அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கவர்னர் நியமனம்!

வெள்ளையன் தன்கையில் சிக்கிய இந்திய உபகண்டத்தை ஆள, தனது நாட்டிலிருந்து பலரை அனுப்பினான், வைஸ்ராயாகவும், கவர்னர் ஜனரலாகவும்.

அதைப்போல, தென்னாட்டு ஆட்சியை நிர்வகிக்க, தன்னைச் சேர்ந்தோரை, கவர்னராக அனுப்பி வருகிறது வடநாட்டு சர்க்கார்.

“தனக்கு வேண்டியவர்களையே சென்னை மாகாணத்துக்குக் கவர்னராக்க வேண்டும்“ என்பதே நேருவின் ஆசையென்பதை விளக்க, இன்னும் ஒன்றை எடு்த்துக்காட்ட விரும்புகிறோம். பவநகர் விலகப் போவதாகத் தெரிவித்ததும் பம்பாயைச் சேர்ந்த பி.ஜி.கெர் என்பவரைக் கேட்டனர் – ஒத்துக் கொள்ளுமாறு அவரும், நேருவின் உற்ற நண்பராகும் அவர் மறுக்கவே, தமது அருகிலிருக்கும் ஸ்ரீ பிரகாசாவை அனுப்புகிறார் நேரு.

கவர்னர் பதவியென்றால் லட்சக்கணக்கான ரூபாய்களை, அலவன்சாகவும், சம்பளமாகவும் அனுபவிக்கக் கூடியதாகும். ஆண்டுக்கு இவ்வளவு என்று ஒதுக்கப்படும் இந்த ரூபாய்கள் நாம் செலுத்தும் வரிப்பணத்தில்தான் செலவிடப்படுகின்றன.

சென்னைக்கென ஒரு மந்திரிசபையும், சர்க்காரும் இருக்கும்போது, கவர்னர் ஏனோ – அதுவும் அங்கிருந்து வரவேண்டும்? நாமே அதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளாலாமே! அதைவிட்டு, டில்லி, ஒரு நபரை அனுப்பவும், அவர் நமது ஆட்சிக்குத் தலைவராக இருக்க வேண்டிய அவசியம்தான் என்ன?

இவைகளைச் சிந்தித்துப் பார்த்தால் டில்லியின் ஆசை விளங்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தன் பிரதிநிதிகளைக் கொண்டே, பல நாடுகளை அடிமைப்பிடியில் கிடக்கச் செய்தது போல, டில்லியும் செய்கிறது! டில்லி சாம்ராஜ்யத்துக்காக வடநாடு, பாடுபடுகிறது!

அதனால்தான் நெருக்கடியும் விடுதலை வேட்கையும் நிறைந்துள்ள இந்த சமயத்தில் தனது சகாவை – கட்சிக்காரரை – நேரு தர்பார் அனுப்புகிறது, இங்கு இந்த உண்மையை நாம் கவனத்தில் நிறுத்த வேண்டும்.

திராவிட நாடு – 2-3-52