அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


கிராம சேவை
வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே, நம் நாட்டு வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது என நம்நாட்டு நிலைமைப் பற்றி அறிஞர்கள் கூறுவர். பெரிதும் விவசாயத்தையே உறுதுணையாகக் கொண்டு வாழும் நாடு இது. 100-க்கு 80-க்கு மேற்பட்டவர்கள் கலப்பையையே கருவூலமாக நம்பி வாழுகின்றனர்.

கவிகள் வேண்டுமானால் மேழிச் செல்வத்தைப் பற்றியும் ஏரடிக்கும் சிறுகோலைப்பற்றியும், வெண்பாக்கள் அமைத்துப் பாடலாம். வேளாண்மையுன் சீரையும் சிறப்பையும் பற்றிப் பேசி மகிழலாம். ஆனால் விவசாயம் உன்றையே நம்பி வாழும் எந்த நாடும், நாகரீக உலகில் நல்லதொரு இடம் பெற்று ஒனி வாழ முடியாது என்பதை உலக வளர்ச்சிச் சரிதம் விளக்கிக் கூறுகிறது.

விவசாயம் மட்டுமே நடத்தி, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து, தொழிலுக்கு உதவும் வேறு உற்பத்திப் பொருள்களை உண்டாக்கி அவைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டடு, வாழ்ந்து வந்ததே, பொருளாதாரத் துறையில் நம் நாடு நசித்து வருவதற்கு முக்கியமான காரணம். மேனாடுகளில் உள்ளதைப் போலவே, தொழில் வளர்ச்சியும், விவசாயத்தோடு இணைந்து இருந்தால் மட்டுமே, நாட்டுச் செல்வ நிலையைப் பண்படுத்திப் பெருக்க முடியும்.
விவசாயத் தொழில், இந்தியாவில் உள்ளதைப்போல வேறு எங்கும் மோசமாக இல்லவே இல்லை. இங்குதான், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்ததை போன்ற எலும்பும் தோலுமாக உள்ள உழவனும், அவனது இளைத்துப்போன எருதும், மூதாதையர் தந்த கலப்பையும், முதுகை நெரிக்கம் சுமையும் உள்ளன. இந்த நாட்டில்தான் இன்றளவும், வறண்ட நிலமும், வற்றிப்போன குட்டையும், வாழ்க்கையில் இன்பமென்பது யாது என அறியாது வறுமையிற் பிறந்து வளர்ந்து, வறுமையின் மடிமீது படுத்துத் தூங்கும் அடிமைகளும் உள்ளனர். ஏர் உழுவது, முதற்கொண்டு அறுவரை வரையில் நம் நாட்டார் மட்டுமே பன்னெடு நாட்களுக்கு முன்பு இருந்து பழமையான முறைகளையே கையாண்டு வருகின்றனர். பழமையின் கடைசி புகலிடம் கிராமங்களே! பழமைப்பித்து முற்றிலும கொண்டவர்களும் கிராமத்தவரே, ஒன்றரை ஏக்கர் நிலத்திலே ஒன்பது பாகம்! உழுது பயிரிடுவோரின் உழைப்போ, மிருக உழைப்பு! மிராசுதாரரோ நிலத்தை உழவனிடம் தந்து, நெற்கதிரைத் தம்மிடம் கொண்டு வாழுபவர்.

மாற்றம், காலப்போக்கின் கண்ணோட்டம், நாகரீகம் கிராமங்களுக்குச் செல்வதில்லை, அன்று இருந்த அவதியே இன்றுமிருக்கிறது. அதே நிலையில் கிராமங்கள் என்றென்றும் இருக்கவேண்டுமென்பதே, காந்தியாரின் கிராமப் புனருத்தாரணத் திட்டம்.

ஆம்! உள்ளபடி, மேனாடுகளில் இதே விவசாயம் நடத்தப்படும் வித்தையும், அவர்கள் அங்கு கையாளும் முறைகளையும் கண்டவர் நம் நாட்டு விவசாயத்தையுங் காணில் இதனை கிராமவாசியின் கர்ம பலன் என்ற கூறுவரேயன்றி நாட்டின் நல்வாழ்வுச் சாதனம் என்று கூறார்.
இன்றைய விவசாய முறையால் வரும் கேடுகள் யாவை? விவசாயமுறை பெரிதும் பழைமையை வளர்த்து கிராமத்தில் காட்டுமிராண்டித் தன்மையைத் தந்து வருவது மறைமுகமான கேடு என்ற மோதிலும் மற்றையக் கேடுகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் நாயகமாக விளங்குகிறது. வாழ்கையில் கசப்பு, மனச்சோர்வு, தன்னப்பிக்கை அற்ற தன்மையையே அது வளர்க்கிறது. ஒரு விதமான பரபரப்பு, சுறுசுறுப்பு, வேகம், எழுச்சி விழிப்பு வருவதாகக் காணோம். கோழி கூவும்போது கூரைவீட்டில் குறட்டை விட்டுத் தூங்கும் உழவன், எழுந்திருநது கோணல் கலப்பையைத் தூக்கிக் கொண்டு கொடிவழிநடந்து நிலம் சேர்ந்து நெற்றி வியர்வை நிலத்துசிந்த மாலை இருள் வரும் வரை உழைக்கிறான், நடம்புகள் அத்தனைக்கும் வேலை. கை கால்கள் கசக்கப்படுகின்றன. மேனி கறுத்து அவன் ஒரு தனி ஜாதியாளோ என ஐயுறுமாறு மாறிவிடுகிறான். இவ்வளவு கஷ்டப்பட்டும் பட்டபாட்டிற்குக்த தக்கப்பலன் உண்டா? இல்லை! விளைவு முன்பு இருந்ததைவிட வளர்ந்ததா? கிடையாது. முன்பிருந்ததைவிட வேறுவிதமான, வகையான பொருள்கள் விளைகிறதோ? அஃகும் இல்லை. ஏன்? இன்னமும் உழவன் பழமையில் நெளிகிறானே தவிர, விஞ்ஞானத்தைத் துணை கொண்டு வாழ முற்படவில்லை. இன்றளவும் அவனைச்சுற்றி அந்தகாரம் இருக்கிறதேயல்லாமல் நவநாகசீகச் சடர் காணப் படுவதில்லை.

உழைப்பு இந்நாட்டில் மட்டுமே மிக மிக அலட்சியமாகக் கருதப்பட்டு வருகிறது. உழைப்பு மட்டுமா? உயிரும் அப்படியே! ஏதோ மனிதன் பிறந்தான் - மாயப்பிரசங்கத்தில் சின்னாள் இருப்பான், பிறகு மறு உலகு சென்று மகேஸ்வரனோடு கலந்து மலரும் மணமும் போல இருப்பான் என்று கருதப்படும் நாடு இஃதேயன்றோ! ஆகவேதான் இங்கு மனித உழைப்பு, உழைப்பிற்கேற்ற பலன் பெறாத முறையில் வகுப்பப்பட்டுள்ள உழவு முறைக்கு பலியாக்கப்பட்டு வருகிறது.

எத்துணை சேதம்! எவ்வளவு அமோகமான உழைப்பு வீணாகிறது! எத்தனை ஆயிரக்கணக்கானவர்கள் எலும்பு நொறுங்க வேலைசெய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். அவ் வாழ்க்கையிலும், வெறும் நடைப்பிணங்களாகவன்றோ உள்ளனர்.

உழவு பயனற்றதா? அல்ல! உழவு நம் நாட்டவருக்குப் பசியோக பண்டந்தரவல்லதன்றோ! செல்வம் கொழித்து நம் நாட்டவர் சீருடன் வாழவும், தேயிலைத் தோட்டம் சென்று தேம்பி வாழும் தமிழர் யாவரும தமிழகத்திலேயே தன்மதிப்போடு வாழவும் முடியும். எப்போது? உழவு வெறும் உழைப்பாக மட்டுமன்றி உழவும் முடியும். எப்போது? உழவு வெறும் உழைப்பாக மட்டுமின்றி உழவுத் தொழிலாக, விஞ்ஞான முறையைத் துணை கொண்டு நடத்தப்படின்.

காந்தியார், காடாறுமாதம் நாடாறு மாதம் என்ற தமது போக்கின்படி, தீவிரமான கிளர்ச்சி என்னும் கட்டத்தை விட்டு நீங்கி இப்போது மீண்டும் கிராமசேவை செய்யக் கிளம்பிவிட்டார். அதாவது தமது சீடகோடிகளைக் கிராமங்களுக்குச் சென்று சேவை செய்யச் சொல்கிறார். மந்தை மனப்போக்கினருக்கு, மேய்ச்சலுக்கு ஏற்ற இடம், அந்தச் சந்த்டியற்ற சுந்தரலோகமாகத் தான் இருக்க முடியும் என்று சேவாகிராமத்துச சீலர் கருதினார் போலும். கிராம சேவையிலே ஈடுபடுங்கள், பிறகு பாருங்கள் அது தரும் வெற்றியை! வைசிராயே நம்மைத் தேடிக் கொண்டு வருவார் என்று காந்தியார் கூறியிருக்கிறார். வைசிராயைத் தேடிக்கொண்டு இந்த வயோதிகப் பருவத்திலே அவர் ஓடவும், அவருடைய அன்பையும் ஆதரவையும் பெறக் கூடிய விதமாக ஆடவும் சித்தமாக இருந்தும். சித்தம் இறங்கவில்லையே காந்திமகான் சத்தம் செவிக்கு வல்லையோ என்று பதம்பாடிடும் சத்தம் கேட்டும், வேல்ஸ் பிரபு கதவு திறக்கக்காணோம். இந்நிலை கண்டு துக்கங்ககொண்டுள்ள மக்களின் மனதுக்கு ஆறுதல் ஊட்டவே காந்தியார், வைசிராய் நம்மைத் தேடிக்கொண்டு வருவார் என்று கூறியிருக்கிறார். சரி, வைசிராய், காந்தியாரைத் தேடிக்கொண்டுதான் வருகிறார் என்றே வைத்துக்கொள்வோம். அதனால் என்ன பலன் ஏற்படும்? காந்தியாரின் பெருமை அதிகமாக்கப்படும். காங்கிரஸ் ஏடுகள். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிங்கத்தின் பங்கம் என்று தலையங்கம் தீட்டக்கூடும், மண் குடிசைக்குள் மாளிகை என்று ஹாஸ்ய எழுத்தாளர் தீட்டக்கூடும். நாமக்கல்லார் ஒரு அறு சீரடியும் தேசிய வினாயகனால் ஒரு திருத்தாண்டகமும், சுத்தானந்த பாரதியார் ஒரு சோபனப் பாட்டும பாடக்கூடும். ஆம்! இவ்வளவு நடந்தாலும், இதனால் நாட்டுக்கு என்ன பலன்? மேனாட்டிலிருந்து வந்திருந்த பல பிரமுகர்கள், அந்த மண் குடிசைக்குள்ளே, மகாத்மாவைப் பேட்டிகண்டு பேசிய காட்சியைப் படமாக்கியும், கண்ட பாடம் என்ன? அந்த மேனாட்டு மேதைகள் இருபதாம் நூற்றாண்டிலே ஓலைச்சுருளையும் கருப்பட்டியையும், முடிச்சுள்ள நூலையும் முரட்டுக்கதரையும் நம்பிக் கொண்டிருக்கும் இந்த விசித்திர வீரன் யார் என்ற வியப்போடு பார்க்க வருகிறார்கள் என்பதோடு, பார்த்தவுடன், இந்திய விடுதலையின் சின்னம் எனப்படும் தலைவரின் கோலமே இப்படி இருக்கும்போது மக்களின் மனப்போக்கு எப்படி இருக்கும் என்பதைப்பற்றி யோசிக்கவும் வேண்டுமோ என்று எண்ணியபடி. மேனாடு திரும்புகின்றனர். காந்தியார் எதிர்பார்க்கிறபடி, வைசிராய் பிரபுவே சேவா கிராமத்துககு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம், வந்தால் என்ன? இந்தியா இன்னமும் இருண்டு கிடக்கிறது, இளித்தவாயரின் இடமாக இருக்கிறது, பிடித்த பிடியிலே அடங்கிக்கிடக்கும் என்று தீர்மானித்து விட்டுப்போவார், வேறென்ன நடக்கும்! கிராமம் ஈடேற இதனால் ஏதாவது வழி உண்டாகுமா? கிராமசாசியின் கவலை தீருமா? அவனுடைய கஷ்டம் மறையுமா? அவன் வயிரார உண்டு, உடலாற உடுத்தி நோயின்றி வாழ வழி கிடைக்குமா? இதற்குத் திட்டம் காந்தியாரிடம் இருக்கிறதா? இது சம்பந்தமாகக் காந்தியாருக்குக் கொள்கை என்ன இருக்கிறது?

காந்தியாருக்குக் கிராமத்தின் மீதுதான் கனிவு, அவர் கிராமவாசி! உருவைப்பார். உணர்ச்சியைப்பார். உரையைக் கேள்! அவரைவிடக் கிராமவாசிக்கு உற்ற நண்பர் வேறு கிடையாதே. அவர் யந்திரத்தின் கொடுமையிலிருந்து தொழிற்சாலைகளின் துக்கச் சுழலிலிருந்து நவநாகரிகம் எனும் நச்சுப்பொய்கையிலிருந்து கிராமவாசிகளை மீட்கம் பணியிலேயன்றோ தமது வாழ்நாளைச் செலவிடுகிறார். அவரிடம், கிராமம் வாழத்திட்டம் இருக்கிறதா என்ற கேட்கிறாயே, என்ன அறியாமையடா உனக்கு என்று தேசபக்தியை அதிகப்படுத்திக்கொண்டு தெளிவைக் குறைத்துககொண்டுள்ள தோழர்கள் கூறுவர்.

கிராம சேவை, ஏழைகளிடம் அன்பு காட்டுவதுபோல, ஒரு இலட்சியமாகக் கருதப்பட்டு, அதற்குப்பலர் பலவிதமான பொருள் கொண்டுள்ளனர். என் நண்பர் ஒருவருடன் சாப்பாட்டு விடுதியிலே அமர்ந்தேன் உணவுக்கு, உண்டி முடிந்தது, மோரும் சோறும் கலந்துண்டு கொண்டிருந்த என் நண்பர், கூட்டு கொஞ்சம்போடு என்றார், பொரியலையும் கொண்டுவா, என்று கூறினார், பிறகு சோறும் போடென்றார், நான் பிரம்மித்துப்போனேன், மங்களம் பாடிட முதலடிதுவக்கியவர் முண்டும் கீர்த்தனம்பாட ஆரமம்பிக்கிறாரே இதென்ன என்று. சோற்றுக் கடைக்காரர் சொன்ன வண்ணம் செய்தார். என் நண்பர், இலையிலே இடப்பட்ட எதையும் தொடவில்லை, அப்படியே இலையை மடித்துவிட்டார், உள்ளே அத்தனை பண்டமும் பிடந்தது, நாங்கள் எழுந்துவிட்டோம், நண்பா! ஏன் இதுபோலச் செய்தாய்? வீணாக அவ்வளவு பண்டத்தை வைத்திடச் சொன்னாய், பிறகு உண்ணாமல் இலையிலே விட்டுவிட்டாயே, பாழாகாதோ? வீணாகாதோ? என்று நான் கேட்டேன்.

பாழுமாகாது வீணுமல்ல! நாமோ ஊறணா தருகிறோம் சாப்பாட்டுக்கு, நான்கணாவுக்கும் நாம் உண்பதில்லை, சோற்றுக் கடைக்காரனுக்குத்தான் மிச்சம். ஏன் அவனுக்கு அதுபோவது என்றுதான் இந்தச் சூட்சமம் கண்டுபிடித்தேன். நாம் சாப்பிட முடியாவிட்டாலும் ஆறணா அளவுக்கு அவன், இலையிலே பண்டம் போடவேண்டும் என்றார் என் நண்பர்.

பெரிய வேடிக்கையாக இருக்கிறது உமது சித்தாந்தம் என்று கூறிவிட்டுநான் சிரித்தேன், அவர் என் முதுகைத் தட்டிக்கொடுத்துவிட்டு, சித்தாந்தமும் இதிலே இருக்கிறது. ஏழை மக்ள் எச்சில் இலைக்குக் காத்திருக்கிறார்கள் வெளியே. சோற்றுக்கடைக்காரனின் காலடிச் சத்தத்தைக் கேட்க ஆவலாக அவர்கள் காத்திருப்பது, பூங்காவனத்திலே பூங்கடியாளுக்காக காத்துக்கொண்டிருக்கும் காதலன், சதங்கை சத்தத்தைக்கேட்க எவ்வளவு ஆவலாக இருப்பானோ அப்படிப்பட்டது. சதங்கைச் சத்தம் கேட்டுக் காதலன், வந்துவிட்டாள் நமது சல்லாபி என்று மகிழ்ந்திருக்கும் நேரத்திலே முதியவள் ஒருவள் கையிலோம் முறமும் கூட்டுக்கோலும் கொண்டு, உதிர் சருகு கூட்டிட வந்தால், காதலன் மனம் எப்படி இருக்கும்! அதுபோல, எச்சில் இலைகளை வீசிட வருபவனின் காலடிச்சத்தம் கேட்டதும் பசியுடன் இதுவரை போராடினோம், இனி பல்லைக் காட்டிடும் நாய்களிடம் கொஞ்சம் போர் இருக்கிறது, அதை எளிதிலே முடித்துககொண்டால், பிறகு வயிற்றுக்குக் கிடைக்கும் என்று எண்ணிடுவான் ஆவலாக. வீசப்பட்ட இலைகளை விரித்துப் பார்க்கும்போது, அவைகள் பூசிமெழுகப்பட்ட இடம்போல இருக்கக்கண்டால் அவன் மனம் என்ன பாடுபடும்! எவ்வளவு கலங்குவான்! அவனுக்கு மனமகிழ்ச்சி தருவதற்கு நான் கையாளும் முறையே சிறந்தது. நான் வீசும் இலையே அவன் விரித்தால் அவன் ஆனந்தக்கூத்தாடுவான், அதிலே அவனுக்கு சோறும் கறியும் சொகுசாகக் கிடைக்கும். ஏழைகளைக் காப்பாற்றும் வழி எச்சில் இலையிலே அதிகம் மிச்சம் வை!! - என்பதுதான் இந்தச்சம்பவத்திலே பதிந்துள்ள சித்தாந்தம் என்று கூறினார்.

இது நான் நண்பர் செய்த வேடிக்கை என்ற மட்டும் கொள்வதற்கில்லை. ஒரு சமயம் அவர் இதனை வேடிக்கைக்கு கூறியிருந்திருக்கலாம். ஆனால் ஏழைகளுக்கு இதம் செய்யும் வழிகளிலே, இதுபோன்ற முறைகளையும் கொள்பவர்கள் உண்டு. விழா நாட்களிலே ஏழைகளுக்கு சோறிடுவதும், வீட்டுவாசலிலே அவன் நின்று வினயமாகத் தன்பசியை அறிவிக்க உண்ட களைப்பால் உடல் துவளும் உருவங்கள் அவர்களுக்கு ஒரு பிடி தருவதும் நாம் காணும் காட்சிகள். இவை ஏழைகளைக் காப்பாற்றம் வழிகள் என்ற கருத்துடனேயே நடத்தப்படுகின்றன. ஆனால், ஏழைகளின் கூட்டம் இதனால் வாட்டத்தை ஓட்டிவிட்டதுமில்லை. அந்தக் கூட்டத்தின் தொகை குறைந்ததுமில்லை, அன்னதான சமாஜ ஆண்டுவிழக்களிலே அன்பர்கள் அன்புரையாற்றும் உலகிலே அரைவயிற்றுகஞ்சிக்கு அலைபவர்களின் தொகை குறையவில்லை, வளர்ந்து வருகிறது. எனவே, ஏழ்மையை நீக்கிவிடுவது தவிர ஏழைகளின் குறையைத் தீர்க்க வேறு வழிகள் பயன்படா. அதுபோலத்தான் கிராம சேவையும். கிராமங்களிலே உள்ள சீர்கேடுகளைச் சிறுகச்சிறுகப் போக்குவதற்குச் சுர்திருத்த திட்டங்கள் வகுத்துக்கொண்டு சிலர் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பர். கிராமத்தின் தேவைகள் என்ன? 1. நல்ல பாதை, 2. குடிநீர் வசதி, 3. ஆரம்பப் பாடசாலை, 4. வாசகசாலை என்ற எண்ணிக்கையோடு ஒரு கிராம சேவா ஊழியர் கூறுவார். அவர் பேசி முடித்ததும் அவரருகே அமர்ந்திருந்த ஆமதாபாத் சேலையும் ஆளைமயக்கும் சொல்லையும கொண்ட ஆரணங்கு எழுந்திருந்து, முக்கியமான, விஷயத்தை என் சினேகிதர் மறந்துவிட்டார், ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு நர்ஸ் தேவை, என்று கூறுவார், உடனே தலைவர், மன்னிக்க வேண்டும் என்று மலர்ந்தருளுவார், பிரசங்கியார் முகத்திலே அசடு வழியும இப்படி கிராமசேவா பிரசங்க மாரிபொழிவார். ஆனால், இவைகள் அன்னதான சமாஜ மூலம் ஏழைகளைக் காப்பாற்ற முயலுவதுபோல ஆகாத திட்டங்களாக முடியுமே தவிர, பிரச்னையைத் தீர்க்காது. எப்படி ஏழ்மை இராதபடி திட்டம் வகுத்தாலொழிய ஏழைகளின் குறையைத் தீர்க்க முடியாதோ அதுபோல, கிராமம், நகரம் என்ற பேச நிலையைப் போக்கினாலன்றி, கிராமத்திலே காணப்படும் குறைபாடுகளை நீக்க முடியாது. ஏழைகளைக் காப்பாற்றும் வழி ஏற்ழமையை நீக்குவது, ஏற்மையால் ஏற்படும் விளைவுகளிலே, ஒன்றிரண்டை நீக்க முயல்வது போதாது. காய்ச்சல்காரனின் வாய் கசப்பு போக, நாவிலே தேன் தடவினால் போதாது, காய்ச்சலைக் கஷாயம் தந்து போக்கவேண்டும். உடலிலே நோய் இருக்கும்வரை அவன் நோயாளியாகத்தான் இருப்பான், நோயாளிக்கு வேதனைகள் இருந்துதான் தீரும். பொருளாதார அமைப்பு முறையிலே பேதம் இருக்கும் வரையிலே ஏழ்மை இருந்துதான் தீரும்; ஏழ்மை இருக்கும் வரையிலே ஏழை இருந்துதான் தீருவான், ஏழை இருக்கும் வரை, அவனுடைய குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

நகரவாசிகளான நளினிகளும் நாதர்களும் ஓர் நாள் கிராமம் சென்று கிராம மக்களுக்கு உபதேசம் செய்கிறார்களே அதைப் பகுத்தறிவாளர்கள் கிராம சேவை என்று கருதமாட்டார்கள். அது அந்த நாகரீகத் தோழர்களுக்கு மனமகிழ்ச்சிக்காகச் சிக்கனமான முறையிலே அவர்களாக வகுத்துக்கொண்ட நிலாச் சோறு! கிராம சேவை என்றால் கிராமம் நகரம் என்று பேதம் காட்டி அந்தப் பேத அமைப்பின் மூலமாக ஒய்யாரமாக வாழ ஒரு இடமும ஓலமிட்டு வாழ மற்றோம் இடமும், ஓலமிடுபவரிடம் ஒய்யாரமாக வாழுவார் ஓய்வாக இருக்கும் ஓர் நாள் சென்று, துக்கம் விசாரிப்பதுமாக இருக்கிறதே, அது ஒழிய வேண்டும். கிராமசேவை என்று இன்றுள்ள திட்டம், வெறும் கபடம். கள்ளமறியாத உள்ளமுடையவரைக் கொள்ளையடித்து வாழும் வழி. இதநைச் சமதர்மிகளோ, பகுத்தறிவாளர்களோ, ஏற்கமாட்டார்கள். இது சுரண்டும் முறை என்று கூறுவர், அழும் குழந்தைக்குப் பாலிலே அபின் கலந்தூட்டும் முறை என்றுரைப்பர். உண்மையிலே, தேச பக்தர்கள் என்பவர்கள் இத்தகைய கிராம சீர்திருத்தம், சேவை என்ற பேசுகிறார்கள் என்றால், அது சூதாக இருக்கவேண்டும் அல்லது ஏமாளித்தனமாக இருக்க வேண்டும். முன்னதாக இருப்பின் அவர்கள் கண்டனத்துக்கும், பின்னதாக இருப்பின் கேலிக்கும் ஆளாக வேண்டியவர்கள். ஆனால் நாடு இன்றுள்ள நிலையிலே அவர்கள், இரண்டுக்கும் சிக்காது, புகழப்படுகிறார்கள் போற்றப்படுகிறார்கள்.!!

காந்தியாருக்குக் கிராமவாசிகள் போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்ற கொள்கையின்படி வாழ்ந்து, நாகரீகத்திலே சிக்காமல் எளிய வாழ்க்கையிலே ஈடுபட்டு இகத்திலே இல்லமையை இன்பவல்லியாக ஏற்றுக்கொண்டு இருந்துவிடு, பரத்திலே பரமனுடன் இருக்கவேண்டும் என்பதுதான் கொள்கை. தண்டவாளப் பெயர்ப்பும் தபாலாபீஸ் கொளுத்துவதும் நின்ற பிறகு, தூதும் சிந்தும் நடந்து அதுவும் ஓய்ந்தபிறகு, அரசியலில் மந்தமான நிலைமை ஏற்படவே, காந்தியார் இதுபோது, கிராம சேவைபற்றிப் பேசவும், ஏழு இலட்சம் கிராமங்களுக்கு இதம் தேடும் திட்டம் தீட்டவும் ஆரம்பித்திருக்கிறார். கதாசிரியர்களுக்கு எவ்வணணம் எந்தச் சமயத்திலே எந்தக் கதையை எழுதுகிறார்களோ, அந்தக் கதையிலே கற்பனை செய்யப்படும் கதாநாயகியே அந்த நேரத்திலே அழுகிற் சிறந்தவளாக, ஸ்திரு இரத்னமாகத் தோன்றுகிறாளோ அதுபோலக் காந்தியார், எந்தச் சமயத்திலே எந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசத் தொடங்குகிறாரோ, அந்தச் சமயத்திலே அந்தத் திட்டமேதான், விமோசன மார்க்கமாகவும், விடுதலைக்கு வழியாகவும், சுயராஜ்யத்துக்சுச் சூட்சம பாதையாகவும் தோன்றுவது வழக்கம். அவர் மனமார அவ்வண்ணடம் எண்ணுகிறாரோ இல்லையோ, அவ்வண்ணம் மக்கள் நினைக்கும்படி செய்வதிலே அவர் சமர்த்து வேறு யாருக்கும் வராது. அம் முறையிலே இப்போது, தாம் கூறும் கிராம சேவைத் திட்டத்தை நிறைவேற்றினால் சுயராஜ்யம் சித்தியாகும், வைசிராய் ஓடோடி வருவார், என்று கூறுகிறார்.

கிராம சேவைபற்றி அவர் கொண்டுள்ள கருத்து, கிராமவாசியை, ஏற்மையிலே இனிமையும், எளி வாழ்க்கையிலே இன்பத்தையும், பழமையிலே பக்குவத்தையும் காணச் செய்வதுதான்! உன் பெட்டியிலே தங்கக்காசு இருக்கக்கூடாது! உன் விழி, போக போக்கியப் பொருளின் மீது செல்லக்கூடாது - என்று கூறுகிறார் கிராம மக்களை ஈடேற்றப் போவதாகக் கூறும் புண்ணியர். இம்முறை அவர் தமது ஆஸ்ரமத்திலே ஊழியர்களைக் கூட்டி வைத்துச் செய்துள்ள உபதேசம், விசித்திரமானது. சிலர் கிராமங்களையே அழித்துவிடவேண்டும், எங்கும் நகரமயமாக்கப்படவேண்டும் என்று கூறுகிறார்கள் என்று கூறிவிட்டு, தனக்கு அந்தத் திட்டத்திலே நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துவிட்டார். யந்திரசாதனங்களோடு கூடிய தொழிற்சாலைகள் நகர அமைப்பு முறை, இது சில காலமாகத்தான் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுகம் உண்டா என்பது தெரியாது. ஆனால் ஒன்றுமட்டும தெரிகிறது, இந்த யந்திர சாதனங்களோடு கூடிய தொழிற்சாலைப்பெருக்கமே உலகப்போருக்குக் காரணம் என்று மட்டும் தெரிகிறது - என்று காந்தியார் கூறியிருக்கிறார். பணத்தைப் பாஷாணம் என்றும் சுகத்தைச் சொக்குப்பொடு என்றும் மதவாதி கூறுவதுண்டு. அதுபோலக் காந்தியாருக்கு இந்தத் தொழில் வளர்ச்சியும் யந்திரப் பெருக்கமும், அதாவது விஞ்ஞான வளர்ச்சி விஷயம்க இருக்கிறதாம். இந்த விஞ்ஞானமே உலகப் போருக்குக் காரணம் என்று பழிபோடுகிறார்.

போல் என்றால் அதனால் தொல்லையும் துயரமும், கஷ்டமும, நஷ்டமும், பொருள் சேதமும் உயிர்ச் சேதமும் நேரிடுகிறது. அது மக்களுக்குச் தெரியும் எனவே போல் என்றால் பொல்லாங்கானது என்று அவர்கள் கருதுவார்கள். இது காந்தியாருக்குச் தெரியுமாகையால், விஞ்ஞானத்தினாலேயே போர் எனும் விபருதம் ஏற்பட்டு வருகிறது என்று கூறிவிட்டால், பாமரர்கள் விஞ்ஞானத்தையே விபருதமாககக் கருதி வெறுப்பார்கள் என்ற தந்திரத்தை மந்திரக்கோலாகக் கொண்டு முன் ஆட்டுகிறார்.

காந்தியாரின் வாதத்திலே விஷயம் இருக்குமளவு விவேகம் இல்லை என்பது மட்டரகங்களுக்குக் கூடத் தெரியக் கூடியதே போருக்குக் காரணம் விஞ்ஞானம் செறிந்துள்ள இக்கால யந்திரசாதனமானால், போர், விஞ்ஞான காலத்திற்கு முன்னால் இருந்திருக்க முடியுமா? அப்படிப்போல் நடைபெறாமலே இருந்ததா! மதச்சண்டைகளால் மண்டைகள் உடைந்ததே, விஞ்ஞானமா, இதற்க வித்து? காந்தியார் போற்றிடும் இரமன் நடத்திய சண்டை, காவிய காலத்துச் சண்டையாயிற்றே, விஞ்ஞனம் என்ற பதமே தெரியாதே அதுபோது! வேதாந்திகளும் ராஜரிஷிகளும், முனீஸ்வரர்களும் மூலத்தை உணர்ந்தவர்களும் இருநத அந்த நாட்களிலே நடந்ததாகக் கூறப்படும் பயங்கரமான சண்டைகள், விஞ்ஞானத்தின் விளைவுகளா? மாடு, மனை, மங்கை, மதம், எனும் காரணங்களுக்காக மகத்தான சண்டைகள், மண்டலங்கள் அழியக்கூடிய சண்டைகள் நடந்துள்ளனவே, அவைகள் விஞ்ஞானத்தால் விளைந்தனவா? எந்த விவேகியாவது இவருடைய வாதத்தை மதிப்பானா?

(திராவிடநாடு - 10.12.1944)