அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குபேர - குசலா!
படக்காட்சியல்ல! பாத்மாதா நாடக மண்டலியாரின் அரசியல் நாடகம், நாம் குறிபிடும் குபேர-குசலா. இந்த நாடகத்தை நாடாத்த இதுபோது மும்முரமாக ஒத்திகை நடைபெற்று வருகிறது. ஆகாகான் அரண்மனையிலிருந்து வெளியேறிய காந்தியார், இதிலே, நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்நாடகக் கருத்து அவருக்கு இன்று நேற்று தோன்னியதல்ல என்று அவர், ஆஸ்ரமம் அமைத்துககொண்டு, அரை நிர்வாணக் கோலங்கொண்டு, ஆட்டுப்பால் அருந்தி அந்தராத்மாவுடன் அளவளாவத் தொடங்கினாரோ அன்றே அவருக்க இந்த குபேர-குசேலா திட்டம் தோன்றி விட்டது. இந்த நாடகம் நடத்தப்பட்டால், கொட்டகையில் கலவரம் விளையுமென்பது, கதையின் போக்கையும் நடிகர்களின் நிலைமையும் அறிந்தவர்களுக்குத் தெரியும், ஆனால் பாரத்மாதா நாடக மண்டலியாருக்க மட்டும் அபாரமான நம்பிக்கை தங்கள் நாடகத்திற்கு நாட்டிலே ஆதரவு கிடைக்குமென்று, அவர்கள் அவ்வப்போது தயாரித்துக்காட்டும் ஒவ்வொரு நாடகத்தின்போதும், நம்பிக்கையுடனேயே கிளம்புகின்றனர். பிறகோ கொட்டகையிலே கூச்சலும் குழப்பமும் ஏற்படும, ஆதரவு கருகிவிடும், ஆசை பங்கமாகும், மோசமான நிலைமை முற்றுமன்னம் நாடகத்தை நிறுத்திவிடுவர். இதுபோல, ஒத்துழையாமை சத்தியாகிரகம், உப்பள முப்பள முன்றுகை முதலிய பல நாடகங்களும் நடத்தப்பட்டுக் கைவிடப்பட்டன. இதுபோது வெள்ளையரை விரட்டும் நாடகம் நடத்தப்பட்டு அதுவும் வீணாகவே, அவசர அவசரமாகக் குபேர-குசேலா நாடகம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

குபேரனும் குவேலனும் ஒன்றாகக் கூடி இந்தப் பாரதவர்ஷத்தைப் பரிபாலிக்க வேண்டுமென்று ஒரு திட்டம் இதுபோது தயாராகிக் கொண்டு வருகிறது. வறுமையிலே மூழ்கி, பிச்சை எடுத்தலன்றி வேறு வாழ்க்கை வழிதேடாது பல பிள்ளைகளுட்ன் வாழ்ந்த குசேலருக்கு பொன்னாலான போபுரங்களம், மணிமாடங்களம் அமைந்த மாளிகையிலே வீற்றிருந்த கண்ணன், கோடி போடியாகப் பொன்னளித்துக குசேலரைக் குபேரச் சம்பத்துடையவராக்கினார் என்ற புராணம் கூறுவர். நாம் கூறுவது இதுபோல் புராணப் பிரியர்கள் மனதிலே மூண்டு கிடக்கும் திட்டமேயாகும். செல்வத்துக்கரசனும் வறுமையின் வேந்தனும் கூடி இந்நாட்டை ஆளவேண்டுமாம்! அதாவது, குபேரன் போன்ற பிர்லாவும், குசேலர் போன்ற காந்தியாரும் கூடி இந்தியாவை ஆளவேண்டுமாம்! இந்த ஆட்சித் திட்டத்தைத்தான் நாம், பாரத் நாடக மண்டலியின் புதிய நாடகம் என்றுரைத்தோம். அவர்களின் மற்ற முயற்சிகள் மங்கிப்போனது போலவே, இம்முயற்சியும் மங்கத்தான் போகிறது.

காந்தியார், தம்மை ஏழைகளின் பிரதிநிதி, தரித்திர நாராயணனின் பூஜாரி என்று கூறிக்கொள்கிறார், ஓலை வேய்ந்த விடுதியிலே வாழ்கிறேன் பாருங்கள், ஒத்தை வேட்டியுடன் உலவுகிறேன் காணுங்கள்! மூன்றாம் வகுப்பு வண்டியிலே புரயாணம் செய்வதை நோக்குங்கள் என்று கூறுகிறார். ஸ்ரீபிர்லாவோ, கோடீஸ்வரர்! வடநாட்டிலே பணக்கோட்டைகள் அத்துக்கொண்டு வாழ்கிறர், தென்நாட்டிலே அவருடைய திருப்பார்வையால் துய்ந்து போகாத இடம் அதிகமில்லை. ஆலைகளிலே அவருடைய நாமாவளி! தங்க வெள்ளி மார்க்கட்டுகளிலே அவருடைய திருததூதர்கள்! பாங்கிகளிலே, பங்கு அங்காடிகளிலே அவருடைய பரிவார்! பத்திரிகைகளிலே அவருக்குப் பராக்குக் கூறும் பேர்வழிகள்! பணந்தான் பாதாளமட்டும் பாயுமாமே! அதனால் இன்று பிர்லாவின் பிடி இல்லாத இடமேயில்லை என்று கூறும் அளவுக்கு ஆதிக்கம் பெற்று வருகிறார். மேனாடுகளிலே உள்ள தொழிலரசர்களும் பியாபார வேந்தர்களும், தனக்க ஈடில்லை என்று கூறும் துணிவும் அவருக்குண்டு. அவருடய அடைப்பந் தாங்கும் பணியைத் தேசோத்தாரணகாரியம் என்று கருதுகின்றனர். காங்கிரஸ்காரர்கள். காங்கிரசுக்குத் திட்டங்கள் தயாராவது அவர் வீட்டுத் தாழ்வாரத்திலே! சட்டமறப்புக்குச் சல்லடங்கட்டும சூரர்களுக்குச் சன்மானாதிகள் வழங்கப்படும இடம், பிர்லா மாளிகை! காங்கிரஸ் முதலமைச்சர்கள் அவர் முற்றத்திலே உறங்கிக் கிடப்பர்! காந்தியார், மீராபாயுடனும், சுசிலாக்களுடனம், சத்காரியாதிகளிலே ஈடுபட்டுச் சரோஜினீகளின் பராமரிப்பிலே இருப்பதும் பிர்லா மாளிகையிலே! அவருடைய ஆட்சியை உடனிருந்து நடத்தி வைக்க, தலால் என்னம் தனவந்தரும், தாகூர் தாசர்களும், பஜாஜ் பரம்பரையினரும் உண்டு. ஒரு பத்துக் குடும்பம்; இன்று பாரத்வர்ஷத்தின் பரிபாலர்களாகிவிட்டன! இப்படி ஒரு சில செல்வக் குடும்பங்கள் ஒரு பரந்த நாட்டின் போக்கைத் தமது வரவு செலவுக் கணக்குப் புத்தகத்தையே சட்டமாகக் கொண்டு, மாற்றுவதற்குத்தான், முதலாளித்தனம் என்ற கூறுவர், இந்த முதலாளித்தனத்திடம் முகமன்கூறி, கூப்பிட்ட நேரத்திலே அதன் அவையிலே நின்று கூத்தாடிச் சாமரம் வீசிடுவதற்கு ஒரு அரசியல் கட்சி! இந்தக் கூட்டாட்சியையே நாம் குபேர-குசேலா என்று கூறுகிறோம், இதற்கு மேனாட்டார் சூட்டும் பெயர் பாசீசம் என்பதாகும்! இந்த் அரசியல்கட்சிதான், காங்கிரஸ். அதன் தலைவர் காந்தியார், பரம ஏழை சன்யாசி அவருடைய தோழரும், போஷகரும், பிர்லாக்களே! இந்தக் கூட்டாட்சிக்கு வேலை செய்வதையே, தேசியப் பத்திரிகைகள் தமக்கேற்ற திருத்தொண்டாகக் கொண்டுள்ளன.

அரசியல் கட்சி - குசேலர் ஒருபுறத்திலே குடும்பக் கஷ்டத்தைக் கூறியபடியும், கோவென்றழும் பாலகரைக் காட்டியபடியும், பிச்சை எடுத்தபடியும் நின்று காட்சி தந்தபடி இருக்கிறது.

குபேரனோ - முதலாளிக் கட்சியோ - பத்தாயிரம் கோடி ரூபாயிலே நாட்டுத் தொழிலே வளர்க்கத்திட்டம் தயாரிக்கிறது. பிர்லா திட்டம் என்று இன்று பேசப்படும் பத்தாயிரம் கோடி ரூபாய்த்திட்டம், ஒரு நாளைக்கு ஒரு இந்தியாவின் சராசரி வருமானம் ஒன்றே காலணாத்தான் என்ற ஓலமிடும் குசேலக்கட்சி - காந்தி கட்சியின் ஆதரவைப் பெறுகிறது! இந்த விந்தையான கூட்டாட்சியை எப்படியேனம் ஏற்படுத்த வேண்டுமென்பதே காந்தியாரின் நோக்கம். பிர்லாக்கள் ஆளவேண்டும், காந்தி பக்தர்கள் அந்த ஆட்சிக்கு ஆதரவு தரவேண்டும், நாட்டினர் உழைத்து உருமாளி, உண்ண உணவுக்கு ஏன்றும்போல கஷ்டமனுபவித்துககொண்டு, உயர் ஜாதிக்காரரென ஒருக் கூட்டத்தை வைத்துக்கொண்டு, அதற்கு மற்றவர் உழைத்து அலுத்து, காயமே இது பொய்யடா என்ற பாடி, இறைவன் திருவடி நிழலிலே கலந்திட வேண்டும். இதுதான் பாரத வர்ஷ் பாசீசத்தின் திட்டம்!! இதற்கான ஒத்திகையே இப்போது நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட்டுத தீர்மானம் ஆகாகான் மாளிகையிலே காந்தியாரைக் கொண்டு சேர்த்தது, கொக்கிப்புழு அவரைச் சிறைமீட்டுவிட்டது! வெளியே வந்த காந்தியார், வாளாயிருந்தாரா! இல்லை. ஆகஸ்ட் தீர்மானத்தை நான் வாபஸ் வாங்க முடியாது என்ற கூறுகிறார். வைசிராயுடன் அவர் நடத்திய கடித்ப் போக்குவரத்தும, டாடன் ஹாம் துரையுடன் நடத்திய கடிதப் போக்குவரத்தும, பத்திரிகைகளை நிறப்புவது காண்கிறோம். வைசிராய் வேவல், தெளிவாகவே கூறிவிட்டார், காந்தி சீடர்களின் கலகத்தைச் சர்க்கார் மறக்க முடியாது, காங்கிரஸ் அக்குற்றத்தை மறைக்க முடியாது என்ற. மகாத்மாக்கள்தான் எதையும் மறுக்கலாமே, சில சமயங்களிலே மதியையுங்கூட! அம் முறைப்படி காந்தியர், ஆகஸ்ட் தீர்மானம் தீங்கற்றது, அதனைத் தீங்குள்ளது என்ற கூறினதைச் சர்க்கார் வாபன் வாங்க வேண்டும் என்று கூறுகிறார். காந்தியார் மௌனம், காந்தியார் புன்னகை, சரோஜனி அம்மையாரின் காவல், சுசிலா நாயரின் நாடிப் பரிட்சை, காந்தியார் கண்ட சினிமா, அவருக்கு இசை விருந்தூட்டிய நிருபர்கள் என்ற இச்செய்தித் தலைப்புகள் பத்திரிகைகளை நிறப்புகின்றன. கொக்கிப் புழுபோக மருந்து உட்கொள்ள மகாத்மா மறுத்துவிட்டார் என்ற செய்தி முன்றுகலந் தலைப்பிலேயும், பின்லாந்தின் துறைமுகப்பட்டினத்தை ரஷியர் பிடித்துவிட்டார் கடும்போருக்குப் பிறகு என்ற செய்தி ஒரு மூலையிலும் பிரசுரிக்கப்படுகின்றன, பாசீசப் பத்திரிகைகாளல்.

இதே சமயத்தில், பத்தாயிரம் கோடி ரூபாய்த் திட்டத்தைப் பற்றிப் பிர்லா கூட்டம் பேசிக்கொண்டும், பத்திரிகைகளிலே அறிக்கைகள் வெளியிட்டபடியும் இருக்கிறது. உலகிலே பயங்கரமான போர், அசாம் அருகே எதிரியின் அட்டகாசம் உள்நாட்டிலே உணவுப்பொருள் முடை, இந்த வேளையிலே நடக்கிறது, பாசீசத்தின் பல்லவி. சர்க்காரோ, பாசீசப் பாசறையிலிருந்து தலால் எனும் தனவந்தரைப் பிடித்திழுத்து, பீடத்திலே அமர்த்தியிருக்கிறது. சர்க்காரின் நோக்கம் பாசீசப் பாசறையிலிருந்து ஒரு படைத்தலைவரை நமது பக்கம் அழைத்துக் கொண்டோம் என்பதாக இருக்கக் கூடும், பிர்லாக் கூட்டமோ, நமது ஒற்றரை எதிரியின் கோட்டைக்குள்ளேயே அனுப்பி வைக்கிறோம் என்று எண்ணிடக்கூடும். நமக்கோ, இது முன்னர், பிரிட்டனிலே முதலமைச்சராக இருந்த சேம்பர்லெயின், செய்து கொண்டாரே மூனிக் ஒப்பந்த்ம், ஜெர்மன் சர்க்காருடன் சமரசமாகப் போக, அதைப்போல தெளிவாகத் தெரிகிறது, நாட்டிலே பாசீசத்தை வளர்க்கக் காந்தியார், படை திரட்டி வருகிறார். இந்தச் சமயத்திலாவது, சர்க்கார், விஷயத்தை உணரக்கூடாதா! விஷயத்தை உணர்வது என்றால், இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி மிண்டும் காந்தியாரைக் கைது செய்வது என்பதல்ல! சர்க்காருக்குப் பாசீசத்தை அழிக்கம் விதம், சிறைக்குள்ளே பாசீசத் தலைவர்களைத் தள்ளுவதல்ல என்பது தெரியவேண்டும். பாசீசத்தை ஒழிக்க ஒரேவழிதான் உண்டு, அதுதான் பாகிஸ்தான், திராவிடநாடு, எனும் இன அரசுகளை ஏற்படுத்துவது. தேளின் கொடுக்கினை நறுக்குவதுபோல, குபேர - குசேலாக் கூட்டாட்சிக்கு இற்தியா பூராவையும் உலவுமிடமாக்கிவிடாமல், எந்தெந்த இனம் எங்கெங்கு பெருவாரியாக இருக்கிறதோ அங்கு, இன அரசுகள் ஏற்பட வழி செய்துவிட்டால், பாசீசம் ஒழியும் வேறு வழியில்லை! பாகிஸ்தானிலே, பிர்லாக்கள் தமது பிடியைச் செலுத்த முடியாது. காந்தீயர்கள் கோட்டைகள் அமைக்க இயலாது. திராவிட நாட்டிலும் அவ்விதமே. இந்த இருபெரும் இடங்களிலே இன அரசுகள் ஏற்பட்டுவிட்டால், இறைகிடக்காத இறைப்பாம்பு போலாகிவிடும் பாசீசம், அப்போது அதனை ஒழிப்பது எளிய காரியமாகிவிடும் பாசீசம் இன்று பரவுகிறது, இதனை உணர மறுக்கம் சர்க்கார், உண்மையிலே மக்களை அதன் பாதகச் சுழலிலே சிக்க வைக்கும் பழியை ஏற்றுக்கொள்கின்றனர். பாமரருக்கு அப்பசிசம் குசேலனாகக் காட்சி தருகிறது, சர்க்காருக்குக் குபேர வடிவிலே காட்சி அளிக்கிறது, முன்வடிவம் பாமரரைப் பசப்புகிறது, இரண்டாம் உருவம் சர்க்காரை மிரட்டி விடுகிறது. இந்த நாடகம் பலிக்குமென்று நம்பியே, காந்தியார் இப்போது மும்முரமாக வேலை செய்கிறார். ஆனால் ஒன்று உறுதி! சர்க்கார் இதனை உணராவிட்டாலுங்கூட, முஸ்லிம்களின் தலைவர் ஜனாப் ஜினனா அவர்களும், திராவிடர் தலைவர் பெரியார் அவர்களம், இந்தச் சூதின் போக்கைக் கவனித்துக்கொண்டு வருகின்றனர். அவர்கள் கவனிப்பது மட்டுமல்ல; காந்தியார்ன் சம்பந்தியார், ஆச்சாரியாரும் இதனைத் தெரிந்து திகைக்கிறார். ஏனெனில் அவர் நன்கு அறிவார், வீறுகொண்ட முஸ்லிம் இனமும, விழிப்புற்ற திராவிட இனமும், இந்த விந்தையான குபேர-குசேலா நாடகத்தைக் காந்தீயர்கள் நடத்தத் தொடங்கினால், கொட்டகையில் (நாட்டில்) கூச்சலும் குழப்பமும் கிளம்பும், நாடகம் நடைபெறாது எனும் உண்மையை! எனவேதான் போலும் ஆகாகான் அரண்மனைக் கதவு திறக்கப்படவேண்டுமென்று கூறிக்கொண்டிருந்த ஆசசாரியார், கதவு திறந்து, காந்தியார் பெளிவந்தபிறகு, தன் வீட்டுக கதவைத் தாளிட்டுக கொண்டு வியாசர் விருந்து தயாரித்துக் கொண்டிருக்கிறார்!!

(திராவிடநாடு - 25.06.1944)