அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இன்பம் பொங்குக!

அன்புடையீர்! வணக்கம்
பொங்கற் புதுநாள் வருகிறது. இன்பம் தங்கள் இல்லத்தில் பொங்கி வழிய விழைகிறேன்.

தமிழகத்திலே, இன்று பல இலட்சம் கைத்தறி நெசவாளர்கள். வேலையின்றி வேதனைப் படுகிறார்கள் பட்டினியால் பரிதவிக்கிறார்கள் பாதையிலே பிணமாக விழுகிறார்கள். பிச்சை எடுக்கிறார்கள் - எரூராய் குழந்தைகளை விற்கிறார்கள்!

இந்தக் கொடுமை வெளியே! நமது வீடுகளிலேயே இன்பப் பொங்கல்!

பொங்கற் புதுநாள் தரும் இன்பம் உண்மையானதாக இருக்க வேண்டுமானால், நம் வீடுகளிலே பால் பொங்கினால் மட்டும் போதாது. நெசவாளர் நெஞ்சிலே சிறிதளவாவது மகிழ்ச்சி பொங்க வேண்டும்.

நெசவாளர் கண்ணீர் பொங்கினால், நம் வீட்டுப் பாற்பொங்கல், இன்பம் அளிக்காது.

எனவே இலட்சக்கணக்கான கைத்தறி நெசவாளர்களின் துயர்துடைக்க, பொங்கற் புதுநாளில் மறவாமல், கைத்தறி இடைகளையே வாங்கி உபயோகியுங்கள்.

பாலும் பாகும் பருப்பும் கலந்த பொங்கலை அன்புடன் தரும் மங்கையர் உடலில் வடநாட்டு ஆலைச் சேலை இருந்தால் அந்தப் பொங்கல் இனிப்பளிக்காது - நஞ்சு ஆகும்.

பொங்கற் புதுநாளில், வடநாட்டு ஆலைச் சேலையோ, துணியோ வாங்கினால், தமிழ்நாட்டில் பத்துக் கைத்தறி நெசவாளர்களைப் பட்டினி போட்டுக் கொன்ற குற்றம் புரிந்தவராவோம்.

அன்னியத் துணிகளை வாங்காதீர்! ஆலைத்துணிகளை வாங்காதீர்!

கைத்தறியாளரைச் சாகடிக்காதீர்!!

இன்பம் பெறும் திருநாளன்று நெசவாளர் வாழ வழி செய்யுங்கள். கைத்தறி ஆடைகளையே வாங்குங்கள். எல்லோரும் இன்புற்றிருக்கச் செய்யுங்கள். வாழிய நீவிர்! வாழிய வாழியவே!

(திராவிட நாடு - 11.1.53)