அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இந்தி ஆதிக்கம் தந்த வருத்தம்!
செல்வோம்! வெல்வோம்!

ஆகஸ்டு 1

ஆரம்பமாகிறது, ஆற்றல்மிக்க திராவிடத் தோழர்களுக்கு ‘அழைப்பு‘ விடுத்த வண்ணம். தாய்மொழியின் தொன்மையையும் துச்சம் என்றென்னும், இந்தி ஏகாதிபத்யத்தை எதிர்த்து அறப்போர் துவங்குகிறது. அதிகாரம் – ‘கைக்கு‘ வந்ததெனும் திமிரால், எதையும், எப்படியும் செய்வோம் என்று அரசியல் ஆணவத்தின் மீது அமர்ந்திருக்கும் அரசியலாருடன், நாம் போராட்டம் துவக்கி விட்டோம்.

ஆட்சிப்பீடத்து அமர்ந்திருப்போருக்கு இன்றுள்ள பலம், பிரசார சாதனம், அடக்குமுறை வசதி, எத்தனையென்பதையறிவோம் – எனினும், நமது தாயகத்தை அழிக்கும் தருக்கு மதியுடன் மோதுவதென்கிற முடிவுக்கு வந்திருக்கிறோம். அரசியல் வேட்டை, சுயநலம் லாபம், சூதாட்டம் ஆடும் மேதைகள் அல்ல நாம் – பழம் புகழ் வாய்ந்த மொழியையும் அதன் வழி அமைந்திருக்கும் பண்பாட்டையும் காப்பாற்றும் நன்னோக்குடன் பயணம் புறப்பட்டு விட்டோம். கழகம் துவக்கிய நாள் முதல் நாம் வைத்திருக்கும் ‘கண்ணியம்‘ ‘சகிப்புத் தன்மை‘ – இவையிரண்டுமே, நமது கேடயங்கள். இவைகளை ஏந்தி, ‘எதையும் தாங்கும் இதயம்‘ பெற்ற நாம், நம்மை அழித்து வரும் வடவரின் வெறியினை வீழ்த்தப் புறப்பட்டு விட்டோம். இரயில்வே நிலையங்களிலுள்ள போர்டுகளிலிருக்கும் இந்தி எழுத்துக்களை அழிப்போம் – ஆகஸ்டு முதல் தேதி, இதனை இழித்தும் பழித்தும் பேசப்படும் – ஏளனம் கிளப்பும் – இவைகளைக் கண்டு கலங்காத உளம் வேண்டும். இந்தி வெறியினை எதிர்த்து, ஆகஸ்ட் முதல் தேதி, துவக்கும் அறப்போர் நிச்சயம் வெற்றியினையே தரும் அவினாசியார், ‘கட்டாய இந்தி‘யை நுழைத்தபோது ஆகஸ்டிலேதான் நமது அறப்போர் ஆரம்பித்தது, அப்போதிருந்தோர், நம்மீது வீசிய அடிகளையும், உடம்பிலே ஏற்படுத்திய தழும்புகளையும் ஒழுகிய இரத்தத்தையும் நாம் மறந்து விடவில்லை அதேபோல, கடைசியில் ‘கட்டாய இந்தியை ரத்து செய்து, அவர்கள் முக்காடிட்டுக் கொண்ட காட்சியையும் மறந்துவிட வில்லை. ‘ஆகஸ்ட் மீண்டும்! இப்போது, ஆச்சாரியார் முதன்முதலில் ‘இந்திக்கு வாயிலைக் காட்டிய, இவரது காலத்திலே மீண்டும் மொழிப்போர்! அவர், அன்று இருந்த, அதே இடத்திலிருக்கிறார் – நாமும் அதே நிலையில், ஆனால் பன்மடங்கு வலிவோடு எதிர் நிற்கிறோம்.

ரயில்வே போர்டு இந்தி அழிப்புப்போர், டில்லி பீடத்துக்கும், அவர் தம் ‘திருவடி‘ இருப்போருக்கும், திராவிட சமுதாயம் தரும் எச்சரிக்கையாகும். இந்த நிலை நமக்கம் – நம்மைச் சமாளிக்க வேண்டிய ‘சென்னை‘ யாருக்கும் ஏற்படக் கூடாதென்றே, கோவில்பட்டியில் தி.மு.க. வேண்டுகோள் விட்டது பதிலில்லை, டில்லியிலிருந்து! கேலியை வீசிற்று! இப்போது பாடங் கற்பிக்கும் வாய்ப்பினை, ‘ஆகஸ்டு‘ தரப்போகிறது.

இந்த அறப்போரின் நோக்கம், நம்மை எல்லாத்துறைகளிலும் அமுக்கி ஆட்டிவரும், ‘பாசிஸ்டு‘களுக்குப் புத்தி புகட்டவேயாகும். கோளக்காதினர் போல நம்மை வஞ்சிக்கும் வடவரின் ஆதிக்கத்தைத் தகாக்கவேயாகும்.

சீர்கேடுறும் திராவிடத்தின், பொது எதிரி, இந்தி ஏகாதிபத்யமே வடவர் பிடியால்தான், வாடுகிறோம் – சாகிறோம். இந்தப் பொது எதிரியின் ஆதிக்க ஆசையைத் தகர்க்கும், போராட்டமே, ‘ஆகஸ்டுப்‘ போர்.

கோவில்பட்டியிலே நடைபெற்ற மாநாட்டில் நாம் விடுத்த எச்சரிக்கையும் ‘ஆகஸ்டு‘ மாதத்தில்தான் இன்று, துவங்கும், அறப்போரும் ஆகஸ்டு மாதத்தில்தான் அவினாசியார் காலத்தில் துவங்கியதும் ஆகஸ்டில்தான் உறுதியோடு நமது அறப்போர் ஆரம்பமாகிறது. நமது எதிரியின் வெறியை அடக்க, பெரியார் அவர்களும், ‘ஆகஸ்டு முதல் தேதியைக் குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறார்கள். 1950 ஆகஸ்டில், நாம் எச்சரித்தோம் 1952 ஆகஸ்டை அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார்! இரட்டைக்குழல் துப்பாக்கி – வடநாட்டு ஆதிபத்யத்தின்மீது தாகக்ப்போகிறது மகிழ்கிறோம்!

பொது எதிரியை வீழ்த்த, நாமும் அந்த நாளில், நம்மாலான சேவையைச் செய்வோம் துள்ளிக்குதிக்கும் இந்தி ஆதிக்கத்தின் துடுக்கடக்கிடுவோம்.

ஆகவே, என் அருமைத் தோழர்களே! வீர வாலிப நண்பர்களே! ‘ஆகஸ்டு‘ – ஆயிரமாயிரம் இளைஞர்கள் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை, சர்வாதிகாரப் பித்தர்களுக்கு உணர்த்தட்டும் – வடநாட்டு கும்பலுக்குத் தெரிவிக்கட்டும்.

ஆகஸ்டு முதல் நாள் – கழகக் கொடியை மனதிலே நினைத்து, அதன் ஒரு பாதயிலே நெளியும் சிகப்பு நாம் சிந்திய இரத்தம் என்பதை மறவாமல், தாரும் பிரஷமாகப் புறப்படுங்கள்! ‘இந்தி‘யினை அழியுங்கள்! ஆனால் சிறிதும் கண்ணியத் தவறோ, அசம்பாவிதமோ ஏற்பட்டுவிடின் அது, நம் கொள்கைக்கே மாசு கற்பிக்கும் சினம் வேண்டாம் – கடமையைக் காட்டுக கடமை உள்ளம் காட்டாற்றையும் – தாண்டிச் செல்ல சக்தி தரும் இதை மனதிலே எண்ணுங்கள் – படை வரிசைக்கு தயாராக நில்லுங்கள்.

‘ஆகஸ்டு‘ ஆரம்பமாகிறது! செல்வோம்! வெல்வோம்!

அறப்போர் முறை

அறப்போரில் கலந்து கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள், ரயில்வே நிலையத்தில் இந்தி எழுத்தை அழிக்கத் தீர்மானித்ததும்.

1. உள்ளூர் தி.மு.க. கிளையில் தமது பெயரைப் பதிவு செய்துவிடவேண்டும் தலைமை நிலையத்துக்கும் உடனே கடிதம் அனுப்பிவிடவேண்டும்.

2. அறப்போருக்குக் கிளம்பும்போது திராவிட முன்னேற்றக் கழகக் கொடியின் அடையாளத்தை !பாட்ஜ்) சட்டையில் பொறித்துக் கொள்ள வேண்டும்.

3. ஜுலை 31ந் தேதி மாலையே துண்டு வெளியீடு சுவரொட்டிகள் மூலம், அறப்போர் தகவலைப் பொது மக்களுக்கு அறிவித்து விடவேண்டும்.

4. இரயில்வே ஸ்டேஷன் அதிகாரிக்ளு்கும், உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி விடவேண்டும்.

5. கழகக் கட்டடத்திலிருந்தோ, வீட்டிலிருந்தோ, தார் டப்பாவும் தூரிகை !பிரஷ்)யும் ஏந்திய வண்ணம், ‘இந்தி ஒழிக‘, ‘தமிழ் வாழ்க! திராவிட நாடு திராவிடருக்கே!‘ என்ற முழக்கத்துடன் இரயில்வே நிலையம் செல்ல வேண்டும்.

6. அறப்போர் வீரர்கள், ஒரு தடவைக்கு நால்வருக்குமேல் இருக்கக்கூடாது.

7. போர்டில் உள்ள இந்தி எழுத்தைத் தார் பூசி அழிக்கும் போது, அமைதி கெடாத வகையிலும், கண்ணியக் குறைவு ஏற்படாத முறையிலும், அறப்போர் வீரர்கள் நடந்து கொள்ள வேண்டும்.

8. போலீசார் கைது செய்தாலோ, அடித்தாலோ பொறுமையுடனும், பூரிப்புடனும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு துளியும் கலவரத்துக்கு இடம் ஏற்படவிக்கூடாது.

9. ஒரு குறிப்பிட்ட இடத்திலே, வேறு கழகத்தவர், இந்தி எழுத்து அழிப்பிலே ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு இடையூறாக, அதே நோக்கத்தில், அதேஇடத்தில், அறப்போர் புரியச் செய்யாமல், வேறு இடம், நேரம் தேடி இந்தி எழுத்து அழிப்புப் போரை நடத்த வேண்டும்.

10. வேறு கழகத் தோழர்கள் இந்தி எழுத்து அழிப்புக் காரியத்தில் ஈடுபட்டுச் சிறைப்பட்டுவிட்டால் போர்டிலே உள்ள இந்தி எழுத்தை அழிக்கும் காரியத்தை, தி.மு.கழகம் நடத்த வேண்டும்.

11. வேறு கழகத் தோழர் இந்தி எழுத்து அழிப்பதை வெற்றிகரமாக நடத்திவிட்டால், அந்த ஊரில் தபாலாபீசில் போர்டில், இந்தி எழுத்து இருந்தால் !சில ஊர்களில் உண்டு) அதை அழிக்க வேண்டும்.

12. அறப்போர் வீரர்கள், கைது செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டால், அபராதம் செலுத்த முடியாது என்று கூறி, சிறை செல்ல வேண்டும்.

13. எல்லா வகையாலும், அறப்போர் கண்ணியமாக முறையிலே இருக்கும்படி அந்தந்த ஊர் தி.மு.கழக முக்யஸ்தர்கள், கவனித்துக் கொள்ள வேண்டும்.

முரசு ஒலித்தது! முதல்படை புறப்படுகிறது!

திராவிட முன்னேற்றக் கழகம், இந்தி ஏகாதிபத்ய எதிர்ப்புக்கான அறப்போர் திட்டத்தை நடத்தத் தீர்மானித்துவிட்டது.

இந்தி ஆதிக்கத்தை அழித்தாக வேண்டும் – வடவரின் ஆதிக்க வெறியை ஒழித்தாக வேண்டும் – என்று துடிதுடித்துக் கொண்டிருக்கும் தேழார்களே! நேரடி நடவடிக்கையைத் தேடிக் கொண்டிருந்த தீரர்களே! தாயக விடுதலைப் போருக்குத் தயாராக உள்ள திராவிடத் தோழர்களே! இதோ கிடைத்துவிட்டது வாய்ப்பு! அழைப்பு வந்து விட்டது! ஆண்மையாளர்களே அணிவகுப்பிலே வந்து சேருங்கள்!

தாய்மொழியை அழிக்கத் துணிந்த பாதகர்கள், வேற்று மொழியாம் இந்தியைப் புகுத்தி ஆதிக்கம் செலுத்தும் அக்ரமத்தை அனுமதிப்பது அறிவுடைமையல்ல ஆண்மையாளர் செயலுமாகாது, அறநெறியும் அல்ல!

இந்தி மொழி ஆதிக்கக்காரர்களின் ஆணவம், எந்தக் கட்சியிலே இருந்தாலும் துளியாவது, தன்மான உணர்ச்சி, தன் நாட்டுப் பற்றும் உள்ள எவருக்கும், சகிக்க முடியாத அவமானத்தை உண்டாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.

இந்தி படித்தவருக்கே உத்யோகம் என்று செந்தமிழ் நாட்டிலே துணிவுடன் பேசப்படுகிறது! இந்தி படித்தால்தான் ஆட்சி மன்றங்களிலே அமர இயலும் என்று ஆர்ப்பரிக்கிறார்கள். இந்தியில் பேசு! இல்லையேல் வெளியே போ! என்று ஏளனமாக, நாடாள்வோரே பேசுகின்றனர் – ஏசுகின்றனர்.

தமிழிலே கேள்வி கேட்டால் டில்லி ஆட்சி மன்றத்தில், கேலி பேசி, வெளியே விரட்டுகிறார்கள். டில்லி மந்திரி லால்பகதூர் சாஸ்திரியின் இந்தி மொழி வெறியை முற்போக்குக் கருத்து கொண்ட பலரும் கண்டித்தனர் – எனினும் அத்தகைய ஆணவப்போக்கு வளருகிறது, வளருகிறது, நம்மை மானபங்கப்படுத்தும் அளவுக்கு வளருகிறது.

‘நாலு எழுத்து கற்றுக் கொண்டால் போதும், பேசத் தெரிந்தால் போதும்‘ என்றெல்லாம் பேசிவந்தவர்கள் இன்று இநதி படிக்காதவனுக்கு எங்கும் எதிலும் இடம் கிடையாது என்று இறுமாப்புடன் கூறுகிறார்கள்.

ஏன்? எங்கிருந்து பிறந்தது இந்தத் துணிவு? எதை நம்பி இந்த வெறியாட்டமாடுகிறார்கள்? என்று எண்ணிப் பாருங்கள்.

திராவிடச் சமுதாயம், இன உணர்வற்று, மொழிப்பற்று அற்று, பிளவுபட்டு பேதப்பட்டுக் கிடக்கிறது – எனவே திராவிடர்கள் ஏனென்று கேட்க மாட்டார்கள், எதிர்க்கும் சக்தியை இழந்துவிட்டார்கள், என்று வடநாட்டார் நம்புகிறார்கள். நமது ஆதிக்கத்தைச் சகல வழியாலும் எல்லாத் துறையிலும் புகுத்துவதற்கு இதுதான் தக்க சமயம் என்று எண்ணியே இவ்வளவு மொழி வெறியும் ஆதிக்க ஆணவமும் கொண்டுவிட்டனர்.

இந்தியை அரசியல் மொழியாக்குவதன் மூலம், திராவிடர்களை நிபந்தனையற்ற அடிமைகளாக்கி, திராவிடர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்து வாழவும் கோல் கொண்டு தாக்கவும், வடநாட்டு ஏகாதிபத்யம் திட்டமிட்டு வேலை செய்கிறது.

திராவிட நாட்டிலே, திராவிட மொழிக்கு ஆதிக்கம் இல்லை! திராவிடநாடு, டில்லி ஏகாதிபத்யத்துக்கு அடிமையாக்கப் பட்டிருக்கிறது. திராவிடநாடு மந்திரிகள், டில்லி ஏகாதிபத்யத்தின் கங்காணிகள், கமிஷன் ஏஜண்டுகளாகி, திராவிட மக்களைக் காட்டிக் கொடுத்து திராவிட நாட்டை வடவர் சுரண்ட வழிசெய்து கொடுத்துவரும் தரகர்களாக உள்ளனர்.

இந்த இழிநிலை, திராவிடத்தை வெகு விரைவிலே தேய வைத்துவிடும்.

இப்போதே திராவிடர்கள், கண்காணாச் சீமைகளிலே, கூலிகளாகி அவதிப்படுகிறார்கள் – இப்போதே, திராவிடரின் கைநெசவுத் தொழிலை நாசம் செய்து, வடநாட்டு ஆலை முதலாளிகளுக்குத் திராவிடம் மார்க்கட் ஆக்கப்பட்டு விட்டிருக்கிறது. இப்போதே திராவிட வியாபாரிகளின் வாழ்வு மார்வாடியின் பேனா முனையிலே சிக்கிக் கொண்டிருக்கிறது.

இப்போதே திராவிடத்திலே, தொழிற்சாலைகள், வியாபாரக் கோட்டங்கள், பாங்குகள், பங்கு வியாபாரக் கம்பெனிகள், தங்கம் வெள்ளிக் கடைகள், தானிய மண்டிகள் தரகு மண்டிகள், இன்ஷுரன்ஸ் கம்பெனிகள், பத்திரிகை நிலையங்கள், பண்டகச் சாலைகள், உண்டிக்கடைகள் என்று எதிலே பார்த்தாலும் வடநாட்டாரின் ஆதிக்கம் இருக்கிறது – வளர்கிறது!

இப்போதே, சென்னையில் சௌகார்பேட்டையும், திருச்சியில் டால்மியாபுரமும் இருக்கிறது.

இப்போதே பொருளாதாரத் துறையிலே ஆதிக்கம் கொண்ட வடநாட்டார், பிரிட்டிஷ் அமெரிக்க முதலாளிமார்களுக்குச் சமானாக கொழுத்து இருப்பதுடன், அந்த வெளிநாட்டு முதலாளிகளின் கூட்டுறவுடன், திராவிடத்தை மேலும் கொள்ளையடிக்கும் கொடுமையான திட்டத்தைத் தீட்டி நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

பாலைவனம் சோலைவனமாகி விட்டது வடநாட்டில்!

சோலைவனம் சுடுகாடு ஆகிவருகிறது இங்கே – திராவிடத்தில்.

இந்த இழிநிலையைத் தாங்கிக் கொண்டு எத்தனை நாளைக்குத்தான் இருக்க முடியும்? சுரண்டல் ஒரு பக்கம் ஆதிக்கம் மற்றோர் பக்கம் – இதற்கிடையில் கிடந்து சீரழிவதா, நமது திராவிடம்! மொழிவெறி, வடநாட்டினரை பிடித்து ஆட்டி வைக்கிறது எப்படியாவது, தமது மொழிக்கு ‘அரியாசனம் தேடித் தருவதில் முனைந்து நிற்கின்றனர். வடநாட்டினர் தேசிய பாஷையென்றனர் – ராஜ்ய பாஷை என்கின்றனர் – இந்தி படிக்காவிட்டால் இடமில்லை வாழ! என்று மிரட்டுகின்றனர். தாய்மொழியைக் காக்க,நாம் இதுவரை நடத்திய போராட்டங்களைக் கண்டும், இந்தி ஏகாதிபத்யம், அரசுரிமையைக் காட்டிக் கொக்கரிக்கிறது! எங்கும் இந்தி மயம் – உண்டாக்க, திட்டமிட்டு வேலை செய்கிறது. எதிலும் இந்திக்கே இடம்! தபால் இலாக்காவில், கார்டுகளில் இந்தி – இதுவரை நாம் நாணயங்களிலும், இந்தி! அதுமட்டுமல்ல, இரயில்வே நிலையங்களிலும், இந்தி அதுவும் முதலிடம் அதற்குத் தமிழ் மொழியைத் தாழ்த்துகிறது டில்லி ஆதிபத்யம்!! திட்டமிட்டுச் செய்கின்றனர் இந்தி வாலாக்கள்.

இந்தக் கொடுமையை எப்படி நாம் சகிக்க முடியும்? தாய்மொழிக்கு இடமில்லை – வடநாட்டு இந்திக்கு வாழ்வா? அதுவும் செந்தமிழ் நாட்டிலா!

நம்மை என்றென்றும், மீளா அடிமைக் குழியில் தள்ள, திட்டமிட்டுச் செய்யப்படும் சதியன்றோ, இது! வாழ்வைச் சுரண்டும் வடநாட்டாதிக்கம், நம் மானத்தையும் சூரையோடுகிறதே! இந்தக் கேவலம் ஒழிய வேண்டாமா? தலையிலே இந்தி! காலிலே, தமிழா! இந்திக்கு முதலிடமா? அதுவும் நமது இன்பத்திராவிடத்திலே? நம் நாட்டைச் சுரண்டும் கூட்டம், செய்கிறதே, இதை! இந்த ஆணவத்துக்குச் சமாதி கோல, டில்லி ஆதிபத்யத்துக்கு எச்சரிக்கை தர, மொழி வெறியர்களுக்குப் பாடம் கற்பிக்க.

முரசு ஒலித்து விட்டது!
முதற்படை புறப்படுகிறது!

வேண்டினோம் – எச்சரித்தோம் – இன்று, போர்!
!பெத்தநாயக்கன் பேட்டை !சென்னை)யில் 23-7-50ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு வெற்றிக்களிப்பு நாளில் பொதுச் செயலாளர் அண்ணாதுரை இவ்விதம் வெளியிட்டார்)

“கட்டாய இந்தி கூடாது என்று கூறியத நாம்தான் – எனவே, மகிழ்கிறோம் இன்று ‘இந்தி கட்டாயமில்லை‘ என்று சர்க்கார் பணிந்திருப்பதைக் கண்டதும் பத்து ஆண்டுகட்கு முன்னரே இந்தி கூடாதென்றும் – ஆச்சாரியார் ஆணவத்தோடு நம்மைப் பார்த்தார் தாளமுத்து நடராசன் இந்திக்காகப் பிணமாயினர்! ‘எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்‘ என்று கூவியவண்ணம் ஆயிரக்கணக்கில் சிறை சென்றோம். இந்தி வீழ்ந்தது! நமது அறப்போர் – இதயத்தின் துடிப்பு எனவே, வெற்றியைக் கண்டதும், மகிழ்கிறோம். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் மற்றொன்றும் உங்கட்குத் தெரிவித்துவிட ஆசைப்படுகிறேன். இப்போதிருக்கும் வெற்றிக் களிப்பால் அலைமோதும் நாம், இன்னும் பற்பல காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தி ஆதிபத்யம், ஒருதுறையில் முடிறயடிக்கப்பட்டுவிட்டது. இதனால், இங்கிருந்து, இந்தி ஆதிபத்தியமே ஓடிவிட்டது என்று எண்ணிடாதீர்கள். இன்னும் பற்பல துறைகளில் அது நம்மைக் கடித்துக்கொண்டே இருக்கிறது. இரயில்வே நிலையங்களைப் பாருங்கள். தமிழ் உதாசீனம் செய்யப்பட்டிருக்கிறது. இந்திக்கு முதலிடம் தமிழுக்குக் கீரிடமும் தரப்பட்டிருக்கிறது. அம்முறையைக் காண்போர் இதயம் துடிக்காமலா இருக்கும். தலைப்பிலே வேண்டுமென்றே இந்திக்கு இடம் தந்து, தாய் மொழியைத் தாழ்த்தியிருக்கிறது, வடநாட்டு ஆதிபத்யம் இதுபற்றி, ஏற்கனவே பலமுறை எடுத்துக்காட்டி வந்துள்ளோம் இருந்தும், இந்த அநீதி, திருத்தப்படவில்லை. எனவே, அகங்களிக்கும் இந்த நேரத்தில், ஆளவந்தாருக்கு அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம் – பார்டுகளை மாற்றி, தமிழில் பெயர்கள் தலைப்பில் பொறிக்கப்படவேண்டும் என்பதாக. இந்தி கட்டாயமாக்கப்பட்டதும் ‘வேண்டாம்‘ என்று அன்போடுதான் சொன்னோம். கேட்கவில்லை! தொல்லைகளை வளர்த்துக் கொண்டு திண்டாடினார் ஆளவந்தார். இப்போதும் அன்போடு வேண்டுகிறோம். ‘தாய் மொழியைத் தாழ்த்த வேண்டாம் – தமிழர் இதயங்களைப் புண்படுத்த வேண்டாம்‘ என்று இந்த வேண்டுகோளுக்கு, முன்னர்போல் இல்லாமல், இப்போது சர்க்கார் இணங்கும் – அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமென்று எதிர்பார்க்கிறோம். ‘இல்லை முடியாது. நேரமி்ல்லை‘ என்று சர்க்கார் சொல்லுமேயானால், சென்னை சர்க்காருக்குப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம் தயவு செய்து, அதற்கான அனுமதியைத் தந்துவிடட்டும் – நாம், தார் தொட்டி ஒரு கையில் பிரஷ் இன்னொரு கையிலுமாக எடுத்துக் கொண்டு கிளம்புவோம் – நாமே பெயர்களை மாற்றி எழுதுவோம்!“

!கோவில்பட்டியில் 1950 ஆகஸ்டு 27ல் நடைபெற்ற நெல்லை மாவட்ட தி.மு.க. முதலாவது மாநாட்டின்போது பொதுச் செயலாளரும், செயற்குழுவும் விடுத்தது, இது)

“இரயில்வே நிலைய போர்டுகளில் தமிழைத் தாழ்த்தியிருக்கும் அநியாயத்தைக் குறித்து சென்னையிலே நடைபெற்ற இந்தி எதிர்ப்பு வெற்றிவிழாவிலேயே நான் குறி்ப்பிட்டேன் – இங்கு பேசிய நமது தோழர்களும் ஆத்திரத்தோடு ஆவேசக் குரல் எழுப்பினர். அது பற்றியும் நாம் ஒழுங்கான நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களாகி விட்டோம் தலைப்பில் இந்தியில் ஊர்களி்ன் பெயர்களையும், கீழே தமிழில் பெயர்களையும் எழுதியிருக்கும் முறை நம் தாய் மொழியை அவமானப்படுத்ததுவதாக மட்டுமல்ல. நமது சுய மரியாதைக்கே தீங்கு விளைவி்க்கிறது நமக்கு மானமுண்டா? என்று கேட்பது போலிருக்கிறது. இந்த அநியாயத்தை அவமானத்தைத் துடைக்க வேண்டும் – தூங்கிக் கொண்டிருக்க முடியாது! செயற்குழு இன்று நிறைவேற்றும் தீர்மானத்தையொட்டி இரயில்வே போர்டாருக்கும் மத்திய ஆளவந்தாருக்கும் நோட்டீஸ் தரப்போகிறோம். ஆட்சியாளரிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்கவில்லையென்றால் போர்டு அழிப்பு போராட்டங் குறித்து முடிவு கட்டியே தீருவோம்.

1950 ஆகஸ்ட் 24ல் கோவில்பட்டியில் நடைபெற்ற நெல்லை மாவட்ட தி.மு.க. முதலாவது மாநாட்டில் பேசிய பொதுச் செயலாளர் சி.என்.ஏ. எச்சரித்தார். ஆளவந்தாரை அன்று அங்கே கூடிய தி.மு.க. செயற்குழு, இந்தி எழுத்து அழிப்பு குறித்து, தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. அத் தீர்மானம் –

திராவிடரின் தன்மானத்தைச் சிதைக்கும் விதமாகவும், இந்தி ஆதிபத்யத்தைப் புகுத்தும் முறையிலும், இரயில்வே ஸ்டேஷன்களில் இந்தியில் முதலிடமாகப் பெயர் பொறித்திருப்பதைத் திராவிடர்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று சர்க்காருக்குத் தெரிவிக்கிறது.

அ) இந்த முறையை உடனே மாற்றித் தமிழுக்கு முதலிடம் இருக்கும்படி போர்டுகளைத் திருத்துமாறு சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது.

ஆ) இதற்காக சர்க்காரிடம் கடிதப்போக்குவரத்து நடத்த பொதுச் செயலாளருக்கு அதிகாரம் அளி்க்கிறது.

இ) சர்க்கார் இத்ற்கு இணங்காவிட்டால், செயற்குழு, இந்த இழிவு நீக்கத்துக்காக நேரடி நடவடிக்கை தீட்ட வேண்டும் என்று செயற்குழு தீர்மானிக்கிறது.

!26-7-52ல் சென்னை அறிவகத்தில் நடைபெற்ற பொதுக்குழு உறுப்பினர்களிடையில், பொதுச் செயலாளர் குறிப்பிட்டது இது)

“ரயில்வே போர்டுகளில் இந்திக்கு முதலிடம் தரப்பட்டிருக்கும் கொடுமையை, கட்டாய இந்தி ரத்து செய்யப்பட்ட வெற்றி விழா நாளில், பேசுகையில் குறிப்பிட்டேன். அது முதல் நமது கழகக் கூட்டங்களில்லாம், இந்த இழிவை சர்க்கார் நீக்கிட வேண்டுமென்று பேசினோம். பிறகு, கோவில்பட்டியிலே கூடிய செயற்குழுவிலே, ‘தார்சட்டி ஏந்துவோம்!‘ என்று சர்க்காருக்கு எச்சரிக்கை விடுத்தோம். அந்த தீர்மானப்படி, மத்திய சர்க்காருடன் கடிதப்போக்குவரத்தும் செய்தோம். இந்த நேரத்தில் ஆர்வ உணர்ச்சியின் மிகுதியால் பலப்பல இடங்களில் ‘இந்தி‘ எழுத்துக்கள் அழிக்கப்படுவதாக அறிந்தோம். மத்திய சர்க்காரோ, தக்க பதில் தரவில்லை. இந்நிலையில், அன்று நாம் பற்பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தோம். கருப்புக்கொடி பிடிப்பது! 144 மீறுவது! எழுத்துரிமைக் கிளர்ச்சி! இவ்விதம், நாம் பலகாரியங்களை மேற்கொண்டிருந்ததால், இந்திபோர்டு அழிப்பு சம்பந்தமாக போதிய அவகாசத்தோடு, தீவிரமான கிளர்ச்சியைத்துவக்க வேண்டும் என்கிற கருத்துக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று நமது கோவில்பட்டித் தீர்மானம்படி ‘இந்தி போர்டு அழிப்பு‘ திட்டப்படி பணியாற்றப் போகிறோம். நமது மேற்படி திட்டத்தை, பெரியார் அவர்கள், ஆகஸ்டு முதல் தேதி முதல் துவக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். இந்தத் தகவல் கேட்க, மிகவும் மகிழ்கிறோம் – இம்முடிவைச் செய்த திராவிட கழக நண்பர்களைப் பாராட்டுகிறோம். நமது போராட்டம் துவங்கப்படப் போகிறது. இந்த அறப்போரின் விளைவை வடநாட்டு ஆதிக்கம் உணரும்படிச் செய்ய வேண்டும். ஆகஸ்டு முதல் தேதி – ஒரு எச்சரிக்கைநாள். அன்று நமது எதிர்ப்பின் அடையாளப்போர்! இந்த ஆகஸ்டு முதல்நாள் போரில், திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாகக் கலந்து கொள்ள வேண்டுமென்று எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மாவட்டச் செயலாளர்களும், கழகப் பேச்சாளர்களும் செயற்குழு உறுப்பினர்களும் ஆகஸ்டு முதல் தேதிய உரிமைப்போரில் கலந்து கொள்ள வேண்டும். நமது இலட்சியம் கொள்கைக்காகப் போராடுவதுதான் ஆகஸ்டு – முதல் தேதியில் திராவிட கழகம் ஒரு பக்கமும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றொரு பக்கமுமாக – பொது எதிரியைத் தாக்கும் நான் அடிக்கடி கூறிவருவதுபோல, ‘இரண்டு ஈட்டிகள்‘ – இந்த ஏகாதிபத்யத்தின்மீது, ஒரே நேரத்தில் தாக்கும் நமது இந்தி ஆதிபத்யத்தால் ஏற்பட்டுவரும் இன்னல்கள் ஏராளம்! இந்தப் பொதுவிரோதிகளும் நமது கிளர்ச்சியின் வேகம் திகில் ஊட்ட வேண்டும். ஆகவே தீரர்களே! யாவரும், அன்று அறப்போரில் ஈடுபட அழைக்கிறேன். பொதுக்காரியம் இது பேதமின்றி எவரும் போராடலாம்! நெடுநாட்களாக நமது உள்ளத்தைக் குடைந்து வரும் ஒரு விஷயத்துக்காக நாம் போராடப் போகிறோம் இந்தப் போராட்டத்தைத் துவக்க, இன்று நாடு முடிவு செய்வது – திடீர் முடிவல்ல. இதை ஆட்சியினர் உணரவேண்டும். பல கூட்டங்களில் வேண்டினோம் – கோவில்பட்டியிலே எச்சரித்தோம் – எழுதிக்கேட்டோம் எதற்கும் இணங்க வில்லை – வடநாட்டி ஆதிக்கம். ஆகவேதான், இன்று, அறப்போர் – அதில் நாம் அனைவரும் ஈடுபடுகிறோம்.

திராவிட நாடு – 27-7-52