அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இனி என்ன செய்வர்?

“காற்றடிக்குது! கடல் குமுறுது! கயிறுகளைச் சரிபார்த்துப் பாய்மரத்தைச் சரிப்படுத்து!” கப்பற்றலைவனின் இம்மொழியைக் கேட்டும் கேளாதான்போல் ஒருவன், ஒய்யாரமாகச் சாய்ந்துக் கொண்டிருந்தான். வேறு பலர், இங்குமங்கும் ஓடி வேலைசெய்த வண்ணமிருந்தனர். ஒய்யாரக்காரன் சும்மாவுமில்லை! மரக்கலத்திலே இருந்த ஓர் ஓடத்தை எடுத்திட முயன்றான். கப்பற்றலைவன் அதைக்கண்டு, ‘ஏன் அதைத் தொட்டாய்?’ என்று கேட்க, ஒய்யாரக்காரன், நான் இந்த ஓடமேறி கரைசேரப் போகிறேன், என்று கூறினான். கப்பற்றலைவன் கைகொட்டி நகைத்து புயலால் மரக்கலமே தத்தளிக்கிறது. மை இருட்டு திசை தெரியவில்லை. ஒவ்வொருவரும் பணியாற்றினால்தான், கலம் தப்பும். இந்நிலையில் நீ, ஓடமேறிடுவேன், வழிவிடு என்றுரைக்கிறாயே, இதென்ன பித்தம் என்று கேட்டான். ஓடந் தேடியவன் நான் இக்கடுங்காற்றைப் பொருட்படுத்தேன், இருட்டைப்பற்றிக் கவலை கொள்ளேன். ஓடமேறுவேன், தடுக்க நீ யார்? என்று கோபித்தான், ‘வேண்டாம்’ என்றான் கப்பற்றலைவன்.

‘வேதனை விளைவிப்பேன் - வேலை செய்வோரைத் தடுப்பேன், அடித்தட்டைத் துளைப்பேன்’ என்று ஆர்ப்பரித்தான் கடலிற்புகவிரும்பியவன், அவன் மொழிகேட்ட அவன் சகாக்கள் சிலர் மனந்தடுமாறி, ஏதேனும் செய்ய வேண்டுமென்று கருதினர். இந்நிலையில் கப்பற்றலைவன், கயிறுகொண்டு, கூவினோனை இறுகப்பிடித்துக் கட்டினான், அவன் சகாக்கள், கயிறு அறுக்கவும், கலத்தைக் கெடுக்கவும், பாய்மரத்தைப் பழுதாக்கவும் முனைந்தனர். அவர்களும் பிடிபட்டனர். மரக்கலம் சென்றபடி இருந்தது. புயல் அடங்கத் தொடங்கிற்று. மேகம் கலையலாயிற்று. பிணைக்கப்பட்ட பிழை உளத்தான், பெருங்குரலெடுத்துக்கதறி, இதோநாக்கைப் பிடுங்கிக்கொள்கிறேன்! கண்களைப் பிடுங்கிக்கொள்கிறேன்! கம்பத்திலே தலையை மோதிக்கொள்கிறேன் என்று கூவி, அவிழ்த்துவிடுகிறாயா? இங்கேயே மடியட்டுமா? என்று கேட்டுக்கலாம் விளைவித்திட, கப்பற்றலைவன், என் செவி கெடுமளவு சத்தமிட்டாலுஞ்சரி, உன்சொற் கேளேன்’ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான். கூவினோனின் குரல் வலித்து, குரவளை துவண்டது, கூச்சலும் அடங்கிற்று, கலமோ, காற்றையும் இருளையும் வென்று, நேர்வழிச் சென்று கொண்டிருந்தது.

எக்கடலில், எப்போது என்று கேட்பர்! நேசநாடுகள் போர்ப்புயலிற் சிக்கித்தத்தளிக்கும் நேரத்திலே, இந்தியாவுக்குச் சுயராச்யம் கேட்டு, அதற்காகக் கிளர்ச்சி செய்ய ஒரு கட்சி கிளம்பியது. மரக்கலம் புயலிற்சிக்கிய நேரத்தில் ஒய்யாரக்காரன் ஓடம் தேடுவதற்கு ஒப்பாகுமன்றோ! கப்பற்றலைவன், காற்றடிக்கும் நேரத்தில் கலத்தைக் கவனிப்பதா, கடற் கொந்தளிப்பை அறியாது, ஓடமேறிட எண்ணுபவனின் இஷ்டத்திற்கு இணங்குவதா! எனவே கூனினோனை அடக்கிடல் போல், கிளர்ச்சி துவக்கிய காங்கிரசும் அடக்கப்பட்டது. கப்பலில் கயிறு அறுத்தல் போலக், காங்கிரசார் நாட்டுப்போர் முயற்சியைக் குலைத்தனர். பிடிபட்டோன் பெருங்குரல்கொண்டு கூவியதுபோல, காங்கிரஸ் ஏடுகள் கதறின. கட்டுண்டோன் உயிர்போக்கிக் கொள்வேன் என்று மிரட்டியதுபோல காந்தியாரும் 21 நாட்கள் பட்டினி என்று மிரட்டினார். கட்டுண்டோன் வலிகண்டு வாய்மூடியதுபோலக், காந்தியார் தமது பட்டினிகண்டு தாள் திறக்காதது தெரிந்து விரதத்தை முடித்துக்கொண்டார். எனவே, இங்கு நடைபெற்ற, காங்கிரஸ் கிளர்ச்சியையே நாம், கப்பலில் கலாம் விளைவித்தோன் கதைக்கு ஒப்பாகக் கூறினோம். கோபங் கொள்ளாது, தேசியத் தோழர்கள், யோசிக்க வேண்டும்.

நாட்டு நண்பரே! இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது? அம்புறாத்தூணி தீர்ந்துவிட்டது. நாண் அறுந்துவிட்டது. வில்லும் ஒடிந்தது. கத்தியோ வளைந்துபோயிற்று, இனிக் களத்தில் நின்று பயன் என்ன? என்று கேட்கிறோம்.

கடுங்காற்றில் கலம் சிக்கிய வேளையிலே, பிடிவாதம் பேசினால் பலன் கிடைக்கும் என்று கருதியவன் போலப் போர் நெருக்கடி முற்றியதும், கிளர்ச்சியில் ஈடுபட்டால், கைமேல் பலன் கிடைக்கும் என்று கருதிய காங்கிரஸ் தன் பாசறையிலிருந்த படைக்கலம் அத்தனையையும் உபயோகித்து பார்த்துவிட்டது; பலனோ பூஜ்யம்!

போருக்கு எதிர்ப்பிரசாரம், பட்டாளத்திலே ஆட்கள் சேரக் கூடாது பண உதவி தரக்கூடாது என்ற விஷமப் பிரசாரம், பார் நிலைமைப்பற்றித் தவறான கருத்தை மக்களிடை பரப்பி, பிரிட்டிஷார் தோற்றுவிடுவர் என்று வதந்திகளைக் கிளப்பிப் பீதியை உண்டாக்கும் பிரசாரம்; போர் நேரத்தில், பிறகட்சிகளை மறந்து எமது ஒரு கட்சியையே கவனிக்கவேண்டும் என்று பேரப்பிரசாரம், பதவிகளைவிட்டு மக்களிடம் சென்று விரைவிலே ஆங்கிலர் அழிவர் என்று செய்த துஷ்டப் பிரசாரம், எனும் இன்னோரன்ன பிரசாரம், அளவு, வகை, திறம் என்பவைகளில் மும்முரமான முறையிலே செய்து பார்த்தாகிவிட்டது.

கூண்டோடு சிறை புகுந்து, நாட்டைக் கொதித்தெழச் செய்ய வேண்டுமென்று, எல்லாக் காங்கிரஸ் தலைவர்களும், யுத்த எதிர்ப்புப் பிரசாரம் செய்து, சிறைபுகுந்து பார்த்தாகிவிட்டது. அதை எடுத்தெழுதிப் பத்திரிகைகள், உலகைக் குலுங்கவைக்கச் செய்ய வேண்டுமென்று முயன்றாகிவிட்டது.

அச்சு நாட்டாரின் உச்சி குளிரும்படி, “வெள்ளையனே! வெளியே போ!” என்றுரைத்துப் பார்த்தாகிவிட்டது. அதன் பொருட்டுக் காந்தியார் உள்பட தலைவர்கள் சிறை சென்றாகியும் விட்டது.

குழப்பம், கலகம், கூக்குரல், தண்டவாளம் அகற்றல் தபாலாபீஸ் தீமூட்டுதல், அதிகாரிகளைத் தாக்குதல், சூறையாடுதல் சட்டமீறுதல் எனும் நாசகாரியத்தை நாடு முழுவதும் செய்து பார்த்தாகிவிட்டது.

ரூஸ்வெல்ட்! சியாங்கேஷெக்கே! என்று முறையிட்டுப் பார்த்தாகி விட்டது.

மாணவர் உலகைத் தூண்டி விட்டுக் கிளர்ச்சி நடத்திப் பார்த்தாகி விட்டது.

பார்லிமெண்ட் மெம்பர்களில் சிலரைக்கொண்டு, பாராளும்மன்றத்திலே பேசச்செய்து பார்த்தாகி விட்டது.

இவைகள் யாவும் பயன் தராது போன பின்னர், காந்தியாரின் பட்டினி எனும் கடைசி ஆயுதமும் வெளிப்பட்டது. “பட்டினியா! பிரிட்டிஷார் இதைப் பார்த்துக் கொண்டிருப்பதா? காந்தியாருக்கு ஏதேனும் நேரிட்டால், பிறகு நிலைமை என்ன ஆகும் என்று எண்ணும்போதே பயமாக இருக்கிறதே” என்ற பிரசாரத்தை நடத்தினர். இன்று ஆரம்பித்தார் என்று கொட்டு முழக்கு நடந்தேறியது.

களைப்பு - குமட்டல் - கைகால் பிடிப்பு - கண் இருண்டது - பேச முடியவில்லை - படுத்தபடி இருக்கிறார் பெருமூச்சுக் காணப்பட்டது - ஆபத்து! ஆபத்து அதிகரிக்கிறது - ஆபத்து நீடிக்கிறது - டாக்டர்கள் கவலையுடன் இருக்கின்றனர் - நாடி ஈனசத்தத்திலிருக்கிறது - பெரிய கண்டம் - பிழைப்பது கஷ்டம் - என்ற முறையிலே, அறிக்கை வெளியிட்டனர் - பத்திரிகைகள் பிரசார குண்டுகளை வீசின. விடுதலை செய்க - என்ற வேண்டுகோள் எச்சரிக்கை, முறையீடு, பிரார்த்தனை - இலண்டன் முதற்கொண்டு இலுப்பூர் வரையிலே கிளம்பிற்று. பத்திரிகைகள் பூராவும் இதனையே பக்கம் பக்கமாக நிரப்பின.

தலைவர்கள் கூடினர், தலைகுனிந்து நின்றனர், தளும்பிய நீர்துடைத்துக் கொண்டனர், “உடனே காந்தியாரை விடுதலை செய்க” என்று தாக்கீது பிறப்பித்து, வைசிராய்க்கும், முதலமைச்சருக் கும் அனுப்பினர், முகத்தில் ஈயாடாது நின்றனர்.

இவ்வளவு ஆயுதமும், ஒவ்வொன்றும் கூர் மழுங்கிவிடவே, அறிக்கைகள், ஆபத்து அதிகரிக்க வில்லை - களைப்பு இருந்தாலும் கண் திறக்கிறார் - டாக்டர்கள் பேசவேண்டாமென்றாலும் பேசுகிறார் - குமட்டல் போகக் கொஞ்சம் இனிப்பான எலுமிச்சைச் சாறு பருகினார் - ஆத்ம சக்தியால் ஆபத்துக் குறைகிறது - ஞாபக சக்தி இருக்கிறது - பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்கிறார் - பந்து மித்திரர்களைக் காண்கிறார் குழந்தைகளுக்குக் குல்கந்து தருகிறார் - மகாதேவ தேசாயின் சமாதிக்கு மலர் தூவினீர்களா என்று கேட்கிறார் - விரதத்தை வெற்றிகரமாக முடித்து விடுவார் - மூத்திரக் கோளாறு இல்லை - இருதயம் நன்றாகவே இருக்கிறது - முகத்திலே களை இருக்கிறது - ஆபத்து நீங்கிவிட்டது, விரதம் முடிந்தது, ஆரஞ்சு ரசம் பருகினார் - என்று கூறின.

இடையே மட்டும், ஆட்சியிலே பங்கு கொண்டவர்கள் வெளியேறி இருந்தால், எவ்வளவோ பலன் ஏற்பட்டிருக்கும் என்று யாரும் கூற இடமில்லாதபடி, மோடி, சர்க்கார், ஆனே, எனும் மூவர் நிர்வாக சபையிலிருந்தே வெளி ஏறியும் பார்த்தனர்.

இவ்வளவும், இம்மி அளவு பலனையும் தரவில்லை. இனி என்ன இருக்கிறது, மிச்சம், என்று காங்கிரஸ் அன்பர்களைக் கேட்கிறோம். பலாத்காரச் செயலும், தலைவரின் பட்டினி கிடத்தலும், கடைசி ஆயுதங்கள்! அவைகளும் பயனற்றுப் போயின!! வேறு ஏதேனும் உண்டோ என்று கேட்கிறோம். நாசகாரியங்கட்குக் காங்கிரசே பொறுப்பு என்பதை அரசியலார் விளக்கி அறிக்கை விட்டுள்ளனர் - அதைக் கண்டித்து எழுதுவதும், காந்தியார் ஆத்மசக்தியால் தப்பினார் என்று எழுதுவதுந்தவிர, காங்கிரஸ் ஏடுகளுக்கும் இனி வேறு வேலை இல்லை.

இனியேனும், காங்கிரசல்லாதாரின் கட்சிகளுடன் கைகுலுக்கிச் சமரசம் உண்டாக்கினாலன்றி, சண்டித்தனம் பலன் தராது என்பதைக் காங்கிரஸ் உணருமா என்று கேட்கிறோம். நெருக்கடி மிக்க நேரத்தில் இத்துணைக் கலவரம் விளைவித்தும், பலன் காண முடியாதபோது, இதே முறை வேறென்றும் பலன் தராது என்பது தெரியவில்லையா என்று கேட்கிறோம். நேர்வழிகாண இனியேனும் காங்கிரஸ் முன் வருமா? என்று கேட்கிறோம்.

14.3.1943