அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இந்தியின் கதி!

நிருபர் – இந்தியைப் பரப்ப, தீவிரமான நடவடிக்கைகளை – முன்னைப்போலவே, மத்திய சர்க்கார் தொடர்ந்து செய்யுமா?

நேரு ஏன், கேட்கிறீர்கள் – இப்படி

நிருபர் –தெற்கில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டிருக்கிறதே – அதனால் கேட்டோம்.

புது டில்லியில் கடந்த 28ந் தேதி இவ்விதம் கேட்டிருக்கிறார்கள் இந்தியப் பிரதமர் நேருவை – அதற்குப் பதிலளிக்கையில் மத்திய சர்க்கார் இந்தியைப் பரப்ப தீவிரமான நடவடிக்கைகளைக் கையாளுவதாக நீங்கள் சொல்லத்தான் கேள்விப்படுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் அதோடு, அவர் தந்திருக்கும் சில தகவல்கள்.

“இந்தியைப் பொது மொழியாக்குவதென்பது அரசியலமைப்பின் ஜீவாதாரத் திட்டமாகும்“

“இத்திட்டத்தை, தெற்கிலுள்ளவர்களோ அல்ல மற்றவரோ, ஏன் எதிர்க்க வேண்டும்?“

“இதை எப்படி நிறைவேற்றுவதென்பதில் கருத்து வேற்றுமையிருக்கலாம் ஆனால் எப்படியும் நிறைவேற்றித்தான் ஆகவேண்டும்“

“இந்தியா ஒரேநாடாக ஆக்க இந்தத் திட்டத்தைத் தவிர வேறு வரியில்லை“.

“இதை சாமர்த்தியமாகச் செய்ய வேண்டும் – இல்லாவிடில் தொல்லைகள் உண்டாகத்தான் செய்யும்“

இந்தியாவை ஒரே நாடாக்க, எப்படியும் இந்தியை, பரப்பவேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் – ஆனால், அதற்கான வழிமுறைகள், கட்டாயமாக இருக்காதாம்! சாமர்த்தியமாக செய்யப்படுமாம்!

இந்தியைப் பரப்புவதற்கென, டில்லி கையாண்ட முறைகளை நாம் அறிவோம் – டில்லிக்குக் கீழ்ப்பட்டு இந்தியைத் திணிக்க முயற்சித்த மாகாண சர்க்காருக்கும், தகுந்த புத்தியைத் தந்திருக்கிறோம். நாம் இருந்தும், நேரு சொல்லியிருக்கிறார் ‘மத்திய சர்க்கார் இந்தியைத் திணிக்க, தீவிரமாக எதுவும் செய்யவில்லை, என்பதாக.

தீவிரமாகச் செய்யவில்லையென்பதை வாதத்துக்காக ஒப்புக் கொள்வோம் – இந்திப் பிரச்சார சபைகளுக்கென சர்க்காரும் ஒதுக்கிவரும் பணங்கூட இல்லையென்று கூற முடியாது, அவரால்! அத்தகைய பிரச்சார சபகைளுக்கென, அள்ளிக்கொடுக்கப்பட்டு வருகிறது – டில்லியில்.

இவைகளின் மூலம் இந்தியைப் பரப்புவரைத்தான், நேரு, குறிப்பிடுகிறார் ‘சாதுர்யமான வழிகள்‘ என்று

இந்தச் சாதுர்யவழி, தந்திருக்கும் பலனைப் பாருங்கள் – இந்தத் தகவல், நாம் தரவில்லை, புது டில்லி தருகிறது ‘தினமணி‘ மூலம்.

புதுடில்லி பிப்.16 நாட்டில் ஹிந்திப் பிரசார இயக்கம் அவ்வளவு சுறுசுறுப்பாக நடக்கவில்லை என்று கல்வி இலாகா கருதுகிறது. 1950-51ல் ஹிந்தியைப் பரப்புவதற்காக, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 170.000 ரூபாயை வேறுதுறையில் செலவிட சர்க்காரிடமே திரும்பக் கொடுத்துவிட கல்வி இலாகா உத்தேசித்துள்ளது.

ஹிந்தி பாஷையில் பரிச்சயமே இல்லாதவர்கள் இந்த பிரச்சார இயக்கத்தை நடத்தியதுதான் காரணம் என்று அபிப்பிராயம் கூறப்படுகிறது.

சாதுர்ய வரியின், இலட்சணம் இது!

இந்தியைப் பரப்ப முனைந்தோரின் தகுதி – ‘பரிச்சயமே இல்லாதவர்கள்‘ அவர்களுக்கு சர்க்கார் ஆதரவு! பணம்!

பலன் கிடைக்கவில்லையென்று – பரிதாபத்தோடு சொல்கிறது, டில்லி கல்வி இலாகா. ஆனால் நேருவோ, எப்படியும், பரப்ப வேண்டும் என்கிறார்! பரப்ப முடியவில்லை – என, கல்வி இலாகா பணத்தைத் திருப்பித் தருகிறது. அவரிடம்!

“இந்தி பொது மொழி – வீண் முயற்சி“ என்று, நாம் போராடிய பொழுது, அலறிய தேசீயத் தோழர்களுக்கு, இந்த உண்மைகளை வைக்கிறோம். நாம் கூறியபோது, துப்பாக்கிகளைக் காட்டினர் – சிறைகளில் சித்திரவதை செய்தனர் – ஆனால் நேருவோ, ‘திணிக்கவில்லையே!‘ எனச் செப்புகிறார் – ‘சாதுர்யமாகச் செய்வோம்‘ என்கிறார் – அவரது கல்வி மந்திரி சபையோ ‘சாதுர்ய வழி பயன்படவில்லை – பணம் இந்தா என்று கூறுகிறது. விந்தையாக கதி, இந்திக்கேற்பட்டிருக்கிறது! பரிதாபப்படுகிறோம் இந்தியின் கதி குறித்து! அனுதாபத்தோடு கூறுகிறோம், இன்னும் ‘இந்தி பொதுமொழி‘ என்று எவரேனும் எண்ணியிருந்தால், எண்ணம் ஈடேறாது – தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்!

திராவிட நாடு – 9-3-52