அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இந்த மந்திரிமார்கள் ஆட்சியில்!

இந்தி எதிர்ப்பு என்பது வெறும் அரசியல் கிளர்ச்சி என்று கூறி, மொழி, கலாச்சாரப் பிரச்னை களை மூடிவிட- முயலுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.

அரசியல் பிரச்னைகளிலே, இவர்களின் ஆட்சி, ஏதோ அப்பழுக்கின்றி, மக்களின் நலனை நிறைவேற்றி வருவது போலவும், ஆகவே அரசியல் பிரச்னைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்க முடியாமல், திராவிடர் கழகம் திண்டாடி, எதையாவது இட்டுக் கட்டியாவது இவர்களுக்கு இழுக்குக் கற்பிக்க வேண்டுமென்ற கருத்துடன், இந்தி எதிர்ப்பைத் துவக்கி இருக்கிறார்கள் என்றும் மக்கள் மனத்திலே விஷ வித்துத் தூவுகிறார்கள்.

அரசியல் நடவடிக்கைகளில், இதுவரை இந்த ஆளவந்தார்கள் செய்த காரியம் அவ்வள வும், `ஆயிரத்தெட்டு சொட்டு' சொல்லக் கூடிய வைகளேயொழிய, இவர்கள் பெருமைப்படக் கூடியதாக ஒன்றும் அமைந்து விடவில்லை.

ஆட்சிக்குப் புதிதாகச் சிலர் வந்திருக்கி றார்கள். அவர்கள் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மகாத்மாவின் கட்சியினர், மஞ்சள் பெட்டியினர் என்றுதான் மக்கள் எண்ண முடிகிறதே யொழிய, அந்த ஒரு எண்ணத்தால் மட்டுமே, ஏக்கத்தையும், துக்கத்தையும் அதிக மாக வெளியே காட்டாதிருக்கிறார்களேயொழிய, காங்கிரஸ் கட்சியினால், கனிச்சாறு போன்ற வாழ்க்கைச் சுகம் கண்டுவிட்டோம், கஷ்டங்கள் போய்விட்டன என்று பொதுமக்கள் யாரும் கூற மாட்டார்கள்- கூற முடியாது.

வரிப் பளுவு அதிகமாயிற்றே தவிர, குறையவில்லை.

வறுமையும், வாட்டமும் அதிகரித்ததே தவிர, குறையவில்லை. ஆலைத் தொழிலாளி, அல்லற் படவும், வயலில் வேலை செய்பவன் வாட்டமடையவும், ஆலையில் வேலை நிறுத் தமோ, கதவடைப்போ நடைபெறுவதும், தடியடி துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்படுவதும், கடைசியில் தொழிலாளரின் முயற்சி முறியடிக்கப் படுவதும், அது போலவே, உழவர் கிளர்ச்சியும், உழவர் - மிராசுதாரர் கை கலப்பும், போலீஸ் பிரவேசமும், பலருக்குச் சிறைவாசமும், சிலருக்கு பிராணச் சேதமும், விளைச்சல் குறை வும், பாட்டாளி பட்டினியும் ஆகிய இவைதான் நிலைமையே தவிர, மஞ்சள் பெட்டியின் மகத்துவத்தாலே, மக்களின் வாழ்வு வளம் பெற்றதாக யாரும் கூறமுடியாது.
ஆளவந்தார்கள் இதுவரையில், இந்நாட்டு இயற்கைச் செல்வத்தை வளமாக்கியோ, புதிய தொழில்களை ஏற்படுத்தியோ, பொதுச் செல்வத் தையும் நன்மையையும் அதிகப்படுத்திய தாகவோ விரல்விட முடியாது.

அதிகாரிகளின் போக்கோ, முறையோ மாறியதாக, அவர்களே கூட ஒப்புக் கொள்வ தில்லை. சில நாட்களுக்கு முன்பு `தினசரி'யே போலீஸ் இலாக்கா பழைய முறையைக் கைவிடவே இல்லை என்று குறை கூறிற்று.

இலஞ்சத் தாண்டவம் அடங்கி விட்டதாக, காங்கிரஸ்காரரே கூடக் கூறுவதில்லை.

வேறு என்னதான், இந்த ஆளவந்தார் களால் கண்ட பலன்?

எதுவும் இல்லை என்றாலும், இவர்கள் ஆளவந்த பிறகு, முன்பு இருந்தது போல, மந்திரிகள், கவர்னர்கள், போன்ற உயர் பதவியின ருக்காகத் தரப்படும் சம்பளமும் செலவினமும் குறிப்பிடத்தக்க அளவிலும், பெருமை தரும் முறையிலும் குறைக்கப்பட்டதா என்றால், இல்லை, இல்லை என்றே கூறவேண்டியிருக்கிறது.

கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரியார், தமது பதவியின் இலட்சணத்தைத் தாமே கூறி விட்டார்- மந்திரிகள் அனுப்பும் காகிதங்களில் நான் கையொப்பம் இட வேண்டும். அவ்வளவு தான் எனக்குள்ள அலுவல் என்று.

என்ற போதிலும் அவருக்கு அளிக்கப்படு வது மாதம் 20,900-0-0 ரூபா சம்பளம். மற்ற வகைச் செலவுகள், ரூபா 88.666-0-0 ஆகிறது.

ராஜாஜி வேதாந்தி- கூறுவது நாமல்ல- அவருடைய நண்பர்கள். அவருக்காக ஏழை இந்தியர் தரும் பணம் 1,09,566-0-0 வெள்ளையர் பெறும்போது ஏன் இதனைக் கூறவில்லை என்று நம்மைக் கேட்பர்.

சம்பளக் கொள்ளை என்று இதனைக் குறிப்பிட்டு எழுதி, இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பளக் கொள்ளையே ஒரு காரணமாகக் காட்டி குடி அரசில் தலையங்கம் எழுதியதற்காக, பெரியார் இராமசாமி ஒருமுறை கண்டிக்கப்பட்டார்- இந்த உண்மையை மறைத்து விடுவார்கள்- உங்களிடம் கூறமாட்டார்கள்.

நாங்கள் கேட்டதும், கேட்காததும் ஒருபுறம் இருக்க, வெள்ளையர் காலத்தில், இப்படிப்பட்ட சம்ம்பளக் கொள்கைகளைச் சரமாரியாகக் கண்டித்த காங்கிரஸ் நண்பர்கள் எதற்காக, கவர்னர் ஜெனரலுக்கு அதிலும் ஒரு கர்ம யோகிக்கு, கண்ணன் காட்டிய வழிச் செல்பவ ருக்கு, படாடோபத்தில் விருப்பமற்ற ஆச்சாரி யாருக்கு இவ்வளவு சம்பளம் தர வேண்டும்.

மற்றும், வெளிநாட்டுத் தூதர்களுக்காக ஆண்டு ஒன்றுக்கு, ரூபா 89,31,700-0-0 செலவிடப்படுகிறது- சரியா? தேவையா?

மலேயா, மோரிஸ், சிலோன், பர்மா ஆகிய இடங்களிலே இங்கிருந்து போயுள்ள மக்கள், எலும்புந் தோலுமாகிக் கிடப்பதை, உலகம் அறியாதா- அந்த உலகின் கண் முன்பு, நமது `தூதுவர்களுக்கு' டாம்பீகமான நிலை அளிப்ப தால், என்ன எண்ணும், நமது ஆட்சி முறையைப் பற்றி.

பிரிட்டனில் உள்ள தூதுவருக்கு மட்டும் 9 மோட்டர்களாம்- அதிலொன்று ரோல்ஸ் ராயாம்! இங்கேயோ, நமது தலைவர்கள் போக போக்கி யத்தில் மோகம் கொள்ளாதே, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து, கூலி உயர்வு கேட்டபடி இருப்பது தொழிலாளிக்கு ஒருவகை மனோவியாதியாகிவிட்டது என்றெல்லாம் உப தேசிக்கிறார்கள் நியாயமா!

மந்திரிகளின் மோட்டார் மெருகு கலைந் ததும் மாற்றிப் புது மோட்டார் வழங்குகிறார்கள்- ரிப்பேர் செய்து கொள்ளக் கூடாதா என்று கேட்டால், ரிப்பேருக்குச் செலவு அதிகமாகிறது. அடிக்கடியும் ரிப்பேர் தேவைப்படுகிறது. இதை விடப் புதிய மோட்டார் வாங்குகிறார்கள் என்று மந்திரி பதில் கூறுகிறார், ஏனய்யா உங்கள் மோட்டார் மட்டும் அடிக்கடி கெட்டுப் போகிறது என்று கேட்டால், அதுதானே தெரியவில்லை. என்று யாரோ ஆலமரத்தடியிலிருப்பவர் பதில் கூறுவது போல, நாடாளும் அமைச்சர் பேசுகிறார்.

எந்த நல்ல காரியத்துக்கும் பணமில்லை என்று கூறிவிடுகிறார்கள்.

பணம் வரக்கூடிய வகையில், இலாபம் தரும் தொழில்களை முதலாளித்துவ முறையிலே விட்டுவைக்காமல் சர்க்காரே ஏற்று நடத்தினால், பணம் கிடைக்குமே என்று கூறினால், முதலாளித் துவத்தை ஒழிக்கும் வேலையை இப்போது மேற்கொள்ள முடியாது என்று கூறிவிடுகிறார்கள்.

சேலத்தில் இரும்பும், தென்னார்க்காட்டில் நிலக்கரியும் கிடைக்கிறதாமே, ஏன் இங்கு சர்க்கார் இரும்பு எஃகு தொழிற்சாலை அமைக்கக் கூடாது என்று கேட்டால், யோசிக் கிறாரோ, வசதி இல்லை என்கிறார்கள். அதேபோது பீகாரிலும் வேறிடத்திலும் புதிய இரும்புத் தொழிற்சாலையை அங்குள்ள சர்க்கார்கள் அமைக்கிறார்கள்.

எதற்கு எடுத்தாலும் டில்லி டில்லி என்று கூறிவிடுகிறார்கள்.

அங்கு அடிக்கடி போய்வர விமானம் வாங்கி, அதற்கு மாதம் 4,500 ரூபாய் செலவை அள்ளி வீசுகிறார்கள்.

ஆயிரம் இருக்கிறது இதுபோல, ஆள வந்தார்களின் அரசியல் நடவடிக்கையில் குறை கூற, சட்டசபையிலே பொடி போடலாமா, குறட்டை விட்டுத் தூங்கலாமா, என்பன போன்ற மகத்தான விஷயங்களைப் பேசிப் பொழுது போக்கும் இலட்சணமும், இதனாலே தலைவலி வந்து விடுவதும், அதற்கு அமைச்சர் அமிர் தாஞ்சனம் தருவதும், ஆக இப்படி இருக்கிறது ஆளவந்தார்களின் போக்கு.

இவர்கள்தான் பேசுகிறார்கள், அரசியல் கிளர்ச்சிக்காக, இந்தி எதிர்ப்பை ஒரு சாக்காகக் கொள்கிறார்கள் என்று.

உண்மையில் பார்க்கப் போனால், இந்தி எதிர்ப்பில் ஈடுபடுவதால், பல அரசியல் நட வடிக்கைகளில் உள்ள தவறுகளைப் பொது மக்களிடம் கூறத் திராவிடர் கழகத்துக்கு அவகாசம் இல்லாமற் போய்விடுகிறது.

பொதுவாகக் காங்கிரஸ் கொள்கையை ஆதரிக்கும் பல ஏடுகள், ஆளவந்தார்களின் போக்கிலே அதிருப்தியை அடிக்கடி தெரி வித்துக் கண்டித்து எழுதி இருக்கிறதே போதும் இவர்களின் மக்கள் சர்க்கார் விஷயமாகப் பொது மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பதை விளக்க.

வடநாட்டுச் சேட்டு வாங்கும்
வட்டிகள் வரி வியாபாரம்
முடமாக்கிச் சமுதாயத்தை
மூலையில் சேர்க்கும் இம்சை
மடக்காரச் சாமியார்கள்
மதிப்பின்னும் ஓங்குமானால்
அடக்கார வெள்ளைக்காரன்
அகன்றதால் இலாபம் உண்டா?
அரசுநம் கையில் வந்தும்
அதிகாரி மாறவில்லை
உரிமைகள் வந்த பின்னும்
ஊழல்கள் நிற்கவில்லை
தெருவெலாம் சுடுகாடாகும்
தீராத பசியிருந்தும்
அரிசியை மறைத்து விற்கும்
அற்பர்கள் சாகவில்லை

ஊற்றின் வாய் டைத்துநல்ல
ஊருணி மூடும் பேயர்
ஆற்றையும் ஆக்ரமிக்கும்
அதமர்கள் உன்னைச் சுற்றி
போற்றி நற்பதவி பெற்றுப்
புகழ்கின்றார், ஐயோ அண்ணே
சோற்றிலே நஞ்சு வைப்பார்
சேர்க்கைகள் உனக்கேன் அண்ணே?
* * *

இப்படிக் கதறுகிறார், காங்கிரஸ்காரர் காங்கிரஸ் ஏட்டின் மூலம்- மதுரை `தமிழ் நாடு' இதழில் காணலாம் கவிதையை.

இலட்சணம் இது! பேசுவதோ, தாங்கள் ஏதோ ஆட்சி செய்து, மக்கள் கஷ்டத்தை எல்லாம் போக்கிவிட்டது போலவும், நாம் ஏதோ, இவர்களிடம் வேறு எவ்வித குற்றம் குறையும் காண முடியாததால், இந்தி எதிர்ப்புத் துவக்கி இருப்பதாகவும், பசப்பு வார்த்தை! கவி பாடிக் கசிந்துருகும் நண்பர் போலவே, நாமும் கூற ஆசைப்படுகிறோம். ஐயோ! அண்ணே! அரசியலைப் பேசாதே! அதிலே ஆயிரத்தெட்டு கோணல்! அவைகளைக் கூறக் கூட நேரமில்லை. இந்தி எதிர்ப்பினால். இது முடிந்து அந்தப் படலம் ஆரம்பமானால், அண்ணே, உனக்கு நல்லதல்ல! வேண்டுமானால், அச்சாரம் போலச் சில தருகிறேன், யோசித்துப் பார்!

1. மதுவிலக்கு வெற்றி தரவில்லை.
2. இனாம் ஒழிப்பு கைவிடப்பட்டது.
3. கல்வித் திட்டம் பலனில்லை.
4. ஜெமீன் ஒழிப்புக்குப் பண வசதி இடம் தரவில்லை.
5. திறந்த கோயில்களில் ஆதித் திராவிடர் போக, நேரமில்லை, வசதியில்லை, நினைப்பு மில்லை.
6. புதிய தொழில் திட்டம் எதுவுமில்லை.
7. தொழிலாளர் துயரம் தீரவில்லை.
8. உழவர் உள்ளம் குளிரவில்லை.
9. அடக்கு முறைக்கோ பஞ்சமில்லை.
10. 144, போடாத நாளில்லை.
11. தடியடி தாராளமாக நடைபெறுகிறது.
12. கண்ணீர்க் குண்டு, துப்பாக்கி வேட்டு, நடைபெறுகிறது.
13. உணவுப் பஞ்சம் ஒழியவில்லை.
14. பண்டம், கிடைப்பதில்லை.
15. பிளாக் மார்க்கெட் ஒழியவில்லை.
16. சிறையிலே, பொதுநலத் தொண்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
17. தமிழர்- ஆந்திரர் பேதம் விரிவடைகிறது.

போதுமா, அண்ணேன்! ஆட்சியினாலே வந்த அத்தனையையும் கூற நேரமில்லை, இந்தி ஒழியட்டும், அண்ணேன், பிறகு பேசிக் கொள்வோம், மற்றவைகளை.

(திராவிட நாடு - 5.9.48)