அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இந்தியே வேண்டாம்!

``சீண்டி விடுகிறார்!
குட்டையைக் குழப்புகிறார்!
குட்டிச் சுவராக்குகிறார்!
மானப்பங்கம் செய்கிறார்!

கல்வி அமைச்சர் மீது வீசப்படும் கண்டனங்கள் இவை!''

``ஆமாம்- அவர்களுக்கு வேறு என்ன வேலை! கண்ட கண்ட விஷயங்களையும் கண்ணை மூடிக் கொண்டு கண்டிப்பார்கள். வம்பர்கள், இந்தக் கறுப்புச் சட்டையினர், அவர்கள் கல்வி அமைச்சரைக் கண்டிப்பது பற்றிக் கவலை வேண்டாம்.''

``இப்படிப் பேசி, பிரச்னையின் முக்கியத் துவத்தை மறந்து விடாதீர் நண்பரே! கண்டனச் சொற்கள் கறுப்புச் சட்டையினருடையன அல்ல- கதர்ச் சட்டையினரின் பேச்சு!''

``காங்கிரஸ்காரரா, இப்படிக் கண்டிக்கிறார்!''

``ஆமாம்-காரசாரமாக!''

``ஏன்?''

``ஏன்! அதுதான் நியாயமான கேள்வி! கறுப்புச் சட்டைக்காரர் கண்டிக்கிறபோது, காட்டும் அலட்சியம், அல்லது ஆத்திரம் இங்கு ஆகாது இது. காங்கிரஸ் மந்திரியின் திட்டத்தைக் காங்கிரசாரே, கண்டிக்கும் சம்பவம்.''

``ஏன், இவ்விதம் கண்டிக்கிறார்?''

``ஏனா! ஏனென்றால், இந்தக் காங்கிரஸ் நண்பருக்கு, காங்கிரஸ் மந்திரி செய்யும் சகல காரியத்தையும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வது, அறிவற்ற, ஆபத்தான செயல் என்று தெரிகிறது. கல்வி பெரிது, காங்கிரஸ் மந்திரியை விட! என்று புரிகிறது. எனவேதான், கல்வி அமைச்சரின் இந்தித் திட்டத்தைக் கண்டிக்கிறார்.''

``எங்கே பேசினார்- எப்போது?''

``பேசவில்லை! எழுதினார்- சிவாஜி எனும் காங்கிரஸ் ஏடு- திருச்சிராப்பள்ளியிலிருந்து வெளி வருவது, அதிலே உள்ள கண்டனம் முழுவதும், படி- கொஞ்சம் மூடு பனி விலகும்.''
* * *

``தமிழ்நாட்டில் இந்திக்கு இருந்து வரும் பலமான எதிர்ப்பை சம்பந்தப்பட்டவர்கள் ``அசட்டுத்தனம்'' என்றும், `அறிவின்மை' என்றும் கண்டித்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படிக் கண்டிப்பதற்குத் தகுதியான காரணங்களை யாரும் எடுத்துக் கூறவில்லை.

இந்தி எதிர்ப்பாளர்களுக்குத் தேசியப் பற்று இல்லையென்றும் அவர்கள் வகுப்புவாதிகளென் றும் பலர் கண்டிக்கிறார்கள். இந்தியை எதிர்க்கும் பெரும்பாலான மக்களில் வகுப்புவாதிகளும் கலந்திருக்கலாம். ஆனால் வகுப்புவாதிகள் இல்லாதவர் தொகைதான் அதிகம் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

தவிரவும் வகுப்புவாதிகள் ஒரு திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதனால் அந்தத் திட்டம் நியாயமான திட்டம் என்று ஆகிவிட முடியாது.

இந்தி எதிர்ப்பு அறிவின் ஆராய்ச்சியால் ஏற்பட்ட எதிர்ப்பல்ல, உணர்ச்சி வயப்பட்ட எதிர்ப்பு என்று சிலர் அங்கலாய்க்கலாம்.

ஆனால் அவர்கள் இன்னொரு பேருண் மையை மறந்து விடக்கூடாது. இந்தி எதிர்ப்பில் கலந்திருக்கும் மொழியுணர்ச்சியை போன்ற உணர்ச்சி அடிப்படையில்தான் இந்தியாவுக்கு தேசியம் பொது மொழி வேண்டும் என்ற கொள்கையும் உருவாகியிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆங்கிலம் வேற்றான் மொழி, அதை அகற்றி விட்டு நம் சொந்த மொழியொன்றைத் தேசியப் பொதுமொழியாக்க வேண்டும் என்று மாத்திரம் கூறலாம்!

ஆனால் தமிழ்நாட்டில் இந்தி வேண்டாம், அது வடக்கத்தியார் மொழி என்று மாத்திரம் கூறக் கூடாது!

இந்தக் கூற்றை யாராவது ஒப்புக் கொள்ள முடியுமா?

வடக்கத்தியார் தெற்கத்தியார் பேதம் தவறாக இருக்கலாம். ஆனால், ஆங்கிலேயன், இந்தியன் பேதமும் அப்படித்தான் என்றால் `தேசியவாதிக்கு' அது கசப்பாகத் தோன்றும்.

கண்டிப்பதனால் எல்லா இன உணர்ச்சி களையும் ஒருமிக்கக் கண்டிக்க வேண்டும். இல்லாவிடில் எல்லா இன உணர்ச்சிகளுக்கும் நியாயமான மரியாதை செலுத்த வேண்டும்.

அறிவும், ஆராய்ச்சியும் தேவையான அரசியல் விஷயங்களில் உணர்ச்சிகளை விட்டு விடுங்கள், அவை வேண்டாம் என்றுதான் கூறுகிறோம்.

ஆனால் அறிவு கூறுகிறது, ஆங்கிலம் தான் இந்தியப் பொதுமொழியாக இருக்கத் தகுதியுள்ளது. அதை ஏற்றுக் கொள்வதில் தேசீய விரோதமான குந்தகம் ஏதுமில்லை என்று.

சென்னைக் கல்வி மந்திரியாரின் தற் போதைய திட்டத்தின் குறைகள் தெளிவானவை. இந்தத் திட்டத்தில் இந்திக்கும் மரியாதையில்லை. கல்விக்கும், மரியாதையில்லை, நடைமுறை இலாபமுமில்லை.

ஆங்கிலத்தை மூன்றாவது மொழியாக்கி அதை இரண்டாவது பாரத்திலிருந்து கற்க ஆரம்பிக்கச் சொல்லுகிறது இத்திட்டம். இந்தியை மறைமுகமாகக் கட்டாய இரண்டாம் பாடமாக்கி அதையும் இரண்டாவது பாரத்திலிருந்து கற்கச் சொல்லுகிறது இத்திட்டம்.

இப்படிச் சேர்ந்தாற் போல் இரண்டு மொழி களைக் காலம் கடந்த காலத்தில் அகரத்தில் ஆரம்பித்துப் புதிதாகக் கற்கச் சொல்வதைப் போன்ற கொடிய தவறு ஏதாவது இருக்க முடியுமா?

மத்திய அரசாங்கமும், வேறு மாகாண அரசாங்கங்களும் சீண்டாத கல்வித் துறையை நமது மாகாண சர்க்கார் மாத்திரம் ஏன் அவசரப் பட்டுச் சுண்டிக் குட்டையைக் குழப்ப வேண்டும்?

இந்த அவசர மாற்றங்களைக் கிழித் தெறிந்து நெருப்பு வைத்துப் பொசுக்கிவிட்டுப் புதிய திட்டங்கள் வகுக்க நிதானமாக ஆரம் பிக்கலாம் என்று சென்னை அரசாங்கத்துக்குக் கூறுகிறோம்.
மொழி விஷயத்தில் மாத்திரமல்லாமல் கல்வித் துறையியி;ல சென்னை அரசாங்கம புகுத்தி வரும் புதிய மாற்றங்களும் வரவேற்கத் தக்கனவாயில்லை. இவை நமது மாணவர் குழாமைக் குட்டிச்சுவர்களாக்கி நாசப்படுத்திக் கல்வியை மானபங்கம் செய்து வீணாக்கிவிடும்.

இந்தி விஷயமாகப் பின்வரும் புதிய திட்டத்தைப் பற்றிச் சிந்திப்பது நலம் என்று தோன்றுகிறது. இந்தத் திட்டமும் ஆராய்ச்சிக் குரிய திட்டம்தான்.

இந்தி ஆங்கிலத்தின் ஸ்தானத்தை வகிக்க தகுதியற்றது என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாதெனினும்,
மூன்றாவது மொழியை எடுத்துவிட்டு, இந்தி, ஆங்கிலம் இரண்டை மாத்திரம் இரண்டாம் மொழிகளாக்கி இந்த இரண்டாம் மொழி ஏதாவ தொன்றைப் பொறுக்கிக் கொள்ளும் வசதியை அளித்து முதல் பாரத்திலேயே புகுத்திப் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

இந்தப் பரிசோதனையின் மூலம் இந்தியப் பொது மொழியாக இந்திக்கு அருகதையிருக் கிறதா, ஆங்கிலத்துக்கா என்ற உண்மை புலப்பட்டுப் போகும்.

இந்தியைப் பற்றியே மறந்து விடுவதா னால் இந்தத் திட்டம் தேவையேயில்லை. பேசாமல் ஆங்கிலத்தை மாத்திரம் கட்டாய இரண்டாம் மொழியாக்கலாம்.

எனவே, ஆங்கிலத்தைக் கட்டாய இரண்டாம் மொழியாக்கி மூன்றாம் மொழி ஏதும் இல்லாமல் ஆங்கிலத்தைக் கீழ்க் கடையிலேயே புகுத்திவிட்டால் அதுவே மிகச் சிறந்த முறை யாயிருக்கும்.''
(சிவாஜி 18-7-48)

(திராவிட நாடு - 25.7.1948)