அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இந்திய சர்க்கார் இரண்டு ஓடங்களில் கால் வைக்கிறது!

இந்தி, இந்தியாவிலுள்ள பெரும்பான்மை யான மக்களால் பேசப்படுகின்ற மொழி என்ற அடிப்படையின் கீழ்தான், அதனை இந்தியா முழுவதுக்கும் பொது மொழியாக்க வேண்டு மென்று கருதி அதன்படி இந்தியை எல்லோரும் கட்டாயமாகப் படிக்க வேண்டுமென்ற திட்டத்தை வகுத்திருக்கிறோம்- எனவே இந்தியை எல்லாரும் கட்டாயமாகப் படியுங்கள் என்று சென்னை சர்க்கார் வற்புறுத்தி அதனை இங்குக் கடடாயப் பாடமாகவும் ஆக்கிவிட்டது. ஆனால், இந்த இந்திக் கட்டாயத் திட்டம், நாட்டுக்கு ஏற்றதல்லவென்றும், இத்திட்டத்தினால் நன்மைக்குப் பதில் தீமையே உண்டாகு மென்றும் கூறித் தமிழ் மக்கள் அதனை எதிர்த்தொழிப் பதென்ற முடிவுக்கு வந்து நேரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்தச் சமயத்தில் இந்திய சர்க்கார் ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டு, அதில், இந்தி இந்தியாவிலுள்ள பெரும்பான்மை மக்களால் பேசப்படுகின்றதென்பது உண்மை யல்ல என்று வெளிப்படையாகவே விளக்கி யிருக்கிறது. அதாவது, இந்தி பேசுவோரின் தொகை மிகக் குறைவென்பதை அவ்வறிக்கை யில் சுட்டிக்காட்டியிருக்கிறது.

சென்னை மாகாணத்தில் இந்தி பேசுவோர் கிடையாது.
பம்பாய் மாகாணத்தில் இந்தி பேசுவோர் கிடையாது.
ஒரிசா மாகாணத்தில் இந்தி பேசுவோர் கிடையாது.

பம்பாய் நகரில் மராத்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளைப் பேசுவோருடன் இந்தி பேசுவோரும் இருக்கின்றனர்.

இந்தியுயு;ம, வங்காளியும் பேசப்படும் சில ஜில்லாக்களும் நகரங்களும் இருக்கின்றன.

கல்கத்தாவில் பல மொழிகளைப் பேசுகிற வர்கள் இருக்கிறார்கள்.

மத்திய மாகாணத்தில் மராத்தியும், இந்தி யும் பேசுகிறவர்களைக் கொண்ட பகுதிகள் இருக்கின்றன.

நாகபுரியில் இந்தி, மராத்தி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள்.
பாஞ்சாலத்தில் இந்தியும், பஞ்சாபியும் பேசப்படுகின்றன.
* * *

இவை, 14.8.48ல் இந்திய சர்க்கார் வெளியிட் டிருக்கும் அதிகாரப்பூர்வமான அறிக்கையில் காணப்படும் உண்மைகள்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் இந்தச் சமயத்தில் இந்திய சர்க்கார் இந்த அறிக்கையை வெளியிட்டதற்காக நாம் அவர்களைப் பாராட்டுகிறோம்.

வடநாட்டில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழிகள் என்று மராத்தி- குஜராத்தி- உருது- இந்தி- ஒரியா- வங்காளி- பஞ்சாபி ஆகிய ஏழு மொழிகளைச் சர்க்கார் தங் களுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சர்க்காரின் அறிக்கையில் குறிப்பிடாத இன்னும் பல மொழிகள், வடநாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களால் பேசப்படுகின்றன. அவற்றையும் இங்கு வெளியிடுகிறோம்.

1. சிந்தி, 2. இலந்தி, 3. ராஜபுதானி, 4. குமோனி, 5. கடுவாலி, 6. நேபாலி, 7. சிணா, 8. காஸ்மீரி, 9. கோகிஸ்தானி, 10. சித்ராலி, 11. திராகி, 12. பஷை, 13. கலாஷா, 14. சுவர்பாடி, 15. இந்துஸ்தானி, 16. பார்சி, 17. ஆங்கிலம், 18. பாங்காரு, 19. பிரஜ்பாஷா, 20. கனோஜ், 21. பந்தேவி, 22. அவதி, 23. பகேலி, 24. சத்தீஸ்கர, 25. மைதிலி, 26. போஜ்புரி, 27. மசுகி.
ஆகிய இருபத்தேழு மொழிகள் வட நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களால் பேசப் படுகின்றன. இவையன்றி இன்னும் எத்தனையோ சிறு சிறு மொழிகள் வடநாட்டிலுள்ளவர்களால் பேசப்படுகின்றன.

எனவே, சர்க்காரின் அறிக்கையில் காணப்படும் ஏழு மொழிகளோடு நாம் மேலே எடுத்துக்காட்டியிருக்கும் இருபத்தேழு மொழி களும், ஆக முப்பத்திரண்டு மொழிகள் வட நாட்டவர் பெரும்பாலாரால் பேசப்படுகின்ற தென்ற உண்மையை நோக்கும்போது, இந்தி மொழியை மட்டும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டு பேசுவோரின் தொகை வட நாட்டில் மிக மிகக் குறைந்த அளவாகவே உள்ளது என்பது தெளிவாகின்றது.

இந்திய சர்க்காரின் அறிக்கையில், மத்திய மாகாணம், நாகபுரி, பஞ்சாப் ஆகிய இடங்களில் தான் இந்தி பேசுவோர் இருக்கின்றனர் என்று விளக்கப்பட்டிருக்கிறது. அதிலும், மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளைப் பேசுவோருடன் இந்தி மொழி பேசுவோரும் கலந்து இருக்கின்ற னர் என்றுதான் சர்க்கார் அறிக்கை கூறுகின்றது.

மேலும் அந்த அறிக்கையில், பம்பாய் நகரில், மராத்தி- குஜராத்தி- உருது ஆகிய மொழிகளைப் பேசுவோருடன் இந்தி பேசுவோ ரும் இருக்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது. இது, சென்னை நகரில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுவோருடன் இந்தி, குஜராத்தி, உருது பேசுவோர் இருப்பது போன்ற மிகமிகச் சிறுதொகையாகவும், வியாபாரத்திற்காக வெளி யூர்களில் இருந்து போய் அங்குத் தங்கியிருப்ப வர்கள் பேசும் மொழியாகவுமே கொள்ளப்படும்.

இனி, மத்திய மாகாணத்திலும், பஞ்சாப் மாகாணத்திலும் மராத்தியும், இந்தியும் பேசுவோர் கலந்து வாழ்கின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகின்றது.

சில ஜில்லாக்களும், நகரங்களும் இந்தியையும், வங்காளியையும் பேசும் மக்களைக் கொண்டதாக உள்ளன என்றும், அவ்வறிக்கை யில் காணப்படுகின்றது. இந்த விளக்கம்ம் சரியாகப் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. இந்தியும், வங்காளியும் பேசப்படும் சில ஜில்லாக்களும் ஒரு ஜில்லாவில் உள்ள மக்கள் பேசுகின்றனரா? அல்லது அவ்வறிக்கை யில் குறிப்பிட்டிருக்கும் சில ஜில்லாக்களும் நகரங்களும் தனித்தனி இந்தி மொழியையும், வங்காளி மொழியையும் பேசும் மக்களைக் கொண்டனவா என்பது சரியாகப் புரிந்து கொள்ள முடியாமலே இருக்கிறது என்ற போதிலும், இந்தி மொழியை மட்டும் பேசும் மக்களே அந்தச் சில ஜில்லாக்களில் இருக்கின்றனர் என்று வைத்துக் கொண்டாலும், அது, இந்தி மொழியைப் பேசு வோரின் தொகையை அதிகப்படுத்திக் காட்டு வதாக ஆகாது. ஏனென்றால் சர்க்கார் அறிக்கை யின்படி சில ஜில்லாக்களில் ஒருசில ஜில்லாக்கள் மட்டும் இந்தியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவும் மற்றும் ஒரு ஜில்லாக் களில் வங்காள மொழியை தங்கள் தாய்மொழி யாகக் கொண்டவர்களாகவும்தான் இருக்க முடியும். எனவே, இந்தக் கணக்கு, இந்தியாவில் உள்ளவர்களில் பெரும்பான்மை மக்கள் இந்தி மொழியையே பேசுகின்றனர் என்பதற்கு ஆதாரமாக நிற்க முடியாது. இவ்வுபகண்டத்தில் பேசப்படும் நாற்பதுக்கு மேற்பட்ட மொழிகளில் இந்தி மொழியும் சிலரால் பேசப்படுகின்றதென்று தான் கொள்ள முடியுமேயன்றி, இங்குள்ள நாற்பது கோடிக்கு மேற்பட்ட மக்களில் இந்தி பேசுவோ ரின் தொகைதான் மிகுதியாக உள்ளதென்று ஒரு போதும் கூறமுடியாது. நாம் கூறும் இவ் வுண்மையை இந்திய சர்க்கார் வெளியிட்டிருக் கும் அறிக்கையும் நன்கு வலியுறுத்தி, இந்தி பேசுவோர் குறிப்பிட்ட ஒருசில இடங்களில் தான் இருக்கின்றனர் என்ற உண்மையை வெளியிட்டிருக்கிறது.

இனி, இவ்வறிக்கையை வெளியிட்ட சர்க்கார், தங்கள் தலைநகராகிய டில்லியை உள்ளடக்கி நிற்கும் ஐக்கிய மாகாணத்தில் பேசப்படும் மொழி எது என்பதைக் குறிப்பிட வில்லை. ஐக்கிய மாகாணத்தில் பேசப்படுவது இந்தி மொழியா அல்லது இந்துஸ்தானியா என்பது இங்குள்ள பலருக்குத் தெரியாது.

மத்திய மாகாணத்தில் பேசப்படும் மொழி, இப்போது சென்னை மாகாணத்தில் கட்டாய மாக்கப்பட்டிருக்கும் இந்தி மொழி அல்ல வென்பதையும், இந்துஸ்தானியே அங்கு பேசப்படும் மொழி என்பதையும் அறிந்தால் இங்குள்ள பலர் ஆச்சரியப்படுவார்கள். இதற்கு மட்டுமல்ல, இங்குள்ளவர்கள் ஆச்சரியப்படுவது, இந்தி வேறு- இந்துஸ்தானி வேறு என்று சொன்னால் கூட இங்குள்ளவர்கள் ஆச்சரியப் படுவார்கள். ஏனென்றால் இந்தி வேறு- இந்துஸ்தானி வேறு என்பதை அறிந்து கொள்ளக் கூடிய அளவுக்குக் கூட அவ்விரண்டு மொழி களும் வளம் அடையவில்லை. இது மட்டுமல்ல, இந்தியையா அல்லது இந்துஸ்தானியையா இந்நாட்டின் பொது மொழியாக்குவது என்ற முடிவிலே இன்னும் இந்திதிய சர்க்காரால் செய்யப்படவில்லை என்பதே இங்குள்ள பலருக்கு இன்னும் தெரியாது. பண்டித நேரு அவர்கள் இந்துஸ்தானி தான் இந்நாட்டுப் பொதுமொழி என்கிறார். வேறு சிலர் இந்திதான் அதற்கு ஏற்புடையது என்கின்றனர். இந்த நிலையில் தான் சென்னை அரசாங்கம், இந்தியோ- இந்துஸ் தானியோ அவர்களுக்கே தெரியாத ஒன்றைக் கட்டாயப் பாடமாக்கி, அது காரணமாக ஒரு போராட்டத்தைத் தமிழ் மக்கள் நடத்துவதற்கு வழி கோலிவிட்டது. தமிழ்நாட்டில் இந்தியோ அல்லது இந்துஸ்தானியோ கட்டாயப் பாடமாக கூடாதென்பதற்காக நேரடி நடவடிக்கை எடுத்துப் போராட்டம் நடைபெறுகின்றது.

மத்திய சர்க்காரில், இந்தி பொது மொழியா அல்லது இந்துஸ்தானி பொது மொழியா என்று போராட்டமே இன்னும் துவக்கப்படவில்லை. அண்மையில் சென்னைக்கு வந்திருந்த பண்டித நேரு அவர்கள் இந்தி பொது மொழியாவதைத் தம்முடைய முழுப் பலத்தையுங் கொண்டு எதிர்த்து, இந்துஸ்தானியையே இந்நாட்டின் பொது மொழியாக்கப் போராடுவேன் என்று கூறியிருக்கிறார்.

எனவே, மத்திய சர்க்காரால் முடிவு செய்யப்படாத ஒரு திட்டத்தை, அந்தச் சர்க் காருக்குக் கீழ்ப் படிந்து நடப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதும் சென்னை சர்க்கார் நடைமுறைக்குக் கொண்டுவந்ததுமல்லாமல் அதனைக் கட்டாயப்படுத்தியும் விட்டது.

மத்திய சர்க்காருக்கும், மாகாண சர்க் காருக்கும் இடையே உள்ள இந்த இரங்கத்தக்க- கீழ்த்தரமான நிலையை வெளியுலக அரச மன் றங்கள் அறிந்தால் எவ்வளவு நகைப்புக் கிடமாகும் என்பதில் கூட இந்நாட்டு அரசியல் தலைவர்கள் கவலைப்பட மாட்டார்கள் போல் தெரிகிறது.

மத்திய சர்க்காரின் கீழ் இருக்கும் ஒரு மாகாண சர்க்கார், மத்திய சர்க்காரால் முடிவு செய்யப்படாத ஒரு திட்டத்தை எப்படி நடைமுறைக்குக் கொணடு வரலாம் என்று எவரேனும் கேட்டால் என்ன விடை கூறுவார் களோ தெரியவில்லை.

சென்னை சர்க்காரின் இந்தப் போக்கைப் பார்க்கும்போது நமக்கு ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது. ஒரு ஊரில் ஒரு தாசி இருந்தாளாம். அவள், தன்னிடம் வருபவர்களிடம் ஆயிரம் பொன் வாங்குவாளாம். ஒரு ஏழை அந்தத் தாசியிடம் போனதாக ஒரு கனவு கண்டானாம். தான் கண்ட கனவைத் தன்னுடைய நண்பன் ஒருவனிடம் கூறினானாம். அந்தச் சமயத்தில் அந்தத் தாசி அவ்வழியே வந்தாளாம். வந்தவள், அந்த ஏழையை நோக்கி, `நீ என்னிடம் வந்ததாக உன்னுடைய நண்பனிடம் கூறினாய், எனவே எனக்குச் சேர வேண்டிய ஆயிரம் பொன்னையும் தா' என்று கேட்டாளாம். அது கேட்ட ஏழை, `நான் கனவு கண்டேனேயன்றி உன்னிடம் உண்மையாகவே வரவில்லையே, அப்படியிருக்க நீ எப்படி என்னிடம் பணம் கேட்கலாம்.' என்று கேட்டானாம். அதற்கு அந்தத் தாசி, `நீ கண்டது கனவா யினும், என்னிடம் வந்து நீ எந்தவிதமான இன்பத்தை நுகர்வாயோ அந்த இன்பத்தைக் கனவிலேயே நீ நுகர்ந்து விட்டாய், ஆகையால் எனக்குச் சேர வேண்டிய ஆயிரம் பொன்னை யும் கொடு' என்று கூறி அந்தஏழை மீது வழக்குத் தொடுத்தாளாம். தீர்ப்புக் கூறிய நீதிபதி, ஒரு நிலைக் கண்ணாடியை வரவழைத்து, கண்ணாடி யில் தெரியக்கூடியதாக அதற்கு எதிர்ப் பக்கத்தில் ஆயிரம் பொன் அடங்கிய பை ஒன்றை தொங்கவிட்டு, அந்தத் தாசியை நோக்கி, `அதோ உனக்குச் சேர வேண்டிய பணம் அந்த கண்ணாடிக்குள் இருக்கிறது, எடுத்துக் கொள்' என்று கூறினாராம். அது கேட்ட தாசி, `கண்ணாடி யில் தெரிகிற பணம், பணத்தின் நிழலேயன்றி உண்மையான பணமல்லவே' என்று கூறினாளாம். `அப்படியானால் இந்த ஏழை உன்னிடம் வந்ததாகக் கனவு கண்டதை மட்டும் எப்படி உன்னிடம் உண்மையாகவே வந்தான் என்று கூறமுடியும்' என்று நீதிபதி கேட்டாராம். தாசி வெட்கித் தலைகுனிந்து சென்று விட்டாளாம். இந்தக் கதைக்கும் இன்று சென்னை சர்க்கார் வகுத்திருக்கும் கட்டாய இந்தித் திட்டத்திற்கும் யாதாயினும் வேறுபாடு காண முடியுமா?

காங்கிரசின் திட்டங்கள் பலவற்றுள், இந்நாட்டுக்கு ஒரு பொது மொழி வேண்டுமென் பதும், ஒன்றாக இருந்தது. இத்திட்டம், ஆங்கி லேயர் இந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் காங்கிரசால் வகுக்கப்பட்டது. ஆங்கிலேயர் இந்நாட்டை விட்டுப் போய் விட்டால், அப்போது இப்பொழுது பொது மொழியாக இருக்கும் ஆங்கிலமும் அவர் களுடன் போய்விடும் என்று காங்கிரசார் எண்ணினர்- அதற்கேற்ப, ஆங்கிலம் போய் விட்டால், அதற்குப் பதிலாக ஒரு பொது மொழி இந்நாட்டுக்குத் தேவை என்று கருதினர்- ஆங்கிலேயர் போய்விட்டனர். ஆனால் அவர்களுடைய மொழியான ஆங்கிலம் மட்டும் இங்கிருந்து போகவில்லை- போகும்படி செய்யவும் முடியவில்லை. இது மட்டுமல்ல, ``ஆங்கிலம் இங்கிருந்து போகக் கூடாது- அதுநமக்கு மிகவும் தேவை- ஆங்கிலம் மட்டுமல்ல, பிரெஞ்சு, ஜெர்மனி, ஜப்பான் முதலான மொழிகளும் நமக்குத் தேவை'' என்று ஆங்கிலத்தை விரட்டியடிப்பதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர்களே இன்று கூறுகின்றனர். என்றாலும், இந்நாட்டுக்கு ஒரு பொது மொழி வேண்டுமென்று வீம்புக்காவது சொல்லுகின்றனர். எனவேதான் சென்னை சர்க்காரின் கட்டாய இந்தித் திட்டத்துக்கு மேற்கோளாக கனவுக் கதையைக் கூறினோம்.

ஆங்கிலம் போய்விட்டால் அந்த இடத்துக்கு இந்நாட்டு மொழிகளில் ஒன்றைப் பொது மொழியாக வைக்க வேண்டுமென்ற காங்கிரசாரின் எண்ணம், குறைந்தது இன்னும் ஒரு நூற்றாண்டுக்காவது நடைமுறைக்குக் கொண்டுவர முடியாத அளவுக்கு ஆங்கிலத்தின் பொதுத் தேவை இங்கு இன்றியமையாததாக இருக்கின்றது. ஆங்கிலத்தின் தேவையையும் நாம் அடியோடு ஒழிக்க வேண்டுமானால் 1948இல் இருந்து 2048-வது ஆண்டு வரை இங்குள்ள எந்தப் பள்ளிக் கூடங்களிலும் ஆங்கிலத்தின் வாசனையைக் கூடப் புகவிடக் கூடாது. அப்பொழுதுங்கூட ஆங்கிலத்தின் தேவையை நாம் அடியோடு ஒழித்து விட முடியாது. வெளிநாட்டுத் தொடர்புக்கு எந்தக் காலத்திலும் ஆங்கிலம்தான் தேவைப்படும். ஆனால், அந்தத் தேவை மிக மிகச் சிறு அளவில்தான்- வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு சிலருக்கு மட்டுமேதான் தேவைப்படும். இந்த நிலை ஏற்படும் போது இந்நாட்டுக்கு ஒரு பொது மொழியின் தேவையே இல்லாது போய்விடும்.

எப்படியென்றால், இந்நாட்டுக்கு ஒரு பொது மொழி தேவையென்ற காங்கிரசின் திட்டம் போலவே, இந்நாடு மொழிவழி பிரிக்கப்பட வேண்டும் என்பதும் காங்கிரசின் திட்டங்களுள் ஒன்றாகும். மொழி வழி நாடு பிரிக்கப்பட்டு விட்டால் இவ்வுபகண்டத்துக்கு ஒரு பொது மொழி புதிததாக உண்டாக்கப்படல் வேண்டு மென்னும் திட்டம் அடிபட்டுப் போய்விடும். வெளிநாட்டுத் தொடர்புக்காக நாம் பயன்படுத்திக் கொள்ளும் ஆங்கிலமே, மொழி வழி மாகாணங் கள் பிரிக்கப்பட்ட பின்னர் இங்கும் போதும் என்ற நிலைமை தானாகவே ஏற்பட்டு விடும். மொழி வழி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், ஒவ்வொரு மாகாணங்களுக்கும் இடையே ஏற்படும் பொதுத் தொடர்பு நாம் வெளிநாடுகளு டன் வைத்துக்கொள்ளும் தொடர்பை விட அதிகமாக இருக்க முடியாது.

மொழி வழி மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்ற திட்டத்தை வகுத்த காங்கிரசே, இந்நாடு முழுவதுக்கும் ஒரு பொது மொழி தேவை என்ற திட்டத்தையும் வகுத்தது முன் யோசனை யோடு செய்யப்பட்ட காரியமல்ல. ஒருவேளை, பொதுமொழித் திட்டம், மொழி வழி மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்ற திட்டத்தை வகுக்கு முன் செய்யப்பட்டதாயினும், மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்ற திட்டம் வகுக்கப்பட்டவுடனே பொதுமொழித் திட்டத்தின் தேவையின்மையை உணர்ந்து அதனைக் கைவிட்டிருக்க வேண்டும். அங்ஙனம் செய்யாமல், மாகாணப் பிரிவினைத் திட்டத்தை யும், பொதுமொழித் திட்டத்தையும் ஒன்றாகப் பிணைத்து வைத்துக் குழப்புவது அரசியல் அறிவுக்குப் புறம்பான காரியமாகும்.

இந்தக் குழப்பம், நாடு விடுதலை அடைந்து, நாட்டின் ஒரு பகுதி தனியாகப் பிரிந்து போன பின்னருங் கூடத் தெளியவில்லை, இந்தத் தெளிவற்ற நிலைமையை 14-8-48ல் வெளி வந்த இந்திய சர்க்காரின் அறிக்கை கண்ணாடி போல் எடுத்துக்காட்டுகின்றது. அந்த அறிக்கையில்,
``குழந்தைகளுக்கு அவர்களின் தாய் மொழியில்தான் கல்வி போதிக்க வேண்டு மென்ற கொள்கையில் இருந்து மாறினால், அது குழந்தைகளுக்குத் தீமையாவதுடன், சமூக நன்மைக்கும் அதனால் கெடுதல்.''

என்று கூறப்பட்டுள்ளது. இது, சர்க்காரின் குழப்ப நிலையை எடுத்து விளக்கும் முதல் கட்டமாகும். இந்திய சர்க்காரின் இவ்வறிக்கையி னால், குழந்தைகளுக்கு அவர்களின் தாய்மொழி அல்லாத வேறு மொழிகளைக் கூடக் கற்பிக்க வேண்டிய நிலைமையில் இந்திய சர்க்கார் தங்களுடைய அரசியல் திட்டத்தை வகுத்து வைத்திருக்கின்றனர் என்பது தெரிகிறது. இல்லையேல் அறிக்கை இந்த வடிவம் பெற் றிருக்க முடியாது. குழந்தைகளின் கல்வி முறை அவர்களின் தாய்மொழியிலேயே இருக்க வேண்டுமென்பதற்கு விளக்கம் கூறி அறிக்கை வெளியிட வேண்டிய இன்றியமையாமை எதுவுமே இல்லை. இதற்காக இந்திய சர்க்கார் ஏன் ஒரு அறிக்கையை வெளியிட்டதென்பதே புரியவில்லை. பிரிக்கப்பட வேண்டிய பல பகுதிகளை ஒன்றாகப் பிணைத்து வைத்துக் கொள்ள வேண்டுமென்ற பேராசையையே இவ்வறிக்கை வெளிப்படுத்துகின்றது.

இந்தப் பேராசையின் முழு வடிவமும் இவ்வறிக்கையின் இரண்டாவது கட்டத்தில் நன்கு தெரிகின்றது.

``கல்விக்குச் சிறந்ததான இந்தக் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் எதிர்பாராத விதமாக எத் தனையோ தொல்லைகள் உண்டாகின்றன. கல்வி கற்பிக்க வேண்டியது இன்ன மொழி என்று எதைக் கருதுவது என்ற சிக்கல் எழுகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு மாகாணத்திலும் பல மொழிகள் பேசப் படுகின்றன.''

என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய சர்க்கார் ஏன் இந்தச் சிக்கலையும் தொல்லையையும் தன் மீது போட்டுக் கொண்டு அவசதிப்பட வேண்டுமென்பதுதான் விளங்க வில்லை. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய் இல்லையே என்று அவதிப் படுவது போல், மொழி வழி மாகாணப் பிரிவினைத் திட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு எந்த மொழியில் கல்வி கற்பிப்பது என்ற கவலையை ஏன் வறியதே உண்டாக்கிக் கொள்ளவேண்டும்? மொழி வழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு விட்டால், அந்ததந்த மாகாணங்களில் உள்ள குழந்தைகள் தங்கள் தாய்மொழியில்தானே கல்வி கற்றுக் கொள்வார்கள். கையால் கிள்ளி எறிய வேண்டியதைக் கோடாரி கொண்டு வெட்டுவது போல் நிலைமையை ஏன் இன்னும் வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்? செய்ய வேண்டிய முதன்மைக்காரியத்தைக் கடைசியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டுத், தேவையற் றதும்- விரும்பத்தகாததுமான ஒன்றை முன்னால் கொண்டு வந்து வைத்துக்கொண்டு, ``இதில் தொல்லை இருக்கிறதே! சங்கடம் ஏற்படுகிறதே! சிக்கல் உண்டாகிறதே!'' என்று ஏன் கவலைப்பட வேண்டும்? இவ்வாறு செய்வது, பொது மக்களுக்கு நாங்கள் ஏதேதோ நன்மைகளைச் செய்யலாம் என்று எவ்வளவோ முயற்சிக்கி றோம். ஆனால், நிலைமை சிக்கலாகவும், சங்கடமாகவும் இருக்கிறதே'' என்று பாவனை செய்து பொது மக்களின் ஆதரவைத் தங்கள் பக்கம் திருப்புவதற்காகச் செய்யப்படும் அரசியல் சூழ்ச்சியேயன்றி வேறொன்றுமல்ல என்பதை அறிவதற்கு நீண்ட ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. சர்க்கார் தங்களுக்கிருக்கும் பேராசையை மறைக்கவே இவ்வாறெல்லாம் அறிக்கைகள் வெளியிடுகின்றனர் என்பதும் வெளிப்படை. இதனை வலியுறுத்தும் முறை யிலேயே இந்திய சர்க்கார் தங்களுடைய அறிக்கையை மேலும் விரிவாக்கி விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

``சென்னை மாகாணத்தில், தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம் ஆகிய நான்கு முக்கிய மொழிகள் இருக்கின்றன.''

என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட் டிருக்கிறது. இந்த நான்கு மொழிகளைப் பேசும் மக்களுக்கும் பொதுவான ஒரு அரசியல் திட்டத்தை அமைத்து இந்நால்வரும் ஒன்றாக வாழ்வதற்குரிய அமைப்புக் காங்கிரஸ் திட்டத் தில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் மொழி வழி மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்ற திட்டம் காங்கிரசில் இருக்கும் போது, சென்னை மாகாணத்தில் நான்கு மொழிகளைப் பேசுவோர் இருக்கின்றனரே! இவர்கள் எந்த மொழியைக் கற்றுக் கொள்வது என்ற கவலை இந்திய சர்க்காருக்கு உண்டாகி ஏன் அவர்கள் கவலைப்பட வேண்டுமென்பது தான் விளங்கவில்லை.

இனி, காங்கிரசின் திட்டப்படி சென்னை மாகாணம் மொழி வழி பிரிக்கப்பட்ட போதிலும், தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் கலாச்சாரப் பழக்க வழக்கங்களில் ஒரு தன்மையையே உடையவர்களாயும், இனத்தில் ஒன்றாகவும் இருப்பதால் இந்நால்வருக்கும் பொதுவான ஒரு அரசியல் திட்டத்தை வகுத்து, இந்திய சர்க்காரின்- வடநாட்டாரின் பிடியிலிருந்து விலகித் தனியாக வாழ வேண்டும்- வாழ முடியும் என்பது திராவிடர் கழகத்தின் திட்டமாகும். இது நடைமுறைக்கு வரும் போதுகூட, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் எதைக் கற்றுக்கொள்வது என்ற சிக்கலே ஏற்படாது. அரசியல் அனைவருக்கும் பொதுவாக இருந்தா லும், அவரவர்களின் தாய்மொழிகளே அவரவர் கள் கற்றுக் கொள்ளும் உரிமை மொழியாக இருக்கும். அரசியற் பொதுக் காரியங்களுக்கு மட்டும் இந்நான்கு மொழிகளில் ஏதாவதொன்று- பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி தேர்ந்தெடுக்கப்படும். அதிலும் திராவிட நாட்டி லிருந்து போய் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் மக்களில் பெரும்பாலோர் எந்த மொழியைப் பேசுகிறார்களோ அந்த மொழியே அரசியற் பொது மொழியாகத் திகழும், அல்லது இப்போது நடைமுறையில் பொதுமொழியாகப் பயன்படும் ஆங்கிலமே, அது இங்கு இருக்கும்வரை அல்லது தேவைப்படும் வரை திராவிட நாட்டு அரசியற் பொது மொழியாகவும் இருக்கும். எனவே இந்திய சர்க்கார் இப்போது உண்டாக்கிக் கொண்டிருக்கும் சங்கடமான நிலைமையைத் திராவிட அரசு எந்தக் காரணத்தைக் கொண்டும் உண்டாக்கிக் கொள்ளாது- உண்டாக்கிக் கொள்ளும் நிலைமையும் ஏற்படாது.

இனி, இந்திய சர்க்காரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும்,

``சென்னை நகரத்தில் தமிழும் தெலுங்கும் பேசுகிறவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.''

என்பதற்கும் பொருளே இல்லை. சென்னை நகரத்தில் இருக்கும் தெலுங்கு பேசும் மக்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது பேர் சென்னை நகரத்தை விட்டு எந்தக் காலத் திலும்- எந்தக் காரணத்தைக் கொண்டும் தெலுங்கு நாட்டுக்குப் போகமுடியாத நிலையை ஏற்படுத்திக் கொண்டவர்கள். இவர்கள் பல காலமாகவே தமிழ் மக்களோடு கலந்து வாழ்பவர் கள். இவர்களின் தாய்மொழி தெலுங்காக இருந் தாலும் வாழ்க்கைத் துறை முழுவதுக்கும் தமிழ் மொழி தெலுங்காக இருந்தாலும் வாழ்க்கைத் துறை முழுவதுக்கும் தமிழ் மொழியே பயன் படுகின்றது. வீட்டில் சிற்சில சமயங்களில் தெலுங்கு பேசப்படுகின்றதே தவிர, மற்றக் காலங்ளில் எல்லாம் தமிழ்தான் அவர்களின் வாழ்க்கை மொழியாக இருக்கிறது. கல்வி கற்பதற்குக் கூட முதல் மொழியாக அவர்கள் தமிழைத் தான் விரும்பி எடுத்துக் கொள்கிறார் கள். அவர்களின் தாய்மொழியான தெலுங்கைக் கற்க வேண்டுமென்று விரும்புகிற சிலரும் அதனை இரண்டாவது மொழியாகவே எடுத்துக் கற்றுக் கொள்கின்றனர். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கர்களிற் பலர், தாங்கள் தெலுங்கர்- தங்கள் தாய்மொழி தெலுங்கு என்பதைக் கூட மறந்து விட்டனர் என்பது வெளிப்படை. மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி முதலான பகுதி களில் வாழும் தெலுங்கர்கள் பலருக்குத் தெலுங்கு மொழி பேசக் கூடத் தெரியாது. தாங்கள் தெலுங்கு நாட்டிலிருந்து வந்து குடியேறினவர் களின் வழி வந்தோர் என்பதைக் கூட அவர்கள் மறந்து விட்டனர். இந்த நிலையில் `சென்னை நகரத்தில் தமிழும் தெலுங்கும் பேசுவோர் ஏராளமாக இருக்கின்றனர். இவர்கள் எந்த மொழியைக் கற்றுக் கொள்வது! என்ற கவலை இந்திய சர்க்காருக்கு ஏன் ஏற்பட்டது என்பது தான் விளங்கவில்லை. தமிழ்நாட்டில் நெடுங்காலமாக வாழும் தெலுங்கர்கள், தெலுங்கு கற்றுக் கொள்ள விரும்பினால், அந்த வசதி இப்போதிருப்பதை விட அதிகமாகவே திராவிட அரசில் இருக்கும்.

இனி, ஒரு மாகாண மொழியை இன்னொரு மாகாண மக்களுக்கு வலிந்து புகுத்துவது கூடாதென்பதை இந்திய சர்க்கார் ஒப்புக் கொண்டு அதற்குச் சில மேற்கோள்களையும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

``ஐரோப்பிய நாடுகளின் சரித்திரமும், ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது. இங்கிலாந்து, அயர்லாந்தின் மீது ஆங்கில மொழியைப் போலந்துக்காரர்கள் மீதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், தங்களுக்குட்பட்ட வெளி மொழி பேசுவோர் மீது தங்கள் மொழியையும் புகுத்த முயன்றார்கள். ஆனால் அந்த முயற்சிகளின் பலன் எல்லாம் முடிவில் ஆபத்தாகவே ஆயின. ஐரோப்பிய நாடுகள் செய்துபார்த்த கொள்கை யையே இந்தியர் இங்குச் செய்து பார்ப்பதென் பதற்கு நியாயமில்லை.''

என்றும் இந்திய சர்க்காரின் அறிக்கை கூறுகின்றது. இது, உண்மையிலேயே வரவேற்கத் தக்கதாகும். ஒரு மாகாணத்திலுள்ள மக்கள் பேசும் மொழியை இன்னொரு மாகாண மக்களுக்கு வலிந்து புகுத்துவது போன்ற ஆபத்து வேறொன்றும் இல்லை என்பதை நாமும் ஒப்புக் கொள்கிறோம். இங்கிலாந்து தன்னுடைய மொழியான ஆங்கிலத்தை அயர்லாந்து மக்களின் மீது திணிக்க முயன்றதை ஆபத்தான காரியமென்று ஒப்புக்கொள்ளும் இந்திய சர்க்கார், ஐக்கிய மாகாணத்திலும், மத்திய மாகாணத்தில் சில பகுதிகளிலும் பேசப்படும் இந்துஸ்தானி யையோ அல்லது இந்தியையோ சென்னை மாகாணத்தில் ஏன் வலிந்து திணிக்கிறார்கள் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்த்தார்களா? அயர்லாந்தாவது இங்கிலாந்துக்கு அண்மையில் இருக்கிறது. கலாச்சார பழக்க வழக்கங்கள் இங்கிலாந்துக்கும், அயர்லாந்துக்கும் ஒரே இன அடிப்படையில் இருப்பதால் ஒன்றாகவே இருக்கிறது. என்றபோதிலும் அயர்லாந்து மக்கள் ஆங்கிலயரோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை. ஆங்கில மொழியைத் தங்கள் மொழியாகவும் கொள்ளவில்லை- தனி அரசு, தனி மொழி என்ற கோட்பாட்டின் கீழ் எல்லா அமைப்புகளையும் உண்டாக்கிக் கொண்டனர்.

ஆனால், தமிழ்நாடு எங்கே இருக்கிறது? சென்னைக்கும், டில்லிக்கும் இடையே இரண்டா யிரம் கல் தொலைவு இருக்கிறதே! மொழித் தொடர்போ, இனத் தொடர்போ, கலாச்சாரப் பழக்க வழக்கத் தொடர்போ வடநாட்டுக்கும், தமிழ் நாட்டுக்கும் எப்போதாவது ஒன்றாக இருக்கிறதா? இல்லையே. அப்படியிருக்க, வடநாட்டு மொழி யான இந்தியையோ, இந்துஸ்தானியையோ தமிழ் நாட்டு மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்- குழந்தைகள் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று காட்டுமிராண்டிக் கூச்சல் போடுவானேன்? இவ்விதம் செய்வது ஆபத்தென்பதைச் சரித் திரங்கள் வாயிலாக உணர்ந்த பின்னரும் இந்திய சர்க்கார் ஏன் இந்த ஆபத்தோடு விளையாடு கின்றனர் என்பதுதான் தெரியவில்லை.

இங்கிலாந்துடன் பிணைக்கப்பட்டிருந்த அயர்லாந்து தனி நாடாக இருக்கும்போது, அதிலும் பல்வேறு மொழிகளையும், கலாச்சாரப் பழக்க வழக்கங்களையும் கொண்ட நாடுகளை உள்ளடக்கிய இந்த உபகண்டம் கலாச்சார மொழி வழி தனித் தனி அரசாகத் திகழ முடியாதா? இதனைச் சரித்திரம் படித்த அரசியலறிஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? சரித்திரங்களால் பெறப்படும் பாடம் படுகுழியில் விழுவதற்கா பயன்பட வேண்டும்?

மேலும் இந்திய சர்க்கார் தங்களுடைய அறிக்கையில் இன்னொரு உண்மையையும் வெளியிட்டிருக்கிறது.

``மாகாண சமஸ்தான சர்க்கார்கள் எந்தக் கூட்டத்தார் மீதும் குறிப்பிட்ட மொழியைக் கட்டாயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.''

என்று கூறியுள்ளது. அதாவது ஒரு மாகாணத்தில் பலமொழிகள் பேசப்பட்டால், அம் மொழிகளில் குறிப்பிட்ட ஒன்றை அம் மாகாணத்திலுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதே இதன் பொருள். ஒரு மாகாணத்தில் பேசப்படும் பல திறப்பட்ட மொழிகளில் குறிப்பிட்ட ஒன்றை மட்டும் அம்மாகாணத்திலுள்ள அனைவருக்கும் கட்டாயப்படுத்துவது கூடாதென்பதை உணரும் இந்திய சர்க்கார், ஒரு மாகாணத்துக்குப் புறம்பான இன்னொரு மாகாண மொழியை மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டாயப்படுத்துவது முறையாகாதென்பதை ஏன் உணரவில்லை?

ஒரு மாகாண மொழிகளாவது ஏதாவதொரு வழியில் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை யாகவே இருக்கும், எடுத்துக்காட்டாக சென்னை மாகாணத்தில் பேசப்படும் தமிழ்- தெலுங்கு- கன்னடம்- மலையாளம்- துளு ஆகிய மொழிகள், தமிழ் மொழியில் இருந்து முளைத்த கிளை மொழிகளாகும் என்றபோதிலும் ஒரு மொழியைப் பேசும் மக்களுக்கு அம்மொழிக்கு மிக நெருங்கிய தொடர்புள்ள இன்னொரு மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாதென்பதை உணரும் சர்க்கார், மாகாணத்துக்கு மாகாணம், மொழிக்கு மொழி எந்த விதமான தொடர்புமற்ற ஒன்றை வலிந்து கட்டாயப்படுத்தும் கொடுமை யை ஏன் உணரவில்லை? இங்ஙனம் செய்வது அரசியல் தந்திரமா. ஏமாற்று வித்தையா? பாசாங்குரையா? பாரத நாட்டுச் சூழ்ச்சியா?

இந்தி, இந்நாட்டு மக்களின் பெரும்பா லோரால் பேசப்படுகின்றதென்பது உண்மையல்ல வென்று இவ்வறிக்கையில் புள்ளி விவரங்களை எடுத்துக்காட்டுவதும், அதே சமயத்தில் இந்தியை எல்லாரும் கட்டாயப் பாடமாகக் கற்க வேண்டு மென்ற திட்டத்துக்கு ஆதரவு தருவதும், பல மொழிகளைப் பேசும் ஒரு மாகாண மக்களுக்கு எந்த மொழியைக் கற்பிப்பது என்று ஏங்கும் இன்னொரு மொழி பேசுவோருக்குக் கட்டாயப் படுத்தக் கூடாதென்று கூறுவதும், இவற்றிற்கு மேற்கோளாக ஐரோப்பிய நாட்டுச் சரித்திரங் களை எடுத்துக்காட்டுவதுமான முறைகளைக் கையாண்டு ஏன் இந்திய சர்க்கார் இரண்டு ஓடங்களில் கால் வைக்கின்றனர் என்பதை உணர்ந்து பார்க்கும் எவரும் நமது மொழிப் போராட்டம் நியாயமான தென்பதையும், திராவிட நாட்டுப் பிரிவினைத் திட்டம் அவசியம் என்பதையும் ஒப்புக்கொள்ளாமல் இருக்க மாட்டார்கள்- அரசியல் அறிவு இருந்தால்.

(திராவிட நாடு - 22.8.48)