அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கிரேக்கக் கடிதம்!
அவன் ஒரு வெகுளி! மற்றவன் தந்திரக்காரன். வெகுளியை ஏய்த்திடத் தந்திரக்காரன் எண்ணினான், சூதறியாத வெகுளி அவனிடம் சிக்கித் தவித்த சிறுகதை ஒன்றுண்டு.

தந்திரக்காரன் வெகுளியை நோக்கி, வீராவேசத்துடன், “நீ வீரமற்றவன்; ஒரு காரியமும் செய்ய முடியாது உன்னால். என் சமர்த்திலே நூற்றிலே ஒரு பங்குகூட உனக்குக் கிடையாது” என்று கூறினான். வெகுளிக்குக் கண் சிவந்தது, மீசை துடித்தது, கோபத்தால் குதித்தான். தந்திரக்காரன் அதை எதிர்பார்த்தே பேசினான் ஆதலால், வெகுளி வெருண்டது கண்டு, மேலும் தூண்டிவிட லானான்.

“அடேயப்பா! பெரிய வீரன் போலக் கோபித்துக் கொள்கிறாயே. உன் சாமர்த்தியத்தைக் காட்டு பார்ப்போம். முடியாதப்பா, முடியாது” என்று சொல்லிச் சிரித்தான். அந்தச் சிரிப்பு, வெகுளியின் கோபத்தை அதிகப்படுத்தியது, உடனே வெகுளி,” என்னால், என்ன முடியாது, சொல்லு கேட்போம்” என்று கேட்டான்.

“ஒன்றுமே செய்ய முடியாது. நான் செய்வதைச் செய்ய முடியாது, நிச்சயமாகச் செய்ய முடியாது. ஆமாம், ஒரு போதும் முடியாது” என்று தந்திரக்காரன் கூறினான்.
“வீணாக உளறாதே. உன்னால் செய்யக்கூடிய காரியத்தை என்னாலும் செய்ய முடியும். நீ என்ன வானத்தை வில்லாக வளைப்பாயோ! மணலைக் கயிறாகத் திரிப்பாயோ!” என்று வேகமாக வெகுளிகேட்க, தந்திரக்காரன், நிதானமாக, “இதோபார்! வீணாக நீ அவமானமடைவாய். நான் கண்ணை மூடிக்கொண்டு செய்யும் காரியத்தை உன்னால், கண்ணைத் திறந்து கொண்டும் செய்யமுடியாது” என்றுரைத்தான். “என்ன திமிர், இவனுக்கு. நம்மை இவன் சர்வமுட்டாள் என்றல்லவோ நினைத்துக் கொண்டிருக்கிறான். இவன் செய்வதை நாம் செய்ய முடியாதாமே. அதிலும், கண்ணைத் திறந்துகொண்டாலும் செய்ய முடியாதாமே! நான், கையாலாகாதவன் என்றன்றோ இவன் கருதுகிறான். சரி, இவனுக்குச் சரியான பாடம் கற்பிக்கவேண்டும்” என்று வெகுளி எண்ணிக் கொண்டான். அவன் மனநிலையைத் தெரிந்துகொண்ட தந்திரக்காரன், “என்னப்பா, யோசிக்கிறாய்? நான் மறுபடியும் சொல்கிறேன் கேள், இருபது ரூபாய் பந்தயமாக வைக்கிறேன்; நான் கண்ணை மூடிக்கொண்டு செய்வதை உன்னால், கண்ணைத் திறந்துகொண்டு செய்ய முடியாது” என்று கிளறினான். வெகுளியால் தாங்கமுடியவில்லை. “ஐம்பது ரூபாய் பந்தயம். நீ கண்ணை மூடிக்கொண்டு செய்வதை நான் கண் திறந்தபடி செய்கிறேன்” என்று சொல்லிட, பந்தயப் பணம் பொதுக்கட்டப்பட்டது. தந்திரக்காரன், ஒரு பிடி மண்ணைக் கையிலே அள்ளிக்கொண்டான். தலையை நிமிர்த்திக்கொண்டான், “இதோ பார், இப்போது நான் கண்ணை மூடிக்கொண்டு செய்வதை, நீ கண் திறந்து கொண்டு செய்ய முடியாது” என்று கூறிவிட்டு, கண்களை இறுக மூடிக்கொண்டான், கையிலே இருந்த மண்ணைக் கண்மீது கொட்டினான், ஒரு விநாடி கழித்துத் தலையைக் கவிழ்த்தான். மண் கீழே வீழ்ந்தது, மேலாடையால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, வெகுளியை நோக்கி, “எங்கே, பார்ப்போம், நான் இப்போது கண்களை மூடிக்கொண்டு செய்ததை நீ கண்களைத் திறந்தபடி செய்யப்பா, செய்யாவிட்டால் ஐம்பது ரூபாய் எனக்குத்தான்” என்று கூறினான். வெகுளி கைபிசைந்து கொண்டு நின்றான், கண்ணைத்திறந்து கொண்டு, மண்ணை அள்ளிப் போட்டால், கண்ணல்லவோ கெடும்! எப்படிச் செய்வது? இளித்தான் வெகுளி, இதுதானா, நான் வேறு ஏதோ பிரமாதமான வேலை என்று எண்ணிக் கொண்டேன். கண்ணிலே மண் போட்டுக்கொள்வார்களா? என்று பேசினான். தந்திரக்காரனோ, “அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா! நான் கண் மூடிக்கொண்டு செய்வதை நீ கண்திறந்து கொண்டு செய்வதாகப் பந்தயம் வைத்திருக்கிறாய், செய்தால் நான் ஐம்பது தருகிறேன், செய்யாவிட்டால் ஐம்பது எனக்குத் தரவேண்டியதுதான்” என்று கூறினான். வெகுளி, தானாகச் சென்று தந்திரக்காரன் வலையிலே வீழ்ந்தது தெரிந்து விசனித்தான், பணத்தை இழந்தான், தந்திரக்காரன், “உன் கோபம், என் இலாபம்” என்று கூறிவிட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு போனான். இச்சிறுகதையிலே நாம் காணும் வெகுளிக்குச் சமமாக ஜனாப் ஜின்னாவை மதிப்பிட்ட காந்தியார், தந்திரத்தால், ஜனாப் ஜின்னாவுக்குக் கோபமூட்டி, இலாபத்தைத் தனக்காக்கிக் கொள்ள ஒரு திருவிளையாடல் புரிந்தார், ஆனால், ஜனாப் ஜின்னா வெகுளியல்லவே! எனவே, தந்திரம் செய்து பார்த்த காந்தியார், தலை கவிழ நேரிட்டது.

“இப்போது தானே பார்க்க வேண்டும் இந்த ஜின்னாவின் ரோஷத்தை.”

“என்ன செய்யப்போகிறார் ஜின்னா? அவருக்கும் ‘பெப்பே’ என்று பிரிட்டன் கூறிவிட்டது. ஜின்னா வீரராக இருந்தால், இந்த அவமானத்தை அடைந்த பிறகு அவர் சும்மா இருக்கலாமோ.”

“சரியான சவுக்கடி ஜின்னாவுக்குக் கிடைத்தது.”

“முகத்திலே கரியைப் பூசிவிட்டார்கள்” இப்போது என்ன செய்வார் என்று சவால் விடுகிறேன் என்றெல்லாம், பத்திரிகைகள், சித்திர எழுத்துகளில் தலைப்பும் தலையங்கமும், தலைவர்கள் அறிக்கையும், நிருபர் கருத்தும் வெளியிட்டன. இவைகளைக் கண்டதும், கதையிலே காணப்படும் வெகுளி கோபித்துத் தந்திரக்காரன் வலையிலே வீழ்ந்ததுபோல, ஜனாப் ஜின்னாவும், காங்கிரஸ் கண்ணியில் வீழ்வார் என்று கருதியே தேசியத்தாள்கள் ஜனாப் ஜின்னாவைக் குத்திவிட முனைந்தன. வீரமில்லையா, ரோஷமில்லையா, தேச பக்தியில்லையா, சுயமரியாதையில்லையா என்று பலப்பல சுடுசொல் புகன்றால் ஜனாப் ஜின்னா கோபங்கொண்டு தாங்கள் வெட்டி வைத்திருக்கும் படுகுழியிலே விழட்டும் என்பது அவர்களின் கபடக் கருத்து. ஜனாப் ஜின்னாவோ, இவர்களின் போக்கையும், பொறியையும், கருத்தையும், எறிகணைவிடுகிற முறையையும், பன்னெடு நாட்களாகக் கண்டறிந்தவர், எனவே அவர், தூண்ட வந்தவர்களின் தலையிலே குட்டி அனுப்பினார்.

தோழர்களறிவர் ஜனாப் ஜின்னா, லீக் மாநாட்டிலே ஆற்றிய சொற்பொழிவிலே “காந்தியார் எனக்குக் கடிதம் எழுதினால் அதைத்தடுக்க வல்லமை பொருந்திய பிரிட்டிஷ் சர்க்காராலும் முடியாது” என்று வீரமுழக்கமிட்டதை. இதனைக் கேட்ட காந்தியார், நீ செய்வதை என்னால் செய்ய முடியும் என்று சொன்ன வெகுளியின் பேச்சுக்குச் சமமாக எண்ணிக்கொண்டு, சிறையிலிருந்து ஜனாப் ஜின்னாவுக்கு ஒரு கடிதம் விடுத்தார். கடிதத்திலே என்ன எழுதினார்? என்னை வந்து காணவேண்டும். தங்களைக் காண ஆவலாக இருக்கிறது. இதுதான் கடிதசாரம். இதனைச் சர்க்கார் ஜனாப் ஜின்னாவுக்கு அனுப்பவில்லை. கடிதசாரத்தைத் தெரிவித்தனர். உடனே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உலுத்தர்கள், உறுமலாயினர். “ஊராள்வோர், உன்னை மதிக்கவில்லை, உனக்கு அனுப்பிய கடிதத்தைத் தடுத்துவிட்டனர், உனக்கு ரோஷம் பிறக்கவில்லையா?” என்று ஜனாப் ஜின்னாவைக் கேட்கலாயினர். அவர்களுடைய நோக்கம், ஜின்னாவுக்குக் கோபமூட்டிவிட்டால், அவர் பிரிட்டிஷாருடன் மோதிக்கொள்வார், அச்சமயத்திலே, பிரிட்டிஷாருடன் காங்கிரஸ் சமரசம் செய்து கொண்டால், அரசியல் அதிகார பீடத்தைத் தாங்கள் அலங்கரிக்கலாம் என்பதுதான். இது நாஜிமுறை என்பதை நாடு அறியும். போலந்துக்கும் ரஷியாவுக்கும் பேதத்தை உண்டாக்குவது, பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும், பிளவு ஏற்படுத்தவிரும்புவது, துருக்கியை நேசநாட்டுக்கு எதிரிடையாகக் கிளம்பும்படி தூபமிடுவது ஆகிய சூட்சிகளை நாஜித்தலைவர்கள் செய்வதை நாம் அறிவோம். அவர்களின் நோக்கம், நேசக்கட்சியிலே ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால், இடையே நாஜி இலாபமடையலாம் என்பதுதான். இரண்டு முரட்டு ஆடுகள் மோதிக் கொண்டால் இடையே நரி, சிந்திய இரத்தத்தை ருசித்திடும் கதைபோன்றது, இக்கபடம், ஜனாப் ஜின்னா வெகுளியன்று, எனவே அவர் ஏமாறவில்லை.

காந்தியார் கடிதம் எழுத வேண்டும், என்று சொன்னது உண்மை. அக்கடிதத்தைத் தடுக்கச் சர்க்கார் துணியாது, என்று சொன்னதும் உண்மை; ஆனால் நான் எழுதும்படி சொன்ன கடிதம் என்ன? காண வேண்டாமோ! என்ற கானமா? வரக்கூடாதோ என்ற உபசாரப் பேச்சையா நான் எதிர்பார்த்தேன். நாட்டிலே நடைபெற்றுவரும் நாச காரியத்தைக் காந்தியார் கண்டிக்கிறார் என்றும், பாகிஸ்தான் விஷயமாக அவர் தமது கருத்தை மாற்றிக் கொண்டார் என்றும் இந்துத் தலைவர்கள் என்னிடம் கூறினார்கள். அது உண்மையானால் எனக்கு மெத்தச் சந்தோஷம் நாட்டிலே நடைபெறும் நாசகாரியமும் நிற்க வேண்டும், பாகிஸ்தான் கோரிக்கையும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும், இதற்கான சம்மதக் கடிதத்தைக் காந்தியார் எனக்கு அனுப்பட்டும்; அதைச் சர்க்கார் தடுக்கத் துணியமாட்டார்கள்; ஏனெனில், பாகிஸ்தான் விஷயமாகச் சமரசமும் நாட்டுக் கலவரம் நிற்பதுமான காரியத்தைச் சர்க்கார் தடுக்கமாட்டார்கள் என்ற கருத்தினாலேயே கடிதம் அனுப்பும்படி கூறினேன்; காந்தியாரோ, இதனை எழுதாமல் என்னை வந்து பாருங்கள் என்று கடிதம் எழுதினார், சர்க்கார் கடிதத்தில் கண்டுள்ள விஷயத்தை எனக்குத் தெரிவித்தனர், ஆகவே நான் சர்க்காரிடம் சண்டைக்கு நிற்கக் காரணம் எழவில்லை. கவைக்குதவாத கடிதம் விடுப்பதும், அதைச் சாக்காகக்கூறி, லீகுக்கும் சர்க்காருக்கும் மோதுதல் உண்டாக்குவதும், எதற்கு? இது, லீகின் நிலையைக் கெடுக்கக் காங்கிரஸ் செய்யும் சூட்சிகளில் ஒன்று என்பதை நானறிவேன்” என்று ஜனாப் ஜின்னா விளக்கிவிட்டார். ஆத்திர மடைந்த காங்கிரஸ் தலைவர்கள் அழுகின்றனர். ஏடுகள், தமது மோசடி பலிக்காததுகண்டு, பதைக்கின்றன. கதையிலே காணப்படும் வெகுளி போலன்றி, ஜனாப் ஜின்னா, தந்திரக்காரரின் திட்டத்தைக் கண்டறிந்து மட்டந்தட்டியது கண்டு நாம் மகிழ்கிறோம். நாமறிவோம், ஒரு கிரேக்கக் கதை, சிபாரிசுகோரி, ஓர் இளைஞன் - தற்குறி - ஒரு கயவனிடம், கடிதம் கோரினான், கடிதம் தரப்பட்டது. களிப்புடன் கடிதத்தை எடுத்துக்கொண்டு இளைஞன் கிளம்பினான், கயவன் சிரித்தான். கடிதத்தை யாருக்கு அளிக்க வேண்டுமோ அவரிடம் சென்ற இளைஞன், மகிழ்ச்சியோடு, கடிதத்தை அவரிடம் கொடுத்து, தனக்கு அவர் உதவி செய்வார் என்று நம்பினான். கடிதத்தைப்படித்த அந்த ஆள், வாலிபனை ஏற இறங்கப் பார்த்தான், கொலையாளிகளை ஏவி, வாலிபனைக் கொன்றான், ஏனெனில், எந்தக் கடிதம், தனக்கு உதவி செய்யும்படி எழுதப்பட்டது என்று வாலிபன் கருதினானனோ, அக் கடிதத்தில், “இக்கடிதத்தைக் கொண்டு வரும் வாலிபன் ஒரு கொடியேன், அவனைக் கொல்க” என்று உத்திரவு அனுப்பி இருந்தான், கனிந்த மொழி பேசிக்கடிதம் கொடுத்தனுப்பிய கயவன். வாலிபனோ, கடிதம் தனக்கு உதவும் என்று கருதினான், தற்குறி யானதால், படித்தறியவில்லை, மாண்டான். பெல்லரோபன்ஸ் லெட்டர் (Belloropens Letter) என்ற அக்கபடக் கடிதம், போன்றது, காந்தியாரின் கடிதம் என்போம். கிரேக்க வாலிபனின் தலையை உருளச்செய்த கடிதம்போல, காந்தியாரின் கடிதம் ஜனாப் ஜின்னாவை அவரது இலட்சிய பீடத்திலிருந்து கீழே உருட்டப் பார்த்தது, அவரோ, காங்கிரஸ்காரர் காந்தியாரைத் தெரிந்து கொண்டிருப்பதைவிட, நன்றாகக் காந்தியாரை அறிவார். எனவே அவர், காந்தீய சூட்சியை இப்போது வெளிப்படுத்திவிட்டார். காங்கிகரஸ் வட்டாரம், கலங்குகிறது!

(திராவிடநாடு - 06.06.1943)