க்கார்! ஆரிய மாயை இலேசுப்பட்டதல்ல. நமது வாழ்விலேயே கலந்து நமது வாழ்வையே சின்னாபின்னமாக்குகிறது. தொட்டிலிலே துவங்கி சுடுகாடு சென்ற பின்னரும்கூட, அது நம்மை விடுவதில்லை. அதன் விளைவாக சமுதாயத்தில் ஏற்பட்ட சாதி பேதங்கள், உயர்ந்தவன் தாழ்ந்தவன் வேற்றுமை, ஏராளம். அதன் காரணமாகவே இந்நாட்டில் நாலரைக் கோடி மக்களிருந்தும் அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மூடநம்பிக்கையும், பழைமைப்பித்தும் நீங்கவில்லை இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலையிலிருக்கிறது நாடு!

பிற நாடுகளிலெல்லாம் நாகரீக ஆராய்ச்சிகள் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நாம் எதைச் செய்துள்ளோம் இதுவரை? அரிகேன் விளக்கு நாம் கண்டுபிடித்தல்ல. ஆனால் நம்மிடம் ஆகமம் இருந்தபடியே இருக்கிறது! சாஸ்திரம் பத்திரமாக இருக்கிறது. சாதனைக் கல்லைக்கூட தேடி எடுக்கவில்லை! அப்போதிருந்த குத்து விளக்கு இப்போதும் இருக்கிறது. வண்டி வகையில் இரட்டை மாட்டு வண்டியைத் தவிர வேறெதிலும் முன்னேறவில்லை!

நாமோ பெரிய நாடு ஆனால் நம்மைவிடச் சிறிய நாடுகள், நேற்று முளைத்த நாடுகள் குறைவான தெய்வங்களிருக்கும் நாடுகள், கும்பாபிஷேகம் செய்யாத நாடுகள், அஷ்டோத்ரம் அறியாத நாடுகள், ஆறுமுகத்திலே அப்பனைக் காணாத நாடுகள் எல்லாம் முன்னேறியிருக்கின்றன. இது ஏன்? எப்படி? இதை எடுத்துக் காட்டினால் தவறா? அறிவு வளர முட்டுக்கட்டையாகயிருப்பதை எடுத்துக்காட்டுவது தவறா?

பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதவர் பிரச்சினை பற்றி பேசுகிறோம் என்றால் காரணம் வேற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதால் அல்ல துவேஷம் எழுப்பப்பட வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல இப்போது அந்தப் பிரிவுகளால் நீடிக்கும் துவேஷம் ஒழியவேண்டும். நாடு ஜாதிகளின் கூடாரமாக இருக்கக்கூடாது, மனிதர்கள் வாழும் இடம் இருக்கவேண்டும் என்ற ஆசையால்தான்.
பகல் 12 மணி, பாதசாரி ஒருவன் நடந்து போய்க்கொண்டிருக்கின்றான். தார்ரோடு, வெய்யில் கொடுமை, சகிக்க முடியவில்லை. இந்நேரத்தில் வேகமாக ஒரு மோட்டார் அவனைத் தாண்டுகிறது. அதிலிருக்கும் கனவான் வேடிக்கையாக, வாயிலிருக்கும் வெற்றியைப் பாக்கு எச்சலைத்துப்புகிறார். அது ஏழையின் துணியில் பட்டால் அவனுக்கு எப்படியிருக்கும்? பின்னால் திரும்பிப் பார்ப்பான் கார் தன்னைவிட்டுத் தாண்டிச் சென்று விட்டது என்றாலும், திரும்பிப் பார்ப்பான். இருவரும் ஒருவரை யொருவர் முன்பின் அறிய மாட்டார்கள். இருவருக்கும் இதற்குமுன் குரோதமில்லை-விரோதமும் கிடையாது.

உயர்ந்த உல்லாசமான நிலையில் சென்று கொண்டிருப்பவன் உமிழ் நீரைச் சிந்துகிறான். அது உழைப்பாளியின் மேல்படுகிறது. அவனது கிழிந“த துணிகளின் மீது விழுகிறது. நெருப்புப் பட்டது போல. ஏழை துடிக்கிறான் இந்தக் கேவலத்தால் கோழையும் எரிமலையாகிறான்! தன் வாயில் வந்தபடியெல்லாம் ஏசுகிறான் ஆத்திரத்தால் கொதிக்கிறான்!

இதற்கு துவேஷம் என்றா சொல்ல முடியும்? உல்லாசமாக வாழ்பவன், உழைத்து அலுப்பவனைக் கேவலப்படுத்தினால், மனம் புண்பட்டு அவன் துடிக்கிறான்! இதற்கா, துவேஷம், என்று பெயர்? வாழ்வில் வேதனைப் பட்டவன், தன் வாழ்க்கை வேதனை மயமான காரணங்களை எடுத்துச் சொல்வதா துவேஷம்?

எங்கள் இலட்சியம் கொசுவும் புழுவும் நெளிந்து வளையும் சாக்கடையைத் தூய்மைப்படுத்த வேண்டுமென்பதுதான் இதை ஏன் வேதனையாகக் கருதவேண்டும் சர்க்கார்?

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற தத்துவார்த்தைத் தகர்த்துத் துவேஷத்தை ஒழிப்பதுதான் எமது பணி. துவேஷம் ஒழியவேண்டுமென்பதே எம் நோக்கம்.

அதற்கான தொண்டை சட்டம் அமைதி ஆகியவைகளுக்குட் பட்ட வகையில் செய்து வருகிறோம். சட்டம் சமாதானம் ஆகியவைகளின் அருமை இந்த ‘ஆகஸ்டு தியாகி’ களை விட எங்களுக்கு அதிகமாகத் தெரியும்! ஆகவே, தான் அதற்கு உட்பட்ட வகையில் எமது இலட்சியங்களைப் பரப்பிவருகிறோம் பரப்பியும் வருவோம்.

இந்த சர்க்காருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன் அமைதிக்கும் சட்டத்துக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் நாங்கள் என்றும் நடந்து கொண்டதில்லை. இனியும் நடந்துகொள்ள மாட்டோம் எண்ணவும் மாட்டோம் உன்னிடம் நாணயம் இருக்கிற வரையில்.

நமது கழகம் வகுப்புகளை ஒழிக்கும் கழகம், மனிதர்கள் நாட்டில் நடமாடவேண்டும் என்ற ஆசை கொண்டதே நமது கழகம்.

நாம், ஆரியம் என்று குறிப்பிடுவது தனிப்பட்ட நபர்களையல்ல நாம்.

ஆரியம் என்று சொல்வது ஜாதிபேதங்களை!
ஆரியம் என்று குறிப்பிடுவது, சனாதான சம்பிரதாயத்தை!
ஆரியம் என்று நாம் பேசுவது மனிதனை, மனிதன் ஏய்க்கும் தன்மையை!
ஆரியம் என்று நாம் அழைப்பது உயர்வு தாழ்வு கற்பிக்கும் தத்துவத்தை!
ஆரியம் என்று நாம் விளக்குவது ‘அக்கிரகாரம் என்றும் சேரி என்றும் தனித்தனி பிரிவுகள், வளர்க்கப் படுவதை!
மேனி பளபளப்பு ஒரு இடத்திலும் கருத்து சுருண்ட உடல் இன்னொரு இடத்திலும் இருப்பதை!
நாட்டுக்கு, கேடுசெய்து முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையிடும் மூடப்போக்கை!

அதைத்தவிர!

ஆரியம் என்று டி.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரியை நாம் காட்டுகிறோமா? அல்லாடியை குறிப்பிட்டுச் சொல்கிறோமா? சீனிவாச அய்யங்காரை அழைக்கிறோமா?

நாம் சொன்னதில்லை. தனிப்பட்டவர்கள் மீது நாம் நமது ஆத்திரத்தைக் காட்டியதில்லை காட்டக்கூடாது. அதனால் பலன் கிடையாது என்பதே நமது கருத்து இதை இந்த சர்க்கார், உணரவேண்டும்!

நான் என்ன எழுதினேன் ‘ஆரியமாயை’யில்! பார்ப்பனீயம் பேராசை கொண்டது என்று குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதைவிட மோசமாகப் பாரதியார் கூறியிருக்கிறார்.

“பேராசைக் காரனடா-பார்ப்பான்!
பெரிய துரையென்னிலுடல் வேர்ப்பான்!”

இப்படிச் சொல்கிறார், தேசிய கவி பாரதியார். அவருக்கு மண்டபம் கட்டுகிறார்கள். ஏன், அவற்றைக் குற்றம் சாட்டக்கூடாது? நானென்ன அவரைவிட அதிகமாகவா எழுதிவிட்டேன்!

தைரியம், திறமை, அறிவிலே நம்பிக்கையிருக்குமானால் நான் ‘ஆரிய மாயை’ என்று தீட்டினால், ‘ஆரிய மகிமை’ என்று தீட்டுவதுதானே! கல்கியாரில்லையா, விகடரை விரும்பியழைத்தால் வரமாட்டாரா, தினமணி ஆசிரியர் முடியாதென்பாரா, மித்திரன் ஆசிரியர் வரமாட்டேன் என்று கூறிவிடுவாரா?

நான்தான் என்ன புத்தர்போல் போதி மரத்தடியில் ஞானோதயம் பெற்றவனா? ஆண்டவன் அந்த ராத்திரியில் வந்து அருள் கூர்ந்ததால் எழுதக் கற்றுக்கொண்டவனா? ஆலவாயப்பர் வந்து எனக்கு அருள்கூர்ந்ததால் ‘ஆரிய மாயை தீட்டினேனா? அல்லது ஞானசம்பந்தனுக்கு, அம்மையின் ஞானப்பால் கிடைத்ததாமே அதுபோலப் பெற்று இந்த நூல் எழுதினேனா?

இல்லையே! அப்படியிருக்கும் போது ஏன் இவர்கள், நான் எழுதினால் மறுப்பேடு தீட்டக்கூடாது? வக்கில்லையா, வழியில்லையா அல்லது வீரமில்லையா?

உள்ளத்தில் நல்லது என்று பட்டதை உரைக்க உரிமை இருக்க வேண்டும். இந்த உரிமை ஜனநாயக நாடுகளிலெல்லாம் அளிக்கப்படுவதாகும். இந்த ஜனநாயகம் பெறவேண்டுமென் பதற்குத்தான் பகவத் சிங் தூக்கில் தொங்கியது! திருப்பூர் குமரன் தெருவை இரத்தத்தால் குளிப்பாட்டி விட்டு மாண்டது! வ.உ.சிதம்பரம் கப்பலோட்டியது; செக்கிழுத்தது! அந்த உரிமை, இன்று மறுக்கப்படுகிறது. குப்பை மேடுகள் கோபுரத்திலேறி விட்டகாரணத்தால்!

விசுவநாததாஸ் என்று ஒருவர் இருந்தார். அவர் ஒரு பாட்டுப் பாடினார் அதை, வெள்ளையரசாங்கம், தடை செய்தது.

“கொக்கு பறக்குதடி பாப்பா! வெள்ளை
கொக்கு பறக்குதடி பாப்பா!”

என்பதுதான், அவர் பாடிய பாடலின் வரிகள். அதைத் தடுத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ‘வெள்ளை’ என்பது வெள்ளையரைக் குறிப்பிடுவதாக அப்போது தேசீயப் பத்திரிகைகள் யாவும் சிம்மநாதம் செய்தன! சத்தியமூர்த்தியார் நாள் தோறும் கர்ஜித்தார்! “பாட்டுக்குப் பயப்படும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எத்தனை நாளைக்கு நீடிக்கும்?” என்று ஒவ்வொரு பிரசங்கியும் மேடையிலே கர்ஜித்தனர். அதைத்திருப்பி, இன்று நான் அவர்களைக் கேட்கிறேன். கேட்கும் சந்தர்ப்பம் ஏற்படுமென நான் அந்தக் காலத்தில் எண்ணியத்தில்லை. ஆனால் இந்த சர்க்கார் என்னை அப்படி ஆக்கியயிருக்கிறது!

‘காங்கிரஸ் அரசாங்கமே! சாதாரண ‘ஆரியமாயை நூலுக்கே நீ பயந்தால் உன் ஆட்சி எத்தனை நாளைக்கு நீடிக்க முடியும்? நாடகத்தின் மீது சர்வாதிகாரப் பாணங்களைப் பிரயோகிக்கிறாய்? நடிகவேள் ராதா, பணபலமில்லாது, குறைந்த வசதிகளை வைத்துக்கொண்டு நாடமாடி வருபவர். அவருக்குத் தடை! அவர் செய்யும் அறிவுப் பணிக்குத் தடை! ஏனிந்தப் போக்கு? ராதா ‘போர்வாள்’ நடத்தினால் நீ ஆடுவதுதானே ‘வாட்போர்’ என்று மற்றொரு நாடகம்?

நாங்கள் மக்கள் மனதைக் கெடுத்துவிடுகிறோமென்றால் அக்கெட்ட எண்ணத்தை நிரூபித்துக் காட்டுவதுதானே மக்களுக்கு?

நாங்கள் சொல்வது உண்மையாகயிருக்கிற காரணத்தால் உன்னால் மறுக்க முடியவில்லை. மறைக்கவும் முடியவில்லை எங்கள் மீது பாய்கிறாய்?

இப்போது ஆங்காங்கு பல விடங்களில் 144 தடையுத்திரவுகள் நமது கழக நடவடிக்கைகளுக்குப் போடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன. தஞ்சாவூரில் ‘திக்கே திரும்பாதீர்’ என்று கூறப்பட்டதாம், அதிராம் பட்டினத்தில் ‘அடக்குவோம்’ என்று பேசினராம். குன்னத்தூரில் மிரட்டினாராம் அதிகாரிகள்.

அதிகாரிகள் மீது நமக்குக்கோபமில்லை! அவர்கள் ஆட்டுகிற படி ஆடுகிறவர்கள் தானே! ஆனால், 144 போடப்படுவதற்குக் காரணம் ஆங்காங்குள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், பிரமுகர்களும் தான் என்று தெரியவருகிறது.

இவ்வளவு கேவலமாந நிலைக்கு காங்கிரஸ் வந்துவிட்டதைக் காணப்பரிதாபப்படுகிறேன்.

எவ்வளவு கொடுமைகளைச் செய்தாலுஞ் சரி இந்த ஆட்சியாளர் அதைத் தாங்கிக் கொள்வது என்ற முடிவுக்கே வந்துள்ளோம். அதற்காகப் பயந்து எங்கள் பணியைவிட்டு ஓடிவிடும் பரம்பரையைச் சேர்ந்தவர்களல்ல நாங்கள் எனவே, சர்க்காரின் அடக்குமுறைகளை எதிர்த்து அறப்போர் நடத்த, நமது கழகத்தவரை அனுமதித்து விட்டேன்.

144 எங்காவது இனி நமது முன்னேற்றக் கழக நடவடிக்கைகளுக்கு போடப்படுமானால், மீறத்தான் போகிறார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாகிவிட்டது. பூனை புலியாக மாறவேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது.

அறைக்குள்ளே இருக்கிறது பூனை கதவுகள் தாளிடப்பட்டு விட்டன. வெளியேறுவதற்குச் சிறிது துவாரமும் இல்லை திகைக்கிறது. எப்படி வெளியேறுவது என்று யோகிக்கிறது. இந்த நேரத்தில் மென்மேலும் பூனை மீது தாக்கினால் என்ன நேரும் பூனை, கோபத்தோடு எதிரே நிற்பவன் மீது பாய்ந்து கண்ணையோ காதையோ பிராண்டி, தனது ஆத்திரத்தைக் காட்டத்தான் செய்யும். கட்டுப்பட்டும், கஷ்டப்படுத்தப்படும் பூனைக்கு கொலை பாதக எண்ணம் எழும்பத்தான் செய்யும். அந்தச் சூழ்நிலையை இந்த ஆளவந்தார் ஏற்படுத்தத் துடிக்கிறார்கள். பூனை எப்போதும் பூனையாகவேயிருக்காது-தொல்லைமேல் தொல்லை தரப்பட்டுக் கொண்டேயிருந்தால்!

நாங்கள் சட்டவரம்புக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சட்டத்தின் மேன்மை எங்களுக்குத் தெரியும். அமைதியின் அவசியத்தை நாங்கள் ஆளவந்தாரை விட நன்றாக அறிவோம். அமைதியும் ஒழுங்குமே உருவான எம்மை, ஆளவந்தாரே! வெளியே துரத்தாதீர்! ஆத்திரமுண்டாகும்படித் தூண்டாதீர்!

நாங்கள் பதவி பட்டம் விரும்புபவர்களல்ல. மற்ற அரசியல் கட்சிகள் செல்லும் பாதை அல்ல எம்முடையது. இதை நன்றாக இன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தி நல்லெண்ணத் தூதுக் கோஷ்டியொன்று வந்திருக்கிறதாம்! கருவாட்டு வியாபாரியொருவன் வீதியில் கூடைதூக்கி கூவிவரும்போது ‘என் கருவாட்டில் மல்லிப்பூ வாடை’ இருக்கிறது என்று கூறினால் எப்படியிருக்கும்? அதைப்போலத்தான் இருக்கிறது. இந்த நல்லெண்ணக் கோஷ்டியின் விவகாரம்.

வந“த இந்த தூதுகோஷ்டி முதலில் எங்களைச் சந்தித்திருக்க வேண்டும் இந்தி எதிர்ப்பாளர்களின் நல்லெண்ணத்தைப் பெற வரும் தூதுகோஷ்டி. முதலில் யாரைச் சந்திப்பது? எங்களைத்தானே வந்ததும் சந்தித்துப் பேசவேண்டும்!

முதலில் இந்தத் தூதுகோஷ்டி வந்தால் சந்தித்துப் பேசலாம் என்றே இருந்தேன். இப்போது பகிரங்கமாக அறிவிக்கிறேன். இத் தூதுகோஷ்டி, அழைப்பு அனுப்பினால் நான் போகத் தயாரில்லை!

(11.10.50 காலை எதிர்பாராது தூதுக் குழுவினர் காஞ்சி அலுவலகத்துக்கே நேரில் வந்துவிட்டனர். அதன் விளைவாக வந்தவர்களை மறுக்க முடியாது சி.என்.ஏ. சந்தித்தார். அவர்களிடமும் இக்குற்றச்சாட்டை வெளியிட்டார். விபரம் இதழில் வேறிடத்தில் காண்க ஆர்)

வந்தவுடன் இக்கோஷ்டி முதலில் சந்திக்க வேண்டியது எங்களையா? அல்லது மாதவமேனையும் மற்றோரையுமா? வேலிக்கு ஓணானா சாட்சி? மாதவமேனனும், மந்திரிமார்களும் இந்தியைப் புகுத்தவேண்டும் என் பார்கள். நாமோ, இந்தி கூடாது என்று எதிர்ப்பவர்கள். நாம் ஏன் எதிர்க்கிறோம் என்பதை அறிய வந்திருப்பதே இத்தூதுகோஷ்டி. அப்படிப் பட்ட கோஷ்டி நம்மைத் தூற்றுபவர்களிடம் சென்றா முதன்முதலில் நம்மைப்பற்றிக் கேட்பது?

பிரதமர் குமாரசாமி ராஜா கூறினாராம் இக்கோஷ்டியிடம் ‘இந்தி எதிர்ப்பாளர்கள் அரசியல் காரணங்களுக்காகவே எதிர்க்கிறார்கள்’ என்று அப்படியேதான் இருக்கட்டுமே! அரசியல் காரணத்துக்காம். அப்படி அரசியல் என்ன மாபாதகமா? நாங்கள் தொட்டுப் பார்க்கக்கூடாததா? இந்த நல்லெண்ணத் தூதுகோஷ்டி, இந்தியைப் புகுத்துவதற்கு அனுசரணையான வழிவகைகளைக் காண வந்திருக்கிறதேயொழிய வேறென்ன?

அரசியல் நோக்கோடு எதிர்க்கிறோம்! இந்தியை ஏன் புகுத்த வேண்டுமென விரும்புகின்றனர். வடநாட்டினர்? அரசியல் நோக்கோடுதான் அப்படியிருக்கும் போது நாங்களும் அதே அரசியல் நோக்கோடு எதிர்த்தால் என்ன தவறு?

மாதவமேனன் இத்தூதுகோ“டியிடம் நம்மைப்பற்றி விவரித்திருக்கிறார்? இந்தி எதிர்ப்பாளர்கள், முதலில் ஜஸ்டிஸ் கட்சியாக விருந்தனர். அதில் தோல்விகண்ட பிற்பாடு சுயமரியாதைக் கட்சியாகயிருந்தனர். அதுவும் தோற்ற பிற்பாடு இந்தி எதிர்ப்பாளர்கள் என்று வந்திருக்கின்றனர் என்பதாக.

புலி புதரில் பதுக்கிக் கிடந்தது பொறுக்க முடியாது வீதிக்கு வந்தது. பின்னரும் சகிக்க முடியாததால் வீட்டினுள்ளே புகுந்தது என்றால் என்ன அர்த்தம்? தோற்றுவிட்டது என்றா பெயர் இதற்கு?

நாம் ஜஸ்டிஸ் கட்சியாகயிருந்தோம் போதவில்லை?

சுயமரியாதை இயக்கமாகி சூதுமதியை, சூழ்ச்சிச் செயல்களைச் சாடினோம். சமுதாயத்தின் மேடுபள்ளங்களை எடுத்துக்காட்ட நல்வாய்ப்பு கிடைத்தது. அந்த அரும்பணியில் நாம் ஈடுபட்டிருக்கிறபோது இந்தி வந்தது எதிர்க்கவேண்டியவர் களானோம்! எதிர்க்கிறோம்!!

இதற்குப் பெயர் என்ன- வளர்ந்து வந்திருக்கிறோம் என்பதா? அல்லது சுருங்கிப்போய் விட்டோம் என்பதா?
நாம் ஜஸ்டிஸ் கட்சியாகயிருந்த போது, எடுத்த முயற்சிகள், என்ன நசித்தாபோய்விட்டது. வகுப்புவாரி முறை கம்யூனல் ஜி.ஓ. ஜஸ்டிஸ் கட்சி கொணர்ந்ததுதானே? அந்த சமநீதி உரிமை எண்ணம் இன்று உன் கூடாரத்திலேயே புகுந்துவிட்டதே? இன்று நீயே, அது பற்றிப் பேசும்படியாயிற்றே! இதற்கு என்ன பொருள்?

விஷயம் புரியாது, எப்பொழுது பார்த்தாலும் நம்மைப்பற்றி, ஏதாவது உளறிக்கொண்டிருக்கும் மாதவமேனன் இன்னும் ஒன்று கூறியிருக்கிறார். இக்கோஷ்டியிடம், ‘இந்தி எதிர்ப்பாளர்கள் தங்கள் சொந்தப் பெயர்களைக் கூட மாற்றிக்கொள்ளுகிறார்கள். அந்த அளவுக்கு மொழிவெறி இருக்கிறது’ என்பதாக.

நாராயணசாமியாகயிருந்தவர் நெடுஞ்செழியனாக ஆனதும் சோமசுந்தரம் மதியழகனாக ஆனதும், இந்த மாபெரும் ‘அறிஞருக்கு’ப் பிடிக்கவில்லை! அரரையே நான் கேட்கிறேன்.

தமிழிலேயே பெயர்கள் இருக்கவேண்டும் என்ற அளவுக்கு எங்களிடம் ஆசையிருப்பது உண்மைதான்.

ஆனால், திருச்சி ஏன், திருச்சிராப்பள்ளியாயிற்று? Mச்ஞீதணூச் என்று இருந்ததை மதுரை என்று மாற்றியிருக்கிறார்களே அது ஏன்? கச்ணூடு ஸ்டேஷன் பூங்கா என்று தனித்தமிழ் பெயராக ஆக்கப் பட்டிருக்கிறதே என்ன அர்த்தம்? ஊணிணூt கோட்டையாக்கப் பட்டிருப்பதற்கு என்ன பொருள்?

ஆட்சியாளர் செய்திருக்கும் இந்த மாற்றத்தின் பொருள் என்ன? இது மட்டும் இருக்கலாம் இதைப்போல எமது நண்பர்கள் பெயர்களை மாற்றினால் கூடாது! கூறுகிறார் வேடிக்கையான போக்கு!

நல்லெண்ணத் தூது கோஷ்டியின் முயற்சி பலிக்காது என்பதே, எனது எண்ணம்.

இத் தூதுக் கோஷ்டி, வடக்கேயிருந்து இங்கு ஏன் வந்தது?

நாம் இந்தி எதிர்ப்பு நடத்திய பொழுது ‘இதுகளால் என்ன முடியும்?’ என்று கேலி பேசினர்! ‘நாலு பேர் நின்று கொண்டு ‘தமிழ் வால்க’ என்று கூச்சல் போடுகிறார்கள் என்பதாக கேலி பேசினர். இன்று என்ன நடைபெறுகிறது? இதுகளுடன் சமரசம் பேச அதுகள் வருகின்றனர்!

இப்போது வந்திருப்பது நல்லெண்ணத் தூது கோஷ்டி இதற்கு அடுத்தபடி மார்வாடி நல்லெண்ணத் தூது கோஷ்டி வரும் அடுத்தபடி வடநாட்டு டெல்லியிலிருந்து நல்லெண்ணத் தூது கோஷ்டி வரலாம்.

இதுபோன்ற வடக்கத்தித் தூது கோஷ்டிகள் வந்தபடி இருக்கும் நாம் வளர வளர!

ஆகவே நாம் வளரவேண்டும். நமது இலட்சிய கீதத்தை எங்கும் எழுப்பவேண்டும்.

‘திராவிடநாடு’ என்பதெல்லாம் வெறும் பேச்சு. ஒருகாலும் கிடைக்கப் போவதில்லையெனச் சொல்கிறார்களாம். பல காங்கிரஸ் பிரமுகர்கள், இப்படித்தான், பாகிஸ்தான் கேட்டபோதும் கடைசி வரை பிடிவாதம் பேசினார்கள்!

திராவிடநாட்டுப் பிரச்சினை பிரித்துவாங்குவது அல்ல இழந்த நாட்டை மீட்டுக் கொள்வது!

பாகப் பிரிவினையல்ல பிச்சை வாங்குவது அல்ல! நாம் ஏமாந்து இழந“த தாய் நாட்டை மீட்பது!

இதைப் புரிந்து கொள்ளவேண்டும் தேசியத் தலைவர்கள் ஆத்திரத்தை, சிறிது அப்புறப்படுத்திவிட்டு நாம் கூறுவதைச் சிந்திக்கவேண்டும்.

பர்மா, முன்பு இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருந்த பிரதேசம் தான். பின்னர் துண்டிக்கப்பட்டு, இப்போது தனி நாடாக சுதந்திரத்துடன் வாழவில்லையா?

இங்குள்ள பக்தவத்சலங்களும், காமராஜர்களும், கேட்கிறார்கள், சிறு நாடாக இருந்தால் முடியுமா என்று? இவர்களை நான் கேட்கிறேன். இவர்கள் என்ன ஆசியா கண்டத்துக்கா அதிபதிகளாக இருக்கிறார்கள்?

ஒன்றுமட்டும் நான் சொல்ல முடியும். இவர்கள் மீது நமக்குக் கோபமில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் இவர்களுக்காகவும், நாமே போராடிக்கொண்டிருக்கிறோம். இவர்களுடைய எதிர்காலம் மோசமானால், உதவப் போவது நாம்தான்! கோவலனுக்கு கடைசி நேரத்தில் காற்சிலம்பைத் தந்து உதவியது கண்ணகிதான் மாதவியல்ல!

இங்குள்ள தேசீயப் பிரமுகர்களுக்கு வட நாட்டிலிருக்கும் மதிப்பைத்தான் நாள்தோறும் நாம் கண்டு வருகிறோமே! நாசிக்கிலே நடைபெற்ற காங்கிரசுக்குப் பிரதிநிதியாகச் சென்ற காங்கிரஸ் மந்திரிகள் என்ன பேசினர்? வாயைத் திறந்து நாட்டின் நிலைமையை எடுத்துச் சொன்னார்கள்? சொல்லத்தான் முடிந்ததா?

ஏன் இவர்கள் பேசவில்லை? இவர்கள் வீரம் எங்களை மிரட்டத்தானா? எதற்கெடுத்தாலும் ஓடுகிறாயே, டெல்லிக்கு! அதைக் காண எங்களுக்கே வெட்கமாயிருக்கிறதே!

நமது முன்னோர்கள் வாள்கொண்டு வாழ்ந்தார்கள் நாங்கள் அறிவை ஆயுதமாகக் கொண்டுவிட்டோம்!

திராவிடநாடு ஏற்பட்டுவிட்டால் “என்ன செய்வாய்?” என்று கேட்கின்றனர். எல்லாம் செய்வோம் நாடு முன்னேற்றத்துக்கான எல்லாம் செய்வோம்!

நாடு எப்படி ஆளப்படவேண்டும் என்பது தெரியும்! சுகமும் நலமும் நாட்டில் நிலவச் செய்ய முடியும்! வழியும் வகையும் உண்டு! அந்த இலட்சியத்துக்கு வெற்றி காணும் வகையில் உழைப்போம்! தியாக முத்திரைகளோடு உழைத்து வெற்றி காண்போம்!!

(திராவிடநாடு 15.10.50)