அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


குருவும் குதிரையும்

குருவிடம் பக்தி காட்ட வேண்டியதும், அவருடைய சொற்படி நடக்கவேண்டியதும் முக்கியமா? குதிரையிடம் அன்பு காட்டுவது முக்கியமா?

இந்தச் சிக்கலான பிரச்னை, உணவு, உடை, ஊராளும் முறை, முதலிய பல்வேறு பிரச்னைகளையும் மீறி, அமைச்சர் சுப்பராயனாருக்க, வந்துவிட்டது.

குருவிடமோ, பக்தி மட்டுமல்ல - நன்றியறிதல் காட்ட வேண்டிய அளவுக்குத், தொடர்பு இருக்கிறது. அவருடைய பெயர் கூறியே, பதவிக்கு வரமுடிந்தது. குரு பக்தியைச் செயலில் காட்டவேண்டியபோது, காட்டத் தவறி விட்டவர்களிலே இவரே முதன்மையானவர், என்ற பழிச்சொல், எங்கே தமது அரசியல் வாழ்வைப் பாழாக்கிவிடுமோ என்று அமைச்சர் அஞ்சியதுண்டு. அந்த அச்சததினின்றும் தப்புவதற்காகத், தமது குரு பக்தியை, மற்றவர்களை விடச் சற்று அதிகமாகவே, உரத்த குரலிலேயே டாக்டர் சுப்பராயன் காட்டிவந்தார். இப்போது நடைபெற்ற காந்தி ஜெயந்தியிலே, காந்தியாருடனேயே இருந்துவந்த வினோபாபாவே, மீராபென் போன்றார்களைவிட அதிகப் பற்றும் பாசமும், பக்தியும் சிரத்தையும் கொண்டவர்போலக் காட்டிக்கொண்டார். காந்தி மார்க்கமே சாந்தி மார்க்கம், என்று பாசுரம் படித்தார். எமது காந்தியார் வழிகாட்டுவதற்கு இருக்கும்போது, ஸ்டாலின் ஏன், பொதுஉடைமை ஏன், என்று கேட்டார் - கம்யூனிஸ்டுகளின் எதிரேயே!! இவ்வளவு பளிச்சென்று காட்டிக்கொண்டார், தமது குருபக்தியை. உண்மையிலேயே, குரு பக்தியினால், டாக்டர் சுப்பராயன் பலன் பெற்றவர்! அமைச்சர் பதவி, குரு தந்த பிச்சை, எனவே, குரு பக்தியை மறக்க முடியாது.

அதேபோது, அமைச்சருக்கு, குதிரையிடம் உள்ள பற்றும் பாசமும் குறைய மறுக்கிறது. குருவினால் பலன்பெற்றது போலக், குதிரையினால், பலன் பெற்றவரா, டாக்டர் சுப்பராயன் என்றால், அதுவும் இல்லை. ஆகாகான்போல, பர்லா கெமிடிபோல, ஜெயப்பூர் ஜோத்பூர் போல, குதிரையால் இலாபம், புகழ், பெறுபவருமல்ல. என்றாலும், குருபக்தி அவருக்குப் பலனை, இலாபத்தைத் தந்திருக்கிறது - அதேபோது, அந்த அளவுக்கு, குதிரை அவருக்குப்பலனும், இலாபமும் தந்ததாகத் தெரியவில்லை. அவரே, சட்டசபையிலேயே கூறினார், நான் பத்தாண்டுகளுக்கு மேலாகக், குதிரைப் பந்தய விளையாட்டுச் சங்கத்திலே தொடர்பு வைத்துக் கொண்டு இருந்தும், அதிலே பணம் வைத்துப் பந்தயம் ஆடினதில்லை, என்று.

ஆகவே, அமைச்சருக்குக் குருவிடம் பக்தி காட்ட வேண்டிய அளவுக்கு, குதிரையிடம் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்ற போதிலும், குதிரையைக் கைவிட மறுக்கிறார். அதற்காக, மக்களை, அவர்கள் நலனைக்கூடக் கைவிட மறுக்கிறார்.

குதிரைப் பந்தயம், விளையாட்டு களிலே ஒன்று என்கிறார். ஆமாம்! அமைச்சர் கூறுவது உண்மை. ஆனால், எத்தனை எத்தனை ஆயிரம் குடும்பங்களிலே, இதனாலே வேதனை மூண்டிருக்கிறது - எத்தனை குடும்பங்கள் கலகலத்துள்ளன, என்பதை எல்லாம், குமாரமங்கலம் ஜெமீன் தாரர் அறியமாட்டாரல்லவா! விளையாட்டாம் இது! கிரேக்க, ரோம் நாடுகளிலே, இதைவிட அருமையான விளையாட்டுகள் நடைபெற்றன. பசியோடுள்ள சிங்கத்தினெதிரில், ஒரு மனிதனை நிறுத்திவிட்டுச் சிங்கம் சீறிப் பாயமுடியாத உயரத்தில் சீமான்கள் அமர்ந்துகொண்டு, மனிதன் சிங்கத்திடம் போரிடும் காட்சியைச், சிங்கத்தின் பற்களால் அவன் சின்னாபின்னப்படு வதைச், சிங்கம் இரத்தத்தைக் குடித்துக் கர்ஜிப்பதைக் கண்டு, சபாஷ்! அருமை! ஆஹா! என்று ஆனந்தமாகக் கூவுவராம். இத்தகைய விளையாட்டிலே, வீராம்சம் சொட்டுவதாகக் கூறினர் - சொட்டியது அல்ல, கொட்டிற்று, மனிதனின் இரத்தம்! அத்தகைய விளையாட்டுகளையும், அந்தநாள் ஆணவக்கார்கள், அனுமதித்தனர் - அரசுகள் ஆதரவளித்தன. டாக்டர் சுப்பராயனும், இப்போது, விளையாட்டு வேண்டுமென்கிறார் - மக்களின் வேதனையைக் கவனிக்க மறுத்து எந்தவிளையாட்டு, யோக்யனை அயோக்யனாக்கிற்றோ, கபடமற்றவனைக் கள்ளனாக்கிற்றோ, படுத்துறங்கும் போது மனைவியின் நகையைத் திருடச் செய்ததோ, பாலகனுக்கு மருந்து வாங்கித் தருவதற்குப்பணம் இல்லை என்று கூறிவிட்டுப், பணத்தைப் பாழாக்கவைத்ததோ, அத்தகைய விளையாட்டு வேண்டும் என்கிறார், பசி, பட்டினி, பாடு, பாட்டாளியின் துயரம், நடுத்தரமக்களின் நலிவு, ஏதுமறியாத குமாரமங்கலம் ஜெமீன்தாரர், அமைச்சர் டாக்டர் சுப்பராயன். குதிரைகளிடம் காட்டும் இந்தப்பரிவிலே, ஆயிரத்திலோர் பாகம் பகிர்ந்து மக்களுக்கு மந்திரியார் அளிக்கக்கூடாதா! மக்களைத்தான் மறந்தார் - அந்த மறதி, மந்திரப்பதவியூட்டும் நோயின் ஓர்பகுதி - எனவே அதைக்கூடப் பிறகு கவனிப்போம் - மந்திரியார், எந்தக் குருவினால், இந்த அமைச்சர் பதவியைப் பெற்றாரோ, அந்தக் குருவிடம், பக்திகாட்ட வேண்டாமா? அவருக்குமா துரோகம் புரிவது? குருவைவிடவா, குதிரை! குருபக்தியையுமா, குதிரை, கைவிடச் செய்கிறது? எவ்வளவு வேதனைதரும் விந்தை இது.

அமைச்சர், அசுவ ரட்சகனாக இருந்தே தீருவேன் என்கிறார். குரு, கூறுவது என்ன? அமைச்சரின், குருதேவர், காந்தியார், கூறுகிறார் - கூறினால் மறந்து விடுவரோ, என்று - எழுதியே இருக்கிறார்.
“நான் குதிரைப் பந்தயத்தின் தீமைகளைப்பற்றி அடிக்கடி எழுதியிருக்கிறேன். ஆனால் என்னுடைய குரல், காட்டில் கத்திய குரலாகவே இருந்தது. நம்மை ஆண்டுவந்த அன்னிய அரசர்கள் அந்தத் தீய வழக்கத்தை விரும்பினார்கள். ஆனால் இப்பொழுது நாம் அந்தத் தீய வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அப்படிச் செய்யாமல், அன்னிய ஆட்சியின் நன்மைகளைப் போகவிட்டு விட்டுத், தீமைகளை வைத்துக் கொண்டிருக்கலாமா?”
என்று, தமிழ் அரிஜன் பத்திரிகையில் காந்தியார், இந்த ஆகஸ்ட்டு 24-ந்தேதி எழுதியிருக்கிறார்.

“அடிக்கடி எழுதியிருக்கிறேன்.” இது குருதேவரின் வாக்கியம்! அமைச்சர்களாகுமளவு மட்டுமே குருபக்தியைப் பலர் பயன்படுத்திக் கொள்வர், உபதேசத்தை, தத்துவங்களை மறந்துவிடுவர், என்று எண்ணிப்போலும், காந்தியார், அடிக்கடி எழுதிவந்தார். இடித்து இடித்து உரைத்தார் என்று பொருள் படுகிறது. அடிக்கடி குதிரைப் பந்தயத்தால் வரும் தீமைகளைக் காந்தியார் எழுதியிருந்தும், ஏன், அமைச்சர், குதிரைப் பந்தயத்தை ஒழிக்க முடியாது என்று பட்டவர்த்தனமாகக் கூறுகிறார். குதிரைகள் விஷயமாகக் குருவுக்கு என்ன தெரியும் என்று எண்ணுகிறாரா? குரு, ஆயிரம்கூறுவார், அதற்கெல்லாம் கட்டுப்பட்டு இருக்கமுடியுமா? என்ற அலட்சிய சுபாவமா? என்ன காரணம், குருகாட்டிய திட்டத்தைமீறி, அதற்கு நேர்மாறாக நடக்க?

காந்தியார், அந்த இதழில், “ஆனால் என்னுடைய குரல்காட்டில் கத்திய குரலாகவே இருந்தது” என்று, சோகம் கப்பியமுறையிலே எழுதியிருக்கிறார். குருவின் பேச்சுக், கவனிப்பாரற்றுக் கிடந்ததற்குக்காரணம் என்ன? அதனையும் அவரே குறிப்பிடுகிறார்.

“நம்மை ஆண்டுவந்த அன்னிய அரசர்கள் அந்தத்தீய வழக்கத்தை விரும்பினார்கள்” என்று.

தீயவழக்கம்! - இது அமைச்சர் பதவியைப் பெற்றுத் தந்த குருவின் பேச்சு.

அன்னியர்கள் இந்தத் தீயவழக்கத்தைப் புகுத்தினர் - நாமோ அன்னியரால் ஆளப்பட்டு வருகிறோம். ஆகவேதான், இதுபோன்ற தீயவழக்கங்கள் மலிந்துள்ளன - நான்காட்டும் நன்னெறியிலே புகுவதந்கு அவர்களுக்கு இஷ்டமில்லை; - அறநெறி அறிந்துரைக்கிறேன், கேட்பாரில்லை, -ஆகட்டும், ஆகட்டும் - இந்த அன்னியராட்சி ஒழியத்தான் போகிறது, இன்றில்லாவிட்டால் ஓர்நாள் நாம் இருக்கும் நாடு நமது என்றாகி, நாமே நாடாளத்தான் போகிறோம் - அப்போது, இந்தத் தீயவழக்கங்களைத் தொலைத்துவிடுவர், நமது சீடர்கள் - என்றெல்லாம், காந்தியார் எண்ணாமலிருந்திருக் கமுடியுமா? காங்கிரஸ் ஆட்சிப்பீடத்தில் ஏறியதும் காந்தியார், வெள்ளையர் என் விவேகமொழியைக் கேட்க மறுத்தனர், அவர்களுக்குக், குதிரைகளிடம் இருந்த அளவு மதிப்பு என்னிடம் இல்லை, ஒழிகிறார்கள் இந்த நாட்டைவிட்டு, இதோ என் சீடர்கள் அமருகிறார்கள் ஆட்சிப் பீடத்தில், ஒருவரியில் குதிரைப் பந்தயத்தை ஒழித்துவிடுகிறார்கள், பாரீர், என்று கூறியிருந்திருப்பார்.

ஆனால், இப்போது, டாக்டர் சுப்பராயன், குருவாக்கியத்தை விட, குதிரையையே மேலெனக்கொண்டு விட்டதைக் கேள்விப்பட்டால் குருவின் மனம் எவ்வளவு புண்படும் - எவ்வளவு திடுக்கிட்டுப்போவார்!

குருவா, குதிரையா, என்ற பிரச்னை வந்தது - நாட்டைக் காடாக்காயிவர்கள் தான் என்மொழி கேட்க மறுத்தனர் என்றால், என் சீடர் டாக்டர் சுப்பராயனே, குதிரையைத்தான் ஆதரிப்பேன், குருவையும் கவனியேன், என்று கூறிவிட்டாரே, என் செய்வேன், இந்தத் துக்கத்தை எதைக் கொண்டு ஆற்றிக்கொள் வேன், என்று வாடியிருந்திருப்பார். குருவா, குதிரையா? - குதிரைதான் - குரு அல்ல! அமைச்சர் அறிவித்துவிட்டார்! மக்கள் என்ன கூறப்போகிறார்கள்? மனம் உடைந்தவர்கள், குடும்பத்திலே தொல்லை பல கண்டவர்கள், ஏராளம், இந்தப் பாழும் குதிரைப் பந்தயத்தினால். ஏழைகளைக் கெடுக்கம், தொழிலாளரைப் பாழ்படுத்தும், இந்தக் கொடிய பழக்கத்தை, இனியும் விட்டுவைப்பது, ஆணவக்காரருக்கு அடுக்குமே யொழிய, மக்களின் நல்வாழ்க்கையைக் குறியாகக் கொண்டவர் களுக்கு அழகல்ல. ஒழுக்கத்திலே, ஓமந்தூராருக்கு, அதிகப்பற்ற உண்டென்று கூறுகிறார்கள். அவரோ, ஏழையைக் கெடுக்கும் இந்தக் கொடிய தீமை, இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார். ஏன், ஒமந்தூரார், தமது கருத்தைக் கூறக் கூடாது? சட்டசபையினரே! ஏழைகளைக் காப்பாற்றவே, நாங்கள் சொல்கிறோம் என்று எக்காளமிட்ட நண்பர்களே! இந்தக் கொடுமை, அன்னியர்கள் புகுத்திய தீமை, காந்தியாரால் பன்முறை கண்டிக்கப்பட்ட கொடுமை, இனியும் இருக்கத்தான் வேண்டும் என்று, குருவையும் மறந்து குதிரைக்காகப் பரிந்து, பேசுகிறார், அமைச்சர்! உங்கள் கருத்து என்ன? ஊராளச்சென்றது, ஊமைகளாகச் சட்டசபையிலே வீற்றிருக்க அல்ல! பேசுங்கள்! தெளிவாகப் பேசுங்கள்! தைரியமாகப் பேசுங்கள்! மக்களுக்காகப் பேசுங்கள்! டாக்டர் சுப்பராயனைக் கேளுங்கள், குருவா, குதிரையா, எதற்கய்யா,மதிப்பளிக்கிறீர் என்று கேளுங்கள்.

கட்சிக் கட்டுப்பாடு, கருத்தை மறைக்குதே நாங்கள் என்ன செய்வோம், என்று கசிந்துருகும் சட்டசபை அங்கத்தினர், இதோ, நமது மனக் கண் முன் நிற்கிறார்; அவரும் பேசுவதற் கில்லை! அமைச்சரோ, மக்கள் பக்கம் நிற்க மறுக்கிõர்! குதிரைகளோ, இனியும் பல குடும்பங்களைத் தமது காலால் போட்டுத் துவைத்துவிடத் தயாராக உள்ளன. இந்நிலையில், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் பண்பும் பொறுப்பும், பயிற்சியும் கொண்டவர்களின் கடமை என்ன? அவர்கள் கூடித், திட்டம் வகுத்து இந்தத், தீமையை எதிர்த்து ஒழித்தாக வேண்டும் - ஒழிப்பதற்கான கிளர்ச்சி, அப்படி ஒன்றும் பிரமாதமான கஷ்டமும் தரக் கூடியதல்ல. நேரடி நடவடிக்கை எடுத்தாகிலும், இந்தக் குதிரைப் பந்தயக் கொடுமையை ஒழிக்க, ஒரு படை திரள்கிறது, என்பதறிந்தாலே போதும், அமைச்சர் தமது போக்கை மாற்றிக் கொள்வார். பொதுவாகவே, இன்று நாடாளப் போயிருப்பவர்கள் மனதிலே ஒரு தவறான கருத்து இருக்கிறது. அதாவது, கிளர்ச்சி செய்ய, போராட, கஷ்டநஷ்டம் ஏற்க, சிறை செல்ல, சட்டம் மீறத், தங்களுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்கள் இந்த முறையினை அறியார், அறிந்திருப்பினும், அஞ்சவர் பணியாற்ற, அஞ்சாது கிளம்பினும், அதிகாரத்தைக் கொண்டு, கிளர்ச்சியை அடக்க விடமுடியும் என்று எண்ணு கின்றனர், பலப் பல மேதைகளை, மேட்டுக் குடியினரை, முடி மன்னர்களை, இவ்விதமான எண்ணம் பிடித்து ஆட்டிக் கெடுத்திருக்கிறது. இவர்கள் மட்டும், பாபம், எப்படித் தப்பி விட முடியும்! ஆனால் அந்தத் தவறான கருத்தைச், சொல்லால் மட்டும் அல்ல, செயல்மூலம், கருவறுத்தாலொழிய, இந்த நாடு, பரசீசத்திலிருந்து விடுபடமுடியாது. உண்மை மக்களாட்சி மலர வேண்டுமானால், பொதுமக்கள், இத்தகைய காரியங்களிலே, சுய சிந்தனையை முக்கியமானதாகக் கொண்டு, காரிய மாற்ற வேண்டும். கட்டுப்பாடும் கட்சியிலே உள்ள நிலையும் கெடும், என்பது பற்றிய கவலையற்றுப், பல காங்கிரஸ்காரர்கள், டாக்டர் சுப்பராயனின் போக்கை எதிர்க்க முடிவு செய்துள்ளனர் என்று அறிந்து மகிழ்கிறோம் - குதிரைப் பந்தயக் கொடுமையை ஒழிப்பதற்கான முயற்சியில், நமது பங்கும் உண்டு என்று கூறி, அந்த முயற்சியை வரவேற்கிறோம். நாடாள்பவர்கள் உணர வேண்டும், மக்களின் சார்பிலே நாடாளச் சென்றிருக்கிறோம் என்பதை. குதிரைப் பண்ணை வைப்பதற்கல்ல. ஏழை வாழ, ஆட்சி வேண்டும். அமைச்சர்கள் இந்த அரும்பாடம் பெற்றாக வேண்டும். மக்களின் கட்டுப்பாடான கிளர்ச்சியைப் போல, அமைச்சர்களை நல்வழிப்படுத்தக்கூடிய ஆசான் வேறுஇல்லை.

(திராவிட நாடு - 12-10-1947)