அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இரட்டைக் குழல் துப்பாக்கி!

அம்மணியம்மாளின் அறுந்த தாலி பானுவின் ஓடிந்த விரல்கள் - நம்பியாரின் இரத்தம்.

தியாகராஜன் ராமச்சந்திரன்-தங்கவேலு-ராஜு - நால்வரின் பிணங்கள்.

ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறையில்.

பல இடங்களில் தடை உத்தரவு தடி ஆடி துப்பாக்கிப் பிரயோகம்

இவைகளைக் கண்டோம் பொதுஜன சர்க்கார் நடக்கும் புனித நாட்களில்

இவ்வளவு காரியத்தையும செய்தது, சரி, என்று பேசும் தலைவர்களைக் காண்கிறோம்.

இது அடக்குமுறை அல்ல, தொழிலாளர் களைக் கம்யூனிஸ்டுகளிடம் சிக்காதபடி மடக்கும் முறை - தடுத்து இட்கொள்ளும் முறை என்று தேசியப் பத்திரிகைகள் எழுதியதைப் பார்த்தோம்.

இவ்வளவுக்கும் சிகரம் வைத்ததுபோல, இப்போது எல்லாக் காங்கிரஸ் எடுகளும், வேலை நிறுத்தம் நின்றுவிட்டது - வாபஸ் வாங்கிவிட்டனர் என்று எழுதித் தொழிலாளர்கள் தோல்வி அடைந்தனர். கம்யூனிஸ்டுக் கட்சி கவிழ்ந்துவிட்டது காரியம் பலிக்கவில்லை என்றும் தீட்டிவிட்டன.

மக்கள் மனத்திலே, வேலை நிறுத்தம் தோற்றுவிட்டது என்ற எண்ணம் பலமாகப் பதிய வேண்டும் என்பதற்காக அப்பத்திரிகைகள், கொயபிள்ஸ் கூச்சப்படும் விதத்திலே தப்புப் பிரச்சாரத்தைத் தாராளமாகச் செய்கின்றன.

நடந்தது என்ன? நிலைமை என்ன?

வேலை நிறுத்தம் நின்றுவிட்டது - நிறுத்தப்பட்டுவிட்டது - இத்திங்கள் 23ந் தேதி, தஞ்சாவூரில் கூடிய ஸ்ட்ரைக் கமிட்டியார் வேலை நிறுத்தத்தை நிறுத்திவிடும்படி தீர்மானம் நிறைவேற்றினர் - வேலைக்குச் செல்கிறன்றனர் தொழிலாளர்கள்.

இதற்குத்தான், படுதோல்வி - புத்தி வந்தது - தகர்ந்தது - என்று பலப்பல மொழிகளை வீசியுள்ளன காங்கிரஸ் ஏடுகள்.

படுதோல்வி அடைந்ததாகச் சொல்லப்படும், பாட்டாளிகளே கூடப் படித்தால், உண்மையாகவே தோற்றுத்தான் போய் விட்டோமோ என்று சந்தேகம் கொள்வர். அவ்வளவு அபாரமான திறமையிலே, பிரச்சாரம் நடைபெறுகிறது.

“வந்தீர்களா! வாங்கய்யா வாங்க” என்று அழைக்கிறார் வேலை நிறுத்தக்காரரை, வேலை நிறுத்தத்தில் சேராதவர், ஒரு கேலிப் புன்னகையுடன்.

தோல்வியடைந்த தொழிலாளி துயரும் வெட்கமும் பின் தொடர, வேலைக்கு வந்து சேருகிறான் என்பது, பிரச்சாரப் போதையால் மயங்கிய அந்த மாகானுபாவரின் எண்ணம்.

வேலை நிறுத்தம் என்ன ஆயிற்று தெரியுமா! என்ற வாயில் குழையும் வெற்றிலைச் சாறுடன் சரசமாடியபடி கேட்கிறார் உணவு விடுதியில் உள்ள உத்தமர். சூடான காப்பியின் சுவை அறியக் காத்திருக்கும் அன்பர் “என்ன ஆகும் சாமி! நம்ம காங்கிரசிடம் போட்டி ஈட்டா நடக்குமா?” என்று அனுபல்லவி பாடுகிறார்.

தொழிலாளி தோற்றான் - வேலை நிறுத்தம் முறிந்தது - கம்யூனிஸ்டுக் கட்சி கவிழ்ந்து - இதுவே புதிய பிரச்சாரம் - பலமான பிரச்சாரம்.

வேலை நிறுத்தம் நின்று போனது உண்மை - நிறுத்தப்பட்டது உண்மை - ஆனால், தொழிலாளர்கள் தோற்றனர் என்பது, உண்மையா? விஷயத்தைக் கவனித்துவிட்டு, முடிவுக்கு வரவேண்டும், பொதுமக்கள்.

வேலை நிறுத்தம் ஏன் ஏற்பட்டது? கூலி உயர்வுவக்கு அல்ல, லீவு வசதிக்கு அல்ல! குறிப்பிட்ட வேறோர் காரணத்துக்காக.

தொழிலாளர்களை, நீக்குவது என்பது, முதலாளியின் இஷ்டம் சில்லறை இடங்களில்.

“வேண்டாம் போ! நாளை முதல் வாசற்படி ஏறாதே! கணக்குத் தீர்த்தாகிவிட்டது என்பான் முதலாளி.

“ஏன்? நான் என்ன தவறு செய்தேன்?” என்று பணிவுடன் கேட்பான் பாட்டாளி.

“ஓ! இவருக்குக் காரணம் வேறு சொல்லவேண்டும் போலிருக்கு போடா என்றால் போயேண்டா....” என்பார் முதலாளி விடுபட்ட இடத்தில், முதலாளியின் விதத்துக்கு ஏற்படி வார்த்தைகள் வசைவுகள் இருக்கும்.

தொழிலாளியின் வாழ்வு, முதலாளியின் நாக்கு நுனியில் இருந்து வந்தது. காணரம் கேட்கக்கூடாது. வேலை இல்லை என்றால் இல்லைதான் ஐயா சொன்னால் சொன்னதுதான்!

இந்த முறை சங்க ரீதியாக இருக்கும் தொழில் ஸ்தாபனங்களில் இருப்பதென்றால், ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்களின் ஜீவாதார உரிமை பாழ்படும்.

கிளர்ச்சி ஏன்?
தென் இந்திய ரயில்வேயில் நாற்பதாயிரத்துக்கு மேல் தொழிலாளர்கள் உள்ளனர் அவர்கள், காரணம் காட்டாமலும், குற்றம் சாட்டப்பட்டால், விசாரணை நடத்தாமலும், தொழிலாளரை வேலையை விட்டுநீக்கக்கூடாது, விசாரணை நடத்தியாக வேண்டும் என்று கேட்டனர்முடியாது என்றது ரயில்வே நிர்வாகம், விசாரணையின்றி வேலையை விட்டு நீக்குவதும் தண்டிப்பதும் மிகக் கொடுமையான முறை. அது தொழலிலாளரின் உயிர்ப் பிரச்சனையையே பாதிக்கும். ஆகவே, அந்த முறையை மாற்றாவிட்டால், நாங்கள் வேலை செய்யமாட்டோம் என்றனர். தொழிலாளர்கள், வேலைநிறுத்தம் நடந்தது. ஒரு மாதகாலமாக இப்போதுத வேலைநிறுத்தம் நிறுத்தப்பட்டது, ஸ்ட்ரைக் கமிட்டியினரால்.

ரயில்வே மெம்பர், ஜனாப் இசப் ஆலி, குறையைத் தீர்த்துவைப்பதாக உறுதி கூறினதால், வேலை நிறுத்தத்தை விட்டு விடுகிறோம் என்றுதான், தஞ்சாவூரில், ஸ்ட்ரைக் கமிட்டியார் கூறினர்.

“இது ஒரு வாதமா! கண் துடைக்கும் வித்தை! மீசையில் மண்படவில்லை என்று பேசும் முறை ஆதெல்லாம் தோல்வி, தோல்விதான்” என்று வியாக்கியானக் கர்த்தாக்கள் கூறிவிட்டனர்.

ஸ்ட்ரைக் கமிட்டி கூறுவதையும் விட்டு விடுவோம், காங்கிரஸ் எடுகள் எழுதியதையும் விடுவோம், கொஞ்சம், நாமாகச் சிந்திப்போம் என்று பொதுமக்கள் முயற்சிக்கவேண்டும்.

எந்தக் குறை போகவேண்டுமென்று கிளர்ச்சி நடத்தப்படுகிறதோ, அந்தக் குறை போக்கடிக்கப்பட்டால், கிளர்ச்சி வெற்றி பெற்றது என்று பொருள். இதற்கு வாதம், சிபார்சு தேவை இல்லை - தெளிவாகத் தெரியக்கூடியது. கிளர்ச்சி நின்றபிறகு கூட, குறை அப்படிú இருக்குமானால், கிளர்ச்சி செய்தவர்கள் தோற்றனர் என்று பொருள்.

இது நினைவிலிருக்கட்டும், பிறகு தீர்ப்பளிக்கட்டும்.

புதுடில்லிச் செய்தி இது. குறையைப் பரிசுரிக்கும் அதிகாரம் பெற்றர் வீற்றிருக்கும் இடத்திலிருந்து கிடைக்கும் செய்தி - நம்பியார் பிரஸ் சர்வீஸ் அல்ல - சுதேசமித்திரன் செய்தி.
“எந்த ரயில்வே தொழிலாளியையும் வேலையிலிருந்து நீக்கு முன் அந்தத் தொழிலாளி தனது வாதத்தை தகுந்த அத்தாட்சிகளுடன் தகுந்த ஆதிகாரியிடம இலாகா விசாரணையின்போது எடுத்துக் கூறிய பிறகு அவ்வித நடவடிக்கை எடுத்தக்கொள்ள வேண்டுமென்ற முக்கியமான உரிமையை மத்திய ரயில்வே போர்டார் தொழிலாளருக்கு அளிக்க முடிவு செய்கின்றனர்.”

இப்போது சொல்லுங்கள் தோல்வியா, தொழிலாளருக்கு என்று
காரணமின்றி வேலையினின்றும் நீக்கக்கூடாது - விசாரணை நடத்தியாகவேண்டும்.- இதுவே, தென் இந்திய ரயில்வே தொழிலாளர் கோரிக்கை, கிளர்ச்சிக்குக் காரணம் இதுவே, வேலை நிறுத்தமும் இதற்குத்தான்.

இனி, வேலையை விட்டு நீக்குவதானால், விசாரணை நடத்துகிறோம் - விசாரணை வைக்காமல் வேலையிலிருந்து யாரையும் நீக்கமாட்டோம என்று, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துவிட்டது. கோரினது கிடைத்து விட்டது-

கிளர்ச்சி பலித்துவிட்டது - தொழிலாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர் - ஆனால், விலைகொடுத்தது அதிகம். நம்பியாரின் இரத்தம் - நால்வரின் பிணங்கள் - பானுவின் ஓடிந்த விரல், அம்மணியம்மாள் தாலி, ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சிறையில் தடியடி, துப்பாக்கிப் பிரயோகம் முதலியன.

இந்த வெற்றியைத் தான் தோல்வி என்று தேசியப் பத்திரிகைகள் எழுதுகின்றன!

“வேலைநிறுத்தம் ஒழிந்து போச்சு சார்!”

“ஆமாம் சார்! விசாரணையில்லாமல் டிஸ்மிஸ் செய்கிற கொடுமை ஒழிந்தது. வேலைக்குத் திரும்பிவருகிறோம்.”

இப்படித்தான் உரையாடல் இருக்க நேரிடும், ஆனால், காலையில் கோழியுடன் எழுந்து இரவு கோட்டான் கூவும்வரை பாடுபட்டுழலும், பாட்டாளி, பட்டணத்திலே, கொலுவீற்றிருக்கும், “ஆசிரியர்களை” எப்படிச் சந்திக்க முடியும்! ஆசிரியரைக் காண இபீஸ் பையன் அனுமதிப்பானோ அல்லது அவர், அகில உலக சமாதான மாநாடு பற்றிய அருமையான தலையங்கம் தீட்டிக்கொண்டிருக்கிறார் பார்க்க அவகாசம் இல்லை என்று கூறிவிடுகிறானோ, யார் கண்டார்கள். அவர்கள் பெரியவர்கள்! மகத்தான பணியில் ஈடுபட்டவர்கள் மார் உடையப்பாடுபடும் பாட்டாளியா?

வெற்றி, தோல்வி விஷயம் ஒருபுறம் இருக்கட்டும், பொது மக்கள் இந்த வேலைநிறுத்தக் காலத்திலே, தொழிலாளர்கள் அடைந்த வேதனையைக் கொஞ்சம், மனிதாபிமானத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம். எவ்வளவு மனமறிந்த பொய்ப் பிரச்சாரத்தினாலும், பலமான அடக்குமுறையினாலும், தொழிலாளத் தோழர்கள் தாக்கப்பட்டனர், என்பதையும், இவ்வளவு பெரிய கொந்தளிப்பை எவ்வளவு எளிதாகத் தேசியப் பத்திரிகைள் தெரிய வொட்டாதபடி தடுத்துவிட்டன என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

தொழிலாளர்களும், தங்கள் சக்தியை முறியடிக்க யாரார் கச்சையை வரிந்து கட்டிக் கொண்டள்ளனர் என்பதையும் உணர வேண்டும். ஏனெனில் இப்போது, இந்நாட்டில் புதியதோர் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. விழிப்புற்ற தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரிடையாக நிற்பது இடுப்பொடிந்த, ஏகாதிபத்தியமல்ல, முறுக்கேறிய, மூலபலம் உள்ள, பக்க பலம் மிகுந்த “தேசியம்” அன்புடன் சொந்தங் கொண்டாடிப் பாட்டாளிகளே வளர்த்த தேசியம், தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் இது எதிர்பாரா விபத்து. எங்கும் ஆதரவு கிடைக்குமென்று அவர்கள் மனமாற நம்பினார்களோ அதே இடத்திலிருந்து, எதிர்ப்பு! தேடி எடுத்த தேன் குடத்திலிருந்து தேள் கிளம்பிக் கொட்டுகிறது. தேசியம் நாஜிசமாக மாறுகிறது.

முன்பெல்லாம், தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்தால், வேலை நிறுத்தம் ஏற்பட்டால் சட்டம் சமாதானம் ஒழுங்கு அமைதி என்ற காரணம் கூறிக்கொண்டு, அதிகார வர்க்கம் அமுல் நடத்தும் 144 செக்ஷன் பிறக்கும் தடியடி துப்பாக்கிப் பிரயோகம், சிறை முதலியன நடைபெறும் தொழிலாளர்கள் இவ்வளவு தாக்குதல்களையும் சமாளித்தாக வேண்டும் - முடிந்தது - வெற்றிகரமாகவே முன்னேறிச் சென்றனர். அவர்கள் மீது சட்டம் சீறியபோது, அடக்குமறை வீசப்பட்டபோது, அவர்களிடம் அன்பு காட்டவும், ஆதரவு தரவும் அவர்களுக்காகப் பரிந்து பேசவும். பொதுமக்கள் முன்வந்தனர். எனவே, அந்தப் பலத்தைத் துணையாகக் கொண்டு அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் சக்தி தொழிலாளர்களுக்கு இருந்தது. பட்டினிடூ கொடுஞ்சிறையில் இருக்கமுடியாது என்று பரணி பாடிக்கொண்டு எழுந்தனர் பாட்டாளி மக்கள். அவர்களுடைய விடுதலைக்காக மக்கள் ஆதரவு திரட்டித் தந்தனர் - அனுதாபப்பட்டனர்.

கத்தி வீச்சைத் தடுக்கக் கேடயம் இருந்தது! குண்டு பாய்ந்து செல்ல முடியாத கவசம் கிடைத்தது. போரிடுவதற்குத் தேவையான ஆர்வம் தருவதற்கு வீரரசம் தரப்பட்டது. எனவே, அவர்களால், தாக்குதல்களைச் சமாளிக்க முடிந்தது.

இப்போது நிலைமை வேறு, மாறிவிட்டது, விபரீதமான முறையில், வேதனையான விளைவுகள் ஏற்படும் முறையிலே.

இப்போது, தொழிலாளர்மீது இரட்டைக்குழல் துப்பாக்கி பிரயோகிக்கப்பட்டது.

பிரச்சாரப் பீரங்கி
சர்தார் வல்லபாய் படேல், இடைக்கால சர்க்காரிலே, போலீஸ் பாதுகாப்பும், ரேடியோவும் சேர்த்துக் தமது இலாகாக்கள் அக்கிக் கொண்டிருக்கிறார். அதாவது, அடக்கும் சக்தி, அறிவிக்கும் வசதி இரண்டும் அவரிடம், போலீசையும் ரேடியோ மூலம் பிரச்சாரத்தையும் ஏககாலத்தில் வேலை வாங்கும் வசதியை அவர் பெற்றிருக்கிறார்.

படேல் மட்டுமல்லர், காங்கிரஸ் ஆட்சி செய்யும் இடங்களிலெல்லாம், இதே போலத்தான் - இரட்டைக் குழல் துப்பாக்கி தயாராக இருக்கிறது - போலீஸ், பிரச்சாரம் இரண்டும் தயாராக உள்ளன.

முன்பு இருந்த ஆட்சியாளர்களிடம், இந்த இரட்டைக்குழல் துப்பாக்கி கிடையாது. போலீசைக் கொண்டு அடக்குவர் பாட்டாளிகளின் கிளர்ச்சியை. ஆனால், ஊடனே பிரச்சாரப் பீரங்கிகள் முழங்கத் தொடங்கும் ஆட்சியாளரை நோக்கி.
பொன்மலையில் போலீஸ் ஆட்டூழியம்
காட்டுமிராண்டிப் போக்கு
கண்மூடித்தர்பார்
இரத்தவெள்ளம்! பிணவரிசை!

என்று பிரச்சார வேட்டுகள், கிளம்பும் வேக வேகமாகப் புதுப்புது அளவில் முறையில், ஆட்சியாளர்கள் திகைக்குமளவு, நாடு அல்லோலகல்லோலமடையுமளவு நாள் ஒன்றுக்கு நாலு அறிக்கை வெளியிட்டாலும், சர்க்காரால் சமாளிக்க முடியாதபடியான வதந்திகள் பரவும், கடைவீதி, தெருத்திண்ணை, காப்பிக்கடை, கதர்க்கடை, கோயில் குளத்தங்கரை, ஆடுப்பறை, படுக்கையறை, இசைமன்றம், கூத்துக் கொட்டகை, கடற்கரை, மலைஊச்சி, எங்கும் போலீஸ் அடக்குமுறை - தொழிலாளர் படும் துயரம் - பற்றியே பேச்சு கண்டனர். இருக்கும் - வளரும் - ஓங்கி வளர்ந்தபடி இருக்கும்.

“இன்று நமக்குக் கிடைத்திருக்கும் தகவல், பூரணமானது அல்ல வென்றாலும், நம்பிக்கை யான இடத்திலிருந்து கிடைத்திருக்கிறது அதனைக் காணும்போது ஏவரும் இரத்தக்கண்ணீர் சொரிவர் ஏழைத்தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 70 பேருக்கு மேல் மாண்டுபோனதாக அறிகிறோம். 7-வயதுச் சிறுமியும் 70 வயதான மூதாட்டியும் பிணமாயினராம்.
என்ற உருக்கமான செய்தி கொட்டை எழுத்தில் வெளிவரும் ஊர் கொதிக்கும், படிப்போர் உள்ளம் வெடிக்கும், இயற்கை, செய்தியைப் படிக்கும் பாட்டாளி உலகு, உயிரைப் பணயம் வைத்தாகிலும் உரிமைப் போரை நடத்தியே தீரவேண்டும் என்று உறுதிக் கொள்ளும்.

மறுதினம், மூலையில் கடுகு எழுத்திலே முன்னாள் அறிக்கைக்கு மறுப்பு இருக்கும். அதுவும் பிரச்சார முறைப்படியே பதிப்பாகி இருக்கும. “70 பேர் இறக்கவில்லை - 7 பேர் தான்” என்று போலீஸ் இலாக்க அறிக்கை அனுப்பி இருக்கும். பத்திரிகை அதை வெளிட்டிருக்கும் - வெளியிடாமலிராது - ஆனால் எப்படி?

70 பேர் அல்லவாம்!
போலீஸ் இலாக்கா
மழுப்பல்
படுகொலைக்குப் பசப்புப் பேச்சு!

என்று தலைப்புகள் இருக்கும்! அதாவது அதனைப் படிக்கும் போலீஸ் ஆதிகாரியே, “ஏன் இந்த அறிக்கையை அனுப்பினோம். இந்தப் பாழாய்ப் போன பத்திரிகைக்காரன். இதை வைத்துக்கொண்டு வேறு, கதை அளக்கிறானே” என்று ஆயாசப்படுவார் - அதுபோலக் கிளம்பும் பிரச்சாரக் குண்டு வீச்சினால், போலீஸ், சட்டம் என்பவை பயப்படவேண்டிய நிலை பிறக்கும். தொழிலாளர்களுக்கு வெற்றிவரும் விழா நாளில் பிரச்சாரப் பீரங்கிப் படையினருக்கு வாழ்த்துதல் வணக்கம் தெரிவிக்கப்படும்.

இந்தப் பிரச்சாரம், கேடயமாக - கவசமாக இருந்து வந்தது தொழிலாளர்களுக்கு, அதே சமயத்தில் இந்தப் பிரச்சாரம் பலமான பீரங்கியாக இருந்தது. அதிகாரவர்க்கத்தைத் தாக்க.

இந்த நிலைமை ஈரந்தபோது, அதிகார வர்க்கதிடம் ஒரே ஆயுதம் இருந்தது போலீஸ்.

தொழிலாளர்களின் சார்பிலே பிரச்சாரப் பீரங்கிப் படை சகிதம் நின்றனர் காங்கிரசார்.

பிரச்சாரம் வென்றது, போலீசால் முடியவில்லை.

பிரச்சாரத்தின் பலனாகப் போலீசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கசப்பும் வளர்ந்தது.

இந்த வசதி இன்று தொழிலாளருக்கு இல்லை. இதனை அவர்கள் உணர்ந்தாக வேண்டும்.

புதிய பலம்
உண்மை, அதுமட்டுமல்ல, பயங்கரமான உருவில் இருக்கிறது உண்மை. இப்போது இரண்டு வகையான ஆயுதங்களும், போலீஸ், பிரச்சாரம் இரண்டும் ஒரே நேரத்தில் உள்ளன. ஆம்! இரட்டைக்குழல் துப்பாக்கி நீட்டப்படுகறிது தொழிலாளர் இயக்கத்தின் இருதயத்தின் மீது இன்று, காங்கிரசே ஆட்சி செய்கிற. எனவே, போலீசை வைத்துக் கொண்டிருக்கிறது, பிரச்சாரமும் காங்கிரசமிடமே இருக்கிறது. எனவே கேடயம், கவசம் பறிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர் இயக்கம், இரட்டைக் குழல் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருக்கும் காங்கிரசிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது. சிரமமான நிலைமை! ஆபத்தானதுங்கூட!

ஆட்வைசர்களோ, வேறு ஆட்சியாளர்களோ, பாட்டாளிகளை அடக்க அடக்குமுறையே உபயோகித்தனர் என்றாலும், அவர்கள் எங்கே, தங்களை ஆம்பலத்துக்கு இழுத்து வைத்து, மக்களின் அத்திரத்தை கிளப்பி விட்டு, நாட்டிலே ஆபத்து மூண்டுவிடும்படி செய்துவிட, பிரச்சாரப் பீரங்கி சகிதம் காங்கிரசார் கிளம்பிவிடுகின்றனரோ என்று பயப்பட வேண்டிய நிலைமை இருந்தது.

இன்று அந்த அச்சம் ஆள்பவர்களுக்கு இல்லை - ஏன்? ஆள்வது காங்கிரஸ் - அதனிடம் போலீசும் இருக்கிறது பத்திரிகையும் இருக்கிறது - இரட்டைக்குழல் துப்பாக்கி!

அந்தத் தைரியத்தினாலேதான், தொழிற் சங்கங்களை குறிப்பாக சிவப்புக் கொடி, பறக்கும் சங்கங்களைத் தரைமட்டமாக்க முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது - முயற்சிக்கிறது - ஆரம்ப வெற்றிகூட அடைந்திருக்கிறது.

பிரச்சார பலம் வேறொருவர் கையிலே இருக்கிறதே என்ற பயத்தால், முன்பு ஆட்சி செய்தவர்கள், அடக்க ஒடுக்கமாக, சமாதானம் சொல்லும் முறையில்கூடப் பேசினர் - குழைவு, நெளிவு, மறைவு இருந்தன போகிற போக்கில்,

காங்கிரசுக்கு அந்தக் கவலை இல்லை. அதன் கரத்திலே, இருட்டடிப்பு உண்டாக்கும் சக்தி இருக்கிறது - மக்களின் கவனத்தை வேறுபக்கம் திருப்பும் வசதி இருக்கிறது - தன் விருப்பத்தின்படி மக்கள் நினைக்கும்படி செய்யும் வல்லமை இருக்கிறது - எனவே பேச்சும் போக்கும், அழுத்தந் திருத்தமாக, நெரித்த புருவத்தினரின் நெருப்புப் பொறிப்பேச்சாக இருக்கிறது - மறுப்பு கிடையாது - மறைவுகூடக் கிடையாது.

“நம்பியாருக்கு மண்டையில் ஆடியாமே”
“ஆமாம்!”
“ஏன்?”
“அடிவிழும் இடத்துக்கு அவர் போனதால்!”
“இது அக்ரமமல்லவா?”
“அமைதியை நிலைநாட்டச் சிரமப்பட்டு, நமது போலீஸ் படை எடுத்துக் கொண்ட திறமையான, முறைமையான காரியம் அது.”
“நம்பியார் என்ன குற்றம் செய்தார்?”
“எவ்வளவோ! என்னையே கண்டபடி திட்டினார்”
“யார் தெரிவித்தார்கள்?”
“நமது போலீஸ் இலாக்காவினர்! ஏன் மண்டையை உடைப்பதாகச் சொன்னராம்.”
“அதற்காக”
“அவர் போலீசார் அமைதியை நிலை நாட்டும் நேரத்தில் குறுக்கிட்டார். போலீசார் தங்கள் கடமையைச் செய்தனர். நீரே சொன்னீரே மண்டை உடைந்துவிட்டது என்று, ஏன் அந்த நம்பியார், அந்த இடத்துக்குப்போக வேண்டும்.”
கேள்வியும் பதிலும் இவ்விதம்! பிரச்சாரப் படையில்லாத ஆட்சி இருந்தபோது, இதுபோலப் பேசமுடியாது.
மாலையிலே, இதழ்கௌல்லாம் என்ன எழுதின.
“பிரகாசம் சுடச் சுடப் பதில் கொடுத்தார்!”
“இணித்தரமான பதில்”
“வீர கர்ஜ்ஜனை புரிந்தது இந்திர கேசரி”
“பொது உடைமைக்காரர்களின் போக்குக்குக் கண்டனம்”
இவ்விதம் ஆர்ச்சனைகள்!

ஆட்வைசர் காலமாக இருந்தால், இப்படிக் கேள்வியும் பதிலும், பத்திரிகை புகழ்மாலையும் இருக்குமா!

இரட்டைக்குழல் துப்பாக்கி இருக்கிறது என்பதைத் தோழர்கள்,ரயில்வே வேலை நிறுத்தத்தின்போது உணர்ந்து கொண்டனர்.

இத்தகையை இரட்டைக்குழல் துப்பாக்கியின் துணைக்கொண்டு நடத்தப்படும் ஆட்சிக்குத்தான், நாஜிசம் என்று பெயர்! அதன் தாக்குதலைப் பாட்டாளி உலகு தாங்கவேண்டும் - நிச்சயமாகத் தாங்கமுடியும் என்று மட்டுமல்ல இறுதியில் இரட்டைக்குழல் துப்பாக்கியின் குண்டுகள் தீர்ந்து போய், களத்திலே அதனைப் போட்டுவிட்டு ஓடுமளவுக்கு, நாஜிசத்தைப் பாட்டாளி வர்க்கம் முடியடிக்கத்தான் போகிறது என்பதிலே நமக்குத் துளியும் சந்தேகமில்லை.

இரு முனைகள்
ஏம்மிடம் போலீசும் இருக்கிறது - அது மட்டுமல்ல, பொதுமக்களின் மனத்தைத் தயாரிக்கும் மந்திரக்கோலான, பிரச்சாரமும் இருக்கிறது. ஆகவே, கபர்தார் என்று கூறுகின்றனர் நாடாள்பவர்கள்.

வேலை நிறுத்தத்தின்போது, எவ்வளவு திறமையாக இந்த இரட்டைக்குழல் துப்பாக்கி வேலை செய்தது என்பதை ஆராய்பவர்கள் ஆச்சரியமடைவர்.

ஒன்பதுபேர் கைது

என்று ஒரு துண்டு இருக்கும் - போலீஸ் இலக்காவின் சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டு.

அதன் அடியிலே வேறோர் செய்தி வரும்.

500 பேர் வேலைக்குத் திரும்பினர்.

என்ன இதன் பொருள்? பல! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உபதேசம் இதன் மூலம்.

தொழிலாளர்களே! பிடிவாதம் செய்தால் பிடிபடுவீர்கள். அந்த ஒன்பது பேரைப்போல தண்டோபாயம்!

தொழிலாளர்களே! 500 பேர் திரும்பி வேலைக்கு வந்துவிட்டனர், நீங்கள் ஏன் வீணாக வேலை நிறுத்தம் செய்கிறீர்கள் வந்துவிடுங்கள் முயற்சியில் பலனில்லை பேத உபதேசம்!

இப்படி இரட்டைக் குழல் துப்பாக்கி வேலை செய்கிறது.

வேலை நிறுத்தத்தை ஆதரித்துப் பேசுபவர்களுக்கு, வாய்ப்பூட்டு! வேலை நிறுத்தம் கூடாது என்று பேசுபவர்களுக்குப் பத்திரிகைகளிலே தாராளமாக இடம்!

இவ்விதமாக, இரு முனைகளிலும் தாக்குதலை நடத்த முடிந்தது.

இது தங்கள் ஒப்பற்ற பலத்தைக் காட்டுவதாகும். இனி ஏவரும் தமக்கு ஈடு எதிர் கிடையாது. தமது மகத்தான சக்திக்கு முன்பு எந்த இயக்கமும் மண்டியிட்டே ஆகவேண்டும் என்ற எண்ணம் திண்ணமாக வரும் காங்கிரசுக்கு. ஆனால், உண்மை முற்றிலும் வேறாக இருக்கும்.

எதனை, பலம் என்று கருதுகிறார்களோ, அதுவே தங்கள் நிலைமையின் பலவீனத்தைக் காட்டும் அறிகுறி என்பதை, இர ஆமர இருந்து யோசிக்கும்போது காங்கிரஸ் ஆட்சியாளர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம்.

குறிப்பேடு எடுத்துக் கணக்குப் பார்த்தால் தெரியும்.

வேலை நிறுத்தத்தை நடத்தியவர்கள் யார்? முதலமைச்சரின் வாக்குமூலப்படியும் அவருடைய கூட்டுத் தோழர்கள் உரையின்படியும், நாடாளாத நம்பியார், சுக ஜீவனம் இல்லா ஜீவா, முதலாளிகளின் ரகனைகளைத் தாங்கித் தவிக்கும் ராமமூர்த்தி இப்படிச் சிலர்!

தேசியப் பத்திரிகைகளின் மொழியிலே கூறவேண்டுமானால், தோழர்கள், அது கேலிச் சொல்லாம்!
இவர்கள், தேசோத்தாரகர்கள் - கேசரிகள் அல்ல

இவர்களில் பலருடைய உருவப்படத்தை ஊரார் பார்த்திருக்க முடியாது, பத்திரிகைகளில்.

புகழ் பரப்பப் பத்திரிகையோ, செல்வாக்குப் பெற்றுத் தர சேவகர்களோ, கிடையாது.

அவர்கள் கர்ஜனை செய்ததாகவோ, அவர்களைக் கண்டு, “ஏகாதிபத்திய சிங்கம் பயப்பட்டதாகவோ” பத்திரிகை அலங்காரப் பூச்சு கிடையாது.

ஊர்பேர் அறியாதவர்கள் - பாமரரின் பாஷையிலே பேசுகிறோம். அவர்கள் ஆன்னக்காவடிகள் அவர்கள் நடத்தினர் வேலை நிறுத்தத்தை!

ஆகஸ்டு புரட்சித் தலைவி அருணா இசப் ஆலி, இந்திரகேசரி பிரகாசம், இந்திரப்புலி பட்டாபி, சமதர்மச் சிங்கம் ஜெயப்பிரகாஷ் நாராயண், தமிழ்நாட்டுத் தலைவர் காமராஜர், சட்டசபையிலுள்ள சகலரும், தினமணி, தினசரி, தேவி மித்திரன், விகடன், இந்து, இத்யாதி, இத்யாதிகள்! இவ்வளவு தலைவர்கள் - எதிரிடையாக!

இன்னும் என்ன வேண்டும் விளக்க?

போதவில்லை
இது மட்டும் போதவில்லை! “செல்வாக்கற்ற” தொழிலாளரைக் கெடுக்கிற - ரஷியாவிடம் மனத்தை ஆடகுவைத்த சிலர் வேலை நிறுத்தத்தைத் தூண்டினர் என்று நாட்டுத் தலைவர்கள், ஆட்சிப்பீடத்து அமர்ந்தவர்கள் - தீரர்கள், தியாகிகள், கூறி வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்று உபதேசம் செய்தனர்.

உண்மையிலே, செல்வாக்கற்றவர்களாக, அந்தச் சாமான்யர்கள் இருந்திருந்தால் என்ன நடைபெற்றிருக்கவேண்டும்? ஸ்பெஷல் போலீஸ் தேவைப்பட்டிருக்குமா? ஏறக்குறைய ஆயிரம்பேர் சிறையில் போட வேண்டிய நிலைமை பிறக்குமா? தடியடியும் துப்பாக்கிப் பிரயோகமும் நிலாச்சோறு போலாகி இருக்குமா!

தலைவர்கள் தாக்கீது வந்த அன்றே தலையங்கம் தீட்டித் தமது மகத்தான மதியைத் தேசியத் தாட்களின் பேனா வீரர்கள் வெளிப்படுத்திய ஊடனே, போலீஸ் தேவைப்படாமல், வேலை நிறுத்தம் புகைந்து போயிருக்கவேண்டாமா?

“ஒப்பற்ற தலைவர்கள்” மகத்தான புத்திமதியை, ஓய்வன்றிச் சொல்வந்தார்கள் - வேலை நிறுத்தமோ ஒரு மாதகாலம் நடைபெற்றுவந்தது, ஓராயிரத்து ஐந்நூறுமைல் உள்ள இருப்புப் பாதையை, இரும்புக் குல்லாய் தரித்த போலீசார் காவல்புரிந்தனர். இன்று இத்தனை பேர் கைது இன்று இந்த இடத்தில் தடியடி என்ற அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன! இதன் பொருள் என்ன?

“தலைவர்களின்” தாக்கீதுகள் தள்ளப் பட்டுவிட்டன. தேவையில்லாததால், நீதியல்ல வாகையால், தங்கள் உரிமையைப் பாழ்படுத்தும் முறையில் இருந்ததால்.

யாரை “ஆன்னக்காவடிகள்” என்று இளவந்தவர்கள் கேலி பேசினாரோ, அந்த உழைப்பாளிகள் சொல்கேட்டு, உயிரைப் பணயமாக வைத்து உரிமைக்காகப் போராடினர் ஒரு ஆயிரம், இரண்டாயிரமல்ல, ஏறக்குறைய நாற்பது ஆயிரம் மக்கள், ஒரு நாள் இரண்டு நாளல்ல, ஒரு மாத கால அளவுக்கு.

இது முதல் தோல்வி - எவ்வளவு மூடி மூடி வைத்தாலும், மறைக்கமுடியாத தோல்வி என்பதை முதலமைச்சரும், அவர் தம் குழாமும், உணரவேண்டும். அவர்கள் உணராவிட்டாலும், ஊரார் உணரட்டும்! அதுபோதும் அதுதான் தேவை.

தலைவர்கள் தாக்கீதுடன் நின்றுவிட வில்லை. எரெங்கும் காங்கிரசார் பிரச்சாரம் செய்தனர். வேலைநிறுத்தம் கூடாது என்று கண்டபலன்? தோல்வி!

பத்திரிகைகள் முழுமூச்சாகக் கண்டித்தன - பலன்? தோல்வி!

மற்றவர்களைப் போல நாங்கள் மக்களின் கிளர்ச்சியை அடக்கப் போலீசை - அதிலும் மலபார் போலீசை அழைக்கமாட்டோம் - மக்களை நாங்கள் நன்கு அறிவோம் - அவர்களிடம் இதமாக விஷயத்தை விளக்குவோம் - அடக்குமுறையை அனுஷ்டிக்கமாட்டோம் - இது பதவி புகுமுன் இருந்தப் படலம் வேலை நிறுத்தம் மும்முர மானதும், நடந்தது என்ன? தலைவர்கள் தங்கள முன்னாள் பேச்சின்படி, நடக்க முடியவில்லை. போலீஸ் தேவைப்பட்டது தோல்விதானே!!

போலீஸ் வந்ததோடு முடியவில்லை நீடித்தது தோல்விதானே!

பொது உடைமைக்காரர்களின் தொல் லையே இவ்வளவுக்கும் காரணம். பிடி அவர்களை என்றனர். பேசிப் பேசிக் களைத்து, ஓடி ஓடி அலுத்துப்போன அந்தத் தோழர்கள் சிறையில் ஓய்வு பெற்றனரேயொழிய வேலை நிறுத்தம் ஓயவில்லை தோல்வி அல்ல?

இரவில் இரயில் இல்லை! தோல்விதானே!
இவ்வளவு தோல்விகளை “ஆன்னக் காவடிகள்” நடத்திய கிளர்ச்சியை அடக்க, இரட்டைக்குழல் துப்பாக்கி சகிதம் கிளம்பிய பெரிய கட்சியின் பெரிய தலைவர்கள், பெற்றனர் - மக்களைத் தயார்ப்படுத்துகிறார்கள் - இப்போ, தோல்வி தொழிலாளர்களுக்கென்று, பிரச்சாரம் செய்கிறார்கள்.
தோற்றனர் தொழிலாளர்கள் என்றே வைத்துக் கொள்வோம். களிப்புக்கு இடமா! பாடுபடுபவன் தோற்றான் - இது பால்பாயாசமா! பருக இனிக்குமா!

பலிக்காது
கம்யூனிஸ்டுக் கட்சியினர், இனி “வாலை மடக்கி வைத்துக்கொள்வார்களாக” என்று தீட்டுகிறது ஒரு எடு! அவ்வளவும் ஜார் பித்தம் ஏறிவிட்டது.

“தேசபக்தர்களின்” இரட்டைக் குழல் துப்பாக்கி கம்யூனிஸ்டுக் கட்சியைக் கொன்று விடுகிறது என்றே வைத்துக்கொள்வோம். ஜாரின் கல்லறையைக் கேலிசெய்யும் அந்தப் பேச்சைக் கேட்டால் - வாதத்துக்கு அப்படியே கொள்வோம், அதன் பயன் என்னவாகும்? தொழிலாளர் பிரச்சனையே தீர்ந்துவிடுமா? கிளர்ச்சிகள் முளைக்காமலே போய்விடுமா? வேலை நிறுத்தம் என்ற பேச்சே வராதே! அப்படி அந்தத் தலைவர்கள் எண்ணினால், அவர்கள்பால், நாம் பரிதாபப் படத்தான் வேண்டும்.

காங்கிரசிலேயே சிலர் தொழிலாளர் இயக்கத்தை நடத்த வேண்டும்.

கம்யூனிஸ்டுளுக்குத் தொழிலாளர் களிடையே இருந்துவரும் செல்வாக்கை ஒழித்தாக வேண்டும்.

இந்த இரு திட்டங்கள், இன்று காங்கிரசுக்காம்.

இவை ஒன்றுக்கொன்று பொருந்தா என்பதை மறந்து பேசுகின்றனர் அன்பர்கள்.

கம்யூனிஸ்டுகளை ஒழித்து, தேசியத் தினசரி கூறுவது போல, அவர்களை எல்லாம் ரஷியாவுக்கு அனுப்பிவிட்டு, அப்பா! அந்தத் தொல்லை ஒழிந்தது என்று ஆயாசம் தீர்ந்து அமருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் என்ன நடக்கும் பிறகு?

கம்யூனிஸ்டுகளை விரட்டிவிட்டு தொழிற் சங்கங்களை நடத்தக் கிளம்புகறார்களல்லவா. காங்கிரசிலேயே ஒரு பிரிவினர். அவர்கள் சர்க்கசல் கம்பிமீது நடக்கும் வித்தைக்காரர் நிலை பெறுவர் கொஞ்சகாலத்துக்குள்.

தொழிலாளர் ஸ்தாபனத்தைத் திறம்பட நடத்தி, தொழிலாளரின் அன்புக்குப் பாத்திரராக வேண்டுமானால், அவர்களின குறைகளை நீக்கியாக வேண்டும் - ஆநதக் குறைகளை ஆராயும் ஏவரும், அவைகளை நீக்க வேண்டுமென்று பாடுபட முயற்சிக்கும் ஏவரும், அவர்களுக்கா வாதாட முன்வருபவர் யாரும், அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ கம்யூனிஸ்டு ஆகித்தீரவேண்டும் - இல்லையேல் தொழிலாளர்களின் தோழமையை இழந்து தீரவேண்டி நேரிடும்.

போலிச் சங்கங்களை வைத்துக் கொண்டு, முதலாளிக்கு நண்பனாக இருந்துகொண்டு, தன் சுயநலச் சொக்கட்டான் இட்டத்துக்குத் தொழிலாளர்களைப் “பாய்ச்சிகை”யாக்கிக் கொள்ளலாம் என்ற முறையில் சிலர் கிளம்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் கொஞ்சநாளே அந்தக் கூத்து நடைபெறும் பிறகு கொட்டகை காலியாகும்.

பசி, பிறகு தொழிலாளியைக் கிளர்ச்சி செய்யச் சொல்லும் குறைகள், கொட்டும், வறுமை வாட்டும், முதலாளித்துவம் அவன் முதுகுத் தோல்மீது மட்டுமல்ல, வயிற்றில் ஆடிக்கும் முறையிடுவான், போலியிடம் பரிகாரம் கிடைக்காது. மீண்டும் ஒருமுறை முறையிடுவான் - அப்போது அந்தப் போலித் தலைவனுக்குக் கூடச் சங்கடமான நிலை பிறக்கும்.

ஏதேனும் செய்தாக வேண்டும், தொழிலாளர் தலைவனாக இருப்பதற்காகவாவது ஓடுவான் முதலாளியிடம் அங்குப் போய் மண்டியிடுவான். முதலாளித்துவம் கேட்கும் “என்ன தம்பி! என்னை அங்கே வைத்தநோக்கம் என்ன! நீயுமா தொல்லைகொடுக்க வந்துவிட்டாய்! கம்யூனிஸ்டு தான் தொல்லையாக இருந்தான் என்று எண்ணினேன். நீயும் அதே வேலை செய்கிறாயே” என்பான். என்ன செய்வது? கிளர்ச்சியாக இருக்கிறது என்று போலி பேச வேண்டும்.

“அடக்கு” என்று கட்டளை பிறப்பிப்பான் முதலாளி.

பழைய கணக்கு
காங்கிரசார், பரீட்சித்துப் பார்க்கட்டும் - அவர்கள் இப்போது போடும் திட்டம், நிச்சயமாகத் தோல்வியுறும் கஷ்டம் இருக்குமிடத்திலே கம்யூனிஸ்டு கிளம்பித் தீருவான் - பரம சாதுவான காங்கிரஸ்காரரும், கம்யூனிஸ்ட்டு ஆகித்தான் தீருவார். ஆகவே, கம்யூனிஸ்டுக் கட்சியை ஒழிப்பது என்ற திட்டம் மேலும் பலரைக் கம்யூனிஸ்டு அக்கிவைக்கவே பயன்படும்.
பரீட்சிப்பானேன், பழைய குறிப்பேட்டையே கூடப் பார்க்கலாமே.இன்று கம்யூனிஸ்டுக் கட்சியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்களின் யார்? தோழர் ஜீவாவைப் போன்ற, சுயமரியாதைச் சமதர்மப் பயிற்சி பெற்ற, ஒரு சிலர் தவிர, மற்றவர்களெல்லாம், காங்கிரஸ்காரர்கள், காங்கிரசின் மகத்துவத்தைப் பாட்டாளி உலகுக்கு எடுத்தக்கூறி வந்தவர்கள், காங்கிரசின் சார்பிலே நின்று பாட்டாளிகளின் பலத்தை ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்புச் சக்தி யாக்கியவர்கள், காங்கிரசின் சார்பில் தொழிலாளர் இயக்கத்தை நடத்திவந்தவர்களே தவிர, வேறு அல்லவே.

காங்கிரசாக இருந்து, காங்கிரசில் இருந்துகொண்டே ஏழை எளியோருக்காகப் பரிந்து பேசுபவராகி, காங்கிரசின் ஆசிபெற்றுத் தொழிலாளர் இயக்கத்தை நடத்தி, காங்கிரஸ் சமதர்மியாகி, சமதர்மமும் காங்கிரஸ் முதலாளிகளின் போக்கும் மோதியதால், கம்யூனிஸ்டு இனவர்களேயாகும்.

இனியும் தொழிôளர்களின் இடையேபோய் வேலை செய்வதற்காகத் தயாரிக்கப்படும் நண்பர்களும், அதாவது இன்று கம்யூனிஸ்டுக் கட்சியை ஒழிக்கும் கைங்கரியத்தைச் செய்யக் கிளம்பி - அவர்கள் காலி செய்யும் இடத்திலே தாங்கள் ஆமரவேண்டும் என்று புறப்படுகிறவர் களும், அதே பாதையில்தான் சென்றாகவேண்டும் - வேறு மார்க்கம் இல்லை - எனவேதான் கூறுகிறோம். கம்யூனிஸ்டு ஒழிப்பு வேலை கைகூடாது. நடைமுறைக்கு ஏற்றதல்ல, அதற்காக யாரை அனுப்பினாலும், அவர்களே சின்னாட்களிலே கம்யூனிஸ்டு ஆகிவிடுவார், அது அவ்வளவு எளிதில் மனத்தை மயக்கும் மகத்தான தத்துவம்!

பாராட்டுகிறோம்
தொல்லைக்கு ஆளான தொழிலாளத் தோழர்களையும், அவர்களுக்காகப் பாடுபட்டுக் கஷ்டநஷ்டமடைந்த பொது உடைமைக் கட்சியினரையும் பாராட்டுகிறோம். திராவிடர் கழகம், அதிகமான அளவிலும், உருவான முறையிலும், உதவி செய்ய முடியாமற் போனதற்காக வருந்துவதுடன், எமது உள்ளம் உமது நிலைகண்டு, கொதித்தது - கொதிக்கிறது - என்பதைக் கூறிக்கொண்டு, தளராமல், உழைத்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்ற பொது நீதியின்படி, நிச்சயமாக நாம ;வெல்வோம் என்ற உறுதி கூற, வணக்கம் தெரிவிக்கிறோம் வாழ்க தொழிலாளர்கள்! வளர்க அவர்கள் சக்தி! வெல்க சமதர்மம்.

(திராவிட நாடு 29.9.46)