அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


திருவத்திபுரத்தில் இரண்யன் கைது

லீலாவதி-பிரகலாதனும் கைது
நரசிம்மசாமியும் சிறையில்

கவிஞர் பாரதிதாசன் அவர்களால் இயற்றப்பெற்ற இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகம், காஞ்சி சீர்திருத்த நாடக சபையின் அமைப்பாளரான தோழர் வெ.சம்பந்தன் அவர்களின் முயற்சியால், காஞ்சிபுரத்தில் இருந்து 18 கல் தொலைவில் இருக்கும் திருவத்திபுரம் (வடாற்காடு) என்ற ஊரில் 5.9.48 ல் நடைபெற்றது.

பதினைந்து ஆண்டுகளாகத் தமிழ்நாடு நாடெங்கும் பொதுமக்களின் ஆதரவோடு நடிக்கப்பெற்ற இந்த நாடகத்தை இன்றைய சர்க்கார் தடை செய்ததானது. மக்களின் எழுத்துரிமையையும் அறிவு வளர்ச்சியையுமே தடை செய்கின்றனர் என்பதைப் பொதுமக்களுக்கு உணர்த்தவும், தமிழ் மக்களின் நியாயமான உரிமையைப் பாதுகாக்கவுமே, சர்க்காரின் தடையுத்தரவையும் பொருட்படுத்தாமல், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள், தனிப்பட்ட முறையில் இந்த நாடகத்தை நடத்தினர் என்று தெரிகிறது.

மேற்படி நாடகம் சர்க்காரால் தடை செய்யப்பட்ட தென்பதை ஏற்கெனவே தெரிந்திருந்த மக்கள் ஐயாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் திருவத்திபுரத்தில் அன்று காலையில் இருந்தே கூடிவிட்டனர்.

ரிசர்வ் போலீஸ் படையும் லாரி சகிதம் வந்து தயாராக இருந்தது.

அன்று பிற்பகல் போலீஸ், தண்டோரா மூலம் ‘இந்நாடகம் தடை செய்யப்பட்டிருக்கிறதென்றும், பொதுமக்கள் அதனைப் பார்க்கக் கூடாதென்றும் விளம்பரம் செய்தனர்.

இரவு ஒன்பது மணிக்கு நாடகம் தொடங்கி நடைபெற்று மூன்று காட்சிகள் முடிந்து நான்காவது காட்சி நடக்கும்போது போலீசார் வந்து நடிகர்கள் பதினொரு பேரையும் அமைப்பாளரையும் கைது செய்து லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

நடிகர்கள், இரணியன் வேஷத்திலும் பிரகலாதன் வேஷத்திலும், நரசிம்ம வேஷத்திலும் மற்றும் நடிகர்கள் அவரவர் வேஷங்களிலும் போலீஸ் லாரியில் ஏறிச்சென்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

நடிகத் தோழர்கள் கைது செய்யப்பட்டதும் அங்கு குழுமியிருந்த ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்களைத் தோழர்கள் காஞ்சி கலியாணசுந்தரனும், வி.கண்ணப்பரும், புலவர் கோவிந்தனாரும் ஊர்வலமாக அழைத்துவந்து அமைதியாகச் செல்லுமாறு கேட்டு கொண்டதற்கிணங்கக் கூட்டம் எவ்வித கலவரமுமின்றிக் கலைந்து சென்றது.

கைது செய்யப்பட்ட நடிகத் தோழர்கள் திருவத்திபுரத்திலுள்ள சப்ஜெயிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதான தோழர்களின் விபரம்:

திருவத்திபுரம் தோழர் ப.சு.பூங்காவனம் (அமைப்பாளர்)

நடிகர்கள்:-
காஞ்சிபுரம் தோழர்கள்
வெ.சம்பந்தன் -இரணியன்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி-சேனாதிபதி
எம்.சண்முகம் நரசிம்மசாமி, காங்கேயன்
பி.கச்சபாலயம்-சித்திரபானு
எம்.கணபதி-பிரகலாதன்
வி.கோபால்-கெஜகேது
எம்.இராசமன்னார்-லீலாவதி
கே.சுப்பிரமணியம்-மகிரிஷி
இ.எத்திராஜ்-தூதுவன்
வி.என்.மார்க்கு-தூதுவன்
பி.நாராயணசாமி-மந்திரி

சர்க்காரின் அடக்கு முறையைக் கண்டு வேதனைப்பட்ட பொதுமக்கள், இந்த நாடகத்தை இன்னும் பல ஊர்களில் நடத்திச் சர்க்காரின் கொடுங்கோல் ஆட்சி முறையைப் பொதுமக்கள் உணரும்படி செய்யவேண்டுமென்று பேசிக்கொண்டனர்.

(திராவிடநாடு-12.9.48)