அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இந்தியும் தமிழ் மகனும்
(2)
“வீரா! விசித்திரமான கனவு கண்டேன், கல்கி காரியாலயம் சென்றது போலவும், அங்குத் தமிழ் மகன் என்பவரைக் கண்டது போலவும், பேச ஆரம்பித்து அது கடைசியில் சண்டையில் வந்து முடிந்தது போலவும் கனவு கண்டேன். எல்லாம் இந்த இதழ் படித்ததால் ஏற்பட்ட விளைவு” என்று கூறிவிட்டு, இந்தி ஏகாதிபத்யம் என்ற கட்டுரை வெளிவந்த கல்கி இதழைத் தந்தேன். வீரன், மிக அலட்சியமாக அதைப் பார்த்துவிட்டு, பரதா! வேகாத பண்டத்தைத் தின்றால் உடம்புக்குக் கேடு தருமே, அது போலவேதான் கனியாத கருத்தை உட்கொள்வதும் கேடு தரும் என்றான்.

“அப்படியானால் கல்கியில் வந்துள்ள கட்டுரை, கனியாத கருத்தா? எப்போதுமே வீரா! நீ சற்று முன் கோபி” என்றேன் நான், “என்ன வேண்டுமானாலும் பேசு, ஏசு, கவலை கொள்பவன் நானல்ல. அர்த்தமற்ற பேச்சையும், அகத்திலே மூண்டு கிடக்கும் தோல்வித் தீயினால் கிளப்பி விடப்படும் ஆகங்காரப் பேச்சையும், உள்ளது போச்சுதே என்ற மன ஏரிச்சலால் உண்டாகும் உள்றலையும், நான் வாயசைவு என்று கொண்டு, தூசு எனத் தள்ளிவிடுபவன், என்றான் வீரன். “அடடே! என்னப்பா இது, ஆரம்பமே காரமாக இருக்கிறது” என்று நான் சிரித்த முகத்துடன் கூறினேன். கோபந்த தணிந்தவனாய் வீரன், பரதா! கல்கியில், வெளிவந்த இந்தக் கட்டுரையை ஏன் நீ அவ்வளவு கருத்துடன் கவனிக்கவேண்டும். என்ன பிரமாதமான கண்டுபிடிப்பு அதிலே இருக்கிறது, அறிவுத் தெளிவால் தமிழ்மகன் எந்த அமெரிக்காவை, அந்தக் கட்டுரையிலே காட்டியிருக்கிறார். மந்த மதியினருக்கும் தெரியும் விஷயத்தைக் கொஞ்சம் சுந்தரத் தமிழிலே திட்டி விட்டிருக்கிறார். என்றான். ஒரு வகையில் சரிதான், என்றாலும், கல்கியில் இதுபோல இதுவரை வெளிவந்ததில்லையே! என்றேன் நான் இது ஒரு புது சீசன், பரதா! இந்தி மொழி மூலம் தமிழகத்துக்குக் கேடு மூண்டு வருகிறது என்பதைப் பலரும் புரிந்து கொண்டு விட்டனர். இதை அறிந்து கல்கி, சீசன் சரக்கு தயாரித்திருக்கிறது.

இந்தியால் ஆபத்து ஏற்பட இருக்கிறது என்று எண்ணும் பல்லாயிரவருக்கு இந்தச் சரக்கு விற்பனை செய்யலாம் என்ற நோக்கத்துடன். இந்த வியாபார நோக்கம் இல்லாமல், உண்மையிலேயே, மனஎழுச்சியும், நேர்மையும் இருந்திருக்குமானால், தமிழ் மகன் எந்த இந்தி ஏகாதிபத்யத்தைக் கண்டித்துக் கட்டுரை தீடடுகிறாரோ, அதே இந்தி ஏகாதிபத்யத்தை கருவிலிருக்கும்போதே கண்டித்த நம்மவர்களை, தமிழர்களைக் கண்டிப்பாரா? எவ்வளவு நெஞ்சழுத்தமும் நேர்மைப் பஞ்சமும் இருந்தால், இந்தி மொழி மூலம் வடநாட்டு வன்கணாளர்கள் ஒரு ஏகாதிபத்யத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் என்பதையும் எடுத்தெழுதிவிட்டு, இதை இந்தத் தமிழ் மகன் தெரிந்து திகைப்பதற்கு நெடுநாட்களுக்கு முன்பே தெரிந்து, நாட்டுக்குத் தெரிவித்து, நாடாள்வோரின் தாக்குதலுக்கும் உடுகொடுத்து, இரு வாலிபர்கள் பிணமாகக் கண்டு பெருந்துயருள்ள தமிழர்களைத் தாக்கி எழுத மனம் வரும் என்றான் வீரன். அந்த விஷயமாக விவாதம் முற்றியபோது தான், வீரா! நான், அந்த ஆசாமியை, உண்மைத் தமிழ் மகன் அல்ல என்று கூறினான் - கனவில் என்றேன் நான். மனிதப் பண்பு துளியாவது உள்ளவர்கள், தமிழ் மகன் நம்மைக் கண்டித்ததுபோலக் கண்டிக்கமாட்டார்கள். எவ்வளவு காலத்துக்கு முன்பு, நாம், இந்தத் தமிழ் மகன் இன்று தன் ஆதிமேதாவித்தனத்தால் கண்டுபிடித்து உண்மையை, பட்டி தொட்டிகளிலெல்லாம் எடுத்துக் கூறினோம். அப்போது இந்தத் தமிழ் மகன்களெல்லாம் இந்தி வெறியர் முன் இளித்தக் கொண்டு கிடந்தனர். நம்மை நிந்தித்தனர். தமிழ் கெடாது என்று சாதித்தனர், போலீசை நம் மீது ஏவிவிட்டனர், தாய்மார்கள் சிறையில் தள்ளப்பட்டபோது கேலி பேசினர். இதுபோலச் செய்ததற்குக் காரணம் புத்திக் குறைவாக இருந்தால், புத்தி வந்ததும், தமது பழைய தவறுகளுக்காக வருந்திக் கழுவாய் தேட முற்படுவர். ஆனால் அவர்கள் அன்றுகொண்ட போக்குக்குக் காரணம் புத்திக் குறைவாக இருந்தால், புத்தி வந்ததும், தமது பழைய தவறுகளுக்காக வருந்திக் கழுவாய் தேட முற்படுவர். ஆனால் அவர்கள் அன்றுகொண்ட போக்குக்குக் காரணம் புத்திக் குறைவு அல்ல! அப்போதே அவர்கள் அறிவார்கள், வர இருக்கும் ஆபத்தை, இப்போதுதான் போதி மரத்தடியிலே உட்கார்ந்தனர் என்று எண்ணாதே, பரதா! தெரிந்தே, தீமைக்கு உடந்தையாக இருந்தனர். இன்று, தேம்புவதும், திகைப்பதுமாகக் காட்சி காட்டுவது, நான் முன்பே கூறியபடி சீசன் சரக்கு, வேறில்லை, என்றான் வீரன்.

“இந்தி ஆதரவாளர்களாக அன்று இருந்தவர் அனைவருமே வா, தெரிந்து தீமைபுரிந்தவர்கள்?” என்று நான் கேட்டேன். “இல்லை, இல்லை பரதா! ஆதரவாளர்கள் அனைவருமேவா, அக்ரமக்காரர்கள்! அப்படிச் சொல்வேனா? முறைதானாகுமா? சிலபேர், உண்மையாகவே, இந்தி மோகினியால் தமிழகத்துக்கு ஆபத்து வரும் என்பதை அறிந்திருந்தும், தத்தமது சிறு இலாபத்துக்காக, எலும்புத் துண்டுக்காக, எச்சிலை நக்குகிறோம் இழிவாயிற்றே என்ற எண்ணமின்றி எச்சிலானாலும், ஜலமும் சீனியும் நெய்யும் பருப்பும் கலந்த பாயாசம் இருந்த ஆலையாயிற்றே என்றெண்ணி மகிழ்வதுபோல், ஆதிக்கவேட்டை யாடும் வடநாட்டுத் தலைவர்களுடன் கூடிக்கொண்டு, தாய்மொழி காத்திடப் பணியாற்றிய நம்மைத் தாக்கினர். இந்திக்கு எதிர்ப்போ எங்கும் மூண்டுவிட்டது, கிளர்ச்சி அருமையாக உருவெடுத்தது, தூங்கிக்கிடந்த தமிழகம் விழிப்புற்று வீறுகொண்டெழுந்தது கண்டு இந்தி ஆதிக்காரர்கள் தமது திட்டம் நொருங்கிப்போகும் என்று அஞ்சி, குழைவும், குளறலும் கலந்த குரலில் பேசிக் கொண்டு நாலுவார்த்தை தெரிந்துகொண்டால்போதும், உங்க்ள தாய்மொழிய்ன வளத்தை உலகு அறியுமே. அதைப் புறக்கணிக்கச் செய்வோமா, என்றெல்லாம் கொஞ்சுமொழி பேசினர் - அந்தச் சமயத்திலே, மாற்றானின் கோட்டைக் கதவு தூளாகும் நேரத்தில், உடனிருப்போன் வெற்றி வீரனை முதுகில் குத்துவதுபோல, இந்தத் தமிழ் மகன்கள், ஆதரவாளர்களாயினர் - வெட்கம், மானம், ரோஷத்தை விட்டுவிட்டு, வெந்ததைத் தின்றிட, எந்த வேலையையும் செய்திடச் சம்மதிக்கும் வெடிவெட்டிகளாயினர் - தமிழ் இட்லி, இந்தி சட்னி என்றும், தமிழ் காபி, இந்தி சர்க்கரை என்றும் கதை பேசிக் காலந் தள்ளினர். எதிர்ப்பாளர்கள் எங்கும் கிளம்பிடக் கண்டு கலக்கமுற்ற சமயத்தில், இந்த ஆதரவாளர்கள் கிடைத்திடவே, ஆதிக்க வெறியர்கள், இவர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கினர். தாசராகிறோம், தாயகத்தைச் சிதைக்கிறோம் என்ற கவலையின்றி, இடம் கிடைக்கிறது என்ற ஒரே மகிழ்ச்சியால் இந்தச் சடங்கள் தமிழரைத் தாக்கக் கிளம்பின. தமிழ் வீரர்களைக் கேலி செய்தனர். நாடாள்வோருடன் கூடிக்கொண்டு நம்மை நையாண்டி செய்தனர். அற்ப இலாபத்துக்காக வேண்டி ஆதரவாளர்களான இவர்களைக் கொண்டு, இந்தி மொழி வெறியர்கள் தங்களுக்கு வர இருந்த ஆபத்தைத் தடுத்துக் கொண்டனர். ஓட்டகத்துக்கு முகம் மட்டும் உள்ளே நுழைத்துக் கொள்ள இடம் தந்தவன் கடைசியில், கூடாரத்தை விட்டடே வெளியேற வேண்டி வந்த கதை போலாயிற்று, இன்று, எனவேதான், இந்தியின் ஆதரவாளர்களாகித் தெந்தினம் பாடிப்பிழைத்த தமிழ் மகன்கள், இன்று இடியும் பிடியும் பலமாகி விட்டதைக் கண்டு கலக்கமடைகின்றனர். அன்று செய்தது துரோகமாயிற்றே - அக்ரமத்துக்கு உடந்தையாக இருந்தோமே, ஏன் ùச்யவது என்று எண்ணி உள்ளம் உருகாமல், ஆதரவாளர் வேடம் போட்டு அடையவேண்டிய இலாபத்தை அடைந்தாகிவிட்டது. இனி தமிழ் மகனாகித் தரகுக் காசு கிடைக்க வழி தேடிக் கொள்வோம் என்று எண்ணிக்கொண்டு, ஐதோ திட்டிக் காட்டுகின்றனர். ஊரெல்லாம், உணர்ச்சி உள்ளொரெல்லாம், தமிழரெல்லாம், தன்மானத் தோழர்களெல்லாம், இந்தி திணிக்கப்படுவது கண்டு, வெகுண்டெழுந்து, இகாது இந்த அக்ரமம் என்று எதிர்த்தபோது, ஆதிக்கக்காரரின் நோக்கத்தை அறிந்து கிளர்ச்சி செய்தபோது, சந்து கிடைத்ததும புகுந்து கொள்ளும் சர்ப்பம்போல, இருட்டு வேளை வந்ததும் உள்ளே புகும் கள்ளன் போல, எதிர்ப்பாளர்களின் அணி வகுப்புப் பலமாகி இந்திமொழி வெறியர்கள் இடர்ப்பட்ட வேளையில், ஆதிக்கக்காரருக்கு, ஆதரவாளராகி, ஆடப்பந்தாங்கி, அதிலே இலாபமும், மகிழ்ச்சியும் பெற்று, இளவரசுப் பட்டம் கிடைத்துவிட்டது என்று எண்ணி, யாரே இனி எமக்கு உடு என்று தெந்தினம் பாடிக்கிடந்தனர் - சொந்த நாட்டினரை, செந்தமிழ் மொழியினரைக் காட்டிக் கொடுத்தனர். இவர்களிலே சிலர் இன்று கூசாது குழறாது, தம்மைத் தமிழ் மகனென்றும் கூறிக் கொள்கின்றனர். நள்ளிரவிலே கன்னம் வைத்து உள்ளே பதம்பார்க்கும் கள்ளனிடம், கைக்கூலி வாங்கிக் கொண்டு கதவைத் திறந்துவிடும் காதகன்போல, எங்கும் இந்திக்கு எதிர்ப்பு ஏற்பட்டு, சர்வாதிகாரத் திட்டம் சரிந்துபடும் சமயத்தில், ஆதரவாளர்களாகி, இந்தி இடம் பெற உள்வு கூறி உடந்தையாக இருந்தவர்கள் இன்று உத்தமர் போல நடித்து, தமக்கும் தமிழிடம் மெத்தப் பற்று இருப்பதாகக் கூறுவது, விந்தை மட்டுமல்ல, வேதனை தரும் நிகழ்ச்சியுமாகும். என்று வீரன் காரசாரமாகக் கூறினான். கோபம் வேண்டாம், வீரா! நீ குறிப்பிட்ட இந்தப் பேர்வழிகள் இந்திக்கு ஆதரவாளர்களாகி விட்ட காரணத்தாலா, ஆதிக்கக்காரர்களின் கரம் வலுத்துவிட்டது, இதுகள் ஆதரவாளர்களாக இருப்பதும் எதிர்ப்பாளர்களாக இருப்பதும் இரண்டும் ஒன்றுதானே! பலப்பல இலட்சங்களைக் கொட்டித் தானே, இந்திக் கள்ளியைத் தமிழ்ச் சோலையிலே வளர்த்தனர் என்றேன் நான் - வீரனின் கோத்தைத் தணியச் செய்ய அதை யார் இல்லை என்றார்கள், பரதா! சொந்தக்கால் எனமானதுகள் ஓட்டப்பந்தயக் காரனுக்கு வெற்றிக்கு வழி காட்ட முன்வந்தது போன்ற வேடிக்கைதான், இந்த ஆதரவாளர்கள் சிலரின் போக்கும் - நினைப்பும் மனுவும மாந்தாதாவும், பதஞ்சலியும் பாணினியும், காளிதாசனும் பிறரும் வளர்த்த மொழி, காவிய ரசமும் கடவுள் அருளும் சொட்டுவது, ததும்புவது, தேவமொழி, தேவனின் அருளைத் தேடித்தரும் மேலான மொழி என்று எந்தச் சமஸ்கிருதத்தை வானவளாவப் புகழ்ந்தனரோ, அந்த மொழி உலகவழக்கு அழிந்து ஒழிந்து போன போது, அதைக் காப்பாற்றும் திறன் ஆற்றுப் பிணக்குழிப் பக்கம் நின்று ஐதோ பிதற்றிக் கிடக்கும் போர் வழிகளிலே சிலதுகள், இந்திமொழியை ஆதரிக்கும் செயலிலே உடுபட்டால் என்ன வெற்றி காணமுடியும்? நான், அத்தகைய ஆதரவாளர்களின் ஆற்றலைப் பற்றிக் கவலைப்படுவதாக எண்ணாதே! ஆற்றல் சூன்யமானதால் தான், தூற்றல்பாணத்தைக் கொண்டு தமிழரின் ஏஅகு உள்ளத்தைத் துளைத்திடலாமா என்று எண்ணிடத் தோன்றிற்று அந்தக் கருத்துக் குருடர்களுக்கு நான் அவர்களின் ஆற்றலை அல்ல, பரதா! எண்ணிப் பேசுவது, மனித சுபாவம் சில சமயங்களிலே எவ்வளவு மட்டரகமாகிப் போகிறது சுயநலத்தின் காரணமாக என்பதைத்தான் எண்ணி ஐக்கமடைகிறேன். கள்ளரும் காமுகரும் கூடிடும் பாழ் மண்டபத்தில், குத்து விளக்கும் குடவிளக்கும், தூங்கா விளக்கும் ஏன் இருக்கவேண்டும் என்று கூறி, அவைகளை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பி, உள்ளே இருள்மயம், போகாதே - என்று கூறினால், வௌவாலும் பிறவும் கேட்கவா போகின்றன! இருளடைந்த பாழ் மண்டபத்திலேதான் எமக்கு இடம தாராளமாகக் கிடைக்கும், இஷ்டப்படி பறந்திடலாம் எங்கும் சென்று தொங்கிடலாம் இடம் முழுவதும் எமக்கேதான், போட்டி இராது மோதுதல்வராது, என்று எண்ணியல்லவா, வௌவால் நுழைந்து வட்டமிடும். அதுபோல, எந்த வரிசையில் இருள் அதிகமாகித் திறம் குறைந்து கிடக்கிறதோ, அங்கே இருந்தால்தான் தமக்குக் கீர்த்தியும் கித்தாப்பும் கிடைக்கும் இடமும் இலாபமும் கிடைக்கும், என்று எண்ணிக்கொண்டு, அந்த வரிசையிலே சென்று நிற்கும் பேர்வழிகள் சிலருண்டு. அது போலவே, மொழி வல்லுநர்களும் கல்வி நிபுணர்களும், வரலாறு தெரிந்தோரும் வாழ்க்கை நூலாராய்ச்சியனரும, பள்ளி ஆசிரியர்களும் மாணவத் தோழர்களும், இந்தி எதிர்ப்பு முன்னணியில் நின்றனர், மறைமலைஅடிகளும் நாவலர் பாரதியாரும், நமது புரட்சிக் கவிஞரும் முத்தமிழ் கற்றோர் பலரும், இந்தியைத் திணித்திடும் முயற்சியை எதிர்த்தனர் - அந்த எதிர்ப்பு முகாமில், தமிழையும் தமிழகத்தையும் தழைத்திடச் செய்யும் வல்லமை கொண்டோர் கூடினர், பெரும்படை ஒன்று திரண்டது, போர் பல கண்ட பெரியார் தலைமையில், தேன் தமிழின் காவலராம் கலியாண சுந்தரனார் நோயையும் மறந்து வந்து நின்றார் களத்தில் தாய்மார்கள் தத்தமது சேய்கûளுயம் மறந்து வந்து கூடினர் களத்தில், வாழ்க்கைச் சுவையைப் பருகும் பருவத்தினரான இளைஞர்கள் எண்ணற்றவர்கள் கூடினர். வீரரும் தீரரும், தியாக உள்ளம் படைத்தோரும் அஞ்சா நெஞ்சினரும் கூடி அமைத்தனர் ஓர் அணிவகுப்பை - அந்தச் சமயத்திலே அந்த வீரக்கோட்டத்துக்குள் வர, மனமின்றி, வெளியே இருந்தது கொண்டு இந்தி ஆதரவாளர் முகாமில் புகுந்து கொண்டு, தமிழரைத் தாக்கத் துணிந்த துரோகக் கூட்டம், இந்தி ஆதரவாளர்களாகிக் கண்ட பலன் என்ன, பெற்ற இலாபம் எத்தகையது! படெல் பலே! என்று ஒருமுறை புகழ்ந்திருக்கக்கூடும் - பிரசாத் புன்னகை புரிந்திருக்கக்கூடும். நேரு பாராட்டி இருக்கக்கூடும் - இவ்வளவுதானே! இந்த அற்பத்துக்காக, எவ்வளவு பெரிய துரோகச் செயலைச் செய்துவிட்டனர்! என்று எண்ணினாலும் நெஞ்சு பதைக்கிறதே! எவ்வளவு பெரிய முயற்சியை எவ்வளவு பொறுப்பற்றுக் கெடுக்க முனைந்தனர். எதிர் வீட்டுக்குக் குடிவந்தா ஐகாத்தாவுக்கு, கூந்தல் கைப்படி அளவே இருக்கிறது என்ற கவலைப்பட்டு, தன் இல்லக்கிழத்தியின் கார்நிறக் கூந்தலைக் கத்தரித்துக் கொண்டு போய்க் காணிக்கையாகத் தந்து, அதைப் பெற்றவள் ஒரு வினாடி கண்சிமிட்டி, பல்காட்டுவதைப் பரிசு எனக்கொள்ளும் பேதையும் இருப்பானோ! அதனைவிடப் பேதைமை நிரம்பிய செயலையன்றோ புரிந்தனர் இந்தி ஆதரவாளர்கள்! இன்று அவர்களிலே சிலர், ஐதோ இதுவரை கருத்துக்கு! புலனாகாதிருந்த உண்மையைக் கண்டறிந்த, நாடு ஊய்ய அதனை வெளியிடுபவர்போல நடிக்கின்றனரே! இந்த நயவஞ்சகத்தை என்னென்பது பரதா! பூரித்துப் போகிறாயே, இந்தத் தமிழ்மகன் தீட்டியதைக் கண்டு - இந்தக்கருத்து என்ன கண்டுபிடிப்பா! என்று கேட்டான் வீரன். அவன் கோபத்துடன் தான் இருந்தான் எனினும் உண்மையை மறக்கவில்லை இந்தியை ஒருபொது மொழி, வசதிக்காக நாம் கற்கவேண்டிய மொழி என்ற அளவுக்குத்தான் நாம் இந்தியை ஏற்றுக்கொண்டோம் - ஆனால் இப்பொழுது இந்தி மொழி வெறியர்கள், மற்றப் பாஷைகûயும், மற்றப் பாஷைக்காரர்களையும் அடிமையாக்கும் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள் - என்று இன்று தீட்டுகிறாரே தமிழ் மகன், பரதா! இதே கருத்தை நாம் முன்கூட்டிச் சொன்னபோது, என்ன செய்து கொண்டிருந்தார் இந்தத் தமிழ்மகன்? இன்று இவருடைய கட்டுரையை வெளியிடும் கல்கி இதழ், என்ன தீட்டிக் கொண்டிரந்தது. அது சமயம்! தக்க சமயத்திலே, எச்சரித்தோம் பொது மொழி, தேசிய மொழி என்ற சாக்குக் கூறிக்கொண்டு மெள்ள மெள்ள நுழைகிறது இந்தி - இடம் தராதீர் - இந்தி ஏகாதிபத்யம் ஏற்படும், ஆபத்து உண்டாகும் - என்று நாம் எச்சரித்தபோது, கருத்து தூங்கிய காரணம் என்ன? அறிவுத் தெளிவு ஏற்பட்டிருக்க வேண்டிய நேரத்தில், ஆணவப் புழுவல்லவா அவர்கள் மண்டையில் புகுந் கொண்டிருந்தது. இன்று மேதாவித்தனமாக எழுதிக் காட்டுகிறார், அன்று மேய்ச்சல் இடம் தேடிச் செல்லும் கால்நடை, ஓநாய் உலவும் இடம் எது என்பதை அறியாமல், பச்சைப்புல் கண்ணுக்குத் தெரிவதை மட்டுமே கவனித்துக் கொண்டு, செல்லுமாமே, அதுபோல! இன்று, இந்தி ஏகாதிபத்யம் என்று அலறி என்ன பலன்? இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்குவதா என்று கேட்கிறார் தமிழ் மகன்! இடம் கொடுத்தபோதே சொன்னோமே, இடம் தராதீர், இடர் கிளம்பும் என்று - ஏன் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. ஐளனமே செய்தனரே! எதிர்த்தனரே! பாம்பு சீறிடக் கண்ட கீரி அதைக் கடித்துக் கொன்றுவிட்டு, குழ்நதையைக் காப்பாற்றிவிட்டு, இரத்தக் கறையுடன், வீட்டின் ஆம்மையை எதிர்நோக்கி நிற்க, இடுப்பில் குடமும் புத்தியில் குருட்டுத் தனமும் கொண்ட மாது. கீரியின் வாயில் இரத்தம் சொட்டக் கண்டு, தன் குழந்தைதயைத்தான் கீரி கொன்றுவிட்டது என்று எண்ணி, அவசரப் புத்தியால், ஆத்திரத்தால், குடத்தைக் கீரிமீது போட்டுக் கொன்றுவிட்டு, கோவெனக் கதறியபடி தொட்டிலை நோக்கி ஓட, அங்குக் குழந்தை குறுநகை புரிந்திடவும், கீழே பாம்பு கண்டதுண்டமாகிக் கிடக்கவும் கண்டு, தன் அறிவீனத்தை எண்ணி அலறித் துடித்தாள் என்று சிறுவர்கள் கதை படிப்பர் - அந்தக் கதையில் வரும் பார்ப்பன மாதைவிட அறிவீனத்துடனல்லவா, இவர்கள் நடந்து கொண்டார்கள். இந்தி ஏகாதிபத்யம் வளரும் என்று எச்சரித்துவிட்டு, நாம் அறப்போர் நடத்தியது, கட்சிக்காகவா தேர்தலுக்காகவா, அல்லவே! தமிழுக்காக, தமிழகத்துக்காக! எனினும் என்ன தந்தனர் நமக்கு? குடத்தைப் போட்டுக் கீரியைக் கொன்ற மாது போல, குண்டாந்தடிகொண்டு குடந்தையில் போலீசாரைக் கொண்டு தமிழரைத் தாக்கி, தெருவை இரத்த மயமாக்கினரே! யாரைப் பாராட்டியிருக்கவேண்டுமோ அவர்களை யன்றோ தாக்கினர்! என்று வீரன் கூறினான். அவன் பேச்சிலே உண்மையும் உணர்ச்சியும் ததும்பிற்று. ஆமாம் வீரா! துவக்கத்திலேயே நாம் எச்சரித்துப் பார்த்தோம். தமிழ் தாய் இந்தி, தாதி - என்றெல்லாம் கதை பேசிக் கருத்தைக் கெடுக்காதீர். தமிழ் தழைக்காது இந்திக்கு முதலிடமும் மடியுடை இடமும் தந்தால் என்று விளக்கமாகச் சொன்னோம்... என்றேன் நான், வினயமாகச் சொன்னோம் பரதா! இந்தி எதிர்ப்பு விஷயத்தை அரசியல் நோக்குடன் பார்க்காதீர், கட்சிக் கண் கொண்டு பார்க்காதீர், தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்திலே கொண்டு, கட்சி மாச்சரியத்தை மறந்து, இந்தப் பிரச்னையைக் கவனியுங்கள் - காலம் கடுவேகமாகச் செல்கிறது, கடுவிஷம் போல ஏறுகிறது, வேற்றுமொழி விபரீதத்தை வளரவிடாதீர், என்றெல்லாம் கூறினோம், தீட்டினோம், பாடினோம் - அவ்வளவுக்கும் ஆணவத்துடன் பதில் தந்தனர் - இந்தத் தமிழ் மகன்கள்! - என்று நான் கூறினேன். வீரனைச் சாந்தப்படுத்த எண்ணிய, நானே கோபம் கொள்வது கண்டு, சிறிதளவு ஆச்சரியப்பட்டேன். இந்த மே மாதம் எழுதுகிறார் மேதாவித்தனமாக தமிழ்மகன் - இந்தி ஏகாதிபத்யம் வருகிறது அதை எதிர்க்க வேண்டும் என்று, பரதா! இதோ படிக்கிறேன் கேள்.

இந்தி, இதமாக, முதலில் இந்தி இலாப நோக்குடன் பிறகு.

இந்தி, ஆறுமாப்புடன் ஆறுதியில், தமிழ் இந்தி - முதலில் இந்தி தமிழ் - பிறகு, இந்தி மட்டும் - ஆறுதியில் இதுதான் மேலிடத்தின் வேலைத்திட்டம்.

இவ்விதம் திராவிடநாடு இதழிலே தீட்டப்பட்டிருக்கிறது - எப்போது? (தமிழ் மகன், என்ன செய்து கொண்டிருந்தாரோ, என்ன எண்ணிக் கொண்டிருந்தாரோ, எங்கே இருந்தாரோ தெரியாது - அந்தத் தமிழ் மகன், தெரிந்து கொள்ள வேண்டும்) 19-12-48 - இதழில்! கொட்டிலைப்பூட்ட வேண்டும் என்கிறார். குதிரையை வெறிநாய் கடித்தான பிறகு! வெறிநாய், வீதிக்கோடியில் வருகிறபோதே நாம் எச்சரித்தோம்! இந்தி, ஏகாதிபத்ய உருவெடுக்கும் என்று, இந்தி இளித்த வாயுடன் வந்த அன்றே நாம் சொன்னோம் - இன்று இந்தி வெறியரகள், காதைத் திருகித் தலையில் குட்டிய பிறகுதான், தமிழ் மகனுக்கு, இந்தி ஏகாதிபத்யம் வருகிறது என்பது தெரிகிறது! இன்று தீட்டுகிறார் தமிழ் மகன், வடநாடு சென்று வரும் தமிழ்ப் பிரதிநிதிகளும், வடநாட்டிலேயே வாழ்க்கை நடத்தும் தமிழர்களும் இந்திமொழி வெறியர்களின் செயலைக்கண்டு கூறுகிறார்கள், என்று
19-12-48 இல் “காங்கிரஸ்காரர்களிலேயே பலர், வடநாடு சென்று திரும்புபவர்கள் அங்கு இந்தி மொழியை வடநாட்டு ஏகாதிபத்யக் கருவியாக்கி மற்ற மொழிகளை அழித்தொழிக்கும் திட்டம் பலருக்கு இருப்பதைத் தெரிந்து திகைக்கிறார்கள்.
என்று திராவிடநாடு எழுதிற்று. தமிழ் மகன்கள் அப்போது சொன்ன பதில், “இந்தியால் வடநாட்டு ஆதிக்கம் வளரும், தமிழ் அழியும் ஏன் பேசுவது, ஆபத்தம். வீண்பீதி என்பதுதான் இன்று...! பொது மக்களைக் கிள்ளுக் கீரையாக எண்ணிக்கொண்டு கல்கியில் கட்டுரை வெளியிடுகிறார்கள். “இந்தி ஏகாதிபத்யம் ஏ;னறு நாம் சொல்வது வீண் மிரட்டல் அல்ல” என்று பிஸ்மார்க் வருகிறார் - என்று தலைப்புத் தரப்பட்டது, திராவிட நாடு இதழில் 19-12-48இல் வெளி வந்த கட்டுரைக்கு 7-5-50இல் இந்தி ஏகாதிபத்யம் என்ற தலைப்புடன் கட்டுரை வெளி வருகிறது கல்கியில். அறிவு உதயமாக இவ்வளவு காலம் பிடித்ததே என்பதற்காகக்கூட அல்ல, பரதா! நான் கோபிப்பது, வருந்துவது, இவ்வளவு காலத்துக்குப் பிறகு உண்மையை உரைக்க முன் வந்ததுமின்றி அதே கட்டுரையில், இந்தி ஒழிக! என்று சிலர் முன்பு கூச்சலிட்டார்கள். அந்தக் கூச்சலை ஒழித்து விட்டனர் தமிழ்ப் பெருமக்கள், என்று ஆணவத்துடன் எழுதத் துணிந்தாரே தமிழ்மகன், அதை எண்ணும்போதுதான் கோபம், உண்மையில் அதிகமாகிறது என்றான் வீரன், இந்தி ஒழிக என்ற முழக்கம், குறுகிய மனப்பான்மையும் - துவேஷ புத்தியாம்! என்று நான் கூறினேன் - அப்படித்தான் கூறுகிறார்கள். அவர்களுக்கு விரிந்த பரந்த மனமாம்! மக்களை, ஏமாளிகள் என்று எண்ணிக்கொண்டு அவ்விதம் பேசுகிறார்கள், பொதுமொழி ஒன்று தேவை என்று வடநாட்டவர்கள் பேசத் தொடங்கியவோதே, நாம் கூறினோம். வியாபாரத் தொடர்புக்காகவோ, அகில இந்திய அரசியல் தொடர்புக்காகவோ இந்தி தேவை என்று உணருகிறவர்கள் இஷ்டமிருப்பின் படித்துக் கொள்ளட்டும் - சகலரக்கும், அதிலும் சிறு பிள்ளைகளுக்கு இந்தியைத் திணிப்பதும், இந்தி படித்தால் தான் மத்திய சர்க்காரில் உத்யோகம் என்று நிபந்தனை விதிப்பதும், இந்தயைத் துரைத்தன மொழியாக்குவதும் நிச்சயமாக, இந்திமொழி ஏகாதிபத்யதைத்தான் உண்டாக்கும் என்று அறிவுறுத்தினோம். பரந்த மனப்பான்மைக்காரர்களுக்கு இந்த எச்சரிக்கை புரியவில்லை, துவேஷம் கொண்டவர்கள் நாம் என்று தூற்றினார்கள், தமிழுக்குத் துரோகம் செய்பவர்கள் என்று வீரன் கூறினான். ஒரு நாட்டுக்குப் பொதுமொழி ஒன்று இருப்பது நல்லது என்ற கருததைக் கை முதலாகக் கொண்டு, இந்தி ஏகாதிபத்யத்தக்கு வழிகோலிவிட்டனர் - விளக்கமறியாதவர்கள், பாமர மக்களிடம் சென்று ஆதரவாளர்கள் பசப்பினார்கள், வடநாட்டு ஆதிக்கமோ, இந்தி ஏகாதிபத்யமோ ஏற்படாது, இந்தி, பெரும்பாலான மக்கள் பேசும் மொழி, அதைப்பொது மொழியாகக் கொண்டால் நல்லது. நல்ல நோக்கத்துடன்தான் நமது தலைவர்கள் இந்தியைப் படிக்கச் சொல்கிறார்கள் - என்று பேசினர். நமது மக்களிலே சிலர் அந்தப் பிரசாரத்தால், மயங்கினர் என்றேன் நான். பால் மதுரமானது, தேகாரோக்கயத்துக்குத் தேவையானது, அந்தப் பாலைத் தரும் பசுவுக்கு இகாரம் பச்சைப் புல், ஆகவே பால் தேடி ஆலைவதை விட, பச்சைப் புல்லை நாமே மேய்ந்துவிட்டு வருவது நல்லது என்று கூடப்பேசுவார்கள் அந்த நல்லவர்கள். இவ்வளவு பெரிய பூபாகத்தை, என்றுமே ஒரே நாடாகவோ, ஒரே ஆட்சியின் கீழோ இருந்தறியாத, இருக்கக் கூடிய இயல்புகளைப் பெற்றிராத பூபாகத்தை ஒரே நாடு என்று கூறி, இதற்கு ஒரே மத்திய ஆட்சி தேவை என்று வலியுறுத்தி, அந்த ஒரு நாட்டுக்கு ஒரு மொழி என்று வாதாடி, அந்த மொழி இந்தியாகத்தான் இருக்க முடியும் என்று கூறி, அந்த இந்தியைக் கொஞ்சம் கற்றுக் கொண்டால் சௌகரியமாக இருக்கும் என்று கொஞ்சு மொழி பேசும் பேசி, இந்தியைப் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலே புகுத்தி, எதிர்ப்புக் கிளம்பியது கண்டு இந்தி இஷ்டபாடம்தான் என்று குழைந்து கூறி, இதாரவாளர்கள் என்ற பெயரில் கிளம்பிய தமிழ்த் துரோகிகளின் துணையைப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியைக் கட்டாயப் பாடமுமாக்கிவிட்டனர். இப்போது வடநாட்டுத் தலைவர்கள் இந்தி படிக்கக் கூடாதா என்று கெஞ்சுவதில்லை, இந்தி படித்தால் நல்லதாயிற்றே, நீங்கள் திறமைசாலிகளல்லவா? உங்களுக்குச் சுலபத்திலே இந்தி வருமே என்று கொஞ்சுவதில்லை, இந்தி தெரியாதவர்களுக்கு இனி இங்கு இடமில்லை என்று அதிகாரம் பேசுகிறார்கள்! ஏகாதிபத்யம் பேசுகிறது - ஏடுபிடிகள் இன்று கை பிசைந்து கொள்கிறார்கள், கண்கசக்கிக் கொள்கிறார்கள். பரதா! இதோ, கேள், நான் குறிப்பிட்ட பிஸ்மார்க் வருகிறார் என்ற கட்டுரையில், தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தி நுழைவின் நோக்கமும், அதனால் ஏற்படக்கூடிய விளைவும், மரமண்டைகளுக்குக் கூடப் புரியக் கூடிய வகையிலே விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

ஏன் தம்பி! பதறுகிறாய்? என்ன பயம் உனக்கு? தமிழுக்கு என்ன ஆபத்து? என்று கேட்கும் நல்லவர்கள் நாட்டிலே சிலர் உள்ளனர். எந்த மொழியும், ஏற்றம் பெற்று வாழவேண்டுமானால், மக்களின் மதிப்பைப் பெற்று வாழவேண்டுமானால், ஆம்மொழி, அரசாங்க அலுவல் மொழியாகவும் அமைதல் வேண்டும் என்பது அரிச்சுவரி! தமிழ் இவ்வளவு வளம் பெற்றதாகத் திகழ்வதற்குக் காரணம், முன்னாளில், முடியுடை மூவேந்தர்களும் தமிûயே துரைத்தன மொழியாகக் கொண்டிருந்தனர் - அதனால், புலவர் கூடிடும் மன்றங்களிலும், பூவையர் இடிடும் பூம்பொழிவிலும், போர்க்களத்திலும், உழவர் மனையிலும் தமிழே முதலிடம் பெற்றிருந்தது. யவனத்துக்கும் பிறநாட்டுக்கும் தமிழர்கள் வாணிபம் செய்யக் சென்றனராமே கலங்களில் - அந்தக் கலங்களிலே, தமிழ் பேசியன்றோ சென்றனர்! அந்தத் தமிழுக்கு, ஆட்சியாளரின் மொழி என்ற உரிமை நிலை, இருந்ததால் தான், உயர்நிலை கிடைத்தது. ஊராள்வோருக்கு உரிய மொழி வேறு, மக்களுக்குள்ள மொழி வேறு என்று நிலை இருப்பின் எம்மொழி சிறக்கும் - எம்மொழி உயரும்! இன்று, இந்தியைப் படித்தாக வேண்டும் என்று கூறுவோர், அது நாளை, துரைத்தன மொழியாகப் போகிறது, அது கற்றால்தான் ஆட்சிப் பணி மனையில் இடம் கிடைக்கும் என்று கூசாது கூறுகின்றனதே. அந்நாள் வரும்போது, மக்கள் எதனை விரும்பிக் கற்பர். எம்மொழியினை நாடுவர், தேடுவர், இனிûயும் தொன்மையும் வாய்ந்ததுதான் எம்தமிழ். எனினும், அதுபோதாதாமே அலுவலகம் புக எனவே அலுவலகம் புக நுழைவுச் சீட்டுப் பெற இந்தி படிப்போம், என்றுதானே எண்ணுவர் - எண்ணிட எண்ணிட, இயற்கையாக ஏற்றம், எந்த மொழிக்கு ஏற்படும், என்பதை எம்மையும் எமது கிளர்ச்சியையும் மறந்தேனும், நண்பர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டுகிறோம். சொந்த மொழி கற்றுப் பயனில்லை. வந்த மொழி படித்தால்தான் வாழ முடியும் என்று ஒரு ஏற்பாடு செய்துவிட்டால் பிறகு, வந்த மொழியைத்தானே, சொந்த மொழியாக்கிக் கொள்வர்! நிலையை விளக்கிடப் பலப் பல கூற வேண்டுவதுமில்லை - ஆங்கிலத்துக்கு அரசாங்க மொழி எனும் நிலையை ஆங்கிலர் இங்கு ஏற்படுத்தியதன் பலனை, நாம், நமது தலைமுறையில் தெரிந்து கொண்டிருக் கிறோமே! சிலப்பதிகாரம் தெரியும். சிந்தாமணி தெரியும், குறள் தெரியும், தொல்காப்பியம் தெரியும் என்று கூறினால், மடத்திலே இடமுண்டு என்றனரேயன்றி, அரசாங்க அலுவலகத்தில் இடம் கிடைக்கவில்லையே! இரண்டு கோணை எழுத்துத் தெரிந்தால்தான் பிழைக்கலாம் - என்ற எண்ணம் குக்கிராமத்திலும் பரவி விட்டதே! ஆங்கிலம் படித்திடத்தான் துடிததனரேயன்றி, தமிழ் பயில எவர் முன்வந்தனர் - பயின்ற சிலருக்கும் மதிப்பளிக்கவாவது முனைந்தனரா?

ஆங்கிலம் ஆட்சி மன்ற மொழி என்ற நிலை பிறந்ததும், தமிழ் தாழ்நிலை அடைந்ததை எவர் மறுக்க முடியும்! கல்வி நிலையங்களிலே கண்டோமே, தமிழ் ஐயாவுக்கும், இங்கிலீஷ் வாத்தியாருக்கும், எல்லா வகையிலும் வேற்றுமைகள் கிளம்பியதை! தமிழ் ஆசிரியருக்குச் சம்பளம் என்ன? ஆங்கில ஆசிரியருக்கு என்ன?

தமிழ் மொழியில் பேசினால், மதிப்பில்லை, என்று ஆங்கிலம் பேசுவதையன்றோ அறிவுடைமை என்று கொண்டனர்.

கிராமத்தில் மக்கள் வாய்பிளந்து கேட்டனரே தம் பிள்ளைகள், பட்டணம் சென்று கற்றுக் கொண்டுவந்த ஆங்கிலச் சொற்களை!

ஆங்கிலத்தின் இடத்துக்கு இந்தி, என்று தெளிவாகத் தெரிவிக்கிறார்கள். அங்ஙனமாயின், தமிழின் நிலை என்ன? இந்திக்கு ஆங்கிலப் பதவி, தமிழுக்கு, என்ன நிலை! இதைத்தான் எதிர்கால ஆபத்து என்கிறோம். இதனை எண்ணியே, இன்றே இந்தியை எதிர்த்தாக வேண்டும் என்று கூறுகிறோம்.

என்று வீரன் படித்துக் காட்டினான், “ஆமாம் வீரா! இவ்வளவு விளக்கம் தந்தும் மக்கள் திருந்திக் கொள்ளவில்லையே” என்ற நான் ஆயாசத்துடன் கூறினேன்”, மக்கள் மீது என்ன தவறு பரதா! இந்தியால் வர இருக்கும் ஆபத்தை மக்கள் உணர்ந்து கொண்டதாலேதான், இந்த எதிர்ப்புக் கிளர்ச்சியை ஆச்சாரியார் மந்திரியாக இருந்த நாளிலேயே நடத்துவதற்கு இக்கமும் எக்கமும் அளித்தனர். மந்திரிமார்கள் திண்டாடினார்கள். மக்களின் கோபம், கறுப்புக் கொடிகளாகவும், திரும்பிப்போ என்ற முழக்கங்களாகவும் கிளம்பியபோது இளவந்தார்கள் பணிந்துதானே போனார்கள் மறுபடியும், கிளர்ச்சி தேவைப்பட்ட போது மக்கள் பின்வாங்கவில்லையே, தமிழகம் தயார் என்று தானே கூறிற்று. வீரர்கள் சென்னை நோக்கி விரைந்தனரே! தொண்டர்கள் தேவை என்று பெரியார் கேட்டாரா, இரத்தத்தால் கை எழுத்திட்டுத்தந்தனரே ஆயிரமாயிரம் இளைஞர்கள்! பணபலமோ பிரசார பலமோ ஆற்ற நிலையிலேயும், இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி ஓங்கி வளர்ந்ததே! மக்கள் எந்த வகையிலும் ஆதரவு காட்டத் தயங்கவில்லை. இந்தியைக் கண்டித்துக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்றபோது பட்டி தொட்டிகளெல்லாம் நடத்தினர் மாநாடுகள் கூட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது வ்வொரு மாவட்டமும் போட்டியிட்டுக் கொண்டு முன்வந்தன! பணம் கேட்டார் இந்தி எதிர்ப்பு நடத்த 25,000-0-0 தந்தனர்!! வெள்ளித்தோட்டாக்கள் தந்தனர் மொழிப் போருக்காக!! தமிழரின் ஆதரவு தளரவுமில்லை, வளராமலுமில்லை இன்னமும் அந்தப்பணம், பெரியார்வசமே இருக்கிறது. ஆகவே இனி ஒரு முறை மொழிப்போர் தொடுப்பது என்று தீர்மானித்தால் உடனடியாகப் பணத்துக்குத் தேடி அலையவும் தேவையில்லை தமிழரின் ஆச்சாரம் இருக்கிறது! போர் தொடுப்பதற்குத் தடை இல்லை - மக்கள் மீதும் குறை கூறுவதற்கில்லை என்றான் வீரன். வீரா! இந்தியோடு நில்லப்பா, பணப் பிரச்சனைக்குள் நுழையாதே - உடனே அந்த அர்ச்சனை இருக்கிறதே சதிகாரர்கள், சண்டாளர்கள், துரோகிகள் - என்ற அர்ச்சனை அதை ஆரம்பித்து விடுவார் - ஆகவே பணம் எவ்வளவு இருக்கிறது யார் கொடுத்தது. இப்போது யாரிடம் இருக்கிறது என்ற விஷயமாகக் கிளறாதே. ஏற்கெனவே வசூலித்துக் கைவசம் வைத்துக் கொண்டிருக்கும் பணத்தைச் செலவிட்டாலும் சரி. அது அவ்வளவும் போர் நிறுத்தகாலச் செலவுக்குச் சரியாகிப்போய்விட்டது என்று கூறிவிட்டு, புதிதாகப் பணம் கேட்டுப் பெறுவதானாலும் சரி, போர்தொடுத்தால்போதும், நமககு அதுவே திருப்தி தரும் என்றேன் நான், எனக்குக் கூட பரதா! அந்த உருபத்தையாயிரம் என்னவாயிற்று என்பது பற்றிக கவலைகிடையாது. தமிழர்கள் மொழிப்போருக்குத் தக்கவிதமான ஆதரவு காட்டினார்கள் என்பதை விளக்கவே அதைச் சொன்னேன். கல்கி முதற்கொண்டு உண்மையைக் கக்கித் தீரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதைச் சாதகமாக்கிக் கொண்டு, கட்சிகளைக் கடந்ததும் இந்தி ஏகாதிபத்ய எதிர்ப்புணர்ச்சி என்ற இலட்சியத்துக்குக் கட்டுப்பட்டதுமான, ஒரு புதிய மொழிப்போர் முகாம் அமைக்கப்பட்டு, மொழிப் போர் தொடங்கினால், நாம் நம்மாலான ஆதரவைத் தரலாம் என்பதைக் கூறவே இதைக் குறிப்பிட்டேன். ஓஹோ! இம்முறை துரோகிகள், சதிகாரர்கள், சண்டாளர்கள், ஆகியவர்களைச் சேர்த்துக் கொள்ளப்போவதில்லை. பொறுக்கு மணிகளைக் கொண்டே போரை நடத்தத் தீர்மானித்துவிட்டோம் என்று கூறுவார்ககளேயானால், அதுவும் சரி, ஐயன்மீர்! நீங்கள் ஒருபுறம் இன்று போரிடுங்கள் - பரந்த களத்திலே எங்களுக்கும் களம் கிடைக்கும் என்று கூறிடவும் நாம் தயங்கப்போவதில்லை. ஆனால் சாக்குப்போக்குகள் கூறிக்கொண்டும், சதிகாரர்கள், சண்டாளர்கள், துரோகிகள் என்ற அர்ச்சனையைச் செய்து கொண்டும் காலந் தள்ளிவிடாமல், தமிழர்கள் திரட்டித் தந்த ஆதரவுக்கு நன்றி காட்டும் முறையிலாவது, போர் தொடுத்திடுக! - என்று கூறிக்கொள்கிறோம். ஏனெனில், இந்தி ஏகாதிபத்யம் உண்மையான ஆபத்து என்பதை உணரும் நிலை, தமிழ் மகன்களுக்கெல்லாம் உண்டாகியிருப்பது வீணாகிவிடக்கூடாது எனவே மொழிப்போர் தொடுத்திட வாரீர், என்று அனைவரையும் அழைத்திட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை அறிந்து இவன செய்ய முன்வர வேண்டும் - இக்கட்சி, ஆக்கட்சி என்ற முறையிலே அல்ல - ஏக்கட்சி முகாமில் இருப்பவராயினும், இந்தி ஏகாதிபத்ய ஒழிப்புக்காக ஓர் புதுமுகாம் அமைதல் வேண்டும். அதற்குத் தமிழ் மகன் தயாரா? என்று இவேசத்துடன் கேட்டான் வீரன், “தமிழ் மகன் தயாரா?” என்று நானும் கேட்கிறேன். நமது நாட்டின் பாட்டு மொழியிடம் பற்றுக் கொண்டவர்கள் எல்லாம் கேட்கிறார்கள். தமிழ் மகன் தயாரா? இந்தி ஏகாதிபத்யத்தை எதிர்த்துப் போரிட, என்ன திட்டம்? எங்கே முகாம்? எப்போது துவக்கம்? தமிழ் மகன் தயாரா?” என்றே நானும் கேட்கிறேன்.

(திராவிட நாடு - 21.5.50)