அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இரணியன் அல்லது இணையற்ற வீரன்

தடையைமீறி நடித்தனர் தோழர்கள்
மூன்றுமாதம் மூன்று வாரமும்
சிறைத்தண்டனை

“இரணியன் அல்லது இணையற்ற வீரன்” என்ற நாடகத்தை நடித்த காஞ்சிபுரம் தோழர்கள் சம்பந்தன், கிருஷ்ணமூர்த்தி, நாராயணசாமி, கச்சபாலயம், எத்திராஜ், மார்க், சுப்பிரமணியம், சண்முகம், கணபதி, கோபால், இராசமன்னார், திருவத்திபுரம் பூங்காவனம், ஆகியவர்களுக்கு வந்தவாசி சப்மாஜிஸ்ரேட் கோர்ட்டில் மூன்றுமாதக் கடுங்காவலும் ரூபா 50.00 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட மறுத்தால் மேற்கொண்டு மூன்றுவாரம் சிறைவாசம் கிடைத்தது. தண்டனை அடைந்த தோழர்கள் அனைவரும் மலர்ச்சியுடன் சிறைக்கூடம் சென்றனர்.

வழக்கு விசாரணையின் போது, 143 ஐ.பி.சி. செக்ஷன்படியும், 1876 ம் ஆண்டு டிராமா ஆக்டு 196 ஏ செக்ஷன்படியும் குற்றவாளியாகிறீர்கள். இதற்கு என்ன சமாதானம் சொல்லுகிறீர்கள் என்று நீதிபதி கேட்டார்.

பூங்காவனம்: அந்த நாடகத்தில் என்ன குற்றம் கண்டு சர்க்கார் தடை விதித்தனர்.

நீதிபதி: அது சர்க்காருக்குத் தான் தெரியும்.

பூங்காவனம்: அப்படியானால் சட்டத்தை மீறவே நடித்தோம்.

சம்பந்தன்: தெரிந்துதான் ஆடினோம்.

கச்சபாலயம்: சட்டம் போட்டதே தப்பு; அதை உடைக்கவே நடித்தோம்.

நாராயணசாமி: எங்குமே இல்லாத இந்தச் சட்டத்தை உடைக்கத் தான் ஆடினோம்.

தோழர் எத்திராஜ்: தடை விதித்தது தெரியும். குற்றத்தைச் சர்க்கார் தெளிவுபடுத்தவில்லை. அதைப் பொதுமக்களுக்கு விளக்கவே ஆடினோம்.

இந்த விவாதத்துக்குப் பின்னர் நீதிபதி மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.

(திராவிட நாடு-19.9.48)