அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இருகொடி ஏந்திகள்!

கருத்திலே காமி! உடையோ காவி! இவன் கபடன்!

காலையில் சாது, மாலையிலே காலி! இவன் கடியன்

ஒரு விநாடி சிரிப்பு! மறுவிநாடி அழுகை! இவன் பித்தன்!

புத்தி திரிந்தவனும், போதைக்காரனும், புரட்டனும், கொண்டிடும்கோலம் காட்டிடும் ஜாலமும், எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறதோ, அதைவிட வேடிக்கையானவிதமாக இருக்கிறது, இங்குச் சமதர்மச் சிங்கங்கள் என்றுலவும் கம்யூனிஸ்டுத் தோழர்களின் போக்கு!

இதோ வருகிறார் கம்யூனிஸ்டு, காண்க! கதர்சட்டை, அதன்ஜேபியிலே காரல் மார்க்ஸ் புத்தகம்! கண்களிலே கனல், கானமோ அகிம்சையைப் பற்றி! கையிலே சிகப்புக்கொடி, அதைக் கொண்டுபோய் நாட்டுவதோ காங்கிரஸ் கொடிக்குப் பக்கத்திலே! கூட்டமோ யுத்த ஆதரவுக்காக! தீர்மானமோ, யுத் ஆதரவுகூடாது என்று கூறிக்கலவரம் செய்து சிறைப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யவேண்டுமென்பதற்காக! இலட்சியமோ சமதர்மம், பெயரின் இலட்சணமோ, அய்யங்கார், சர்மா, ஆச்சாரியார் என்றவிதம்! தயாரிக்கும் திட்டமோ உழவர்களின் விடுதலைச்சாசனம்! திட்டம் தீட்டப் படும் இடமோ பெரிய மிராசுதார் ஐயரின் மாளிகையில்! இங்ஙனம் உளர் இங்கு கம்யூனிஸ்டுத் தோழர்கள்!! நடமாடும் முரண்பாடுகள்! உண்மைச் சமதர்மத்துக்கு இவர்களே இடையூறுகள்!! உரத்தக் குரலிலே பேசினால் ஊர் ஊமையாகிவிடும் என்று கருதுகிறார்கள் இந்ந உறுதியற்றவர்கள்! தமது போக்கிலே காணப்படும் முரண்பாட்டை நீக்கிக்கொள்ளவோ, திருத்தி அமைக்கவோ தைரியமோ திறமோ அற்றவர்களாக இருப்பதுடன், அந்த முரண்பாட்டினை ஒப்புக் கொள்ளும் நேர்மையும் அற்றக் கிடக்கின்றனர். சேற்றிலேசந்தனம், நீரிலே நெருப்பு, கல்லிலே கனிரசம், கொடுக்கிலே குளிர்ச்சி இருக்குமென்றுரைப்பவன் கயவன், அதைக்கேட்டு நம்புபவன், மதியீனன். அதுபோல, ஒன்றுக்கொன்று சம்பந்தமல்லாததும், நேர்மாறானதும், ஒன்று ஒழிந்தால் மட்டுமே மற்றொன்று வாழக் கூடியதுமான இரண்டுதனித் தனி தத்துவங்களை, ஒரேசமயத்தி÷லே ஆதரிக்கும் இவர்களின் போக்கு, நகைப்புக்கிடமானது என்பது மட்டுமல்ல, மக்கள் நலனுக்கு ஊறுதருவது, உண்மையான சமதர்ம வாழ்வினை வரவிடாது தடுப்பதுமாகிறது. இதனை இவர்கள் தெரிந்து வேண்டுமென்றே செய்பவர்களானால், நயவஞ்சகராவர், தெரியாத்தனத்தால் செய்பவரானால் மந்தமதியினராவர், இரண்டிலே எதுவாக இருப்பினும், மக்களுக்குக் கேடே விளையும்.

கம்யூனிஸ்டு பேசுவதைக் கேளுங்கள்!

மாஸ்கோவே மானிலத்தின் திருத்தலம்! மக்களே நீங்கள் அதையே அடைக்கலமாகக் கொள்ளவேண்டும்! அங்கு கமழு கிறது சமதர்மம்! அதுவே நாம் கோரும் மனித தர்மம்! சோவியத் சிங்காரங்களைப் பாரீர், அதன் ஜோதிஸ்வரூபத்தைக் கூறுவேன் கேளீர்! ஓங்கிவளர்ந்ததோர் புரட்சி! அதைக்கண்டு உலகமே அடைந்தது மிக மிக மருட்சி! கொடுங்கோலன் ஜாரையே கொன்றது இப்புரட்சி! கொடிகட்டி அரசாண்ட குருமாரின் வீழபுச்சி, குவலயம் புகழ்கின்ற ரஷியபுரட்சியின் விளைவே! மதம்பேசி மதமூட்டி மாய்த்திட்ட கயவர், மாளிகைகளிலே மிகு கேளிக்கை நடத்திய செல்வர், ஊரை ஏய்த்திட்ட பூஜாரிக் கூட்டம், அவர் வாழவழி செய்தவன்னெஞ்ச முதலாளி வர்க்கம், இவையாவும் சாய்ந்திட வீசியது புயல்! அதுவே சமதர்மப் புரட்சி.

இதுபோலவும், இதற்கு மேலாகவும் மாஸ்கோவின் மாண்புகளையும் சமதர்மச் சிறப்புகளையும், புரட்சியின் பொலிவையும் பற்றிப்பேசும் அதேகம்யூனிஸ்டுத் தோழர், அதே மேடையிலே, ஆரம்பிப்பார், வார்தா அர்ச்சனையை!

“நம்மை வாழவைக்கும் திட்டம் தயாராகும் இடமே வார்தா! நாற்பதுகோடி மக்களின் தலைவனான நம் காந்தியார் சாந்தியுகத்தை ஸ்தாபிக்க அரும் பாடுபடும் இடமே டவார்தா! சத்தியமும் அஹிம்சையும், அங்குதான் தழைக்கிறது! ஏழைகளின் ரட்சகர் அங்குதான் கோயில்கொண்டிருக்கிறார்” ளஎன்று அதேகம்யூனிஸ்டு வார்தா மகாத்மீயம் பேசுவார்.

வானத்தை அளாவும் பெரிய நவீன விஞ்ஞான ரீதியான தொழிற்சாலைகளை இங்கு நிறுவவேண்டும் என்று, தொழில் திட்டம் பேசுவதும் கம்யூனிஸ்டுதான்! மெஷின்களாலே மக்கள் நாசமாகிவிட்டனர் என்ற தற்காலக்கருத்தைக் கக்கும் காந்தியாரின் குடிசைத் தொழில், கைராட்டை, கதராடை ஆகிய கவைக்குதவாத் திட்டங்களைச் சுமந்து சென்று மக்களிடை அவைபற்றியப் பேசுவதும் கம்யூனிஸ்டுகளே!

இந்தக் கம்யூனிஸ்டுகளுக்கு இரண்டு கொடிகள்! சம்மட்டி அரிவாள் கொடியும் இவர்கள் கரத்திலே இருக்கும், மூவர்ணக் கொடியிடமும் இவர்களுக்கு மோகம்! இரண்டையும் ஏககாலத்திலே ஏந்துவர்! இரண்டினையும் புகழ்வர்! பொது மக்களிடம் இரண்டு கொடிகளையும் திகளின் பிழைப்பு இடையிடையே கேலிக்கூத்தாக முடிகிறது, என்றாலும் இந்த வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவோ இவர்களால் முடிவதில்லை.

காந்தியாரைப் புகழ்ந்து, கைராட்டையைச் சுற்றிப், பிறகு பணிவாகக் கூறுவர், பிர்லாபஜாஜ் போன்ற முதலாளிமார் ஆட்சி கூடாது, மக்களின் ஆட்சியே நிறுவவேண்டும் என்று, உடனே காங்கிரஸகோபிக்கும், கோபித்துக், குட்டி வெளியே துரத்தும்! இது அடிக்கடி நடைபெறும் காட்சியுமாகிவிட்டது.

அவனுக்கோ ஔவைக்கு உணவளிக்க ஆவல். தள்ளாடும் பாட்டிக்கு ஒருகவளம் அளித்தாலன்றி மனம் நிம்மதியாகாது என்றுணர்ந்தான். உள்ளே சென்றான். அவள் அவனைக் கணவனாக இருக்கும்படி கட்டளையிட்டு ஆட்சிபுரிந்துவந்த மனைவி. கோபக்காரி, பிடாரி! பிடாரியிடம் சென்றான், படிசோறு அந்தக் கிழவிக்குப் போடவேண்டும் என்றுகூற. அவளுடைய சுபாவம் அவன் அறிந்ததே. அல்லலே அவன் பெற்ற அனுபவம்! என்ன செய்வான்? எவ்வாறு விஷயத்தைக் கூறுவான்? தந்திரத்தைத் துணைக்கழைத்தான். அன்பே! அன்னமே! ஆரூயிரே! என்றழைத்தான், வதனம் சந்திரபிம்பந்தான், ஏனோ அதிலே கொஞ்சம்மாசு என்ற புகழ்ந்தான், முகத்தைத் துடைத்தான், கூந்தலைக் கோதினான், அவள்மனம் இந்தச் சரசங்களால் திருப்தி அடைந்திருக்கும், தேவியை பூஜை செய்தாகிவிட்டது, இனி வரம் கிடைக்கும் என்று எண்ணினான், மெல்லக்கூறினான், தள்ளாடும் கிழவி - தர்மம் - என்று! என்ன நடந்தது? ஆஹா! விருந்தா? என்று கூவினான், ஆடினான் அடிக்கடி உபயோகிக்கும் அந்த முறத்தைத் தூக்கினாள், தாக்கினான், அவன் ஓடினான், ஓடினான் அந்த ஓங்காரி முன்நிற்க முடியாமல்!

“இருந்து ழகந்திருத்தி
ஈரோடு பேன்வாங்கி
விருந்துவந்த தென்றுரைக்க,
ஆடினாள், ஆடிப்பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்”

என்பது பழம்பாட்டு, ஆனால் கம்யூனிஸ்டு காங்கிரஸ் கூட்டு வாழ்க்கையிலே இது அவ்வப்போது நடைபெறும் சம்பவமாகிவிட்டது! பழமுறத்துக்குப்பதில், அறிக்கைகள்! இவ்வளவே வேறுபாடு.

(திராவிடநாடு - 1.7.1945)