அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இந்தி எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்போம்!

அண்மையில், சென்னைக்கு வந்திருந்த பண்டித நேரு அவர்கள், இந்தி மொழி பற்றிய ஒரு உண்மையை விளக்கிப் பேசினார். அந்த உண்மை, இந்தியை இங்குள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறப்படும் காரணங் களுக்கு முற்றிலும் புறம்பானது.

இங்கு, இப்பொழுது, இந்தியைத் தமிழ் மக்கள் படிக்க வேண்டுமென்று சொல்லப்படும் காரணங்களில் முதலிடம் பெற்று நிற்கும் காரணத் தையே பண்டித நேரு அவர்கள் வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

பத்து ஆண்டுகளுக்கு முன், தோழர் இராசகோபாலாச்சாரியார் அவர்கள் இந்தியை இங்குக் கட்டாயப் பாடமாக்கியபோது, அவர் இந்நாட்டுக்கு ஒரு பொதுமொழி வேண்டுமென்று கூறப்படும் காரணத்துக்கு முதலிடம் அளிக்க வில்லை. அவர், இந்தியாவின் பழைய நாகரிகம் சமஸ்கிருதத்திலேயே அடங்கி இருக்கிறதென் றும், சமஸ்கிருதப் படிப்பை அசட்டைச் செய்யக் கூடாதென்றும், சமஸ்கிருதத்தின் மறுவடிவமே இந்தியென்றும், ஆகையால், அதனை எல்லோ ரும் கட்டாயம் படிக்க வேண்டுமென்றுமே கூறி இந்தியை இங்குக் கட்டாயம் பாடமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இங்குள்ள சமஸ்கிருத விரும்பிகளும் இந்த முயற்சிக்கு ஆதரவு தந்தனர். ஆனால், தமிழ் மக்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் அந்த முயற்சியை அப்பொழுதே முறியடித்துவிட்டது.

இப்பொழுது, மீண்டும் அந்த முயற்சி துவக்கப்பட்டிருக்கிறது. இது, தேவையற்ற- பயனற்ற- பொருத்தமற்ற முயற்சி என்பதைப் பண்டித நேரு அவர்கள் தெளிவாகவும், திட்ட மாகவும் விளக்கிவிட்டார். இந்தி மொழியில் சமஸ்கிருதம் கலக்கப்படுவதை எந்தக் காரணத் தைக் கொண்டும் ஒப்புக்கொள்ள முடியாதென்று கூறிவிட்டார். மத்திய சட்டசபையில் இது பற்றிய விவாதம் வருமென்றும் அப்போது தாம் அதைத் தம்முடைய முழுப் பலத்தைக் கொண்டு எதிர்ப் பதாகவும் கூறிவிட்டார். இந்த உண்மையை வெளியிட்ட பண்டித நேரு அவர்களை நாம் பாராட்டுகிறோம். பாராட்டுகிறோம் என்றவுடனே, சிலர், ``அப்படியானால் நீங்கள் சமஸ்கிருதம் கலவாத இந்தியை ஏற்றுக்கொள்கிறீர்களா- கற்றுக் கொள்வீர்களா?'' என்று கேட்பர். இந்தி எந்த வடிவத்தில் வந்தாலும், அதனை எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற திட்டமான முடிவு இதனால் ஒரு போதும் சிதைந்துவிடாது- சிதைத்து விடவும் முடியாது.

ஆனால், இந்தியை இந்நாட்டில் பரப்புவ தன் வாயிலாக இறந்துபட்ட சமஸ்கிருதத்துக்கு உயிர் பிச்சை அளிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டதே என்று இங்குள்ள சிலர் வீராப்புப் பேசுகின்றனரே, அவர்களுக்குப் பண்டித நேரு அவர்கள் சரியான பாடம் கற்பித்தார்- இந்தி பரப்பப்படுவதில் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உண்மையை வெளிப்படுத்தி விளக்கிக் கூறினார் என்பதற்காகவேதான் நாம் அவரைப் பாராட்டு கிறோம். தோழர் சி.ஆர்.ரெட்டி அவர்கள் போன்ற சிலர், சமஸ்கிருதத்தையே இந்நாட்டின் பொதுமொழியாக்கிவிடலாம் என்ற இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாடுபடுகிறார்களே, அவர்களுக்குப் பண்டிதர் அவர்கள் சரியான சாட்டை கொடுத்தார் என்பதற் காகவே நாம் அவரைப் பாராட்டுகிறோம்.

இந்தியில் சிற்சில சமஸ்கிருதச் சொற்கள் சேர்ப்பதையே நேரு அவர்கள் எதிர்க்கிறார் என்றால், சமஸ்கிருதச் சொற்கள் மக்களுக்குப் புரியாதவை- தேவையற்றவை என்பதைப் பண்டிதர் அவர்கள் ஒப்புக் கொள்கிறார் என்றால், சிலர் பொறுப்பற்ற முறையில், சமஸ் கிருதத்தையே இந்நாட்டின் பொதுமொழியாக்கி விடலாம் எனறு கனவு காண்கிறார்களே என்பதை எண்ணும்போது, இவர்கள் எவ்வளவு சுலபத்தில், நாட்டுக்கும் மக்களுக்கும் தேவைப்படாத ஒன்றைச் செய்துவிட வேண்டுமென்ற முனைப் பில் ஈடுபடுகின்றனர் என்பது நன்கு புலனா கின்றது.

பண்டித நேரு அவர்களே கூறுகின்றார், தமிழ், இலக்கிய இலக்கண அமைப்புப் பெற்ற ஒரு சிறந்த பழைமையான முதல் மொழி என்று இப்போது மட்டும் அவர் இதனைக் கூறவில்லை. அவரால் எழுதப்பட்ட புத்தகங்களிலும், தமிழைப் பற்றியும், தமிழ் மக்களைப் பற்றியும், சிறப் பாகவே கூறியுள்ளார். என்றபோதிலும், அவருக்கு இலக்கிய இலக்கணச் சிறப்பு வாய்ந்த பழைமையான தமிழ் மொழியையே இந்நாட்டின் பொதுமொழியாக்கலாம் என்ற எண்ணம் உண்டாகவில்லை. இதுபற்றி நாமும் கவலைப் படவில்லை- கவலைப்படக் காரணமுமில்லை. ஏனென்றால், இந்நாட்டுக்கு, எந்தக் காரணத்தைக் கொண்டும்- எந்தக் காலத்திலும் இனி, ஒரு பொது மொழி தேவையில்லை என்ற உண்மையை உணர்ந்திருப்பதால், இது மட்டுமல்ல இப்போது, தென்னாட்டவர், வடநாட்டவரின் தொடர்பை அடியோடு அறுத்துக்கொள்ள வேண்டுமென்றும், இனி எக்காரணத்தைக் கொண்டும் வடநாட்டவர், தென்னாட்டவரை ஆட்டிப் படைக்க இட மளிக்கக் கூடாதென்றும் முடிவுசெய்து, நாட்டுப் பிரிவினையின் அடிப்படை மீது இந்நாட்டு (திராவிட நாட்டு)ச் சமூக- அரசியல் பொருளாதார அமைப்பு முறைகள் எல்லாம் ஏற்பட வேண்டு மென்ற அசைக்க முடியாத திட்டத்தைக் கொண்டுள்ளனர். எனவேதான், பண்டித நேரு அவர்கள், தமிழ் மொழியே இந்நாட்டின் பழைமையான சிறந்த மொழி என்பதை அறிந்தும், அதனைப் பொது மொழியாக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கொள்ளவில்லையே என்பதற்கக அவர்மீது நாம் குறைகாண முற்படவில்லை என்று கூறுகின்றோம்.

இனி, நாட்டு நலனை விரும்புகின்றவர்கள், அவர்களுடைய முயற்சிகள் எல்லாம் உயர்ந்த உண்மையான கருத்துக்களாலும், திட்டங்களா லுமே நடத்தப்பட வேண்டுமென்பதற்குப் பண்டித நேரு அவர்கள், சமஸ்கிருதம் பற்றிக் கூறியது ஒரு சிறந்த பாடமாகும். சமஸ்கிருதம் உண்மை யாகவே நாட்டு நலனுக்குரிய சிறந்த கருத்துக் களைக் கொண்டுள்ளதென்றால், நாட்டை ஆளும் பொறுப்பின் முதற் பீடத்தில் அமர்ந்திருக்கும் பண்டித நேரு அவர்கள் சமஸ்கிருதத்தைப் பற்றிய தம்முடைய கருத்தை இவ்வாறு ஒரு போதும் வெளியிட்டிருக்கவே மாட்டார். சமஸ்கிருத அறிவு, நாட்டு நலன் குறித்துச் செய்யப்படும் எந்தப் பணிக்கும் ஏற்புடையதல்ல என்பதனாலேயே, உயர்ந்த- உண்மையான கருத்துக்கள் எவையும் சமஸ்கிருதத்தில் இல்லை யென்றும், அதனைப் பரப்பும் முயற்சிக்குத் தாம் எதிரியாகவே இருப்பேன் என்றும் ஒளிவு மறைவு இன்றி வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

இந்த நிலையில், சமஸ்கிருதமும் மாணவர் களால் கட்டாயமாகக் கற்கப்பட வேண்டிய மொழிகளில் ஒன்றெனச் சேர்த்திருக்கும் இன்றைய குழப்பமான- அவருக்கே புரியாத திட்டத்தை வகுத்திருக்கும் நமது கல்வியமைச்சர், பண்டித நேரு அவர்கள் சமஸ்கிருதத்தைப் பற்றிக் கூறிய கருத்துக்களை ஊன்றிக் கவனித்து, மாணவர்களும், அவர்களால் நாடும் நலம் பெறக் கூடிய கல்வித் திட்டத்தை- அத்துறையில் வல்லுநர்களாய் இருப்பவர்களின் துணை கொண்டு அமைக்கும் முயற்சியில் இனியாவது ஈடுபடுவார் என்று நினைக்கிறோம்.

இனி, ஒரு மொழி, பிற மொழிச் சொற் களைக் கடன் வாங்கிக் கொள்வதால் அம்மொழி வளர்ச்சியடையுமேயன்றி ஒருபோதும் கெட்டு விடாதென்றும் சொல்லப்படுகின்றது. இதில் ஓரளவு உண்மையில்லாலுமில்லை. அதாவது, தனக்கெனச் சொற்களை ஆக்கிக் கொள்ளும் வளமற்ற மொழிகளுக்கு இந்த முறை தேவைப் படலாம். ஆனால், தமிழ் மொழிக்கு இந்தக் கடன் வாங்கிப் பிழைக்கும் இரங்கத்தக்க நிலை இல்லை. தமிழ் தனக்கு வேண்டிய எல்லாச் சொற்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கால மாறுதலுக்கு ஏற்பப் புதுப்புதுச் சொற்களை உண்டாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும், அச்சொற்களுக்கு ஏற்பக் கருத்தில் மாறுபடாத சொற்களை புதிதாக உண்டாக்கிக்கொள்ளும் திறமையும், தமிழுக்கு உண்டு. இனி, ஒருவேளை யாதாயினும் ஒரு சொல் தமிழில் உண்டாக்கிக் கொள்ள முடியாத நிலை (ஏற்படாது) ஏற்பட்டால்- அந்தச் சொல் மக்களின் வாழ்க்கைக்கு இன்றிய மையாது தேவைப்படுமென்று கண்டால்- அந்தச் சொல்லை, அது எந்த மொழியில் இருந்து வந்ததோ, அந்த மொழிச் சொல்லாகவே வைத்து வேண்டுமானால் தமிழ் மொழியோடு இணைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். அங்ஙனமின்றி, ஆங்கிலத்திலோ லத்தீனிலோ அல்லது வேறு மேல்நாட்டு மொழிகளிலோ காணப்படும் ஒரு விஞ்ஞானச் சொல்லைச், சமஸ்கிருதச் சொல்லாக்கியோ அதனைத் தமிழ் மொழியில் பிணைப்பதையும், அதனைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறு வதையும் ஒருபோது ஒப்புக்கொள்ள முடியாது.

இப்போது சமஸ்கிருதத்தைத் தமிழுடின் கலக்கவிட்டதால் தானே தனித் தமிழ்ச் சொற் களான தண்ணீர் - ஜலமாகவும், திருவிழா- உற்சவமாகவும், சுவை ருசியாகவும், துன்பம்- கஷ்டமாகவும், மகிழ்ச்சி- சந்தோஷமாகவும் இன்னும் இவை போன்ற எண்ணற்ற இனிய- எளிய தமிழ்ச் சொற்கள் எல்லாம் வடிவம் மாறி, வழக்கழிந்து நிற்கின்றன. இந்த நிலையில், இனி இந்தியும் தமிழுடன் கலந்துவிட்டால், யானை- ஹாத்தியாகி, குதிரை- கோடா ஆகி, பூனை- பில்லியாகி,வாள்- தல்வார் ஆகி, நல்லது- அச்சாவாகி, நினவு- யாத் ஆகி, வீடு- கர் ஆகித் தமிழ் மொழியின் தனித்தியங்கும் வாய்ப்பும், வளமும், கலையும் அழிந்துபடும் என்றும், எனவே எந்த வடிவத்தில்- எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தி இங்குப் புகுத்தப்பட்டாலும், அதனைத் தமிழ் மக்கள் கட்டாயம் எதிர்ப்ப தென்ற முடிவுக்கு வந்து, அறப்போர்ப் பணியில் இறங்கிவிட்டனர் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(திராவிட நாடு - 1.8.1948)