அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


இருளில் ஒளி!
வயலிலே செந்நெல்!
வேலியிலே செங்கரும்பு!
வாளை துள்ளும் ஆறுகள்!
வாவியெலாம் தாமரை!
கழனிகளிலே கருங்குவளை!
சோலையெலாம் கீதமொழி!
மலரிடை வண்டினங்கள்!
செங்கால் நாரை! பைங்காற் கொக்கு!
செல்வமணிகள் இல்லந்தோறும்!
செந்தமிழ் முழக்கம், மன்றமெல்லாம்!

இது தமிழகம்! -இன்றைய தமிழகமன்று - ஏரும் அதனால் சீரும் சிறந்து இருந்தபோது, கவிஞனின் கண்களுக்குக் காட்சியாக விளங்கிய தமிழகம்.

கதிர் ஒரு முழம் காணும்! கமுகென நீளும் - என்று வியந்து கூறுவார், ஒரு கவிஞர்.

பங்கப் பழனத்து உழும் உழவர், பலவின் கனியைப் பறித்ததென்று சங்கு எடுத்து எறிகின்றனராம், மந்திமீது... மந்தியோ, பலாவிலிருந்து தென்னைக்குத் தாவிச் சென்று, உச்சியில் ஏறி, செவ்விளந் தேங்காயைப் பறித்து உழவர்மீது வீசுகிறதாம்! - இவ்வண்ணம் தீட்டி மகிழ்கிறார், வேறொரு கவிஞர்.

பொதுவாகவே, கவிஞரும் பிறரும், தமிழகத்தின் சீரும் சிறப்பும் மிகுந்து இருந்ததையும், வீரமும் அறமும் செழித்திருந்ததையும், உணர்ச்சி ததும்பக் கூறியுள்ளனர் - தமிழகத்தின் முன்னாள் காட்சி அவ்விதம் இருந்தது.

முன்னாள் பொலிவுக்கும் இந்நாளில் நாம் காணும் நலிவுக்கும் இடையே உள்ள சம்பவச் சுழல்கள் பலப்பல.

“பாத்தியிலே நாத்தை நட்டுப் பாய்ச்சிடுவோம் தண்ணி ஏத்தத்திலே” - என்று பண்பாடிடும் உழவர்கள், “கொத்தமல்லி கொட முளகா கொத்த வரை முளைக் கீரைத் தண்டு” பயிரிட்டு, “பூத்ததையும் காச்சதையும் பொன்னாக்கி” வாழ்வில் வளம் பெற்று, “அத்தை மக வைச்சிடவே அழகான மல்லிப் பூவுண்டு” என்று காதல்மொழி பேசி, வாழ்ந்துவந்தனர் ஒருநாள்!

நாவினை நகரவிடாது தடுக்கும் பசை குழம்பிடும் ‘பிரேசில்’ அரிசிதானா எமக்கு என்ற ஏக்கம் கத்தாழைச் சோறு அளவுக்கு வளர்ந்துள்ள இந்நாளிலே செந்நெல், செங்கரும்பு, செந்தமிழ் என்று பேசுவது கூடக் கேலிக் கூத்தாகத் தோன்றக்கூடும்! உண்மைதான்! நலிவுற்ற நிலையில் பழைய பொலிவைப் பாடிக்காட்டுவது மனத்துக்கு வாட்டம் தருவதாகத்தான் இருக்கும். எனினும், பொங்கல் எனும் பொன்னான விழா நாளன்று, தமிழரின் திருநாளன்று, நாம் வாழ்ந்த காலமும் உண்டு, நமது நாடு திருநாடாக விளங்கிய நாட்களும் இருந்தன என்று நினைவிலே கொண்டு வருவது, தேவையானது - நைந்திருக்கும் உள்ளத்துக்குப் புதிய நம்பிக்கை யூட்டும் மாமருந்தாக அமையக் கூடியதுமாகும். கரிய மேகங்கள் மேலேயும், உடலைச் சிதைக்கும் நச்சுநிறை காற்று சுற்றியும் உள்ள நேரத்திலே, நீலநிற வானம், அதில் நீந்தி விளையாடும் நிலவு, மின்னிடும் விண்மீன்கள், மென்காற்று, இவை இருந்த நேரத்தை எண்ணிக் கொள்வது - தொடக்கத்தில் ஏக்கம் தருவதாக இருப்பினும், மீண்டும் ஒளியும் களிப்பும் கிடைக்கும். பெறலாம் முயன்றால், என்ற நம்பிக்கையைத் தரவல்லது. எனவேதான், களத்திலே போரும், ஊரிலே சீரும் இல்லாமல், வானத்திலே காரும், ஆறுவாளிகளிலே நீரும் இல்லாமல், அகத்திலே திருப்தியும் முகத்திலே மலர்ச்சியும் இல்லாமல், இல்லங்களிலே இன்பமும், அங்காடிகளிலே அறமும் இல்லாமல், வளம் கெட்டு வாழ்க்கை கெட்டு, வகை குன்றியுள்ள போது வந்துற்ற இப்பொங்கல் நன்னாளின் போது, முன்னாளில் வாழ்ந்திருந்த நமக்குத்தான் இந்நாளின் இடர்பல வந்துள்ளன என்பதை நினைவூட்டுகிறோம், இந்நாள் இடர்களைக் களைந்தெறியும் உறுதியும், முன்னாள் பொலிவை மீண்டும் பெறவேண்டும் என்ற நம்பிக்கையும் பெறவேண்டும், என்ற நல்லெண்ணத்துடன்.

உடைந்துபோன கண்ணாடியின் ஒரு துண்டு கொண்டு பார்ப்பினும் உருவம் தெரிவதுபோல, தேய்ந்துள்ள தமிழகத்தின், நலிந்துள்ள நிலையிலும், இப்பொங்கற் புதுநாளன்று, ஒருவகை இன்பம் தெரியத்தான் செய்கிறது. மனைதொறும் மனைதொறும், மக்கள் மகிழ்ச்சியை வேட்டை யாடியேனும் பிடித்துக் கொண்டுவந்து வைத்து விளையாடிக் கொண்டு இருக்கக் காண்கிறோம். பொங்கற் புதுநாளன்று திங்கள் முகத் தையலரும் ஏறுநடை ஆடவரும், குழலையும் யாழையும் வெல்லும் கொஞ்சு மொழிச்சிறாரும், மகிழ்வெய்திட வேண்டும் என்ற நம் செங்கரும்புக் கருத்தை இல்லந்தோறும் தருகிறோம். இது போதாது - நிறை இன்பம் பெறவேண்டும் - பெறத்தான் போகிறோம் - இனி வரும் பொங்கற் புதுநாட்களிலே, என்ற நம்பிக்கையை அனைவரும் பெறவேண்டுகிறோம். உள்ளம் உடைந்து போகாதிருக்க இந்த ஊன்றுகோல் மிக மிகத் தேவை!

ஏடெலாம், நாட்டிலே காணப்படும் சீர்கேடுகளைக் காட்டுகின்றன. மாரி பொய்த்துவிட்டது - வளம் புகைந்து போய்விட்டது - வலிவிழந்து, எவ்வகைச் சிறு பிணி தாக்கினாலும் தீய்ந்து போகக்கூடிய நிலையில் உள்ளனர் மக்கள். உழவுத் தொழில் உருக்குலைந்து போய்க் கிடக்கிறது! நெசவு நசித்துக் கொண்டிருக்கிறது! இப்பெருந்தொழில் இரண்டையு மன்றோ நம் நாட்டின் பெரும்பான்மையினர் நம்பி வாழ்கின்றனர் - எனவே, இவ்விரு முனைகளிலும் ஏற்பட்ட இடர், நாட்டைச் சீர்குலைத்துவிட்டது. கேட்டினைக் களைய வாரீர் - என்ற வேண்டுகோள் விம்மலாகி, பிறகு பரணியுமாகி விட்டது - பயனைத்தான் பெறக் காணோம்! வயல்கள் வெடித்துக் கிடக்கின்றன - தறிக் குழிகள் கண்ணீரால் நிரப்பப்பட்டு வருகின்றன.

‘பொன் பூத்த பூமி’ என்று புகழப்படும் நாட்டிலே, நாள்தோறும் ஊர்தோறும் பட்டினி ஊர்வலங்கள்! பட்டினி ஊர்வலம் நடைபெறும் நாட்களில், பாற் பொங்கலிட்டு, தேன் மொழிபேசி, கருப்பஞ்சாறு போன்ற கருத்தினைப் பெற்று மகிழ்ந்திட எங்ஙனம் இயலும்! பெரியதோர் புயலடித்த பிறகு பூந்தோட்டம் புகுந்து பார்த்தால் என்ன நிலை இருக்குமோ, அது இதுபோது, நாட்டு நிலை!

சோறு கொடு! - மக்கள் கேட்கின்றனர், ஆளவந்தார்களைப் பார்த்து.
“நெல் கொடு” - மக்களைக் கேட்கின்றனர் ஆளவந்தார்கள்!

“உணவுக்குத் திண்டாட்டமாகிவிட்டது, ஊராள்வோரே! இடுக்கண்களைய முன் வாருங்கள்” என்று அழைக்கின்றனர் மக்கள் - ஆட்சியாளர்களை!

“மரம் நடுவிழாவுக்கு வாருங்கள் - மரம் வளர மாரி வளரும்; மணி நெல் குவியும்; பசி நோய் போகும்” - என்று விளக்கம் பேசுகிறார்கள்.

“இருட்டிய பிறகு வா - இரண்டே கால் ரூபாய்!” - என்று உருட்டு விழிக்காரன் கூறுகிறான் - “அந்தத் திருட்டு உணவும் கிடைக்காவிட்டால், தில்லை சென்ற நந்தன்தான் நாமும்!” என்று கூறிச் செல்கிறார்கள், மக்கள் - கள்ள மார்க்கட்டைத் தேடி!

ஒன்றல்ல ஓராயிரம், நாட்டிலே உள்ள தொல்லைகள்.

உலகமோ உன்மத்தர்களின் உறைவிடமாகி விடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலைமையை அணைத்துக் கொண்டிருக்கிறது. சமாதானத்தை நிலைநாட்ட, ராணுவத் தலைவர்கள் பெரும்பணி புரிந்தவண்ணம் உள்ளனர்! ஐக்கிய நாடுகள் சபைக்கு, அமெரிக்க ஆயுதக் கிடங்கு அதிபர்களின் ‘வாழ்த்து’ வழங்கப்பட்ட வண்ணம் இருக்கிறது. நெற்களத்திலேதான் போர் காணோம், உலக அரங்கிலே - களத்திலே கடும்போர் நடந்தவண்ணம் இருக்கிறது, மன்றங்களிலேயோ அதைவிடக் கடுமையான சொற்போரும் நடைபெற்றபடி இருக்கிறது! கரும்புதான் கிடைக்கவில்லை மக்களுக்கு, வாழ்வில் சுவைதர - மக்களுக்குச் சாவு தரும் இரும்போ ஏராளம் - ஏராளம் - வெட்டி எடுக்கும் இரும்பைவிட, வஞ்சக நெஞ்சுகளிலே விளையும் இரும்பு அதிகம்.

இந்நிலையில் பொங்கற் புதுநாள்! - இருளிடை சிறு ஒளி என்போம். இதனை - ஒளிசிறிது எனினும், இருளிடை மின்னிடுவதால் அதன் ‘தரம்’ பெரிது: இந்த “ஒளி” வளர்ந்து வளர்ந்து, இனிவரும் பொங்கற் புதுநாளைக்குள் நமது வாழ்வின் திருவிளக்காக அமையட்டும் என்ற நல்லெண்ணத்தைச் சமைத்து உண்போம் இன்று.

பொங்கற் புதுநாளெனும் தமிழர் திருநாள் - பொய்யுரையின் மீது கட்டப்பட்ட பூஜாரி விழாக்களிலே ஒன்றன்று - தனித் தமிழ்த் திருநாள்! - கருத்தளிக்கும் பெருநாள்!

தமிழன் உழைப்போரை உயர்த்திடும் பண்பையும், உழைப்பின் பயனை ஊருடன் கூடி உண்டு இன்பம் பெறும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வைத்த பொங்கற் புதுநாள்!

அறுவடைவிழா! - விதைக்காது விளைந்த கழனியிலிருந்து வந்த செந்நெல்லைக் குத்தாது அரிசியாக்கி, வேகாது வடித்தெடுத்து, உண்ணாது காக்கைக்கு வீசிடும் உலுத்தர் விழாவன்று - உழைத்தோம் பயன் கண்டோம் - கண்டபயனை மற்றவருடன் கலந்து உண்டு மகிழ்வோம், என்ற உயரிய நோக்குடைய விழா!

கோல வளைகுலுங்க, குறு நடைச் சிறுவன் முந்தானையைப் பற்றி இழுக்க, “கூப்பிடடி உன் அப்பாவை! இந்தக் குறும்பனை எடுத்துப் போகச் சொல்லு” என்று மூத்த மகளை, முற்றத்திலே துத்திப்பூப் போன்ற துகிலைப் பார்த்து மகிழ்ந்திருக்கும் ஆணழகனிடம் தூது அனுப்பும் தோகை மயிலாள் தீட்டிடும் வண்ணக் கோலம் இல்ல முகப்பில் வரவேற்புக் கூறி நிற்கும் - உள்ளே சென்றால், அன்பு வழியும் விழியும், அகங்குழையும் மொழியும் இன்புறச் செய்யும் - பிறகே பாகுகலந்த பாற் பொங்கல் - பற்பல கனிவகைகள்! - இது போல் இருந்திடும் இயல்பினைப் பெற்றது பொங்கற் புதுநாள்! இந்நாளில், சோளமோ, வரகோ, ராகியோ எதுவோ - கிடைக்காதா என்ற ஏக்கத்தைத்தான் பொங்க வைத்துக் காண்கிறார்கள் மிகப் பெரும்பாலான மக்கள். வேறு எந்த நாடாக இருப்பினும், இத்துணை இடரிடை தள்ளப்பட்ட மக்கள், நாட்டைக் காடாக்கி விட்டிருப்பர் - நந்தமிழ் நாட்டினரோ, நலிவு நீக்கப்படக் கூடியது, பொலிவு திரும்பப் பெறக்கூடியது, என்ற எண்ணத்தைத் தோணியாக்கி, வாழ்க்கைக் கடலிலே வகையற்ற ஆட்சி எனும் புயலையும் சமாளித்துக் கொண்டு சென்று கொண்டுள்ளனர். அவர்தம் பெருநோக்கும் அறஉணர்ச்சியும்தான், அரசைக் காப்பாற்றி வருகிறது, படையும் தடையும் அல்ல!

இந்தப் பண்பை நாம் பாராட்டுகிறோம் - இது போன்ற பண்பு பயன் தரும் என்றும் உறுதியாக நம்புகிறோம்.

நாட்டிலே நல்லறிவு பரப்பும் பணி இடையறாது நடைபெற்ற வண்ணமிருக்கிறது - மணியின்மீது பூசப்பட்டுக் கிடக்கும் மாசு துடைக்கப்பட்டே தீரும். நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, வளமாகிக் கொண்டு வருகிறது. வல்லூறுகள் சில அங்குமிங்கும் வட்டமிட்ட போதிலும், சிங்காரச் சிட்டுகள் செயலாற்றி வருகின்றன! அறிவு பரவிக் கொண்டிருக்கிறது - ஆதிக்கக்காரர்கள் அச்சத்தால் தாக்கப்பட்டுள்ளனர் - அவர்கள் நச்சு நினைப்பு ஒழியவில்லை என்றபோதிலும், நாசக்கரத்துக்கு முன்னைய வலிவு இல்லை. கனிமொழி பயின்று இன்னும் சில காலம் இரைதேடி வாழ்வோமா என்ற நச்சு நினைப்புடன் கழுகுகள் சிறகடித்துக் கிடக்கின்றன - அறிவுக் கண்கொண்டு காணலாம் இக்காட்சியை. கொள்கைக்கும் திட்டத்துக்கும் இதுபோது எதிர்ப்பு முறிந்துபோய்விட்டது - உரைப்பவரின் உருவம், பருவம், உறவு குறைவு. இவை பற்றிய அந்தாதி பாடிடும் நிலைக்கு வந்துள்ளனர் - கடைசி கட்டத்துக்கு - மாற்றுக் கருத்தினர் - மன்னிக்க வேண்டும்! - மாற்றுக் கருத்தினரல்லர், மாற்றுக் கட்சியினர்!!

நாடு சீர்குலைந்திருக்கிறது - மறுப்பார் இல்லை - “நீ யார் சொல்ல?” - என்று கேட்பவர் சிலர் உளர்!

“நாட்டின் சீர்கேடு போக்கியாக வேண்டும்” - ஆம், என்கின்றனர் அனைவரும் - “அதனைச் செய்தல் எமது கடமை - கூறிடும் உன்னை விட்டிடோம் கண்டாய்!” - என்ற சீற்றச் சிந்து பாடிடுவோர் சிலர் உளர்!

ஆலயங்களிலே சீர்திருத்த முறைகள்! மடாலயங்களிலே சீர்திருத்த முறைகள்! மணவினை முறைகளிலே புதுமைகள்! - ஒன்றல்ல, பல - பல துறைகளிலும், அறிவுப் பணியினரின் அகமகிழும் விதமான “திருத்தும் தொண்டு” நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மொழியிலே புது எழில் பூத்துக் காணப்படுகிறது.

‘ராஜ்யம்’ மறைந்து அரசு வந்துவிட்டது! சபை போய்விட்டது; மன்றம் தெரிகிறது; பேரிகை இல்லை, முரசு முழங்குகிறது; மாஜி மந்திரி இல்லை; முன்னாள் அமைச்சர் தெரிகிறார்; சத்யாக்ரஹம் மாறி அறப்போர் பேசப்படுகிறது; சேனாதிபதியைக் காணோம்; தளபதி கரியப்பா வருகிறார், மஹாநாடு நடைபெறுவதில்லை; மாநாடு நடைபெறுகிறது; ஜில்லா, மாவட்டமாகி, மாகாணம் மாநிலம் ஆகிவிட்டது - தமிழ் வெல்கிறது, தமிழின் மாற்றார்களோ என்று யாராரைப் பற்றி அஞ்சுவோமோ, அவர்களின் அருந்தொண்டும் தமிழுக்குக் கிடைக்கிறது!

கலையிலே புதுக்கருத்துகள் மலர்ந்து, பழைய பிணிகளைப் போக்கும் மணம் பரவிக் கொண்டிருக்கிறது.

முகில் கிழித்தெறியப்படுகிறது - ஒளி வெளிவருகிறது. இருட்டில் இலாபம் கண்ட இயல்பினருக்கு, ‘ஒளி’ யின் முதல் தாக்குதல் அதிர்ச்சியைத் தருகிறது - எனவேதான் அலறல் கேட்கப்படுகிறது அங்கும் இங்கும்.

மொத்தத்தில் பார்க்கும்போது, புது வாழ்வுக்கான முயற்சி - விடுதலைக்கான அறப்போர் - பயனளிக்கத் தொடங்கி விட்டது. இவ்வளவு இடுக்கண்களுக்கிடையே நின்றே இந்த அளவுக்கு வெற்றிகாண முடிகிறது என்றால், சிறிதளவு வசதியும் கிடைத்தால், எத்துணை விரைவில் முழு வெற்றி காண இயலும் என்ற எண்ணம் தோன்றுகிறது - அந்த எண்ணத்தின் முன்பு, தூற்றல் பாணங்கள் தூள் - தூள்!!

திருட்டின் எழிலையும் எல்லையையும் மக்கள் கேட்கத் தலைப்பட்டு விட்டார்கள். கேளாக் காதினரல்லர் நாங்கள் என்கின்றனர் கேரளத்தார் - அறிய விழைகிறோம் என்கின்றனர் ஆந்திரர் - கருத்தறிய விழைகிறோம் என்கின்றனர் கன்னடர் - எங்கும் ‘அறிந்துகொள்ள வேண்டும்’ - என்ற ஆர்வம் அரும்புகிறது - எனவே, திராவிடத்தின் பகைவர்களின் அச்சமும் ஆர்ப்பரிப்பாகத் தலைகாட்டுகிறது.

ஒரு நாட்டின் விடுதலைக்கும் ஒருநாட்டு மக்களின் புதுவாழ்வுக்கும் தேவையான சூழ்நிலை அழகாக அமைந்திருக்கிறது. இவ்வாண்டு பொங்கற் புதுநாளன்று இந்த எண்ணம் பாலும் பருப்பும் பாகும் கலந்த முல்லை நிறச் சோற்றினைப் பெறாமலிருந்த போதிலும், நமக்கு இன்பந் தருவதாக அமைந்திருக்கிறது.

திராவிடத்தின் உரிமைக் கிளர்ச்சிக்காக உள்ளன்புடன் பாடுபட்டு, கருத்துக்கு மதிப்பளிக்கும் கண்ணியத்தை மறந்த ஆளவந்தார்களின் தடியடிக்கு ஆளாகித் தழும்புகளைப் பெற்றுள்ளனர் - தோழர் பலர், இந்தத் தழும்புகளைத் தடவிப் பார்த்துக்கொள்ளும் போது, இதனை மற்றவர் காணும்போது ஏற்படும் இன்ப உணர்ச்சி இவ்வாண்டு பொங்கற் புதுநாள் விழாவிலே பலப்பல இல்லங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அந்த இல்லங்களில் திராவிடத்தைக் கப்பிக் கொண்டுள்ள இருளை விரட்டும் வீர விளக்குகள் ஒளிவிட்டுக் கொண்டுள்ளன. வளர்க அந்த ஒளி!

தோழர், பலர் திராவிடத்தின் உரிமைக்காக உழைத்ததற்காகச் சிறையிலே தள்ளப்பட்டுள்ளனர் ‘அன்பாட்சி நடத்துபவர்களால்’. நாம் வெளியே உலாவி, இல்லங்களிலே பொங்கற் புதுநாள் விழாக் கொண்டாடும் இவ்வேளையில், அவர்கள், பூட்டிய அறைகளுக்குள்ளே, கம்பிகளைத் தடவியபடி உள்ளனர். மனக்கண் முன் அந்தக் காட்சி தெரியத்தான் செய்கிறது. அவர்களை நாம் ‘வாடவைத்து’ இங்கு விழாக் கொண்டாடுவதா - என்ற எண்ணம் கூடக் குடைகிறது மனத்தில் ஒருகணம் - மறுகணமோ, கவலை அல்ல நாம் பெறவேண்டிய உணர்ச்சி, கடமைக்காகக் கஷ்ட நஷ்டம் ஏற்கும் காளைகள் திராவிடத்திலே உள்ளனர் என்ற பெருமை தேடித்தரும் திருத்தொண்டு செய்துவரும் தோழர்கள் அவர்கள்; அவர்களின் வீரத்தை எண்ணிப் புத்துணர்ச்சியும் பெறுபவர்கள் நாம். சிறையில் உள்ள தோழர்களுக்கு நமது நன்றியறிதலைப் பொங்கற் புதுநாளன்று தெரிவித்துக் கொள்கிறோம் - அவர்களைச் சிறையில் இருக்கவிட்டு ஏக்கமடைந்துள்ள இல்லங்களுக்கு, “ஏக்கம் விடுக! உமது வீரப் புதல்வர்கள் விடுதலைப் போரிலே ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் அறிவாற்றலால் விளையும் இன்பத்தை அறுவடை செய்து, திராவிடம் சிறப்புறப் போகிறது - எனவே, மகிழ்ச்சி பெறுங்கள்; நாட்டை மீட்கும் நற்றொண்டு புரிபவர் நமது மக்கள் என்ற எண்ணம் கொள்ளுங்கள்” என்று கூறுகிறோம்.

பொங்கற் புதுநாளன்று மகிழ்வு பெற்று, மனத்தில் புத்துணர்ச்சி பெற்று, நாட்டுக்குப் பணியாற்றும் நல்லெண்ணம் பெற்று, அனைவரும் வாழ விழைகிறோம் வணக்கம்.

(திராவிட நாடு பொங்கல் மலர் – 1951)