அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இந்தியும் தமிழ் மகனும்
(1)

“தமிழ் மகனே! தமிழ் மகனே!” என்று அழைத்தபடி, காரியாலயத் தாழ்வாரத்தில் சென்று கொண்டிருந்தேன், எதிரே காணப்பட்ட அறையை நோக்கி, ஏன் குரலிலே தோய்ந்திருந்த அன்பும் ஆர்வமும் கண்டுதானோ என்னவோ காவலாளி, முகமலர்ச்சியுடன் “உள்ளே போய் உட்காரும் ஐயா! யாரைப் பார்க்க வந்தீர்கள்? எதற்காக? உமது பெயர் என்ன? எல்லா விவரமும் குறித்துக் கொடுங்கள்” என்று கேட்டான். தமிழ் மகனைக் காண வ்நதிருக்கிறேன் - தமிழர் நிலை குறித்துத் தெரிந்து கொள்ள - பரதன் - என்று எழுதிக் கொடுத்தனுப்பிவிட்டு அறையிலே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன். காற்றிலே மிதந்து வரும் கீதம் கேட்டது. ஏன் எதிரே இருந்த மேஜைமீது, ஏடுகள், தாள்கள் பல இருந்தன சுவரிலே, காந்தியார், ஜவஹர் ஆச்சாரியார் ஆகியோரின் படங்கள் இருந்தன. தமிழ் மகனின் வருகைக்காக, இவலோடு காத்துக் கொண்டிருந்தேன். இரண்டோர் விநாடிகளாயின! கதவு திறக்கப்பட்டது. ஆவல் மிகுதியால் “தமிழ் மகனே!” என்று கூறக்கொண்டு திரும்பிப் பார்த்தேன் ஏன் நண்பர் குமரப்பன் “நீங்களா?” என்று கேட்டுக்கொண்டே ஏன் எதிரே நின்றான். அடடே! குமரப்பா நீ, இங்கு.. என்று நான் கேட்கலானேன் - “கம்பா சிடராக இருக்கிறேன் - தெரியாதா உங்களுக்கு” என்றான் குமரப்பன். “தெரியாது குமரப்பா!” என்றேன். “இங்கே என்ன வேலையாக...” என்று அவன் கேட்கலானான். ஆர்வத்துடன் தமிழ் மகனைக் காண வந்திருக்கிறேன் என்றேன். பிறகு சில நிமிஷங்கள், குடும்ப விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தோம். வேலை மிகுதி - நேரம் இல்லை பேச என்று கூறிவிட்டு, குமரப்பன் சென்றுவிட்டான் - செல்லு முன், ஒரு காகிதச் சுருளை மேஜைமீது வைத்துவிட்டு அதன் மிது கண்ணாடியால் செய்யப்பட்ட ஆழகான ஆசோகச் சக்கரத்தை எடுத்து வைத்துவிட்டுச் சென்றான். அந்த ஆசோகச் சக்கரம் ஆழகாக இருந்தது - கையில் எடுத்துப் பார்த்தேன் - காற்று அடித்தது காகிதம் கீழே விழுந்தது - எடுத்தேன், பழையபடி வைக்க - குமரனின் கரத்திலே இருந்த மை அதிலே ஓட்டியிருந்ததுஎன்ன செய்கிறோம் என்ற நினைப்பின்றிக் காகிதத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.

“எனவே இந்தி பாஷையின் ஏகாதிபத்யத்தை ஸ்தாபிக்கும் முயற்சி வெறும் பூச்சாண்டி அல்ல, நமக்கு ஏற்பட்டுள்ள உண்மையான ஆபாயம் என்றே முடிவுகட்ட வேண்டியிருக்கிறது.

இந்தி ஏகாதிபத்தியத்திற்காக திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம கண்டறிவதற்கு முன்பே, கண்டறிந்து கண்டித்தனர் திராவிட இயக்கத்தார். இந்தி ஆபத்து வருகிறது தாய்மொழிக்கு, தமிழ் மொழிக்கு ஆபத்து வருகிறது - என்று எச்சரிக்கை செய்னர் - தமிழ் நாடெங்கும் கிளர்ச்சி செய்தனர். மூலை முடுக்குகளிலெல்லாம் இந்தி ஒழிக - இந்தி ஒழிக - என்ற முழக்கம் கேட்டது. இந்தி எதிர்ப்பு நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கிளம்பினர் - மறியல் நடைபெற்றது. அந்தோ! அநியாயம்! இரு இளைஞர்கள் சிறையிலே மாண்டும் போயினர். ஆண்களும் பெண்களும் சிறை புகுந்தனர் - ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறை சென்றனர்.

இந்தி ஏகாதிபத்தியம் ஏற்பட இருக்கிறது என்பதை உணர்ந்து அவர்கள், தய்மொழீயை, தமிழகத்தைக் காக்கப் போரிட்டனர், அந்தச் சமயத்திலே... ஐயகோ! இப்போது எண்ணிக்கொண்டால், துக்கம் நெஞ்சைத் துளைக்கிறது - வெட்கம் தலையைச் சாய்க்கிறது - அந்தச் சமயத்திலே, நாம், அவர்களை, குறுகிய மனப்பான்மையினர், குதர்க்கவாதிகள் - கோமாளிப் போக்கினர் - என்றெல்லாம் ஐசினோம், எதிர்த்தோம் - ஐளனம் செய்தோம் - அடக்கு முறையால் அழித்தோம். தமிழுக்கு ஆபத்து இல்லை, என்று பேசினோம். இந்தி தமிழை அழிக்காது என்று உறுதி கூறினோம். இந்தி, என்பது சூழ்ச்சித் திட்டமல்ல, வடநாட்டு ஆதிக்கத்துக்காகப் புகுத்தப்படும திட்டமல்ல, என்று விளக்கங்கள் கூறினோம். கேலிச் சித்திரங்கள் தீட்டினோம், அந்தக் கிளர்ச்சியைக் கேவலப்படுத்தினோம்.

ஆபத்து வருகிறது என்று கூறினர் - அவர்களை அலட்சியம் செய்தோம்.

அருமைத் தமிழ்மொழி அழிகிறது என்று கூறினர் - ஆணவமாகப் பேசி அவர்தம் வாயை அடக்கினோம்.

தமிழ் காக்கக் கிளம்பினர் - தடி கொண்டு தாக்கினோம்.

“இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமாம் - நீங்கள் எல்லோரும் வாருங்கள் தோழர்களே! என்று பாடினர் - நாம் அவர்களைச் சாடினோம்.

எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்தி, எத்தனை பட்டாளம் கூட்டிவரும் என்று பாடிக்கேட்டனர் - நாம் போலீஸ் படையை ஏவினோம் அவர்களைத் தாக்க! இன்று உணருகிறோம், நமது தவற்றை! இன்று உணருகிறோம் உண்மையை!” இன்று உணருகிறோம், இந்தி ஏகாதிபத்தியம் தலை தூக்குவதை!

அன்று கொண்டிருந்த ஆணவம், நமது அறியாமையின் விளைவு.

சேற்றினைப் பூசிக்கொண்டோம். சந்தனம் என்று எண்ணி - நாற்றம் அடிக்கிறது இன்று, நமக்கு அன்றே, இது சந்தனமல்ல, சேறு என்று கூறியவர்களின் நினைப்பு வருகிறது.

இழமான படுகுழி, அருகே போகாதீர் என்று எச்சரித்தனர் - ஆணவநடை நடந்து சென்று வீழ்ந்து விட்டோம் படுகுழியில் வீழ்ந்தபிறகு தான் முனகூட்டியே எச்சரித்தவர்களின் நினைவு வருகிறது.
வெட்கப்படுகிறோம் - துக்கப்படுகிறோம் - மன்னிக்கக் கோருகிறோம்.

கடந்துபோனதை மறந்துவிடும் கண்ணியர்கள் அவர்கள் - தமிழ் காக்கும் கடமைக்காக, நமது முன்னாள் மடமைச் செயல்களை மறந்துவிடும் இயல்பினர், அவர்கள்.

அவர்களுக்குத்தான் இன்று மனுச் செய்து கொள்கிறோம், நீங்கள் முன்பு கூறியது போலவே, இந்தி ஏகாதிபத்யம் மிரட்டுகிறது - உணருகிறோம் - இனி இதனை ஒழிக்கும் முயற்சியைத் துவக்குங்கள் - ஒத்துழைக்கிறோம் - என்று கூறுகிறோம்.

மொழிப் போர் - மொழிப் போர்! - இனி இன்று!! ஆங்கில ஏகாதிபத்யதை ஒழித்தாகிவிட்டது.

இந்தி ஏகாதிபத்யத்தை ஒழித்தாகவேண்டும்!

அதற்கான, அணிவகுப்பைத் தயாராக வைத்துள்ள அன்பர்களே! புறப்படுங்கள்! முரசு கொட்ட வருகிறோம்! களத்திலே கூடுவோம் நண்பர்களாக! கணமும இனித் தாமதியோம்!

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிமையானது எங்கும் காணோம் - என்ற பாரதி வாக்கை மறவோம் - இந்தி ஏகாதிபத்யத்தை ஏற்போம்! இந்தி ஒழிக!

தமிழ் வாழ்க!

தமிழ் வாழ, இந்தி ஒழிக!

நான் பூரிப்பால் தாக்கப்பட்டுப் போனேன் - இதனைப் படித்து முடித்ததும், இதன்றோ வீரம்! இதன்றோ நேர்மை! பண்புடையோர் கொள்ள வேண்டிய போக்கன்றோ இது! குற்றம் உணர்ந்து உருகுகிறார்! கொட்டுவேன் முரசு என உறுதி தருகிறார்! தொடுப்போம் மொழிப்போர் என்று பரணி பாடுகிறார்! எவ்வளவு வீரம் - நேர்மை! இனித் தமிழகத்துக்கு என்ன குறை! இனி வெற்றிக்கு என்ன தடை! வீழ்ந்தேபோவர் இந்தி வெறியர்கள்! ஒழிந்தேபோகும் இந்தி ஏகாதிபத்யம்! - என்று எண்ணினேன் - மெல்லிய குரலிலே, எனக்கு நானே கூறியும் கொண்டேன், நேர்மையும் வீரமும் ததும்பும் ஆச்சொல்லோவியம் தீட்டப்பட்ட தாளைக் கண்களிலே ஒத்திக்கொண்டேன் - குமரப்பன் கரத்தால் ஏற்பட்ட மையும் ஏன் கண்ணீரும் கலந்தது.

உட்புறக் கதவு திறந்தது - அதிசயம், ஆனால் உண்மை - பாதி முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டிருந்த ஒருவர் வந்தார் - வணக்கம் கூறிக்கொண்டே - கடிதத்தை, ஏன் ஜேபியில் வைத்துக்கொண்டேன்.

“பரதன்...”

“நான்தான்! தாங்களா தமிழ் மகன்?”

“ஆமாம்”

“பாதிமுகம்...?”

“ஏன் மறைக்கப்பட்டிருக்கிறது என்கிறீரா? காரணம் இருக்கிறது! இன்னும் கொஞ்ச நாட்களுக்குத் தமிழ் மகன் - என்பது யார் என்று தெரியாமலிருப்பது நல்லது அதற்காகத்தான் இந்த முகமூடி...
எனக்குப் பிடிக்கவில்லை.. தமிழ்மகன் யார் என்று அறிய இவலோடு வந்திருக்கிறேன்.

ஆவல் இருக்கும்... சகஜந்தானே... இந்தி சம்பந்தமாக நான் எழுதிய கட்டுரையைப் பார்த்தபிறகு ஆவலாகத்தான் இருக்கும்.

கட்டுரை என்று சர்வசாதாரணமாகக் கூறுகிறீரே! தமிழ்மகனே! கட்டுரை அல்ல அது - உள்ளத்தின் படப்பிடிப்பு - உணர்ச்சிச் சித்திரம் - தமிழரின் எதிர்கால வாழ்வுக்கு அடிப்படை...

ரொம்பப் புகழ்கிறீரே!

ஏன், கூடாது, தமிழ்மகனே! வீரமும் விவேகமும் நிரம்பிய மடல் விடுத்திருக்கிறீர் - சோர்ந்து கிடக்கும் தமிழகத்தைத் தட்டி எழுப்ப..

ஒரு வகையில் உண்மைதான்.

தமிழ் மகனே! இந்தி ஏகாதிபத்யம் ஏற்படுத்த உண்மையாகவே முயற்சி நடைபெறுகிறதா?

சந்தேகம அதற்கு? வடநாட்டுத் தலைவர்கள். இந்தி ஏகாதிபத்யத்தை உருவாக்கிக் கொண்டுதான் வருகிறார்கள் ஏன் கட்டுரையிலே, நான் தெளிவாக அதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

தமிழ்மகனே! கல்கி ஆசிரியர், எப்படி இதனை வெளியிடச் சம்மதித்தார்.

(முக்கியமான விஷயத்தைக் கூறாதிருந்தேன். பொறுத்திடுக - நான் தமிழ்மகனைக் காண்பதற்காகச் சென்ற இடம் கல்கி காரியாலயம்)
சூட்சமம் இருக்கிறது அதிலே
அவருடைய கருத்தும் அதுதானே

இருக்கலாம் - வேறாகவும் இருக்கக்கூடும்

உண்மை தமிழ்மகன் வேறு கருத்துக் கொள்ள முடியாது.

ஆமாம்.. நான் அதையும ஏன் கட்டுரையில் குறித்திருக்கிறேனே.

தமிழ்மகனே! இந்தி ஆதிக்கம் என்று தீட்டாமல், இந்தி ஏகாதிபத்யம் என்று, கட்டுரைக்குத் தலைப்புக் கொடுத்திருக்கிறீரே, காரணத்தோடு தானே?

காணமற்றுத் தீட்டுவேனா? ஆதிக்கம் என்பது, ஒன்று இளவும், மற்றொன்று, அடங்கி நடக்கவுமாக நிலைமை இருப்பதற்கு ஆதிக்கம் என்ற பெயர் பொருந்தும் ஏகாதிபத்யம் என்பது அதைவிடக்டேகானதல்லவா? மற்றவற்றை அழித்தொழிது ஒன்று தலைதூக்கி, உடு எதிர்ப்பு இன்றி இருக்கும் நிலைமைதானே, ஏகாதிபத்யம் இந்திமொழியை, இதற்கான கருவியாக்குகிறார்கள் மற்ற மொழிகளலெல்லாம் அழிக்கப்படவேண்டும். அல்லது ஏடுபிடியாக - கூலியாக - இக்கபட்டுவிட வேண்டும். என்பதுதான் அவர்கள் திட்டம் ஆகவேதான் ஏகாதிபத்யம் என்று தீட்டினேன்.

உண்மை, தமிழ்மகனே! மரமண்டை களுக்குக் கூடப் புரியக் கூடியவதமாகவே தீட்டியிருக்கிறீர்.

ஏகாதிபத்யம், என்ற சொல் போதுமல்லா, அந்தத் திட்டத்தின் தீமையை விளக்க!

ஆமாம், ஆமாம், நமது நாட்டு மக்கள் கடந்த அறுபது ஆண்டுகளாக எந்தச் சொல்லை, தீதானது, கேவலமானது, ஒழிக்கப்படவேண்டியது என்று கூறிவந்தனரோ, அந்த ஏகாதிபத்யம் என்ற சொல்லையல்லவா உபயோகித்திருக்கிறீர்.

நாற்றம் தாங்க முடியவில்லை, குடலைப்ப ÷றட்டுகிறது, பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது, எண்ணினாலே அருவருப்புண்டாகிறது என்று ஒருபொருளைப் பற்றிப் பலப்பல கூறுவதற்குப் பதிலாக, அந்தப் பொருளை, அது மலம் போன்றது என்று இரத்னச் சுருக்கமாகக் கூறிவிடலாமல்லவா!

ஆமாம் - அதுபோலத்தான், இந்தி தீதானது, பயங்கரமானது, நமது வாழ்வைப் பாழாக்குவது, நம்மை அடிமையாக்குவது, என்றெல்லாம் விவரமாகக் கூறுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்யம் என்ற ஒரே சொல்லை உபயோகித்தீர். தமிழ்மகனே! உமது அறிவுத் திறமையைப் பாராட்டுகிறேன்.
மேலும், ஏகாதிபத்யத்தை எதிர்த்து எதிர்த்து, நமது மக்கள் பழகிவிட்டார்கள். ஆங்கில ஏகாதிபத்யத்தை ஒழித்துவிட்டார்கள் - அவர்களிடம் இதோ ஒரு புதிய ஆபத்து வருகிறது - இந்தி ஏகாதிபத்யம் வருகிறது என்று கூறினால் போதும், உடனே அவர்கள் நிலையைப் புரிந்து கொண்டு எதிர்த்து ஒழிக்கக் கிளம்புவார்கள். அதனால் தான், இந்தி ஏகாதிபத்யம் என்ற தலைப்பு கொடுத்தேன்.

தமிழ் மகனே! நமது மக்கள் இந்தியால் ஏற்பட இருக்கும் - ஏற்பட்டுக் கொண்டு வரும் ஆபத்தைச் சரிவர உணர்ந்து கொள்வார்களா? உணர்ந்து கொண்டாலன்றோ, இந்தி ஏகாதிபத்யதை ஒழிக்கக் கிளம்புவர். எனக்குள்ள கவலை அதுதான், உண்ர்ந்து கொள்வார்களா?

உணர்ந்து கொள்வார்கள் - உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், நான் படடவர்த்தமனாக எழுதியிருக்கிறேன். கவலைப்படாதீர் உணர்ந்து கொள்வார்கள் நிச்சயமாக. இதோ கேளும், இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கினான் என்ற கதைபோல இருக்கிறது இந்த விஷயம் - என்று தீட்டியிருக்கிறேனே. பழமொழி நமது மக்களுக்கு நன்கு தெரிந்தது தானே. இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குபவன் யார்? காதகன், கயவன், கன்னெஞ்சக்காரன் தானே செய்வான் அதுபோல, அந்தக் கருத்துத் தெரியும்படிதான், பழமொழியைப் பிரயோகித்திருக்கிறேன். பூடகமாகச் சொன்னால் போதாது என்று, பச்சையாகவே எழுதியிருக்கிறேன்.

இந்தியாவில் இந்தி ஐகாதபத்தியத்தையே நிலைநாட்டிவிடப் பிரியப்படுகிறார்கள். மற்றப் பாஷைகளையும் மற்றப் பாஷைக்காரர்களையும் இந்தி பாஷைக்கு அடிமையாக்கி விடவே எண்ணுகிறார்கள்.

தமிழ் மகனே! திட்டமாகத்தான் கூறியிருக்கிறாய்.

அதுமட்டுமா? இந்தி ஏகாதிபத்யப் பிரயத்தனம் தற்சமயம் பல இடங்களில் பல உருவங்களில் தலை தூக்கித் திருவிளையாடல் புரிவதைப் பார்த்து வருகிறோம் - என்றும் தீட்டியிருக்கிறேன்.

ஆமாம் - பல உருவங்களிலே கிளம்புகிறது, இந்தி ஏகாதிபத்யம் தபால் உத்தியோகத்திலே உள்ளவர்கள் அனைவருக்கும் இந்தி தெரிந்திருக்கவேண்டும், ஆகையால், தபாலாபீசுகளிலெல்லாம் இந்தி போதிக்க வகுப்புகள் ஏற்பாடு செய்யவேண்டும். என்று யாரோ, பம்பாய் அதிகாரி ஒருவர் பேசினதாகச் சின்னாட்களுக்கு முன்பு செய்தி வந்ததே! தமிழ் மகனே! நெஞ்சு பதைக்கிறதல்லவா, இப்படிப்பட்ட செய்திகளைப் படிக்கும்போது, வெள்ளைக்காரன் செய்த கொடுமையைவிட மோசமானதாக இருக்கிறதே இவர்கள் செய்வது.

ஆமாம்! அதையும் தெளிவாகத் தீட்டியிருக்கிறேன்.

ஐதோ ஆங்கிலேயர்களாவது ஆண்டியன் இங்கிலீஷ் என்று தங்களுக்குள் சிரித்துவிட்டு, ஐதோ காரியம் நடந்தால் சரி என்று இருந்தார்கள். ஆனால், இந்தி ஏகாதிபத்யவாரிகளோ ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மற்றப் பாஷைக்காரர்களையும் மட்டந் தட்டவும் அதைக் காரணமாகக் கொண்டு கீழே அமுக்கி வைக்கவும் பார்க்கிறார்கள் - என்று எழுதியிரக்கிறேன். கவனித்தீரோ?

கவனித்தேன் - களிப்படைந்தேன், தமிழ் மகனே!

இந்திய சர்க்கார் உத்யோகங்களிலும் இந்தியின் ஏகாதிபத்யம் கொடுமையுடன் ஆட்சி செலுத்தத் தொடங்கியிருக்கிறது - என்று கூடத் தீட்டினேன்.

பார்த்தேன், தமிழ் மகனே! பார்த்தேன். இந்தி, இந்தியாவின் தேசிய பாஷையாக வேண்டுமென்று தானே முதலிலே அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்?

“ஆமாம்! ஆனால், அவர்களின் உள்நோக்கம் வேறு, அதையும் நான் தெளிவுபடுத்திவிட்டேன்.”

இந்திபாஷை இந்தியாவின் தேசிய பாஷையாவதோடு அவரக்ள் திருப்தியடையத் தயாராயில்லை. இந்தியாவில் இந்தி ஏகாதிபத்யத்தையே நிலைநாட்டிவிடப் பிரியப்படுகிறார்கள். மற்றப் பாஷைகளையும் மற்றப் பாஷைக்காரர்களையும் இந்தி பாஷைக்கு அடிமையாக்கிவிடவே எண்ணுகிறார்கள்.
என்று வட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறேன்.

இங்கிலீஷ் இருந்த இடம் இந்திக்கு வேண்டுமாம், தமிழ் மகனே!

அப்படித்தான் சொல்லுகிறார்கள் இந்தி பாஷை வெறியர்கள். அவர்களின் ஆணவத்தை மண்டையிலடிக்கிறபடி எழுதியிருக்கிறேன். இந்தியின் யோக்யதை என்ன - இங்கிலீஷின் யோக்யதை என்ன!

தமிழ் மகனே! தைரியமாகத்தான் எழுதியிருக்கிறாய்.

ஆங்கில மொழியிலுள்ள அறிவுக் களஞ்சியங்களுக்கு அளவு சொல்ல முடியாது. ஆங்கில மொழியில் உள்ள இலக்கியச் செல்வம் ஏழு சமுத்திரங்களையும் விடப்பெரியது.
என்றல்லவா, எழுதியிருக்கிறீர்.

ஆமாம் - உண்மையைக் கூறுவதிலே, பயம் ஏன் இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டைப் பற்றிய விவரங்களûச் சொல்லும் புத்தகங்கள் தமிழில் உள்வற்றைக் காட்டிலும் ஆங்கிலத்தில் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
என்று கூடத்தான் எழுதிக் கேட்டிருக்கிறேன்.

ஆமாம், ஆஸ்திரேலியா தேசத்தையடுத்த கடல்களில் எத்தனை மீன்கள் இருக்கின்றன என்பதைப் படங்களுடன் விவரமாகக் கூறும் பெரிய புத்தகங்கள் ஒன்பது இருக்கின்றன. - என்று கூட எழுதியிருக்கிறீர்.

ஆமாம் - ஏன் சிரிக்கிறீர் - மொழி ஆராய்ச்சியில் உடுபட்டு, மீன் ஆராய்ச்சிக்குச் சென்று விட்டேனே என்று எண்ணிச் சிரிக்கிறீரா?

இல்லை, இல்லை, தமிழ் மகனே! இங்கிலீஷை எவ்வளவோ கேவலமாகக் கண்டித்துப் பழக்கப்பட்டவராயிற்றே, இந்தக் கல்கி ஆசிரியர் போன்றவர்கள், அவருடைய அலுவலகத்தில் இருந்துகொண்டே, இவ்வளவு துணிவுடன் இங்கிலீஷைப் புகழ்கிறீர்ரே என்று எண்ணினேன் - சிரித்து விட்டேன்.

கொஞ்சம் காரசாரமாகக் கூட எழுதிவிட்டேன்.

ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக இந்தியை உபயோகிப்பது என்பது முழு மடமையே யாகும்.
என்று எழுதியிருக்கிறேன்.

முழு மடமை! - தமிழ் மகனே! தைரியமாகத்தான் தீட்டி விட்டீர்.

அறிவைத் தேவதற்கோ இலக்கியச் சுவையை அனுவிப்பதற்கோ பண்பாட்டை வளர்ப்பதற்கோ இந்தி பாஷையினால் பயன் ஒன்றும் இல்லை.
என்று எழுதியிருக்கிறேன்.

உண்மைதான் அது! என்ன வளம் உண்டு. இந்தியில்? நேற்றுத் தோன்றியது. நமது தமிழ் தொன்மை வாய்ந்தது. நமது தமிழை ஒழிக்க ஒரு முயற்சி நடக்கிறதென்றால், தமிழ் மகனே! இரத்தம் கொதிக்காதா.

இரத்தக் கொதிப்புடன் தான் தீட்டியிருக்கிறேன்.

இந்தி பாஷைக்காரர்கள் அந்தப் பாஷையின் ஏகாதிபத்யத்தை ஸ்தாபிக்க விரும்புகிறார்கள், என்று நாம் சொல்லுவது விளையாட்டல்ல, வெறும் பயமுறுத்தல் அல்ல. வடநாட்டு அரசியல்வாதிகள் - இந்திப் பண்டிதர்களுக்கிடையே இத்தகைய ஏகாதிபத்ய வெறி வளர்ந்து வருகின்றதென்பதற்குப் பல அறிகுறிகள் காணப்பட்டு வருகின்றன. வட நாட்டுக்குச் சென்று வரும் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் பலரும் வட நாட்டில் வாழ்க்கை நடத்தி வரும் தமிழர்கள் பலரும் ஏற்கெனவே இதைப் பற்றிப் புகார் செய்து வந்திருக்கிறார்கள்.
என்றெல்லாம் எழுதியிருக்கிறேன்.

படித்தேன், படித்தேன், தமிழ் மகனே! உமது கட்டுரையின் சாரத்தைச் சொல்லட்டுமா
1. இந்தி ஏகாதிபத்யம், ஒரு ஆபத்து.
2. வடநாட்டு அரசியல் தலைவர்களும் பாஷைப் பண்டிதர்களும் இந்தி ஏகாதிபத்யத்தைப் புகுத்துகிறார்கள்.
3. இந்த வெறி வளர்ந்து கொண்டே வருகிறது.
4. வடநாடு சென்று வரும் தமிழர்கள் இதனை உணர்ந்து உரைத்திருக்கிறார்கள்.
5. மற்ற பாஷைகளையும பாஷைக்காரர்களையும் மட்டந் தட்டி அடிமையாக்கவே, இந்த ஏகாதிபத்ய வெறியர்கள் திட்டிமிட்டிருக்கிறார்கள்.
6. இந்தி, வளமற்ற மொழி.
7. அறிவுத் துறைக்கோ இலக்கியத்துக்கோ, பண்பாட்டுக்கோ பயன்படாதது இந்தி.
8. இங்கிலீஷ் பாஷைக்கு உள்ள இலட்சணம் இந்திக்குக் கிடையாது.
9. இந்தி ஏகாதிபத்ய வெறியை எதிர்த்து ஒழித்தாக வேண்டும்.
10. இந்தி ஏகாதிபத்யம் என்பது பாஷை ஆளவோடு உள்ளது அல்ல அரசியல் துறையிலும் நுழைகிறது.
ஏன் கட்டுரையின் சாரம் அதுதான்.

தமிழ் மகனே! இவ்வளவு விளக்கமாகவும் வீரமாகவும் கட்டுரை திட்டியதற்காக ஏன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி என்றால், ஏதா நமது வசதிக்காகக் கற்றுக்கொள்ள வேண்டிய மொழி, அதனால், நமது மொழிக்கோ மக்களுக்குகோ ஆபத்து வராது. இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி, தேசிய மொழி இருப்பது அவசியம். அதற்காகத்தான் இந்தி - என்று நமது மக்களை நம்பும்படி செய்துவந்தனர். அங்ஙனம் செய்தவர்களில் சிலர் விவரம் அறியாதவர்கள், சிலர் நயவஞ்சகர்கள், உமது கட்டுரை இந்த இரு சாராரையும் திருத்தும் - தமிழருக்கு விழிப்புண்டாக்கும் இவ்வளவு தீட்டிய உம்மைக் காண வேண்டும் என்று ஏன் மனம் துடிக்கிறது - ஏன் முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறீர் - தமிழ் மகனே! முகமூடியை எடுத்துவிடும், தமிழர் உம்மைக் காணட்டும்.

வேண்டாம், வேண்டாம், அதற்கு இது சமயமல்ல.

தமிழகத்திலே, இந்த மொழி கூடாது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே கூறி, கிளர்ச்சி செய்து, அடக்குமுறைக்கு ஆளான கூட்டத்தார் இருப்பது, தமிழ் மகனே! உமக்குத் தெரியுமே, அவர்கள் உமது கட்டுரையைக் கண்டால் களிநடமாடுவார்கள் - கை குலுக்க வருவார்கள்..

ஆமாம் - அதற்காகத்தான் நான், முகமூடி போட வேண்டி இருக்கிறது.

ஏன்?

ஐனா! நான் இன்று தீட்டியுள்ளவைகள் யாவும் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தீட்டி வந்தவை. இந்தி ஏகாதிபத்யம் - என்ற சொற்றொடரை உபயோகித்தவர்களே, அவர்கள்! வடநாட்டவர், ஆதிக்க வெறியுடன் இந்தக் காரியத்தைச் செய்கிறார்கள், என்று அவர்கள் எச்சரிக்கை செய்தனர் - இந்தியை எதிர்த்தனர்.

ஆமாம் - இன்று அதே கருத்து, கல்கியில் இடம் பெறக் கண்டு களிப்பர்.

இல்லை - கேலி பேசுவர் படுகுழி இவ்வளவு காலத்துக்குப் பிறகு தானே தெரிகிறது. விழி, பழுதா உனக்கு? என்று கேட்பர். இந்தி ஒழிக என்ற முதல் முழக்கத்தை நாங்கள் கிளப்பியபோதே, நீயும் ஒத்துழைத்திருந்தால் - அந்தக் கண்ணியம் வராவிட்டாலும் - எதிர்க்காமலாவது இருந்தால், இன்று இந்தி இப்படி வெறிபிடித்து அலையுமா? என்று இடித்துரைப்பர்.

தமிழ் மகனே! அச்சம் வேண்டாம், அறிவு, உதிக்கக் காலதாமதமாயிற்று, எனினும் உதித்ததே, அதுபோதும் என்று எண்ணி அகமகிழ்வர்.

இல்லை எனக்குப் பயமாகத்தான் இருக்கிறது. அவர்கள் ஒரு சமயம் பெருங்குணத்தால் என்னை மன்னித்தாலும், பொதுமக்கள் என்ன எண்ணுவர் என்னைப்பற்றி, இந்திமொழி மூலம் இவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்று, இன் கல்கியில் கட்டுûடிர வெளிவருகிறதே, இதே விஷயத்தைப் பல ஆண்டுகளக்கு முன்பே, சொல்லடி, கல்லடி, தடியடிக்கு மத்தியிலே நின்றுகொண்டு கூறினரே திராவிட இயக்கத்தால், அப்போது கல்கியன் அறிவுக்கண் ஏன் குருடாகிக் கிடந்தது. ஆணவம் ஏன் மேலோங்கி இருந்தது. ஏன் தமிழர் பெரும்படையை கல்கிக்கூட்டம் எதிர்த்தது, என்றெல்லாம் எண்ணுவர் - ஏதேதோ பேசுவர் ஏசுவர் - இதற்காகத்தான், நான் யார் என்பதை வெளியே தெரியவிடக்கூடாது என்று மூடி போட்டுக் கொண்டிருக்கிறேன் அது மட்டுமில்லை - இரண்டொரு வாக்கியம் அவர்களையே கண்டித்தும் இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் ஒரு கூட்டத்தார் சில காலத்துக்கு முன்பு இந்தி ஒழிக என்ற கூச்சலைக் கிளப்பினார்கள். இந்தக் குறுகிய துவேஷ மனப்பான்மை கொண்டு கூச்சலைத் தமிழ்ப் பெருமக்கள் எதிர்த்து ஒழித்துக் காட்டினார்கள்.
என்று எழுதியிருகிறேன்.

தமிழ் மகனே! அதையும் கண்டேன் - பதைத்தேன் - இந்தி வெறியரின் போக்கையும் நோக்கத்தையும் இவ்வளவு தெளிவாகக் கண்டறிந்து இவ்வளவு பட்டவர்த்தனமாகக் கண்டிக்கும் தமிழ் மகன் யாரைப் போற்றவேண்டுமோ, அந்தக் கூட்டத்தாரைக் கண்டித்து எழுதுகிறாரே, ஏன் என்று எண்ணினேன் - திகைத்தேன் - தெளிவு பெறவே இங்கு வந்தேன் - இதைக் கண்டேன்.
இவ்விதம் கூறிக் கொண்டே கம்பாசிடர் குமரப்பன், மேஜை மீது கொண்டு வந்து வைத்த, காகிகதச் சுருளைக் கொடுத்தேன், தமிழ்மகன் கரத்தில் அதைப் பார்த்ததும் தமிழ் மகன் துடிதுடித்தான்.

தமிழ்மகனே! இதை இந்த வாரக் கல்கியில் வெளியிடப் போகிறாயா?.. என்று ஆர்வத்துடன் கேட்டேன்.

இல்லை - இல்லை இது எப்படி உமக்குக் கிடைத்தது என்று தமிழ் மகன் கேட்டார். அந்தக் காகிகதச் சுருளை எனக்குக் கிடைத்த விதத்தைக் கூறினேன். திடுக்கிட்டுப் போன தமிழ்மகன் அந்தக் காகிதச் சுருளை மேஜை அறையிலே வைத்துப் பூட்டிவிட்டார்.

இந்த வாரம் வெளி வருகிறதா? என்று மீண்டும் கேட்டேன்.

இல்லை - இது போனவாரம் நான் வெளியிட்ட இந்தி ஏகாதிபத்யம் என்ற கட்டுரையில் இருபகுதிதான் என்று சோகத்துடன் கூறினார் தமிழ் மகன்.

பத்திரிகையில் இந்தப் பகுதி காணோமே என்று நான் கேட்டேன்.

கடைசி நேரத்தில், இந்தப் பகுதியை நீக்கிவிட்டேன் என்று மீண்டும் சோகத்துடன் பதில் கூறினார் தமிழ் மகன்.

ஏன்? என்றேன், நான் - கோபம் பிறந்தது.

எப்படி, என்னை நானே கேவலப்படுத்திக் கொள்ளமுடியும் என்றார், தமிழ்மகன்.

கோழைத்தனம், என்று கூறும் என்றேன் நான் கோபமிகுதியால்.

இந்தி வெறியர்களைக் கண்டிக்கவேண்டும் என்று தோன்றிற்று. எழுதிக் கொண்டே போனேன் - கட்டுரை வளர, வளர, நானே பயந்து போனேன் - இந்தி ஒழிக என்று கூவிய கூட்டத்தார் திட்டுவது போலவே இருந்தது ஏன் கட்டுரை ஏன் நிலைமை, ஏன் சகாக்கள் - எனக்கு உள்ள சூழ்நிலை, இவைகளை எண்ணினேன் செச்சே! ஆபத்தில் சிக்கிக்கொண்டோம் என்று தோன்றிற்று - உடனே கட்டுரையைத் திருத்தினேன் - இந்தி ஒழிக என்று பேசியவர்களைக் கொஞ்சம் கண்டித்து எழுதினேன் வேறு வழியில்லை என்றான் தமிழ் மகன்.

சுயநலம்! என்றேன் நான் சூடாக.

சூழ்நிலை என்றார் தமிழ் மகன்.

சூழ்நிலையை வெல்பவனே வீரன் தமிழன் என்று நான் கூறினேன்.

என்னால் அது முடியவில்லையே என்றார் அழுகுரலில் தமிழ் மகன்.

அப்படியானால் நீ உண்மைத் தமிழ் மகனல்லன் என்று நான் உரக்கக் கூவினேன். ஏன் எதிரே உட்கார்ந்து கொண்டிருந்த தமிழ்மகன் பயத்தால் நடுங்கினான் - நான் கோபத்தால் துடித்தேன் ஏன் குரல் மேலும் மேலும் கோபத்தைக் கொட்டலாயிற்று.

உண்மைத் தமிழ் மகன் அல்ல!
உண்மைத தமிழ் மகன் அல்ல!
உண்மைத் தமிழ் மகன் அல்ல!
பெருங் கூச்சலிட்டேன்.

என்னடா, தூக்கத்திலே, இந்த அமர்க்களம் என்று கேட்டபடி, என்னைத் தட்டி, ஏழுப்பினேன், ஏன் நண்பன் வீரன் கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்தேன். படுக்கையில் என்பக்கத்தில் மே 7ந் தேதிய கல்கி இருந்தது.

(திராவிட நாடு - 14.5.50)